வாசக நேயர்களுக்கு என் நெஞ்சார்ந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
பட்டுப் பாவாடை (சிறுகதை)
பொழுது இன்னும் விடிந்தபாடில்லை. கீதாவுக்கு முன்பே
எழுந்துவிட்டன அவளுடைய ஒரு சேவலும் இரண்டு கோழிகளும் பத்து குஞ்சுகளும். குடிசையின் சாத்திய கதவுக்கு முன் வந்து ‘க்ளக்’, ‘க்ளக்’,
‘க்ளக்’ என்று சப்தமிட்டன.
‘எழுந்திரு கண்ணு’ என்று தன் மூன்று வயது மகள் பிரியாவை
எழுப்பியபடியே கதவைத் திறப்பதற்கும் சைக்கிள் மணியை அடித்தபடி பிரபு வந்து நிற்பதற்கும்
சரியாக இருந்தது.
வந்தால் சுலபத்தில் போகமாட்டான். தன்னை எப்படியாவது
வசப்படுத்திவிடவேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்கிறான். அவனைப் பார்த்தும் பார்க்காததுபோல்
வாசல் பெருக்குவதற்குத் துடைப்பத்தைக் கையில் எடுத்தாள் கீதா.
“என்ன கீதா மேடம், வரவேற்பு பலமாக இருக்கிறதே!” என்று
சைக்கிளிலிருந்து இறங்காமலேயே சிரித்தான் பிரபு.
“குட் மாணிங் மாமா” என்றாள் பிரியா. ப்ரீ-கேஜி யில்
சொல்லிக்கொடுத்த பழக்கம்.
கீதாவுக்குப் பற்றிக்கொண்டு வந்தது. இராத்திரி முழுதும்
தனக்குப் பொங்கலுக்குப் பட்டுப் பாவாடைதான் வேண்டும் என்று அடம் பிடித்து அழுதுகொண்டிருந்த
பிரியாவை சமாதானப்படுத்தவே விடியற்காலை ஆகிவிட்டது. கோழித்தூக்கம் போடுவதற்குள் சேவல்
கூவிவிட்டது. இப்போது இவன் வேறு நக்கல் பண்ணுகிறான். அவனுக்கு குட்மாணிங் சொல்கிறாள் இவள்….
“இங்க பாரு பிரபு!” என்றவள் பக்கத்து குடிசைக்காரிகள் யாரும் கவனிக்கிறார்களா
என்று ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே, “ஒனக்கு
நூறு தடவை சொல்லிட்டேன்… இனிமே வராதேன்னு! புருஷன் இல்லாத வீட்டுக்கு இப்படி ஒரு தடியன்
அடிக்கடி வந்துபோனா பாக்கிறவங்களுக்கு என்ன பதில் சொல்றது?’ என்றாள் சற்றே கோபத்துடன்.
“உண்மையைத்தான் சொல்லிவிடேன்” என்று சைக்கிளில் இருந்து
இறங்கினான் பிரபு. “எட்டாவது படிக்கும்போதே இவன்
என்னை லவ் பண்ணினான், ஆனா எனக்கு வேற ஆளோட கல்யாணம் ஆயிடுச்சி. அந்த ஆளும் ஒரு
பொண் கொழந்தையைக் குடுத்துட்டு ஆக்சிடெண்ட்டுல போயிட்டான். இந்த தடியன் இன்னும் கல்யாணமே
பண்ணிக்காம என்னையே சுத்திட்டு வரான் - அப்படீன்னு சொல்லிடேன்! அவங்களா பாத்து நல்ல
தீர்ப்பு சொல்லட்டுமே!” என்று பிரியாவைக் கையில் தூக்கிக் கொண்டான்.
“மாமா, எனக்குப்
பட்டுப் பாவாடை வாங்கித் தரியா?” என்றாள் பிரியா.
கையிலிருந்த துடைப்பத்தை ஆவேசத்துடன் வீசி எறிந்தாள் கீதா. “அவன் யாருடி ஒனக்கு வாங்கித் தர்றதுக்கு?”
என்று அவளை பிரபுவிடமிருந்து பிடுங்கிக்கொண்டாள்.
