ஞாயிறு, மே 01, 2022

பாஸ்போர்ட் என்னும் பாசச் சங்கிலி-2 (தொடர்ச்சி)

 பாஸ்போர்ட்  என்னும்  பாசச் சங்கிலி-2 (தொடர்ச்சி)

இன்று கிழமை சனி  -3


அமெரிக்காவில் 19ஆவது நாள் 


(பெங்களூர் எக்ஸ்பிரஸ்)

இதன் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

அடுத்த முறை என்னுடைய பாஸ்போர்ட் ரினிவல் செய்வதற்காக முயற்சித்தபோது இதுவரை அனுபவித்த எந்தத் தொல்லையும் எனக்கு ஏற்படவில்லை.  காரணம் பாஸ்போர்ட் அலுவலகத்தின்  மொத்தப் பணிகளும் டிசிஎஸ் என்ற ஐடி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதே. மூத்த குடிமகன் என்பதால் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு நேரில் போகவேண்டிய வேலையும் இல்லை. ஆன்லைனில் விண்ணப்பம் அனுப்பிவைத்த ஒரே வாரத்தில் புதிய பாஸ்போர்ட் வந்துவிட்டது. கணினி மயமாக்கலின் பலனை இந்தியக் குடிமகன் முழுமையாக அனுபவிக்கும் வேளை இப்போது வந்துவிட்டது.


கார்க் கண்ணாடியில் என் பிம்பம் - புதுமையல்லவா? 


ஆனால் வேறொரு நண்பருக்கு உதவியாக அந்த அலுவலகத்திற்கு நான் செல்லவேண்டி வந்தது. வடபழனியில் பழம்பெரும் நடிகை பானுமதிக்குச் சொந்தமான பரணி ஸ்டூடியோவுக்கு எதிரில் அமைந்த அலுவலகம் அது.


எனது நண்பரை அழைத்துக்கொண்டு ரிசப்ஷனில் இருந்த டிசிஎஸ் நிறுவன அதிகாரியிடம் போய் அமர்ந்தேன். நண்பரின் சிக்கலை உடனே தீர்த்துவைத்தார் அந்த அதிகாரி. நன்றி சொல்லிவிட்டு நான் கிளம்பும்போது என்னை அணுகினார் ஒரு முதியவர். வயது சுமார் எண்பது  அல்லது அதற்கு அதிகமாகவும்  இருக்கலாம். எனது நண்பருக்கு வேகமாக உதவிய அதிகாரியால் இவருக்கு உதவமுடியவில்லை. காரணம் இருந்தது.


முதியவரின் பாஸ்போர்ட் காலாவதியாகி மூன்றாண்டுகள் ஆகிவிட்டன. எனவே அதை ‘ரினியூவல்’ என்ற வகையில் சேர்க்க முடியாது. புதிய விண்ணப்பமாகவே கருதவேண்டும். அதற்கான காகிதங்கள் அவர்வசம் இருந்தன. ஆனால், விண்ணப்பத்தை ஆன்லைனில்தானே அனுப்பவேண்டும்! அதற்கான வழிமுறை அவருக்குத் தெரியவில்லை. அவரைப் பார்த்தால் ஏதேனும் நல்ல நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவராகத்தான் தோன்றினார். முதுமை காரணமாகச் செவித்திறன் சற்றே குறைந்திருந்தது. 


பாஸ்போர்ட் அலுவலகத்தின் வெளியே இம்மாதிரி ஆன்லைன் பதிவு செய்துதரும் தனியார் அமைப்புகள் இருந்தன. ஆனால் இவருக்கு அவர்கள்மேல் நம்பிக்கை இல்லை. தன்னுடைய ஆதார்கார்டு, பான் நம்பர், முகவரி இவற்றை அவர்கள் பயன்படுத்தித் தனக்குத் தெரியாமல் தன்னுடைய வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை சுருட்டிக்கொண்டு விடுவார்கள் என்று அவர் அஞ்சினார். அது போன்ற நிகழ்வுகள் அப்போது தினந்தோறும் நடந்து கொண்டுதான் இருந்தன.  ஆகவேதான் பாஸ்போர்ட் அதிகாரியே தன்  விண்ணப்பத்தை நேரில் டைப் செய்துகொள்ளவேண்டும் என்பது அவருடைய வேண்டுகோள். 


