புதன், ஆகஸ்ட் 24, 2022

மணிகர்ணிகா (24) இதோ வந்து விட்டாள்! -கடைசிப் பகுதி

மணிகர்ணிகா (24) இன்று வர மாட்டாள் (கடைசிப் பகுதி)

(அமெரிக்காவில்  121வது நாள்:  10-8-2022)


டாக்டர் வசந்தாவின் நர்சிங்ஹோமுக்குச் சென்று விபத்து சம்பந்தமான சிசிடிவி காட்சியை நேரில் பார்க்க விரும்பினார் குல்கர்னி. மீனாவிடமும் மற்ற விவரங்களைக் கேட்டறிந்தார். திலகாவிடம் நஷ்ட ஈடு கொடுப்பதாகச் சொல்லி ஐந்து லட்சம் பெற்றுக்கொண்ட கருணாமூர்த்தி வெறும் ஐம்பதாயிரம் மட்டும் கொடுத்துவிட்டு, தவறு முழுவதும் மயூரியுடையதே என்று எழுதிவாங்கிய தகவலும் அவருக்கு அதிர்ச்சியளித்தது.  


மணிகர்ணிகாவும் நவீனும் இப்படித்தான் 
இருப்பார்களோ? (படம் நன்றி-இணையம்) 

மீனாவின் தோழியர் மயூரியும் திலகாவும் சம்பந்தப்பட்டிருந்த ஒரே காரணத்திற்காக இந்தப் பிரச்சினையை எப்படியும் தீர்த்துக் கொடுக்கவேண்டும் என்று எண்ணினார் குல்கர்னி. ஆகவே யாருக்கும் தெரியாமல் தன் நண்பரும் ஐபிஎஸ் அதிகாரியுமான அனந்தராம் ஷெனாயை நர்ஸிங்ஹோமுக்கு வரவழைத்தார். அந்த சிசிடிவி காட்சியைப் பார்த்த பிறகு கிரீஷிடமும் திலகாவிடமும் பேசினார் ஷெனாய். 


பலநாட்களாகவே கருணாமூர்த்தி மீது லஞ்சப்புகார்கள் இருந்துவந்தன. ஆனால் அவையெல்லாம் ஆளும்கட்சிக்கு ஆதரவாக அவர் செயல்பட்டதால் எதிர்க்கட்சிகள் தொடுத்த புகார்கள். அவற்றின்மீது ஆக்ஷன் எடுக்க முடியாமல் ஷெனாயின் கைகள் கட்டப்பட்டிருந்தன. இப்போது ஆளும்கட்சிக்காரரையே ஏமாற்றி வசமாக மாட்டியிருக்கிறார்.


“நல்லது, குல்கர்னி! சென்னையில் உங்களுக்கு நல்வரவு!” என்று வாழ்த்திவிட்டுத் தன் காரில்  பயணமானார் ஷெனாய்.

*** 

போலீஸ் ஸ்டேஷன் வாசலில் நின்றிருந்தாள் பரமேஸ்வரி. “ஐயா வந்துட்டாருங்களா?” என்று கேட்டாள். அவளுடைய மாதாந்திர வட்டி வசூல் தினம் அன்று. 


அவசரமாக ஓடிவந்த ஒரு போலீஸ்காரர், “வாங்க பரமேஸ்வரி! ஐயாவை மட்டும்தான் விசாரிப்பீங்களா, எங்களைக் கவனிக்க மாட்டீங்களா?” என்றவர், மரத்தடியில் ஒரு நாற்காலியைப் போட்டு அவளை உட்காரவைத்தார். ஐயா என்றது கருணாமூர்த்தியை. 


“ஐயாவுக்கு சம்பளம் வந்துட்டுதா?” என்றாள் பரமேஸ்வரி.


அவர் சிரித்தார். “சம்பளம் வாங்கித்தான் ஒனக்கு வட்டி கட்டணும்கற நெலமையில ஐயா இருக்காரா?”


பரமேஸ்வரிக்கு இந்த விவாதங்களில் அக்கறை கிடையாது. கருணாவின் ஜீப் வருகிறதா என்பதில் மட்டுமே கவனமாக இருந்தாள். 


போன காரியம் நிறைவேறாததால் பொருமிக்கொண்டே உள்ளே நுழைந்தார் கருணா. தன்னைப் பார்த்துப் பல்லை இளித்துக்கொண்டே வணக்கம் சொன்ன பரமேஸ்வரியைப் பார்த்ததும் ஆத்திரம் அதிகமாயிற்று. 


“என்னம்மா, ஒன்னோட பிசாத்து வட்டியை நான் குடுக்க மாட்டேன்னு நீயே வசூல் பண்ண வந்துட்டியா?” என்றார் இளக்காரமாக. 


வழக்கமான குழைவுடன், “என்ன பண்றதுங்க சார்! ஒரு ஆசாமிக்கு இன்னிக்கு அம்பதாயிரம் குடுக்கறேன்னு வாக்கு கொடுத்துட்டேன். அதான் எல்லா இடத்துலயும் பீறாஞ்சிக்கிட்டு இருக்கேன்” என்று எழுந்து நின்றாள் பரமேஸ்வரி.


“இங்கப்பாரு பரமேஸ்வரி! வட்டி, கிட்டி எல்லாம் குடுக்கற பழக்கம் எனக்கு கெடையாது. அசலும் வட்டியும் சேர்த்து ஒரே தொகையா அடுத்த மாசம் தர்றேன். வந்து வாங்கிக்க. ஒங்கிட்ட எவ்ளோ வாங்கினேன்? முப்பதாயிரம் தானே?” 

 

“ஐயோ, ஐயோ” என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டாள் பரமேஸ்வரி. “நல்ல கியாபகம் பண்ணுங்க சார், அம்பது ரூபா குடுத்தேன், முப்பதுன்னு சொல்றீங்களே!”


“என் கணக்கு எப்பவும் சரியாத்தான் மே இருக்கும்! அந்த வினோதா அம்மாவுக்கு இருவதாயிரம் ஒங்க அப்பனா வந்து குடுப்பான்?”


“இன்னாங்க சார், புதுசா பேசறீங்க. அந்தம்மா யாருன்னே எனக்குத் தெரியாது.” 


கருணா சிரித்தார். “ஒம் புருஷனுக்குத் தெரியுமான்னு கேட்டுப்பாரேன்! நம்பர் சொல்றியா, போன் போடறேன்.”


கனராவங்கியில் வினோதா மேடம் கையெழுத்திட்ட செக்கை அவள் கணவன் கொடுத்துப் பணம் வாங்கிய சிசிடிவி காட்சியை நேரில் பார்த்தபின்தான் கருணா தன்னிடமிருந்த பணத்தில் இருபதாயிரத்தைக் கோபால்சாமியிடம்  கொடுத்து செட்டில் செய்தார். அவருக்கும் சில நியாயக் கோட்பாடுகள் இருந்தன. வயதானவர்களின் நியாயமான பணத்தில் அவர் கைவைக்கமாட்டார். 


“அடப்பாவி மனுஷா! நான் வயத்தைக் கட்டி வாயைக் கட்டி நடையா நடந்து வட்டிக்கு விட்டு பொழப்பு நடத்தறேன். நீ சும்மா தின்னுப்புட்டு குடிச்சி என் பணத்தை அழிக்கறதும் இல்லாம, இப்பத் திருடவும் ஆரம்பிச்சிட்டியா?” என்று அவள் கத்திய கத்தில் அவள் கணவனின் போனே இரண்டாக உடைந்திருக்கும். 


“ஹஹ்ஹஹ்ஹா” என்று கடோத்கஜன் சிரிப்பு சிரித்தார் கருணா. 


“ஐயா, என்கிட்டப் பணம் வாங்கிட்டு என் புருஷன் பண்ணின காரியத்துக்கு அடஜஸ்ட்மெண்ட்டு பண்றீங்களே, இது நியாயமா சார்?”      

 

“பரமேஸ்வரி, எது நியாயமோ அதைச் செய்றதுக்கு தான் நமக்கு  காக்கி சட்டை கொடுத்திருக்காங்க, இல்லியா கணேஷு?” என்றார் கருணா. “ஐயா சொன்னா சரியாத்தான் இருக்கும்” என்று பின்பாட்டுப் பாடினார் கணேஷு என்ற போலீஸ்காரர். 


“கருணா சொன்னா சரியாத்தான் இருக்கும்” என்று சிரித்துக்கொண்டே உள்ளே நுழைந்தார் அனந்தராம் ஷெனாய், ஐ.பி.எஸ்.


திடுக்கிட்டு எழுந்து நின்றார் கருணா. “குட் மாணிங் சார்” என்று விறைப்பாக சல்யூட் அடித்தார். ஸ்டேஷனில் இருந்த எல்லா போலீஸ்காரர்களும் சப்-இன்ஸ்பெக்டரும் அலறியடித்துக்கொண்டு தாங்களும் சல்யூட் செய்தனர்.  


ஷெனாயின் அதிகார எல்லைக்குள் தனது போலீஸ் ஸ்டேஷன் இருந்தபோதிலும், கருணாவால் அவரை நெருங்கிப் பழக முடியாமல் இருந்தது. காரணம் ஷெனாய் நெருப்பு மாதிரி. எவரிடமும் கைநீட்டி வாங்கமாட்டார். ஆளும்கட்சியின் செல்வாக்குக்கு முடிந்தவரை வளைந்துகொடுக்காமல் நியாயமாக நடந்துகொள்வார்.  அதனால் எதிர்க்கட்சிகளும் அவருக்குத் தொல்லை கொடுக்காமல் மரியாதையோடு நடத்தின. கீழுள்ள அதிகாரிகளும் அவரிடம் பயத்தோடு செயல்பட்டார்கள்.


“கணேஷு, இந்த ஸ்டேஷனில் சீனியர் நீங்கதானே?” என்றார் ஷெனாய்.


“ஆமாங்க ஐயா! பத்து வருஷமா வேலூருக்கு ட்ரான்ஸ்பர் கேக்கறேன், குடுக்க மாட்றாங்க ஐயா” என்றார் கணேஷு.


“வேலூருக்குப் போறது ரொம்ப சுலபமாச்சே கணேஷு! ஏதாச்சும் தப்பு தண்ட்டா பண்ணு. நீ கேட்ட மாதிரியே வேலூர்ல போட்டுடறேன்” என்று சிரித்தார் ஷெனாய்.


பரிதாபமாக முழித்தார் கணேஷு.   


தலைமை போலீஸ் அலுவலகத்தின் சீல் வைத்த கடித உறை ஒன்றை கணேஷிடம் கொடுத்தார். “இதை நீங்களே ஒங்க ஐயாவுக்கு குடுங்க” என்றார்.


பரபரப்புடன் அதை பிரித்தார் கருணா. ப்ரோமோஷனா, டிரான்ஸ்பரா, அவார்டா? இல்லையென்றால் ஷெனாய் நேரில் வந்து கொடுக்கவேண்டிய காரணம் என்ன?


நீளமான கடிதம். “இக்கடிதத்தில் மேற்சொன்ன விஷயம் பற்றி விசாரணை செய்வதற்கு ஏதுவாக நீங்கள் தாற்காலிகப் பணிநீக்கம் செய்யப்படுகிறீர்கள்” என்று இருந்தது!


சஸ்பென்ஷன்! வாழ்க்கையில் முதல் முறையாக! அதிர்ந்துபோனார் கருணா. 


ஆனாலும் சவால் விட்டார். “புகார் செய்தவன் எந்தக் கொம்பனாக இருந்தாலும், ஒரே வாரத்தில் சஸ்பென்ஷனை ரிவோக் பண்ணி மறுபடியும் இங்க வந்து உட்காருவேன், நடக்கிறதா இல்லையா பாருங்கள்” என்று ஷெனாயின் பக்கம் திரும்பாமல் மற்ற போலீஸ்காரர்கள் அனைவரையும் ஆழமாகப் பார்த்தார் கருணா.


“அப்ப நான் வரட்டுமா, கணேஷு?” என்று கிளம்பினார் ஷெனாய்.