“பிரபு! திரும்பியும் சொல்றேன், நான் மனசு மாறி ஒன்னையக்
கல்யாணம் கட்டுவேன்னு நெனக்காதே. எங்க ஆளு இல்லாம போயிட்டாலும், என் மனசுல எப்பவும்
அவர்தான் இருப்பார். அதுனால ஒன்னோட சபல புத்திய வுட்டுடு. ஒன்னோட ஜவுளிக் கடையிலே பதினஞ்சு
இருவது பொண்ணுங்க வேல செய்யுதில்ல, அதுங்கள்ல ஒண்ணைப் புடிச்சுப் போட்டுக்கோ. மறுபடி
வந்தா பொண்டாட்டியோட தான் என்னப் பாக்க வரணும். கெளம்பு நீ! எட்டு மணிக்குள்ள டாக்டரு
வீட்டுல இருக்கணும்” என்று உறுதியுடன் சொன்னாள்.
வழக்கம்போல் அசடு வழிந்தபடி நகர்ந்தான் பிரபு.
***
டாக்டர் கிருபாகரன் வீட்டில் இரண்டாவது வேலைக்காரியாகச்
சேர்ந்து இரண்டு வ்ருடங்கள் ஆகிறது. அவர் மனைவி லதா இவளை மிகவும் அன்போடுதான் நடத்தினாள்.
என்றாலும் சீனியர் வேலைக்காரியான கல்பனாவுக்கு இவளைக் கண்டால் எப்போதும் இளப்பம். அவள்
பிளஸ்டூ படித்து பெயில் ஆனவள். கீதாவோ எட்டாவதைத் தாண்டவில்லையே! அதனால் முக்கிய வேலைகளைத்
தன்னிடம் வைத்துக்கொண்டு, சின்னச் சின்ன எடுபிடி வேலைகளை மட்டும் கீதாவுக்குக் கொடுப்பாள்.
“பாருடி, எனக்கு லதாம்மா எஜமானி, ஆனா ஒனக்கு நான்தான் எஜமானி” என்று நக்கலாகச் சிரிப்பாள்.
கீதா பொறுமையாக இருந்துவிடுவாள்.
விபத்தில் இறப்பதற்கு ஒரு மாதம் முன்புதான் டாக்டரின்
கிளினிக்கில் வேலைக்குச் சேர்ந்தான் கீதாவின் கணவன் முருகேசன். அவன் துரதிர்ஷ்டம்,
கொரோனா தொற்று வந்துவிட்டது. கிளினிக் மூடவேண்டியதாயிற்று. அரசாங்க ஆஸ்பத்திரியிலேயே
கிருபாகரனுக்கு மூச்சுமுட்டும் அளவுக்கு வேலை. எனவே முருகேசனை நிறுத்திவிட்டார். அடுத்த
வாரமே அவன் விபத்தில் இறந்துபோனான். அனுதாபத்தின் காரணமாக கீதாவைத்
தன் வீட்டில் வேலைக்காரியாக எடுத்துக்கொண்டாள் லதா. அவ்வப்பொழுது
குழந்தை பிரியாவுக்கும் வேண்டியதைக் கொடுப்பாள். இரண்டு வருடம் இப்படியே கழிந்தது.
பொங்கல் வருவதை முன்னிட்டுப் புதிய துணிமணிகள் வாங்கவேண்டுமென்று டாக்டரை ‘ஆனந்த்
டிரஸ்ஸஸ்’ கடைக்கு அழைத்தாள் லதா. அந்த ஊரில் அதுதான் பெரிய ஜவுளிக்கடை. குறிப்பாகப்
பட்டுத்துணிகளுக்குப் பேர்போனது. “அய்யய்யோ நான் மாட்டேன். ஒரு சட்டை எடுக்க மூன்றுமணி
நேரம் ஆகும் உனக்கு. கீதாவை அழைத்துக்கொண்டு போய் வா” என்று அவளைக் கத்தரித்துவிட்டார்
கிருபாகரன்.
கீதா முதலில் மாட்டேன் என்றாள். இரண்டு காரணங்கள்.
