திங்கள், டிசம்பர் 16, 2013

“என் கணவர் பெரிய இலக்கியவாதி. அவரைப்பற்றி நான் எழுதக்கூடாதா?” (‘அபுசி-தொபசி’- 15)

(“அபுசி-தொபசி” என்ற இப்பகுதி வாரம் ஒருமுறை மட்டும் ஒவ்வொரு திங்கட்கிழமையும் இந்திய நேரம் காலை ஆறுமணிக்கு மேல் ஏழரை மணிக்குள்ளாகவோ அல்லது அதற்கும் முன்பாகவோ வெளியாகும்.)

அரசியல் 
கடைசியில் குரங்கு கையில் கொடுத்த பூமாலையாகிவிடுமோ, அரவிந்த கேஜ்ரிவாலிடம் கொடுத்த வெற்றி?
 
பா.ஜ.க. ஆட்சியமைக்க மறுத்துவிட்ட நிலையில், அடுத்த பெரிய கட்சியான ஆம் ஆத்மி கட்சியை கவர்னர் அழைக்கிறார்.  ஆனால் கேஜ்ரிவால் முதலில் மறுத்துவிட்டார். காங்கிரசோ, எப்பாடுபட்டாவது பா.ஜ.க. ஆட்சிக்கு வருவதைத் தடுத்து நிறுத்தியாகவேண்டும் என்ற ஒரே நோக்கோடு, தாங்கள் கேஜ்ரிவாலுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தரத் தயார் என்று அறிவித்துள்ளது. கெஞ்சினால் மிஞ்சுவது அரசியல்வாதிகளின் பண்பு. அதை இவ்வளவு விரைவில் கேஜ்ரிவால் கற்றுக்கொண்டிருப்பது ஆச்சரியமே! முதலில் தான் ஆட்சி அமைக்கப்போவதில்லை என்றார். இப்போதோ, ஒரு பெரிய பட்டியலைக் கொடுத்து, இதையெல்லாம் நிறைவேற்றினால் தான் உங்கள் ஆதரவை ஏற்றுக்கொண்டு ஆட்சி அமைப்பேன் என்று அடம் பிடிக்கிறார்.
 
அந்தப் பதினெட்டு நிபந்தனைகளையும் நிறைவேற்ற இன்னும் நூறு வருடங்களாவது பிடிக்கும் என்பது சுதந்திர இந்தியாவின்  கடந்த அறுபத்தாறு வருட சாதனைகளைக் கூர்ந்து கவனித்தால் புரியும்.  பாவம் காங்கிரஸ்! ஆம் ஆத்மி கட்சியின் வாசலில் நின்றுகொண்டு குழம்புகிறது- நாம் ஆதரவு கொடுக்க வந்தோமா, இல்லை கேட்க வந்தோமா என்று! டெக்கன் கிரானிக்கிள் (15-12-1013) பெங்களூர் பதிப்பில் வந்த கருத்துப்படம்.
 
புத்தகம்
வங்கி அதிகாரிகளில் சிறந்த எழுத்தாளர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களில் திரு சேது மாதவனும் ஒருவர். ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூரில் அவர் டிஜிஎம் ஆக இருந்தபோது (நான் பணியாற்றிக்கொண்டிருந்த) கார்ப்பொரேஷன் வங்கிக்கு ஜிஎம் ஆக டெபுடேஷனில் வந்தார். மூன்றாண்டுகள் இருந்தார் என்று நினைக்கிறேன். மலையாள இலக்கிய உலகில் இவரை ‘சேது’ என்கிற பிரபல நாவலாசிரியராக அறிவர். ‘அடையாளங்கள்’ என்ற மலையாள நாவலுக்காக 2007  இல் சாகித்ய அகாடெமி பரிசுபெற்றவர்.

இவரை எனது வங்கியின் தலைமை அலுவலகத்தில், ஒரு குளிரூட்டப்பட்ட தனியறையில்  நான் சந்திக்கவிருந்த வாரத்தில் இவரது சிறுகதையொன்று மலையாள மனோரமாவில் வந்திருந்தது. மூங்கிலாலான ஏணிகளுக்கு ஐந்தாம்படிக்கும் ஏழாம்படிக்கும் இடையில் ஆறாவதுபடி எப்போதும் இருப்பதில்லை யல்லவா, அது பற்றிய புனைகதை அது. அப்போதுதான் நான் மலையாளம் கற்றுக்கொண்டிருந்தேன். எனவே எளிமையாக எழுதப்பட்டிருந்த இக்கதையைப் படிப்பது சிரமமாயிருக்கவில்லை. கதையைப் படித்துவிட்டு அவருடன் விவாதித்தேன். தன் எழுத்தைப் படித்து ஆர்வத்துடன் விவாதிக்கும் வாசகனை எந்த எழுத்தாளருக்குத்தான் பிடிக்காது? அடுத்துப் பலமுறை அவருடன் அலுவலக நிகழ்வுகள்பற்றிப் பேச வாய்ப்பிருந்தும் இலக்கியம் பற்றிப் பேசும் வாய்ப்பு அதிகம் கிட்டவில்லை. (பிறகு அவர் தன் பணிக்காலம் முடிந்து ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூருக்கே சென்றுவிட்டார்.)
 
