வியாழன், மே 24, 2018

இரவுக்கு ஆயிரம் புண்கள் -1


 பதிவு 01/2018
இரவுக்கு ஆயிரம் புண்கள் -1

கொடைக்கானலுக்கு  அந்தப் பெயர் எப்படி வந்தது என்பது குறித்துப் பல வருடங்களாக ஆராய்ந்ததில்,‘கோடைக் கனல்’ என்பதின் திரிபு தான் அது என்று தெரிந்தது. கோடையின் வெப்பத்தில் இருந்து தப்புவதற்கான வழியாக இருந்த மலைப்பகுதி என்பதால் வஞ்சப்புகழ்ச்சி அணியாக அந்தப் பெயரில் அழைத்திருக்கவேண்டும். ஆனால், தஞ்சாவூரை ‘டேஞ்சூர்’ என்றும் வத்தலக்குண்டை ‘பட்லகுண்டு’ என்றும் ஆக்கியவர்கள்தாம்  கோடைக்கனலைக் கொடைக்கானல் என்று ஆக்கிவிட்டிருக்கவேண்டும்.  (நான் அதை ‘கோகா’ என்று சுருக்கமாக இங்குக் குறிப்பிடுவேன் என்பதை அறிக.)

2010 இன் மே மாதத்தில் சில நாட்கள் கோகா-வுக்குச் சென்றிருந்தோம். ஒரே மழை. ஏரியில் படகுப் பயணம் செய்ய முடியமாலும்  பல இடங்களைச் சுற்றிப் பார்க்க முடியாமலும் போயிற்று. வெள்ளி அருவி என்னை மிகவும் கவர்ந்தது. மிகவும் அழகான இயற்கைச் சூழல். நமது வலைப்பதிவில் வெளியிடும் பொருட்டு, அருவியின் பின்னணியில் என்னை மட்டும் தனியாகப் படமெடுக்கச் சொன்னால், என்னைச் சுற்றியிருந்தவர்கள் யார் யாரோ, அவர்கள் முழுமையாகவும், நான் மட்டும் அரைப்பகுதியாகவும் தெரியும்படி மிகுந்த முயற்சிக்குப்பின்  இளைய நண்பர் ஒருவர் படம்பிடித்துக்கொடுத்தார். கோகா- வுக்குள் நுழையும்போது எடுத்த படம் அது. பரவாயில்லை, திரும்பிச் செல்லும்போது வேறொருவரை விட்டு நல்லதாகப் படம் பிடித்துக்கொள்ளலாம் என்று எண்ணினால், திரும்பும் நேரம் நல்ல மழை. மு.க.ஸ்டாலினும்  முதல்வர் கனவும் மாதிரி, அல்லது ராகுல் காந்தியும் பிரதமர் கனவும் மாதிரி ஆகிவிட்டது. அதற்காகவேனும் மீண்டும் கோகா-விற்குப் போகவேண்டும் என்னும் ஆசை இருந்துகொண்டே இருந்தது. இந்த 2018 மே-யில் பலித்துவிட்டது.       

2010 மே மாதத்தில் எடுத்த படம்
மூன்று இரவுகள் மூன்றேமுக்கால் பகல்கள் –என்ற தொகுப்பில் பல பள்ளம் மேடுகளைக் கடந்து கண்காணாத இடத்தில் இருந்த ஒரு அழகான ஓட்டலில் இணையத்தின்மூலம் இடப்பதிவு செய்து கிளம்பினோம்.  காலை உணவு இலவசம் என்றார்கள். வழக்கம்போல் ஐந்தரை மணிக்கே எழுந்துவிட்டோம். ஐந்து மணிக்கே சூரியன் நன்றாக வரத்தொடங்கிவிட்டானே! ஆனால் தேநீர் கிடைக்கவே ஏழுமணி ஆனது. ஒன்பது மணிக்குமேல்தான் சூடான இட்டளி, வடை, பூரி, பொங்கல் கிடைத்தது.