அதற்கு வழியில்லை என்று எடுத்துக்கூறியும் அவர் நகர்வதாயில்லை. சற்று தூரத்தில் இருந்த இ-சேவை மையத்திற்குச் செல்லுமாறு கூறியும் அவர் மறுத்துவிட்டார். ஆகவே அந்த அதிகாரி அவரை என்னிடம் அனுப்பி அவருக்கு உதவச் சொன்னார். நான் கையோடு லேப்டாப் கொண்டுபோயிருந்தேன். இணையத் தொடர்புக்கான டாங்கிளும் இருந்தது. ஆகவே என்னையும்  அவரையும் அந்த அலுவலகத்திற்குள்ளேயே ஒரு மேஜையில் அமரவைத்து அவருக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டார். முதியவருக்கு மிகவும் திருப்தி. தன்னுடைய தனிப்பட்ட தகவல்கள் வெளியில் போகாது என்ற நம்பிக்கை ஏற்பட்டது.


எல்லா விவரங்களும் அவர்வசம் இருந்ததால் கடகடவென்று வேலை முடிந்தது. 

அந்த அதிகாரியே நேரில் வந்து மேற்கொண்டு ஆகவேண்டியவற்றை அவரிடம் விளக்கினார். அவரும் திருப்தியோடு கிளம்பினார். எனக்கு நன்றி சொல்லிவிட்டு என்னுடைய வீட்டு முகவரியையும் தொலைபேசி எண்ணையும் கேட்டு வாங்கிக்கொண்டார். நான் நூறாண்டு வாழவேண்டுமென்று வாழ்த்தவும் செய்தார். 


இம்மாதிரி எவ்வளவோ பேருக்கு விண்ணப்பங்கள் பூர்த்திசெய்து கொடுப்பது, முடிந்தவரை அவர்களுடன் கூடவே சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்குச் சென்று வருவது போன்றவை எனக்கு வாடிக்கை என்பதால் இந்த முதியவருக்குச்  செய்த சிறு உதவி என் மனதில் நிற்கவேயில்லை.


ஒரு மாதம் கழித்து ஒருநாள். என் வீட்டு அழைப்புமணி ஒலித்தது.  அந்த முதியவர் மலர்ந்த முகத்தோடு நின்றிருந்தார். அவர் கையில் பளபளக்கும் புதிய பாஸ்போர்ட் இருந்தது. கூடவே ஒரு உதவியாளரும் இருந்தார். 


அவர்களை உட்காரச் சொல்லிவிட்டு இருவருக்கும் காபி கொடுத்தேன். 


“உங்கள் உதவியால் பாஸ்போர்ட் வந்துவிட்டது. எனக்கு இப்போது எண்பத்திரண்டு வயதாகிவிட்டது. உடம்பில் சக்தி இருக்கும்போதே அமெரிக்கா போய் என் மகனைப் பார்த்துவிடவேண்டும். எனக்கு ஏர் டிக்கட் முன்பதிவு செய்து கொடுக்கிறீர்களா?” என்றார் முதியவர்.


“அது ஒன்றும் பெரிய விஷயமில்லையே, ஏர் இந்தியா அல்லது ஜெட் ஏர்வேஸ் அலுவலகத்திற்கு நேரில்போனால் பயமின்றி நீங்களே டிக்கட் வாங்கிவிடலாமே” என்றேன். 


“அப்படி இல்லை ஐயா! எந்த ஏர்லைன்ஸில் எந்த தேதியில் டிக்கட் குறைவாகக் கிடைக்கும் என்று நீங்கள் பார்த்துக் கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு வந்திருக்கிறேன்” என்றார். 


அதுவும் பெரிய வேலையில்லை. டிக்கட் முன்பதிவு செய்யும் செயலிகளில் நுழைந்தால் சுமார் அரைமணிநேரம் ஆகலாம். “சரிங்க” என்றேன்.


அவருடைய மகன் டெக்சாஸில் பெரிய பதவியில் இருக்கிறாராம். ஏர்போர்ட்டுக்கு வந்து தன்னை வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போகும் அளவுக்கு அவருக்கு நேரம் இருக்காதாம். ஆகவே, பகல் நேரத்தில் சென்று சேரக்கூடிய விமானமாகப் பார்த்து பதிவுசெய்யவேண்டும் என்றார். கையோடு பேங்க் பாஸ்புத்தகமும் டெபிட் கார்டும் வைத்திருந்தார். போதிய பணம் கணக்கில் இருந்தது. பதினைந்தே நாளில் திரும்பிவிடவேண்டும் என்றார். மகனுக்குத் தன்னால் எந்தச் சுமையும் கூடாது என்றார். என்ன இருந்தாலும் பெற்றவர் பெற்றவர்தானே!


