சனி, மே 06, 2017

எத்தனை வலிகளடா இறைவா!

பதிவு எண் 36/2017
எத்தனை வலிகளடா இறைவா!
   -இராய செல்லப்பா

ஐம்பது வருடங்களுக்கு முன்பு விகடன், கல்கி, கலைமகள் இதழ்களில் வரும் முழுப்பக்க விளம்பரங்களில் பட்டுப் புடவைகளோ, பாரம்பரிய வேஷ்டிகளோ,  பெண்களின் மேல்-உள்ளாடையோ, ஆண்களின் கீழ்-உள்ளாடையோ, செயற்கைமுறை கருத்தரிப்பு நிலையங்களோ வந்ததில்லை. டால்டா போன்ற ‘தாவர எண்ணெய்’, கோல்கேட், ஃபோர்ஹான்ஸ் என்ற பற்பசைகளின் விளம்பரங்கள் வரும். பற்பசை என்றால் என்ன, எப்படிப் பயன்படுத்துவது என்று விளக்கமாக இரண்டு பக்க விளம்பரமாக இருக்கும்.


மருந்து விளம்பரங்கள்தாம் அதிகம். மூல வியாதிக்கான ‘ப்ரிப்பரேஷன் எச்’, ‘ஹெடென்ஸா’ மருந்துகளின்  விளம்பரங்கள் விடாமல் வரும். அதை உடலின் எந்த இடத்தில் வைத்து, எப்படிப்  பயன்படுத்துவதென்ற விளக்கமும், அதற்கான டியூபும் இலவசம் என்ற முக்கியத் தகவலும் இருக்கும். ஒரு நீரிழிவு மாத்திரை (பெயர் மறந்து விட்டது) விளம்பரம் தவறாமல் வரும். அதில் டயபெட்டிஸ் மெலிட்டஸ் என்றால் என்ன என்று வரிந்து கட்டிக்கொண்டு விளக்கியிருப்பார்கள். கேசவர்த்தினி, மைசூர் சந்தன சோப் விளம்பரங்களும் அப்படியே. இரண்டு பெண்கள் உரையாடுவது போல் பெரிய அளவு விளம்பரங்கள் அவை.

மிக முக்கியமாக ஆஸ்ப்ரோ, அனாசின் என்ற இரண்டு மருந்துகளின் விளம்பரமும் அடிக்கடி வரும் என்பது நினைவில் இருக்கிறது.

இந்திரா காந்தி பதவிக்கு வரும் முன்பு, ‘கை’ சின்னத்திற்கு உரிமை அனாசின் மாத்திரையிடம்தான் இருந்தது! கட்டை விரலை மடக்கி மீதி நான்கு விரல்களையும் நீட்டும் கையின் வடிவம், ‘நான்கு விதமான வலிகளை நொடியினில் போக்கும்’ என்ற (மாதிரி) வாசகத்துடன் இடம் பெற்றிருக்கும். தலை வலி, உடல்வலி என்ற இரண்டும் ஞாபகம் இருக்கிறது. மற்ற இரண்டு வலிகள் என்ன என்பது மறந்துவிட்டது. (எனக்கு அப்போது வராத வலிகளாக இருக்கவேண்டும்!)

இராணிப்பேட்டை- வக்கீல்தெரு சந்தில் குடியிருந்த என் இளமைக் காலத்தில்,  அடுத்திருந்த ஒண்டுக்குடித்தனக்காரர் தர்மேஸ்வரன் சார். (சில வருடங்கள் இருந்தார், பிறகு வீடு மாறிவிட்டார்.) வேலூரில் அல்லது ஆற்காட்டில் வி.பி.திருவேங்கட முதலியார் (‘VBT) கடையில் வேலை பார்த்துவந்தார். அனாசின் மாத்திரைக்கும் அவருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. 

விடுமுறை நாட்களில் பார்த்திருக்கிறேன்:  மாலை நான்கு மணி ஆனதும் அவருக்கு அனாசின் மாத்திரை ஒன்றைக் காப்பியுடன் சாப்பிட்டாக வேண்டும். இல்லையென்றால் மனிதர் ஒற்றைத் தலைவலியால் துடித்துப்போவார். முகம் சிவந்து கண்களில் நீர் வழியும். தனது அலுவலகத்தில் மேஜை டிராயரில் எப்போதும் அனாசின் வைத்திருப்பாராம். அவருக்கு உதவுவதற்காகவே என் அப்பா, சில அனாசின் மாத்திரைகளை வாங்கி, உத்தரத்தில் செருகியிருப்பார். (ஓட்டு வீடு!)  

நாடெங்கும் அனாசின் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுவந்த காலம் அது. திடீர் திடீரென்று அனாசின் ஸ்டாக் இல்லை என்று தகவல் வரும். உடனே, வெளியூர் போவோரிடம் எப்படியாவது அனாசின் வாங்கிவருமாறு தர்மேஸ்வரன் சாரின் மனைவி பணிவோடு வேண்டிக்கொள்வார். 