கருணாவுக்கு சஸ்பென்ஷன் என்றதும் பரமேஸ்வரிக்கு நாடியெல்லாம் ஒடுங்கிவிட்டது. ஐம்பதாயிரம் போய், முப்பதாயிரமாகி, இனி அது பூஜ்யமாகிவிடப் போகிறதா?


“இந்தாங்க சார்! ஒங்க பெரிய ஐயா இருக்காரேன்னு பேசாம இருந்தேன். சஸ்பென்ஸன் ஆச்சின்னா எப்படி சம்பளம் வரும்? மரியாதையா என் பணத்தை மொத்தமா இப்பவே குடுத்திருங்க. இல்லேன்னா நான் வண்டை வண்டையாக் கேட்ருவேன்” என்று அவருக்கு நேர் எதிரில் குஸ்தி போடுபவள்போல் நின்றுகொண்டாள்.  


கணேஷு பரமேஸ்வரியைச் சமாதானப்படுத்தினார்.  “நாங்களெல்லாம் எதுக்கு இருக்கோம்?” என்ற அவருடைய உறுதிமொழியின் பேரில் தயங்கித் தயங்கி வெளியேறினாள் அவள்.  

*** 

அன்று அந்த வங்கிக்கிளை விழாக்கோலம் பூண்டிருந்தது. பல முக்கிய நிகழ்ச்சிகள் காரணமாகப் பெரிய விருந்தும் ஏற்பாடாகியிருந்தது. 


ரீஜினல் மேனேஜர் ஜான் நாயுடு டிஜிஎம் ஆக ப்ரோமோஷன் கிடைத்து விஜயவாடா போகிறார். அவருடைய இடத்தில் இந்த வங்கியின் கிளை மேலாளர் சண்முகம் ரீஜினல் மேனேஜர் ஆகிறார். 


வேலையை ராஜினாமா செய்வதாக இருந்த மயூரி, அவளுடைய தொழிற்சங்கம் கொடுத்த ஆலோசனையின்பேரில் அதை வாபஸ் வாங்கிவிட்டு, பெங்களூரில் ஒரு கிளைக்கு மாறுதல் பெறுகிறாள். அதைக் கொண்டாடும் விதமாகத் தன் கணவர், குழந்தையுடன் வந்திருக்கிறாள்.


விபத்துக்குப் பிறகு திலகா அன்றுதான் மீண்டும் பணியில் சேருகிறாள். சண்முகத்தின் சிபாரிசில் அவளுடைய கணவன் கிரீஷுக்கு ஒரு கம்பெனியில் மார்க்கெட்டிங் பிரிவில் வேலை கிடைத்துவிட்டது. 


கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாகப் பிரிந்திருந்த மீனாவும் குல்கர்னியும் இப்போது ஒன்று சேர்ந்துவிட்டார்கள். “சீக்கிரமே டாக்டர் வசந்தாவைப் போய்ப் பார்க்கவேண்டும் தானே?” என்று அவளைக் கிண்டலடித்தாள் திலகா. “இல்லையென்றால் என் மாமியார் வக்கீல் நோட்டீஸ் அனுப்பிவிடுவார்” என்று சிரித்தாள் மீனா. 


கருணாமூர்த்தியை அனேகமாக டிஸ்மிஸ் செய்துவிடுவார்கள் என்று தனக்குத் தகவல் வந்ததாகச் சொன்னார் குல்கர்னி. “டான்ஸ் மேக்கப்பில் இருந்த என்னை போலீஸ் ஸ்டேஷனுக்கு வரச்சொல்லி ஸ்டேட்மெண்ட் வாங்கியவனுக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்” என்றாள் மீனா, பழைய ஆத்திரம் அடங்காதவளாக.


வங்கியின் மற்ற ஊழியர்களும், ரீஜினல் ஆபீசில் இருந்து விசேஷ அழைப்பின்பேரில் மாலினியும், வந்திருந்தார்கள். 


“மணிகர்ணிகாவும் இங்கு இருந்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்?”  என்றார் சண்முகம். ஜான் நாயுடு ராஜாவின் முகத்தைப் பார்த்தார். அவன் பேசாமல் சிரித்தான். உள்ளர்த்தம் இல்லாமல் அவன் சிரிக்கமாட்டான். 


சற்று நேரத்தில் அங்கு ஒரு பெரிய வேன் வந்து நின்றது. அதிலிருந்து முதலில் இறங்கினார் வங்கியின் சேர்மன் ரங்கநாத், பிறகு அவர் மனைவி சாமுண்டீஸ்வரி. அடுத்து கையில் நிறைய அழைப்பிதழ்களுடன் நவீன். கடைசியாக இறங்கினாள் மணிகர்ணிகா! 


ஒரு மணப்பெண்ணுக்குரிய நாணத்துடன் விசேஷ அலங்காரத்துடன் வந்திருந்தாள் அவள். 


“இனிமேல்   மணிகர்ணிகா வருவாளா, மணிகர்ணிகா எங்கு போனாள்  என்று யாரும் என்னிடம் கேட்க வேண்டியது இல்லை. இதோ வந்துவிட்டாள்” என்று மாலினி உரக்கக் கூறினாள்.


“ஆனால் எல்லாம் அக்டோபர்  9 ஆம் தேதி வரைதான்! அதன் பிறகு மணிகர்ணிகா வருவாளா வங்கிக்கு என்று அவள் கணவனைத்தான் கேட்கவேண்டும்!” என்று சிரிப்புடன் கூறினார் சேர்மன் ரங்கநாத். “ஆனால் என்னுடைய மருமகளை ஒரு தொழிலதிபராகத்தான் பார்க்க எனக்கு ஆசை” என்றார். 


“நீங்கள் அனைவரும் திருமணத்திற்குக் கண்டிப்பாக வரவேண்டும்” என்று ஒவ்வொருவரிடமும் தானே அழைப்பிதழைக் கொடுத்தார்.


அன்றைய விருந்து அனைவருக்கும் மறக்க முடியாத விருந்தாக அமைந்தது. விருந்து முடியும் நேரத்தில் மணிகர்ணிகாவின் மொபைலில் “விரைவில் விஜயவாடாவில் தொடங்க இருக்கும் உங்கள் கம்பெனிக்கு என் நல் வாழ்த்துக்கள்” என்று குறுஞ்செய்தி வந்தது. அனுப்பியவள் - துபாயில் இருந்து மாதவி!


****முற்றும்****           

 

வாசகப்பெருமக்களுக்கு ஒரு வேண்டுகோள்!

இதுவரை 'மணிகர்ணிகா' வின் 24 அத்தியாயங்களையும் படித்தவர்கள் தயவுசெய்து தங்கள் மனதில் தோன்றும் கருத்தைப் பின்னூட்டமாக எழுதவேண்டுகிறேன். 

(1) இந்த வலைப்பதிவின் கீழும் எழுதலாம். அல்லது  (2) என்னுடைய வாட்ஸ்அப் பிலும் எழுதி அனுப்பலாம். (3) அல்லது என்னுடைய ஈமெயிலுக்கும் அனுப்பலாம்: chellappay@gmail.com

அவற்றில் சிறந்த கருத்துக்களை, இந்த நாவல் புத்தகமாகும்போது அதில், (உங்கள் அனுமதி பெற்று), வெளியிட விரும்புகிறேன். 

தினந்தோறும் என்னை எழுப்பி "மணிகர்ணிகா எப்போது வருவாள்" என்று உசுப்பிவிட்டுக்கொண்டே இருந்த எனது சீடியெஸ் சென்னைப்பட்டின வாசிகளுக்கும்,  முகநூல் மத்யமர் வட அமெரிக்கக் குழுவினருக்கும், எனது கார்ப்பொரேஷன் வங்கி நண்பர்களுக்கும், குவிகம் -விருட்சம் அமைப்புகளின்   மகத்தான உறுப்பினர்களுக்கும் மற்றும் எனது நீண்டநாள் விசுவாசமான வாசகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

-இராய செல்லப்பா. 

எனது அடுத்த கட்டுரை    -" மனோ சார் " படிக்க இங்கே சொடுக்கவும்.


மணிகர்ணிகா (23) இன்று வர மாட்டாள் - தொடர்கதை

மணிகர்ணிகா (23) இன்று வர மாட்டாள் (தொடர்கதை)

(அமெரிக்காவில்  120 வது நாள்:  09-8-2022)


திலகா எங்கு போனாளோ என்று தவித்துக்கொண்டிருந்த சண்முகமும் கிரீஷும் அவள் டாக்டர் வசந்தாவின் நர்ஸின் ஹோமில் பத்திரமாக இருக்கிறாள் என்று தெரிந்தவுடன் அடைந்த நிம்மதிக்கு அளவேயில்லை.  இருவரும் உடனே அவளைப் பார்க்கக் கிளம்பி வந்தார்கள். 


நல்லி சில்க்ஸ்-ரூ 9424 
மயூரிக்குப் பிடிக்குமா? 

அதற்கு முன்பாகத் தன் வீட்டுக்குப் போய் திலகாவுக்குச் சில மாற்று ஆடைகளை எடுத்துக்கொண்டான் கிரீஷ். கொஞ்சம் பழங்களும் வாங்கிக்கொண்டான்.


டாக்டர் வசந்தா அவர்கள் இருவரையும் தனியே அழைத்துப்போய், திலகா தன்னிடம் கூறிய எல்லா விவரங்களையும் தெளிவாகச் சொன்னார். ஒரு போலீஸ் அதிகாரியின் சூழ்ச்சி வலையில்  தன்னை அறியாமலேயே கிரீஷ் விழுந்துவிட்டதைச் சுட்டிக்காட்டிய வசந்தா, முதலில் அந்த வலையில் இருந்து வெளிவருவது பற்றி யோசிக்கவேண்டும் என்றார். 


திலகாவின் கர்ப்பம் பத்திரமாக இருப்பதாகவும், அவளுக்கு எந்த மருத்துவ உதவியும் தேவையில்லை என்றும் உடனே அவளை வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போகலாம் என்றும் அவர் தெரிவித்தபோது, கிரீஷ் நன்றிப் பெருக்கால் கண்ணீர் உதிர்த்தான். சண்முகம் டாக்டரோடு பேசிக்கொண்டிருக்க, கிரீஷ் மேல்மாடிக்குச் சென்றான்.


அப்போது திலகா உறக்க நிலையில் இருந்தாள். தனக்கு ஏற்பட்ட துயரத்தையும் மீறி, அவளுக்குத் தான் இழைத்துவிட்ட துயரங்களின் சுமை அவனை அழுத்தியது. மெதுவாகச் சென்று அவளுடைய கால்கள் இரண்டையும் பிடித்துக்கொண்டான். வழிந்த கண்ணீரில் கால்கள் சிலிர்த்தபோது திடுக்கிட்டு விழித்துக்கொண்டாள் திலகா.


எழுந்து நிற்க முயன்றவளை எழவிடாமல் கட்டி அணைத்துக்கொண்டான். அவள் கண்களும் நீரைப் பெருக்கின. “வாங்க, நம்ப வீட்டுக்குப் போகலாம்” என்று அவன் பிடியில் இருந்து தன்னைத் தளர்த்திக்கொண்டு எழுந்து நின்றாள். “முதலில் மயூரியிடம் மன்னிப்பு கேட்கவேண்டும். அவள் லோன் போட்டு ஒரு லட்சம் கொடுத்திருக்கிறாள். அதைத் திருப்பிக் கொடுத்துவிடவேண்டும்” என்றாள்.  பிறகு குளித்து விட்டு,  அவன் கொண்டுவந்த உடைகளை அணிந்துகொண்டு புறப்படத்  தயாரானாள்.  


டாக்டரிடம் விடைபெற்றுக்கொள்ளச் சென்றபோது அவர் பிஸியாக இருந்தார். அங்கிருந்த சிசி டிவியின் பதிவுகளை வேறொரு ஹார்டு டிஸ்க்கில் பிரதி எடுக்கும்போது ஏதோ பிரச்சினை ஏற்பட்டுவிட்டது. அதனால், பிரதி எடுத்த டிஸ்க்கை ஓடவிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போதுதான் திலகாவும் கிரீஷும்  உள்ளே நுழைந்தார்கள். ‘பத்து நிமிஷம் உட்காரும்மா’ என்று சைகை காட்டிவிட்டு பதிவுகளைத் தொடர்ந்து பார்க்கலானார் வசந்தா. கிரீஷும் பார்க்க ஆரம்பித்தான்.