“நீங்கள் எனக்கொரு வாக்குறுதி அளிக்கவேண்டும். நான் அமெரிக்கா  போகும் விஷயத்தை யாரிடமும் கூறக்கூடாது. ஏனென்றால் என் மகனுக்கும் எனக்கும் ஐந்தாறு வருடங்களாகக் கடிதமோ ஈமெயிலோ  தொலைபேசியோ எந்தத் தொடர்பும் கிடையாது. அவனுடைய மனைவி அவனை அடிமை மாதிரி நடத்துகிறாள் என்று அவனுடைய நண்பர்கள் கூறுகிறார்கள். எனக்கோ, சாவதற்கு முன் ஒரு முறையாவது என் மகனைப் பார்த்துவிடவேண்டும் என்று தீவிரமான ஆசை ஏற்பட்டிருக்கிறது. நான் வருவதாக முன்கூட்டியே தெரிவித்தால் அவன் மனைவி என்னை வீட்டிற்குள் விடாமல்போனாலும் வியப்பில்லை. ஆகவே திடீரென்று போய் நிற்கவேண்டும். அவனைக் கண்ணால் பார்த்தால் போதும். தண்ணீர் கூட அங்கே அருந்தமாட்டேன். அவன் வீட்டிற்குப் பக்கத்தில் ஏதாவது சிறிய ஓட்டலில் தங்கி தினந்தோறும் அவன் அலுவலகம் போவதற்கு காரில் ஏறுவான் அல்லவா, அப்போது மறைந்திருந்து அவன்  முகத்தைப் பார்த்துவிடுவேன். அதுபோதும் எனக்கு” என்றார்  அவர். 


“அவனைப் பார்த்தால் அவனுடைய அம்மாவைப் பார்க்கவேண்டாம். அதே முகம், அதே நிறம்! எவ்வளவு நல்ல பிள்ளையாக இருந்தான்! மனைவி என்ற ராட்சசி வந்து அவனை எங்களுக்கு ஆகாமல் செய்துவிட்டாள். அந்த வருத்தத்திலேயே அவன் அம்மாவும் போய்விட்டாள். நான் இருந்து அல்லல்படுகிறேன்” என்று குலுங்கிக்  குலுங்கி அழுதார்.


சற்றே அவர் மனம் தெளிவடையட்டும் என்று அவருடைய உதவியாளரை அழைத்துக்கொண்டு பால்கனிக்குச் சென்றேன். “இவரைப் பற்றி உங்களுக்குத் தெரிந்த தகவல்களைக் கூறுங்கள். அவரை சமாதானம் செய்ய வசதியாக இருக்கும்” என்றேன்.


அவர் என் கைகளை இறுக்கமாகப் பற்றிக்கொண்டார். “தயவு செய்து அவருக்கு டிக்கட் வாங்கித் தராதீர்கள். அவர் அமெரிக்கா போகவேண்டியதில்லை” என்றார் உறுதியான குரலில்.


நான் வியப்போடு அவரைப் பார்த்தேன். “கடைசி தடவையாக ஒருமுறை மகனைப் பார்க்கவேண்டும் என்று கூறுகிறாரே!” என்றேன்.


அவர் கண்களிலிருந்து நீர் கசிந்தது. “நிச்சயம் பார்க்கவேண்டியதுதான். ஆனால் அந்த மகன் அங்கு இருக்கவேண்டாமா?” என்றார்.


இதென்னடா ஒரு மர்மக்கதை போல் போகிறதே என்று திகைத்தேன். ஹாலில் அந்த முதியவர் இன்னும் அழுதுகொண்டே இருந்தார்.


“ஆமாங்க! இவருக்கு ஒரு மகன் இருந்தான். அவன் பட்டம் வாங்குவதற்காகக் கல்லூரி செல்லும்போது ஒரு கார்மோதி அந்த இடத்திலேயே இறந்துவிட்டான். அடையாளம் தெரியாத காரணத்தால் பத்து நாளைக்குப் பிறகுதான் இவருக்கு அவனுடைய சவம் கிடைத்தது. அதைப்பார்த்தவுடனேயே இவர் மயங்கி விழுந்தவர்தான். இவருக்கு முன்பே மனைவி காலமாகிவிட்டார். பல மாதங்கள் கோமாவில் கிடந்தவர் பிறகு எப்படியோ பிழைத்துவிட்டார். ஆனால் நினைவு தவறிவிட்டது. தன் மகன் பட்டம் வாங்கியவுடன் கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைத்து  அமெரிக்கா போய்விட்டதாக அவராகவே கற்பனைசெய்துகொண்டு சில வருடங்கள் பேசிக்கொண்டிருந்தார். பின்னர், தன் மருமகள்தான் அவனைத் தன்னோடு பேசவிடாமல் செயகிறாள் என்று பேச ஆரம்பித்தார்….”


