(இன்று கிழமை வியாழன்-5)
அமெரிக்காவில் 31ஆவது நாள்
அமெரிக்காவைப் பார்க்க முதல்முதலில் நான் வந்தபோது எனக்கு வயது 55. ஆனால் அமெரிக்கா வயதானவர்களுக்கான நாடு அல்ல. 40 வயதுக்குக்கீழ் இருக்கும்போதே காணவேண்டிய நாடு.
காரணங்கள் சிம்பிள். உடலில் நல்ல ஆரோக்கியமும், கையில் நல்ல படிப்பும், ஓட்டுவதற்கு ஒரு காரும் இருந்தால்தான் இங்கு நல்லவேலை கிடைக்கும். கிடைத்தவேலை நிலைக்கும். அடுத்தது இருக்க நல்ல வீடு. அல்லது நல்ல முகவரியில் ஓர் அறை. இதில் எந்த ஒன்று குறைந்தாலும் அதைப் பெறுவதற்கான உழைப்பை இளைஞர்களால்தான் முன்வைக்க முடியும். (இவ்வாறு பொறுப்பான இளைஞர்களாக இருந்தால்தான் அதே தரமுள்ள நண்பிகள் கிடைப்பது எளிதாக இருக்கும் என்பதும் உண்மையே.)
தமிழ்நாட்டிலும் இதேபோன்ற நிலைமைதான் என்றாலும் முன்னாள் இளைஞர்களின் வாழ்க்கை அவ்வளவு மோசமாக இல்லை என்றே தோன்றுகிறது.
எவ்வளவோ பட்டதாரி இளைஞர்கள் எம்பிளாய்மென்ட் எக்ஸ்சேஞ்சில் பதிவுசெய்துவிட்டு பதினைந்து முதல் இருபது வருடம்வரை அரசு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு காத்திருப்பது நாம் அறிந்ததே. அரசும் தன் பங்குக்கு பல விதிகளைத் தளர்த்தி இவர்களுக்கு உதவுகிறது. நாற்பது வயது வரை அரசு வேலைகளில் நுழைய அனுமதி இருக்கிறது. ஆனால் அமெரிக்காவில் நாற்பது வயதுவரை எந்த வேலைக்கும் போகாமல் இருப்பது சாத்தியமில்லை.
ஆனால் நான் ஆரம்பித்த விஷயம் அதுவல்ல. 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் versus 15 வயது சிறுவர்கள் என்பதைப் பற்றித்தான் சிந்திக்க நினைத்தேன்.
நானும் நீங்களும் 15 வயதில் எப்படி இருந்தோம்? சுமாரான நகர்ப்புறத்தில் இருந்ததாக வைத்துக்கொண்டால், பத்திரிக்கை படிப்போம், சஞ்சிகைகள் படிப்போம், தொடர்கதைகள் படிப்போம், ரேடியோ கேட்போம், சினிமா பார்ப்போம். எப்போதாவது நாடகம் பார்க்கவும் சர்க்கஸ், பொருட்காட்சி பார்க்கவும் வாய்ப்பு கிடைக்கும்.
எல்லா வீடுகளிலும் ரேடியோ இருக்காது. அது ஒரு சொகுசுப்பொருள். எனவே இலங்கை வானொலி வர்த்தக ஒலிபரப்பில் கோபால் பல்பொடி விளம்பரம் எங்காவது சத்தமாகக் கேட்டால் அந்த வீட்டருகில் சற்றே தளர்நடையிட்டு அல்லது சிறிது நேரம் நின்று விளம்பரம் முடிந்தபிறகு வரும் தமிழ்ப் பாடலை ஆவலோடு எதிர்ப்பார்ப்பதுண்டு. நாம் எதற்காக நிற்கிறோம் என்பதை ஜன்னலுக்கு உள்ளிருந்தே கண்கொட்டிப் பாம்பாகப் பார்த்துக்கொண்டிருக்கும் ரேடியோப் பெட்டியின் உரிமையாளர் சடக்கென்று சுவிட்ச் ஆஃப் செய்துவிடுவார். அதற்குமேல் நிற்க உங்கள் தன்மானம் இடம் கொடுக்காது.