ஒன்று கல்பனா பொறாமைப்படுவாள். இன்னொன்று, அந்தக் கடையில்தான் பிரபு வேலைசெய்துகொண்டிருந்தான்.
ஆனால் அன்று கல்பனாவுக்கு வயிற்றுவலியாக இருந்ததால் “நான் வைஷ்ணவியைப் பார்த்துக்கொள்கிறேன்.
நீங்க ரெண்டு பேரும் போய்வாருங்கள்” என்று ஒதுங்கிக்கொண்டாள். வைஷ்ணவி, டாக்டர் தம்பதியின்
மூன்று வயதுக் குழந்தை.
***
“வாங்க வாங்க, டாக்டர் சார் வரலியா?” என்று வாயெல்லாம்
பல்லாக வரவேற்றார் நாராயணசாமி. ‘ஆனந்த் டிரஸ்ஸஸ்’ உரிமையாளர்.
புன்சிரிப்போடு
அவருக்கு வணக்கம் சொல்லிவிட்டு, “வீட்டில் எல்லாரும் நலமா?” என்றபடி உள்ளே நுழைந்தாள்
லதா. அவளை நிழல்போல் தொடர்ந்து மெல்ல நடந்துவந்தாள் கீதா.
“தம்பி, பிரபு! மேடத்துக்கு எல்லாப் புது ஐட்டங்களையும்
ஒண்ணுவிடாமல் காட்டு” என்றார். ஊழியர்களை அவர் தம்பி என்றுதான் அழைப்பார்.
லதாம்மாவை விடவும் கீதாவைப் பார்த்தவுடன்தான் பிரபுவுக்கு
உற்சாகம் பீறிட்டது. அது கீதாவுக்கும் தெரிந்தது. இன்னும் தன்மீது காதலுடன் இருக்கும்
அந்த அப்பாவியைப் பார்த்ததும் ஒரு பக்கம் அனுதாபமும், ஒரு பக்கம் தான் இழந்துவிட்ட
இல்லறத்தின் தாபமும் அவளை வாட்டியெடுத்தது. உள்ளத்து உணர்ச்சி மனதில் பிரதிபலித்துவிடாதபடி
லதாவின் பின்னால் ஒதுங்கியே நின்றுகொண்டாள்.
கண்ணாடி அலமாரிகளில் அடைத்திருந்த எல்லா விதமான சேலைகளையம்
எடுத்துப்போட்டான் பிரபு. ஒவ்வொன்றையும் பிரித்துக்காட்டி அதனதன் சிறப்புகளை விவரித்தான்.
அவற்றின் விலைகள் எல்லாம் அவனுக்கு மனப்பாடமாகி இருந்ததைக் கண்டு பிரமித்துவிட்டாள்
கீதா. ‘வேலையில் கெட்டிக்காரன்தான்’ என்று மனதிற்குள் அவனுக்கு சர்டிபிகேட் கொடுத்தாள்.
இரண்டே இரண்டு சேலைகள் மட்டும் தேர்ந்தெடுத்தாள் லதா.
பிறகு, “மூன்று வயதுக் குழந்தைக்குப் பட்டுப் பாவாடை காட்டுங்க” என்றாள். உடனே கீதாவின்
கண்கள் மலர்ந்ததை பிரபு கவனித்தான். ‘ஓஹோ, பிரியாவுக்குத்தான் டாக்டரம்மா எடுக்கிறார்
போல’ என்று எண்ணிக்கொண்டான். நாலாயிரம் ரூபாயில் இலைப்பச்சையில் மஞ்சள் ஜரிகை போட்ட பாவாடை செட் எடுத்துக் காட்டினான். ‘இது பிரியாவுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்’
என்று மனதிற்குள் மகிழ்ந்தான். டாக்டருக்கும் அதே வயதில் பெண் குழந்தை இருப்பது அவனுக்குத்
தெரியாது.
“இது நம்ப வைஷ்ணவிக்கு சூப்பரா இருக்கும்ல?” என்று
கீதாவிடம் கேட்டாள் லதா. “ஆமாங்க” என்று மகிழ்ச்சியோடு தலையாட்டினாள் கீதா. “வேறு எதுவும்
வேண்டாம். இதை ‘பேக்’ பண்ணுங்க” என்று பில்லிங் கவுண்ட்டரை நோக்கி நடந்தாள் லதா.
