சனி, டிசம்பர் 30, 2017

டிசம்பரை மறக்கலாமா?

பதிவு எண் 45/2017

டிசம்பரை மறக்கலாமா?

எது வருகிறதோ இல்லையோ, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் வந்துவிடுகிறது. வந்த சுவடு தெரியாமல் போயும் விடுகிறது. அதிலும் கடைசி இரண்டு மூன்று நாட்கள் இருக்கின்றனவே, அவைதாம் மிக முக்கியமானவை. எங்கு பார்த்தாலும் டிசம்பர் ஆஃபர்கள் – கார் வாங்கினால் இன்ஷூரன்ஸ் இலவசம், ஃபேன் வாங்கினால் எல்இடி பல்ப் இலவசம், வீடு வாங்கினால், அடுத்த ஒருவருடத்திற்கு இஎம்ஐ இல்லை...என்பதுபோல.

கொஞ்ச நாட்களாக நான் வலைப்பதிவு எதுவும் எழுதவில்லை. வேறு வேலைகள் -அவையும் இலக்கிய வேலைகளே- எனது நேரத்தைத் திருடிக்கொண்டதே காரணம். என்மீது அன்பும் நட்பும் கொண்ட பதிவர்கள் இதனால் என்மீது கோபம் கொண்டிருப்பதை உணரமுடிந்தது. அதனால், டிசம்பர் முடிவதற்குள் ஒரு பதிவை எழுதிவிடவேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன்.

டிசம்பரின் இறுதி நாட்களில் டிசம்பரைப் பற்றி எழுதுவதுதானே பொருத்தமாக இருக்கும்! அதனால் கடந்த சில வருடங்களின் டிசம்பர் இறுதி நாட்களில் என் வாழ்க்கையில் நிகழ்ந்த மிகப் பெரிய, அல்லது மிகச் சிறிய, அல்லது மிகச் சிறந்த, அல்லது மிக மோசமான விஷயங்களைப் பற்றி எழுதிவிடப்போகிறேன். இதற்கு ஆதாரமாக என்னுடைய  கடந்த ..ஆண்டுகளின் டயரிகளைப் புரட்டிக்கொண்டிருக்கிறேன்.   

2014 டிசம்பர்

27-ஆம் தேதி: நீண்ட நாட்களாகப் புதிய சோஃபா செட் வாங்கவேண்டுமென்று எண்ணம் இருந்தது. ஆனால் எண்ணம் விருப்பமாக மாறவில்லை. இன்றோ அது நிறைவேற்றியாகவேண்டிய கட்டாயக் கடமையாக மாறிவிட்டது. ஆகவே வாங்கியே விட்டேன்.

அந்த ஒன்று மட்டும்தான் வாங்கவேண்டுமென்று போனாலும், கடையில் பார்க்கும்போது வேறுசில பொருட்களும் கண்ணை இழுக்க ஆரம்பித்ததால், கண்ணாடியாலான டைனிங் டேபிளும் அதற்கான ஆறு நாற்காலிகளும் வாங்கும்படி ஆயிற்று. கையில் தூக்க எளிதாக இருக்குமாறு எடை குறைவான நாற்காலிகளோடு அது ஒரே செட்டாக அமைந்ததால் விரும்பி வாங்கினோம்.

அருகிலேயே ஒரு அழகான டிவி ஸ்டாண்டு இருந்தது. நல்ல விலைதான். எனவே அதையும் வாங்கினோம். இந்த மூன்றையும் வாங்கியதற்காக ஒரு மர பீரோவும், ஸ்டடி-டேபிளும் இலவசமாகக் கொடுத்தார்கள்.

பணமில்லா வர்த்தகத்தை மேற்கொள்ளும் வழக்கம் நம்மிடையே வந்துவிட்டதால், பொருட்களின் விலையைக் கடன் அட்டை மூலம் செலுத்தினேன். இன்னும் ஒருமாதத்திற்குக் கவலை இல்லை.  

ஆனால் பொருட்கள் ஒவ்வொன்றாகத்தான் வந்துசேர்ந்தன. அதிலும், டைனிங் டேபிள், அங்கம் அங்கமாகக் காகிதப் பெட்டியில் வந்தது. அதை விசேஷமான கோந்தினால் ஒட்டி இணைக்கவேண்டும்; அது இன்னும் கொரியாவிலிருந்து வரவில்லையாம். ஆகவே ஒருவாரம் பொறுக்கவேண்டுமாம். ஆனால் ஒருவாரம் அல்ல, ஒருமாதமே ஆகியது. அப்படியும், ஒட்டிய கோந்து சில மாதங்களில் விலகிவிட, கடையிலிருந்து சரியான பதில் கிடைக்காமல்போக, இல்லத்தரசியின் தினசரி வசைபாடல்களைப் பொறுக்கமுடியாமல் ஃபெவிபாண்ட் வாங்கிவந்து அவளிடம் கொடுக்க, எனது சிறிய உதவியோடு, அவளே அதை ஒட்டி மீண்டும் இணைத்தாள். என்றாலும் அது ஓபிஎஸ்-இபிஎஸ் கூட்டணி மாதிரியே எந்த நேரமும் கழன்றுவிடும் நிலையில்தான் இருக்கிறது. தொலையட்டும்.

28-ஆம் தேதி: இண்டேன் கேஸ் வந்தது. விலை ரூ.404.50 என்று பில்லில் இருந்தது. ஆனால் கேஸ் கொண்டுவரும் பையன், மாடி ஏறும்போதே அம்மா, நானூற்று ஐம்பது கொடுங்கள் என்று சற்றே அதிகாரத் தோரணையில் சொல்லிக்கொண்டே வந்ததால்,  ரூ. 450  கொடுத்துவிடுங்கள் என்று சமையல் அறையில் இருந்து உத்தரவு வந்தது. பர்ஸை எடுப்பதற்குள், பொங்கல் இனாம் ஐம்பது ரூபாய் சேர்த்து ஐந்நூறாகக் கொடுங்கள் என்று இன்னொரு உத்தரவு வந்தது. 

ஏனோ தெரியவில்லை, இல்லத்தரசிகளுக்கு  இந்த கேஸ் பையன்கள்மீது அபாரமான பிரியம். அந்தப் பையன்களும் அவளைப் பார்த்தே பேசுவார்கள். நாம் அருகில் இருப்பதையே தெரியாதமாதிரி நடந்துகொள்வார்கள். (உங்கள் வீட்டில் எப்படி?)  வேறு வழியின்றி: கேஸ் வந்தது. ரூ.500 மொத்த செலவு என்று டயரியில் எழுதியிருந்தது. மொத்த-ச்-செலவு என்று இடையில் ச் வந்திருக்கவேண்டும். டயரி எழுதும்போது ஒற்றுப்பிழைகளை நான் கவனிப்பதில்லை. (நீங்கள்?)

அன்றே காய்கறிகள் – ரூ.194.10’ என்றும் ஒரு பதிவும் இருக்கிறது அது முக்கியமில்லை, விடுங்கள்.