அவருக்கு இவர், தம்பி மகனாகவேண்டுமாம். 


“மருந்துகளால் இவருக்குப் பயனில்லை. வீட்டில் வைத்து பாதுகாப்பதே நல்லது என்று டாக்டர்கள் கூறிவிட்டார்கள். எங்களால் முடிந்தவரை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறோம். எங்களுக்குத் தெரியாமல் பாஸ்போர்ட் விண்ணப்பித்து இருக்கிறார். இப்போது விமானப் பயணத்திற்குத் துடிக்கிறார். நீங்கள் எப்படியாவது சமாதானம் சொல்லி அனுப்பிவிடுங்கள்” என்றார் அவர்.


நான் முதியவரிடம் வந்தேன். அவரை நெருங்கி அணைத்துக்கொண்டேன். “ஏன்  அழுகிறீர்கள்? உங்களுக்கு வேண்டிய தேதியில் விமான டிக்கட் மிகவும் குறைந்த செலவில் செய்து கொடுக்கிறேன். ஆனால் இன்று சனி, நாளை ஞாயிறு அல்லவா? அமெரிக்காவில் இந்த இரண்டு நாட்களும் விடுமுறை நாட்கள் ஆயிற்றே” என்றேன்.


அவர் கண்களைத் துடைத்துக்கொண்டார். “அப்படியானால் நான் திங்கட்கிழமை வரட்டுமா?” என்று எழுந்தார். நான் அவருடைய தம்பி மகனைப் பார்த்து புன்னகைத்தபடி தலையாட்டினேன்.


“பாருங்க, எனக்கு மனைவி கிடையாது. இருப்பது ஒரே பிள்ளை. அவன் என்னை விரும்பாவிட்டாலும், நான் அவனை வெறுக்கமுடியுமா? எப்படியாவது அவனைப் பார்க்கும்படி செய்துவிடுங்கள். செய்வீர்கள் தானே?” என்று அவர் கெஞ்சியபோது மீண்டும் அவர் கண்களில் நீர் துளிர்த்தது. 


விதி எப்படியெல்லாம் விளையாடுகிறது! அவரை அதற்குப் பின் நான் பார்க்கவில்லை. இன்று அவர் இருக்கிறாரோ இல்லையோ தெரியாது.  ஆனால் பாஸ்போர்ட்டைக்  கையில் எடுக்கும்போதெல்லாம் அவருடைய நினைவு எழாமல் இருப்பதில்லை.  


-இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து 

21 கருத்துகள்:

  1. பெயரில்லா1 மே, 2022 அன்று 10:14 AM

    த்த்ரூபமான விவரணை. அருமை. படித்தவுடன் கண்களில் கண்ணீர்

    பதிலளிநீக்கு
  2. "இம்மாதிரி எவ்வளவோ பேருக்கு விண்ணப்பங்கள் பூர்த்திசெய்து கொடுப்பது, முடிந்தவரை அவர்களுடன் கூடவே சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்குச் சென்று வருவது போன்றவை எனக்கு வாடிக்கை " ----இது மாதிரி சேவைகள் தான் தங்கள் வங்கி கணக்கில் போடப்படும் பணம் .

    பதிலளிநீக்கு
  3. கு.மா.பா.திருநாவுக்கரசு1 மே, 2022 அன்று 11:12 AM

    முதியவருக்கு கண்ணீர் வந்ததற்குக் காரணம் விபத்து. இதனைப் படித்ததால் எங்களுக்கும் கண்ணீர் வந்ததற்குக் காரணம் தங்கள் எழுத்து. சோகம் நிறைந்த நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு
  4. பதில்கள்
    1. ஒற்றை வார்த்தையில் எல்லாவற்றையும் அடக்கிவிட்டீர்கள். நன்றி!

      நீக்கு
  5. பெயரில்லா2 மே, 2022 அன்று 4:03 AM

    மனத்தைத் தாக்கிய பதிவு. இப்படியெல்லாம்கூட நடக்குமா என யோசித்தால், நாவுக்கரசு என்ற மாணவன் கொலை செய்யப்பட்டதும், அவர் அப்பா தன் வீட்டில் ஒரு பெரிய அறை முழுக்க அவன நினைவுப் பொருட்களை வைத்திருந்ததும், கொலை செய்தவன் சட்டத்தின் ஓட்டைகளில் புகுந்து தப்பித்து பாதிரியாகிட்டதும் நினைவுக்கு வந்து தொலைக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், உண்மை சில நேரம் கற்பனையை விடக் கொடியதாகத்தான் இருக்கிறது.