பிரபுவுக்குத் தூக்கிவாரிப்போட்டது. ‘தன் குழந்தைக்கு
மட்டும்தான் எடுப்பார்களா, வேலைக்காரியின் குழந்தைக்கும் எடுத்தால் குறைந்தா போய்விடும்?’ என்று மற்றவர்களுக்குக் கேட்காதபடி
தன் அருகில் இருந்த பெண் ஊழியர் கனகாவிடம் கூறினான் பிரபு.
அப்போது திடீரென்று மின்சாரம் நின்றுபோனது. உரிமையாளர்
நாராயணசாமி அவசரமாக உள்ளே போனார். அதே கணம் அவனுக்கு அந்த யோசனை தோன்றியது. மின்சாரம்
இல்லாவிடில் கம்ப்யூட்டர் பில்லிங் போட முடியாது.
‘பார்கோடு’ வேலைசெய்யாது. ஆகவே…
ஒன்றுக்குப் பதில், ஒரே மாதிரியான இரண்டு பட்டுப் பாவாடைகளை
ஒரே அட்டைப்பெட்டியில் வைத்து ‘பேக்’ செய்தான்.
எமெர்ஜென்சி லைட்டின் ஒளியில் கார்பன் பேப்பரை
வைத்து கையால் ‘பில்’ எழுதினான். பணம் கொடுத்துவிட்டு லதாவும் கீதாவும் கிளம்பினார்கள்.
கீதாவின் முகத்தில் மிகுந்த ஏமாற்றம் இருப்பதைக் கண்டான் பிரபு. இருக்கட்டுமே, தற்காலிகம் தானே என்று உள்ளூற மகிழ்ந்தான்.
வீட்டுக்கு வந்த லதா, ஜவுளிக்கடை பெட்டிகளை அப்படியே
படுக்கையறையில் கிடத்திவிட்டு, ஓடிப்போய்த் தன்
குழந்தையை அள்ளி எடுத்துக்கொண்டாள்.
“குழந்தை ரொம்ப சமர்த்தும்மா! நிலா காட்டினேன். ட்விங்கிள் ட்விங்கிள் பாடச்சொன்னேன்,
பாடினாள். அழவேயில்லை!” என்றாள் கல்பனா. கீதா
விடைபெற்றுக்கொண்டு வீட்டை நோக்கி விரைந்தாள்.
“அம்மா எனக்குப் பட்டுப் பாவாடை வாங்கினியா?” என்று
ஆவலோடு கேட்ட பிரியாவை இறுக அணைத்துக்கொண்டாள் கீதா. கண்கள் குளமாயின.
***
அன்று இரவு
சுமார் பத்துமணி இருக்கும். டாக்டர் வீட்டு அழைப்புமணி அடித்தது. “யார்?” என்றது கல்பனாவின்
குரல்.
“மேடம், நான்தான் பிரபு. ‘ஆனந்த் டிரஸ்ஸஸ்’ கடையில்
இருந்து வருகிறேன்” என்று பதில் வந்தது. அதற்குள் டாக்டரே வந்து கதவைத் திறந்தார்.
“ரொம்ப மன்னிக்கணும் சார்! ஒரு தப்பு நடந்து போச்சு.
அதுதான் முதலாளி அனுப்பிவைத்தார்” என்று பிரபு வருத்தம் தோய்ந்த முகத்துடன் நின்றான்.
அதற்குள் வெளியில் வந்த லதாவும், “அடடே, நீயாப்பா?
என்ன விஷயம்?” என்றாள்.
“மேடம், ஒங்க அட்டைப் பெட்டியில் ஒரு பட்டுப் பாவாடைக்கு
பதில் ரெண்டு பாவாடை ‘பேக்’ ஆகியிருக்கிறதான்னு பாக்கணும். அப்போ கரண்ட்டு போயிடிச்சு
இல்லியா, எங்க ஸ்டாக்குல ஒரு பாவாடை குறையுது. தப்பு என்னோடதுதான் மேடம். கொஞ்சம் பாத்து
சொல்லுங்க” என்றான் வார்த்தையில் மிகுந்த குழைவுடன்.
