செவ்வாய், மே 31, 2022

மறுவாசிப்பில் கண்ணதாசனின் ‘வனவாசம்’

 மறுவாசிப்பில் கண்ணதாசனின் ‘வனவாசம்’

(இன்று கிழமை செவ்வாய்-8)

அமெரிக்காவில் 50ஆவது நாள்

(மணித்திருநாடு)

தமிழ் இலக்கிய உலகில் தவிர்க்க முடியாத ஆளுமையான கண்ணதாசனின் ஆரம்ப கால அரசியல் வாழ்க்கையின் வரலாறுதான் “வனவாசம்.” 


என் கல்லூரிப் பருவத்தில்தான்  முதன்முதலாக வனவாசத்தைப் படித்தேன்.  கடந்த 40 ஆண்டுகளில் பல சென்னை புத்தகக் கண்காட்சிகளில் மீண்டும் மீண்டும் இந்தப் புத்தகத்தை வாங்கி இருக்கிறேன்.  மீண்டும் மீண்டும் படித்து இருக்கிறேன். (என்னிடமிருந்து யாராவது ‘சுட்டு’க்கொண்டு போய்விடுவார்கள்!) இப்போது நியூஜெர்சியில் கிடைத்த ஓய்வு நேரத்தில் மறுபடியும் படிக்க எடுத்திருக்கிறேன்.


“காந்தியடிகளின் சுயசரிதை படித்த பின்பு இதனை எழுதியதால் உண்மையை நிர்வாணமாகக் கூறுவதில் அதிக ஆசை எழுந்தது” என்ற முன்னுரையோடு இந்த நூல் ஆரம்பிக்கிறது. 


“நான் நிரந்தரமானவன் அழிவதில்லை - எந்த நிலையிலும்- எனக்கு மரணமில்லை”  என்று தன் கவிப்பெருமையை எழுதிய கண்ணதாசன், வாழத்தெரியாமல் வாழ்ந்துவிட்டதாகக் கழிவிரக்கம் கொண்டு வனவாசத்தில் இப்படி எழுதுகிறார்:


“ஒரு பெருமிதம் எனக்கு உண்டு என் தலைமுறையில் வாழும் எந்த மனிதனுக்கும் தலைவனுக்கும் கவிஞனுக்கும் இத்தகைய சுயசரிதம் அமையாது என்பதே   அது.  அப்படி ஒன்று அமைய வேண்டுமென்றால் யாரும் நீண்டகாலம் முட்டாளாக இருக்க வேண்டும்.  அது எல்லோருக்கும் கை வரக்கூடிய கலை அல்ல.”


சென்னை கடற்கரையில் அலைகளைப் பார்த்துக்கொண்டு சிந்தனையில் ஆழ்ந்த இளைஞன் கண்ணதாசனுக்கு இப்படித் தோன்றுகிறது:


“ஓர் அலை மூலம் மிகப் பெரிய நண்டு ஒன்று கரையில் வந்து விழுந்தது.  பயந்து அவன் எழுந்து நின்று விட்டான்.  நண்டு கரையிலேயே ஓடும் என்று எதிர்பார்த்தான்.  ஆனால் மீண்டும் கடலுக்குள்ளே ஓடிற்று.  கடல் அதை ஏற்றுக்கொண்டது.


அவனுக்கு நம்பிக்கை  தோன்றியது. சமுதாயம்,  நம்மை வெளியில்  தூக்கி எறிந்தாலும், நாம் மீண்டும் சமுதாயத்திற்குள்ளேயே ஓடித்தான் இடம் பிடிக்க வேண்டும்.  வெறுப்பினால் அல்ல  அலை நண்டை  வெளியே தள்ளியது. நண்டு சரியாக ஊன்றிக் கொள்ளாததாலே தான் வெளியில் வந்து விழுந்தது.  சமுதாயத்தில் ஒரு உயர்ந்த இடத்தில் காலூன்றி நின்று விடுவது என அவன் முடிவு கட்டிக் கொண்டான்.” 


இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்த வைரவரிகள் என்பேன். எப்படியென்றால், கண்ணதாசனைப் போலவே நானும் எதிர்காலம் பற்றிய கவலையில் மூழ்கியிருந்த காலம்  ஒன்று உண்டு. கல்லூரிப்படிப்பு எனக்குக்  கைகூடுமோ, கூடாதோ என்ற அவநம்பிக்கை நிலவிய நேரத்தில் இந்த வரிகள்தான் எனக்குக்  கலங்கரை விளக்கமாகத் தெரிந்தவை. பட்டப்  படிப்பு போதுமென்று சக நண்பர்கள் வேலைதேடிச் சென்றுவிட்ட நிலையில், நான் பட்ட மேற்படிப்பு படித்தே தீருவதென்று கடுமையான பொருளாதாரச் சூழலிலும் எதிர்நீச்சல் போட்டேன். வங்கியில் குமாஸ்தா வேலை கிடைத்தால் போதுமென்று ஆயிரம் பேர் காத்திருக்கையில், நான் ஆபீஸராகத் தான் சேருவேன் என்று சரியான வாய்ப்புக்காகப் பல மாதங்கள் காத்திருந்து வென்றேன்.  “உயர்ந்த இடத்தில் காலூன்றி நின்றுவிடுவது” என்பது ஒரு கவிஞனின் சாதாரண வார்த்தைகள் அல்ல. இலட்சக் கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு எம்பிஏ என்று பட்டம் தருகிறார்களே, அக்கல்வி நிலையங்கள் கற்றுத்தரும் தன்னம்பிக்கையின்  இலக்கு தான் இது!


*** 

“அப்போது அவனுக்கு ஓர் உண்மை புலனாயிற்று.  வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பதற்குத்  திறமை இருந்தால் மட்டும் போதாது.  சந்தர்ப்பம் அமைவது மிகவும் முக்கியம்….. சந்தர்ப்பம் என்றால் என்ன அது தானாக வருவதா, மனிதன் உண்டாக்கிக் கொள்வதா? … சில நேரங்களில் மனிதர்கள் தாமே உண்டாக்கி கொள்கின்ற சந்தர்ப்பங்களைப் பற்றி அவன் எண்ணிப் பார்த்தான். அந்த சந்தர்ப்பங்களை உண்டாக்குவதற்கு அவர்களுக்குத் துணிவு மட்டும்தான்  தேவையாக இருந்திருக்கிறது..


“இந்த உலகம் அத்தகையது. பயமும் பணிவும்  இங்கே பலனளிப்பதில்லை.  அன்பும் அறமும் இங்கே வாழ்வளிப்பதில்லை. பகட்டும்  படாடோபமும் தேவைப்படுகிறது.  தெரியாததை எல்லாம் தெரிந்தமாதிரி காட்டிக் கொள்பவனுக்கு மிகுந்த வரவேற்பு கிடைக்கிறது. அய்யோ அவனா அசகாயசூரன் ஆயிற்றே என்று பத்து பேரை பேச வைக்கிறது.  சிலர் அவனை மதிக்கத் தலைப்படுகிறார்கள்.  ஏதாவது ஓரிடம் அவனை இழுத்துப் போட்டுக் கொள்கிறது.” 


இதில் இரண்டு வழிமுறைகளைக் கண்ணதாசன் குறிப்பிடுகிறார்: (1)  சில சந்தர்ப்பங்கள் தாமாகவே நம்மைத் தேடிவரும்.  அப்போது நண்டு மாதிரி அவற்றைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும். (2)  சில சந்தர்ப்பங்களை  நாமே உண்டாக்கிக் கொள்ளவேண்டும்.  அதற்குத் துணிவு முக்கியம். என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை முக்கியம் .


நான் வங்கிப் பணியில் சேர்ந்த பிறகு இந்த இரண்டு வழிமுறைகளையும்  வேதமாகக் கருதிப் பின்பற்றினேன். ஊர் மாற்றங்களை ஆர்வத்தோடு ஏற்றுக்கொண்டேன். ஒரு பணிப்பிரிவில் இருந்து புதிய பணிப்பிரிவிற்கு மிகுந்த ஆர்வத்துடன்  மாறிக்கொண்டேன். புதிய அறிவுக்கூறுகளை இடைவிடாமல் கற்றுவந்தேன். அதனால் என் தொழிலில் எனக்கென ஓர் ஆளுமையை ஏற்படுத்திக்கொள்ள முடிந்தது. நன்றி, கவிஞரே நன்றி!


** 

“வளர வேண்டும் உயர வேண்டும் என்ற ஆசைகள்…. அவனது நெஞ்சில் மேலோங்கி நின்றன.  பயங்கரமான உலகத்தில்  பருந்துகளுக்கும் வல்லூறுகளுக்கும் நடுவே  இந்தக்  கிளி எப்படிப்  பறக்கப்  போகிறது என்ற அச்சமும் அவனுக்கு இருந்தது. தன்னம்பிக்கை, துணிச்சல், திடமான உள்ளம் இவற்றை வழங்கும்படி இறைவனை வேண்டினான்…” 


தன்னையே ‘அவன்’ என்று படர்க்கையில் எழுதுவது இந்நூலுக்கு தனிப்பட்ட சிறப்பைச் சேர்க்கிறது. ஒரு கவிஞனின் தேதியிடப்படாத வரலாறாக இருந்தபோதும், இது ஒரு வாழ்வியல் பாடநூலே ஆகும். புத்தகம் முழுவதும், தான் புரிந்த அல்லது பங்குகொண்ட தவறுகளை சற்றும் மிகையோ குறைவோ இல்லாமல் கண்ணதாசன் தெரிவிப்பதன் மூலம் வாசகனைத் தன்னோடு இணைத்துக்கொண்டு விடுகிறார். மனிதனுக்குத் தன்னம்பிக்கை வேண்டும் என்பதைப் பல இடங்களில் வலியுறுத்துகிறார். திடமான  உள்ளம் இருந்தாலே போதும், துணிச்சல் வந்துவிடும் என்று பல இடங்களில் எடுத்துக்காட்டுகிறார். 