2018 மே 15 - வெள்ளி அருவியின் பின்னணியுடன்
இருங்கள், இட்லி என்பதை இட்டளி என்று   எழுதினால் காரணம் கேட்காமல் விடுவீர்களா?  என்னுடைய இளங்கலை வகுப்பில் பாடம் எடுத்த ஓர் இளம் ஆசிரியரின் விளக்கத்தினால் வந்த வினை (1967-70) அது. அதாவது, வீட்டிற்கு விருந்தினர் வந்தால், தமிழர்கள் இட்லி தான் செய்து தருவார்களாம். அது சங்ககாலத்தில் மிகவும் பிரபலமாம். ‘இட்டு’ அளிப்பதால் அது ‘இட்டளி’ என்று பெயர் பெற்றதாம். அதுவே நாளடைவில் திரிந்து வடவர்களால் ‘இட்லி’ என்று அழைக்கப்படலாயிற்றாம். எனவே பச்சைத்தமிழர்கள், இனிமேலாவது  இட்டளி என்ற பழந்தமிழ்ப்பெயரைப் பிரபலப்படுத்தவேண்டும் என்று அவர் கேட்டுக்கொள்வது வழக்கம்.  அவருடைய நினைவு திடீரென்று வந்தது. பிரபலப்படுத்திவிட்டேன். அவர் இப்போது எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை.

விடுங்கள்.  வழக்கம் போல, குறிஞ்சி ஆண்டவர் கோயில், குழந்தை வேலப்பர் கோயில், ஏரியில் படகுப்பயணம், பிரையன்ட் பூங்காவில் பாதிக்குமேல் ‘ஆட்கள் வேலை செய்கிறார்கள்’ பலகையோடு மூடப்பட்டிருந்த வசதிகள், பூங்காவில் பூக்களோடு பூக்களாகப் பூவையர்கள் பூப்பந்து விளையாட்டு, என்று வழக்கமான நிகழ்வுகள்தாம். வேறில்லை.


2018 மே 13 -பிரையண்ட் பூங்கா 
‘டால்பின் நோஸ்’ என்ற முனைக்குச் செல்லக் கிளம்பினோம். ‘பெரிய வண்டிகள் செல்ல வேண்டாம்’ என்று சில அறிவிப்புப் பலகைகள் கெஞ்சின. எது பெரிய வண்டி என்று தெரியவில்லை. எங்களுடையது ‘இன்னோவா’- அது ‘பெரிய’ வண்டியில்லை என்பது ஓட்டுனரின் வாதம். எப்படியோ இரண்டு மூன்று கிலோமீட்டர்கள் சரிந்துகொண்டே போனோம். பிறகு நிறுத்தினோம். அவ்வளவுதானாம். அங்கிருந்து செங்குத்தான, கரடுமுரடான, மனிதர்கள் செல்ல முடியாத கால் வைத்தால் வழுக்கும் ஒரு பகுதியில் இறங்கி இரண்டு கிலோமீட்டர்கள் நடக்கவேண்டுமாம். அதன்பிறகு தான் டால்பின் நோஸ் வரும் என்று ஊரில் இருந்த சில தேநீர்க்கடைகாரர்கள் சொன்னார்கள். மற்றப்படி, சுற்றுலாத்துறை என்று ஒன்று இருக்குமே அதன் அறிவிப்புகள் எங்கும் காணோம். தமிழ்நாட்டில் இருக்கும் இரண்டே பெரிய மலைசார் சுற்றுலா இடங்கள் ஊட்டியும் கோகா-வும் தான். ஊட்டி ஒரளவு பரவாயில்லை. கோகா- இந்த அளவுக்கு மோசமாகத்தான்  இருந்தாகவேண்டும் என்று அந்தத்துறை ஏன் முடிவெடுத்தது என்று தெரியவில்லை. 