வேகமாக உள்ளே போன லதா, “ஆமாம் தம்பி! ஒண்ணுக்கு பதில்
ரெண்டா ‘பேக்’ பண்ணிட்டீங்க போல! நானும் ஒடனே பாக்காம இருந்துட்டேன். சாரி” என்று இரண்டில்
ஒன்றை அவனிடம் திருப்பிக் கொடுத்தாள்.
“ரொம்ப நன்றி மேடம்! ரொம்ப நன்றி!” என்று அந்தப் பாவாடையைத்
தான் கொண்டுவந்திருந்த ஓர் அட்டைப் பெட்டியில் வைத்து மூடிக்கொண்டு சைக்கிளில் பறந்தான்
பிரபு. எங்கே? வேறெங்கு போவான்? கீதாவின் வீட்டுக்குத் தான்!
***
பிரபு வெளியேறிய சிறிது நேரத்தில் டாக்டர் கிருபாகரனுக்கு
ஒரு சந்தேகம் எழுந்தது. இந்தப் பையன் ஒருவேளை கடையில் இருந்து இப்படித் துணிகளைத் திருடுகிறானோ?
உடனே நாராயணசாமிக்கு போன் செய்தார். “அப்படிங்களா?
பிரபு ரொம்ப நல்ல பையன். அவனை மீறி இப்படி ஒரு தப்பு நடந்திருக்கும் போல. பொருள் என்னிடம் வந்துவிடும். கவலைப்படாதீங்க” என்று
உறுதியளித்தார் அவர்.
உறக்கம் கலைந்துவிட்ட டாக்டர் சிறிதுநேரம் டிவி பார்க்கலாமென்று
டிவியை ஆன் செய்தார். அப்போதுதான் அவருக்கு அந்தக் கேள்வி எழுந்தது. ‘லதா எப்போதும்
வைஷ்ணவிக்கு மட்டும் என்று துணி எடுக்கமாட்டாளே, வேலைக்காரிகளின் குழந்தைகளுக்கும்
சேர்த்துத்தானே எடுப்பாள், இன்று மட்டும் ஏன் இப்படி?’
அவருடைய கேள்விக்கு லதாவின் பதில் ஒரு புன்சிரிப்புதான்.
“இந்தப் பட்டுப் பாவாடை கீதாவின் குழந்தைக்குத் தான்! அவள் எதிரில் சொல்லாமல், சஸ்பென்சாகக் கொடுக்கவேண்டும் என்றுதான் வைஷ்ணவிக்கு என்று சொல்லிவைத்தேன்!
நம் குழந்தைக்குத்தான் ஏகப்பட்ட டிரஸ் இருக்கிறதே” என்றாள்.
கீதாவின் வீடு மிகவும் அருகில்தான் இருந்தது. “லதா,
ஒன்று சொன்னால் கேட்பாயா? இப்போதே போய் இந்தப்
பாவாடையை அந்தக் குழந்தையிடம் கொடுத்துவிட்டுவந்தால் என்ன? சந்தோஷமாகத் தூங்கும் அல்லவா?”
என்றார் டாக்டர்.
***
தூரத்தில் காரில் வரும்போதே, கீதாவின் குடிசை முன்பு
பிரபு மாதிரி ஒருவன் நிற்பது லதாவுக்குத் தெரிந்தது.
“இங்க பாரு பிரபு, நீ குடுத்தா வாங்க மாட்டேன்னு எத்தனையோ
தடவை சொல்லிட்டேன். இந்த டிரெஸ்ஸ நீயே எடுத்துக்கிட்டுப் போ. ஒரு நிமிஷம் கூட இங்க
நிக்காதே” என்று கோபத்துடன் விரட்டிக்கொண்டிருந்தாள் கீதா.