ஒரு கட்டத்தில், “இருங்க டாக்டர்” என்று கத்தினான் கிரீஷ். டாக்டர் அந்தக் காட்சியை ஃப்ரீஸ் செய்தார். என்பீல்டு பைக்கில் மயூரியும் திலகாவும் இருக்கும்போது ஒரு தண்ணீர் லாரி உரசுவதுபோல் செல்லும் காட்சி அதில் பதிவாகி இருந்தது. திலகாவும் உணர்ச்சி வசப்பட்டுப்போனாள். “டாக்டர் அதை முழுசாகக் காட்டுவீர்களா?” என்று கெஞ்சினாள். 


நர்சிங் ஹோமுக்கு எதிரே இருந்த சாலையில் நடந்த அந்த விபத்து சிசிடிவி காட்சியில் நன்றாகப் பதிவாகி இருந்தது. முக்கியமாக, லாரியின் பதிவு எண்  தெளிவாகத் தெரிந்தது. காட்சியில் தேதியும் நேரமும் தெளிவாகத் தெரிந்தன. பைக்கை மயூரி ஓட்டிக்கொண்டிருக்கிறாள். அவளை முந்திக்கொண்டு லாரி இடதுபுறம் திரும்ப முயற்சிக்கும்போது, பைக் மீது உரசுகிறது. மயூரியும் திலகாவும் கீழே விழுகிறார்கள்.


“அதாவது, மயூரி எந்தத் தவறும்  செய்யவில்லை. லாரி மீதுதான் தவறு என்று இதைப் பார்த்தவுடனே யாருக்கும் தெரிந்துவிடும்” என்றார் டாக்டர். “இதை வைத்தே லாரி ஓனர் மீது கேஸ் பதிந்திருக்கவேண்டும். ஏன் போலீஸ் செய்யவில்லை?”


பைக் இன்சூரன்ஸ் காலாவதியாகிவிட்ட விஷயத்தைத் துருப்புச் சீட்டாக்கி போலீஸ் அதிகாரி, மயூரிதான் தவறாக ஓட்டினாள் என்றும் அந்த பைக் பழுதான நிலையில் இருந்ததாகவும் எழுதிவாங்கி விட்டது கிரீஷுக்குத் தெரியாது. திலகாவிற்கும்  தான் எந்த பேப்பரில் கையெழுத்திட்டோம் என்று  ஞாபகம் வரவில்லை. அவள் எதையும் படித்துப் பார்க்கவில்லை. 


“நல்லது, இந்தப் பதிவு உங்களுக்குத் தேவைப்படுமானால், எழுத்துபூர்வமாகக் கேளுங்கள். தருகிறேன். அப்போதுதான் அதை கேசுக்கான ஆதாரமாக நீங்கள் காட்ட முடியும்”  என்ற டாக்டர் அவர்களுக்கு விடை கொடுத்தார். திலகாவை ஒரு நோயாளியாக அவர் பதிவுசெய்யாததால், அவளிடம் கட்டணம் எதுவும் பெறவில்லை. 


சண்முகத்தின் காரில் வீடு வந்து சேர்ந்தாள் திலகா. வேலைக்காரிக்கு போன் செய்து வரச்சொன்னாள். வீடு துப்புரவாகும்வரை பால்கனியில் நின்றுகொண்டாள். தலைவிதி! என்னவெல்லாம் நடந்துவிட்டது! 


சண்முகம் கிரீஷை அழைத்துக்கொண்டு ஐசிஐசிஐ வங்கியின் உள்ளூர் தலைமை அலுவலகத்துக்குச் சென்றார். அன்று ஏடிஎம்-மில் தனக்குத் தவறுதலாகக் கிடைத்த 20,000 ரூபாயை அவர்களிடம் ஒப்படைத்தான் கிரீஷ். அவர்களுக்கு ஆச்சரியம். ஏனென்றால் அதை ஒப்படைக்கச் சொல்லி கோர்ட்டில் உத்தரவு  இல்லை. மாறாக, கிரீஷுக்கு  ஒரு லட்சம் நஷ்டஈடு வழங்கவேண்டும் என்பது தான் உத்தரவு. “மற்றவர்களின் பணம் எனக்குத் தேவையில்லை. அத்துடன் எனக்கு எந்த நஷ்ட ஈடும் தேவையில்லை” என்று எழுதிக்கொடுத்தான் கிரீஷ். ஒரு பெரிய சிக்கலில் இருந்து தங்கள் வங்கியை விடுவித்ததற்காக அதன் உயர் அதிகாரி சண்முகத்திற்கு நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

  

“கிரீஷ், மயூரிக்கு நீங்கள் ஏதாவது சொல்லவேண்டி இருக்கிறதா?” என்றார் சண்முகம். “ஏனென்றால் அவள் ரெசிக்னேஷன் லெட்டர் அனுப்பியிருக்கிறாள். அவளை இனிமேல் நீங்கள் பார்க்க முடியாது. ஆகவே போன் போடட்டுமா, பேசுகிறீர்களா?”


தலையைக் குனிந்தான் கிரீஷ். போலீஸ் அதிகாரி கருணாவும், தொழிற்சங்கத் தலைவரும் தன்னை எவ்வாறு ப்ரெயின்வாஷ் செய்து வைத்திருந்தார்கள் என்று நினைத்தபோது வெட்கமாக இருந்தது. அதன் காரணமாகவே மயூரியும் வேலையை விட்டுவிட்டு பெங்களூர் செல்லத் தீர்மானித்திருக்கவேண்டும். அவளிடம் மன்னிப்பு கேட்டாகவேண்டும். 


“வணக்கம் மயூரி! எல்லாம் என்னால் வந்த வினை. விதி! உங்களை என்னென்னவோ பேசிவிட்டேன். தயவு செய்து என்னை மன்னித்துவிடுங்கள். உங்கள் ஆரோக்கியம் இப்போது பரவாயில்லையா? திலகா உங்களோடு பேச விரும்புகிறாள். அவளும் உங்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்கிறாள்..” என்று குரல் தழுதழுக்கப் பேசினான் கிரீஷ்.


மயூரிக்கும் குரல் நெகிழ்ந்துபோய்விட்டது. சில கணங்கள்  மௌனமாக இருந்தவள், “போனது போகட்டும், கிரீஷ்! திலகாவின் குழந்தைக்கு ஒன்றுமில்லையே? அதைக் கவனியுங்கள். மற்றப்படி, எல்லாம் என் தலையெழுத்து. வண்டியின் இன்சூரன்ஸை ஒழுங்காக ரினியூ செய்யாதது என் கணவரின் தவறு. அதனால் தான் நீங்கள் அந்தப் போலீஸ் அதிகாரி சொன்னபடி கேட்கவேண்டி வந்தது. இந்த விஷயத்தை இத்தோடு மறந்துவிடுவோம். என் ரெசிக்னேஷன் ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன் ஒருநாள் வந்து எங்கள் பிராஞ்சில் அனைவருக்கும் பார்ட்டி கொடுக்கிறேன். அப்போது தவறாமல் கலந்துகொள்ளுங்கள்” என்று போனை வைத்துவிட்டாள். 


“எவ்வளவு பெரிய மனசு அவளுக்கு! அவளை வைத்து 20 லட்சம் கறந்துவிடலாம் என்று தூண்டிவிட்டானே அந்தக் கயவன்!” என்று பொருமினான் கிரீஷ். “அவனுக்கு எப்படியாவது பாடம் கற்பிக்கவேண்டும் சண்முகம் சார்!” என்றான்.


சண்முகம், “கொஞ்சம் பொறுமையாக இருங்கள். ஒரு காக்கிச் சட்டையை இன்னொரு காக்கிச்சட்டை காட்டிக்கொடுக்காது என்பது பொதுவிதி. ஆகவே முதலில் அவரிடமிருந்து உங்களை முழுசாக விடுவிக்கவேண்டும். அதன் பிறகு அவரைப் பழிவாங்குவது பற்றி யோசிக்கலாம்“ என்றார்.       

  

“ஒரு விஷயத்தில் நீங்கள் உண்மையாக இருக்கவேண்டும். கருணாவிடம் நீங்கள் பணம் வாங்கினீர்களா, எவ்வளவு?”


“சொல்லிவிடுகிறேன் சார்! அன்று அப்போலோவில் அட்மிட் ஆனபோது திலகாவிடம் சில பேப்பர்களில் கையெழுத்து வாங்கிக்கொண்டு என்னிடம் ஒரு கவர் கொடுத்தார். அதில் ஐம்பதாயிரம் இருந்தது. அவ்வளவுதான். வேறு எதுவும் அவர் கொடுக்கவில்லை” என்றான் கிரீஷ். “அத்துடன் எந்த பேப்பரிலும் நான் கையெழுத்து போடவும் இல்லை.”


“அந்த அளவில் நிம்மதி” என்ற சண்முகம், அவரை அழைத்துக்கொண்டு ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரின் வீட்டுக்குப் போனார். இடதுசாரிப் பற்றுள்ளவர் அவர். போலீசாரின் வன்முறைக்கு ஆளான எளிய மக்களைப் பற்றிய சில  திரைப்படங்களில் நடித்ததன் மூலம் சாதாரண மக்களுக்கும் தெரிந்தவராகி விட்டவர். சண்முகமும் கிரீஷும் சொன்னதையும், டாக்டர் வசந்தாவிடமிருந்து பெற்ற சிசிடிவி பதிவையும் பார்த்தபின் அவர் கூறினார்: 


“இதுதான் நம் நாட்டில் அடிக்கடி நடப்பது. பதவியைத் தவறாகப் பயன்படுத்திப் பணம் பண்ணுவது அநேகமாக ஒப்புக்கொள்ளப்பட்ட தலைமைப் பண்பாகி விட்டது. பண பலம், சாதி பலம் உள்ளவர்கள் மட்டுமே இவர்களை எதிர்க்க முடிகிறது. மற்றவர்களை இவர்கள் பயத்தாலும் மிரட்டலாலுமே விழுங்கி ஏப்பம் விட்டு விடுகிறார்கள்.” 


பிறகு, “உங்களிடம் மிகச் சரியான சாட்சியம் இருக்கிறது. ஆனால் அதை பயன்படுத்தி நஷ்டஈடு கேட்கவேண்டும் என்ற ஆவேசமோ, அதற்கான நேரமோ, பண வசதியோ இல்லை. அதைத்தான் கருணாவைப் போன்றவர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். இது ரொம்ப சிம்பிள் கேஸ்! உடனே அந்த லாரி ஓனருக்குத் திலகாமூலம் வக்கீல் நோட்டீஸ் கொடுங்கள். ஒரே வாரத்தில் கருணா உங்களிடம் சரண்டர் ஆகிறாரா இல்லையா பாருங்கள். கவலை வேண்டாம்” என்றார்.


வாசல் வரை வந்து வழியனுப்பியவர், கடைசியாகச் சொன்னார்: “எப்போது வேண்டுமானாலும் என்னிடம் பேசலாம். ஆனால் இந்த விஷயத்தை அதிகம் விளம்பரப்படுத்தவேண்டாம். ஏனென்றால் போலீஸ்காரர்கள் அடிபட்ட நாகம் மாதிரி. ஞாபகம் வைத்துக்கொண்டு இன்னொரு சமயம் கொத்திவிடுவார்கள்” என்றார்.   

  

அதன்படியே வக்கீல் நோட்டீஸ் போயிற்று.

**** 

எந்த மாநிலமானாலும், அமைச்சர்களுக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் முழுமையான கருத்தொற்றுமை இருப்பது அபூர்வமே. சொந்தக் கட்சிக்காரர்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்பதுதான் அமைச்சர்களின் முன்னுரிமை. ஆனால், எதைச் செய்தாலும் அது சட்டதிட்டங்களுக்கு உட்பட்டதாகவும், தங்கள் எதிர்காலத்தைப் பாதிக்காதவாறும் இருக்கவேண்டும் என்பது இந்த உயர் அதிகாரிகளின் ஆரம்பப் பாடம். இரண்டும் எல்லா நேரங்களிலும் ஒத்துப்போவதில்லை.