பில்லர் ராக் என்பதைப் பார்த்தோம். ‘மெக்கனாஸ் கோல்ட்’ படத்தில் வருமே, அசையும் மலைகள், அதுபோலிருக்கும் என்று எதிர்பார்த்து ஏமாந்தேன்.  ஆனால், தூண் போல நின்ற அந்த இரண்டு உயரக் கற்களின் மீதும் பனித்திரை மூடியும் விலகியும் கண்ணாமூச்சி காட்டி, படமெடுப்பதில் சிரமப்படுத்தியதைச் சொல்லியாகவேண்டும். மோலியர் பாயிண்ட் என்பதைப் பார்க்க டிக்கட் வாங்குமிடத்தில் நிறையக் கூட்டம் இருந்ததால், அடுத்த முறைக்கு ஒத்திவைத்தோம். ‘ஹோம்-மேட் சாக்கலேட்’ என்று கருப்பும் வெள்ளையுமாக நாமக்கட்டி அளவுக்குத் திடமான பொருட்களை வாங்கிக்கொண்டோம். இல்லையென்றால் அது தெய்வக்குற்றம் ஆகலாம் என்றார்கள். பத்து வருடம் முன்பு வாங்கியதையே மூன்று நான்கு வருடங்கள் குளிர்பெட்டியில் வைத்திருந்து வெளிமாநில விருந்தினர்களுக்குக் கொடுத்துத் தீர்த்தது நினைவுக்கு வந்தது. இந்த முறை யாருக்கு அதிர்ஷ்டம் அடிக்குமோ?

கோடை விடுமுறை என்பதாலும், நாங்கள் சனி-ஞாயிறுகளில் சென்றிருந்ததாலும், நடமாடிய நேரத்தை விடவும், காரில் இருந்தபடியே பயணித்த நேரமே அதிகம். வேறு வழி? முன்னும் பின்னும் எதிருமாக நூற்றுக் கணக்கான  கார்கள்.  நல்ல வேளை மழைத்துளி ஒன்று கூட விழவில்லை. மழைவந்தால் நகரமே நாறிப்போயிருக்கும்.

படகுப்பயணம் போனோம். டிக்கட்  வழங்கும் கொட்டடிகள் (‘கவுண்ட்டர்’) ஒன்றுக்கொன்று நேர் எதிர்த்திசையில், ஏரியின் எதிரெதிர்ப் பக்கங்களில் அமைந்துள்ளன (என்பதைப் பின்னால்தான் தெரிந்துகொண்டோம். அறிவிப்புப் பலகைகள் இல்லை.)  எங்களுக்கு முன்னால் சுமார் ஐம்பதுபேர் வரிசையில் இருந்தார்கள். எங்களுக்குப் பின்னால் இன்னும் இருபதுபேர் இருக்கலாம். காலை ஒன்பது அல்லது ஒன்பதரை இருக்கலாம்.  எங்களுக்கு முன்னால் டிக்கெட் வாங்கியவர்கள் கும்பலாகப் படகுக்காகக் காத்திருந்தார்கள். ஆனால் எங்களுக்கு டிக்கட் வழங்க ஒருவரும் வரவில்லை. கவுண்ட்டர் திறக்கப்படவே இல்லை. அங்கே பலூன் விற்பவர்களும் கரும்புச் சாறு விற்பவர்களும், ‘அவர் சாப்பிடப் போயிருக்கிறார், ஒரு மணி நேரம் காத்திருங்கள்’ என்று தெரிவித்தார்கள். கரும்புச் சாறு அல்லது ஐஸ்க்ரீம் வேண்டுமா என்றார்கள். அல்லது மாங்காய்ச் சுண்டலும் கிடைக்கும் என்றார்கள்.  

வெகுநேரம் காத்திருந்த பிறகு, எதிர்த்திசையில் உற்றுப்பார்த்தால் அங்கே பெரிய கும்பல் தெரிந்தது. அங்கிருந்தும் படகுகள் கிளம்புவது தெரிந்தது. அரைமணி நேரம் நடந்து அந்த இடத்தை அடைந்தோம். ஐந்து பேர் பயணிக்கும் படகுக்கு, இருபது நிமிடம் செல்வதற்கு  ரூ.330 என்றார்கள். இருபது நிமிடம் போதாது, நாற்பது நிமிடம் வேண்டும் என்றேன்.  அதற்கு ரூ.660 ஆகும். ஆனால், இன்று கூட்டம் அதிகம் என்பதால் இருபது நிமிடம்தான் தரமுடியும் என்றார்கள். 