*** 

சுவாரஸ்யமான ஒரு நாவலைப் போல் எழுதப்பட்ட ‘வனவாசம்’ ஒவ்வொரு தமிழனின் கையிலும் இருக்கவேண்டியது. ‘தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்’ என்ற வாசகத்தை இதை முதன்முதலாகப் படிப்பவர்கள் உடனே உணர்ந்துகொள்வர். நமது இளைஞர்களுக்குப் பரிந்துரைக்கவேண்டிய நூல் இது.


**** 

நமக்கு இதுவரை தெரியாத பல சமூக வழக்கங்களைப் பற்றி - உதாரணமாக,  நகரத்தார் சமூகத்தில் ‘சுவீகாரம்’ -அதாவது தத்தெடுப்பது- பற்றிய நடைமுறையை விவரமாக எழுதுகிறார் கண்ணதாசன். அதேபோல் சுவாரஸ்யமான அனுபவங்கள் நூல் முழுதும் அள்ளித் தெளிக்கப்பட்டிருக்கின்றன. 


தானும் கருணாநிதியும் தங்கியிருந்த அறையில்,  சாப்பிடும் தட்டருகே பாம்பு சுருண்டு படுத்திருந்ததை  இரவில் கண்டு அலறி நடுங்கியதையும், விறகுக் கட்டையால் அதை அடித்துக்  கொன்றுவிட்டு, இரவு  முழுதும் அதே அறையில் ஒரே கட்டிலில் இருவரும் படுத்துக்கொண்டதையும் கண்ணதாசன் வர்ணிப்பது திகிலின் உச்சம் எனலாம்.


தமிழக அரசியலின் கிட்டத்தட்ட முப்பதாண்டு வரலாறுதான் இந்த நூல். கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்டது. நூறு சுயமுன்னேற்ற நூல்களை வாங்குவதை விட, இந்த ஒரு நூல் வாங்கிப் படிக்கப்பட்டால், சொல்லாற்றலும் சிந்தனையும் வளர்வதோடு, துணிந்து முன்னேறும் பேரார்வமும் இளைஞர்களிடையே பொங்கிப் பெருகும் என்பது உறுதி.


  • இராய செல்லப்பா நியூ ஜெர்சியில் இருந்து.

பக்தியில் அமெரிக்காவும் இந்தியாவும்

 பக்தியில் அமெரிக்காவும் இந்தியாவும்

(இன்று கிழமை திங்கள்-7)

அமெரிக்காவில் 49ஆவது நாள்

(அட்லாண்டிக் கடலோரம்)

பலமுறை நான் அமெரிக்கா வந்திருக்கிறேன்.  பல கோயில்களுக்குச் சென்று இருக்கிறேன்.  ஆனால் கோயில்களைப் பற்றி அதிகம் எழுத முடியவில்லை.  அதற்குக் காரணங்கள் பல.  முக்கியமானது நேரமின்மை. அதாவது அந்தக் கோயில்களை ஓரளவுக்காவது முழுமையாக சுற்றிப்பார்த்து, அங்கு இருக்கும் சிற்பங்களையும் மற்ற சிறப்புகளையும் புரிந்துகொண்டு, ஐயம் இருப்பின் சம்பந்தப்பட்டவர்களுடன் பேசித் தெரிந்துகொண்டு, சரியான வெளிச்சத்தில் தேவையான புகைப்படங்களை எடுத்துக்கொண்டு, அதன் பிறகல்லவா எழுதவேண்டும்? அதற்கான நேரம் இல்லாமலே போகிறது.

உள்ளூர்க் கோயில்களே யானாலும், முன்கூட்டியே நேரத்தைத் தீர்மானித்துக் கொண்டு போக முடிவதில்லை. காரணம் நம் பிள்ளைகள், பெண்களின் ஓய்வுநேரத்தையும், பேரக் குழந்தைகளின் உணவு மற்றும் உறங்கும்  நேரம், விளையாட்டு மற்றும் வீட்டுப்பாட நேரம், குறிப்பாக அவர்களின் உடல்நலம்  ஆகியவற்றையும் பொறுத்தே நமது பயணங்களை அமைத்துக்கொள்ள வேண்டும். (இந்தியாவிலும் இதே போன்ற தளைகள் உண்டு).  ஆகவே கிடைக்கின்ற சிறிதளவு நேரத்தில் தெய்வ தரிசனமே முக்கியத்துவம் பெறுகிறது. அது பெரும்பாலும் இரவு நேரமாகவே இருப்பதால் நல்ல புகைப்படங்களும் வாய்ப்பதில்லை.

இன்னொரு அயர்ச்சி யூட்டும் விஷயம், பெரும்பாலான கோயில்களுக்கு தனிப்பட்ட இணையதளம் இருக்கிறது. அதில் ஏற்கெனவே இடம்பெற்றுள்ள செய்திகளில், வரலாற்றில், புகைப்படங்களில் இல்லாத ஒன்றையா நாம் புதிதாகச் சொல்லிவிடப் போகிறோம் என்று மனம் சமாளித்துக் கொள்கிறது.

ஆகவே இன்றைய பதிவில் பக்தி சம்பந்தப்பட்ட சில அனுபவங்களைத்தான் பகிர்ந்துகொள்ளப் போகிறேன்.

அண்மையில் தமிழ் இந்துவில் படித்த இந்தச் செய்திதான் என்னை இதற்குத் தூண்டிவிட்டது:

திண்டுக்கல்லில் திமுக சார்பில் அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ‘தமிழகத்தில் தேவையின்றி கலவரத்தை தூண்டும் வகையில் அண்ணாமலை பேசுவாரானால் அவரை எப்படி அடக்க வேண்டும் என திமுக தொண்டனுக்குத் தெரியும்.

1969-ல் அண்ணா மறைந்தபோது நெய்வேலியில் நடந்த ஆன்மிக நிகழ்ச்சியில் கிருபானந்த வாரியார் முன்னாள் முதல்வர் அண்ணா பற்றி தனக்கே உரிய கிண்டலான பாணியில் பேசினார். ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் கிருபானந்த வாரியாருக்கு என்ன கதி ஏற்பட்டது என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். அண்ணாவை பற்றி பேசிய கிருபானந்த வாரியாருக்கு என்ன கதி ஏற்பட்டதோ, கருணாநிதியை பற்றி கேவலமாக பேசினாலும் அதே கதிதான் ஏற்படும். பழைய திமுகக்காரன் வந்துவிடுவான் என்பதை எச்சரிக்கையாக அண்ணாமலைக்கு தெரிவித்துக் கொள்கிறேன். எங்குமே கூட்டம் பேசமுடியாது’ என பேசினார். Last Updated : 19 May, 2022 07:31 AM)

அப்போது நான் கல்லூரி மாணவன். நெய்வேலி நிகழ்ச்சியில் திருமுருக கிருபானந்த வாரியார் 'விதி வலியது' என்றும் கருத்தை விளக்கும் விதமாக, 'மில்லர் வந்தாலும் மரணத்தை நிறுத்த முடியாது' என்று பேசியதாகப் பத்திரிக்கைகள் அப்போது செய்தி வெளியிட்டிருந்தன.

படம்: நன்றி -இணையம்

1967இல் தமிழ்நாட்டில் முதல்முறையாகப் பதவியேற்ற திமுக அரசின் முதல்வராக இருந்த ‘காஞ்சிபுரம் நடராச முதலியார் அண்ணாதுரை’ என்னும் அறிஞர் அண்ணா அவர்கள், இரண்டு ஆண்டுகள் கூடப் பதவியில் இருக்க இயலாதபடி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 1969 பிப்ரவர் 3ஆம் தேதி மரணமடைந்தார். அவரது இறுதி நாட்களில் மில்லர் என்ற வெளிநாட்டு மருத்துவர் வரவழைக்கப்பட்டு சிகிச்சை யளித்தும் பலனில்லாமல் போனது.

தன் சொல்லாற்றலாலும், நாடகங்கள், திரைப்படங்கள், இதழ்ப்பணி ஆகியவற்றாலும் தமிழ் மொழிக்கு அழகு சேர்த்தவர் அறிஞர் அண்ணா. அதனால் தான் 'எந்தச் சுயமரியாதைக்காரனும் ஏற முடியாத மேடைகளிலும் அவருக்கு இடம் கிடைத்தது' என்று கவிஞர் கண்ணதாசன் தன் வாழ்க்கை  வரலாறான 'வனவாச'த்தில் கூறுகிறார். ‘பட்டுத் துண்டைத்  தலையில் போர்த்திவிட்டு தான் மோதிரக் கையால் குட்டுவார் அண்ணா’ என்று எங்கள் தமிழாசிரியர் அலிப்பூர் ரஹீம் (மேல்விஷாரம் - அப்துல் ஹக்கீம் கல்லூரி- 1967-70 பிஎஸ்சி  வகுப்பு) கூறுவதுண்டு. அந்த அளவுக்கு மக்களில் ஒருசாராரின் மனதில் நிறைந்தவராக இருந்தார் அண்ணா. அவருடைய மரணத்தின்போது சென்னையே மக்கள் கடலால் குலுங்கிய காட்சி கின்னஸ் புத்தகத்திலும்  பதிவானதாகக் கூறுவார்கள்.