29-ஆம் தேதி: வீட்டுவரி வாங்குவதற்கு அதிகாரிகள் வந்து மெயிண்ட்டனன்ஸ் அலுவலகத்தில் காத்திருந்தார்கள். காசு வேண்டாம், காசோலைதான் வேண்டும் என்றார்கள். நான் காசோலை பயன்படுத்தி வெகுநாட்கள் ஆகிவிட்டன. நெட்பேங்கிங்தான் எல்லாமே. எப்படியோ தேடி எடுத்து ஒரு காசோலையைக் கொடுத்தேன். அது என் கணக்கில் வந்து பற்றுவைப்பதற்கு இரண்டு மாதங்கள் ஆயின. பஞ்சாயத்தில் ஆள் இல்லையாம்! 

அது சரி, இந்த வீட்டு வரி எதற்காக வாங்குகிறீர்கள் என்று முகத்தை அப்பாவித்தனமாக வைத்துக்கொண்டு அந்த அதிகாரியிடம் கேட்டேன். எனக்குத் தெரியாதுங்க. அம்மா சொல்லுவாங்க, நான் வந்து வாங்குவேன். அவ்வளவுதான் என்று அவரும் உண்மையிலேயே அப்பாவித்தனமான பதிலைச் சொன்னார். அம்மா என்று அவர் சொன்னது அந்த அம்மாவோ, சின்னம்மாவோ அல்ல. பஞ்சாயத்துத் தலைவராக இருந்தவரும் ஒரு அம்மாதான்!    

30-ஆம் தேதி:  திடீரென்று ஃபிரிட்ஜ் ரிப்பேர் ஆகிவிட்டது. ஏழு வருடங்கள் முன்பு மங்களூரில் வாங்கிய பொருள். அளவில் சிறிதாகையால் அதை மாற்றிவிட்டுப் பெரியது வாங்கவேண்டுமென்று வீட்டில் அவ்வப்போது முழக்கங்கள் எழும். இன்று ரிப்பேர் ஆகிவிட்டது. மெக்கானிக் வந்து பார்த்துவிட்டு, டிசம்பர் ஆஃபரில் பரிமாற்றம் செய்துகொள்வது நல்லது. அதை விட்டால் ஐந்நூறு ரூபாய் கூடப் போறாது என்று ஆலோசனை சொன்னார். அது போதாதா! புதிய ஃபிரிட்ஜ் வந்தே விட்டது. இன்றே டெலிவரி ஆகிவிட்டதில் அம்மையாருக்கு மிகவும் மகிழ்ச்சி.

இருங்கள், அந்தக் கடைக்கு எதிரிலேயே நல்ல ஓட்டல் இருந்தது. விடுவோமா? டிபன் @ சங்கீதா – ரூ.795 + 50 TIPS’ என்று டயரியில் இருந்தது.

31-ஆம் தேதி: எங்கள் குடியிருப்பில் இரவு பன்னிரண்டு மணிக்கு கேக் வெட்டினார்கள். பெரிய கேக். சுமார் ஆயிரம் பேருக்குத் துண்டு போடவேண்டுமே!

ஜனவரி 01, 2015: வியாழக்கிழமை: இன்று வைகுண்ட ஏகாதசி: ஆகவே காலை நாலு மணிக்கே கிளம்பி மகாபலிபுரம் நிலமங்கை தாயார்- ஸ்தலசயனப் பெருமாள் திருக்கோவிலில் சொர்க்கவாசல் திறப்பைக் கண்டுகளித்தேன். அதற்கு நண்பர் ஆராவமுதனுக்கு நன்றி தெரிவித்தாகவேண்டும்.

2015 டிசம்பர்       

29- 31 வரை: மகனும் மருமகளும் சிலநாள் விடுமுறையில் அமெரிக்காவில் இருந்து வந்திருந்தனர். அப்போதுதானா சுடுநீர்க் கலம் (வாட்டர் ஹீட்டர் -அல்லது கீசர்) திடீரென்று தன் செயலை நிறுத்திக்கொள்ளவேண்டும்!  மெக்கானிக் வந்து கழற்றி எடுத்துக்கொண்டு போனார். இரண்டுநாள் ஆகும் என்றார். (அது வாங்கிப் பத்து வருடங்களுக்கு மேல் ஆயிற்று.) உடனடித் தீர்வாக, புதிய சுடுநீர்க்கலம் வாங்கினேன். வீட்டில் மூன்று குளியலறைகள் உண்டு. சுடுநீர்க்கலமோ ஒன்றே ஒன்றுதான். சரி, அது ரிப்பேர் ஆகிவந்தால் இன்னொரு குளியலறைக்கு ஆயிற்று என்று சமாதானப்படுத்திக்கொண்டேன்.

2016  டிசம்பர்

13-ஆம் தேதி: வார்தா புயல் சென்னையைக் கடந்தது. எங்கள் குடியிருப்பில் ஏராளமான பூமரங்கள் வேரோடு சரிந்தன.
பத்துக்கும் மேற்பட்ட  மரமல்லி மரங்கள் சரிந்தன 

17 -ஆம் தேதி: காலை   9.45 மணிக்கு எமிரேட்ஸ் விமானம் மூலம் நியூயார்க் நகருக்கு நானும் மனைவியும் பயணமானோம். சென்று சேரும் போது நல்ல குளிர். அடுத்த ஐந்தரை மாதங்கள் அமெரிக்காவில் இருந்தோம்.
நியூயார்க்கில் ஒரு மான்...

இந்த வருடம் 2017 டிசம்பர்

24-ஆம் தேதி: அமெரிக்கா சென்றிருந்த நண்பர் நாக.வேணுகோபாலன் சென்னை திரும்பிவிட்டார். இன்று வந்திருந்தார். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பதில் உள்ள சங்கடங்களைப் பகிர்ந்துகொண்டோம். இன்னொரு டில்லி நண்பரான உதயம் சீனிவாசன் சென்னை வந்திருக்கிறார். நாங்கள் மூவரும் ஒன்றாகச் சந்திக்கவேண்டும். சிலநாட்களில் நடக்கலாம்.

31-ஆம் தேதி: இன்று இரவு அறம் என்ற திரைப்படம் எங்கள் குடியிருப்பில் திரையிடப் போகிறார்கள் என்று தெரிகிறது. டென் மைனஸ் ஒன் தாரா நடித்த படமாம். ஜூலியா ராபர்ட்ஸ் நடித்த  ERIN BROCKOVICH மாதிரி இருக்கும் என்று கருதுகிறேன்.

நள்ளிரவில் கேக் வெட்டுவது நடைபெறும் என்றும் தெரிகிறது.

-இராய செல்லப்பா (சென்னையில் இருந்து)

வியாழன், நவம்பர் 02, 2017

இப்படியும் சில கல்யாணங்கள்!