ஒருமுறை, தர்மேஸ்வரன் சார் தலைவலியால் துடித்துக் கொண்டிருந்தார். அவர் மனைவி, இஞ்சியோ சுக்கோ உரைத்து நெற்றியில் ‘பற்று’ப் போட்டார். ஐஸ்கட்டியால் தடவினார். பயனில்லை. உடம்பெல்லாம் வேர்த்துக்கொண்டிருந்தது. ஒன்றிரண்டு மாத்திரை முன்கூட்டியே வாங்கி வைக்காதது ஏன் என்று ஆத்திரப்பட்டுக்கொண்டிருந்தார் தர்மேஸ்வரன். 

அப்போதுதான் விளையாடிவிட்டு உள்ளே நுழைந்த நான், உத்திரத்தில் செருகியிருந்த ஒற்றை அனாசின் மாத்திரையை எடுத்துக்கொடுத்தேன். பல நாளாக அங்கேயே தங்கிவிட்டதால், மழைநீர்பட்டு நனைந்து, பின் வெய்யில் உலர்ந்து, அசோகவனத்து சீதை மாதிரி தனது பிளாஸ்டிக் உறைக்குள் நெளிந்துகொண்டிருந்தது. பிரிக்கும்போதே தூள் தூளாக உதிர்ந்து வந்தது. ஆனால் சார் விடுவாரா? மாத்திரை இல்லையென்றால் அதன் பிளாஸ்டிக் உறையையே மாத்திரையாக பாவித்து சாப்பிடும் அளவுக்கு ஒட்டுறவு கொண்டிருந்தவர் ஆயிற்றே! என்னை மிகுந்த நன்றியுடன் பார்த்தார். உதிர்ந்த மாத்திரையைக் காப்பியில் கலந்து ஒரே மிடக்கில் குடித்தார். தலைவலி போயே போச்! ‘நீ தீர்க்காயுசா இருக்கணும்ப்பா’ என்று வாழ்த்தினார்.  

தர்மேஸ்வரன் சார் இப்போது இருந்தால் இராமானுஜருக்கு அடுத்தபடியாக 120 வருடம் வாழ்ந்த பெருமை அவருக்கும் கிடைக்கும்.

பத்து வருடங்களுக்கு முன்னால் அனாசின் மீது (என்ன காரணத்தாலோ) தடை உத்தரவு வந்ததாக ஞாபகம். இப்போது மீண்டும் கிடைக்கிறது.

(ஆஸ்ப்ரோவும் அதே மாதிரி பயன்படுத்துவோரிடம் போதைத்தன்மையை (addiction) உண்டாக்கிய இன்னொரு மாத்திரை. ஆஸ்ப்ரோ பக்தர் ஒருவரும் அப்போது எங்கள் தெருவில் இருந்தார். அவரைப் பற்றி இன்னொருநாள் பார்ப்போம்.)
****
‘களவும் கற்று மற’ என்று ஔவையார் சொன்னதை அந்நாளில் பள்ளிப் பிள்ளைகள் தவறாமல் கடைப்பிடிப்பது வழக்கம். என்னுடைய பென்சில், ரப்பர், மயிலிறகு, செல்லாத தம்பிடிக்காசு (பிரிட்டிஷ் அரசர் தலை உள்ளது) போன்றவை தவறாமல் களவாடப்படும். தபால்கவர்களில் வரும் தபால்தலைகளைச் சேகரித்து ஜியாமெட்ரி பாக்ஸில் வைத்தால் அவை திடீரென்று காணாமல் போய்விடும்....இப்படி. ஆனால் சுட்டுப்போட்டாலும் எனக்கு அந்தப் பழக்கம் கைவரவில்லை. விட்டுவிட்டேன். ஆனால் ரகசியமாக இரு பையன்கள் பேசிக்கொண்டிருந்தால் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதைத் தூரத்திலிருந்தே களவாடும் ஆற்றல் என்னிடம் இருந்தது. அப்படிக் கவர்ந்த ஒரு விஷயத்தை ஒரு நாள் செயல்படுத்த விரும்பினேன்.

என் உறவினர் ஒருவர் சிகரெட் பிடிக்கும் பழக்கம் உடையவர். காலியான சிகரெட் பெட்டிகளை எனக்குத் தருவார். அதை விளையாடுவதற்குப் பயன்படுத்துவோம். பொன்வண்டுகளைப் பிடித்து அதனுள் வைப்போம். 

‘பெர்க்லி’, ‘பாஸிங் ஷோ’, ‘வில்ஸ்’ என்ற பெயர்கள் எனக்குப் பழக்கமானது அவரால்தான். ஒவ்வொரு சிகரெட்டுக்கும் ஒவ்வொருவிதமான வாசனை இருந்ததை அறிந்தேன். பெரியவன் ஆனதும் நாமும் சிகரெட் பிடிக்கவேண்டும் என்ற ஆசை வளர ஆரம்பித்தது. அப்போதுதான் நண்பன் ஒருவன் சொன்னான், ‘முதலில் பீடி குடித்து பழகிக்கொள். எடுத்த எடுப்பில் சிகரெட் குடித்தால்  இருமல் வந்துவிடும்’ என்று.