‘இனிய உதயம்’ மாத நாவலில் மொழிபெயர்ப்பாக வந்த  சேதுவின் ‘கையெழுத்து’, ‘ஒற்றையடிப்பாதைகள்’  என்ற இரண்டு கதைகளை ஒரு புத்தகமாக வெளியிட்டுள்ளது நக்கீரன்.(2009இல்). அதை அண்மையில் மறுவாசிப்பு செய்தேன்.
 


 கையெழுத்து’ ஒரு தொழிற்சங்கத் தலைவரைப் பற்றிய கதை. கம்பெனியின் முதலாளியைவிட அதில் பணிபுரிந்து தொழிற்சங்கத்தலைவனாகிய கே.ஆர்.கே அதிக ஈடுபாட்டோடு உழைத்தவர். கம்பெனியும் தன் சக தொழிலாளர்களும் தவிர வேறு சிந்தனையே இல்லாதவர். ஒரு கட்டத்தில் கம்பெனியின் பொருளாதாரம் சோர்ந்துபோகிறது. இவர்களின் தயாரிப்புகளுக்கு வாடிக்கையாளர்கள் குறையத் தொடங்குகிறார்கள். எனவே முதலாளிகள் தொழிலைக் கொஞ்சகாலத்துக்கு மூடிவிடக்கூடும் என்ற அச்சம் கே.ஆர்.கே.விற்கு உண்டாகிறது.  அதைச் செயல்படுத்தும் விதமாக முதலாளிகளின் துணையுடன் (முன்பு கே.ஆர்.கே. தலைமையில் துவங்கப்பட்ட)   சங்கத்தைப் பிளக்க முற்படுகிறார்கள். வயதாகி, தலைமைப் பதவியில் இருந்து விலகி நிற்கும் அவருக்கு இது பெருத்த வேதனையைக் கொடுக்கிறது. தற்போதைய தன் தோழர் ஒருவருடன் மனம் திறந்து பேசுகிறார்.

“உனக்குத் தெரியுமா எனக்கு இது ஒரு தொழில் அல்ல. இவ்வளவு காலப் பொதுத் தொண்டுக்குப் பிறகும், நான் இப்போதும் ஒரு வாடகைக் கட்டிடத்தில்தான் இருக்கிறேன். பலரின் விஷயங்களும் அப்படி இல்லையே! பலருக்கும் பல லாபங்கள் இருக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக இடையில் அவ்வப்போது சர்வதேச மாநாடுகளில் பிரதிநிதியாகக் கலந்துகொள்வது...ஜெனிவாவிலோ, வியன்னாவிலோ, டோக்கியோவிலோ அது நடக்கலாம். அத்துடன் நீண்ட ஒரு கிழக்கு ஐரோப்பிய பயணம். பிள்ளைகளுக்கு வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் நுழைய வாய்ப்பு உண்டாக்குதல்...குறைந்த பட்சம் ஒரு ஐந்தெட்டு முறைகளாவது உலகத்தைச் சுற்றிப்பார்க்காத ஏதாவதொரு பெரிய தொழிலாளர்களின் தலைவரை உன்னால் சுட்டிக் காட்ட முடியுமா? இந்த விஷயத்தில் எல்லா கட்சிகளும் ஒரே மாதிரிதான்  இருக்கின்றன. நான் பார்த்த மிகப்பெரிய வெளியூர் நகரம் எது என்று உனக்குத் தெரியுமா?  கல்கத்தா. அதுகூட கட்சியின் மாநாட்டிற்காகப் போனபோது நான் பார்த்ததுதான். அங்கிருந்து நான் வாங்கிக் கொண்டு வந்த பொருட்கள் – இரண்டு கதர் குர்தாக்கள், ஒரு ஜோடி செருப்பு ...பிறகு..என் தாய்க்கு ஒரு கம்பளிப் போர்வை”.

ஒரு வங்கியின் தலைமைப் பொறுப்பில் இருந்துகொண்டு தொழிற்சங்கவாதிகளை விமர்சிக்கும்படியான ஒரு எழுத்தை மேற்கொள்ளுவது அரிதான காரியம் அல்லவா? சேதுவுக்கு அது இயல்பாகவே கைவருகிறது.
 
‘ஒற்றையடிப்பாதைகள்’ என்பது சுமார் எண்பது பக்கமுள்ள கதை. வெகு நுட்பமான பாலியல் உணர்வுகளை நாசூக்காகக் கையாண்டிருக்கிறார் சேது. தி. ஜானகிராமன் தனது ‘அம்மா வந்தாள்’-இல் கையாண்டிருந்த எழுத்துத் தொழில்நுட்பத்தில் ஐம்பது சதம் இதில் தெரிகிறது. படித்துப் பார்க்கவேண்டிய கதை.

மொழிபெயர்ப்பாளர் சுரா நமது பாராட்டுக்குரியவர். (ஆனால் ஒரு பணிவான வேண்டுகோள்: அரசாங்கத் துறைகளில் புழங்கும் சில  சொற்றொடர்கள்  விளங்காதபோது அத்துறைகளில் பணிபுரிபவர்களிடம் சரியான அர்த்தத்தைக் கேட்டுத் தெரிந்துகொண்டு மொழிபெயர்ப்பது அவசியம்.)     