சென்னை/திருச்சி வானொலிகளில் நேயர் விருப்பமும் தேன்கிண்ணமும் நம்மைக் கட்டிப்போட்டதுண்டு அல்லவா! எவ்வளவு தபால் கார்டு வாங்கி நேயர் விருப்பம் எழுதி அனுப்பினோம்! நம் பெயர் அதில் வந்துவிட்டால் எப்படி அகமகிழ்ந்துபோவோம்!
அபூர்வமாகப் பார்த்த சினிமாவை, ஒருமணிநேர ஒலிச்சித்திரமாக வானொலி கொடுக்கப்போகும் ஞாயிற்றுக் கிழமைகளில் வேறெந்த நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வதை நாம் ஒத்திவைப்போம் அல்லவா!
விகடன், குமுதம் படிப்பதும் அப்படித்தான். சிலர்தான் அவற்றைக் காசுகொடுத்து வாங்குவார்கள். ஒரு வீட்டில் வாங்கினால் குறைந்தது பத்து வீடுகளுக்கு அது இரவல் போகும். படிக்க விட்டுப்போன தொடர்கதையின் போக்கைத் தெரிந்துகொள்வதற்காகவே மாலையில் பெண்கள் கூட்டம் நடைபெறுவதுண்டு.
போக்குவரத்து என்றாலும் அதிக பட்சமாக நமக்கு கிடைத்தது சைக்கிள் பயணம்தானே! மற்றப்படி நடராஜ சர்வீஸில் தானே நாம் டிப்ளமோ வாங்கினோம்!
இன்று 50 வயதுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், நம் கையில் ஏதோ ஓரளவு பணம் (என்னைப் பற்றிச் சொன்னேன்) இருக்கிறது. பள்ளிக்கூட வாசலில் பாட்டியம்மாவிடம் போண்டா வாங்கியபோது இருந்த ஆர்வமும் சுவையுணரும் வேட்கையும், இன்று அதைப்போல் பலமடங்கு பணத்தில் உலகப் புகழ்பெற்ற மங்களூர் ஐடியல் ஐஸ்கிரீம் பார்லரில் ஃபர்பெய்ட் வாங்கிச் சாப்பிட்டாலும் இருப்பதில்லையே, ஏன்?
எனது நண்பர், சிறந்த நாவலாசிரியர், இரா முருகன் அண்மையில் 1154 பக்கமுள்ள மிளகு என்னும் நாவலை எழுதியிருக்கிறார். நல்ல நாவல் என்று நாலுபேர் எழுதுகிறார்கள். விலையும் ஆயிரம் இருக்கும். இன்று அதை எளிதாக நாம் வாங்கிவிடுவோம். ஆனால் எப்போது படிக்க ஆரம்பித்து, எப்போது முடிப்போம்? அன்று வாண்டுமாமாவின் ‘வீர விஜயன்’ படக்கதையைப் படிப்பதற்காக, ‘கல்கி’ எப்போது வரும் என்று கடையில்போய்க் காத்திருப்போமே, அத்தகைய ஆர்வம் போனது எங்கே?
நான் ஹைதராபாத்தில் மூன்று வருடங்கள் பணியாற்றியபோது, ‘நவரங்’ என்ற தியேட்டரில் பழைய இந்திப் படங்கள் (மட்டுமே) திரையிடுவார்கள். அநேகமாக வாரம் இரண்டு படங்களாவது பார்த்துவிடுவோம்.அப்படியும் இன்னும் சில பழைய படங்களை ஒருமுறையாவது பார்ப்போமா என்று ஏங்கிக் கொண்டிருப்போம். இன்று யூடியூப்பிலும் பிற இணையதளங்களிலும் ஓடிட்டி யிலும் படங்களும் பாடல்களும் நமது கட்டளையை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றன. நாமோ, அலட்சியமாக ரிமோட்டில் சேனல்களை மாற்றிக்கொண்டே போகிறோமே! எப்படி வந்தது இந்தப் பாராமுகம், இந்த அகம்பாவம்?
