வியாழன், மே 26, 2022

தாடிகள் இல்லையடி பாப்பா!

 தாடிகள் இல்லையடி பாப்பா!

(இன்று கிழமை புதன் -7)

அமெரிக்காவில் 44ஆவது நாள் 


(அட்லாண்டிக் கடலோரம்)

9/11 எனும் இரட்டை கோபுரத் தாக்குதல் நிகழ்வுக்குப் பிறகு அமெரிக்காவில் தாடி வைத்தவர்கள் மீது ஒரு சந்தேக கண் விழுந்து விட்டதாம். தாடி வைத்தவர்களைக்  குறிவைத்துப்  பல இடங்களில் தாக்குதல் நடந்ததும் உண்டாம். அமெரிக்காவில் வாழும் நமது சீக்கிய நண்பர்களும் சிறிதுகாலம் இதனால் பிரச்சினையைச் சந்தித்து இருக்கிறார்களாம். 


ஆனால் இப்பொழுது தாடிகள் மீது குறிப்பாக எந்தவிதமான  எதிர்ப்பு உணர்ச்சியையும்  அமெரிக்கப் பத்திரிகைகளில் காண முடிவதில்லை. இருந்தாலும் தாடி வைப்பவர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் குறைந்து கொண்டே வருவதாகத் தெரிகிறது. விமான நிலையங்களில் வந்தேறிகளையும் வெளியேறிகளையும் பார்க்கும்போதே தாடி தனது ஆதரவாளர்களைப் பெரிதும்  இழந்துவிட்டது தெரியும்.


தமிழின் அடையாளமாக விளங்கும் திருக்குறளை எழுதிய திருவள்ளுவரின் அடையாளம்  தாடி. ஆனால் கம்பனுக்கு தாடி இல்லை.   நோபல் பரிசு பெற்ற வங்கமொழிக் கவிஞர் தாகூர் தாடி  வைத்தவரே. ஆனால்   பாரதியும் பாரதிதாசனும் தாடி வைத்துக் கொள்ளவில்லை.  வாலியும் அப்துல் ரகுமானும் தாடி வைத்துக் கொண்டனர் ஆனால் கண்ணதாசனிடம் அது இல்லை. “தாடிகள் எல்லாம் தாகூரா, மீசைகள் எல்லாம் பாரதியா?” என்று கேட்ட  வைரமுத்து தாடியுடன் காட்சி தந்ததில்லை.


வயது மூப்பின் காரணமாகவும்,  இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழவேண்டும் என்ற உந்துதலை முன்னிட்டும்  தானாக வளரும் தாடியை மழிக்காமல் இருப்பவர்கள் பலர் உண்டு. 


என் கல்லூரிப் பருவத்தில் என்னைக் கவர்ந்த தாடி, பித்துக்குளி முருகதாஸ் அவர்களுடையது. (அவர் நடத்திய, இராணிப்பேட்டை அருகில் இருந்த வாலாஜாப்பேட்டையில்  அமைந்த ‘தீனபந்து ஆசிரமம்’ என்ற அறச்சாலையில் சிறிதுகாலம் நான் மாணவர்களுக்குப் பாடம் எடுத்ததுண்டு). தாடியும் ஹார்மோனியமும் இல்லாத பித்துக்குளியாரைக் கண்ணால் காண முடியுமா?


எனக்கு அண்மையில் பழக்கமான வாஷிங்டன் டி.சி. நண்பர் ஒருவர்- திருப்புகழைக் கரைத்துக் குடித்தவர்- பன்னாட்டுப் பயண அனுபவங்கள் கொண்டவர்- எழுத்தால் விவரிக்க  இயலாத வடிவமைப்பைக் கொண்டதொரு  வெண்தாடியால் அலங்கரிக்கப்பட்டிருப்பதை வியப்போடு பார்த்தேன். அதன் இரகசியத்தை அவரே ஒருநாள் போட்டு உடைப்பார் என்று எதிர்பார்க்கிறேன்.


சென்னையில் என்னோடு பழகிய தாடிகளில் சிறப்பானதாக நான் கருதுவது ‘ஜ’ என்ற நண்பரின் வெண்ணிறக் குறுந்தாடிதான். அவரது நிறத்திற்கும் உயரத்திற்கும் அது அழகூட்டுவதாகவே நண்பர்கள் கருதுகிறார்கள்.  இன்னொரு ‘ச’ என்ற நண்பரும் அழகான குறுந்தாடி வைத்திருக்கிறார்.   (திமுக என்ற கட்சியின் ஆரம்ப நாட்களில் ‘குறுந்தாடி’ நெடுஞ்செழியன் என்றே ஒருவர் அழைக்கப்பட்டார்). நரைத்த கூந்தலைச் சாயம் பூசிக் கருமையாக்கும் சிரமத்திலிருந்து ஓரளவு தப்புவதற்காக முயன்றவர்களே வெண்குறுந்தாடி வேந்தர்கள் ஆனார்களோ?  