பீடி குடிக்கவேண்டும் என்று நினைத்தால் செயல்படுத்துவது எளிது. ஏனென்றால் காசு கொடுத்து பீடி வாங்கவேண்டியதில்லை. அக்கம்பக்கத்தில் எல்லார் வீட்டிலும் பீடி சுற்றும் வேலை நடந்துகொண்டிருக்கும். லேபில் ஒட்டிய ஈரம் காய்வதற்காக முறத்தில் பீடிகளை உலர்த்தியிருப்பார்கள். நாமே போய் ஒன்றிரண்டு பீடிகளை எடுத்துக்கொள்ளலாம். ஒன்றும் சொல்ல மாட்டார்கள். ஆனால் எங்கே போய்ப் பிடிப்பது? 

தெருவில் பீடி பிடித்தால் கண்டுபிடித்துவிடுவார்கள். அதனால், பெரியவர்கள் இல்லாதபொழுது, வீட்டின் இருட்டான பகுதியில் நின்றுகொண்டு பிடிப்பது நல்லது என்று நண்பர்கள் ஆலோசனை கொடுத்தார்கள். பீடி பிடித்த வாசனை தெரியாமல் இருக்க மூன்று அனாசின் மாத்திரைகளை விழுங்கவேண்டும் - என்னும் ஆலோசனையைத்தான் நான் ‘கவர்ந்து’ வந்திருந்தேனே!

அந்த நல்லநாளும் வந்தது. உறவினர் வீட்டு திருமணத்திற்கு அனைவரும் போயிருந்தனர். நான் முன்னதாகவே திரும்பிவந்துவிட்டேன். வாசல்கதவைத் தாழிட்டேன். தர்மேஸ்வரன் சார் வீட்டில் எட்டிப்பார்த்தேன். கதவு திறந்திருந்தது. ஆனால் யாரும் இல்லை. நல்ல சமயம் என்று, எங்கள் வீட்டின் மூன்று அறைகளில் கடைசி அறைக்குப் போனேன். அங்கு மின்விளக்கு இல்லை. சன்னலையும் திறப்பது கிடையாது. ஏனெனில் வேண்டாத சாமான்களைப் போட்டுவைக்கும் அறை அது. ஏற்கெனவே ஒரு கட்டு பீடி ஒளித்து வைத்திருந்தேன். அதில் ஒன்றை எடுத்து வாயில்வைத்துக்கொண்டு தீக்குச்சியால் பற்றவைத்தேன். தீக்குச்சியை என்ன செய்வது என்று தெரியாததால் கையிலேயே வைத்திருந்தேன். விரலைச் சுரீர் என்று சுட்டுவிட்டது. அலறிக்கொண்டு கீழே போட்டேன். அதில் வாயிலிருந்த பீடியும் கீழே விழுந்து அணைந்துபோயிற்று. எனவே அடுத்த பீடியை எடுத்தேன். பற்றவைத்த தீக்குச்சியை உடனே கீழே போட்டு மிதித்தேன்.  

பீடியை வாயில் வைத்தேனே தவிர, அதை எப்படிப் புகைக்கவேண்டும் என்று தெரியவில்லை. அடடா, யாரவது பீடி குடிப்பதை ஆற அமர கவனித்தபிறகு இந்த வேலைக்கு வந்திருக்கலாமே என்று தோன்றியது. அதற்காக விட்டுவிடமுடியுமா? இம்மாதிரி வீட்டில் யாரும் இல்லாத வாய்ப்பு மறுபடியும் எப்போது கிட்டுமோ? அதன்றியும், நமது நோக்கம் பீடி பிடிப்பதல்லவே! சிகரெட் பிடிப்பதற்கு முன்-அனுபவம் வேண்டுமென்றல்லவா இதைச் செய்கிறோம்! பீடியை ஜோராக ஒருமுறை உள்ளே இழுத்தேன்.

அவ்வளவுதான், மூக்கு வாய் எல்லாம் புகுந்துவிட்டது புகை. தலைக்குள்ளும் நுழைந்திருக்கும் என்று நினைத்தேன். ஒரே மூச்சுத்திணறல். உடனே பீடியைக் கீழே போட்டேன். என் முகத்தைச் சுற்றி எழுந்த பீடி நாற்றத்தை என்னாலேயே சகிக்க முடியவில்லை. ஓடிப்போய் வாய்க்கொப்பளித்தேன். முன்பே எடுத்துவைத்திருந்த மூன்று அனாசின் மாத்திரைகளை விழுங்குவதற்காகக் குடிதண்ணீர் பானையில் இருந்து தம்ளரில் நீர் மொண்டேன்.

அதுவரை அனாசின் மாத்திரையை நான் விழுங்கியதில்லை. அநேகமாகக் கசப்பாகத்தான் இருக்கும் என்று தோன்றியது. எனவே ஒவ்வொன்றாக விழுங்கலாம் என்று முதல் மாத்திரையை விழுங்கினேன். மாத்திரை சற்றே பெரியதாக, சதுர வடிவில் இருந்ததாக நினைவு. இரண்டாவது மாத்திரையை விழுங்கலாம் என்று பார்த்தால், மாத்திரையைக் காணோம்!