பதிவு எண் 44/2017 (02-11-2017)
இப்படியும் சில கல்யாணங்கள்!

கோடை மழை எப்போது வேண்டுமானாலும் வரட்டும்; முகூர்த்த நாளில்தான் வரவேண்டுமா? செல்வத்திற்குக் கல்யாணம் என்று அதற்குத் தெரியாது போலும். கொட்டித் தீர்த்துவிட்டது.

முதல்நாள் மாலை மாப்பிள்ளை அழைப்பும் தடைப்பட்டது. இப்போது  காலை ஒன்பதுமணி முகூர்த்தத்திற்கும் கூட்டம் குறைவாகவே இருந்தது. எப்படியும் தாலிகட்டும் நேரத்திற்குள் இன்னொரு ஐம்பது அறுபது பேராவது வரக்கூடும். அதனாலெல்லாம் சமையல் காண்டிராக்டர் பணத்தைக் குறைத்துக்கொள்வாரா என்ன; முன்னூறு இலைக்குப் பேசியதைக்  கொடுத்துதான் ஆக வேண்டும். பேரம் பேசினால் அசிங்கம்.

உள்ளூரிலேயே ஐந்நூறு பத்திரிக்கை கொடுத்திருந்தான் செல்வம்.  ஒருமணி, இரண்டுமணி பயணத்தொலைவில் இருப்பவர்களுக்கு இன்னொரு இருநூறு பத்திரிகைகள் தபாலில் போயிருந்தன. அதனால் எப்படியும் முன்னூறு இலை விழும் என்று ஒரு கணக்கு. இப்போதோ இருநூறுதான் தேறும் என்று தோன்றியது.  

‘மாப்பிள்ளை சார், கொஞ்சம் நிமிர்ந்து உட்காருங்கள்’ என்று சாஸ்திரிகள் கூறுவதற்கும், வாசலில் தான் எதிர்பார்க்காத முகம் ஒன்று நிற்பதைக் கண்டு சற்றே திகைப்படைந்தவனாகச் செல்வம் நெளிவதற்கும் சரியாக இருந்தது.

எல்ஐஸி அல்லது தேசீயமயமான வங்கியிலிருந்து ஓய்வு பெற்றவரைப்போல் இருந்தார் அவர். அணிந்திருந்த பேண்ட்டு ஒரு காலத்தில் அவருக்குச் சரியாக இருந்திருக்கவேண்டும். வரவேற்பு மேஜையின் முன்னால் கையில் வெள்ளிக் கிண்ணங்களோடு இரண்டு பதின்பருவப் பெண்களும், பன்னீர் தெளிக்க ஒரு சிறுமியும் ஒயிலாக நின்றிருந்தனர். அவர்களிடமிருந்து சந்தனமும் சர்க்கரையும் பன்னீர்த் தெளிப்பும் பெற்றவர், நேராக மாப்பிள்ளையை நோக்கி நடந்தார்.

அப்போதுதான் அலங்காரம் முடிந்து மணப்பெண்ணைத் தோழிகள் அழைத்துக்கொண்டு மணமேடையை நோக்கி வந்துகொண்டிருந்ததால், அவர் சற்றே பின்வாங்கினார். பிறகு முதல் வரிசையில் இருந்த காலி நாற்காலியொன்றில் அமர்ந்தபடி செல்வத்தைப் பார்த்துப் புன்னகைத்தார். வேறு வழியின்றி செல்வமும் இலேசாகப் புன்னகைத்தான். இவர் எதற்காக வந்தார், இவருக்குத் தான் அழைப்பிதழ் அனுப்பவில்லையே என்று யோசித்தான். மேற்கொண்டு அவனை யோசிக்கவிடாதபடி சாஸ்திரிகள் மந்திரம் சொல்ல ஆரம்பித்தார்.

தாலி கட்டும் நேரம் வந்தது. அப்போது ஓர் அழகிய இளம்பெண் அவரிடம் வந்து பேசுவதைக் கவனித்தான் செல்வம். அவருடைய மகளாக இருக்குமோ? அவளை இவன் பார்த்ததில்லை. ‘மாங்கல்யம் தந்த்துனானேன..’ ஒலித்தபோது மேடைக்கு நெருங்கி வந்து, கையில் இருந்த பூக்களையும் அட்சதையையும் மணமக்களை நோக்கி மெல்ல வீசினார் அவர். அதே சமயம் அவரது பார்வை அந்தப் பெண்ணை நோக்கி ஏதோ சொல்வதுபோல் இருந்தது. அவளுடைய கண்களில் திடீரென்று கலக்கமும் இலேசான கண்ணீரும் கிளம்பியதை செல்வம் கவனித்திருக்கமுடியாது.

சாஸ்திரிகள் எழுந்தார். ‘இன்னும் சடங்குகள் பாக்கி இருப்பதால், யாரும் மேடைக்கு வந்து மணமக்களிடம் கைகொடுக்கவேண்டாம். பரிசுகளையும் பின்னால் கொடுக்கலாம். தயவு செய்து பொறுக்கவேண்டும்..’ என்று மேளச் சப்தத்துடன் போட்டிபோட்டுக்கொண்டு கூறினார். ஆனாலும் விறுவிறுவென்று மேடையில் ஏறி மின்னல்வேகத்தில் பரிசுப் பொட்டலங்களைக் கொடுத்துவிட்டுத் திரும்ப ஒரு கூட்டமே இருந்ததை அவரால் ஒன்றும் செய்யமுடியவில்லை.  

இவரும் மேடை ஏறினார். ஒரு கவரை செல்வத்திடம் நீட்டினார். உள்ளே ரூபாய்நோட்டுக்கள் இருக்கலாம். செல்வம் மரியாதையோடு பெற்றுக்கொண்டான். ‘சாப்பிட்டுவிட்டுத்தான் போகவேண்டும்..’ என்று சொன்னான். சம்பிரதாயமாகத்தான்.

அந்தப் பெண் மேடைக்குக் கீழே நின்றுகொண்டு அவனை ஒருகணம் தீர்க்கமாகப் பார்த்தாள். முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டவில்லை. தற்செயலாக அவளைப் பார்த்த செல்வம், அவள் கழுத்து காலியாக இருந்ததைக் கண்டான். இன்னும் மணமாகவில்லை. 
*****
திருமணம் முடிந்த மறுநாள். பரிசுப்பொருட்களை எடுத்துப் பார்த்துக்கொண்டிருந்தார்கள் செல்வமும் அவனது புது மனைவியும். பணமாக வந்த கவர்கள் நிறைய இருந்தன. ஒவ்வொன்றாகப் பிரித்துப் பட்டியல் இட்டான் செல்வம்.

