சனி, மே 14, 2022

வாஷிங்டன் போயிருந்தோம்!

வாஷிங்டன் போயிருந்தோம்!
(இன்று கிழமை வெள்ளி -5)
அமெரிக்காவில் 32ஆவது நாள்
(அட்லாண்டிக் கடலோரம்)
இரண்டாம் உலகப் போரின் போது பெர்ல் ஹார்பரில் போர்முனையில் ஈடுபட்டு, சிதையாமல் மீண்ட ஒரு போர்க்கப்பலும், ஒரு நீர்மூழ்கிக் கப்பலும் பால்ட்டிமோரில் காட்சிக்காக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பார்த்தோம்.
 அருகிலேயே சிறப்பானதொரு ‘அக்வேரியம்’ உள்ளது. பல்வகை மீன் இனங்கள், ஆமைகள், உடும்புகள், ஜெல்லி மீன்கள் என்று கண்கவரும் வகையில் அதே சமயம் அறிவூட்டுவதாகவும் அமைத்திருக்கிறார்கள்.
குழந்தைகளைப் பெரிதும் கவரக்கூடிய ‘டால்பின்’ காட்சியும் உண்டு. நல்ல பயிற்சிபெற்ற ஆறு டால்பின்கள் சுமார் முக்கால் மணி நேரம் எங்களுக்குத் தங்கள் திறமையை வெளிப்படுத்தின.

****
வாஷிங்டனில், பாராளுமன்றக் கட்டிடமான ‘கேப்பிடல் ஹில்’லின் எதிரில் மிக பிரம்மாண்டமான கட்டிடமாக அமைந்திருப்பது, தாமஸ் ஜெஃப்பர்ஸன் பில்டிங். அதில் தான் ‘லைப்ரரி ஆஃப் காங்கிரஸ்’ என்ற மிகப் பெரிய நூலகம் உள்ளது. (உண்மையில், அருகிலுள்ள மேலும் இரண்டு கட்டிடங்களிலும் இந்நூலகம்  பரவியுள்ளது).

தரைத்தளத்தில் ஆராய்ச்சியாளர்களுக்கு அமர்ந்து படிக்கவும் குறிப்பெடுக்கவும் வசதியான இருக்கைகள். ஆராய்ச்சி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மூலம் நூலகத்தில் பதிவுசெய்துள்ளவர்கள் மட்டுமே இங்கு வரலாம். மற்றவர்களுக்கு அனுமதியில்லை.

மற்ற தளங்களில் கலை, அறிவியல் கண்காட்சிகள் நடைபெறுகின்றன. மிகப் புராதனமான கையெழுத்துப் பிரதிகளும், ஆதி அச்சுப் பிரதிகளும் உரிய பாதுகாப்புடன் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
தினத்தந்தியில் பாதியளவிலான ஆட்டுத்தோலில் சுமார் நூறு பக்கங்களில் ஜெர்மனியில் மெயின்ஸ் (Mainz) நகரில், கூட்டன்பர்க் அச்சிட்ட ஆதி பைபிளின் பிரதியைப் பார்த்தேன். அதற்கும் முந்தியதான, கையால் எழுதப்பட்ட இன்னொரு பைபிளையும் பார்த்தேன். அதை ‘ஜயண்ட் பைபிள் ஆஃப் மெயின்ஸ்’ என்று அழைக்கிறார்கள்.

சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட ஓவியங்களும், தேசப்படங்களும், அகழ்வாராய்ச்சியில் அவ்வப்போது கிடைத்த கலைப் பொருட்களும் காணக் கிடைக்கின்றன.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக மட்டுமே என்று சிறிய அளவில் 1800ல் 740 புத்தகங்களுடன் துவங்கிய ‘லைப்ரரி ஆஃப் காங்கிரஸ்’ நூலகம், 1814ல் பிரிட்டிஷ் படையினரால் கொளுத்தி அழிக்கப்பட்டது. ஜனாதிபதியாக இருந்து அப்போது ஓய்வு பெற்றிருந்த தாமஸ் ஜெஃபர்ஸன், தம்மிடமிருந்த 6487 புத்தகங்களை வழங்கி இந்த நூலகம் மீண்டும் உயிர்த்தெழக் காரணமானார்.   அவரது பெயரில் நிற்கும் இன்றைய கட்டிடம் 1897ல் கட்டப்பட்டது.  படிப்படியாக வளர்ந்து இன்று 15 கோடிக்கும் அதிகமான நூல்களைக் கொண்ட மாபெரும் நிறுவனமாக விளங்குகிறது.  
அமெரிக்காவில் வெளியாகும் எந்த நூலாக இருந்தாலும் அதன் இரண்டு பிரதிகள் இந்த நூலகத்திற்கு அனுப்பப்பட வேண்டும் என்பது சட்டம். அது மட்டுமின்றி, புத்தகங்கள், திரைப்படங்கள், ஆடியோ-விடியோக்கள், மற்ற கலைபடைப்புகள் இவற்றிற்கெல்லாம்  ‘காப்பிரைட்’ எனப்படும் காப்புரிமை வழங்கும் அதிகாரம் கொண்ட ‘காப்பிரைட் ஆஃபீஸ்’ இந்தக் கட்டிடத்தில் தான் இயங்குகிறது. (www.loc.gov).
****    
இந்த வருடம் புத்தகக் கண்காட்சியில் ‘வாஷிங்டனில் திருமணம்’ புத்தகம் கட்டாயம் வாங்கவேண்டும் என்று என் மனைவியின் கட்டளை. ‘சாவி’ எழுதியது. வாங்கினேன். கையோடு அமெரிக்கா கொண்டு வந்தேன்.