அத்தகைய சூழ்நிலையில் அண்ணாவைப் போன்றே சொல்வன்மையும், அரசியல்வாதிகளிடம் இல்லாத ஒழுக்கமும் உண்மைத்தன்மையும் கொண்டிருந்த வாரியார் அவர்கள் எந்த உள்நோக்கமும் இல்லாமல், பொதுமக்கள் அனைவருக்கும் பழக்கமான ஒரு ஆன்மீகக் கருத்தின் விளக்கமாகச் சொல்லிய வார்த்தைகளை ஒரு பொருட்டாக எடுத்துக்கொண்டு அவர்மீது வன்முறையைத் தூண்டினார்கள்.

பொதுவாக, அரசியல்வாதிகளிடம் ஒரு உத்தி உண்டு. தங்களைப் பற்றிய ஏதேனும் ஒரு எதிர்மறையான கருத்து மக்கள் மத்தியில் உருவாகிவிட்டால், உடனே மக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்கு அதே போன்ற இன்னொரு கருத்தை மக்கள் மன்றத்தில் புழங்கவிடுவார்கள். இது ஏற்படுத்தும் சலனத்தில் அது ஏற்படுத்திய சலனம் மறைந்துவிடும்.

அண்ணாவுக்குப் பிறகு யார் முதல்வராவது என்று அப்போது பெருத்த சர்ச்சை எழுந்தது. பொதுவாகவே திமுகவில் அண்ணாவுக்கு அடுத்த நிலையில் இரா நெடுஞ்செழியன் தான் இருந்தார். இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எனபதும் ஒரு காரணம். மு கருணாநிதி அப்போது நான்காம் அல்லது ஐந்தாம் நிலையில்தான் இருந்தார் என்பார்கள். ஆனால் நெடுஞ்செழியனை விட, கருணாநிதிக்கு முன்னேறவேண்டும் என்ற தணியாத ஆசை அதிகம் இருந்தது. திரைப்படத் துறையில் அறிஞர் அண்ணாவை மிக எளிதாகத் தன்னால் வென்றுவிட முடிந்த பெருமிதமும் இருந்தது. எனவே கருணாநிதியிடம் மிகுந்த எச்சரிக்கையோடு இருந்தார் அண்ணா என்பார்கள்.

முதல்வர் பதவிக்கு நெடுஞ்செழியனுக்கு ஆதரவு கொடுத்தார் பெரியார். ஆனால் அவரது குரலுக்கு அக்கட்சி எம்எல்ஏக்கள் எந்த அளவு மரியாதையைக்  கொடுப்பார்கள் என்று தெரியாமல் இருந்தது. அப்போது கட்சியின் மக்கள் முகமாக இருந்தவர், புரட்சி நடிகர் எம்ஜிஆர் அவர்களே. பத்திரிகை துறையில் கோலோச்சிக்கொண்டிருந்த சி பா ஆதித்தனார் அவர்களும் அரசியலில் தனக்கொரு பதவியைத் தேடிக்கொண்டிருந்த நேரம் அது. இந்த இருவரையும் வசப்படுத்திக்கொண்டதால் கருணாநிதியால் முதலமைச்சர் பதவியை எளிதாக அடைய  முடிந்தது. (பதவிக்கு வந்தபிறகு அதற்கேற்பத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டார் கலைஞர் என்பதில் இரண்டு கருத்து இல்லை).      

இதனால் வேதனை யடைந்தவர்கள், அறிஞர் அண்ணாவுக்கு  வேண்டுமென்றே சரியான சிகிச்சை  அளிக்காமல் அவரது மரணம் விரைவுபடுத்தப்பட்டு விட்டதோ என்ற ஐயத்தை  எழுப்பியதாக அப்போது பேசப்பட்டது. அந்த விஷயம் பெரிதாகக் கிளம்பிச்  சிக்கலை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காகத்தான் வாரியார் விஷயத்தை ஊதிப் பெரிதாக்கி, ஆன்மீகவாதியான வாரியார் மீது கல்லெறிந்ததும், அவருடைய நிகழ்ச்சிகள் நடைபெறாமல் செய்ததும் நடைபெற்றிருக்கவேண்டும் என்று தோன்றுகிறது.

மற்றவர்கள் ஆன்மிகத்தைப் புராணங்கள் வழியாகப் பரப்பிக்கொண்டிருந்தபோது, வாரியார் அவர்கள் அதை இனிய தமிழால் பரப்பிக் கொண்டிருந்தார். ஆகவே அவர்மீதான தாக்குதல் மக்கள் மனதில் முள்ளாகத் தைத்ததில் வியப்பில்லை. சரியான நேரத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆர் முன்வந்து பிரச்சினையின் சூட்டைத் தணித்தார். ‘பொன்மனச் செம்மல்’ என்று அவருக்கு வாரியார் பட்டம் வழங்கியது நியாயமானதே.

நேர மேலாண்மை என்பது வாரியார் அவர்களின் சிறப்பான பண்பாகும். 20 நிமிடம் என்றாலும் சரி, நாற்பது நிமிடம் என்றாலும் சரி, அதற்கு அரை நிமிடம் முன்பாகவே ‘உருவாய், அருவாய், உளதாய், இலதாய் …’ என்று தொடங்கி, ‘....அருள்வாய் குகனே’ என்ற கந்தர் அனுபூதியின் கடைசிப் பாடலோடு (51) தன்  உரையை அவர் முடித்துவிடுவார். கூட்டத்தின் நடுவே குழந்தைகளிடம் விடுகதை மாதிரி கேள்விகள் கேட்டு அவர்கள் மனதில் பதியும்வகையில் பக்திக் கருத்துக்களை விதைப்பார். எந்தக் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) என்றாலும் தன்னை நாடிவந்தால் தலைமையேற்று, நிதியுதவி திரட்டி, நிகழ்ச்சியை முடித்துத் தரும் செயலாண்மை அவரிடம் இருந்தது.

நெருப்பைக் களங்கப்படுத்த முடியுமா? வாரியாரும் அப்படித்தான். 

 -இராய செல்லப்பா நியூ ஜெர்சியில் இருந்து

கந்தர் அநுபூதி (51): 

உருவாய், அருவாய், உளதாய், இலதாய்

மருவாய், மலராய், மணியாய், ஒளியாய்,

கருவாய், உயிராய், கதியாய், விதியாய்,

குருவாய் வருவாய், அருள்வாய், குகனே!

ஞாயிறு, மே 29, 2022

“க.கொ.எ?” - கட்டுரையால் ஜெயிலுக்குப் போகும் அமெரிக்க நாவலாசிரியர் நான்சி

“கணவனைக் கொல்வது எப்படி” - கட்டுரையால் ஜெயிலுக்குப் போகும் அமெரிக்க நாவலாசிரியர் 

(இன்று கிழமை ஞாயிறு-7)

அமெரிக்காவில் 48 ஆவது நாள்

(அட்லாண்டிக் கடலோரம்)



'உங்கள் கணவரைக் கொல்வது எப்படி' என்ற கட்டுரையை எழுதிய நாவலாசிரியர், அமெரிக்காவின் ஆரிகன் மாநிலத்தைச் சேர்ந்த (பெண்) எழுத்தாளர் நான்சி கிராம்டன் பிராப்பி (Nancy Crompton Brophy), நான்கு வருடங்கள் முன்பு உண்மையிலேயே தனது கணவர் டானியல் பிராப்பி (Daniel  Brophy) யைக் கொன்றவர்தான் என்று நீதிமன்றம் இப்போது (2022) தீர்ப்பளித்துள்ளது. அவருக்கு அநேகமாக 25 ஆண்டு சிறைத்தண்டனை (அதாவது ஆயுள் தண்டனை) வழங்கப்படலாம் என்று தெரிகிறது.


ஒரு சமையல் பள்ளியில் ஆசிரிய-சமையல்காரராகப் பணியாற்றியவர் 63 வயதான டானியல் பிராப்பி. 2018 ஜூன் 2ஆம் தேதியன்று சமையலறையிலிருந்த கைகழுவும் தொட்டியின்  அருகே தரைமீது இரத்தவெள்ளத்தில் கிடந்தார். அவரது மாணவர்களே அக்காட்சியை முதலில் கண்டவர்கள். 


மூன்று மாதங்கள் கழித்தே கொலையுண்டவரின் மனைவியும் நாவலாசிரியருமான நான்சி கைதுசெய்யப்பட்டார்.  வேண்டாத கணவனை, தான் அகப்பட்டுக்கொள்ளாமல் கொல்வதற்கான  வழிகளை விவரிக்கும் அக்கட்டுரையை, தானே எழுதி, தானே  வெளியிட்டார் என்ற செய்தி அவருடைய கைதுக்கான காரணங்களில் முக்கியமான ஒன்றாகக் கூறப்பட்டது.  