‘இதென்ன, கவரில் பணம் ஒன்றும் இல்லை, வெறும் கடிதம்தான் இருக்கிறது!’ என்று வியப்புடன் கூறினாள் மனைவி. ‘அவர்’ கொடுத்த கவர்.
*****
‘அன்புள்ள திரு செல்வம்,
என்னை மன்னியுங்கள் என்று முதலில் கேட்டுக்கொண்டுவிடுகிறேன். ஏனென்றால் உங்கள் திருமணம் ஒரு வருடம் தள்ளிப்போனதற்கு நான்தானே காரணம்!...’
*****
கடிதத்தை மேற்கொண்டு படிக்காமல் கலகலவென்று சிரித்தான் செல்வம். ‘இந்தா, நீயே படி..’ என்று அவளிடம் நீட்டினான். அவளும் ஆர்வத்துடன் படிக்க ஆரம்பித்தாள்.
****
‘போன வருடம் உங்கள் அலுவலகத்திற்கு ஏதோ அலுவலாக வந்தபோது, உங்களைப் பார்த்தேன். எளிமையாக அன்பாக நீங்கள் பழகும் விதமும் முன்பின் தெரியாதவர்களிடமும் பரிவோடு பேசும் தன்மையும் எனக்குப் பிடித்திருந்தது. உங்கள் மேனேஜரிடம் விசாரித்தேன். உங்களைப் பற்றி மிகவும் உயர்வாகக் கூறினார். நல்ல திறமையுள்ள இளைஞர் என்றும் விரைவில் முன்னுக்கு வந்துவிடுவார் என்றும் கூறினார். இன்னும் திருமணம் ஆகவில்லை என்று தெரிந்ததும் என் மகளுக்கு உங்களைப் பார்க்கலாமே என்ற உந்துதல் ஏற்பட்டது.

உங்கள் வீட்டு முகவரிக்குச் சென்று அக்கம்பக்கத்தில் மேலும் விசாரித்தேன். மிகவும் ஏழைக் குடும்பம், இரண்டு தங்கைகள் திருமணத்திற்கு இருக்கிறார்கள், தகப்பனாருக்கு நிரந்தர வருமானமில்லை என்று தெரிந்தது. வசதிகள் இல்லாத வாடகை வீடு.     

எனக்கும் அதிக வசதிகள் இல்லை என்றாலும், உங்களைப் பார்த்த மாத்திரத்திலேயே எனக்குப் பிடித்திருந்தாலும், அவ்வளவு சிறிய வாடகை வீட்டில் மணமானபிறகு நீங்கள் குடியிருக்க இயலாது; பெரிய வீட்டிற்கு மாற உங்கள் வருமானம் இடம் கொடுக்குமா என்று தெரியவில்லை. பெண்ணைப் பெற்றவனின் கவலைகள், இளைஞரான உங்களுக்குத் தெரிய வழியில்லை. என்றாலும் உங்கள் முகவரிக்கு ஜாதகம் அனுப்பினேன்.

பொருந்தியிருப்பதாகவும், ஆனால் கொஞ்சநாள் பொறுப்பது நல்லது என்றும் உங்கள் தகப்பனார்  போனில் பேசினார். என்றாலும் என் உள்மனம் இது நல்ல சம்பந்தம் என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்ததால், அடுத்த மாதம் அவருக்கு போன் செய்து பெண்பார்க்க வருமாறு அழைத்தேன். ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை பத்துமணிக்கு நீங்கள் வருவதாக ஏற்பாடு.

நாங்கள் இருந்தது மூன்றாவது மாடி. சன்னல் வழியாக உங்களை எதிர்பார்த்து என் மகள் நின்றுகொண்டே இருந்தாள். என் மனைவிக்கு மட்டும் திருப்தி இல்லை. வசதி இல்லாத ஒரு வீட்டில், அதுவும் இரண்டு பெண்களுக்குத் திருமணம் செய்யவேண்டிய பொறுப்பையும் ஏற்கவேண்டிய கட்டாயத்தில் நம் பெண்ணை ஏன் தள்ள வேண்டும் என்று அவள் ஆட்சேபித்தாள். ஒரு தாயின் அடிப்படையான கவலை அது. 

ஆனால் என் மகளுக்கு எந்தக் கவலையும் இருக்கவில்லை. மாப்பிள்ளையைப் பார்த்த பிறகு முடிவெடுக்கலாம் என்று அவள் கருதினாள். தனக்குப் பிடிக்கவில்லை என்றால் வற்புறுத்தக்கூடாது என்றாள். சரி என்றேன்.

ஆனால் என் மனைவிக்கு சம்மதமாகப் படவில்லை. பெண்பார்க்கும் நிகழ்ச்சியைத் தள்ளிவைக்கச் சொன்னாள். கண்ணைக் கசக்கத் தொடங்கினாள். ‘அவர்கள் வந்து பார்த்துவிட்டுப் போகட்டுமே, பிறகு முடிவெடுக்கலாம். ஏன் அவசரப்படுகிறாய்? அந்தப் பையனைப் பார்த்தால் மிகவும் நல்லவனாகத் தெரிகிறது. நம் பெண்ணுக்கு நிச்சயம் பிடிக்கும். என் மீது நம்பிக்கையில்லையா?’ என்று எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை. அழுதுகொண்டே இருந்தாள். பிறகு திடீரென்று வெளியே கிளம்பினாள். ‘அவர்கள் வரும் நேரமாயிற்றே! எங்கே போகிறாய்?’ என்றேன். பதில் சொல்லாமல் போனாள்.

தரையில் ஆட்டோ ஒன்று வந்து நிற்பதும் அதில் இருந்து சிலர் இறங்கும் ஓசையும் கேட்டது. சன்னலில் எட்டிப் பார்த்தேன். உங்கள் தாயாரும் தகப்பனாரும் முதலில் வந்தார்கள். மூன்று பேராகப் போகவேண்டாம் என்பதாலோ என்னவோ நீங்கள் சற்றே பின்னால் நின்றீர்கள்.

மகளைத் தயாராக இருக்கச் சொல்லிவிட்டு வாசல் கதவைத் திறக்க முயன்றேன். முடியவில்லை. என்ன இது அபசகுனம் மாதிரி என்று நினைத்தேன். பலமாகக் கதவை அசைக்க முயன்றேன். அப்போதுதான் புரிந்தது, வெளியே அவசரமாகப் போன என் மனைவி, வாசல் கதவை வெளிப்புறமாகத் தாளிட்டுவிட்டுப் போயிருக்கிறாள் என்று. இந்த சம்பந்தத்தில் தனக்கு விருப்பமில்லை என்பதை எவ்வளவு மோசமாகவா வெளிப்படுத்துவாள்! அவள் மட்டும் திரும்பிவந்தால் கழுத்தை நெரித்துவிட வேண்டும்போல் ஆத்திரம் வந்தது.

அதற்குள் நீங்கள் எல்லாரும் படியேறி வரும் ஓசை கேட்டது. என்ன செய்வதென்று எனக்குப் புரியவில்லை. தங்களை வரவேற்பதற்காக வாசலில் காத்திருப்பார்கள் என்று எதிர்பார்த்து வருபவர்கள், கதவு மூடித் தாளிட்டிருந்தால் என்னவென்று அர்த்தம் செய்துகொள்வார்கள்? சகுனங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் சமுதாயம் அல்லவா நம்முடையது?