குல்கர்னிக்கும் இந்த நிலைமை ஏற்பட்டது. ஒரு அமைச்சரின் நியாயமற்ற யோசனையை ஏற்க மறுத்ததால் அவர் ஆளும்கட்சிக்கு வேண்டாதவரானார். அவரை மத்திய அரசுக்குத் திருப்பி அனுப்புமாறு சிபாரிசு எழுதினார் அமைச்சர். இதை இரகசியமாக அறிந்துகொண்ட குல்கர்னி, தாமே விருப்ப மாறுதலுக்கு விண்ணப்பித்தார். அவர் எதிர்பார்த்தபடியே தமிழ்நாடு கேடருக்கு மாறுதல் கிடைத்து,  போக்குவரத்துத் துறையில் துணைக் கமிஷனராக ஒரே வாரத்தில் வந்து சேர்ந்துவிட்டார். 


சம்பிரதாயப்படி, அதிக வாகனங்களை வைத்திருக்கும் உரிமையாளர்கள் குல்கர்னியை நேரில் சந்தித்து, வாழ்த்து சொன்னார்கள். அவர்களில் முதலாமவர் ஆளும்கட்சியின் செல்வாக்குமிக்க தொழிலதிபர். ஆனாலும் குல்கர்னியிடம் பணிவாக நடந்துகொண்டார். அத்துடன் தனது தனிப்பட்ட பிரச்சினை ஒன்றையும் அவருடன் பகிர்ந்துகொண்டார். 


“ஒரு சின்ன விபத்து. போலீஸ் சொன்னதை நம்பி ஐந்து லட்சம் கொடுத்தேன். விஷயம் செட்டில் ஆகிவிட்டது என்றார் போலீஸ் அதிகாரி. இப்போது சம்பந்தப்பட்ட பெண்மணி வக்கீல் நோட்டீஸ் கொடுத்திருக்கிறார். இந்த வருடம் முனிசிபல் தேர்தலில் கவுன்சிலருக்கு நிற்பதாக இருக்கிறேன். விஷயம் பெரிதாகாமல் அடக்கவேண்டும். உங்கள் உதவி தேவை” என்று பணிவாகக்  கேட்டுக்கொண்டார். அரசாங்க அதிகாரிகளிடம் பணத்தைவிடப் பணிவுதான் அதிகம் பலன்தரும் என்று அனுபவத்தில் அறிந்தவர் அவர். 

     

வக்கீல் நோட்டீஸைப் படித்தார் குல்கர்னி. அதில் மயூரி, திலகா என்ற கேள்விப்பட்ட பெயர்கள் இருப்பதைக் கவனித்தார். மீனாவிடம் பேசவேண்டும் என்று தீர்மானித்தார்.


“என்னுடைய டிபார்ட்மண்ட் விஷயம் இல்லையே இது! போலீஸ்துறையில் நான் எப்படித் தலையிட முடியும்?” என்று கேட்டார் குல்கர்னி. 


“அப்படிச் சொல்லக்கூடாது குல்கர்னி சார்! நானே போலீஸ் டிபார்ட்மெண்ட்டுக்குப் போய் டீல் செய்யமுடியும். ஆனால் அங்கிருக்கும் ஒரு முக்கியமானவர் எனக்கு எதிரானவர். இந்த வக்கீல் நோட்டீசை உடனே நக்கீரனுக்கு லீக் பண்ணிவிடுவார். அத்துடன் நோட்டீஸ் கொடுத்திருக்கும் வக்கீல், பிரபலமான முன்னாள் நீதிபதியின் உறவினர். ஆதாரம் இல்லாமல் கேஸை எடுக்கமாட்டார். விளைவாக, என் அரசியல் முன்னேற்றம் தடைப்படும். அதனால்தான் உங்களிடம் வந்தேன். ஏற்கெனவே ஐந்து லட்சம் கருணாமூர்த்தியிடம் கொடுத்துவிட்டேன். எப்படியாவது நீங்கள் கருணாவை அடக்கி இந்த கேஸை வாபஸ் வாங்கும்படி செய்யவேண்டும்” என்று எழுந்தார் அவர். 


போகும்போது “இந்தக் கருணாமூர்த்தியின் மேலதிகாரி உங்கள் ஊர்க்காரர் தான். அனந்தராம் ஷெனாய்” என்ற தகவலையும்  கொடுத்தார். அரசியல்வாதிகள் எப்படியெல்லாம் அதிகாரிகளை ‘கவர்’ செய்கிறார்கள் என்று அதிசயப்பட்டார் குல்கர்னி.   

**** 

குறிப்பு:  இந்த அத்தியாயத்துடன் கதை முடிந்துவிடும் என்று தோன்றியது. ஆனால் மணிகர்ணிகா துபாயில் இருந்துவரும் விமானம் ஆறுமணி நேரம் தாமதமாவதால், அடுத்த அத்தியாயத்தில் தான் அவளை நீங்கள் சந்திக்க முடியும்! அதற்காகக் கஷ்டப்படவேண்டாம். கீழே சொடுக்கினால் போதும். 


-இராய செல்லப்பா நியூ ஜெர்சியில் இருந்து.   

 இதன் அடுத்த பகுதி   -" மணிகர்ணிகா (24) இன்று வரமாட்டாள் " படிக்க இங்கே சொடுக்கவும்.


செவ்வாய், ஆகஸ்ட் 23, 2022

மணிகர்ணிகா (22) இன்று வர மாட்டாள் - தொடர்கதை

மணிகர்ணிகா (22) இன்று வர மாட்டாள் (தொடர்கதை)

(அமெரிக்காவில்  119  வது நாள்:  08-8-2022)இதன் முதல் பகுதி   -" மணிகர்ணிகா (1) இன்று வரமாட்டாள் " படிக்க இங்கே சொடுக்கவும்.

இதன் முந்தைய பகுதி   -" மணிகர்ணிகா (10) இன்று வரமாட்டாள் " படிக்க இங்கே சொடுக்கவும்.


திலகா மௌனமாக இருந்ததைக் கண்டு, உள்ளுக்குள் ஆனந்தப் பட்டார் கருணா. லாரி உரிமையாளரிடம் பெற்ற ஐந்து லட்சத்திற்கு இனிமேல் அவர் யாருக்கும் கணக்குச் சொல்ல வேண்டியதில்லை. மூன்று லட்சம் கிரீஷிடம் கொடுத்ததாகத் திலகாவை நம்பவைத்தாகி விட்டது. மேலும் இரண்டு லட்சம் அவ்வப்பொழுது சில்லறையாகக் கொடுத்ததாகச் சொன்னால் போயிற்று. அதற்குள் கிரீஷைத் தேடிக் கண்டுபிடிக்கவேண்டும். 


அதற்குள் இவள் தன் வீட்டுக்குத் திரும்பிவிடக்கூடாது. குட்டு உடைந்துவிடும். அதற்கு ஒரே வழி, இவளை மறுபடியும் ஏதாவது ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்துவிடுவதுதான்.  அதற்கு கிரீஷ் வந்தால்தான் முடியும். தான் இந்த முயற்சியில் தலையிடுவது நல்லதல்ல.


காஜலுக்குக் குழந்தை பிறந்தது மீனா குல்கர்னிக்குத் தெரியுமா?


“இங்க பாரு திலகா மா! நீங்க ஒடனே இன்னொரு ஆஸ்பத்திரியில் சேர்ந்துடணும். அப்பத்தான் நீங்க தொடர்ந்து அந்த ஆக்சிடெண்ட்டுனால பாதிக்கப்பட்டீங்கன்னு ரெக்கார்டுல வரும்! நடுவுல எழுந்து வெளியில வந்துட்டீங்கன்னா, இல்ல, ஒங்க வீட்டுப் பக்கம் போய்ட்டீங்கன்னா, இவங்க ஒடம்புக்கு ஒண்ணுமில்லேனு பாக்கறவங்க சாட்சி சொல்லிடுவாங்க. நம்ப கேஸ் வீக்காயிடும். அப்புறம் லாரி ஓனருக்குப் பணத்தைத் திருப்பிக்கொடுக்க வேண்டிவரும். அப்படி நடந்தால், நீங்கதான் அவரை டைரக்டா டீல் பண்ணிக்கனும். நான் வரமாட்டேன். புரிஞ்சிகிட்டு நடக்கணும். சரியா?”   

    

அவ்வளவுதான் போனை வைத்துவிட்டார். 


தன்னுடைய தொழிற்சங்கத் தலைவரிடம் பேசினால் என்ன என்று தோன்றியது. எந்த உதவி வேண்டுமானாலும் செய்வதாகக் கூறினாரே!


திலகா பேசியதைப் பொறுமையாகக் கேட்டுக்கொண்ட தலைவர், “ஒங்க மெடிக்கல் பில் எல்லாத்தையும் குறைக்காம சாங்க்ஷன் பண்ணச் சொல்லி ஜிஎம் கிட்ட சொல்லிடறேன். அதுக்கு மேல என்கிட்டே எதையும் எதிர்பாக்காதீங்க” என்று நறுக்கென்று பேசி முடித்தார். மயூரியைப் பழிவாங்கவேண்டும், கருங்காலி என்றெல்லாம் சொன்னவர் இப்போது அவளைப் பற்றி வாயே திறக்கவில்லையே! ஒருவேளை அவருடைய சங்கத்தில் சேர்ந்துவிட அவள் ஒப்புக்கொண்டுவிட்டாளோ?    


ஆஸ்பத்திரி வாசலில் வெகுநேரமாக அவள் நின்று கொண்டு இருப்பதைக் கவனித்த ஓர் ஆட்டோக்காரர் “எங்கம்மா போகணும்?” என்று அருகில் வந்தார். ஆட்டோவிலிருந்து ‘வசந்தகால நதிகளிலே’ என்ற மிகப் பழைய பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. உடனே அவள் மனதில் டாக்டர் வசந்தாவின் ஞாபகம் வந்தது. 


ஆம், அதுதான் சரி! அவர் ஏற்கெனவே தன்னைப் பார்த்திருக்கிறார். முன்பணம் கேட்கமாட்டார். அவருடைய நர்ஸிங் ஹோமில் தங்கிவிடலாம். எப்படியும் சில நாட்களுக்குள் கிரீஷ் வந்துவிடமாட்டானா? 


“கோட்டூர்புரம்- டாக்டர் வசந்தா ஆஸ்பத்திரி” என்றாள் திலகா. ஆட்டோ பறந்தது.

***       

ஒருமுறை பார்த்த நோயாளியைத் தன் வாழ்நாள் முழுதும் மறக்கமாட்டார் டாக்டர் வசந்தா. இயற்கையாகவே அவருக்கு ஞாபக சக்தி அதிகம். அதே போல, நோயாளிகளின் வசதிக்குத் தக்கபடி தான் பணம் வாங்குவார். ஏழைகள் என்றால் வெறும் ஐம்பதே ரூபாய் வாங்கிக்கொண்டதும் உண்டு. அதை அவர் விளம்பரப்படுத்துவதில்லை. 


திலகாவைப் பார்த்ததுமே அடையாளம் தெரிந்துவிட்டது. “வாம்மா, எல்லாம் சரியாகத்தானே இருக்கிறது? உன்னைப் பார்த்தாலும் நார்மலாகத் தான் தோன்றுகிறது” என்று வரவேற்றார் வசந்தா. 


நோயாளிகள் கூட்டம் அதிகமில்லை. அவளை உள்ளே அழைத்துக்கொண்டு தன் அறைக்கதவைச் சாத்தினார். “புஷ்பா, நான் லஞ்சு சாப்பிடவேண்டும். அதனால் இன்று ஓ.பி. யில் வேறு யாரையும் எடுத்துக்கொள்ளாதே” என்று கூறிவிட்டு, தன் உணவுப் பெட்டியைத் திறந்தார். தலையாட்டிவிட்டுக் கிளம்பினாள் நர்ஸ் புஷ்பா. “திலகா, உன் பிரச்சினையைக் கூறு. சாப்பிட்டபடியே கேட்கிறேன்” என்றதும் மடைதிறந்த வெள்ளம்போல் தன்  மனத்தைத் திறந்து கொட்டலானாள் திலகா.