தர்மேஸ்வரன் சார் நின்றிருந்தார். ‘காலையிலிருந்து முடியவில்லை. உள்ளேதான் படுத்திருந்தேன். யாரோ பீடி பிடிக்கிறமாதிரி இருந்தது. ஒருவேளை நம்ம போஸ்ட்மேன் தான் வந்திருப்பாரோ என்று கதவைத்திறந்தேன். யாருமில்லை. அதற்குள் எனக்கு வழக்கமான தலைவலி வந்துவிட்டது. உன் டேபிள் பக்கத்தில் ரெண்டு அனாசின் கிடந்தது. எடுத்துக்கொண்டேன். இல்லையென்றால் எவ்வளவு கஷ்டமாகியிருக்கும் தெரியுமா?’ என்றார்.

கஷ்டம் அவருக்கு மட்டுமா? எனக்கும்தான். எனது முதல் சிகரெட்டைப் பிடிக்க மேலும் ஐந்து வருடங்கள் காத்திருக்க நேரிட்டது.
*****
அன்று முதல் இன்றுவரை நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களைத் தவறாமல் பாதிக்கும் இன்னொரு நோய், மூட்டு வலியாகும்.

மூட்டுவலிக்கு மிகவும் பலனளிக்கும் மருந்துகள், தென்னமரக்குடி எண்ணெய், நாராயணித் தைலம், பிண்டத்தைலம் ஆகியவை. பலநேரங்களில் பிண்டத்தைலத்துடன் நாராயணித் தைலத்தையும் கலந்து,  லேசாகச் சூடுபடுத்திய கரண்டியில் விட்டு, அதனை ஒத்தடமாகக் கொடுப்பது வழக்கம். இந்த மருந்துகளுக்கும் விளம்பரங்கள் வரும். ஆனால் மிகச் சிறிய அளவு விளம்பரங்கள்தாம். வாய்மொழியாகவே இந்த மருந்துகள் பிரபலமாகியிருந்தன.

ஒருநாள் என் பாட்டிக்கு நாராயணித்தைலம் வாங்குவதற்காக நாட்டுமருந்துக் கடைக்குப் போயிருந்தேன். அங்கு எப்போதும் கூட்டமாக இருக்கும். கடை சிறியதுதான் ஆனால் உள்ளே நீளமாக இருக்கும். கடைக்காரருக்குக் கண்பார்வை குறைவு. தைல புட்டிகளைக் கண்ணுக்கு அருகில் வைத்துக்கொண்டுதான் படிப்பார். உள்ளேயிருந்து தன் குரலை உயர்த்தி, ‘ஏம்மா ஒங்களுக்கு என்ன தைலம்?’ என்பார். ‘தென்னமரக்குடி’ என்று பதில் கிடைக்கும். என்னைப் பார்த்து ‘ஏய், பையா, ஒனக்கு என்ன தைலம்?’ என்றார். ‘நாராயணி’ என்றேன். அவருக்குக் கேட்கவில்லை. காதருகில் கையை வைத்துகொண்டு  மீண்டும் ‘என்ன தைலம்?’ என்றார். சற்றே குரலை உயர்த்தி, ‘நாராயணி’ என்றேன். ஒரு சிறிய புட்டியைக் கொண்டுவந்து கொடுத்தார். விலை ஒன்றேகால் ரூபாய்.

அடுத்தநாள்  மாலை, மூன்று வீடுகள் தள்ளிக் குடியிருந்த ஐயங்கார் மாமா, என் தாத்தாவோடு ஏதோ கோபமாகப் பேசிக்கொண்டிருந்தார். ‘ஒங்க பேரனைக் கொஞ்சம் அடக்கி வையுங்கோ! நேற்று நாட்டு மருந்துக் கடையில் என் பேத்தி நின்றுகொண்டிருந்தபோது, எல்லாருக்கும் கேட்கும்படியாக நாராயணி, நாராயணி என்று பெயர்சொல்லிக் கூப்பிட்டானாம். இது நல்லதற்கில்லை. கண்டிச்சு வைக்கவேண்டும்’ என்று சொல்லிக்கொண்டிருந்தார்.
****  
பின்குறிப்பு: பல வருடங்கள் கழித்து, எனக்கு மூட்டுவலி வந்தபோது, மாம்பலத்தில் ஒரு நாட்டுமருந்துக் கடையில் நாராயணி தைலம் வாங்கப் போனேன். அப்போதுதான் தெரிந்தது, அது நாராயணி இல்லை, நாராயணன் என்று. அதாவது சரியான பெயர்: நாராயணத் தைலமாம்.  இன்னும் சரியாகச் சொன்னால், வாத நாராயணத் தைலம்.

© Y Chellappa  

52 கருத்துகள்:

  1. அனாசின் போன்ற மாத்திரைகள் அளவுக்கதிகமாக உபயோகிப்பது ஆபத்தைத் தரும். எந்த வலி நிவாரணியுமே அப்படித்தான்! நான் என்னுடைய ஒற்றைத் தலைவலிக்கு உபயோகிக்காத மாத்திரையே இல்லை. ஆனால் அனாசின் அதற்கு கேட்காது. மைக்ரேனில், இன்னொரு பெயர் மறந்து விட்டது. அதெல்லாம் உபயோகித்திருக்கிறேன். சோடாவில் லெமன், இஞ்சி சேர்த்து நுரை அடங்குமுன் பருகுவேன். இப்போது சுமாட்டிரிப்ட்டேன் என்றொரு மாத்திரை இருக்கிறது. ஒன்று சாப்பிட்டால் உடனே கேட்கும். அனால் அரை நாளில் மீண்டு விடும். இந்த மாத்திரைகள் எனக்குத் தந்த பக்க விளைவுகள் ஏராளம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே, ஒற்றைத்தலைவலி அவ்வளவு கடுமையானதா? இப்போது கட்டுபாட்டுக்குள் வந்துவிட்டதல்லவா? கவனமாக இருங்கள்.