ஒரு கணம் கூச்சத்தால் குறுகிப் போனேன். என் மனைவியின் செயல் எல்லா நாகரிகத்திற்கும் அப்பாற்பட்டதாக இருந்தது. என்னை இவ்வளவு மோசமாகக் கைவிடுவாள் என்று நான் எப்போதும் கருதியதில்லை. ஒரு முடிவுக்கு வந்தவனாக, சன்னல்களைச் சாத்தினேன். மகள் தன்னை அலங்கரித்துக்கொள்வதில் கவனமாக இருந்தாள்.

வாசல் கதவின் அருகில் நீங்கள் எல்லாரும் வந்துவிட்டது தெரிந்தது. கதவைப் பார்த்ததும் நீங்கள் அதிர்ச்சி அடைந்திருக்கவேண்டும். ‘என்னடா இது, பூட்டி இருக்கிறது!’ என்று உங்கள் தாயார் கூறுவது கேட்டது. உங்கள் தகப்பனார் மட்டும், ‘ஏதோ அவசரம் ஏற்பட்டிருக்கவேண்டும். அதுதான் நமக்குத் தகவல் தெரிவிக்காமல் புறப்பட்டுப் போயிருக்கிறார்கள்’ என்று கூறுவதும் கேட்டது. ‘மரியாதை தெரியாதவர்கள். நம்மை அழைத்துவிட்டு ஏன் இப்படி அவமானப்படுத்தவேண்டும்?’ என்று உங்கள் தாயார் கோபமாகப் பேசுவதும், ‘சரி, விடம்மா. எனக்கு இப்போது கல்யாணம் வேண்டாம் என்று சொன்னாலும் நீ கேட்கவில்லை. அதுதான் இப்படி நடந்திருக்கிறது’ என்று நீங்கள் தாயாரைச் சமாதானப்படுத்துவதும், பிறகு எல்லாரும் இறங்கிப் போவதும் கேட்டது.

என் வாழ்க்கையில் ஒருவரையும் இம்மாதிரி நான் அலட்சியப்படுத்தியதில்லை. மரியாதைக் குறைவாக நடந்து கொண்டதில்லை. உடலெங்கும் வியர்த்தது எனக்கு. அப்படியே மயங்கி விழுந்துவிட்டேன்.

ஒருமணி நேரத்திற்குப் பிறகு என் மனைவி திரும்பிவந்தாள். என்னை விட என் மகளுக்குத்தான் அதிகக் கோபம். ‘முன்பின் தெரியாத மனிதர்களிடம் இவ்வளவு கேவலமாகவா நடந்துகொள்வாய்’ என்று அடிக்கவே போய்விட்டாள்.

ஆனால் என் மனைவியின் வாதமோ வேறு விதமாக இருந்தது. ‘போடி முட்டாள்! நாம் வாழ்வது ஆண்களின் சமுதாயத்தில்! அதைப் புரிந்துகொள். ஒருவன் நூறு பெண்களைப் பார்த்துவிட்டுப் பிடிக்கவில்லை என்று  போய்விடலாம். ஆனால், அந்தப் பெண்ணைத்தான் ஆயிரம் கேள்வி கேட்பார்கள். அந்தப் பையன் உன்னை வேண்டாம் என்று சொல்லி விட்டானாமே, ஏன்- என்று உன்னைத்தான் குறை சொல்லும். உன் அப்பா அவசரப்பட்டு முடிவெடுத்துவிட்டார். எனக்கு வேறு வழி தெரியவில்லை....எல்லாம் உன் நல்லதற்காகத்தான்....’ என்று மகளைக் கட்டிக்கொண்டு அழுதாள்.

அதன் பிறகு உங்களைத் தொடர்பு கொள்ளும் தைரியம் எனக்கு வரவில்லை. நீங்களாக என்னிடம் பேசமாட்டீர்கள் என்று தெரியும். இந்தப் பெண் இல்லாவிட்டால் வேறு யாராவது கிடைத்துவிட்டுப் போகிறாள். விதி என்று ஒன்று இருக்கிறதல்லவா?     

என்றாலும் உங்களைச் சந்தித்து நடந்த அவமரியாதைக்காக மன்னிப்புக் கேட்டாலொழிய என் மனம் ஆறாது என்று தோன்றியது. 

அதன் பிறகு உங்கள் அலுவலகத்திற்கு வரவேண்டிய வேலைகள் இருந்தாலும் நான் வராமல் மற்றவர்களையே அனுப்பினேன். அப்படியும் ஒருமுறை போய்த்தீரவேண்டிய அவசியம் ஏற்பட்டது. நல்லவேளை நீங்கள் அன்று விடுமுறையில் இருந்தீர்கள். உங்களுக்குத் திருமணம் என்றும் தெரிந்தது. மண்டபத்தின் முகவரியைத் தெரிந்துகொண்டேன். என் மகளும் நேரில் வந்து உங்களிடம் மானசீகமாகவாவது மன்னிப்பு கேட்கப் போவதாகக் கூறினாள்.   

உங்கள் திருமணத்திற்கு எங்கள் வாழ்த்துக்கள். 

எது விதிக்கப்பட்டதோ அதுதானே நடக்கும்! உங்கள் பெற்றோர்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்.

திருமணப்பரிசாக ஏதாவது பொருளோ பணமோ கொடுப்பது மரபு. ஆனால் வேறெந்தப் பொருளை விடவும் இக் கடிதம் மதிப்பானது என்று உங்களுக்கே தெரியும் அல்லவா!

இப்படிக்கு...
****
கடிதத்தைப் படித்தவள் செல்வத்தை இறுகக் கட்டிப் பிடித்துக்கொண்டாள். ‘அவர்களுக்கு ரொம்ப நன்றி சொல்ல வேண்டும். இல்லையென்றால் எனக்கு நீங்கள் கிடைத்திருப்பீர்களா?’ என்று கொஞ்சினாள். பிறகு, ‘ஒரு நாள் அவர்களைப் பார்த்துவிட்டு வந்தால் என்ன?’ என்றாள்.

நல்ல வேளை, நான் சரியென்று சொல்லவில்லை.

பின் குறிப்பு: இந்தக் கதையையும், அடுத்த பதிவில் வெளியாகவுள்ள இதே போன்ற இன்னொரு கல்யாணக் கதையையும் உண்மைக்கதைகள்  என்று யாராவது நம்பினால் விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை.

(c) இராய செல்லப்பா


AMAZON.COM  அல்லது   www.pusthaka.co.in தளங்களில் எனது ஆறு மின்-நூல்களைப் பார்த்தீர்களா? படித்தீர்களா?