சாப்பிட்டு எழுந்த டாக்டர், திலகாவின் கர்ப்பம் நார்மலாகத்தான் இருக்கிறது என்பதை உறுதிப்படுத்திக்கொண்டபின், கூறினார்: “திலகா, எத்தனை நாள் வேண்டுமானாலும் நீ  இங்கு தங்கிக்கொள்ளலாம். உன் பேங்க் கொடுக்கும் ரீ-இம்பர்ஸ்மென்ட் அளவுக்கே நான் பில் கொடுப்பேன். கையை விட்டு நீ ஒரு பைசாவும் தரவேண்டாம். நம்ப செக்யூரிட்டி ஏஜென்சிக்குத் தகவல் சொல்லி, சரியான ஆளை வரவழைக்கிறேன். உன் கணவரின் போட்டோக்கள் சிலதை என் வாட்ஸப்ப்புக்கு  அனுப்பிவை.  அவரைக் கண்டுபிடித்துவிடலாம்” என்று அவளை முதல்மாடியில் ஒரு ஸ்பெஷல் ரூமில் அமர்த்தினார். மனம் ஓரளவு அமைதியடைந்ததில் உடனே கண்ணுறங்கிவிட்டாள் திலகா.


மாலை ஆறு மணிக்கு அந்தப் போட்டோக்களைப் பெற்றுக்கொண்ட செக்யூரிட்டி ஏஜென்சியின் அதிகாரி, கிரீஷின் வீட்டு முகவரியைப் பார்த்தவுடன், அந்தப் பகுதியில் பணிசெய்யும் தங்களுடைய காவலர்களின் மொபைல்களுக்கு அவற்றை அனுப்பினார். சரியாக ஐந்தே நிமிடத்தில் பதில் வந்துவிட்டது. “இவர் இரண்டு நாட்கள் கூடுவாஞ்சேரி லாக்கப்பில் இருந்தார். நிரபராதி என்று கோர்ட்டால் விடுதலை செய்யப்பட்டார்” என்று! பதிலளித்தவர், தங்கராசு!


திலகா இருக்கும் மனநிலையில், கிரீஷ் லாக்கப்பில் இருந்த விஷயம் அவளுக்குத் தெரிய வேண்டாம் என்று டாக்டர் முடிவுசெய்தார். தங்கராசு மூலமே தகவல் அனுப்பி, கிரீஷைத் தன்னைச் சந்திக்குமாறு ஏற்பாடுசெய்யச் சொன்னார். 


தங்கராசு கிரீஷின் வீட்டை நெருங்கும்போது, அவன் ஒரு மாருதி காரில் ஏறுவது தெரிந்தது. “அரசாங்க வண்டிகளுக்கே உரிய ‘ஜி’ என்னும் ஆங்கில எழுத்து நம்பர்பிளேட்டின் மீது சிகப்பில் எழுதப்பட்டிருந்தது. அந்தக் காரைப் பின்தொடர்ந்ததில் அது ஒரு வங்கி மேனேஜரின் கார் என்று தெரிந்தது. அது போய் நின்ற இடம் மேனேஜரின் வீடாக இருக்கவேண்டும்” என்று தன் ரிப்போர்ட்டில் எழுதியிருந்தார் தங்கராசு. அந்த வீட்டு முகவரியும் கொடுத்திருந்தார்.  


இந்த விவரங்களைத் திலகாவிடம் சொன்ன உடனே அவளுக்குத்  தெம்பு வந்துவிட்டது. தன்னுடைய மேனேஜர் சண்முகத்தின் வீட்டுக்குத்தான் போயிருக்கிறான் கிரீஷ்! பரபரப்புடன் சண்முகத்துக்கு போன் செய்தாள் திலகா.

****       

துணை ஜனாதிபதி வந்தபோது நடைபெற்ற நாட்டிய நிகழ்ச்சிக்கே வரவேண்டுமென்று முயற்சித்தார் குல்கர்னி. ஆனால் ஐஏஎஸ் பொறுப்புகள் அவரை நகரவிடாமல் செய்துவிட்டன. அடுத்த ஒரு மாதமும் மீனாவிடம் பேசக்கூட முடியாமல் பிஸியாகிவிட்டார். அவளிடமிருந்து போன் வந்தாலும், “இதோ, ஐந்தே நிமிடத்தில் நானே போன் செய்கிறேன்” என்று வைத்துவிடுவார். ஆனால் அவரிடமிருந்து போன் வர மேலும் நான்கு நாளாவது ஆகும்.  


வெறுத்துப்போன மீனா, “இனிமேல் என்னால் பொறுக்க முடியாது. எதற்காக என்னைக் கல்யாணம் செய்துகொண்டீர்கள்? உடனே சென்னைக்கு ட்ரான்ஸ்பர் கேட்டு வாருங்கள். இல்லையென்றால் வக்கீல் நோட்டீஸ்தான் வரும்!” என்று பயமுறுத்தினாள். 


“ஓஹோ, என்னை டைவர்ஸ் செய்துவிடத் தீர்மானித்துவிட்டாயா?” என்று கிண்டல் செய்தார் குல்கர்னி. “ஆமாம், வேறு என்ன எதிர்பார்க்கிறீர்கள்?” என்று பதிலடி கொடுத்தாள் மீனா. 


“சொன்னபடி செய்யுங்கள். எனக்கு நிறைய வேலை இருக்கிறது. கலாக்ஷேத்ரா ஆண்டுவிழாவில் எனக்கு ஸ்லாட் கிடைத்திருக்கிறது. ரிஹர்சலுக்குப் போகவேண்டாமா?” என்றாள். 


“தாராளமாகப் போங்க மேடம்! ஆனா ஒண்ணு, நமக்கு கல்யாணம் ஆகி எத்தனை வருடம் ஆச்சுன்னு ஞாபகம் இருக்கா?”


“ஏன், அதுக்கு என்ன இப்ப?”


“அம்மா ஒனக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பச் சொல்றாங்க. செய்யட்டுமா?”        

    

“என்ன உளறுகிறீரகள்?”


“உளறவில்லை மேடம், எனக்குப் பிறகு கல்யாணம் ஆன என் தம்பிக்குக்  குழந்தை பிறந்து மூன்று வயது ஆகிறது என்று அம்மா சொல்கிறாள். அதான்…” 


மீனாவுக்கு வெட்கத்தால் கன்னம் சிவந்தது. “சரி, ப்ராமிஸ்! நீங்க சென்னைக்கு டிரான்ஸபர்ல வந்துடுங்க. அடுத்த வருஷம் நீங்க கேட்டது கிடைக்கும்” என்று சிரித்தாள். பிறகு அவனுக்கு மட்டுமே கேட்பதுபோல் மிகவும் மெல்லிய குரலில்,”அதற்கு என்னுடைய முயற்சி மட்டுமே போதாது என்று உங்கள் அம்மா சொல்லியிருப்பார்களே!” என்றாள். கலகலவென்று சிரித்தார் குல்கர்னி. 

   

    (அடுத்த அத்தியாயத்தில் முடிந்துவிடும் )


    -இராய செல்லப்பா நியூ ஜெர்சியில் இருந்து 

 இதன் அடுத்த பகுதி   -" மணிகர்ணிகா (23) இன்று வரமாட்டாள் " படிக்க இங்கே சொடுக்கவும்.


மணிகர்ணிகா (21) இன்று வர மாட்டாள் - தொடர்கதை


மணிகர்ணிகா (21) இன்று வர மாட்டாள் (தொடர்கதை)

(அமெரிக்காவில்  118  வது நாள்:  07-8-2022)இதன் முதல் பகுதி   -" மணிகர்ணிகா (1) இன்று வரமாட்டாள் " படிக்க இங்கே சொடுக்கவும்.

இதன் முந்தைய பகுதி   -" மணிகர்ணிகா (10) இன்று வரமாட்டாள் " படிக்க இங்கே சொடுக்கவும்.


சென்னையில் வங்கி குமாஸ்தாவாகச் சேர்ந்தாள் மணிகர்ணிகா. சேரும்போதே அது நிரந்தரமல்ல என்று அவளுக்குத் தெரியும். துபாயில் தொழிலை நிலைப்படுத்திவிட்டு நவீன் சென்னைக்கு வரும்போது அவனோடு தொழில் பங்காளியாகச் சேர்ந்துகொள்வதாகத் திட்டம். ஆனால் மத்தியக் கிழக்கு நாடுகளில் இருந்த வினோதமான பழக்கம் என்னவென்றால், வெளிநாட்டுக் கம்பெனிகள் தங்களுடைய பங்குதாரராக அந்த நாட்டு ஆட்சிக்குடும்ப உறுப்பினர் ஒருவரை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதுதான். நவீனின் கம்பெனிக்கு இதில் ஆட்சேபணை இல்லை. ஆனால் ஒருவர் அல்ல, இருவர் அதில் பங்குதாரராகச் சேர முன்வந்தபோது,  அமெரிக்கக் கம்பெனியோ ஒருவரை மட்டுமே ஏற்பதாகக் கூறினார்கள். ஒருவரை விட்டு ஒருவரை ஏற்றுக்கொண்டால் ஆட்சியாளர்களின் வெறுப்பைச் சம்பாதிக்கவேண்டும். இதை எப்படிக் கையாளுவதென்று அமெரிக்கக் கம்பெனிக்குத் தெரியவில்லை. இதனால் ஆரம்பத்திலிருந்தே குழப்பம் நிலவியது.


மக்கள் தொடர்பு விஷயத்தில் மணிகர்ணிகா ஆஸ்திரேலியாவில் சிறப்பான பெயரெடுத்திருந்த காரணத்தால், திடீரென்று ஒருநாள் அவளை துபாய்க்கு அனுப்பிவைத்தார் ரங்கநாத். அவள் போவதும் திரும்பிவந்ததும் வங்கியில் யாருக்கும் தெரியாது. ராஜாவுக்கும் மாலினிக்கும் தவிர. போன வேகத்தில் அவள் சில முக்கியமானவர்களைச் சந்தித்து சில ஆலோசனைகளை நவீனுக்குக் கூறிவிட்டு வந்தாள். பிரச்சினை தீர்ந்துவிடும் போல் இருந்தது. ஆனால் முற்றிலுமாகத் தீரவில்லை. அதனால்   மீண்டும் அவள் அனுப்பப்பட்டாள். 


நவீன்-மணிகர்ணிகா திருமணம் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாததால், அடிக்கடி இவள் துபாய் போவதும் வருவதும் ரங்கநாத்மீது தேவையற்ற பழிவரக்  காரணமாகிவிட்டது. துபாய் வேலை திருப்திகரமாக முடியாததால் இப்போதைக்குத் தான் சென்னை வர இயலாது என்று நவீன் கூறிவிட்டான். 


ரங்கநாத் தன்  பதவிக்குரிய செல்வாக்கைப் பயன்படுத்தியதில், நவீனின் கம்பெனியில் சேர முன்வந்த இரு ஷேக்குகளில் ஒருவர்      

துபாய் கம்பெனியிலும், இன்னொருவர், விஜயவாடாவில் நவீன் ஆரம்பிக்கவுள்ள கம்பெனியிலுமாக இணைவது என்று முடிவுசெய்யப்பட்டது. அந்த இரண்டாவது ஷேக்குக்கு இதில் கொள்ளை மகிழ்ச்சி. ஏனென்றால் துபாய் கம்பெனியை விட, விஜயவாடாக் கம்பெனியின் நிர்வாகப் பரப்பு பெரியதாக இருக்கும் என்பதுதான். 


எல்லாம் நல்லபடியாக முடிந்து முத்தரப்பு - புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பம் ஆகும் வேளையில் புதிய சிக்கல் ஏற்பட்டுவிட்டது. வேலைப்பளுவின் காரணமாகவோ உடல் நலமில்லாமல் போனதாலோ தெரியவில்லை, நவீன் மணிகர்ணிகாவுக்குப் போன் செய்தே பலநாட்களாகிவிட்டன. மத்தியக் கிழக்கின் வேறு சில நாடுகளுக்கும் அடிக்கடி அவன் பயணம் செய்யவேண்டி இருந்தது.  வேண்டுமென்று செய்தானா என்று தெரியாது, அவனுடைய அன்றாட நடவடிக்கை என்ன என்பதே இவளுக்குத் தெரியாமல் போனது. 