ஆனால் நான்சி மீது சூழ்நிலை சாட்சியங்களும் இருந்தன.  சம்பவம் நடந்த அன்று சம்பவம் நிகழ்ந்த அதே நேரத்தில் தன்னுடைய காரில் அந்த இடத்துக்குச் சென்றதும், திரும்பிவந்ததும் பதிவாகியிருந்தன; கணவரைக் கொல்லப் பயன்பட்ட அதே துப்பாக்கியின் மாடல்தான் இவரிடமும் இருந்தது; கணவரின்  பெயரால் எடுக்கப்பட்டிருந்த ஆயுள் இன்சூரன்ஸ் காப்பீடான 815,000 டாலர்களைப் பெறுவதற்காக அவர் விண்ணப்பித்திருந்தார். இவையெல்லாம் வலுவாக இருந்ததால், கணவரைக் கொல்வது பற்றிய அவரது 2011 ஆம் வருடத்துக் கட்டுரையை  ஒரு சாட்சியமாக எடுத்துக்கொள்ளப் போவதில்லை என்று விசாரணை நீதிபதி கூறிவிட்டார். 


நான்சியின் காதல் நாவல்களில் வரும் கிளைமேக்ஸ் காட்சிக்கு எந்த வகையிலும் குறையாதது, அவரது கணவரை அவர் கொன்றதாக போலீசாரால் வர்ணிக்கப்பட்ட நிகழ்வு: தன் கணவரை அவருடைய இதயத்தில் இரண்டு முறை சுட்டுக் கொன்றாராம். முதல் குண்டு தன் முதுகுத்தண்டை அறுத்துக்கொண்டு இதயத்தில் பாய்ந்தவுடன், அவரது கணவர், ஒன்றும் புரியாமல் மனைவியைத் திரும்பிப் பார்த்தாராம். கணவரின் அருகில் குனிந்து பார்த்து இன்னொரு குண்டையும் செலுத்தி அவரை உயிரிழக்கவைத்தாராம் நாவலாசிரியர். 


பணத்திற்காகத் தன்  கணவரைக் கொன்றுவிட்டதாகக் கருதவேண்டாம், தான் விரும்பிய வாழ்க்கைத் தரத்தை கணவரால் வழங்கமுடியாததே கொலைக்குக் காரணமாக இருக்கவேண்டும் என்று, அவருடைய கடன் அட்டைப் பாக்கிகளை எடுத்துக்காட்டியது போலீஸ் தரப்பு.


ஆனால் அவருடைய வழக்கறிஞர்களோ, நான்சி அன்று காலை சம்பவ இடத்திற்கு காரோட்டிச் சென்றதை மறுக்கவில்லை. ஆனால், அது அவரது எழுத்துப்பணியோடு சம்பந்தப்பட்டது என்றும், அதை வாக்குமூலத்தில் குறிப்பிடாததற்குக் காரணம், தன் கணவர் கொல்லப்பட்டுவிட்டார் என்ற செய்தியைக் கேட்டதும் அவர் “சோகமயமான அதிர்ச்சி”யில் மூழ்கிவிட்டதால்,  “அதற்கு முன் நடந்ததை எல்லாம் மறந்துபோய்விடும்” ரெட்ரோகேட் அம்னீஷியா என்னும் பாதிப்புக்கு உள்ளானதே என்றும் வாதிட்டார்கள்.  


ஆனால் ஜூரிகள் ஒருமனதாக நான்சிதான் குற்றவாளி என்று எழுதிக்கொடுத்ததால், அவரது தண்டனை உறுதியாகிவிட்டது. (ஆனால் அவர் மேல்முறையீடு செய்தால் விளைவு என்ன ஆகுமென்று தெரியாது).   


தண்டனை பெறப்போகும் நாவலாசிரியருக்கு இப்போது வயது 71. தம்பதிகள் தினம் கொண்டாடப்படும் இந்நாளில், அவர் தன்  கணவனோடு ஒரு வெள்ளிவிழாக்காலம் இணைந்து வாழ்ந்ததை கவனிக்கவேண்டியிருக்கிறது.


கணவரைக் கொன்ற துப்பாக்கியை போலீசார் கண்டுபிடிக்கவில்லை. ஆனால், துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியின் பேரலை நான்சி உடனடியாக  மாற்றி விட்டாராம். தடயவியல் சோதனையில் இருந்து தப்பவே நான்சி இப்படிச் செய்திருக்கலாம் என்பது குற்றச்சாட்டு. 


- இராய செல்லப்பா நியூ ஜெர்சியில் இருந்து

சனி, மே 28, 2022

குங்குமப் பொட்டும் அமெரிக்கக் குழந்தையும்

குங்குமப் பொட்டும் அமெரிக்கக் குழந்தையும்

(இன்று கிழமை சனி-7)

அமெரிக்காவில் 47 ஆவது நாள்


(குடும்பம் ஒரு தொடர்கதை)

மஞ்சள் பூசிக் குளித்து, குங்குமம் வைத்து, மங்கலத் தோற்றத்துடன் பூஜையறைக்கு வரும்போதே மாமியார் முறைத்துப் பார்ப்பதன் காரணம் புரிந்துவிடுகிறது: நெற்றியில் வைத்த ஸ்டிக்கர் பொட்டைக் காணோம்! 


"இந்த ஸ்டிக்கர் பொட்டு சரியாக ஓட்டுவதில்லை" என்பது தமிழ்ப் பெண்களின்  நிரந்தரக் குற்றச்சாட்டாக உள்ளது. (மற்ற மொழிப் பெண்களோடுதான்  நமக்குப் பழக்கம் இல்லையே!)


பாண்டி பஜாரும் மயிலாப்பூர் வடக்கு மாடவீதியும்தான் இவள் குங்குமப் பொட்டு வாங்கும் வழக்கமான இடங்கள். சதுர வடிவான அட்டைகளுக்குள் பிளாஸ்டிக் தாளால் மூடப்பட்டு வெவ்வேறு வடிவில் பொட்டுக்கள் அடைபட்டிருக்கும்.  சிலவற்றில் 'ஞாலத்தின் மாணப் பெரிதான' பொட்டுக்கள் இருக்கும். எல் ஆர் ஈஸ்வரிக்காகவே செய்தது. சிலவற்றில் பொட்டுக்கள் இருப்பதே கண்ணுக்குத் தெரியாது. (என் பேத்திக்கு அதுதான் பிடிக்கும்). ஒவ்வொரு முறையும் இவள் வாங்கும் அட்டைகள் ஒரு வருடத்திற்கு வரும் என்று பார்த்தாலே தெரியும். ஆனால் ஒன்றிரண்டு தவிர மற்ற அட்டைகள் விசித்திரமாகக் காணாமல் போய்விடும். பிறகென்ன, மறுபடியும் பாண்டி பஜார், மயிலாப்பூர்…


ஆனால், காணாமல் போன அட்டைகள், பீரோவில் இருக்கும் புடவைகளை உதறும்போதோ, அல்லது போன வருடத்து மங்கையர் மலர், சக்தி விகடன் இதழ்களைப் புரட்டும்போதோ, அல்லது அஞ்சறைப் பெட்டியின் அடியில் வைக்கப்பட்ட ராணிமுத்து காலண்டர் அட்டையின் அடியிலிருந்தோ, அவ்வப்பொழுது  திடீரென்று வெளிப்பட்டு, புதையல் கிடைத்த  மகிழ்ச்சியை அவளுக்கு ஊட்டுவதை நான் பார்த்ததுண்டு. 


ஆனால் நிரந்தரமான அதிருப்தி என்னவென்றால், பொட்டின் கலரும் புடவையின் கலரும் 'மேட்ச்' ஆவதில்லை என்பதே. அதிலும் 'மெஜந்தா' கலரில்தான் எப்பொழுதும் மனக்குறை. (இன்றுவரை மெஜந்தா என்றால் என்னவென்று எனக்குத் தெரியாது).  புடவையோடு ரவிக்கையைச் சேர்த்து நெய்பவர்கள், அதன் ஓரத்தில் அதே நிறத்தில் ஸ்டிக்கர் பொட்டையும் ஒட்டி வைத்து விற்றால் வியாபாரம் பெருகாதோ! (நமக்குத் தோன்றி என்ன பயன், 'நல்லி', 'குமரனு'க்கு அல்லவா தோன்ற வேண்டும்?)


ஸ்டிக்கர் பொட்டு வேண்டாம் என்று சீலமிக்க துறவியர்கள் அறிவுரைத்தாலும், சைக்கிளுக்கு பதில் ஸ்கூட்டி மாதிரி, சேலைக்கு பதில் சுடிதார் மாதிரி, பொடிக் குங்குமத்துக்கு பதில் ஸ்டிக்கர் பொட்டு வந்திருப்பது அறிவியல் வளர்ச்சியே.  அதைத் தவிர்ப்பது தேவையற்றது. ஆனால் நெற்றியிலிருந்து உடனே விழாமலும் நெற்றிக்கு ஊறு விளைவிக்காமலும் அது தயாரிக்கப்படவேண்டியது அவசியம். இதற்கான தரக் கட்டுப்பாடுகளை யாராவது அமல்படுத்தினால் தேவலை. 