புதன், அக்டோபர் 18, 2017

தீபாவளி ஸ்பெஷல் : ஒரு புஸ்வாணக் கதை

பதிவு எண் 43/2017 (18-10-2017)
தீபாவளி ஸ்பெஷல் : ஒரு புஸ்வாணக் கதை

வழக்கமாகப் பத்து பேராவது வந்துவிடுவார்கள். மாலையில் கூடிப் பேசும் இடம் அது. நான்கு மர பெஞ்சுகள். இன்று ஏழுமணியானபோதிலும் ஐந்து பேர் தான் இருந்தார்கள்.
தீபாவளி ஆரம்பித்துவிட்டதே!
 (சங்குசக்கரம் கொளுத்துபவர் இக்கட்டுரையின் ஆசிரியர்தான்!)
நூற்று முப்பத்தி எட்டாம் பிளாக்கிலிருந்து சுந்தரம், இருநூற்று நாற்பதிலிருந்து கண்ணாயிரம், எண்பத்திரெண்டிலிருந்து ஷெனாய், கடைசி பிளாக்கிலிருந்து ராகவனும் கோவிந்தசாமியும். வழக்கமாக முதலில் வந்துவிடும் ஆறாவது பிளாக் சந்திரன் சார் இன்னும் வரவில்லை. எல்லாரும்  ‘சீனியர் சிடிசன்’கள். அதனால் அந்தப் பெஞ்சிற்கு சீனியர் சிடிசன் பெஞ்சு என்றே பெயர் வந்துவிட்டது. சுருக்கமாக அதை ‘சீ.ஸி.’ பெஞ்சு என்பார்கள். பிடிக்காதவர்கள் ‘சீ..ச்சீ’ பெஞ்சு என்றும் கூறுவதுண்டு.

சென்னையின் புறநகர்ப் பகுதியில் மொத்தம் எழுநூறு குடியிருப்புகள் கொண்ட  பெரிய டவுன்ஷிப் அது. பத்து பார்க்குகள். ஒரு சூப்பர் மார்க்கெட். ஏழெட்டு சிறு கடைகள். ஒரு ஓட்டல். ஒரு டீக்கடை. ‘அழகுநிலையம்’ என்ற முடிதிருத்தகம். குடியிருப்பவர்கள் உட்கார்ந்து பேசுவதற்காகச் சுமார் பத்து  இடங்களில் பெஞ்சுகள்.

குடியிருப்பின் கவர்ச்சிகரமான அம்சமே அதில் அமைந்திருந்த பள்ளிக்கூடம்  தான். குடியிருப்பில் உள்ளவர்களின் குழந்தைகள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்பதால் பள்ளியை முன்னிட்டுக் குடி வந்தவர்கள் அதிகம். பெரும்பாலோர் அருகிலிருந்த ஐ.டி. கம்பெனிகளில் பணிபுரிபவர்கள்.  பள்ளி ஆசிரியர்களுக்கு வாடகையின்றி வீடுகள் தரப்பட்டதால் தரமான ஆசிரியர்கள் ஓடோடி வந்தனர். சில ஆண்டுகளிலேயே அக்குடியிருப்பு நிரம்பி வழிந்தது. அதன் வெளிப்புற விளிம்புகளில் இருந்த விளைநிலங்கள் வீட்டு மனைகளாகின. காய்கறிக் கடைகளும் மளிகைக் கடைகளும் நிறைய முளைத்தன. அரசு பஸ்கள் அடிக்கடி ஓட ஆரம்பித்தன.

பத்து பிளாக்குகள் கூடும் இடங்களில் உட்கார்ந்து பேச பெஞ்சுகள் போட்டிருந்தார்கள். அதில் அமைந்ததுதான் சீ.ஸி.கிளப்.  

“ஷெனாய் சார்! என்ன ஆச்சு சந்திரன்  சாருக்கு? ஆறரைக்கே வந்துவிடுவாரே?” என்றார் சுந்தரம். அதிகம் பேசமாட்டார். பேச ஆரம்பித்தால் குடியிருப்பவர்களில் யார்மீதோ கோள் சொல்லப்போகிறார் என்று அர்த்தம்.

“தெரியலையே, ஐந்து மணிக்கு என்னுடன் பேசினாரே! வீட்டில் தான் இருப்பார். வந்துவிடுவார்” என்றார் ஷெனாய்.

திடீரென்று,  “விஷயம் தெரியாதா உங்களுக்கு?” என்றார் கண்ணாயிரம்.

சுந்தரத்திற்குத் தூக்கிவாரிப்போட்டது. தனக்குத் தெரியாத எந்த விஷயம் இவருக்குத் தெரிந்துவிட்டிருக்கும் என்று சந்தேகம் நிறைந்த கண்ணோடு அவரை நோக்கினார்.

“சந்திரன் சாரோட பொண்ணு....” என்று ஆரம்பித்த கண்ணாயிரம், சடக்கென்று நிறுத்திவிட்டு, ‘என்னங்க, சௌக்கியமா?’ என்று அவ்வழியே போன ஒரு பெண்மணியை நிறுத்திக் கேட்டார். ‘நல்ல சௌக்கியம்தான் மாமா! நீங்க எப்படி இருக்கீங்க?’ என்று பதில் கிடைத்தது. அவர் பெயர் வசந்தா(மாமி). ‘ஏதோ இருக்கேன்’ என்று பட்டும்படாமலும் சொன்னார் கண்ணாயிரம். மாமி நிற்காமல் பறந்தார்.

பாதியில் நிறுத்திவிட்ட பேச்சைத் தொடர்ந்தாகவேண்டுமே! ‘சந்திரன் சாரோட பொண்ணுக்கு என்ன ஆயிற்று?’ என்று எல்லாரும் ஆர்வத்துடன் கேட்டார்கள்.

கண்ணாயிரம், வழக்கம்  போலவே, சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, பெண்மணிகள் யாரும் அந்தப் பக்கம் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு சொன்னார்: “அந்தப் பெண் நூற்றுப் பத்தொன்பதில் குடி வந்திருக்கிறாள் தெரியுமா?”

“அப்படியா, தெரியாதே, சந்திரன் சொல்லவே இல்லையே! எத்தனை நாள் ஆச்சு?” கோவிந்தசாமியின் குரலில் சற்று வருத்தம் தொனித்தது. குடியிருப்பில் யார் வந்தாலும் மெயிண்ட்டனன்ஸ் ஆட்கள் முதலில் தெரிவிப்பது அவரிடம் தான். குடியிருப்பில் முதலில் குடிவந்தவர்களில் அவரும் ஒருவர். பாதுகாப்புத் துறையில் இருந்து ரிட்டயர் ஆனவர் என்பதால் ரம், விஸ்கி போன்ற உயர்தர ‘சரக்குகள்’ மிலிட்டரி காண்ட்டீனி’லிருந்து இலவசமாகவோ குறைந்த விலையிலோ அவருக்கு வரும். மெயிண்ட்டனன்ஸ் ஆட்களுக்கு அதில் அவ்வப்போது பங்கு தருவார். எப்படி இந்த விஷயத்தைத் தன்னிடம் சொல்லாமல் விட்டார்கள்?