கார் வெளிச்சத்தைக் கண்டதும், அவசரமாகப் பின்வாங்கி
அருகில் இருந்த மரத்தின் இருட்டில் ஒளிந்தமாதிரி நின்றுகொண்டான் பிரபு. அட்டைப்பெட்டி
மட்டும் குடிசையின் முன்பிருந்த கயிற்றுக் கட்டிலின் மேல் கிடந்தது.
அந்த இரவு நேரத்தில் லதாம்மாவை எதிர்பார்க்காத கீதா
அதிர்ச்சியில் உறைந்துநின்றாள். தான் ஏதாவது தவறு செய்துவிட்டோமா என்று திகைத்தாள்.
‘வாங்க’ என்று அழைக்கவும் இயலாமல் விழித்தாள். குழந்தை பிரியா மட்டும் அவர்களைக் கண்டதும்
தெரிந்துகொண்டு “குட் மாணிங்” என்றாள்.
“குட் மாணிங் பிரியா” என்ற லதா, “இதோ பார், பொங்கலுக்கு ஒனக்கு ஒரு
கிப்ட்” என்று தன் கையிலிருந்த அட்டைப் பெட்டியை நீட்டினாள்.
பெட்டியின்மேல் குழந்தைகள் படம் இருப்பதை வைத்து, அதற்குள்
தனக்கான ஆடைதான் இருக்கும் என்று பிரியா புரிந்துகொண்டாள். “அம்மா, டாக்டர் மேடம் குடுத்தாங்க”
என்று அதை கீதாவிடம் கொடுத்தாள்.
கீதாவுக்குத் தெரியாதா, அதற்குள் இருப்பது பட்டுப் பாவாடை எனறு! எவ்வளவு பெரிய சஸ்பென்ஸ்!
எவ்வளவு பெரிய இன்ப அதிர்ச்சி! “அம்மா ஒங்களுக்கு ரொம்பப் பெரிய மனசு” என்று லதாவைக்
கட்டிக்கொண்டாள்.
இருட்டில் இருந்த பிரபுவுக்கு ஒன்றும் புரியவில்லை.
இந்த மேடம் அவ்வளவு நல்லவரா? இது மட்டும் அப்போதே தெரிந்திருந்தால் அவன் இப்படியொரு
திருட்டு வேலை செய்திருக்கவேண்டாமே! எவ்வளவு நல்ல முதலாளிக்கு நான் துரோகம் இழைத்துவிட்டேன்!
அவன் கண்ணிலிருந்து நீர் ஆறாக வழிந்தது. இனி அடுத்து என்ன செய்வது? முதலாளியின் கால்களில்
சென்று விழுவதுதான் ஒரே வழி.
சரி, இவர்கள் போகட்டும். அதன் பிறகு கீதாவிடமும் உண்மையைச்
சொல்லிவிட்டு முதலாளியிடம் போகலாம். இத்துடன் கீதாவின் நினைவுக்கும் ஒரு முழுக்குப் போட்டுவிடவேண்டியதுதான்.
ஆனால் அவர்கள் கிளம்பிய அடுத்த நிமிடமே அங்கு ஒரு ஸ்கூட்டர் வந்து நின்றது. “கீதாம்மா வீடு இதுதானே?”
என்றபடி இறங்கினார், நாராயணசாமி.
திகைத்துப்போய் மீண்டும் இருட்டில் பதுங்கிக்கொண்டான்
பிரபு.
“எங்க கடைல வேலைசெய்யும் பிரபு இங்க வந்தானாம்மா?”
என்றார் கீதாவிடம்.
என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் விழித்தாள் கீதா.
‘நிச்சயம் ஏதோ தப்பு செய்திருக்கிறான், இல்லையென்றால்
முதலாளியே தேடிக்கொண்டு வருவாரா?’
“என்னங்க விஷயம்?” என்று பயத்துடன் கேட்டாள். தன் கையில்
இருந்த ‘ஆனந்த் டிரஸ்ஸஸ்’ அட்டைப் பெட்டியை அவரிடம் காட்டி மகிழ்ந்தது குழந்தை. ஒரே
நிமிடத்தில் அவருக்கு எல்லாம் புரிந்துவிட்டது.