இன்று குழந்தை பிறந்த மூன்றாவது வருடமே நல்ல சைக்கிள் வந்துவிடுகிறது. எட்டாவது படிக்கும்போது ஸ்கூட்டி கிடைத்துவிடுகிறது. அதுவும் ஆளுக்கொரு இருவீலர் இல்லாத வீடுகள் குறைவு. ஆனாலும் அன்று ஓசியில் கிடைக்கும் சைக்கிளை அரை பெடல் அடித்து ஓட்டக் கற்றுக்கொண்டோமே, அந்த ‘திரில்’ இன்று நம் பேரக் குழந்தைகளுக்குக் கிடைக்கிறதா என்று கேட்டுப்பாருங்கள்.
தொலைக்காட்சியும் அதன் தோழிகளான சமூக வலைத்தளங்களும் பெருகிவிட்ட பிறகு, எல்கேஜி குழந்தைகளுக்கும் கணினிமூலமே கற்றுத்தரும் நிலைமை வந்தபிறகு, தமிழ்நாட்டுக்கும் அமெரிக்காவுக்கும் அடிப்படையில் என்ன வேறுபாடு இப்போது இருக்க முடியும்? அதனால்தான் நமது இளைஞர்கள் (ஆவின்பால் குடிக்கும் ஆண்பால், பெண்பால் இருவரும்) ஒரு சில நாட்களிலேயே அமெரிக்காவில் நல்லபேர் வாங்கி செட்டில் ஆகிவிடுகிறார்கள்.
அரிதாக இருக்கும் பொருளுக்குத்தான் மரியாதை அதிகம். மலினப்பட்ட பொருளை யாரும் மதிப்பதில்லை. நம் இளமைக்கால அனுபவங்களும் அப்படியே. அன்று நாம் அரிதின் முயன்று பெற்ற அனுபவங்கள் நம் குழந்தைகளுக்கு அற்ப சந்தோஷங்களாகிவிட்டன. இரண்டு தலைமுறைகளுக்கிடையே மூன்று தலைமுறைக்கான இடைவெளி ஏற்பட்டுவிட்டது.
நமக்குத் தமிழ்நாடுதான் சரி. அவர்களுக்கு அமெரிக்கா தான் சரி. இளமை என்னும் பூங்காற்றை நாம் இந்தியாவில் அனுபவித்தோம். அவர்கள் அதன் ரம்மியத்தை அமெரிக்காவில் அனுபவிக்கட்டும். (அல்லது ஆஸ்திரேலியா…. கடைசி ஆப்ஷன் கனடா.)
-இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.
பல இளம் வயது நினைவுகள் ஞாபகம் வந்தது ஐயா...
பதிலளிநீக்குஆனாலும் இப்போது வயது 23 என்பதை மறக்க வேண்டாம்...!
நீக்குஆம், உங்கள் திருக்குறள் ஆய்வுரையைப் பார்க்கும்போது உங்கள் வயது 23 தான் இருக்கும் என்று தோன்றுகிறது. இன்னும் சில நாளில் படித்து முடித்துவிடுவேன். பிறகு பேசுவேன்.
நீக்கு// ஆவின்பால் குடிக்கும் ஆண்பால், பெண்பால் இருவரும்... //
பதிலளிநீக்குஹா... ஹா...
ஆமாம் முப்பால் குடிப்பது எப்பால்...?
எட்டு பேர்கள் (அப்பா, அம்மா, 6 குழந்தைகள்) பெரிய வானொலிப் பெட்டி அருகே உட்கார்ந்து, ரசித்து கேட்டவை எல்லாம் ஞாபகம் வருகிறது...!
பதிலளிநீக்குமுட்டியில் பலமுறை அடிபட்டு தானாகவே (வீம்பு சற்று அதிகம்) மிதிவண்டி ஒட்டக் கற்றுக் கொண்ட பின், அந்த பயணம் இருக்கே, அடடா...! இப்பொழுது நினைத்தாலும் மனம் பறக்கிறது...!
ஒட்டக் --> ஓட்டக்
நீக்குஒப்புக்கொள்ளவேண்டியதுதான்
பதிலளிநீக்குமுழுக்க முழுக்க!
பல நினைவுகள் எனக்கும் பின்னோக்கி ஓ(ட்)டியது.