      நீக்கு
  2. நான் சிறு வயதில் முயற்சித்துப் பார்த்தது சிகரெட்! பாசிங் ஷோ. ஒரே முறை. அதில் ஏற்பட்ட நாற்றத்தில் அப்புறம் அதன் பக்கமே போகத் தோன்றவில்லை! நாங்கள் சிகரெட் அட்டையை விட்டு கோலிக்குண்டு விளையாடுவோம். சார்மினார் அட்டை 100, பாசிங் ஷோ 300, வில்ஸ ஐநூறு புள்ளிகள். இருநூறு புள்ளிகள், ஆயிரம் புள்ளிகள் (தங்க நிறத்தில் இருக்கும்) பெறுமான அட்டைகள் பெயர் மறந்து விட்டது. ஆ... சிஸ்சர்ஸ் இருநூறு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதே ஆட்டத்தை நானும் ஆடியிருக்கிறேன். நாம் எல்லாருமே நடுத்தர வர்க்கம்தானே!

      நீக்கு
    2. #ஆயிரம் புள்ளிகள் (தங்க நிறத்தில் இருக்கும்) பெறுமான அட்டைகள் பெயர் மறந்து விட்டது#
      அது கோல்ட் பிளேக் ,சரிதானே ?
      இன்னொரு பிரபல பிராண்ட் ,elephant (யானை ஒன்று கொடுங்கள் என்பார்கள் :)

      நீக்கு
  3. ஒருமுறை என் 80 வயதுத் தாத்தாவுக்கு பிண்டத்தைலம் வாங்கி வலிக்குத் தடவச் சொல்லிக்கொடுத்தேன். அவருக்குக் காதில் விழுந்து விட்டது என்று நம்பித்தான் வந்தேன்,. அடுத்த வாரம் கேட்டார். "ஏண்டா.. அதை காலை வெறும் வயிற்றில்தானே குடிக்க வேண்டும்? ஒரு ஸ்பூன் குடிச்சாய் போதுமோல்லியோ..."

    ஆஹா... "கொடுங்கள்" என்று வாங்கி வந்து விட்டேன்.

    நல்லவேளை, இரண்டு நாட்களாகத்தான் முயற்சித்திருக்கிறார்.

    நல்லவேளை ஒன்றும் ஆகவில்லை!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவ்வளவு கசப்பையும் எப்படித்தான் தாங்கினாரோ! ஆனால், நமது சித்த, ஆயுர்வேத மருந்துகள் தீங்கு விளைப்பதில்லை பார்த்தீர்களா?

      நீக்கு
  4. பதில்கள்
    1. நன்றி நண்பரே, தமிழ்மணத்தில் வாக்கு போட்டதற்கு! ஒரு சிலர் அந்தப் புனிதக் கடமையை மறந்துபோகிறார்கள்....

      நீக்கு
  5. பணி நிறைவுப்பணிகள் காரணமாக சில நாள்கள் வலைப்பக்கம் வர முடியவில்லை. பணி நிறைவு விழா தொடர்பான பதிவு இதோ, வாய்ப்பிருக்கும்போது வாசிக்க வருக. இனி தொடர்ந்து பதிவுகள் மூலமாக சந்திப்போம் : http://drbjambulingam.blogspot.com/2017/05/blog-post_4.html
    விளம்பரங்களை தாங்கள் தேடிப் பிடித்துத் தந்த விதம் அருமை. உங்கள் பதிவைப் படித்ததும்..ஊக்கமுள்ளோருக்கு பரம திருப்தி (சார்மினார்), முன்னணி நடிகையின் அழகு சோப் (லக்ஸ்), அவங்க பாத்ரூம் நாத்தமடிக்குது? நாம் ஓடோனில் உபயோகிக்கிறோம் கண்ணு...இவை என் மனதில் தோன்றின.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் ஞாபகசக்தியைக் கேட்கவேண்டுமா? இப்போது ஓய்வும் கிடைத்துவிட்டது. இனி வலைப்பதிவுகளுக்குக் கொண்டாட்டம் தான் ! விக்கிபீடியாவுக்கும்தான்!

      நீக்கு
  6. பதிவை ரசித்து படித்தேன் இது பலருடைய அனுபவம் இருக்கும்

    முதலில் அரசியல் பதிவோ என்று நினைத்து விட்டேன்
    த.ம. 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், இளமையில் நாம் அனைவரும் ஒரே மாதிரிதானே இருந்திருப்போம்? யாதும் ஊரே யாவரும் கேளிர் தான்..