அறுபதுகளில் ஆனந்தவிகடனில் தொடராக வந்த நகைச்சுவைக் கதை. கோபுலுவின் அற்புதமான கோட்டோவியங்கள் கண்ணிலிருந்தே நீங்காது.  எத்தனையோ முறை படித்திருக்கிறேன். இன்னும் படித்தாலும் சாவியின் கற்பனை அலுப்பூட்டாது. அவர் எங்கள் வட ஆற்காடு மாவட்டத்துக்காரர் என்பது மேலும் மகிழ்ச்சியூட்டும் அம்சம். (மாம்பாக்கம்). ஆயிரம் முறைக்குமேல் மேடையேறி, இன்றும் உலகமெங்கும் ரசிக்கப்படும் கதை.
அமெரிக்காவின் (அப்போதைய) பெரிய பணக்காரர்களில் ஒருவர், ‘ராக்ஃபெல்லர் (Rockefeller). (ராக்-ஃபெல்லர் என்பது தவறு, ‘ராக்-க-ஃபெல்லர்’ என்பது தான் சரியான உச்சரிப்பு என்கிறார்கள் இவ்வூரில்). அவருடைய திருமதிக்குத் திடீரென்று ஓர் ஆசை. ஒரு (தென்) இந்திய முறைப்படியான திருமணத்தை அமெரிக்காவில் (தனது) வாஷிங்டன் நகரத்தில் நடத்திப் பார்த்தால் என்ன என்று. எவ்வளவு கோடிகள் செலவானாலும் பரவாயில்லை என்கிறார். அதை எப்படி நடத்திக் காட்டுகிறார்கள் என்பது தான் கதை.

முதலாவதாக, ஒரு பெண்ணும் மாப்பிள்ளையும் வேண்டுமே! சென்னையிலிருக்கும் ருக்கு தான் பெண். டில்லியில் செக்ரடேரியட்டில் வேலை பார்க்கும் ராஜா என்ற ராஜகோபாலன் தான் மணமகன். இருவர் வீட்டிலும் அமெரிக்கா சென்று திருமணம் நடத்திகொள்ள சம்மதிக்கிறார்கள்.

இரு தரப்பிலிருந்தும் நூற்றுக்கணக்கான ஆசாமிகள், சமையல்காரர்கள், ஆயிரத்தெட்டு சாஸ்திரிகள், நூறு பெட்ரோமாக்ஸ் விளக்குகள், நறிக்குறவர்கள், அவர்களைப் பார்த்து குரைப்பதற்கு நூறு நாய்கள்...என்று எல்லா விஷயங்களும் சென்னையிலிருந்து வாஷிங்டன் பறக்கின்றன.

திருமணத்திற்காக அப்பளம் ஒரு லட்சம், கைமுறுக்கு ஐம்பதாயிரம், பருப்புத் தேங்காய் பத்தாயிரம் என்று முடிவாகிறது. அப்பளம் இடுவதற்காக ஒரு பெரிய கட்டடத்தின் மொட்டை மாடியை ஒழித்துக் கொடுக்கிறார்கள். அப்பளம் இடுவதற்காக நூறு பாட்டிகள் சென்னையிலிருந்து மிக முன்னதாகவே வாஷிங்டன் வருகிறார்கள்.
அப்பளம் இடுவதையும், ஜாங்கிரி சுற்றுவதையும் முன்னோட்டமாகக் காண்பித்த பின், முழு திருமணத்தையுமே தொலைக்காட்சியில் லைவ் ரிலே காட்ட ஏற்பாடு செய்கிறார்கள். (ஹூம், இது நடப்பது 1960களில் என்பதை மறக்கவேண்டாம்).  