பதிலளிநீக்குயாருக்குமே இளமையில் கிடைக்கும் பொருள்கள் மனதில் நின்று விடுகின்றன. அம்மாவின் சமையல் போல. அவைதான் அவர்களை பொறுத்தவரை க்ரைடீரியா செட்டர்ஸ்! என் கால போல உன் காலம் இல்லை என்பது நிரந்தர வாசகம் - மளிகைக்கடை 'இன்று ரொக்கம் நாளை கடன்' போல! சுலபாகக் கிடைக்கும் விஷயங்கள் மட்டுமில்லை, அரிதாகக் கிடைத்தாலும் அதைப் பெரும்வரைதான் ஆர்வம். பின்னர் அந்த ஆர்வம் அடுத்த விஷயத்துக்கு தாவி விடுகிறது - அந்நாளில் நாடுகளை வெற்றி கொண்ட மன்னவர்கள் போல! (ஆண்டவா... கமெண்ட் பதிவில் நிலைத்து நின்று காட்சி தரவேண்டுமே...)
பதிலளிநீக்குஇதோ தடையில்லாமல் உங்கள் கமெண்ட் தோன்றிவிட்டதே ! என்ன மாயம் செய்தீர்கள்?
நீக்குஎன்னைப் பொருத்தவரை அப்போதும் இப்போதும் எப்போதும் ஒரே போலத்தான்! ஒரு சில அப்போது கிடைக்காதவை (வாசிப்பு, படங்கள் பார்ப்பது...வீட்டில் படிப்பு படிப்பு படிப்பு என்று மட்டுமே..) அதன் பின்னும் கிடைக்காதவை இப்போது கணினி இணையம் என்று இருப்பதால் கிடைத்து கொஞ்சம் அனுபவிக்க முடிகிறதுதான். அக்காலம் இக்காலம் என்பது என் பாட்டியிலிருந்து இருக்கிறதே சார். இனியும் அது தொடரலாம். நம் மனதில்தான் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.
பதிலளிநீக்குஒன்றே ஒன்று சிறு வயதில் அதன் பின்னும் கூட பல வருடங்கள் உறவுகளுடன், நட்புகளுடன் போக்குவரத்து இருந்து வந்தது அது இப்போது ஃபோனோடு முடிகிறது. அதுவும் வாட்சப் வந்ததில் இருந்து வாட்சப் பரிமாற்றங்களுடன் முடிந்து அதுவும் ஒன் டு ஒன் என்றில்லாமல் குழுவாக...அது ஒன்றுதான் நான் மிஸ் செய்கிறேன் உறவுகளுடன் போக்கு வரத்தும் அவர்கள் வீட்டில் தங்குவதும் அவர்கள் நம் வீட்டிற்கு வருவதும் இல்லாதது,
கீதா
உண்மைதான். இப்போது யாரும் யார் வீட்டுக்கும் செல்வதை விரும்புவதில்லை. உடல் சோம்பல் ஒருபுறம், மனச் சோம்பல் ஒருபுறம். போக்குவரத்தில் ஏற்படும் நேர விரயம் இன்னொரு புறம்.
நீக்குஇந்த ஜெனரேஷன் gap எல்லா காலத்திலும் இருக்கும் என்றுதான் தோன்றுகிறது.
பதிலளிநீக்குஅரிஸ்டாட்டில் சொன்னராமே, "நாம் குழந்தைகள் நாம் சொல்வதைக் கேட்பதில்லை" என்று!
பதிலளிநீக்குநாகேந்திர பாரதி - குவிகம் இலக்கியத் தகவல் -வாட்ஸ் அப் குழுவில்:
பதிலளிநீக்குஉங்கள் மலரும் நினைவுகள் மூலம் எங்கள் மலரும் நினைவுகளையும் கிளப்பி விட்டீர்கள் .
எங்கள் வீட்டில் ரேடியோ இல்லாததால் எதிர் வீட்டுத் திண்ணையில் போய் காலையில் உட்கார்ந்து அவர் ரேடியோ போடும் வரை காத்திருந்து இலங்கை வானொலியில் சுசீலா குரலைக் கேட்டு மகிழ்ந்த நிமிடங்கள் ஞாபகம் வருகின்றன .
நீங்க எழுதின மாதிரியே அவரும் சுசீலா குரலை பாதியிலேயே கட் பண்ணிட்டு போயிடுவார் . என்னமோ போங்க சார் . ஆனா இப்பத்தான் ராத்திரியிலே திருப்பித் திருப்பிக் கேட்கிறோமே.