 நா.பார்த்தசாரதியின் 'பொன்விலங்கு'
இந்த வாரம் நான் மறுவாசிப்பு செய்த இன்னொரு காவியம், நா.பார்த்தசாரதியின் பொன்விலங்கு. ஒரு  காலத்தில் கல்கியில் தொடராக வந்தபோது கட்டம்கட்டி அருகில் ஒரு பொன்மொழியைப் போடுவார்களே, அதைத் தவறாமல் நோட்டுப்புத்தகத்தில் எழுதிவந்து (பள்ளியில்) அசெம்பிளியில் படிப்பதுண்டு. ஒவ்வொரு எழுத்தும் அட்சரலட்சம் பெரும் என்பார்களே அப்படிப்பட்ட எழுத்து.
 
அப்படியும் இப்படியுமா இரண்டு கோட்டை இழுத்து பொம்மை போடறவனுக்கு இவ்வளவு சம்பளமான்னு கேட்டாராம் பத்திரிக்கை முதலாளி. அதுதான் சமயமென்று பக்கத்திலிருந்து ஒருவன் ‘இத்தனை சம்பளம் போதாதுன்னு திமிர் பிடிச்ச ஆளாகவும் வேறு வந்து சேர்ந்திருக்கிறான்’ என்று சொன்னானாம். அதனால் கோபித்துக்கொண்டு வெளியேறிவிடுகிறான் ஓவியன்  குமரப்பன்.

“ஒரு தொழிலை நாம் செய்கிறபோது அந்தத் தொழிலைப் பற்றி முதலில் நமக்கு ஒரு சுயமரியாதை வேணும். இல்லாவிட்டால் அதை நாம் நாணயத்தோடு செய்யமுடியாது. அந்தச் சுயகௌரவத்தைகூடப் புரிந்து கொள்ளாத இடத்திலிருந்து குப்பை கொட்டுவதைவிட நடந்துகாட்டிவிடுவது மேல் என்று நடையைக் கட்டிவிட்டேன்...” என்கிறான் குமரப்பன்.

“நம்முடைய உணர்ச்சிகளின் நியாயத்தையும் மானத்தையும் புறக்கணித்துவிட்டு நம்மை அடக்கி ஓடுக்கி ஆளவிரும்புகிறவர்களுடைய உணர்ச்சிகளின் அநியாயத்துக்கும் அவமானத்துக்கும் பண்டமாகிறபோதெல்லாம் நாம் நிச்சயமாகத் தளைப்படுகிறோம் என்பதில் சந்தேகமே இல்லை. தளையிலிருந்து விடுபட்டு வந்துவிட்டதாகத்தான் உணர்கிறேன்...” என்று மேலும் விளக்குகிறான்.
 
எடுத்தால் முடிக்காமல் விட முடியாத நூல்களுள் ஒன்று, பொன்விலங்கு.

சினிமா & தொலைக்காட்சி
நான்கு வருடங்களுக்குப் பிறகு இந்த வாரம்தான்  மங்களூருக்குப் போகவேண்டிய தேவை ஏற்பட்டது. இந்த நாலு வருடங்களில் ஊர் நன்கு முன்னேறியிருந்தது – விலைவாசியில்! (ஆனால் கொட்டையுள்ள கருப்பு திராட்சை கிலோ முப்பதே ரூபாய்க்குக் கிடைத்தது.)

சனிக்கிழமை மாலையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை பகல் வரை  ஓட்டல் அறையில் தனியாக அமர்ந்து (படுத்துக்கொண்டு?) தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருக்க முடிந்தது. மலையாள ஒளிபரப்பான ‘கைரளி’ தொலைக்காட்சியில் ஓர் அழகிய முகம் தெரிந்தது. பத்மப்ரியா என்ற நடிகையின் பேட்டியாம். ‘பொக்கிஷம்’ என்ற தமிழ்ப் படத்தில்கூட  நடித்திருக்கிறாராம். தாய்மொழி மலையாளம். ஆனால் பிறந்தது பஞ்சாபில். அருமையான மலையாளத்தில் கிளிகொஞ்சும் வார்த்தைகள்.
 
நிறைய மலையாளப்படங்களில் நடித்திருந்தும் பத்மப்ரியாவுக்கு ஒரு பெரிய மனக்குறை இருக்கிறதாம். தன்னை ரொமான்ட்டிக் பாத்திரங்களில் நடிக்க வைப்பதில்லையாம். ரொமான்ட்டிக் படங்களில் நடிக்கக் கூப்பிடுவதில்லையாம். இப்படிப்பட்ட அழகான, அறிவுள்ள, இளமை ததும்பும் கதாநாயகியை இப்படிக் கொடுமைப்படுத்தாலாமா, மலையாள இயக்குனர்களே? 

 பாருங்கள், பத்மப்ரியாவின் சில முகபாவங்களை! சீக்கிரம் ஆவன செய்யுங்கள். (இல்லையேல் தமிழ்நாட்டில் ஆட்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதை மறக்கவேண்டாம்! இங்கு மலையாளப் பெண்குட்டிகளுக்கு ராஜபோகமான வரவேற்பு தரப்படுவதை யார் மறுக்க முடியும்?)
பத்திரிகை
மங்களூரில் இருந்தபோது மாறுதலுக்காக ஒரு கன்னட மாத இதழ் வாங்கினேன். 2013 டிசம்பர்  மாதத்திய ‘மயூரா’ என்ற இலக்கிய இதழ். தரத்தில் ‘கலைமகளு’க்கு ஒப்பிடலாம். 160 பக்கங்கள், விலை பன்னிரண்டே ரூபாய்!