இருங்கள், யூடியூபில் ஏதோ பாட்டு வருகிறது: "குங்குமப்பொட்டின் மங்கலம்- நெஞ்சம் இரண்டின் சங்கமம்" என்று. அது எப்படி ஐயா, நான் எழுதிக்கொண்டிருக்கும்போதே மோப்பம் பிடித்து அதற்கு ஒத்த கருத்தில் பாடலைக் கொண்டுவருகிறது கூகுள்?  அது மட்டுமல்ல, "நெற்றியிலே ஒரு குங்குமப் பொட்டு தேன் போலே" என்று இன்னொரு பாடலும், "குங்குமம்- மங்கல மங்கையர் குங்குமம்" என்று இன்னொன்றுமாக வரிசை கட்டி நிற்கின்றன. இந்த அளவு செயற்கை நுண்ணறிவு - Artificial Intelligence -  தேவைதானா? அது கூடப் பரவாயில்லை, வீட்டிலேயே குங்குமம் எளிதாகத் தயாரிப்பது எப்படி என்று நான்கைந்து வீடியோக்களும் அணிதிரண்டு பின்னால் நிற்கின்றன. 


46 நாட்களுக்கு முன்பு நாங்கள் அமெரிக்கா வந்திறங்கியபோது விமான நிலையத்தில் ஒரு கணம் பார்த்து புன்னகைத்துவிட்டு அழத்தொடங்கிவிட்ட எங்கள் குடும்பத்தின் புது வரவான என் பேரன் தியான், அடுத்த சில நாட்களில் என் மனைவியோடு (அதாவது தன் பாட்டியோடு) மிகச் சரளமாக இழைந்துகொள்ள ஆரம்பித்துவிட்டான். ஆனால் என்னிடம் வர மேலும் சில நாட்கள் ஆயின.. 


ஆனால் அவன் ஏதோ ஒரு திட்டத்துடன் தான் பாட்டியோடு ஒட்டிக்கொண்டான் என்று சீக்கிரமே தெரிந்துவிட்டது. முகமெல்லாம் மயக்கும் புன்னகையுடன்  கன்னத்தில் கை வைத்துக் கொஞ்சுவதுபோல் பாவனை செய்வான். கண் இமைகளை வருடுவான். திடீரென்று தலைமயிரை இழுப்பான். ஆனால்  புன்னகை மட்டும் மறையாது. இன்னும் பேச்சு வரவில்லை. ஆனால் பேச்சு மாதிரி ஏதோ ஓசை எழுப்புவான். திடீரென்று தன் பிஞ்சு விரல்களால் அவளுடைய நெற்றியிலிருக்கும் ஸ்டிக்கர் பொட்டைத் தூக்கிவிடுவான்! அதுவும், அவளுக்குத் தெரியாமலேயே! 


கையில் பிசுபிசுக்கும் பொட்டை எடுத்துக்கொண்டு அரக்கப் பரக்கக் கீழிறங்கும்போதுதான் பேரன் செய்த விஷமம் இவளுக்கு உறைக்கும். பொட்டு போனால் போகட்டும், அது அவன் வாய்க்குள் போய்விடக் கூடாதே, அதல்லவா முக்கியம்?


உடனே நான் களத்தில் இறங்குவேன். என்னைக் கண்டதும் தன் சாதனையை விவரிப்பதுபோல் விரலில் ஒட்டிக்கொண்ட பொட்டை இப்படியும் அப்படியுமாகத் திருப்பிக் காட்டுவான். ஆனால் தரமாட்டான். அதற்கு நான் வேறு மாதிரியான விலை கொடுத்தாகவேண்டும். உடனே அவனைப் பலவந்தமாகத் தூக்கிக்கொள்வேன். அதுதான் சாக்கென்று அவன் என்னுடைய மூக்குக்கண்ணாடியைக் கைப்பற்றுவான். உடனே இவள் லபக்கென்று ஸ்டிக்கர் பொட்டை மீட்டு விடுவாள். ஆனால் என் மூக்குக்கண்ணாடியை அவனுடைய குரங்குப்பிடியில் இருந்து மீட்பது அவ்வளவு சுலபமாய் இருப்பதில்லை. 


ஆனால் ஒன்று, எவ்வளவு கவனமாகக் குழந்தையைக் கையாண்டாலும், ஸ்டிக்கர் பொட்டை வசமாக்குவதற்கு அவனிடம் புதுப்புது வழிகள் இருந்ததைக் காண முடிந்தது. அது  செயற்கை நுண்ணறிவு அல்ல, இயற்கை நுண்ணறிவு தான்! 


'.... தம் மக்கள் சிறுகை அளாவிய கூழ்' என்றார் வள்ளுவர் (குறள் 64). கூழுக்கு பதில் 'ஸ்டிக்கர் பொட்டு' என்று எழுதிக்கொள்ளலாம்! மழலையின் இன்பம்தான் என்னே!

  -இராய செல்லப்பா நியூ ஜெர்சியில் இருந்து.    


வீட்டில் குங்குமம் தயாரிக்க விரும்புவோர் கீழுள்ள இணைப்பைச் சொடுக்கவும்.  (இதை விடவும் சிறப்பான வீடியோக்கள் யூடியூபில் இருக்கலாம்). நெற்றியில் அணிந்து கொண்டால், ஸ்டிக்கர் பொட்டை விட இது அதிக நேரம் நீடிக்கிறதா என்ற தகவலையும் எனக்குத் தெரிவிக்கலாமே!

https://www.youtube.com/watch?v=S4MAzfIa5A4&ab_channel=Samayalulagam

வெள்ளி, மே 27, 2022

நியூஜெர்சியில் தொலைந்த மோதிரம்

 நியூஜெர்சியில் தொலைந்த மோதிரம் 

(இன்று கிழமை வெள்ளி-7)

அமெரிக்காவில் 46 ஆவது நாள் 


(குடும்பம் ஒரு தொடர்கதை)

அமெரிக்காவில் சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் விடுமுறை நாட்கள் என்பதால், வெள்ளிக்கிழமை இரவு 'வீடியோ-ஆன்-டிமாண்ட்' இல் திரைப்படம் பார்ப்பது இங்கு பெரும்பாலான வீடுகளில் நடக்கும் நிகழ்ச்சி என்று கூறப்படுகிறது. ஸ்டீவன் ஸ்பீல்பர்க்-இன்  Opera Remake ஆன The Westside Story  பார்த்துவிட்டு, அரதப் பழசானாலும் சுவை குறையாத (எம்ஜிஆர் படம் போன்ற)          Makenna’s Gold இன் கடைசிப் பகுதியைப் பார்த்துவிட்டு,  ஏற்கெனவே கொஞ்சம் பார்த்து வைத்திருந்த  The Crazy Rich Asians என்ற படம் பார்க்க உட்கார்ந்தபோதுதான் மணியைப் பார்த்தேன். நியூஜெர்சியில் நேரம் 27-5-2022 வெள்ளிக்கிழமை இரவு 10.30! 


இன்னும் ஒருமணி நேரத்தில் இன்றைய வலைப்பதிவை எழுதி வெளியிட்டாக வேண்டும்!  நேற்றுவரை விடாமல் தினம் ஒன்று வீதம் 45 பதிவுகள் எழுதியாயிற்று. இன்று எழுதவேண்டியது 'அமெரிக்காவில் எனது 46ஆவது நாள்' என்னும் பதிவு. 


'என்னடா மதுரைக்கு வந்த சோதனை' என்று ஒரு படத்தில் வருமே, அதே எண்ணம் தான் எனக்கும் வந்தது. எதைப் பற்றி இன்று எழுதுவது? இந்த நிமிடம் வரை ஒன்றும் தோன்றவில்லை. மீதிப் படத்தை நாளை பார்த்துக்கொள்ளலாம் என்று (அனுமதி கேட்டுப் பெற்றுக்கொண்டு)  மாடிக்கு விரைந்தேன். அங்குதான் எனது கணினிக்கு அறை ஒதுக்கிக் கொடுத்திருந்தாள் என் (மூத்த) மகள். 


என்னுடையது லெநோவா மடிக்கணினி. அதிகம் பழசில்லை, வெறும் ஏழெட்டு வருடம்தான் ஆகியிருக்கும். எருமைக் கனம் என்றாலும் நல்ல உழைப்பாளி. என்னுடைய எல்லாப் புத்தகங்களுமே இதில் தான் எழுதி அச்சுக்கும் புஸ்தகாவுக்கும் அமேசானுக்கும் போனவை. என்னுடைய எல்லா மொழிபெயர்ப்பு நூல்களும் இதில் தான் பிரசவமானவை. இவ்வளவு ஏன், நேற்றுவரை நான் எழுதிய 45 வலைப்பதிவுகளும் இதில் எழுதியவையே. 


எனவே அதிர்ஷ்டமான அந்த மடிக்கணினியை மேசைமேல் வைத்து, தட்டத் தொடங்கினால் எழுதவேண்டிய விஷயம் எங்கிருந்தாவது கிடைத்துவிடும் என்று நம்பினேன். மனித வாழ்க்கையே ஏதோ ஒரு நம்பிக்கையில்தானே நடந்துகொண்டிருக்கிறது!


கருவியை 'ஆன்' செய்ய வலது கரத்தை நீட்டியபோதுதான் அந்த அதிர்ச்சி காத்திருந்தது. வலது கை இரண்டாவது விரலில் இருந்த மோதிரத்தைக் காணவில்லை! பயந்துவிடாதீர்கள், வெறும் தங்க மோதிரம்தான்! 