படகில் ஏறிக்கொண்டோம். ஓட்டுனர் அருமையாகச் செலுத்தினார். ஏரியின் ஓரத்தில் அல்லிக்கொடிகளை நீண்ட தண்டோடு பற்றி இழுத்துக் கொடுத்தார். ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கை முடிப்பதற்கு ஆன காலத்தை விடவும் நீளமாக இருந்தது அல்லித்தண்டு.     

இருபது நிமிடம் ஆகிக் கொண்டிருந்தது. இன்னும் இருபது நிமிடம் போகலாமா என்றேன். நீங்கள் விரும்பினால் போகலாம் என்றார். அவர்கள் முடியாது என்றார்களே என்றேன். அது அப்படித்தான் என்று சிரித்தார். முன்னூற்று முப்பது ரூபாயை என்னிடமே கொடுத்துவிடுங்கள், ரசீது கிடையாது என்றார். அவர்களிடம் கொடுத்தாலும் ரசீது தரமாட்டார்கள் என்றார். சிரிப்பில் பவ்வியம் இருந்தது. எவ்வளவு குழந்தைகள் என்றேன். நான்கு என்றார். எல்லாருக்கும் ஆதார் கிடைத்து விட்டது என்றார் பெருமிதத்துடன். சரி என்று பணத்தைக் கொடுத்தேன். எப்படியும் சீசனில் ஒருநாளைக்கு இரண்டாயிரம் தேறும். பெரிய குடும்பம். போகட்டும்.

கரி அடுப்பில் சுட்ட மக்காச்சோளம் அடடா, எவ்வளவு சுவை தெரியுமா? உணவுக்காக சைவ ஓட்டல்களைத் தேடிக்கொண்டு வெகுநேரம் திரிந்தது பற்றியெல்லாம் எழுதவேண்டாமே!

திரும்பிவரும்போது மலை எங்கும் பலாப்பழங்கள் குவிந்துகிடந்தன. முழுப்பழம் வாங்கவேண்டும் என்றார்கள் காரில் இருந்தவர்கள். கிலோ இருபது ரூபாய் என்று வாங்கினோம். இதையே பண்ருட்டியில் நாலில் ஒரு பங்கு விலைக்கு வாங்கலாம் என்றார் காரில் இருந்த ஒரு பெண்மணி. பெயர் விஜி என்கிற விஜயலட்சுமி.  எனக்கும் அது நினைவுக்கு வந்தது.  ஆனால் அது அந்தக் காலம். 

1976 இல் மே மாதம் 24ஆம் தேதிக்கு முன்னால் அவரை நான் அறிந்திருக்க வாய்ப்பில்லை.  என்னை அவரும். அந்தப் பலாப்பழத்தைக் கைகளில் நல்லெண்ணெய் வெள்ளம்போலத் தடவிக்கொண்டு, கூடுமானவரை சுளைகள் முழுதாக வரும்படி முயன்று வெளியெடுத்துக்கொண்டிருந்தார் அவர். அந்தச்சுளைகளைச் சுவைத்தபடி தான் இதை எழுதிக் கொண்டிருக்கிறேன். 

எல்லாச் சுளைகளும் எடுத்து முடித்தபிறகு, குப்பைகளை அழகாக ஒரு பிளாஸ்டிக் பையில் சேகரித்தார். வீட்டின் பிற குப்பைகளோடு சேர்த்துவைத்துவிட்டுக் கைகழுவப் போகிறார் என்று எண்ணினால்... நேரே என்னிடம் வந்தார்.

‘என்ன எழுதுகிறீர்கள்?’ என்றார். குரலில் கொஞ்சம் கோபம், கொஞ்சம்  எரிச்சல், அல்லது கோடை வெயில் தந்த புழுக்கத்தின் தவிப்பு இருந்ததைப்  புரிந்துகொண்டேன்.