ஆர். ஸ்ட்ரீட், ஜார்ஜ் டவுன், டம்பர்ட்டன் ஓக்ஸ், சம்மர் ஹௌஸ், கான்ஸ்டிடியூஷன் அவன்யூ, டைடல் பேஸின் என்று வாஷிங்டனின் முக்கிய இடங்களில் திருமணத்தின் வெவ்வேறு நிகழ்ச்சிகளை சாவி கொண்டுபோகிறார். (இந்தக் கதையை எழுதியபோது சாவி அவர்கள் வாஷிங்டனை நேரில் சென்று பார்த்ததில்லை. தகவல்களின் அடிப்படையிலேயே கற்பனையை ஓடவிட்டிருக்கிறார். பல ஆண்டுகள் கழித்து தான் வாஷிங்டன் வர நேர்ந்ததாம். அப்போது இந்த இடங்களைப் பார்த்து மகிழ்ந்தாராம்).
மாலை மாற்றுதல், அருந்ததி பார்த்தல், ஜானவாசம், சாந்திமுகூர்த்தம், பாலிகை விடுதல், சம்பந்தி சண்டை என்று நமது திருமணங்களின் தவிர்க்கமுடியாத அம்சங்களை அமெரிக்காவில் நிகழ்த்திக் காட்டினால் அவர்கள் எப்படி இந்தப் புதுமையை ரசிப்பார்கள் என்ற கற்பனையை நகைச்சுவை இழையோட நூல் முழுதும் தருகிறார், சாவி.  

(நான் வாங்கியது, சென்னை, கவிதா பப்ளிகேஷன் வெளியிட்ட 2012 பதிப்பு. 144 பக்கம். 70 ரூபாய்.)
****



சென்ற முறை வாஷிங்டன் பயணத்தின் போது ஜெஃபர்சன் மெமோரியல் பார்க்க விட்டுப் போனது. எனவே இப்போது போனோம். அதன் அருகில் தான் போட்டோமாக் நதி (Potomac) ஓடுகிறது.



அங்கு தான் ருக்கு-ராஜா திருமணத்தின்போது பாலிகை கரைத்தார்கள் என்று சாவி எழுதியிருக்கிறார். அந்த நினைவாகவும், அமரர் சாவிக்கு அஞ்சலி செலுத்துவது போலவும், ‘வாஷிங்டன் திருமணம்’ நூலை கையிலேந்திக் கொண்டு போட்டோமாக் நதிக்கரையில்  படம் பிடித்துக் கொண்டேன்.

ஆனந்த விகடனில் அவர் எழுதி வெளியான போதே நான் படித்திருந்த மற்ற தொடர்களான ‘வழிப்போக்கன்’, ‘விசிறி வாழை’, ‘கோமகனின் காதல்’ மூன்றும் ஞாபகம் வந்தன. ‘கேரக்டர்’ என்ற தலைப்பில் வாரந்தோறும் மனித குணாதிசயங்களைப் படம்பிடித்துக் காட்டியதும் நினைவுக்கு வந்தது. ‘வேதவித்து’, ஆப்பிள் பசி’ என்ற தொடர்களும் நிழலாடுகின்றன. காமராஜர் பற்றி ‘சிவகாமியின் செல்வன்’ எழுதினார். நான் பிறப்பதற்கு முன்பு அவர் எழுதிய ‘நவகாளி யாத்திரை’யும் நினைவில் இருக்கிறது.

கையில் இருப்பது 'வாஷிங்க்டனில் திருமணம்'