“பதினைந்து நாள் இருக்கும். மூன்று பெண் குழந்தைகள். முதல் பெண் ஐந்தாவதிலும் இரண்டாம் பெண் மூன்றாவதிலும், கடைசிக் குழந்தை எல்கேஜி-யிலும் சேர்ந்திருக்கிறார்கள்” என்று பெருமிதமாகத் தகவல் சொன்னார் கண்ணாயிரம். பள்ளிக்கு மிக அருகில் இருந்தது  அவருடைய பிளாக்.

மேற்கொண்டு ஏதாவது சொல்வார் என்று மற்றவர்களும், அவர்களாக ஏதாவது கேட்கமாட்டார்களா என்று கண்ணாயிரமும் காத்திருந்த போது மழை தூறத் தொடங்கியது. 

சரி, தொலைந்து போகட்டும் என்று பெரிய மனது பண்ணினார் கண்ணாயிரம். “முக்கியமான விஷயம்! வீட்டில் அந்தப் பெண்ணும் குழந்தைகளும் மட்டும் தான் இருக்கிறார்கள். அவள் கணவன் வந்த மாதிரி தெரியவில்லை. பெண் ரொம்ப அழகு” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே அலைபேசி ஒலித்தது. மனைவியிடமிருந்து உத்தரவு. கடையில் தோசைமாவு வேண்டுமாம். கிளம்பினார்.
*****
இரவு முழுவதும் இருப்புக் கொள்ளவில்லை வசந்தா (மாமி)க்கு. சந்திரன் சாரின் மகளைப் பற்றி அவ்வப்பொழுது கேள்விப்படுவதுண்டு. குஜராத்தில் மாப்பிள்ளை வேலை செய்வதாகவும், இரண்டு குடும்பங்களுக்கும் தகவல் தெரிவிக்காமல் பெண்ணும் மாப்பிள்ளையும் திருமணம் செய்துகொண்டதாகவும் அதெல்லாம் பத்து, பன்னிரண்டு வருடங்களுக்கு மேலிருக்கும் என்றும் முனியம்மா சொல்லியிருந்தாள். 

முனியம்மா சொல்லுக்கு அந்தக் குடியிருப்பில்  எதிர்க்கேள்வி கிடையாது. இஸ்திரி போடுவதற்கு அவளை விட்டால் யாருமில்லையே!

அந்தப் பெண், தன்னுடைய மூன்று குழந்தைகளை அழைத்துக்கொண்டு திரும்பி வந்திருக்கிறாள் என்றால் என்ன அர்த்தம்? கணவன் அவளை வேண்டாம் என்று சொல்லிவிட்டானா? அல்லது இவள்தான் அவனை வேண்டாம் என்று வந்துவிட்டாளா? சந்திரன் சாரின் பெண்டாட்டி, சாமர்த்தியமானவள். முழு சாப்பாட்டுக்குள் யானையையே புதைத்துவிடுவாள்.  நிச்சயம் ஏதோ நடந்திருக்கிறது. உடனே தெரிந்தாகவேண்டும். இல்லையென்றால் எழுபது-சி-யில் இருக்கும் ஜூலியம்மா எப்படியாவது தெரிந்துகொண்டு எல்லாரிடமும்  இரகசியம் பேசியே  பெரிய ஆளாகி விடுவாள். விடக் கூடாது.

தொண்ணூற்று மூன்றில் இருக்கும் லதாவின் மாமியார் கஜலட்சுமியைக் கேட்டால் தெரிந்துவிடும். அவசரமாகக் கிளம்பினாள் வசந்தா மாமி.
*****
சீ.ஸி. கிளப்பில் இருந்த ஷெனாய்க்கும் கோவிந்தசாமிக்கும் ஏழாம் பொருத்தம். இவர் என்ன சொன்னாலும் அவர் குறை கண்டுபிடிப்பார். அவர் என்ன சொன்னாலும்  இவரும் அப்படியே. சில சமயம் கைகலப்பிலும் முடிவதுண்டு.

சந்திரனோடு நட்பானவர்தான் ஷெனாய். ஆகவே சந்திரனின் பெண்ணைப் பற்றிய விஷயம் அவருக்குத் தெரியாமல் இருக்க வழியில்லை. இருந்தும், கண்ணாயிரம் அதைப் பற்றிப் பேச ஆரம்பித்தபோது அமுக்கமாக இருந்தாரே ஏன்? 

நிச்சயம் ஏதோ கசமுசா நடந்திருக்கவேண்டும். சந்திரன் தன் நண்பர் என்பதால் வெளியில் சொல்லாமல் அமைதிகாக்கிறார் ஷெனாய் என்றது  கோவிந்தசாமியின் மைண்டுவாய்ஸ். 
  
உடனே போய் கஜலட்சுமியைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்போல் அரித்தது அவருக்கு. அவளுக்குத் தெரியாத அக்கப்போர் எதுவும் இந்தக் குடியிருப்பில் நடக்கமுடியாது என்று யாரைக் கேட்டாலும் சத்தியம் செய்வார்கள். அத்துடன், போன மாதம் அவள் தன்னிடம் வாங்கிய இருநூறு ரூபாயைத் திருப்பிக் கேட்கவும் இது சந்தர்ப்பமாக அமையுமே! கிளம்பினார்.
****
கஜலட்சுமி அம்மாளுக்கு வயது ஐம்பத்து ஐந்திற்குமேல் இருக்கும். ஆனால் ஓரளவு கவர்ச்சியானவர் என்று சீ.ஸி. கிளப்பில் அவர்மீது பலருக்குப் பிரமிப்பு இருந்தது உண்மையே.
****
கஜலட்சுமியைப் பார்க்க வசந்தா வந்தபோது இரவு எட்டரைமணி இருக்கும். வராண்டாவில் விளக்கு இல்லை. அதனால், வெளிக்கதவை லேசாகச் சாத்திவிட்டு, அடுத்த வீட்டுத் தோழியைப் பார்ப்பதற்காக கஜலட்சுமி போனதை வசந்தா கவனிக்க முடியவில்லை.  கதவு திறந்திருக்கவே, உள்ளே சென்று சோபாவில் சுதந்திரமாக அமர்ந்துகொண்டாள். ‘மாமி, மாமி’ என்று அழைத்தாள் பதில் இல்லை. சமையல் அறையில் எட்டிப் பார்த்தாள். இல்லை. பாத்ரூமில் இருக்கலாமோ என்று தூரத்தில் இருந்தபடியே பார்த்தாள். ஆம், கதவு மூடப்பட்டு உள்ளே விளக்கு எரிந்துகொண்டிருந்தது. சரி, வரட்டும், எப்படியும் சந்திரனின் பெண்ணுக்கு என்ன ஆயிற்று என்ற இரகசியத்தைத் தெரிந்துகொள்ளாமல் போவதில்லை என்று மீண்டும் சோபாவில் உட்கார்ந்தாள் வசந்தா.