      நீக்கு
  6. உதவி செய்யும் வழக்கம் சிறப்பு...

    முடிவில் கண்ணீர்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உதவி செய்ய முடிகிறதே என்ற நல்லூழுக்கு நன்றி தெரிவிக்கிறேன். வாழ்க்கையில் கண்ணீர் எதிர்பாராத நேரத்தில் நம்மோடு இணைந்துகொள்கிறது நண்பரே!

      நீக்கு
  7. பதிவில் சொல்லப்பட்டிருக்கும் மனிதரின் வாழ்வு மனதை சோகப்படுத்தியது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  8. சார், வாசித்து ரொம்பக் கஷ்டமாகிவிட்டது. பாவம் அவர். நல்லகாலம் ஏதோ அவருக்கு உதவியாக அவர் தம்பி மகன் இருக்கிறாரே என்று ஆறுதல்படுத்திக் கொள்ள வேண்டியதுதான். மனித மூளை ஒவ்வொருவரையும் எப்படி எல்லாம் படுத்துகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், ஆதரவுக்கு ஒருவரும் இல்லாத எவ்வளவோ பேர் மூளை பாதிப்பில் எப்படியெல்லாம் வதைபடுகிறார்கள் தெரியுமா? நினைத்தால் மனம் உறங்கவேமுடியாது.

      நீக்கு
  9. வெங்கட்.. நீங்கள் இரண்டு நெகிழ்ச்சி, ஒரு வேதனை கமெண்ட்ஸ் கொடுத்தும் உங்கள் கமெண்ட் ஒன்று கூட இங்கு காணோம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் அவர்களே, இதற்கு பதில் சொல்லவேண்டியது நானா, வெங்கட்டா?

      நீக்கு
    2. புதிய கருத்துப் பெட்டி வந்த பிறகு இப்படி தான் ஆகிறது. மீண்டும் மீண்டும் முயற்சித்தும் வலைப்பதிவில் தெரியாமல் மின்னஞ்சலில் மட்டும் வருகிறது. இராய செல்லப்பா ஐயா எதற்கும் ஒரு முறை உங்கள் Blogger பக்கத்தில் Spam கருத்துகளில் ஏதேனும் கருத்துரைகள் இருக்கிறதா என்று பார்க்கவும்.

      நீக்கு
  10. கனமற்ற வெள்ளை இறகுபோல ஜூலி அங்கு மிதந்து கொண்டு இருந்தாள் என்று வண்ணதாசன் போய்க்கொண்டிருப்பவளில் எழுதி இருப்பார்.
    கனமற்று இருப்பதைத்தான் நாம் விரும்புகிறோம் என்பதில்லை. கிழங்கு போல பாத்திரம் காத்திரமாக இருக்க வேண்டும் என்பதும் வளையல் என்ன தக்கையாட்டமா இருக்கே என்ற கேலிப்பேச்சும் கனமுள்ளதையும் கனமற்றதையும் இரு வேறு அளவுகளில் அனுமானிப்பவை.
    சோகமான நிகழ்வுகளை மனம் விரும்புவதில்லை. ஆனாலும், பெரிய அளவில் வெற்றி பெற்ற சோகப்படங்களும் சோடைபோன நகைச்சுவைப் படங்களும் இல்லாமல் இல்லை.
    ஆக, வெளிப்படுத்தும் முயற்சியும் காட்சிப்படுத்தும் நுணுக்கமுமே எந்தவொரு படைப்பின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கின்றன.
    அந்த வகையில், இந்தக் கதை ஒரு கற்பனை நிகழ்வாக இருக்க வேண்டுமே என்கிற பதைப்புதான் இந்தக் கதையின் வெற்றியையும் கதைசொல்லியின் சரளத்தையும் முன்னிறுத்துகின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கற்பனையல்ல நண்பரே, நடந்த கதைதான். தங்கள் ஆழமான விமர்சனத்துக்கு நன்றி.

      நீக்கு
  11. பெயரில்லா7 மே, 2022 அன்று 10:03 AM

    It is an excellent approach.
    It sad incident happened to unknown elderly person. Sir ,you are great, helping common man, Long live & stay blessed

    பதிலளிநீக்கு
  12. சொன்ன விசயம் சொன்னவிதம் வெகு நேரம் அந்த நினைவுகளிலேயே நிலைக்கச் செய்துவிட்டது...

    பதிலளிநீக்கு