சில (அல்லது பல) ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் திருமண ஆண்டுநிறைவுநாளில் எனக்கு அணிவிக்கப்பட்ட மோதிரம் அது. இரண்டு கைகளின் பத்து விரல்களும் கோர்த்த மாதிரியான வடிவமைப்புடன் அப்போது அழகாகவே இருந்தது அந்த மோதிரம்.


சாப்பிடும்போது மட்டும் அதை இடது கைக்கு மாற்றிக்கொள்ளுவேன். இல்லையெனில் வேகமாகத் தேய்ந்துவிடுமே!  புதிதாக வாங்கிக்கொடுக்க நமக்கு  மாமனாரா இருக்கிறார்? ஆனாலும் அந்த மோதிரம் நாளடைவில் இளைத்துக்கொண்டே வந்து இப்போது குஷ்பு மாதிரி ஆகிவிட்டிருந்தது. வாங்கிய புதிதில் அது நிச்சயம் வட்டமாகத்தான் இருந்தது. நான்தானே பார்த்து வாங்கினேன்! அதன்  இப்போதைய வடிவத்தை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. அந்த மோதிரம் தான் இப்போது காணவில்லை! 


எங்கே போயிருக்கும்?


காலையில் இருந்து வீட்டைவிட்டு எங்கும் போகவில்லை. காலையில் இட்லி சாப்பிடும்போது கைமாற்றி அணிந்துகொண்டேன். கை கழுவியபின்பு மீண்டும் வலது கையில் அணிந்தது நினைவிருக்கிறது. குளிக்கும்போது நழுவியிருக்க வாய்ப்பு இருக்குமோ? குளியல் தொட்டியைப் பார்த்தாயிற்று. இல்லை! சட்டைகளை இஸ்திரி செய்தேனே அப்போது நழுவியிருக்குமோ? அந்த இடத்தையும் துழாவினேன். இல்லை! மடித்துவைத்த துணிமணிகளுக்குள்  சிக்கியிருக்குமோ? அங்கும் இல்லை. 


ஒருவேளை...இரண்டுமணி நேரத்துக்கு முன்பு  நியூ ஜெர்சியில் இருக்கும் ஃபார்லே டிக்கின்சன் யூனிவர்சிடி வளாகத்தில் நடைபயின்றபோது தவறி யிருக்குமோ? அவ்வளவு பெரிய நிலப்பரப்பில் இந்தக் குட்டி மோதிரத்தை எப்படிக் கண்டுபிடிப்பது?


மனம் ஒரு குரங்கு என்பார்கள். என் மனம் மட்டும் விதிவிலக்கா? அந்த மோதிரத்தின் இன்றைய விலை என்னவாக இருக்கும் என்று கணக்குப் போட்டது. சென்னையில் இன்றைய தங்கம் விலை எவ்வளவு என்று பார்த்துக்கொண்டிருக்கும்போது நெட் போய்விட்டது. சில நிமிடங்களில் மீண்டும் வந்துவிட்டது. "கிடைத்து விட்டதா, இல்லையா?" என்றுகீழிருந்து கேட்ட தடிமனான குரல் யாருடையதாக இருக்கும் என்று நீங்களே அனுமானிக்கலாம். 


மோதிரம் தவறியதை விட, இன்றைய வலைப்பதிவு தவறிவிடுமே என்பதுதான் என் முக்கியக் கவலையாகி விட்டது. 45 நாள் விடாமல் எழுதியிருக்கிறேன். 150 நாளாவது விடாமல் எழுதவேண்டும் என்பது என் திட்டம். அதில் ஓட்டை விழுந்துவிடுமா?


இம்மாதிரி தருணங்களில் அரவிந்த அன்னை சொல்லிக்கொடுத்த வழிமுறையை நான் பின்பற்றுவது வழக்கம். அதை இன்றும் செய்தேன். 


அதாவது, நாம் செய்த தவறை உணர்ந்து, மன்னிப்பு கேட்பதுதான் அந்த வழி. இங்கு நான் இரண்டு தவறுகள் செய்திருந்தேன். ஒன்று, மோதிரத்தைப் பத்திரமாக வைக்கத் தவறிவிட்டேன். அதற்காக அந்த மோதிரத்திடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டேன். இரண்டாவது தவறு, இன்று எழுதவேண்டிய வலைப்பதிவை இவ்வளவு நேரம் தாமதித்தது. .அதற்காக என் மடிக்கணினியிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதற்காக, மவுஸ் மீது கைவைத்தேன். அப்போது கையில் ஏதோ கீறுவதுபோல உணர்ந்தேன். ஆஹா, கிடைத்துவிட்டது காணாமல் போன என் மோதிரம்!     


விஷயம் இவ்வளவுதான். அண்மையில் என் மகன் எனக்குப் புதியதொரு மடிக்கணினி வாங்கிக் கொடுத்திருந்தார். பழையது எருமை கனம் என்றால் இது மயில் இறகு மாதிரி மெல்லியது. பொறாமை -13 என்று பெயர். (HP-ENVY-13") அதில் தொடுதிரை இருந்ததால் வெளிப்புற மவுசுக்கு வேலையில்லை. ஆகவே வழக்கமாகப் பயன்படுத்தும் மவுஸ் மேசையின் ஓர் ஓரத்தில் ஒதுங்கிவிட்டது. அதன் ஒரு பக்கத்தில் இந்த மோதிரம் நழுவி, நல்ல வேளை,  அங்கேயே நின்றுவிட்டிருக்கிறது!



மவுசுக்கு நன்றி தெரிவித்தேன். இரண்டு விஷயங்களுக்காக. ஒன்று,
தொலைந்த  மோதிரம் கிடைத்தற்காக. இன்னொன்று,  இன்று வலைப்பதிவிற்குத் தலைப்புக்  கொடுத்ததற்காக!


"இனிமேலாவது பொருள்களை ஒழுங்காக வைத்துக்கொள்ளவேண்டும். சொல்வதைச் சொல்லிவிட்டேன்" என்று ஒரு குரல் கீழிருந்து கேட்கிறது. யாருடையதாக இருக்கும் என்று உங்களுக்கா சொல்லவேண்டும்?


-இராய செல்லப்பா நியூ ஜெர்சியில் இருந்து..


வியாழன், மே 26, 2022

‘தவம்’ செய்து அமெரிக்காவில் தமிழ் வளர்க்கும் அனிதா ராஜேஷ்



‘தவம்’ செய்து அமெரிக்காவில் தமிழ் வளர்க்கும் 

அனிதா ராஜேஷ் 


(இன்று கிழமை வியாழன்-7)

அமெரிக்காவில் 45ஆவது நாள் 


(விட்டுப்போன கட்டுரைகள்) 

இணையம் தொடங்கிய காலத்திலிருந்தே தமிழில் மின் இதழ்கள் பல தொடங்கப்பட்டு இயங்கி வந்துள்ளன. ‘அம்பலம்’ என்ற இதழை சுஜாதா சென்னையிலிருந்து தொடங்கியதாக நினைவு.  பிறகு மாலன் பொறுப்பேற்றுக் கொண்டார் என்று எண்ணுகிறேன். 


வடிவமைப்பு  போன்ற ஆடம்பரங்களைப் பற்றிய  கவலையில்லாமல் நீண்ட நாட்களாகத்  தொடர்ந்து வரும்  வார இதழ்,  கனடாவில் இருந்து வரும் ‘திண்ணை’ ஆகும்.  ஏராளமான ஆய்வுக்கட்டுரைகள் அதில் இடம் பெற்றுள்ளன.


அச்சு இதழ்களில் விகடன் குமுதம் கல்கி போன்று தரமான இணைய வார இதழாக வெளிவந்து கொண்டிருக்கிறது,  ‘சொல்வனம்’ இதுவரை 271 இதழ்கள் வெளியாகியுள்ளன. பிரபல எழுத்தாளர் இரா முருகனின் ‘மிளகு’  நாவல் இதில்தான் தொடர்கதையாக வந்து கொண்டிருக்கிறது. 


DTP இல் பயிற்சி உள்ள நண்பர்கள் பலர் ஆர்வமிகுதியால் இணைய இதழ்கள் தொடங்குவது தமிழில் வாடிக்கையாக உள்ளது.  BLOG என்னும் வலைப்பதிவில்  அனுபவமுள்ள நண்பர்கள்  பலபேர் இணைய இதழ்களை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.  நிறைய கனவுகளோடு, அழகான வடிவமைப்போடு,  அச்சு இதழ்களையே  தோற்கடிக்கும்  அளவுக்குத் தரமானதாக  ஆரம்பித்து,  வைட்டமின் ‘ப’ காரணமாக  நின்றுபோன இணைய இதழ்களில் ‘காகிதப் படகு..’ பெ.கருணாகரனின் ‘கல்கோனா’ வும் ஒன்று.



வங்கியிலிருந்து ஓய்வு பெற்றவர்களும்,   ‘ஒருமனம் கொண்ட இருவர்’
என்னும் பட்டப்பெயருக்கு உரியவர்களும், இளமை முதலே  எழுத்துச் சுடரை இதயத்தில் ஏந்தியவர்களுமான  சுந்தரராஜன் - கிருபாகரன் ஆகிய நண்பர்கள் சென்னையிலிருந்து ‘குவிகம்’ என்ற இலக்கிய அமைப்பை நடத்திவருகிறார்கள். அதன் முக்கிய அம்சம் ‘குவிகம் மின்னிதழ்’ ஆகும். நவம்பர் 2013 முதல் வெளியாகிக் கொண்டிருக்கும் ‘குவிகம்’ ஒரு மாத மின்னிதழாகும்.