‘ஒன்றுமில்லை. இரவுக்கு ஆயிரம் புண்கள் என்ற தலைப்பில் எழுத உட்கார்ந்தேன். சரி, அதை அடுத்த பதிவில் போட்டு விடலாம், சூட்டோடு சூடாக, கொடைக்கானல் போய்வந்ததைப் பற்றி எழுதிவிடலாமே என்று தோன்றியது. வலைப்பதிவின் பக்கம் வந்தே ஐந்து மாதங்கள் ஆகப்போகிறது. வாசகர்கள் கோபத்தோடு இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும்தானே?’ என்றேன் பணிவுடன்.

அந்தப் பணிவில் சற்றே மகிழ்ந்தவராக, ‘நல்லது. இனிமேலாவது ஒழுங்காக வாரம் ஒருமுறையாவது எழுதுங்கள். இல்லையென்றால் உங்களை நான் தான் எழுதவிடாமல் தடுக்கிறேன் என்று எனக்குக் கெட்ட பெயர் வந்துவிடும்’ என்றவர், ‘அத்துடன் மறக்காமல் உங்களோடு நாற்பத்திரண்டு வருடம் நான் குப்பை கொட்டி ஆயிற்று என்பதையும் எழுதி விடுங்கள். இல்லையென்றால் வாசகிகள் என்மீது கோபம் கொள்ளப்போகிறார்கள்’ என்று கூறிவிட்டுக் கை கழுவப் போனார் விஜி.
இன்று காலை, எங்கள் குடியிருப்பிலுள்ள பிள்ளையார் கோயிலில் வழிபட்டுவந்த பிறகு எடுத்த படம் (2018 மே 24)  
ஆம், இன்று (மே 24, 2018) எங்களின் 42ஆவது திருமண நாள்! அன்புள்ள விஜி, உங்களுக்கும், உங்கள் பெற்றோர்களுக்கும் மிக்க நன்றி! நம் குழந்தைகளுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் நமது அன்பு ஆசிகள்!  

-இராய செல்லப்பா  சென்னை
    

37 கருத்துகள்:

  1. வணங்குகிறேன் ஐயா... வாழ்த்துகள் பல...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொடைக்கானல் பயணத்திலிருந்து திரும்பி வருகையில் தங்களைச் சந்திக்க விரும்பினேன். ஆனால் மதுரை மீனாக்ஷி அம்மனைப் பகல் பன்னிரண்டு மணிக்குள் தரிசித்துவிடவேண்டி இருந்ததால் கோடியிலிருந்து காலை ஏழு மணிக்கே கிளம்பி நேரடியாகக் கோவிலுக்கே செல்லவேண்டி அமைந்துவிட்டது. அப்படியும் அம்மனை நெருங்கும்போது சரியாக மணி பன்னிரண்டு! அடுத்த முறை தங்களை நிச்சயம் நேரில் சந்திப்பேன். நன்றி.

      நீக்கு
    2. 'கோடையிலிருந்து' என்பது கோடியிலிருந்து என்று வந்துவிட்டது...

      நீக்கு
  2. "இட்டளி" என்பதைப் பார்த்த உடனே எனக்கு நினைவு வந்துவிட்டது. கொடைக்கானல் பயணப் படங்கள் பிறகு வெளியிடலாம் என்று திட்டமா?

    42 வருடங்களுக்குப் பிறகும் பலாச்சுளையை அவர்கள் அரிந்து தருகிறார்களே. கொடுத்துவைத்தவர்தான். வாழ்த்துகள்.

    டால்பின் நோஸ் -அதுக்கம் சரிவுகளில் வெகுவாக நடக்கணும். திரும்பி ஏறி வரணும். அது உங்களுக்குக் கடினமாக இருந்திருக்கும். மரத்தின் வேர்களே கோலங்கள் போல் பின்னி அமைத்துள்ள பாதை சிறப்பா இருக்கும்.

    ஹோம் மேட் சாக்லட்- அவ்வளவு சிறப்பா இல்லை.