ஏற்கெனவே மாதவியின் கைப்பை உண்டாக்கிய மன உளைச்சல் மறையாத நிலையில், இப்போது மாதவி துபாயிலேயே நிலையாகத் தங்கி வேலைசெய்வதால் மணிகர்ணிகாவின் மனதிற்குள் ஏற்பட்ட பழைய சந்தேகம் அவ்வப்பொழுது முளைவிட்டுக் கொண்டே இருந்தது. மாதவியின் திருமணத் தேதி இன்னும் குறிக்கப்படாததும் அவளை வேதனைப் படுத்தியது. 


ஆகவே தான் தன் மாமாவிடம் பேசிவிட்டு, வங்கி வேலையை விட்டுவிடுவதென்று தீர்மானித்தாள். ஆனால் சாமுண்டீஸ்வரி ஒப்புக்கொள்ளவில்லை. நவீன் இந்தியா திரும்பியவுடன் வேலையை விட்டால்போதும் என்பது அவர் கருத்து. இன்னும் ஒன்றிரண்டு மாதங்களில் என்ன ஆகிவிடும் என்றார் அவர். ஆகவே வங்கியில் ரீஜினல் மேனேஜர் ஜான் நாயுடுவிடம் மட்டும் தெரிவித்துவிட்டு துபாய் கிளம்பினாள் மணிகர்ணிகா. 


ஓட்டல் அறையில் வந்து சேர்ந்தவுடன் நவீனுக்குச் செய்தி அனுப்பினாள். பதில் இல்லை. வேறு வழியின்றி மாதவிக்கும் செய்தி அனுப்பினாள். ‘சாரி, ஐ ஆம் பிஸி’ என்ற பதில் மட்டும் வந்தது. என்ன அகம்பாவம் என்று ஆத்திரம் ஏற்பட்டது மணிகர்ணிகாவுக்கு. உடனே தன்  மாமியோடு பேசினாள். நவீன் ஏன் இப்படி நடந்துகொள்கிறான் என்று அழுதாள். அவர் வழக்கம்போல் பொறுமையைப் போதித்தார்!


தலையணையில் முகம் புதைத்துக்கொண்டு, கண்ணீருடன் படுத்த மணிகர்ணிகா, சற்று நேரத்தில் உறங்கிப்போனாள்.

*** 

சுமார் ஒருமணி நேரம் ஆனபிறகு அறைக் கதவு தட்டப்படும் ஓசை கேட்டு எழுந்தாள் மணிகர்ணிகா.


ஓட்டல் மேனேஜர் வணக்கம் சொன்னார். “மேடம், உங்களை ஏழாவது தளத்தில் இருக்கும் கன்வென்ஷன் ஹாலுக்கு வரும்படி மிஸ்டர் நவீன் அழைக்கிறார்” என்று ஓர் அழைப்பிதழைக் கொடுத்துவிட்டு நகர்ந்தார்.


அது மாதவியின் நிச்சயதார்த்த வரவேற்பிதழ்! 


ஓஹோ, அவளுடைய திருமணத்தை முடித்துவைக்கத்தான் இவருடைய நேரமெல்லாம் செலவாகிக் கொண்டிருக்கிறதோ? மனைவியை விட அவள் முக்கியமாகிவிட்டாளோ? 


அடுத்த நிமிடம், எல்லாவற்றிற்கும் தான் தானே காரணம் என்பது உறைத்தது. மூன்று வருடம் திருமண அறிவிப்பை ஒத்திவைத்தது எப்படிப்பட்ட  முட்டாள்தனம்! 


திடீரென்று அவளுக்கு ஓர் யோசனை உதித்தது. தன் மாமா, மாமியிடம் பேசினாள். மாதவியின் திருமணத்தை அறிவிக்கும் அதே மேடையில் தனக்கும் நவீனுக்கும் நடந்துவிட்ட திருமணத்தையும் அறிவிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டாள். 


“ஆனால், அதற்கு முன்பு, நவீன் எதற்காக இப்படித் தகவல் சொல்லாமல், பல நாட்களாக என்னுடன் பேசாமல் இருந்தார் என்பதற்கு சரியான விளக்கம் சொல்லவேண்டும்” என்று நிபந்தனை விதித்தாள். 


அடுத்த நிமிடம் அவளுடைய மொபைலில் ஒரு செய்தி வந்தது. “முட்டாள்” என்று தமிழில் இருந்தது!


“மேடம் மணிக்கா அவர்களே! ஒரு லேடிஸ் ஹேண்ட் பேக் காரில் இருந்ததற்காகச் சொல்லாமல் கொள்ளாமல் இந்தியா திரும்பிவிடும் வீராப்பு உங்களுக்கு இருந்தால், அப்படிப்பட்ட நியாயமற்ற குற்றச்சாட்டுக்குப் பழிக்குப் பழி வாங்கவேண்டும் என்ற வீராவேசம் என்னிடம் இருக்காதா?” என்றது அந்தச் செய்தி.


மணிகர்ணிகாவுக்கு ‘அப்பாடா’ என்று இருந்தது. அவள் மனதில் இருந்த குற்ற உணர்வு முழுதுமாக நீங்கிவிட்டது. நவீனால் கூட இப்படி விளையாட்டுக் காட்ட முடியும் என்பது அவளுக்குப் புதுமையாக இருந்தாலும் பிடித்தமானதாகவே இருந்தது.


வேகமாக உடை மாற்றிக்கொண்டு கன்வென்ஷன் ஹாலில் நுழைந்தவளை, “வாம்மா மணிக்கா” என்று வரவேற்றது வேறு யாருமில்லை, ரங்கநாத்தும் சாமுண்டீஸ்வரியும் தாம்!  அட, இவர்களும் நவீனுடன் சேர்ந்து தான் என்னோடு கண்ணாமூச்சி ஆடினார்களா என்று கோபமும் ஆச்சரியமும் கலந்த பார்வையை வீசினாள் மணிக்கா.


“அப்படிப் பார்க்காதேம்மா, எங்களுக்கு ஒண்ணும் தெரியாது. எல்லாம் உன் கணவனோட ஏற்பாடு. திடீரென்று கிளம்பி வா என்று நேற்று போன் செய்தான். வந்துவிட்டோம்” என்றார்கள் இருவரும்.

  

மாதவி ஓடிவந்து கட்டிக்கொண்டாள். “எல்லாம் திடீரென்று முடிவாகியது மணிக்கா! இப்போதைக்கு இந்தியா போக முடியும்போல் தோன்றவில்லை. ஆகவே இங்கேயே திருமணத்தை அறிவித்துவிடலாம் என்று அவர் சொன்னார்..” என்று வெட்கப்பட்டாள் மாதவி. தனக்குக்  கணவராக வரப்போகிறவரை அவளுக்கு அறிமுகப்படுத்தினாள்.      


மாதவி- பிரசாத் திருமண அறிவிப்பைத் தொடர்ந்து, மணிகர்ணிகா- நவீன் திருமணமும் அதே மேடையில் அறிவிக்கப்பட்டது. பல அமெரிக்க நிறுவனங்களும் துபாயின் பங்காளி நிறுவனங்களும் தங்கள் உயர் அதிகாரிகளை அனுப்பி அவர்களைக் கௌரவித்தன. 


ஒரு வார இன்பச் சுற்றுலாவுக்குப் பின் நவீன் குடும்பம் சென்னை திரும்பியது. தன்  ராஜினாமாக் கடிதத்தை மாலினியிடம் சமர்ப்பித்தாள் மணிகர்ணிகா. “உன் கவலை தீர்ந்துவிட்டது. எனக்கு ஒருவன் எப்போது வருவானோ தெரியவில்லை” என்று அலுத்துக்கொண்டாள் மாலினி.    

***

அப்போலோ ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன திலகாவுக்குக் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. கணவன் கிரீஷின் மொபைலுக்குப் பலமுறை தொடர்புகொண்டாள். அவன் எடுத்தால் தானே! அவளுக்கு இருந்த ஒரே உயிர்த்தோழி, மயூரிதான். அவளையும் தன்னிடமிருந்து பிரித்துவிட்டானே கிரீஷ்!  


இருபது லட்சம் நஷ்ட ஈடு அவளிடமிருந்து வாங்கித் தருவதாகவும் அதுவரை அப்போலோவில் தான் இருக்கவேண்டுமென்றும் அந்தப் போலீஸ் அதிகாரி கிரீஷை வசியம்செய்து விட்டாரே! தினமும் இரண்டுதரம் போன் செய்பவர், இப்போது போன் செய்தாலும் எடுக்க மறுக்கிறாரே! 


கிரீஷுக்கு என்னதான் ஆகியிருக்கும்? ஒருவேளை உடல்நலம் இல்லாமல் வீட்டில் கிடக்கிறானோ? கையில் செலவுக்குப் பணம் இருக்குமா என்றும் தெரியவில்லை. வயிற்றில் குழந்தைவேறு அவ்வப்பொழுது ஏதோ செய்துகொண்டிருந்தது. அவளுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. தான் ஒரு வங்கி ஊழியர் என்பதால், மருத்துவச் செலவுக்கு வங்கியில் இருந்து உரிய தொகை தரப்படும் என்று அவள் உறுதிமொழி எழுதிக்கொடுத்த பிறகே அவளை வெளியே விட்டார்கள். இப்போது எங்கு போவது?


அப்போது அவள் எதிர்பார்த்த போன் வந்தது. கருணாமூர்த்தியிடம் இருந்து. “திலகாம்மா, கிரீஷ் எங்கம்மா போனார்? ரெண்டு நாளா நான் தவிக்கிறேன். ஒருவேளை எனக்குத் தெரியாம மயூரியோடு சமாதானமா போகலாம்னு இருக்காறா? அதுல எந்தப் பயனுமில்ல. ஆஸ்பத்திரிக்குக் கட்டச்சொல்லி என்கிட்ட வாங்கின பணத்தை  என்ன பண்ணினார்?” என்றார் கருணா. 


“என்ன, ஒங்க கிட்டப் பணம் வாங்கினாரா? எவ்வளவு?”


“மூணு லட்சம் குடுத்திருக்கேன் மா! இப்ப எங்க இருக்கார் அவர்? நீங்க என்கிட்ட கேக்காம ஆஸ்பத்திரிலே இருந்து டிஸ்சார்ஜ் ஆனதே பெரிய தப்பு. இதனால நஷ்ட ஈடு அமெளண்ட் கொறஞ்சிடுமே மா!”


இவர் சொல்வதை நம்புவதா வேண்டாமா என்று குழம்பினாள் திலகா. மூன்று லட்சம் கையில் இருந்தால் உடனே ஆஸ்பத்திரிக்குக் கட்டியிருப்பானே கிரீஷ்! திலகாவுக்காக இல்லாவிட்டாலும் வயிற்றில் வளரும் குழந்தைக்காகவாவது செய்திருப்பானே! இப்போது எங்கு போனான்?

(தொடரும்)

  • இராய செல்லப்பா நியூ ஜெர்சியில் இருந்து 

 இதன் அடுத்த பகுதி   -" மணிகர்ணிகா (22) இன்று வரமாட்டாள் " படிக்க இங்கே சொடுக்கவும்.


திங்கள், ஆகஸ்ட் 22, 2022

மணிகர்ணிகா (20) இன்று வர மாட்டாள் - தொடர்கதை

மணிகர்ணிகா (20) இன்று வர மாட்டாள் (தொடர்கதை)

(அமெரிக்காவில்  117  வது நாள்:  06-8-2022)


இதன் முதல் பகுதி   -" மணிகர்ணிகா (1) இன்று வரமாட்டாள் " படிக்க இங்கே சொடுக்கவும்.

இதன் முந்தைய பகுதி   -" மணிகர்ணிகா (10) இன்று வரமாட்டாள் " படிக்க இங்கே சொடுக்கவும்.


"அம்மா, அம்மா, இவ என்ன காரியம் பண்ணியிருக்கா பாரும்மா.." என்று நவீன் பரபரப்புடன் போன் செய்த போதே ஏதோ விரும்பத்தகாத விஷயம் நடந்திருப்பதை சாமுண்டீஸ்வரி புரிந்துகொண்டுவிட்டாள்.