‘விருட்சம்’ என்ற இலக்கியப் பத்திரிகையை  40 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து நடத்திவரும்  சந்திரமௌலி என்னும் அழகிய சிங்கர்,  அதையே ‘நவீன விருட்சம்’  என்ற பெயரில் இணைய நாளிதழாக- கதை கட்டுரை கவிதை என்ற பல்வேறு அம்சங்கள்  கொண்டதாக இப்போது வெளியிடுகிறார்.     


இதுவரை சொன்ன இதழ்கள் எல்லாவற்றையும் நடத்துபவர்கள் வயதிலும் வாழ்க்கையிலும் பத்திரிகை துறையிலும் அனுபவம் மிக்கவர்கள். ஆனால் திருமணமான கையோடு, கல்வி ஒன்றே துணையாக,  இதயத்தின் சிந்தனை வளம் ஒன்றே வழிகாட்டியாக,  அமெரிக்க மண்ணில் குடியேறி,  வழக்கமான அமெரிக்கக் கனவுகளைத் துரத்துவதற்கு பதிலாக, தமிழ்க் கனவுகளைத் துரத்திக்கொண்டு, சற்றும் அனுபவமில்லாத பத்திரிகை துறையில் இணையவழியில் நுழைந்து, சாதனை படைத்துக் கொண்டிருக்கும் இளநங்கை தான் அனிதா  ராஜேஷ் அவர்கள்! 


அட்லாண்டாவில் இருந்து அவர் 33 வாரங்களாக நடத்தி வரும் வாரப்பத்திரிக்கை தான் “தவம்”.  அந்தப் பெயருக்கே ஒரு சிறந்த காரணம் இருக்கிறது. ‘TA’mil ‘VA’sipin ‘M’anam - 'த'மிழ் 'வா'சிப்பின் 'ம'ணம்  என்பதிலுள்ள முதல் எழுத்துக்களைச் சேர்த்து TA-VA-M ‘தவம்’ என்று தன் இதழின் பெயரை அமைத்திருக்கிறார் அனிதா ராஜேஷ். 


வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று வெளியாகும் தவம் இதழின் மேல் அட்டையை அழகாக வடிவமைத்துக் கொடுப்பவர்கள் யார் தெரியுமா? பள்ளியில் பயிலும் அவருடைய இரண்டு பெண்குழந்தைகளான ரஜிதாவும் ரஷ்மிதாவும் தான்!  


ஒரு குக்கர் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதனால்,  மே 20, 2022 தவம் இதழை ஒரு புரட்டல் புரட்டிவிட்டு அனிதா ராஜேஷின் கதையைப் பார்ப்போமா?


மொத்த பக்கங்கள் 143 என்பதே ஒரு பெரிய சாதனைதான்! இத்தனை பக்கங்களுக்கு ‘கண்டெண்ட்’ - உள்ளடக்கம்- பலரிடமிருந்தும் கேட்டுப் பெறுவதும், வெவ்வேறு ஃபார்மட்களில் வரும் கோப்புகளைச் சீராக்கி வேர்டு ஃபைல் ஆக்குவதும்,  பின்னர் வகைப்படுத்தி மேலேற்றுவதும் என்னதான் பி. ஈ.(EEE ) படித்து, மெப்கோ ஷ்லெங்கில் எம். ஈ. முடித்து, ஐஐடி சென்னையில் பி. எச்டி. முடித்திருந்தாலும் சாதாரண வேலையா என்ன?


எம்.ஈ.  முடிக்கும்போதே ஐஏஎஸ். தேர்வையும் எழுதி, முதல் முயற்சியிலேயே  முதல் மற்றும் முக்கியத் தேர்வுகளில் வெற்றி பெற்றும், அந்தப் பணியிலுள்ள எதிர்காலச் சிரமங்களைக் கருத்தில்கொண்டு பெற்றவர்கள் எழுப்பிய கவலையினால்  நேர்முகத் தேர்வை அனிதா புறக்கணிக்கவேண்டியக் கட்டாயம் ஏற்பட்டது. அதன் பிறகே ஐ.ஐ.டி.யில்  கம்ப்யூட்டர் துறையில் பி.எச்டி. க்குப் போனார். (IIT Madras - research in Speech and Image Processing of Indian Languages using Artificial Neural Networks). 


ஆச்சரியம் என்னவென்றால், தமிழ்நாட்டிலுள்ள 80 சதவீதம்  மாணவர்களைப் போன்றே இவரும் ஆங்கிலவழிக் கல்விதான் பயின்றவர்!  தமிழோடு இருந்த தொடர்பு வாசிப்புடன் கூடிய பேச்சு மொழி மட்டுமே. 


சிறிது காலம் ஆசிரியப் பணி, ஐஐடி-யில் ஆய்வுப் பணி என்று இருந்தவருக்கு மனமொத்த இளைஞரான ராஜேஷுடன் திருமணம் நடந்தது. கணவருக்கு அமெரிக்காவில் வேலை என்பதால் அவருடன் இவரும் விமானம் ஏறினார். (அதற்கும் முன்பே தன் ஆய்வறிக்கையைச் சமர்ப்பிக்கவென அனிதா இருமுறை அமெரிக்கா வந்துசென்றது குறிப்பிடத்தக்கது). கனெக்டிகட், விஸ்கான்சின், நியூ ஜெர்சி, ஹூஸ்டன் என்று மாறிக்கொண்டே இருந்தவர்கள் இப்போது 2018 முதல் அட்லாண்டாவில் வசித்து வருகிறார்கள்.


அளவான குடும்பம். இரண்டு அழகான பெண்குழந்தைகள்.  மனைவியின் சிந்தனைச் சுதந்திரத்தில் தலையிடாத அன்பும் புரிதலும் கொண்ட துணைவர். இன்பமாக வாழ்க்கையைக் கழிக்கவேண்டிய வயதில் அனிதா ‘தவம்’ புரியவேண்டிய அவசியம் தான் என்ன?


அவரே சொல்கிறார். (அலைபேசி/வாட்ஸ்அப் வழியில் எடுத்த  பேட்டி):


அம்மாவின் புத்தக வாசிப்பு பழக்கமே என்னுள்ளும் புகுந்திருக்கிறது.  பள்ளி,  கல்லூரியில் ஆங்கிலவழிப் பாடம் என்றாலும்,  ஆங்கிலக் கலப்பில்லாமல் தமிழ் பேசித் திரிந்த நாட்கள் உண்டு!  மேலும் என் குழந்தைகளுக்குத் தமிழ் போய்ச் சேர வேண்டுமே என்ற சுயநலமே என் தமிழ் மீதான  ஈடுபாடாக  வெளிப்படுகிறதோ என்ற ஐயம் எனக்கு உண்டு!


கேள்வி:   தமிழில் உங்கள் முதல் எழுத்து அல்லது பேச்சு எப்போது வெளிப்பட்டது?    


பள்ளியில் படிக்கும்போது விகடனுக்குக் கவிதை எழுதி அது பிரசுரமானது உண்டு.  2020இல் என் முதல் சிறுவர்கள் நூல் ஆய்வு அட்லாண்டா தமிழ்ச் சங்கத்தில் வெளியானது.  ஜூலை 2020இல்  ஃபெட்னா - வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கக் கூட்டமைப்பு- அதில் பேசியது என் முதல் பட்டிமன்றப் பேச்சு.  2020இல் நான் எழுதிய 12 சிறுகதைகள் பரிசு பெற்றன.  அதே ஆண்டு என் கவிதை தொகுப்பு அமேசான் கிண்டில்  மூலமும் அடுத்த ஆண்டு 'வல்லினச் சிறகுகள்' நடத்திய போட்டியில் மூன்றாம் பரிசு பெற்று அச்சிலும் வெளியானது. 2021இல் ஃபெட்னா வின்  ஓவியப் போட்டி மற்றும் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்று நேஷனல் சாம்பியன்ஷிப் வென்றேன்!


இதே போட்டிக்கு என் மகள்கள் இருவரும் தத்தம் வயதுப் பிரிவில் ஆங்கிலத்தில் கவிதை, கதை எழுதி அவர்களே அதைத் தமிழில் மொழிபெயர்த்து ஓவியம் வரைந்து அனுப்பிப் பரிசு பெற்றது என் வெற்றியை விட மகத்தானது!



கேள்வி:  கையெழுத்துப் பத்திரிக்கை நடத்திய அனுபவம் உண்டா?


இல்லை!  ஆனால், 2015-16 இல்  இங்குள்ள தமிழ்ச் சங்கத்தின் தன்னார்வலராகப் பணியாற்றியபோது,  ஆங்கில மொழியில் உள்ளதுபோல் தமிழ் வாசிப்பை மேம்படுத்துவதற்காக Level-wise, Age-wise reading Content in Tamil  ஏற்படுத்த முயன்றேன், முடியவில்லை. 