பிரபல மலையாள நாவலாசிரியரான வைக்கம் முகமது பஷீரின் வாழ்க்கை வரலாற்றை அவரது மனைவி ஒரு கதை மாதிரி எழுதியிருக்கிறார். பஷீருடைய ‘இவளே’ என்ற தலைப்பில், மலையாளத்தில். என்.எ.எம். இஸ்மாயில் என்பவரால் அந்நூலின் சில பகுதிகள் கன்னடத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, அதன் முதல் பகுதி இம்மாதம் வெளியாகியுள்ளது. ஜனரஞ்சகமான மொழிபெயர்ப்பு. கன்னடத்தில் படிக்கும்போதே சுவை நெஞ்சைத்தொட்டது. ஒரிஜினல் மலையாளத்தில் படித்தால் எப்படியிருக்குமோ? ('காலச்சுவடு'க்காரர்கள் தமிழில் கொண்டுவராமலா போவார்கள்?)  
பஷீரின் மனைவி எழுதுகிறார்: (கன்னடத்திலிருந்து தமிழ் மொழிபெயர்ப்பு என்னுடையது).
 
பெண்வாசனை என்றால் பஷீருக்கு மிகவும் பிடிக்கும். பெண்ணாகப் பிறந்த எல்லோர்மீதும்  அவர் அளவின்றிப் பிரியம்கொண்டிருந்தார். ஆனால் அதற்கு  வேறெந்த நோக்கமும்  இருக்கவில்லை. பெண்ணிடம்தான் நல்லகுணங்கள் அதிகம் உண்டு என்று அவர் ஏனோ கருதினார். ஒருதடவை நான் அவரிடம் சொன்னேன்: “நான் எதோ ஒன்று எழுதப்போகிறேன்”.
“என்னது? உனக்கு எழுத வருமா?”

அவர் அப்படிக் கேட்டதில் அர்த்தம் உண்டு. எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் எல்லாருக்குமே இலக்கியம் படைப்பது சாத்தியமாகிவிடுவதில்லை. இதுபற்றி அவரே பலமுறை கூறியிருக்கிறார்.
“என் கணவர் பெரிய இலக்கியவாதி. அவரைப்பற்றி நான் எழுதப்போகிறேன்.  ஏன், நான் எழுதக்கூடாதா?”
“இவளே” என்று சத்தமிட்டுச் சிரித்தபடி சொன்னார் பஷீர்: “நீ எழுதப்போவது இலக்கியமல்ல, அது ஒரு சுலைமானி! (‘சுலைமானி’ என்றால் பால் கலக்காத தேநீர்.) ஃபிளாஸ்க் நிறைய உன்னுடைய சுலைமானி இலக்கியத்தை நிரப்பிக்கொண்டுவந்து  தா! அவ்வப்பொழுது நான் குடித்து இளைப்பாறுகிறேன்”.
***
பஷீருடன் நாற்பது ஆண்டுகள் வாழ்ந்துவிட்டேன். இது சாதாரணமான வாழ்க்கையில்லை. மலையாளத்தின் மாபெரும் எழுத்தாளரின் வாழ்க்கைத்துணைவி நான் என்று உள்ளுக்குள் கர்வம்  கொண்டதும் உண்டு. ஆனால் இத்தகைய கர்வங்களுக்கு அவரது வாழ்க்கையில் வாய்ப்பே  இருக்கவில்லை. ‘நான், நம்மவர்கள்’ என்று அவர் ஒருபோதும் எண்ணியவரே அல்லர். புகழ்பெறவேண்டும் என்ற ஆசையில் அவர் எதுவும் செய்ததில்லை. யாரையும் அழைக்கவுமில்லை. ஆனால் அவர் செய்யும் எல்லாக் காரியங்களும் புகழ்பெறவே செய்தன. அவருடைய எழுத்துக்களை வாசித்த ஒவ்வொருவரும் அவ்வெழுத்தாளரைப் பேட்டி காணவேண்டுமென்று விரும்பினர். இவ்வாறு வாசகர்கள் கூட்டம் கூட்டமாகப் பேட்டி காணவருவது வேறெந்த எழுத்தாளருக்காவது நடந்திருக்கக்கூடுமா? வைலோலி கிராமத்தில் எப்பொழுது வேண்டுமானாலும் தங்கள் பிரியமான படைப்பாளியை வாசகர்கள் சந்திக்க முடிந்ததே! பஷீர் யாரையும் எப்போதும் காக்கவைத்தவர் இல்லை.
 