முதல்நாள் இரவு அவன் எவ்வளவு மகிழ்ச்சியோடு பேசினான்! மணிகர்ணிகா வருகிறாள் என்று எவ்வளவு ஆசையோடு இருந்தான்! அவள் வந்த உடனே இருவரும் தன்னோடு பேசுவார்கள் என்று காத்திருந்தது இப்படி வீணாகிவிட்டதே!

ஹேண்ட்பேகை நம்பாதே மணிகர்ணிகா!

நவீனை எப்பொழுதும் அவள் கடிந்து கொண்டதே இல்லை. அவனுடைய விருப்பத்திற்கு முதலிடம் கொடுத்தே வளர்த்து வந்தாள். அவனும் தன் வயதுக்கு மீறிய பொறுமையுடன் பெற்றோர்களுக்கு உடன்பட்டு நடந்து வந்தான். அவன் கண்ணில் ஒரு சொட்டு நீர் வந்தாலும் பொறுக்காது. உருகிப் போய் விடுவாள்.


"என்னடா செல்லம், என்ன நடந்ததுன்னு பொறுமையா சொல்லு" என்றாள்.


மணிகர்ணிகா வந்ததையும் தன்னிடம் சொல்லிக் கொள்ளாமல் கிளம்பி விட்டதையும் அவன் சொன்னபோது, அதற்கு முன்பு நிச்சயம் அழுதிருப்பான் என்று தோன்றியது. 


"நவீன் கண்ணா, நீ அவள் மனம் புண்படும்படி ஏதாவது நடந்து கொண்டாயா? ஏதாவது பேசினாயா? யோசிச்சு சொல்லு. நான் இப்பவே அவ கிட்ட பேசுறேன். அதுவரையும் நீ மேற்கொண்டு பேசாதே!"


"இல்லைமா! எனக்குத் தெரிஞ்சு நான் எந்த தப்பும் பண்ணல. ராத்திரி போய் அப்பார்ட்மெண்ட் ஃபிக்ஸ் பண்ணிட்டு வந்தோம். அப்ப கூட நல்லா தான் இருந்தா. ராத்திரி வீட்டிலேயே எதுவும் பேசல. அப்புறம் ஏன் காலையில் எழுந்தவுடன் சொல்லிக்காம இவ சென்னைக்கு போயிட்டான்னு புரியல மா!"


இவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த ரங்கநாத் மனைவியிடம் இருந்து போனை வாங்கி, "நவீன், எனக்கு மணிகர்ணிகாவைத் தெரியும். ஏதோ ஒரு சாதாரண விஷயத்தை அவள் தப்பா புரிஞ்சுகிட்டு இருக்கான்னு தோணுது. நீ பொறுமையா இரு. நாங்க அவ கிட்ட பேசி, எந்த பிரச்சினையா இருந்தாலும் சால்வ் பண்றோம். கவலைப்படாதே.  நீ உன்னுடைய வேலையை கவனி" என்றார். சாமுண்டீஸ்வரியும்  அதேபோல் அவனுக்கு ஆறுதல் சொன்னாள்.


அதற்கு மேல் இந்தப் பிரச்சினையில் நேரம் செலுத்த முடியாதபடி  அலுவலக வேலைகள் அவனை ஆட்கொண்டன.

*** 

சென்னை விமான நிலையத்தில் மணிகர்ணிகா இறங்கியதுதான் தாமதம், அவளுடைய மொபைல் ஒலிக்கத் தொடங்கியது. மாமா ரங்கநாத்!  


வீட்டுப்பாடம் எழுதாமல் வந்த மாணவனை ஆசிரியர் எழுந்து நிற்கச் சொன்னதுபோல் குற்றவுணர்வு அவளை உந்தித் தள்ளியது. சுற்றிலும் வருவோர் போவோர் இருந்ததால் ஓரமாஇருக்கையைப் பிடித்து அமர்ந்துகொண்டபின், “ஹலோ மாமா!” என்றாள்.


அவளுடைய குரலைக் கேட்டதும்தான் உயிர் வந்தது ரங்கநாத்துக்கு. “மணிக்கா செல்லம், எங்களை எல்லாம் மறந்துட்டியாம்மா? எங்க கிட்ட கூட ஒரு வார்த்தை சொல்லாம வந்துட்டியேம்மா?..” என்றார்.


அப்போதுதான் தன்னுடைய முட்டாள்தனம் அவளுக்கு விளங்கியது. மாதவியின் கைப்பையை நவீனுடைய காரில் பார்த்தவுடனே மாமா, மாமியிடம் பேசியிருக்கக் கூடாதா? அவர்களை விட்டால் ஆதரவு என்று  தனக்கு யார் இருக்கிறார்கள்? "மன்னிக்க வேண்டும் மாமா!" என்று மட்டும் சொன்னாள். வேறு என்ன சொல்லவேண்டும் என்று தெரியவில்லை.

 

ரங்கநாத்துக்குப் புரிந்தது. இளம் தம்பதிக்குள் சின்னச்சின்ன விஷயங்களுக்கும் கருத்துவேறுபாடு வருவது இயற்கை. உடனே தலையிட்டுச் சமாதானப்படுத்த யாராவது பெரியவர்கள் இருக்கவேண்டும். 


"மணிக்கா! நீ எப்படி எனக்குக் குழந்தையோ, நவீனும் அப்படித்தான். உன்னைவிட ரெண்டு வயசு பெரியவன். அவ்வளவுதான். அவனைப் பற்றி உனக்கும் கொஞ்சம்  தெரியும்தானே, மனசுல இருப்பதை வெளியில சொல்லத் தெரியாது. அதனால்தான் நீ கோபப்படும்படி அவன் ஏதோ சொல்லியிருக்கவேண்டும்..." என்று ரங்கநாத் பேசிக்கொண்டிருக்கும்போதே அவள் குறுக்கிட்டாள். 


"அவர் பேசியிருந்தால் பரவாயில்லையே மாமா! பேசவே இல்லையே, அவர் மனசு கல்லு மாதிரி" என்று கோபமாகக் கூறினாள். 


சாமுண்டீஸ்வரி இப்போது லைனில் வந்தாள். “பார்த்தீர்களா, மணிக்காவுக்கு ஒண்ணும் தெரியாது. ஊரும் புதுசு. இவன் தானே பாத்து நடந்துக்கணும்? மணிக்கா, நீ ஒண்ணும் கவலைப்படாதே. நான் பேசறேன் அவன்கிட்ட. மொதல்ல நீ எங்க தங்கப் போற, சொல்லு, சென்னையில ஒனக்கு யார் இருக்காங்க?”     


அப்போதுதான் தன்னுடைய அறியாமை அவளுக்குப் புரிந்தது. கோபத்தோடு துபாய் விமான நிலையம் வந்தபோது எங்கு போகவேண்டும் என்ற தெளிவில்லாமல் இருந்தாள். இன்னும் ஒருமணி நேரத்தில் சென்னை விமானம் புறப்பட இருப்பது அறிவிப்புப் பலகையில் பளிச்சிட்டதால், சென்னைக்கு டிக்கட் வாங்கினாள்.  "தெரியலே, மாமி" என்றாள். அவளுக்கு அழுகை வரும்போல் இருந்தது.


சாமுண்டீஸ்வரிக்கு விஷயம் புரிந்துவிட்டது. நவீனையும் இவளையும் வீடியோ காலில் பேசவைத்தால் பிரச்சினை இன்னதென்று கண்டுபிடிக்கலாம். கணவரைப் பார்த்து, “இவளை உங்க கெஸ்ட் ஹவுசில் தங்குவதற்கு ஏற்பாடுசெய்யுங்கள்” என்றாள். 


“ஆமாம் மணிக்கா! நீ அங்கேயே இரு. உன்னை கெஸ்ட் ஹவுசுக்கு அழைத்துப்போவதற்குக் கார் வரும். அந்த நேரத்தில் ஏர்போர்ட்டில் ரெண்டு ரெஸ்டாரண்டுகள் இருக்கே, ஏதாவது சாப்பிடு. மனசைத் தெளிவா வச்சிக்கோ. நாங்க இருக்கோம். நீ எதுக்கும் கவலைப்படவேண்டாம்” என்றார் ரங்கநாத்.

***


துபாயில் வாட்ஸப் கால் வசதி கிடையாது.  ஆகவே ‘கூகுள் டுவோ’வில் வீடியோகால் ஏற்படுத்தினான் நவீன். முதலில் மணிகர்ணிகாவின் இணைப்பு தான் கிடைத்தது. அவன் முகத்தில் இருந்த சோகம் அவளை பெரிதும் பாதித்தது. அவன் தவறு செய்யக்கூடியவனாகத் தெரியவில்லைதான். ஆனாலும் மனதில் இருந்த சந்தேகம் அவளை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தது. மூன்று முறை காதல் தோல்வி அடைந்தவளாயிற்றே மாதவி! நாலாவது முறை வெற்றி அடைந்துவிட்டிருந்தால்? 


மாமா, மாமி இருவரும் சற்று நேரத்தில் இணைந்தார்கள். அவர்கள் விஜயவாடாவில் இருந்து. இவள் சென்னையில் இருந்து. அவன் துபாயில் இருந்து. தொழில்நுட்பத்தின் அற்புதம்.


“அம்மா..” என்றான் நவீன் சோகமாக. 


சாமுண்டீஸ்வரி அவனைக் கண்டிப்பதுபோல் பேசினாள். “நவீன், இன்னும் குழந்தை மாதிரியே நீ நடந்துகொள்ளக் கூடாது. மணிக்கா, நாம்ப தொலைத்துவிட்டு மீண்டும் கிடைத்த மாணிக்கம். அவளை எப்படி நடத்தறதுன்னு ஒனக்கு இன்னும் தெரியல. நான் அவளைக் குத்தம் சொல்லவே மாட்டேன். அதனால, என்ன நடந்ததுன்னு தெளிவாச் சொல்லிடு. எதையும் மறைக்காதே” என்றாள்.


“அம்மா, எனக்கு ஒண்ணுமே தெரியலையே! நாங்க போனோம், அபார்ட்மெண்ட் பாத்தோம், சாவி வாங்கிட்டு வந்தோம். தூங்கினோம். நான் குளிக்கப்போனேன். இவளைக் காணோம். அவ்ளோதான் எனக்குத் தெரியும். அதனால ஒன் மருமகளைத் தான் கேக்கணும்” என்றான்.  


மணிகர்ணிகாவுக்கு அழுகை பொத்துக்கொண்டு வந்தது. “உண்மையைச் சொல்லுங்க நவீன். எனக்கு எல்லாம் தெரிந்துவிட்டது. மறைக்கலாம்னு நினைக்காதீங்க” என்றாள்.


நவீனுக்குப் பதற்றம் உண்டாவது தெரிந்தது. “மணிக்கா, நீ என்ன சொல்கிறாய்?” 


சாமுண்டீஸ்வரி மகன் சார்பாகப் பேசினாள். “மணிக்கா செல்லம், மனசுல இருக்கறத சொல்லிடும்மா. நவீன் தெரியாதுன்னு சொல்றான் இல்லியா?”    


அவ்வளவுதான் பொங்கியெழுந்துவிட்டாள் மணிகர்ணிகா. “நவீன், உங்களை நான் என்னவோன்னு நெனைச்சேன். உங்களுக்குத் தெரியாமத்தான் அந்தப் பை ஒங்க காருக்குள்ள வந்துச்சா?’


அவன் விழித்தான். “பையா, எந்தப் பை?”


“நெஜம்மா ஒங்களுக்குத் தெரியாது இல்லே?” 


“சத்தியமா தெரியாது மணிக்கா!” என்று சோகமாகக் கூறினான் நவீன்.


“நீங்களும் நானும் ஒரு லேடீஸ் ஹேண்ட் பேக் வாங்கி, அவளுக்கு கொடுத்தோமே, அந்தப் பை!”


“அதுவா, அதைத்தான் மாதவிக்குக் கொடுத்துவிட்டோமே!”


“ஆமாம், கொடுத்தோம், அதுதான் கேட்கிறேன், அவளுக்கு கொடுத்த பை, மறுபடியும் ஒங்க கார்ல எப்படி வந்ததுன்னு கேட்கிறேன்.”