இன்று பிளேடும் ஷேவிங் கிரீமும் விற்கும் விலையில், அனைவரும் தாடி வளர்க்கவேண்டும் என்று தமிழகத்தில் சட்டம் கொண்டுவந்தாலும் வியப்பில்லை. ஆனால் தாடி வளர்ப்பதெனபது அவ்வளவு சுலபமான காரியமில்லை என்பதே என் அனுபவம்.


பணியில் இருக்கும்போது இரண்டு நாட்களுக்கு ஒருமுறையாவது முகச்சவரம் வேண்டியிருக்கும். ஓய்வு பெற்றபின் சற்றே அலட்சியம் தோன்றிவிடும். முக்கிய வேலையாக வெளியில் செல்லும்போது மட்டுமே தேவைப்படும். அந்தக் குறுகிய காலத் தேவையையும் நிறைவேற்றாமல் இருக்கும் மனவலிமை கொண்டவர்களால் மட்டுமே தாடி வளர்க்க இயலும். 


அதிலும் முதல் பத்து நாட்கள் மழிக்கப்படாத முகரையின் சுயரூபத்தைக் கண்ணாடியில் காண்பது, பலவீனமான மனம் படைத்தவர்களுக்கு மிகவும் கடினமே. உடனே கை பரபரக்கும்.  மழிப்பானைத் தேடும்.   இல்லத்தில் இருக்கும் வாழ்க்கைத்துணையால் இதுபற்றி எடுக்கப்படும் முடிவே இறுதியானதாக இருக்கும். நான் ஏன் தாடி வைக்க முடியவில்லை என்று புரிகிறதா? 


இன்னும் எழுதிக்கொண்டே போகலாம். ஹாரி பாட்டரில் வரும் தாடிகளைப் போல அது நீண்டுவிடும்.  வள்ளுவரோடு நிறுத்திக்கொள்கிறேன்:


வள்ளுவருக்குக் கூந்தல் மீது அதிக நாட்டம் உண்டு போலும். மூன்று குறள்கள் உடனே நினைவுக்கு வருகின்றன. இன்னும் ஏதாவது குறள் இருக்கிறதா என்று கூந்தலைப் பிய்த்துக்கொண்டு ஆராய்ந்தவர்கள் கூறலாம்.


மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்

பழித்தது ஒழித்து விடின் (280)


தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்

நிலையின் இழிந்தக் கடை (964)


மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்

உயிர் நீப்பர் மானம் வரின். (969)


  • இராய செல்லப்பா நியூ ஜெர்சியில் இருந்து.


14 கருத்துகள்:

  1. பாரதியாரும் பிற்காலத்தில் தாடி வைத்து இருந்தார்.

    ராமகிருஷ்ண பரமஹம்சரை விட்டு விட்டீரே ?

    ஏசுநாதர் தாடி வைத்து இருந்தார்.K.J.Yesudoss க்கு தாடி. George Bernardshaw,பெரியாருக்கு தாடி.வெண்தாடி வேந்தர் ஆயிற்றே ?

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா26 மே, 2022 அன்று AM 9:58

    படகோட்டியில் MGR..நானொரு குழந்தை நீயொரு குழந்தை பாடும்போது வெண்தாடி..
    காதலிக்க நேரமில்லை பாட்டில் முத்துராமன் வெண்தாடி..

    பதிலளிநீக்கு
  3. நீங்கள் தாடி வளர்க்காததற்கான காரணம் புரிந்தது!!!!!!!!!!!

    இன்னும் நிறைய புகழ்வாய்ந்த தாடிவாலாக்கள் இருக்கிறார்களே. மேலே சொல்லப்பட்டுவிட்டன. அதிலும் தாசேட்டன் இப்போது வெண் தாடி. தலை முடியைக் கூட வளர்த்து சிண்டு முடிச்சு போட்டிருப்பதையும் பார்த்தேன். பாலகுமாரனை விட்டுவிட்டீர்களே.

    தலைக்குச் சாயம் பூசும் ஆண்கள் கண்டிப்பாக மறக்காமல் சோம்பேறித்தனம் படாமல் முகச்சவரம் செய்துவிடுவார்கள்!!!!

    இப்போதோய இளைஞர்கள் fashion க்கு ஏற்ப அவ்வப்போது வடிவம் மாற்றி தாடி வளர்க்கிறார்கள்.