அந்த எண்ணத்தைச் செயல்படுத்த வேண்டும் என்ற உந்துதல் தான் என்னைத் தவம் இதழைத் தொடங்க வைத்தது. ஆனால் இது சிறுவர்களுக்கான பத்திரிகை என்று எண்ணிவிட வேண்டாம்.  தமிழ் பயில விரும்பும் மாணவர்களுக்கு வயது வாரியான கதை கட்டுரை கவிதைகளை பொறுக்கி எடுப்பதற்கு வசதியாக ஒரு தளம் உருவாக்கவே இந்த இதழை நான் நடத்துகிறேன்.  மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில் சுமார் 150 முதல் 200 இதழ்கள்  வெளியாகிவிடும்  அல்லவா?  அவற்றிலிருந்து நிச்சயமாக 300 முதல் 500 வரை நல்ல எழுத்துக்கள் எனக்குக் கிடைக்கும்.  வயது வாரியாக வகைப்படுத்தி  மின்நூல்களாக வெளியிடுவதன் மூலம் என் உள்ளக் கிடக்கை நிறைவேறும் என்று நம்புகிறேன். 


ஆசிரியர் குழு அமைத்தால்  என்னுடைய நோக்கம் சிதறி விடுமோ என்ற அச்சத்தினால் தான்  தனி ஒருத்தியாக ஈடுபடுகிறேன்.  என் குடும்பமும் கணவரும் எனக்கு உறுதுணையாக இருக்கிறார்கள்.  ஆனால் நண்பர்கள்தான் அவ்வப்பொழுது அச்சமூட்டுவார்கள். வார இதழ் என்றால் வேலை அதிகமாயிற்றே, திரும்பிப் பார்ப்பதற்குள் வெள்ளிக்கிழமை வந்து விடுமே என்று என் மீதான நியாயமான கவலையை அவர்கள் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த கவலையே என்னை எதிர்நீச்சல் போட வைக்கிறது. 


கேள்வி: தவம் இதழின் கட்டமைப்பு பற்றி கூறுங்களேன்?


2021 அக்டோபர் 3 இல் நடந்த இரண்டாவது சிலப்பதிகார மாநாட்டில் எனக்குப் 'பெருந்தமிழர் விருது' வழங்கப்பட்டது. அது என்னைத் தமிழ்ச் சமூகத்திற்கு இன்னும் நிறைய செய்யவேண்டும் என்கிற உந்துதலைத் தந்தது. என்னை ஈன்றெடுத்த தாயின் பிறந்த தினம் அக்டோபர் 4.  அப்போதுதான் முதல் தவம் வார இதழை அமேசான் கிண்டிலில் உருவாக்கும் எண்ண விதை என்னுள் விழுந்து, பத்தே நாளில் முதல் தவம் இதழ் அக்டோபர் 15, 2021 அன்று வெளியிடப்பட்டது.    


ஒவ்வொரு இதழிலும் தலையங்கம் உண்டு.  தவிர 25 பிரிவுகளில் எழுத்துக்கள் இடம் பெற வேண்டும் என்று விரும்புகிறேன். 

சங்க இலக்கியம், நவீன இலக்கியம், மொழிபெயர்ப்பு இலக்கியம்,  அறிவியல் தமிழ், சிறுவர் இலக்கியம், தமிழர் பாரம்பரியம்  என்ற பிரிவுகள் முக்கியமானவை.  முந்தைய இதழைப் படித்தவர்கள் தரும்  பின்னூட்டத்தை ‘பாராட்டு-குட்டு’  என்ற பெயரிலும்,  உலகம் முழுவதிலும் தமிழுக்காக நடத்தப்படும் போட்டிகளை ‘போட்டித்  தகவல்கள்’  என்ற பிரிவிலும்  வெளியிடுகிறோம்.  தவிர சிறுகதை கட்டுரை கவிதை தொடர்கதை ஓவியம் நகைச்சுவை நூல் அறிமுகம் மற்றும் நூல் விமர்சனம் ஆகிய பிரிவுகளும் இடம்பெறுகின்றன.. 


கேள்வி: பெரும்பாலான இணைய இதழ்கள்,  இணையதளத்தின் மூலம் வெளியாகின்றன.  தவம் இதழ் மட்டும் கிண்டில் மூலம் தானே வெளியாகிறது!  என்ன காரணம்?


கிண்டில்  மூலம் வெளியாவதால், பக்க வடிவமைப்புக்கு நான் நேரம் செலவழிக்க வேண்டியதில்லை.  கிண்டிலுக்கே  உரிய அழகியல் அம்சங்கள் தானாகவே தவம் இதழுக்குக்  கிடைத்துவிடுகின்றன. மேலும் வலைத்தளப் பதிவிற்குச்   செலுத்துவது போல் கிண்டிலுக்கு ஆண்டு கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. வலைத்தளம் எப்போது வேண்டுமானாலும் மூடப்படலாம்.. ஆனால் கிண்டில்  அதிக ஆயுள் கொண்டது.  


மிக மிக முக்கியமான அம்சம்,  கிண்டிலில் விளம்பரங்கள் கிடையாது!  கவனச்சிதறல் இல்லாமல் குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் படிக்க முடியும் !


கேள்வி: ஆனால் கிண்டிலில் படிப்பதற்கு என்று தனியாகக்  கட்டணம் இருக்கிறதே !


அது உண்மைதான்.  கிண்டிலில் நாம் வைக்கும் எல்லா புத்தகங்களுக்கும் ஒரு விலை குறிப்பிட்டாக வேண்டும்.  அந்த வகையில் தவம் இதழின் விலை 99 ரூபாய்.  ஆனால் அதை இலவசமாகவே நீங்கள் படிக்க முடியும், எப்படித் தெரியுமா?

 

தவம் இதழ்  வாராவாரம் வெள்ளிக்கிழமை வெளியாகிறது.  அதை உடனே வெள்ளி சனி ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில்,  உங்கள் அலைபேசியில், அல்லது  டேப்லெட்டில் அல்லது  லேப்டாப்பில்  ஏற்கனவே நீங்கள் இறக்கி வைத்துள்ள ’கிண்டில் ஆப்’ பில் Download for Free என்று க்ளிக்கினால் போதும்! (உங்கள் வாட்ஸ் அப் நம்பரை மின்னஞ்சல் செய்தால், இதற்கான லிங்க்கை வாராவாரம் நானே அனுப்பிவைப்பேன்),


அந்த மூன்று நாட்களைத் தவறவிட்டுவிட்டால், கிண்டிலுக்குள் நேரடியாக நுழைந்து, tavam என்று search செய்தால் எல்லா தவம் இதழ்களையும் பார்வையிடலாம். வேண்டுவதை உங்கள் kindle unlimited சந்தா மூலம் படித்துக்கொள்ளலாம்! 


கேள்வி: ஒவ்வோர் இதழும் எவ்வளவு பக்கம் இருக்க வேண்டும் என்று ஒரு கணக்கு வைத்திருக்கிறீர்களா?   


சராசரியாக 140 பக்கமாவது வருகிறது. குறைந்தது 120 அதிகபட்சம் 170. (5 mb முதல் 30 mb அளவு). 


கேள்வி:  யார் வேண்டுமானாலும்  படைப்புகளை அனுப்ப முடியுமா?  எப்படி அனுப்புவது?


தவம் இதழின் நோக்கங்களை ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.  அதற்கு ஏற்ற வகையிலான எழுத்துக்களை வரவேற்கிறேன்.  உங்கள் கதை கட்டுரை கவிதைகளுடன் நீங்களே ஓவியம் வரைந்தும் அனுப்பலாம்.  தமிழ்க் குழந்தைகளுக்கான  தொண்டாக இதை நீங்கள் கருத வேண்டும். 


படைப்புகளை   tavam.emagazine@gmail.com  என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.  யூனிகோடில்,  லதா ஃபாண்டில், எம்எஸ் வேர்டு கோப்பாக அனுப்ப வேண்டும்.  பிடிஎஃப் அனுப்பக்கூடாது.  வேறு ஐயங்கள் இருந்தால் இதே முகவரியில் தொடர்பு கொள்ளவும். 


கேள்வி:  இதுவரை 33 தவம் இதழ்கள் வெளியாகி உள்ளன.  உங்களை ‘தவம்’ செய்ய தூண்டியவர்களில் முக்கியமாக யாருக்காவது நீங்கள் நன்றி சொல்ல வேண்டியிருக்கிறதா? 


நிச்சயமாக! 


என்னை ‘தமிழே அமுதே’வில் நூலாய்வு செய்ய முதன்முதலில் தூண்டிய ஜயசாரதி முனுசாமி அண்ணாவிற்கு என் நன்றி. என்மகள்கள்தான் 'தவம்' உருவாக அதிமுக்கியக் காரணம். அவர்கள் என்னிடம் தங்களின் சிறுவயது முதல் கேட்ட தமிழ் சார்ந்த கேள்விகளுக்கான விடையே 'தவம்' வார மின்னிதழ்! அவர்களுக்கும் என் நன்றி.

 ****

‘மதுரை மருக்கொழுந்து வாசம்’ என்று ஒரு பாடல் உண்டு.  மதுரைக்காரரான அனிதா ராஜேஷின் ‘தவம்’ அந்த மருக்கொழுந்து வாசத்தை அமெரிக்காவில் வாரந்தோறும் பரப்பிக்கொண்டு வருகிறது.  அகிலம் முழுவதும் அந்த வாசம் பரவட்டும் என்று வாழ்த்துகிறோம்!


 - இராய செல்லப்பா நியூ ஜெர்சியில் இருந்து.