    நீங்கள் எங்கு தங்கினீர்கள் என்று எழுதவில்லை. முழுப்பிரயாணமும் காரிலா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹோட்டல் Sierra வில் தங்கினோம். goibibo.com இல் பதிவு செய்தது.

      நீக்கு
  3. இரு வாரங்களில் புத்தகம் வரப்போகிறது என்று சொன்னபிறகு பல வாரங்கள் (மாதங்கள்) காணவில்லையே... பயணத்தில் பிஸியா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு புத்தகம் வந்துவிட்டது. 'சிகரம் பேசுகிறது' என்ற நூல். டாக்டர் வி.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் நிர்வாகத் திறமைகளைக் கூறும் முன்னூறு பக்க நூல். 'நாராயணீயம்' உரையுடன் எழுநூறு பக்கங்கள். கடைசி முறையாக பிழைதிருத்தம் நடந்துகொண்டிருக்கிறது. ஒரு முக்கிய தமிழ் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பும் முடிந்துவிட்டது. இந்த மூன்று வேலைகளால் தான் எனது வலைப்பதிவு தடைபட்டது. மற்றப்படி எனது மின்-புத்தகங்களை அச்சில் கொண்டுவரும் வேலையும் நடந்துகொண்டிருக்கிறது. சில வேலைகள் தமக்கே உரிய வேகத்தில் தான் நடக்கின்றன. என்ன செய்வது!

      நீக்கு
    2. http://sivamgss.blogspot.com/2018/06/1.html

      முன்னுரை எழுதி இருக்கேன். அநேகமா இன்னும் 3 பதிவுகள் வரை வரலாம். வந்து பார்த்துக் கருத்துச் சொல்லவும். தாமதமான திருமண நாள் வாழ்த்துகள்.

      நீக்கு
  4. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.முக்கிய விஷேஷ நாட்களில் நம் உற்றார் உறவினர்நண்பர்களின் நினைவு வருதல் சகஜம்தானே.இனிதொடர்ந்து எழுத இருப்பதான மணநாள் அறிவிப்பு கூடுதல் மகிழ்வளிக்கிறது.வாழ்த்துக்களுடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே! இனித் தொடர்ந்து எழுதுவேன். எல்லா வலைப்பதிவுகளையும் தொடர்ந்து படித்து கருத்துரையும் எழுதுவேன். நிச்சயமாக!

      நீக்கு
  5. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.முக்கிய விஷேஷ நாட்களில் நம் உற்றார் உறவினர்நண்பர்களின் நினைவு வருதல் சகஜம்தானே.இனிதொடர்ந்து எழுத இருப்பதான மணநாள் அறிவிப்பு கூடுதல் மகிழ்வளிக்கிறது.வாழ்த்துக்களுடன்

    பதிலளிநீக்கு
  6. பெரியோராகிய தங்களிடம் நல்லாசிகளை வேண்டுகின்றேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உழைப்பும் அறிவுத்திறனும் கைத்திறனும் உடைய தங்களைப் போன்ற சான்றோர்களுக்கு எனது அன்பும் ஆசியும் என்றும் உண்டு!

      நீக்கு
  7. இட்டளி -
    இப்படித்தான் எனது ஆசிரியரும் கூறினார்..

    பதிலளிநீக்கு
  8. எங்கள் இருவரின் மனமார்ந்த வாழ்த்துகள் சார்!.

    ஸ்வாரஸ்யமான பதிவு. கோகோ பயணம் படங்கள் நன்றாக இருக்கிறது. எங்கள் ஊரில் இட்டலி என்றுதான் சொல்வதுண்டு. லி கூட லியும் இல்லாமல் ளியும் இல்லாத உச்சரிப்பில். மலையாளத்தில் பல வார்த்தைகள் தமிழில் இருக்கும் சேஸ்ட் தமிழ் வார்த்தைகள் ப்ளஸ் சமஸ்க்ருதம்.