      நீக்கு
  7. அனுபவங்கள் ஒவ்வொன்றுமே சுவாரசியமானவை ஐயா

    பதிலளிநீக்கு
  8. வயசுப் பிள்ளையாய் இருந்த போது ஏற்பட்ட உங்களது அனுபவங்களைப் படிக்கப் படிக்க சுவாரஸ்யம்தான். நான் பெரும்பாலும் அனாசின் போன்ற, வலி நிவாரண மாத்திரை விளம்பரங்களைப் படிப்பது இல்லை. ஏனெனில் அவற்றைப் படித்தால் அவர்கள் சொல்லும் காரணங்களில் ஒன்று நிச்சயம் நமக்கு இருக்கும். அப்புறம் நமக்குத்தான் தலைவலி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வது சரியே. மாரடைப்பு பற்றிய புத்தகம் ஒன்றைப் பல வருடங்களுக்கு முன் படித்தேன். அடுத்த சில நாட்களில் திடீர் திடீரென்று எனக்கு சந்தேகம் வரும்: ஓ, நமக்கும் அந்த அறிகுறிகள் இருக்கிறது போலும் என்று. அந்தக் குழப்பத்தில் இருந்து வெளிவர சில மாதங்கள் பிடித்தது. தங்கள் வரவுக்கு நன்றி.

      நீக்கு
    2. சமீபத்துல படித்தது. STR- Smile, Talk, Raise both hands. இதுல சிக்கல் வந்தால் சில மணிகளில் மாரடைப்பு வரப்போகிறது என்பதற்கான அறிகுறியாம். இது எல்லாம் பண்ண முடிந்தால் கூடுதல் check, நாக்கை நன்றாக வெளில நீட்டணும் (நடுவா, ஒரு சைடுல இழுத்துக்கக்கூடாது). இப்படிச் சொன்னேன் என்பதற்காக, பேச்சு வராதவர்களிடம் இந்தச் சோதனை நடத்தக்கூடாது.

      நீக்கு
  9. >>> பொன்வண்டுகளைப் பிடித்து அதனுள் வைப்போம்.<<<

    தங்களது பதிவுகள் மனதுக்குள் மகிழ்ச்சியை ஊட்டுகின்றன..
    அந்த நாளின் நினைவுகளை மீட்டெடுக்கின்றன..

    அறியாப் பருவத்தில் வெட்டுக்கிளியைப் பிடித்து அதற்கு சில இலைகளையும் போட்டு ஒரு டப்பாவிற்குள் அடைத்து வைத்தேன்..

    பொழுது விடிந்து பார்த்தபோது அது பரலோகத்துக்குப் போயிருந்தது...

    அப்புறம் தான் தெரிந்தது அதற்கும் காற்று வேண்டும் என்று!..

    அத்தோடு அந்த மாதிரி வேலைகளைச் செய்ததே இல்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிகரெட் அட்டைகள்தாம் சினிமா தியேட்டர்களில் சைக்கிள் ஸ்டாண்டுகளில் டோக்கன்களாக வழங்கப்பட்டன. அவசரத்துக்கு விசிட்டிங் காரடாகவும் பயன்பட்டது....இளமை நினைவுகள் திடீரென்று வெளிவருகின்றன....தங்கள் வரவுக்கு நன்றி.

      நீக்கு
  10. புனிதக் கடமையை நிறைவேற்றியாகிவிட்டது. அப்புறம் எழுதுகிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே, நீங்கள் வராமல் எனக்குப் பொழுது போவதில்லை. கட்டாயம் வாருங்கள்.

      நீக்கு
  11. 'நாராயணி தைலம்' கதை சிரிப்பை வரவழைத்தது! நானும் நினைத்தேன், நாராயணித்தைலம் என்று எதுவுமில்லையே என்று! வாதநாராயணத்தைலம் பற்றித்தான் தெரியும்! கடைசியில் அதையும் விளக்கி விட்டீர்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னது,'நாராயணி' தைலம் தெரியாதா? நாராயணி என்ற பெண் உபயோகிக்கும் எல்லா தைலங்களுமே நாராயணித்தைலங்களே!...இது எப்படி இருக்கு? ..தங்கள் வரவுக்கு நன்றி.

      நீக்கு
  12. என் மாமியார் கையில் எப்போதும் அனாசின் மாத்டிரை இருக்கும் அது இல்லையென்றால் தலைவலி தாங்க முடியாதபடி இருக்குமாம் அனாசின் உட்கொள்ளுவதால் இரத்தம் மேலும் திரவமாக்கப் பட்டு அது இதய நோய் வராமல் தடுக்குமாம் அந்தக் காலத்தில் நம்புங்கள் என் தம்பி கற்று கொடுத்து நான் புகை பிடிக்கத் துவங்கினேன் ஸ்டார் சிகரெட் எல்லா வித சிகரெட்டுகளையும் உபயோகித்தாயிற்று இப்போது கடந்த இருபது ஆண்டுகளாக சிகரெட் புகைப்பதில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியானால் அனாசின் மாத்திரை அந்தக் காலத்தில் உண்மையிலேயே சிறந்த மருந்தாகத்தான் இருந்தது போலும்! ஆனாலும் நீங்கள் அதிர்ஷடக்காரர்தான். தம்பியிடமே சிகரெட் பிடிக்கக் கற்றுக்கொள்ள முடிந்ததே! ..இப்போது பிடிப்பதில்லை என்பது மகிழ்ச்சியளிக்கிறது. தங்கள் வரவுக்கு நன்றி.