    கீதா

    பதிலளிநீக்கு
  4. தாடியை விட மீசை அல்லவா முக்கியம்...?

    தமிழ் முருகனுக்கு மீசை உண்டு...

    சுப்'பிரமணியனு'க்கு மீசை கிடையாது...

    ஏன்...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காரணம் தெரியவில்லை. மீசையை விரும்பும் வேடுவப் பெண்ணுக்கும் மீசையை விரும்பாத தேவமகளுக்கும் இடையில் சிக்கித் தவித்த இரண்டு பெண்டாட்டிக்காரனாகிய சுப்ரமணியன், அமைதி முயற்சியாகத் தன் மீசையை விட்டுக்கொடுத்திருக்கலாம் என்று கருதுகிறேன். விடுங்கள், நாம் நம்து மீசை தாடியைப் பற்றி மட்டுமே கவலைப்படுவோம்!

      நீக்கு
  5. // வள்ளுவருக்குக் கூந்தல் மீது அதிக நாட்டம் உண்டு போலும்... மூன்று குறள்கள் உடனே நினைவுக்கு வருகின்றன... இன்னும் ஏதாவது குறள் இருக்கிறதா என்று கூந்தலைப் பிய்த்துக்கொண்டு ஆராய்ந்தவர்கள் கூறலாம்... //

    கூந்தலைப் பிய்த்துக்கொண்டு(ம்) ஆய்வு செய்யலாம்...! வாங்க ஐயா...

    8+8=7 கணக்கியல்...! (குறிப்பு மட்டும் தான்...! குறள் எண் எல்லாம் சொல்லமாட்டேனாக்கும்...!)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புரிந்துவிட்டது. தங்கள் ஆய்வுக் கட்டுரையை விரைவில் படித்து முடித்துவிடுகிறேன். பொறுங்கள் நண்பரே!

      நீக்கு
  6. 1) பாட பேதம் உள்ள ஒரு குறளில் கனங்குழையா...? கணங்குழையா...? :-

    அதாவது கனமான காதணியா...? இல்லை திரண்ட கூந்தலா...? முடிவு என்ன...? கூந்தல் கணக்கியலில் சேருமா...? சேராதா...?

    பதிலளிநீக்கு
  7. 2) மலரணிந்த தாழ்ந்த கூந்தலை உடையவளின் தோள்கள் என்று எந்த குறளில் வருகிறது...?

    பதிலளிநீக்கு
  8. 3)

    3.1 பத்துப்பாட்டு, நெடுநல்வாடை 132-133 :-

    துணைபுண ரன்னத் தூநிறத் தூவி இணையணை மேம்படப் பாயணை யிட்டு :-

    பொருள் :-
    அச்சேக்கைக்கு மேலாகத் தம்பேட்டைப்புணர்ந்த அன்னச்சேவலின் தூய நிறத்தையுடைய மென்சூட்டு மயிர்கள் அடைத்த மென் திண்டு மெத்தைகள் இரண்டு...!

    3.2. கலித்தொகை - மருதக் கலி 72 :-

    இணைபட நிவந்த நீல மென் சேக்கையுள், துணை புணர் அன்னத்தின் தூவி மெல் அணை அசைஇ :

    பொருள் :-

    உயர்ந்த நீலப்பட்டாற்செய்த மெல்லிய படுக்கையிடத்துக்கிடந்த துணையோடேகூடிய அன்னத்தின் தூவியாற் செய்த மெல்லிய அணையைச் சார்ந்திருந்து... இத்தூவியை அடைத்துச் செய்யப்பட்ட படுக்கை அணையே மிக மென்மையானது

    ஆமாம்... இவை எல்லாம் எதற்கு...? :-

    இதன் மூலம் எந்த குறள் ஞாபகம் வருகிறது...?

    பதிலளிநீக்கு
  9. இவற்றை தொகுத்து நம்ம 8+8=7 கணக்கியல் கணக்கிட்டு செய்து பார்த்து விட்டு தொடர்பு கொள்ளலாம்... நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னும் சில நாட்களில் தொடர்புகொள்கிறேன். நன்றி நண்பரே!

      நீக்கு
  10. பெயரில்லா28 மே, 2022 அன்று PM 1:07

    அடுத்தது மீசை பற்றி கட்டுரையை எதிர்பார்க்கலாம் என நினைக்கிறேன்.

    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  11. தாடி குறித்த ஆராய்ச்சி.... நன்று. தாடி வைத்துக்கொள்ள ஆசைப்பட்டாலும் அனுமதி கிடைப்பது அரிது! :)

    பதிலளிநீக்கு