    கீதா: இட்டளி வாசித்த நினைவுண்டு வேறு எங்கோ ஒரு தளத்தில். ஆனால் இட்டவி தான் இட்டலி ஆனது என்றும் எழுதியிருந்தார் அந்தப் பதிவர். இட்டு அவித்து எடுப்பது என்பதால் இட்டவி.

    பலாப்பழம் உரிக்கும் நினைவு வந்தது. தேங்காய் எண்ணெய் கையில் தடவிக் கொண்டு பயன்படுத்தி. பதிவில் உங்கள் நகைச்சுவைக் குறும்பு ஆங்காங்கே! மிக்சரில் கிடைக்கும் அந்த இனிப்பு சதுரம் போல்...ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இட்லியில் லி-யோ, அல்லது ளி-யோ இல்லாவிட்டாலும் சூடு மட்டும் இருந்துவிட்டால் போதும், சாப்பிட்டுவிடலாம் அல்லவா?

      பலாப்பழம் அப்படியல்ல, ஒவ்வொன்றாக உரிக்கவேண்டும். கொட்டையை எடுக்கவேண்டும்...இப்படிப் பல விதிகள் உண்டு. ஆனால் சாப்பிடுவதற்குக் கையில் எடுக்கும்போது திடமாக இருக்கவேண்டும். திரவ நிலைக்குப் போய்க்கொண்டிருப்பதாக இருக்கக் கூடாது!

      -'காலம் செய்த கோலமடி' கடற்கரைக்கு வருகிறாளாமே?

      நீக்கு
  9. இட்டளி விளக்கம் நன்று.

    இடையில் ராகுல் காந்தி, ஸ்டாலின், ஜெயலலிதா வந்தது ரசனையாக இருந்தது.

    தங்களது ஆசிகளை வேண்டி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பும் ஆசிகளும் நண்பரே! அரசியல்வாதிகள் இல்லையென்றால் அச்செழுத்தில் ஏது சுவாரஸ்யம்?

      நீக்கு
  10. 24 ஐத் திருப்பிப் போட்டால் 42 வருகிறது! இனிய திருமண நாள் வாழ்த்துகள், நமஸ்காரங்கள்.

    ஒரு அதிருஷ்டம் இருந்திருந்தால் இந்த திங்கள் செவ்வாய் புதன் நான் கோகாவில் இருந்திருக்கவேண்டியது! ஆடிட் புண்ணியம் கட்டிக் கொண்டது!

    இட்டு அவி என்பதுதானே இட்டலி ஆகி இட்லி ஆனது என்பார்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ, தங்களுக்கு இருபத்து நான்கா? வாழ்த்துக்கள்! மேலும் இரண்டு இருபத்து நான்குகள் வரட்டும் என்று வாழ்த்துகிறேன்.

      நீக்கு
  11. என்னுடைய மனமார்ந்த ,திருமணநாள் வாழ்த்துகள் உங்கள் இருவருக்கும். அன்புடன்

    பதிலளிநீக்கு
  12. பெரியவர்கள் இருவருக்கும் எனது உளங்கனிந்த திருமணநாள் வாழ்த்துகள். உங்கள் ஆசீர்வாதம்.

    பதிலளிநீக்கு
  13. மிக்க நன்றி நண்பரே! எமது அன்பும் ஆசிகளும் என்றும் உமக்கு உண்டு. விரைவில் சந்திப்போம்.

    பதிலளிநீக்கு
  14. ஐயா!
    அருமையான விளக்கம்
    இட்டு + அளி = இட்டளி
    தமிழர் பண்பாட்டில் தமிழ் இருக்கு
    ஆனால்,
    தமிழர் பேச்சில் தமிழ் இல்லையே!
    அது தான்
    தமிழுக்குக் கேடாயிற்றே!

    பதிலளிநீக்கு
  15. அருமை. திருமண நாள் வாழ்த்துக்கள். மிகவும் சந்தோஷம். கோடைக்கானல் வர்ணனை நன்றாக இருந்தது. படகோட்டி ஒரு தேர்ந்த நடிகர் என நானும் அறிகிறேன். கணக்கில் வராத பணவரவு கொடுக்கும் அல்ப சந்தோஷம் சொல்லி மாளாதோ? நீண்ட நாட்கள் இருவரும் மகிழ்வோடு இருக்க வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே! நல்லோரின் வாழ்த்துக்கள் என்றுமே மகிழ்ச்சியைத் தரும் அல்லவா?