அவசரமாக உள்ளிருந்த பாவாடையைப் பிரித்தார். அதிலிருந்த
விலை எழுதிய அட்டையைக் கண்ணுக்கு அருகில் வைத்துப் பார்த்தார். அவருக்கு ஏமாற்றமாக இருந்தது. அவர்
தேடி வந்தது அதுவல்ல.
அதே சமயம் கயிற்றுக் கட்டிலில் அதே போன்ற இன்னொரு அட்டைப்பெட்டி
இருப்பதைக் கண்டார். வேகமாகப் பிரித்தார்.
அதே கலர் அதே டிசைன் உள்ள பட்டுப் பாவாடை. அதே விலை. ஆனால் விலை அட்டையில் ‘பிரபுவுக்கு’
என்று எழுதியிருந்தது. அதைக் கண்டதும் அவர் முகத்தில் அளவற்ற மகிழ்சசி தாண்டவமாடியது.
“கீதா, உண்மையைச் சொல். பிரபு இங்கு வந்தனா? அவன் தானே
இதைக் கொடுத்தான்?”
அவள் பதில் சொல்வதற்குள், ஓடோடி வந்து அவர் காலில்
விழுந்தான் பிரபு. கண்களில் இருந்து ஆறாக நீர் ஓடியது. “என்னை மன்னித்துவிடுங்கள் முதலாளி”
என்று திரும்பத் திரும்பப் பிதற்றினான்.
“எழுந்திரு தம்பி” என்றார் நாராயணசாமி. “நான்கைந்து நாட்களாகவே ஒரு குழந்தைக்குப் பட்டுப்
பாவாடை வாங்கவேண்டும், ஆனால் பணமில்லை என்று
நீ கனகாவிடம் சொன்னதாகக் கேள்விப்பட்டேன். அதனால் உனக்குப் பரிசாகக் கொடுக்கவேண்டும் என்று இந்தப் பாவாடையை நான் தேர்ந்தெடுத்து
உன் பேரையும் அதில் எழுதிவைத்திருந்தேன். நீ அதற்குள் அவசரப்பட்டுவிட்டாய். ஒவ்வொரு ராத்திரியும் கடையில் மொத்த ஸ்டாக்கையும்
நான் கணக்கெடுப்பேன் என்று உனக்குத் தெரியாதா? அதனால்தான் நீ ஒன்றுக்குப் பதில் ரெண்டு ஐட்டம் வெளியே அனுப்பியிருப்பதைக் கண்டுபிடித்தேன்”
என்றார் அவன் கண்களைத் தம் கையால் துடைத்தபடியே.
அந்த அட்டைப் பெட்டியை எடுத்து பிரியாவிடம் கொடுத்தார்.
“பாப்பா, ஒனக்கு இந்தப் பொங்கலுக்கு ஒண்ணுக்கு ரெண்டா பட்டுப் பாவாடை கெடைச்சுருக்கு.
சந்தோசம் தானே?” என்றார். கீதா, குழந்தை இருவரும் ஒருசேர மகிழ்ச்சியில் திக்குமுக்காடினர்.
“மடையா, வழக்கம்போல நாளைக்கு வேலைக்கு வா. இனிமேல்
இந்த மாதிரி நடக்கக்கூடாது. சரியா?” என்றார் பிரபுவைப் பார்த்து.
பிறகு, “இந்தப் பெண் யார்? இந்தக் குழந்தை யாருடையது? உண்மையைச் சொல். ஏதாவது தப்பு தண்ட்டா செய்தியா?” என்றார்.
பிரபுவை முந்திக்கொண்டு, “இவரு எனக்கு அண்ணன் முறைங்க.
பெரியம்மா புள்ளை” என்றாள் கீதா.
“தனக்கு ஒரு தங்கச்சி இருக்கறதா இவன் சொன்னதே இல்லையே”
என்று வியப்புடன் ஸ்கூட்டரைக் கிளப்பினார்
நாராயணசாமி.
“எனக்கே இப்போதுதானே தெரியும்?”
என்று நினைத்தபடி சைக்கிளில் ஏறினான் பிரபு.
- இராய செல்லப்பா
***
(‘பூபாளம்’ இதழில் வெளியான கதை).