மங்குஸ்தான் மரநிழலில் அமர்ந்துகொண்டு தம்மைப் பார்க்கவந்து போவோரின் வயதையோ பின்னணியையோ கவனிக்காது  தன்பாட்டுக்குப் பேசிக்கொண்டிருப்பார் பஷீர். அவரோடு பேசிக் கொண்டிருந்தவற்றை யெல்லாம் தொகுத்திருந்தால் அதுவே ஒரு பெரிய புத்தகமாகியிருக்குமோ என்னவோ! அவர் என்னவெல்லாம் பேசிக்கொண்டிருப்பார் – கடவுள், மரம், மனிதர்கள், காதல், அரசியல், கலை, அறம், சின்னச்சின்ன ஆற்றாமைகள் என்றபடி உலகின் எல்லா விஷயங்களைப் பற்றியும் தன்னைச் சந்திக்க வந்தவர்களுடன்  பேசிக்கொண்டிருப்பார். அவர் அப்படி மங்குஸ்தான் மரத்தடியில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கையில்  அங்குதானே நடமாடிக்கொண்டிருப்பேன் நான்! அப்போதெல்லாம் என் மனதில் மூண்டெழுந்த கேள்வி ஒன்றே தான்: இவ்வுலகில்  இதற்கு முன் இப்படிப்பட்ட ஒருவர்  இருந்திருக்கக்கூடுமா? ஒரு மரத்தின் வேரில் அமர்ந்துகொண்டு, வந்தவர்களுக்கெல்லாம் ‘சுலைமானி’யை ஊற்றிக்கொடுத்தபடி, கதைகளை எழுதிக்கொண்டிருந்ததும், பல வருடங்களாக அதே மரத்தடியில் அமர்ந்து கதை சொல்லிக்கொண்டிருந்ததும் அந்த ஒருவரே! இடையிடையே என்னை அழைப்பார் “இவளே!’ என்று.
ஒரு பானை சோற்றுக்கு ஒருசோறு பதம். போதுமல்லவா?

சிரிப்பு
‘பஜனைக்கு பக்தர்கள் முக்கியம். அதைவிட சுண்டல் முக்கியம்’ என்ற ஒரு கருத்து பரவலாக பழங்காலத்தில் இருந்து வந்தது. ஆனால், தற்சமயம் பெரிய பெரிய மண்டபங்களில், ஹால்களில், அரங்குகளில், பஜனை நடப்பதால் யாரும் சுண்டலுக்கு முக்கியத்துவம் தருவதில்லை..
 
நமது முன்னோர் பழக்கவழக்கம் என்னவென்றால் எந்த ஒரு பகவத் ஆராதனை என்றாலும் முடிவில் பிரசாதம் என்று சிறிதளவாவது வழங்கவேண்டும். தற்காலத்தில் அவரவர் வசதிக்கும் ருசிக்கும் தக்கபடி பஜனை அரங்கத்தில் இருக்கும் கேண்டீனில் புகுந்து புறப்பட்டுக்கொள்கிறார்கள்.

பஜனைப் பாடகர்கள் பக்தி சிரத்தையாகப் பாடினாலும், கேட்டு ரசிக்கும் பக்தர்களுக்கு அவர்களது பக்தியைக் குறைப்பது போல தொண்டையில் வெண்பொங்கல் நெய்ருசியும் ஓம்காரத்துக்குப் பதில் மிளகுக்காரமுமே சஞ்சரித்துக் கொண்டிருக்கும்....

“சீதாப்பாட்டி-அப்புசாமி புகழ் பாக்கியம் ராமசாமியின் சிரிப்பும் சிந்தனையும்” என்ற நூலிலிருந்து. (பக்கம் 22) வானதி பதிப்பகம் வெளியீடு. நவம்பர் 2012.    88 பக்கம் ஐம்பது ரூபாய்.

© Y.Chellappa
Email: chellappay@yahoo.com

குறிப்பு : இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், கீழுள்ள 'தமிழ்மணம்' பட்டையில் இடதுபுறமுள்ள 'மேல்நோக்கிய' கட்டைவிரல் அடையாளத்தின் மீது ஒரு கிளிக் செய்யுங்கள்.நன்றி.

திங்கள், டிசம்பர் 02, 2013

நடிகர் சிவகுமார்- தமிழ்த் திரையுலகின் அதிசயம் ( ‘அபுசி-தொபசி’- 13)

(“அபுசி-தொபசி” என்ற இப்பகுதி வாரம் ஒருமுறை மட்டும் ஒவ்வொரு திங்கட்கிழமையும் இந்திய நேரம் காலை ஆறுமணிக்கு மேல் ஏழரை மணிக்குள்ளாகவோ அல்லது அதற்கும் முன்பாகவோ வெளியாகும்.)
அரசியல் 

அரசியல் அநீதிகளைத் தட்டிகேட்கும் தைரியம் இல்லாதிருந்த பத்திரிகைகளுக்கு நடுவே எரி நட்சத்திரம் மாதிரிக் கிளம்பி வந்தது, ‘தெஹெல்கா’ .கூடவே சமுதாய பிரச்சினைகளையும் மேலெடுத்துப் போராடிய பெருமையும் அதற்கு உண்டு. அமெரிக்கா போன்ற மேலைநாடுகளில் தெஹெல்காவுக்குத் தனியான வாசகர் வட்டமே உண்டு. இதெல்லாம் ஒருவாரம் முன்புவரை.