வெகுநேரமாகியும் பாத்ரூம் கதவு திறக்கவில்லை. சந்தேகப்பட்டவளாய், அருகில் சென்று பார்த்தால், கதவு வெளியில்தான் தாளிட்டிருந்தது. விளக்கை அணைக்க மறந்திருக்கிறாள்.  அவ்வளவுதான். சரி, வெளியில் போயிருக்கிறாள், வரட்டும் என்று காத்திருந்தாள் வசந்தா.   
****
கஜலட்சுமி வீட்டிற்கு கோவிந்தசாமி அதுவரை போனதில்லை. மூன்றாவது மாடியில் லிஃப்டுக்குப் பக்கத்து வீடு என்று நினைவு. லிஃப்டில் ஏறி அவள் வீட்டின் வெளிக்கதவைத் தொட்டதும், திறந்துகொண்டது. தாளிடப்படவில்லையே!

அந்நேரம் பார்த்துத்தானா மின்சாரம் நின்றுபோகவேண்டும்! ஒரே இருட்டு. கதவு திறக்கும் ஓசையைக் கேட்டு, கஜலட்சுமிதான் வந்திருக்கிறாள் என்று நினைத்து, ‘வாங்க, பார்த்து வாங்க, இப்பத்தான் கரண்ட்டு போச்சு’ என்றபடியே வாசல்கதவின்பக்கம் வந்தாள் வசந்தா.

தன்னை அழைப்பது  கஜலட்சுமிதான் என்று எண்ணிக்கொண்ட கோவிந்தசாமி, பதில் ஏதும்பேசாமல், திடீர் இருட்டைச் சமாளிக்க முயன்று, சுவரைப் பிடித்தபடியே உள்ளே நகர்ந்து சோபா இருக்கும் இடத்தை ஒருவாறு கண்டுபிடித்தார்.  அதற்குள் இருட்டில் டீப்பாய் தட்டுப்படவே, அதில் கால்தடுக்கி  இருவரும் முட்டிக்கொண்டனர். கால் பிடிமானம் கிடைக்காததால் ஒருவரையொருவர் கீழேவிழாமல் தாங்கிப் பிடித்துக்கொள்ள வேண்டியதாயிற்று.  

அந்த நேரம் பார்த்து மின்சாரம் வரவும், பக்கத்து வீட்டிலிருந்து தோழியுடன் கஜலட்சுமி வரவும் சரியாக இருந்தது......
****
மறுநாள் மாலை.

சீ.ஸி. கிளப்பில் அன்று ஃபுல் அட்டெண்டன்ஸ். 

‘கண்ணாயிரம் ஏதோ ஒரு இரகசியத்தைப் பாதியில் நிறுத்திவிட்டுப் போனாராம், இன்று மீதியைச் சொல்லப் போகிறாராம்’ என்ற வதந்திதான் காரணம்.

எல்லாரும் கண்ணாயிரத்தை ஆர்வத்துடன் பார்த்தார்கள். அவரோ, கம்பீரப் புன்னகை செய்தாரே ஒழிய, வாயை மட்டும் திறக்கவில்லை.

சுந்தரம்தான் ஆரம்பித்தார். “என்ன வேய், கண்ணாயிரம்! வாயில் பூட்டு போட்டிருக்கிறதா? சந்திரன் பொண்ணோட மேட்டர் என்ன ஆச்சு?” என்றார் சற்றே மெல்லிய குரலில். பெண்கள் விஷயம் ஆயிற்றே!

அப்போதுதான் கூட்டத்திற்கு வந்த ஷெனாய், வெற்றிப் பெருமிதத்துடன் எல்லாரையும் பார்த்தார். சுந்தரத்தின் அருகில்வந்து, “சரியான ஜூஜூபி அய்யா நீர்! நேற்று எவ்வளவு சுவாரஸ்யமான விஷயம் நடந்திருக்கிறது! நீர் சந்திரன் இந்திரன் என்று என்னவோ பேசுகிறீர்!” என்றார்.

கிளப் முழுவதும் நிமிர்ந்து உட்கார்ந்தது. அதென்ன சுவாரஸ்யமான விஷயம் என்று ஷெனாய் முகத்தைப் பார்த்தது.  

சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, “விஷயம் இன்னும் கன்பர்ம் ஆகவில்லை. இருந்தாலும் நண்பர்களுக்குள் ஒளிவுமறைவு கூடாதில்லையா, அதனால் சொல்கிறேன். உங்களுக்குள்ளேயே வைத்துக்கொள்ளுங்கள். சரியா?” என்றார் ஷெனாய்.

அனைவரும் கண்களாலேயே சத்தியம் செய்த பிறகு ஷெனாய் சொன்னது இதுதான்:

கோவிந்தசாமி, வசந்தாவிடம் போன வருடம் பத்தாயிரம் ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார். இதுவரை திருப்பித் தரவில்லை. பலமுறை நேரில் பார்த்தும் கேட்டும் பயனில்லாததால், கஜலட்சுமியின் உதவியை நாடினாள்  வசந்தா. கஜலட்சுமி  திட்டம்போட்டு இருவரையும் தன் வீட்டிற்கு வரச் சொல்லிவிட்டு, தான் மட்டும் வெளியே போய்விட்டாளாம்.  கோவிந்தசாமி கொஞ்சமும் பிடிகொடுக்காமல் பேசியதால் ஆத்திரம் அடைந்த வசந்தா, அங்கிருந்த டீப்பாயை எடுத்து இவர் மீது வீசியிருக்கிறாள். இவர் அவள்மீது டிவி ரிமோட்டை வேகமாக வீசினாராம். அப்போது அவளும் நிலை தடுமாறிக் கீழே விழுந்தாளாம். இருவருக்கும் காயம் ஏற்பட்டு, இப்போது ஆஸ்பத்திரியில் இருக்கிறார்களாம்.
*****
“அடடே, பலத்த காயமோ?” என்றார் சுந்தரம். கண்ணாயிரமோ, தன்வசம் இருந்த மேடையை ஷெனாய் கைப்பற்றிவிட்டதில் அவமானப்பட்டவராக நகர்ந்துவிட்டார். மற்றவர்களும் ஒவ்வொருவராக நகர்ந்தார்கள்.

பின்னே? விடிந்தால் தீபாவளி அல்லவா?
*****
அனைவருக்கும் என் மனம் கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்!   
*****
பின்குறிப்பு: சில மாதங்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த எனது வலைப்பதிவு, இனி முறையாக வெளிவரும் என்பதை (மகிழ்ச்சியோடு?) வரவேற்பீர்கள் என்று நம்புகிறேன்.

பின்குறிப்பு-2: AMAZON.COM  அல்லது   www.pusthaka.co.in தளங்களில் எனது ஆறு மின்-நூல்களைப் பார்த்தீர்களா? (படித்தீர்களா?)

(c) இராய செல்லப்பா சென்னை