      நீக்கு
  13. அனுபவங்கள்
    சுவையாகப் பகிரப்பட்டுள்ளது.
    மருந்துக்கையாளல்
    கவனமாகப் பேணுவோம்.

    பதிலளிநீக்கு
  14. இன்னும், அஞ்சால் அலுப்பு மருந்து, கோபால் பல்பொடி, சைபால், அன்றைய கனவுக் கன்னிகளின் லக்ஸ் சோப் விளம்பரங்கள் விட்டுட்டீங்களே.

    நீங்கள் பீடி குடிப்பதைப் பற்றி படித்தபோது எனக்கு ஒரு சம்பவம் ஞாபகத்துக்கு வந்தது. நான் 4வது பொன்னமராவதி அருகில் படித்துக்கொண்டிருந்தேன். அங்கு நாட்டுக்கோட்டை செட்டியார்கள் அதிகம். என்னோட படித்த அண்ணன், தம்பி சிகரெட் குடிப்பாங்க (அப்போ அப்போ). ஒருதடவை அவங்க அப்பாவுக்கு (அவங்க வீடுலாம் ஒரு தெருல ஆரம்பிச்சு அடுத்த தெருவில் முடியும் மாட மாளிகை) சந்தேகம் வந்து, இரண்டு பேரையும் மொட்டை மாடிக்குக் கூட்டிட்டுப் போய், ஆளுக்கு ஒரு சிகரெட் கொடுத்து பிடிங்கடா என்றாராம். பசங்க ஸ்மார்டா நெருப்பு வைக்கவேண்டிய பகுதியை வாய்க்குள்ளும் ஃபில்டர் சைடை வெளிப்பக்கமும் வைத்தார்களாம். அவங்க அப்பா அதைப் பார்த்துட்டு, பசங்களுக்கு சிகரெட் பிடிக்கத் தெரியாது, மத்தவங்க சும்மா கம்ப்ளெயின்ட் பண்ணியிருக்காங்க என்று எண்ணிக்கொண்டாராம். மறுநாள் ஸ்கூல்ல மற்ற நண்பர்களிடம் சொன்னார்கள்.

    நான்கூட சின்ன வயதில் ஏதோ ஒரு சிகரெட் பிராண்ட் பொட்டிக்குள்ள அலுமினியம் ஃபாயில் இருக்கும். அதைச் சேர்த்து மொத்தமா உருக்கினால் அலுமினியம் கிடைக்கும் என்று இரண்டு மூன்று சேர்க்க ஆரம்பித்தேன். அப்புறம் அப்பா பார்த்தால் அடி விழும் என்று அதை ஸ்டாப் செய்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த 'அலுமினியம்' சங்கதி எனக்குப் புதிது...தங்கள் வரவுக்கு நன்றி நண்பரே!

      நீக்கு
  15. நதியின் ஓட்டம் போல எழுத்து நடை. பலவிதமாஉணர்வுகள்ள்.அனாசின் மாத்திரை தந்து உதவியது; பீடி புகைத்த ஆபத்தான அனுபவம்; விளம்பரங்கள் தந்த ஞாபகங்கள்; நாரயண நாராயண (புண்ணியம் சேரும்) தைலம் எல்லாம் கலந்து கட்டி அழியாத கோலங்கள்.

    பதிலளிநீக்கு
  16. மிக்க நன்றி அன்பு நண்பரே! தங்கள் வருகை மேலும் புத்துணர்ச்சி தருகிறது, அனாசின் சாப்பிடாமலேயே!

    பதிலளிநீக்கு
  17. மிக அழகிய அந்தநாள் ஞாபகங்கள்...

    பதிலளிநீக்கு
  18. வணக்கம்
    ஐயா

    புதைந்து கிடந்த ஞாபகங்களை மீண்டும் எடுத்துரைத்த விதம் சிறப்பு ஐயா தங்களின் பல பதிவுகளை நான் படிக்க தவறி விட்டேன் இனி த.ம-06 தொடர்கிறேன்.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களை மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன் நண்பரே!

      நீக்கு
  19. நினீவுகள்........ இப்போது எனக்குள்ளும்....

    பதிலளிநீக்கு
  20. ஆஹா, ஒவ்வொரு வரியிலும் அந்தக்கால நம் அனுபவங்களை ஜொலிக்கச் செய்து சூப்பராக எழுதியுள்ளீர்கள். பாராட்டுகள் ஸ்வாமீ.

    சுவையான சுவாரஸ்யமான இயல்பான யதார்த்தமான எழுத்தென்றால் இந்த உங்களுடையதைத் தான் சொல்லலாம்.