(பழைய இதழ் மேலட்டை. இப்போதைய நிகழ்ச்சிக்கு சம்பந்தமில்லை)
தன்கீழ்ப் பணியாற்றும் பெண்செய்தியாளரைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக தருண் தேஜ்பால் சனிக்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டிருக்கிறார். கைது ஆவதை எப்படியாவது தவிர்ப்பதற்காக அவர் ஆடிய ஆட்டமும், மத்திய ஆளும்கட்சி அவர்சார்பாகச் செய்ததாகச் சொல்லப்படும் முயற்சிகளும் முன்னுக்குப் பின் முரணான அவரது அறிக்கைகளும் இவ்வளவு காலம் தெஹெல்கா சேர்த்துவைத்திருந்த புகழை அடியோடு அழித்துவிட்டன என்றால் மிகையாகாது. வழக்கின் முடிவு எப்படியிருந்தாலும், இனி தெஹெல்காவின் ஆயுள் அவ்வளவுதான் என்று தோன்றுகிறது. 


ஒரு கற்பனை: இதேபோன்ற நிகழ்ச்சி வேறொரு பத்திரிகையில் நடைபெற்றிருந்தால், தெஹெல்கா எப்படியெல்லாம் குதித்துக்கொண்டு செய்தி வெளியிட்டிருக்கும்! இந்த ஒரு நிகழ்வை வைத்துக்கொண்டே நாற்பது வாரங்கள் இதழை ஓட்டியிருப்பார்கள், மற்றும், நாலுமுறை தேஜ்பாலின் அமெரிக்கப் பயணமும் நடந்திருக்குமே!

அருமையான துப்பறியும் இதழாக விளங்கிக்கொண்டிருந்த தேஹெல்காவின் வீழ்ச்சிக்கு அதனுடைய அண்மைக்கால  காங்கிரஸ்சார்பும் அதன் காரணமாகக் கிடைத்த அசட்டுத்துணிச்சலும் முக்கியக் காரணங்களாக இருக்கக்கூடும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். (எதற்கென்று தெரியாமலே தெஹெல்காவுக்கு ஐந்துலட்சம் கொடுத்தாராமே கபில் சிபில்!)

புத்தகம்

நீர்க்கோல வாழ்வை நச்சி (கவிதைகள்) – லாவண்யா சுந்தரராஜன்
(வெளியீடு: அகநாழிகை,மதுராந்தகம்/சென்னை. 64 பக்கம் ரூபாய் 40. இணையத்தில் வாங்க: www.aganazhigaibookstore.com)

லாவண்யா என்ற இளம்கவிஞரின் முதல் கவிதைத் தொகுப்பு. ‘முதல்’ என்று போட்டதால் தான் இது முதல் படைப்பு என்று தெரியும். இல்லையெனில் ஒரு தேர்ந்த கவிஞரின் படைப்பு என்று மிக எளிதாகக் கொள்ளப்பட்டுவிடும். அவ்வளவு ஆழமான கவிதைகள். கவிஞர் கலாப்ரியாவின் முன்னுரை இந்த நூலை மிகவும் உயரத்திற்குக் கொண்டுபோவதில் வியப்பில்லை. மாதிரிக்குச் சில வரிகள்:

உனக்காக காத்திருக்கையில்
கடந்துபோகும் எத்தனை கேள்விகளுக்கு
போலியாகப் புன்னகைப்பது? (ப.35)
**
எல்லாம் இருந்தும்
நகர்ந்து கொண்டு இருந்தது
யாருமற்ற நதி. (ப.37)
**
எதைக் கொண்டும்
நிரப்ப முடிவதில்லை
யாரோவாகிப்போன
நீ தந்த
நிராகரிப்பின் ரணத்தை. (ப. 41)
**
எப்போதும் நேர்த்தியாகவே
இருக்கின்றன
நமதற்ற வரவேற்பறைகள். (ப.50)
**
உனது குடை விரிப்புகளில்
சட்டென அடங்கியது
எனக்கான வான். (ப.56)
**
வாசல் தாண்டி
உள் வருவதில்லை
அழகிய கோலங்கள் கூட. (ப.60)
 
வெகுவிரைவில் மிகச்சிறப்பான கவிஞராக மலரப்போகிறவர், லாவண்யா சுந்தரராஜன். வாங்கிப் படியுங்கள்!

சினிமா

ஒரு சினிமா நடிகரின் புத்தகம் இந்த வாரம்.
என் செல்லக் குழந்தைகளுக்கு – (சொற்பொழிவு)- நடிகர் சிவகுமார்
(வெளியீடு: அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை-4. 120 பக்கம் ரூபாய் 65)

நடிகர் சிவகுமாருக்கு ஒருமுறை பணமுடை ஏற்படவே, (எம்ஜிஆரை வைத்துப் படங்கள் தயாரித்துக் கொண்டிருந்த) சாண்டோ சின்னப்பதேவரிடம் கடன் பெற்றாராம். சிறிது காலம் ஆனபிறகு அதைத் திருப்பிக் கொடுக்கப் போனபோது தேவருக்கு ஆச்சரியம். எம்ஜிஆர் உள்பட யாருமே அவரிடம் வாங்கிய கடனைப் பணமாகத் திருப்பித் தந்ததில்லை. படத்தில் நடித்துத்தான் கடனைக் கழித்திருக்கிறார்கள். எனவே சிவகுமாரிடம் ‘பணம் வேண்டாம், நடித்துக் கழித்துவிடலாமே’ என்றாராம். ஆனால் சிவகுமார் நடிக்கும்படியான படங்களை அப்போது தேவர் எடுக்கும் சந்தர்ப்பம் அமையுமா என்று தெரியவில்லை. எனவே சிவகுமார், ‘மன்னிக்கவேண்டும், கடனை முதலில் கழித்துவிடுங்களேன்” என்று உறுதியாக நின்று பணத்தைக் கொடுத்துவிட்டுத்தான் போனாராம். திரை உலகில் இது அதிசயமான நிகழ்ச்சி என்றார்கள். சுய ஒழுக்கத்திற்கு முன்னுதாரணமாகத்திகழும் நடிகர் என்றால் தமிழில் நினைவுக்கு வரும் முதல் நடிகர் சிவகுமாரே.