 விகடனிலிருந்து வெளியேறி, ‘குங்குமம்’ வார இதழைத் தொடங்கியதும், அதன் பிறகு, தானே சொந்தமாக ‘சாவி’ என்ற வார இதழை நடத்தியதும் தெரிந்த விஷயமே. ‘சாவியை ஆறு லட்சம் பிரதிகள் விற்கும் இதழாக வளர்க்கவேண்டும் என்பதே என் லட்சியம்’ என்று அவர் எழுதியது இன்றும் என் கண்ணில் தெரிகிறது. (அப்போது இந்தியாவில் ‘மலையாள மனோரமா’ வார இதழ் தான் அதிக பட்சமாக ஆறு லட்சம் விற்றது. அதை மிஞ்சவேண்டும் என்ற லட்சியம்). ஆனால் ஒரு லட்சம் தாண்டும் முன்பே ‘சாவி’ நின்று போனது. நிறைவேறாத கனவுடனேயே அமரரானார், சாவி என்கிற சா.விஸ்வனாதன். ‘கான முயல் எய்த அம்பினில், யானை பிழைத்த வேல் ஏந்தல் இனிது’ என்ற குறளுக்கேற்ப வாழ்ந்தவர். நூற்றுக்கணக்கான எழுத்தாளர்களை உருவாக்கியும் கைதூக்கியும் விட்ட மாமனிதர். தமிழ்ப் பத்திரிகை உலகில் நிச்சயம் ஒரு முக்கிய இடம் சாவிக்கு உண்டு.
****
பால்ட்டிமோரில் சில நண்பர்களைச் சந்தித்துவிட்டு, மீண்டும் நியுஜெர்சியை நோக்கிப் பயணமானோம்.

-இராய செல்லப்பா  நியூஜெர்சியில் இருந்து. 

 (2013இல் நான் எழுதிய வலைப்பதிவின் மீள்பதிவு)

11 கருத்துகள்:

  1. பெயரில்லா14 மே, 2022 அன்று 9:16 AM

    சுவை மிகு இலக்கிய ப்பயணம். சாவி அவரகள் வாஷிங்டனில் திருமணம் முந்தைய தலைமுறை மறக்க இயலாது.

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா14 மே, 2022 அன்று 9:28 AM

    Good could have avoided lengthy details of SaaVi book

    பதிலளிநீக்கு
  3. வாஷிங்கடனில் நறுமணம்

    பதிலளிநீக்கு
  4. 15 கோடிக்கும் அதிகமான நூல்களா...! நல்லதொரு சட்டம்...!

    வலிமை கொண்டவர்களிடம் பல மோதல்கள் உண்டு போல... அதைப்பற்றி சிறிது விரிவாகப் பதிவு வருமா...? குறளை சொல்லவில்லை... குறளுக்கேற்ப வாழ்ந்தவரின் நிகழ்வுகளை...!

    பதிலளிநீக்கு
  5. சாவியின் வாஷிங்க்டனில் திருமணம் வாசித்துச் சிரித்திருக்கிறேன். சிரிக்கத் தொடங்கினால் அடுத்த வரி வாசித்து அதற்கு மீண்டும் சிரித்து என்று மிக மிக ரசித்து வாசித்த கதை. கல்லூரி படித்துக் கொண்டிருந்த போது வாசிக்கக் கிடைத்தது. ஆனால் வீட்டிற்குக் கொண்டு வராமல் கல்லூரியிலேயே வாசித்து முடித்தேன்.

    நீங்கள் சென்ற இடங்களைப் பற்றிய குறிப்பாக நூலகம் பற்றிய தகவல்கள் அருமை,

    கீதா

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லா14 மே, 2022 அன்று 11:07 PM

    குமுதம் ஆறு லட்சம் விற்றது . சாவிக்கு குமுதத்தை மிஞ்ச வேண்டும் என்பதில் ஆசை!

    விரைவில் வாஷிங்டனில் திருமணம் குறும் புதினமாக வரும் !!

    பதிலளிநீக்கு
  7. வாஷிங்டன் திருமணம்’ நூலை கையிலேந்திக் கொண்டு போட்டோமாக் நதிக்கரையில் படம் பிடித்துக் கொண்டது மிகவும் அற்புதம் . நம்மால் ஆன அஞ்சலி அவருக்கு.

    அப்பளத்தை துப்பாக்கியால் சுடுவதை படித்து அனுபவித்து இருக்கிறேன்.

    நாடகமாக ஆக்கும் போது ஜான்வாசத்தை காரோடு மேடையில் அரங்கேற்றினார்கள்.

    பதிலளிநீக்கு
  8. 15 கோடி புத்தகங்களுடன் பிரமிக்க வைத்த நூலகம். சாவி அவர்களுக்கு சிறப்பான ஒரு அஞ்சலி. பதிவு வழி பகிர்ந்த விஷயங்களை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  9. மீண்டும் அந்த அருமையான நாவலைப் படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் தங்கள் பதிவைப் படித்ததும் தொற்றிக் கொண்டது..நிஜமாகவே அடுத்த மாதம் வாஷிங்டனுக்கு ஒரு திருமணத்திற்கு செல்ல இருக்கிறேன்..

    பதிலளிநீக்கு