    முதன் முதலாக தாங்கள் பீடி குடித்த அனுபவம் முதலிடத்தைப் பெறுகிறது :)

    கடைசி வரிகளில் வரும் அந்த ஐயங்கார் மாமா அவர்களின் பேத்தி ’நாராயணி’ என் மனதில் நீங்காததோர் இடத்தினைப் பெற்று ஹிம்சிக்க ஆரம்பித்து விட்டாள். ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

    பகிர்வுக்கு நன்றிகள், ஸ்வாமீ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த ஐயங்கார் மாமாவிற்குப் பயந்துகொண்டு நாராயணியின் முகத்தைக்கூட நான் சரியாகப் பார்க்கவில்லை நண்பரே! தொலையட்டும், இப்போது அவளும் கிழவியாகத்தானே இருப்பாள்! தங்கள் வரவுக்கு நன்றி.

      நீக்கு
  21. மலரும் நினைவுகள் அருமை. நானும் ஒற்றை தலைவலிக்கு ஜின்னில் முடியும் எல்லா மாத்திரைகளும் எடுத்துக் கொண்டேன். 40 வயதுக்கு பின் யோகா கற்றுக் கொண்டு ஒற்றை தலைவலியிலிருந்து விடுபட்டேன்.
    வாத நாராயண தைலத்தை நாராயணி என்று கேட்டது நல்ல நகைச்சுவை நினைவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வரவுக்கு மிக்க நன்றி. பொதுவாகவே பெண்களுக்குத்தான் ஒற்றைத்தலைவலி அதிகம் வருமோ? ஆராய வேண்டும்...

      நீக்கு
  22. சார் இவ்வளவும் எவ்ளவு அழகாக நினைவு வைத்துக் கொண்டு எழுதுகிறீர்கள்...பல நினை வுகளை எழுப்பிட....என் தந்தையும் ஆயர்வேத மருந்த்துக்கடை தான் வைத்து இருந்தார். நானும் அதில் இடையில் வேலைசெய்ததுடு. ....அப்பாவே மருந்துகளும் கொடுத்ததுண்டு.....வாத நாராயனத் தைலம்....நாராயணி ஆனது...ஹஹஹஹ...

    ரசித்து வாசித்தோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா? சில 'முக்கியமான' மருந்துகள் கிடைக்குமா இப்போது? நேரில் வரும்போது சொல்கிறேன். தங்கள் வரவுக்கு நன்றி.

      நீக்கு
  23. கீதா : செம பதிவு சார். இந்த சின் எல்லாம் தலைவலிக்கு எடுத்துக்க கொண்டதுண்டு.ஆனால்.அதிகம் அல்ல. காலில் சேற்றுப்புண் வரும்...குளத்தில் நின்று, வீட்டிலுள்ள அனைவரது உருப்படிகளையும்துர்த்துவைக்க எடுக்க வேண்டும்...வயலில் இறங்க வேண்டும்..சேற்றுப் புண்... வரும் அதற்கு.சைபால்... தான் போடுவதுண்டு. முதலில் எல்லாம் கரித்தூள்/உமிக்கரி தான் பல் தேய்க்க....அப்புறம் நெடு நாட்கள் கோபால் பல்பொடித்தான்....இப்போது கூட இதெல்லாம் கிடைக்கிறது....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சைபால் தெரியும். அந்த நாட்களில் வண்டுகடி என்று கிராமங்களில் இருப்பவர்கள் சொல்வதுண்டு. இடுப்பைச் சுற்றி சொறிந்துகொண்டே இருப்பார்கள். சைபாலின் மகிமை என்னவென்றால், தடவிக்கொள்ள ஆரம்பித்தால் வித்தியாசமின்றி உடலின் எல்லாப் பகுதிகளிலும் அரிக்க ஆரம்பித்துவிடும்....ஜனநாயகத்தன்மை கொண்ட மருந்து..வெள்ளையாக இருக்கும்?

      நீக்கு
  24. சுவையான நினைவலைகள். நகைச்சுவையும் கலந்து கொடுத்திருப்பதால், மிகவும் ரசித்தேன். ஆண்களில் பெரும்பாலோர்க்கு இந்தப் பீடி அல்லது சிகரெட் குடித்துப் பார்த்த அனுபவம் இருக்கும் என நினைக்கிறேன். நாராயணி நல்ல நகைச்சுவை. அனாசினைத் தெரியாத ஆளில்லை அப்போது. சாரிடான் என்றொரு மாத்திரை இருந்தது. பழைய நினைவுகளை மீட்டியமைக்கு நன்றி சார்!

    பதிலளிநீக்கு
  25. சாரிடான் இப்போதும் இருக்கிறதே! வருடத்தில் ஒன்றிரண்டு முறை நான் பயன்படுத்துவதுண்டு. தங்கள் வரவுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  26. எத்தனை கோடி வலிகள் வைத்தாய் இறைவா! என்று தலைப்பு வைத்திருக்கலாம் போலிருக்கிறது
    Forhans மறந்தே போச்சு.

    பதிலளிநீக்கு
  27. //பீடியை ஜோராக ஒருமுறை உள்ளே இழுத்தேன்.

    அவ்வளவுதான், மூக்கு வாய் எல்லாம் புகுந்துவிட்டது புகை. தலைக்குள்ளும் நுழைந்திருக்கும் என்று நினைத்தேன். ஒரே மூச்சுத்திணறல். உடனே பீடியைக் கீழே போட்டேன்.//

    இதே அனுபவம் எனக்கும் நேர்ந்தது

    பதிலளிநீக்கு