நூறு பூக்களின் பெயர்களை ஒரு தசாவதானியின் நினைவாற்றலோடு சிவகுமார் ஒப்புவிக்கும் சொற்பொழிவை நீங்கள் விஜய் தொலைக்காட்சியில் பார்த்திருக்கலாம். அந்தச் சொற்பொழிவு தான் இந்தப் புத்தகமாக வெளிவந்திருக்கிறது. எளிதில் படிக்கத்தக்க பெரிய எழுத்துருவில், வரிக்கொரு பத்தியாக, மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுவனும் புரிந்துகொள்ளும்விதமாகப் பதிப்பித்திருக்கிறார்கள். எழுபத்தைந்து ரூபாய் கொடுத்து ‘டின்க்கிள்’ வாங்கிக்கொடுக்கும் பெரியோர்கள், அதிலும் பத்து ரூபாய் குறைவில் இந்தப் புத்தகத்தை வாங்கிக்கொடுத்தால் நிச்சயம் சிறுவர்களின் தமிழ் அறிவு மேன்மையடையும். உருக்கமானதொரு எடுத்துக்காட்டு:

எங்க நடிப்பு ஜாதியைச் சேர்ந்த ஒரு அம்மா. தன் பையனை கொண்டுபோய் ஏற்காடுல போட்டாங்க! (போர்டிங் பள்ளியில்)
3..4.. வயசுலேயே போட்டுட்டாங்க. அந்தப் பையனுக்கு அம்மா ஏக்கம். அம்மா...அம்மா...ன்னு சொல்லி அழுதுகிட்டே இருப்பான்.. ஏக்கம் குறையவே இல்ல! ‘ஹோம்சிக் வேற...இந்த அம்மா ஏக்கம் வேற. அப்படியே இருந்தான்...படிக்கவே முடியல..

ஒவ்வொரு வகுப்பா தூக்கி தூக்கி போட்டாங்க! தூக்கி போட்டு...+2 பாஸ் பண்ணல..! அங்கிருந்து துரத்திவிட்டாங்க! வீட்டுக்கு வந்தான். அம்மா கதறிக் கதறி அழுதா..!

பையன் சொன்னான்..அம்மா..நீ அழுவாதே! உன் அழுகையைப் பாத்து எனக்கு அழுகை வரல..!

சின்ன வயசில உன்னைக் கட்டி பிடிச்சிட்டு ...ராத்திரி தூங்கனும்னு ஆசைப்பட்டேன். காலைல எழுந்தவுடனே.. நீ என்னை குளிப்பாட்டி விடுவேன்னு ஆசைப்பட்டேன்!

தலை சீவி விட்டு..சோறு ஊட்டி விடுவேன்னு ஆசைப்பட்டேன்!

பள்ளிக்கூடத்துல கொண்டுபோய் விடுவேன்னு ஆசைப்பட்டேன்!

சாயங்காலம் ..வீட்டுக்கு கூட்டிட்டு வந்து ..பீச்சுக்கு கூட்டிட்டு போவ..ஐஸ்கிரீம் வாங்கித் தருவேன்னு ஆசைப்பட்டேன்!

லீவு நாள்ல மகாபலிபுரம் போகலாம்னு ஆசைப்பட்டேன்!

ஒருநாள் உன் மடில உட்கார்ந்து சினிமா பார்க்கணும்னு ஆசைப்பட்டேன்!

எதுவுமே நீ செய்யலியே! இப்ப நீ அழுகிறத பார்த்து எனக்கு எப்படி அழுகை வரும்?

ஆடு..மாட அடைக்கிற மாதிரி..போர்டிங்கில கொண்டுபோய் அடைச்சுப்புட்ட.. 14  வருஷம் எங்கயோ இருந்துட்டுதான் வந்தேன்!.. எனக்கு அம்மா பாசம் எங்கேயிருந்து வரும்..??” –அப்படின்னு சொன்னான்!  (பக்கம் 85-86-87)

தொலைக்காட்சி
‘புதுயுகம்’ சேனலில் டிசம்பர் 1 ஞாயிற்றுக்கிழமை பகல் பன்னிரண்டு மணிக்கு ‘வினா-விடை வேட்டை’ என்ற நிகழ்ச்சியைப் பார்க்க நேர்ந்தது. நான்கு அணிகளுக்கிடையில் போட்டி. பொது அறிவுக் கேள்விகள் தான். வாய்மொழிக் கேள்வி, ஆடியோ-விடியோ கேள்விகள் எனப் பலதரப்பட்ட கேள்விகள். மாணவர்கள் நிச்சயம் பார்க்கவேண்டும்.
 