ஒரு சில அக்காலத்தில் நமக்குக் கிடைக்காதவை இப்போது அடுத்த தலைமுறைக்கு நன்றாகக் கிடைக்கிறதுதான். எந்தக்காலத்திலும் வித்தியாசமில்லை என்றே தோன்றுகிறது. அப்போது பென்சில் வாங்கிக் கொடுக்கவே கஷ்டப்பட்டார்கள் ஆனால் அப்படி வாங்கிக் கொடுத்த பென்சிலை நாம் தொலைக்காமல் இருந்திருக்கோமா இல்லை மிக மிக மெதுவாகச் சீவி நிறைய நாட்கள் வருவது போல் பயன்படுத்தியிருப்போமா (நான் சொல்வது பெரும்பாலானோரை விதிவிலக்குகள் உண்டு) பெற்றோரின் கஷ்டத்தைப் புரிந்து ந்டந்த குழந்தைகள் கொஞ்சம் பேர்தான் இருப்போம் அது போலத்தான் இப்போதும் என்றே தோன்றுகிறது.
பதிலளிநீக்குதுளசிதரன்
பெற்றோரின் கஷ்டங்களைப் புரிந்துகொண்டு நடக்கும் சில குழந்தைகள் இன்றும் இருக்கிறார்கள். பலர் பெற்றோரை மறந்துவிட்டார்களோ என்று தோன்றும்.
நீக்குபேசும்படம் என்ற தரமான சினிமா புத்தகத்தில் கடைசி பக்கங்களில் ஒரு புதிய சினிமாவின் கதை வசனம் அப்படியே வெளியிடுவார்கள்.
பதிலளிநீக்குநான் காதலிக்க நேரமில்லை படத்தின் வசனங்களை அப்படியே மனப்பாடம் செய்து நண்பர்களின் மத்தியில் நடித்து காட்டுவேன்.
" நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன் " பாடலும் "குமரிப் பெண்ணின் உள்ளத்திலே " பாடலும் பள்ளி செல்லும் போது தெருவில் எங்கு ஒலித்தாலும் நின்று கேட்டு விட்டுத்தான் செல்வேன்.
ஆண்டவன் கட்டளை பட போஸ்டர் சுவரில் ஒட்டி இருக்கும். அதை நின்று ஐந்து நிமிடங்கள் பார்த்தாலே படம் பார்த்த திருப்தி ஏற்படும்.
ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 pm க்கு சென்னை வானொலியில் நேயர் விருப்பம் கேட்க காதுகளை தீட்டிக்கொண்டு காத்திருப்போம்.
ராணிப்பேட்டை லஷ்மி தியேட்டர்,ஆற்காடு முரளி தியேட்டர்களில் கியூவில் நின்று டிக்கெட் வாங்கி படம் பார்த்த ஞாபகம் வருகிறது.
தாங்கள் எழுதியதில் ஒன்று புரிகிறது.எதுவுமே கஷ்டப்பட்டு கிடைத்தால்தான் சுவையாக இருக்கும். தாராளமாக கிடைத்தால் சீண்டுவார் இல்லை.இதுதான் வாழ்க்கை தத்துவம்.
இன்னும் 50 ஆண்டுகள் கழித்து நம் குழந்தைகள் கூட அவர்களின் இளமை கால நினைவுகளை பற்றி இதுபோலவே சிலாகிப்பார்களோ ?
மிக்க நன்றி நண்பரே! "விளாம்பழமும் ஓடும் போல" என்ற பழமொழி கேள்விப்பட்டதில்லையா, அப்படி இருக்கவேண்டியதுதான்.
நீக்குஇப்போதைய இளைஞர்கள் நாளைய இளைஞர்களிடம் இதே போல் சொல்லக்கூடும்...... நாம் ரசித்தவை இப்போது அவர்களுக்குத் தேவையில்லை. அவர்கள் இப்போது ரசிப்பது நாளைய இளைஞர்களை ஈர்க்கப்போவதில்லை...
பதிலளிநீக்குசுவைபட விஷயங்களை தொடர்ந்து பதிவிட வாழ்த்துகள்.
அதே..அதே..
பதிலளிநீக்குபசுமையான நினைவுகளைக் கிளறிவிடுவதில் உங்களுக்கு நிகர் நீங்களே தான்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்