      நீக்கு
  16. Belated wedding day wishes to both of you. சுவையான பதிவு. தொடரட்டும். உங்கள் மின்னூலை படித்துக் கொண்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா! பிறவி எடுத்த பயனை அடைந்தேன்! மின்-புத்தகங்களையும் படிக்கிறார்களே மக்கள்! (விஷயம் தெரியுமா உங்களுக்கு? புஸ்தகா.காமில் என் கணக்கில் சில நூறு ரூபாய்கள் வந்திருக்கிறது! யாரோ பத்து, பதினைந்து பேர் என் நூல்களைப் படித்திருக்கிறார்கள் என்று தெரிகிறது!) நமது வலைப்பதிவைப் படிப்பவர்களில் ஐந்து சதவிகிதம் பேர் மின்னூல்களைப் படித்தாலும் ஓரளவு வருமானம் எழுத்தாளர்களுக்குக் கிடைக்கும் என்பது மகிழ்ச்சியான விஷயம்.

      நீக்கு
  17. மனம் நிறைந்த மண நாள் வாழ்த்துகள் ஐயா. பயண அனுபவம் அருமை. உங்களுடைய எழுத்தினை தொடர்ந்து ஆவலோடு எதிர்பார்ப்பவர்களின் நானும் ஒருவன். எங்களின் ஆவலை பூர்த்தி செய்வீர்கள் என்று நம்புகிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஐயா! தொடர்ந்து எழுதுவேன். தங்கள் எழுத்துக்களையும் தொடர்ந்து படித்துவருகிறேன்.

      நீக்கு
  18. அயல் நாடுகளில் வாசம் செய்பவர்கள் இட்லியை ரைஸ் கேக் என்று ஸ்டைலாகச் சொல்வார்களாம் நான் கொடைக்கானல் போய் வந்தது நினைவுக்கு வந்தது நன்றாகவே ரசித்தோம் மண நாள் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஐயா! சுவையாக எழுதுகிறீர்கள்! தவறாமல் படித்து வருகிறேன்.

      நீக்கு
  19. இட்டளி என்னும் இட்லி பற்றிய விளக்கம் சுவைமிக்கது. கே.டி.ஆச்சார்யா என்ற உணவு வரலாற்றாய்வாளர் இட்டளியின் தாயகம் இந்தோநேஷியா என்கிறார். இட்டு அவி ஆகிய இரு சொற்கள் இனைந்து இட்டவி ஆயிற்று என்று சொல்வோரும் உள்ளார்கள். கோ.கா. நல்ல சுருக்கம் abbreviation. மலைகளின் இளவரசியான கோடைக்கானல் பற்றிய பதிவு சுவாரஸ்யமானது.

    பதிலளிநீக்கு
  20. ''கொடைக்கானலுக்கு அந்தப் பெயர் எப்படி வந்தது என்பது குறித்துப் பல வருடங்களாக ஆராய்ந்ததில்,‘கோடைக் கனல்’ என்பதின் திரிபு தான் அது என்று தெரிந்தது''.

    கோடை காலங்களில் காணவேண்டிய சுற்றுலா தலம் என்பதால் கோடை + காணல் = கோடைக்காணல் . இதுவே திரிந்து கோடைகானலாக மாறியதாக நினைத்திருந்தேன். ஆனால் உங்கள் புது விளக்கம் அருமை...

    சட்டியில் இட்டு அவிப்பதால் அது ‘இட்டவி’ என்றுதான் அறிந்திருந்தேன் ... நீங்கள் அளித்திருக்கும் விளக்கம் புதுமை... நன்றி ! கிளிக் S .ஜட்ஜ்மென்ட் .

    பதிலளிநீக்கு