வேற்று மொழிக்காரர்களான குஷ்புவையும் சிம்ரனையும் அழைத்துத் தமிழ்ப் பயிருக்கு நீரூற்றும் வேலையைச் செய்tதுவரும்  தொலைக்காட்சிகளுக்கு நடுவே, தமிழ்நாட்டில் பிறந்து தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட ஒரு பெண் இந்த நிகழ்ச்சியை நடத்த நியமிக்கப்பட்டிருக்கிறார் என்றால் அதுவே ஆச்சரியம் தானே! 
நடிகை கஸ்தூரி இவ்வளவு அழகாகத் தமிழ் பேசுபவரா!
 (இப்பவும்கூட இவ்வளவு அழகாக இருக்கிறாளே – என்று வீட்டில் சொன்னார்கள். ஆமாம் என்று சொல்ல வந்ததை அடக்கிக்கொண்டேன். பின்விளைவுகளைத் தாங்கும் சக்தி குறைந்துகொண்டே வருகிறதல்லவா?)

பத்திரிகை

அந்நிய சக்திகள், பன்னாட்டு நிறுவனங்களின் போர்வையில் இந்தியாவில் அரசியல் சூத்திரதாரிகளாக விளங்கமுற்படுவது புதிய விஷயமல்ல. ஆனால் கோல்ட்மேன் சாக்ஸ் என்ற நிதித்துறை நிறுவனம் அத்தகைய செயலில் இறங்கியிருப்பது ஆட்சேபகரமானது என்கிறது ‘அவுட்லுக்’ வார இதழ்.   (25-11-2013 பக்கம்: 38-39)

டாலருக்கெதிரான ரூபாய் மதிப்பு கடந்த சில மாதங்களில் வீழ்ச்சி அடைந்தவுடன், இந்தியாவின் நம்பகத்தரத்தைக் (Credit Rating)  குறைத்து அறிவித்த நிறுவனம் கோல்ட்மேன் சாக்ஸ். இப்போது நாடு முழுதும் நரேந்திர மோடி பிரதமராக வரக்கூடும்போன்ற தோற்றம் இருப்பதைப் பயன்படுத்திக்கொண்டு, ‘மோடி பிரதமரானால் இந்தியாவின் நம்பகத்தரம் உயரும்’ என்று அறிக்கை விடுகிறது அந்த நிறுவனம்! “மே  2014இல் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் பாரதீய ஜனதா ஆட்சி, மோடியின் தலைமையில் பதவியேற்கும் என்றும்,  மோடியை மாற்றங்களைக் கொண்டுவரும் காரணியாக முதலீட்டாளர்கள் கருதுகிறார்கள்” என்றும் அது தெரிவித்திருக்கிறது.

இது நியாயமா என்கிறது அவுட்லுக். 2004  தேர்தலின்போது ‘இந்தியா ஒளிர்கிறது’ என்று பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுத்து, வெற்றி பெறுவதுபோல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியிருந்த  பாரதீய ஜனதா கூட்டணியை ஆதரித்து அப்போது ஒன்றும் சொல்லாத இந்நிறுவனம்,   2009 இல் காங்கிரஸ் கூட்டணி ஜெயிக்கக்கூடும் என்று ஒருவார்த்தை சொல்லாத நிலையில், இப்போதுமட்டும் மோடிக்கு ஆதரவாகச் சந்தையில் நேர்மறைக் கருத்தை உருவாக்க வந்திருப்பதின் அரசியல் பின்னணி என்ன என்கிறார், கட்டுரை ஆசிரியர் லோலா நாயர்.

சிரிப்பு

எந்த வயதில் தான் காதலிப்பது? பாக்கியராஜின் பதில். (நவம்பர் 29-டிசம்பர் 5   பாக்யா’ வார இதழில் பக்கம் 14-15.)
15 வயதுக்கு உட்பட்டவர்னா: “முளைச்சு மூணு இல விடல, அதுக்குள்ளே உனக்கு லவ் கேக்குதோ?”

16-20 வயதுன்னா: “படிக்கிற வயசுல கழுதைக்கு லவ் கேக்குதோ?”

21-28 வயது என்றால்: “வேல வெட்டி இல்லாத துடப்பக்கட்டை! நீயே தண்டம். உனக்கு ஒரு தண்டமா?”

36-45 வயதுன்னா: “பிள்ளை குட்டிகள் லவ் பண்ற வயசுல உனக்கெல்லாம் காதலா?”

46-60 வயதுன்னா: “பேரன் பேத்திய காண்ற வயசுல கிழடுக்கு காதல் கேக்குது”

60க்கு மேல்: “காடு வாவாங்குது, வீடு போபோங்குது, இந்த வயசுல காதலா?”

(அது சரி, 28-35 வயதைப் பற்றி ஏன் கூறவில்லை? அது தான் காதலிக்கச் சரியான தருணமா? அல்லது, அப்போது தான் அவர் பூர்ணிமாவைக் காதலித்தாரா? உங்கள் அனுபவம் என்ன? –சொல்லக்கூடியதானால் மட்டுமே!)
© Y.Chellappa
Email: chellappay@yahoo.com
குறிப்பு : இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், கீழுள்ள  'தமிழ்மணம்' பட்டையில் இடதுபுறமுள்ள 'மேல்நோக்கிய' கட்டைவிரல் அடையாளத்தின் மீது  ஒரு கிளிக் செய்யுங்கள்.நன்றி.