சாமுண்டீஸ்வரிக்கு விஷயம் ஒருவாறு புரிந்தமாதிரி இருந்தது. முதல் முறையாக மாதவியைப் பற்றிக் கேள்விப்பட்டபோதே அவள் ஆபத்தானவளாக இருப்பாளோ, இந்த அப்பாவி மணிக்கா அவளை நம்புகிறாளே என்று தோன்றியது. இப்போது அவளைச்  சுற்றித்தான் சந்தேக வளையம் உண்டாகியிருக்கிறது. 


“என்னோட காரிலா? நான் இதுவரை பார்க்கவில்லையே!” என்று நவீன் உறுதியோடு சொன்னான்.   


“ஒரு நாள் தற்செயலாக அவள் துபாயில் கடைத்தெருவில் நடந்துகொண்டிருப்பதை பார்த்தேன். காப்பி சாப்பிட அழைத்தேன். 

அந்த ஒரு முறைதான் என் காரில் அவள் ஏறினாள். பிறகு காபிஷாப்பிலிருந்து ‘கேப்’பில் போய்விட்டாள். அவளுடைய பை எப்படி என் காரில் இருக்கமுடியும்? மறந்துபோய் விட்டுவிட்டுப் போயிருந்தால் மறுநாள் போன் செய்திருக்க மாட்டாளா? இல்லையே!’


“பாருங்க மாமி, எப்படி சாதிக்கிறார்!”


“கொஞ்சம் பொறு, மணிக்கா! நவீன், ஒண்ணு செய். நீ நேரடியாக உன் காருக்குப் போ. அங்கிருந்து மறுபடியும் வீடியோ கால் பண்ணு. நாங்க காத்திருப்போம். அந்தப் பை இருந்தா அதைக் காட்டு.  இல்லேன்னா இல்லேன்னு சொல்லு. சரியா? பதினஞ்சு நிமிஷம் கழிச்சு நான் கூப்பிடறேன்” என்றாள் சாமுண்டீஸ்வரி.    

**** 

நவீன் காருக்குள் பார்த்தான். பின் சீட்டில் இருந்தது அந்தப் பை! மாதவியின் பை! எப்படி இவ்வளவு நாள் அவன் பார்க்காமல் இருந்தான்?


“மணிக்கா, நீ சொன்னது சரி! அவளோட பை காரில் தான் இருக்கிறது!” என்றான் நவீன். முகத்தில் அசடு வழிந்தது.


“நான் அப்பவே நெனச்சேன். மணிக்கா சொன்னா சரியாத்தான் இருக்கும்னு. தன் பாக்கெட்டுல இருக்கறதே இவனுக்குத் தெரியாது. இவன் டென்த் படிக்கும்போது ஒரு பையன் கரப்பான் பூச்சிய பொட்டலத்துல மடிச்சு இவனோட பேண்ட் பாக்கெட்ல போட்டிருக்கான். ரெண்டு நாள் கழிச்சு நான் துவைக்கும்போது தான் தெரிஞ்சது!" என்று நிலைமையை சகஜமாக்கினாள் சாமுண்டீஸ்வரி.       


"நான் எப்படி நம்பறது? அவ வந்து இவரோட தங்கியிருந்தா?" என்று கோபத்துடன் மாமியைப் பார்த்தாள் மணிகர்ணிகா. 


"நோ, நோ, அவசரப்படாதே மணிக்கா! நவீன் அப்படியெல்லாம் தப்பு செய்யமாட்டான். என் பையனை எனக்குத் தெரியும்" என்ற சாமுண்டீஸ்வரி, “அந்தப் பையை காமிராவுல காட்டு” என்றாள். 


காட்டினான். “இதே பை தான்” என்றாள் மணிகர்ணிகா.


அதுவரை பேசாமல் இருந்த ரங்கநாத்  இப்போது தலையிட்டார்: “ஒருவேளை அந்த மாதவி, நிஜமாகவே தவறவிட்டிருந்தால்? உன் காரில் தான் வைத்தோம் என்று அவளுக்கே தெரியாமல் இருந்தால்? ஆகவே, அவளுக்குப் போன் போடு. எந்த ஊரில் இருக்கிறாளோ?”


குரூப் வீடியோ காலில் மாதவியையும் இணைத்தான் நவீன்.  “மாதவி, என் பெற்றோர்களும் மணிகர்ணிகாவும் உன்னோடு பேச ஆவலாய் இருக்கிறார்கள்!”


“ஓ, கிரேட்! குட் மாணிங் டு ஆல்!” என்றாள் மாதவி.


வழக்கமான நல விசாரிப்புக்குப் பிறகு, நேரடியாக விஷயத்துக்கு வந்தார் ரங்கநாத்.


“மாதவி, நீங்கள் துபாய்க்கு இதற்குமுன் போனதுண்டா?” 


“ஒரே ஒரு முறை போயிருக்கிறேன். அப்போதுதான் நவீனைப் பார்த்தேன். காப்பி கூடச் சாப்பிட்டோம்.”


“அப்போது உங்கள் ஹேண்ட் பேக் தொலைந்துபோய் விட்டதா?” என்றாள் சாமுண்டீஸ்வரி. 


“அதெப்படித் தொலையும்? நவீன் காரில் பத்திரமாக இருக்குமே” என்று சிரித்தாள் மாதவி.


“துபாயில் ஒரு குறிப்பிட்ட கம்பெனிக்கு என்னை சிபாரிசு செய்யும்படி நவீனைக் கேட்டுக்கொண்டேன். மறந்துவிடக் கூடாதே என்று என் கைப்பையை காரின் பின்சீட்டில் அவரிடம் சொல்லாமல் வைத்தேன். சஸ்பென்சாக இருக்கட்டுமே என்று என்னுடைய ரெஸ்யூமின் பிரிண்ட்-அவுட்டையும் அந்தப் பையில் வைத்தேன். ஆமாம், அதற்கென்ன இப்போது? அடுத்த முறை துபாய் வந்தால் பெற்றுக்கொள்கிறேன்” என்றாள் மாதவி.


நவின் அந்தப் பையைத் திறந்தான். அவள் சொன்னபடியே அவளுடைய ரெஸ்யூம் இருந்தது!


அப்பாடா என்று பெருமூச்சு விட்டான் நவீன்.  மணிகர்ணிகாவின் சந்தேகமெல்லாம் சூரியனைக் கண்ட பனிபோல மறைந்துவிட்டது. “மாதவி, உன் பை என்னிடம் பத்திரமாக இருக்கும். அல்லது அட்ரஸ் கொடுத்தால் கூரியரில் அனுப்பிவிடுகிறேன்” என்று புன்சிரிப்புடன் கூறினாள். 


ரங்கநாத்தும் சாமுண்டீஸ்வரியும் நிம்மதிப்  பெருமூச்சு விட்டனர். 


“ஆனால் அதற்கு அவசியமில்லை. நானே துபாய்க்குத்தான் வரப்போகிறேன்.  பாத்திமா டக்ளஸ் இன்று காலை போன் செய்தாள். அவளுடைய கம்பெனியில்தான் சி.எஃப்.ஓ.வாக நான் சேரப்போகிறேன். நவீன் சொல்லித்தான் கிடைத்திருக்கவேண்டும். அதற்காக அவருக்கு நன்றி” என்றாள் மாதவி.


உண்மையில் நவீன் எந்த சிபாரிசும் செய்யவில்லை. தானாகவே அவளுக்குக் கிடைத்த வாய்ப்பு அது. இருந்தாலும் வெறுமனே புன்னகை செய்தான். “கங்கிராஜுலேஷன்ஸ்” என்றான்.


“இன்னொன்றுக்கும்  நீங்கள் கங்கிராட்ஸ் சொல்லவேண்டுமே” என்றாள்  மாதவி வாயெல்லாம் சிரிப்பாக.


“எனக்கு நிச்சயதார்த்தம் நடக்கப் போகிறது. அவர் பஹ்ரைனில் இருக்கிறார்.  கல்யாணத் தேதி இன்னும் முடிவாகவில்லை. ஆனால் கல்யாணம் சென்னையில்தான் நடக்கப்போகிறது.” 


மணிகர்ணிகாவுக்கு அளவற்ற சந்தோஷம். இவள் மீதா சந்தேகப்பட்டோம் என்று அவளுக்கு வெட்கமாகப் போயிற்று. மாமா, மாமியைப் பார்க்கவும் அவளுக்கு மிகுந்த வெட்கமாகியது.


ரங்கநாத் உரையாடலை முடிவுக்கு கொண்டுவந்தார். “ரொம்ப நன்றி மாதவி! சென்னையில் ஏதாவது உதவி வேண்டுமானால் நீங்கள் மணிக்காவிடம் கேட்கலாம். ஏனென்றால் அவளும் இனிமேல் சென்னையில்தான் இருப்பாள்” என்றார். 

 

நவீனும் மணிகர்ணிகாவும் வியப்போடு பார்த்தார்கள். “சென்னையிலா?’


“ஆமாம். மணிக்கா போன வருடம் பேங்கிங் சர்வீஸ் தேர்வு எழுதியதில் செலக்ட் ஆகி, அவள் பெயர் எங்கள் பேங்கிற்கு இன்டர்வியூ லிஸ்ட்டில் வந்திருக்கிறது. 500 பேர் லிஸ்ட்டில் அவள் முதல் இருபதில் இருக்கிறாள். எனவே நிச்சயம் கிடைத்துவிடும். கொஞ்சநாள் சென்னையில்தான் இருப்பாள். நானும் ரிட்டையர் ஆனபின் சென்னைக்கே வந்து செட்டில் ஆவதாக இருக்கிறேன்” என்றார் ரங்கநாத்.

*** 

மயூரியின் வீடு பூட்டியிருந்தது. அக்கம் பக்கத்தில் விசாரித்ததில் அவளுக்கு உடல்நலம் சரியாகிவிட்டதாகவும், அவளுடைய கணவருக்கு பெங்களூரிலேயே பதவி உயர்வு கிடைத்துவிட்டதால், சொந்தமாக ஒரு பெரிய ஃபிளாட் வாங்கப் பணம் கொடுத்திருப்பதாகவும்,  அவள்  விரைவில் வேலையை விட்டுவிட்டு குடும்பப் பெண்ணாக செட்டில் ஆகப் போவதாகவும் தெரிந்தது. 

  

எனவே திலகாவின் வீட்டுக்குக் கிளம்பினார் சண்முகம். அவள் அப்போலோவில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிவிட்டதால், வீட்டிலேயே ஓய்வெடுத்துக் கொண்டிருப்பாள் என்று எதிர்பார்த்தார். ஆனால் அவள் வீடும் பூட்டியிருந்தது!


அக்கம் பக்கத்தில் யாருக்கும் அவளைப் பற்றித் தெரியவில்லை. எனவே ஏமாற்றத்துடன் காரை எடுத்தார். அப்போது ஒரு போலீஸ் ஜீப்பிலிருந்து திலகாவின் கணவன் கிரீஷ் இறங்குவதைக் கண்டதும் காரை நிறுத்தினார்.


“வணக்கம் சார்” என்று அவசரமாகக் காரில் ஏறிக்கொண்டான் கிரீஷ். “நீங்கள்தான் சார் என்னைக் காப்பாற்றவேண்டும். திலகா எங்கு போனாள் என்று தெரியவில்லை” என்று குரல் தழுதழுக்கக் கூறினான்.    


சாலையில் போக்குவரத்து அதிகம் இருந்ததால், சண்முகத்தால் அவனோடு தொடர்ந்து பேசமுடியவில்லை. “வீட்டில் போய் பேசிக் கொள்ளலாம்” என்று சாலையில் கவனம் வைத்தார்.


மனைவிக்கு போன் செய்து, “கிரீஷ் வருகிறார். எங்கள் ரெண்டு பேருக்கும் சாப்பாடு தயாராக வை” என்றார்.   

(தொடரும்)


                   -இராய செல்லப்பா நியூ ஜெர்சியில் இருந்து 


இதன் அடுத்த பகுதி   -" மணிகர்ணிகா (21) இன்று வரமாட்டாள் " படிக்க இங்கே சொடுக்கவும்.