பதிவு
எண் 35/ 2017
இளமையில்
கல்
-இராய செல்லப்பா
போர்டு ஹைஸ்கூல் இராணிப்பேட்டையில் நான்
பதினோராம் வகுப்பில் இருந்த சமயம்.
அங்கிருந்து சிறிது தூரத்தில் ரயில்
நிலையம் இருந்தது. உள்ளூரில் இருந்த ஈஐடி பாரி கம்பெனியின் வசதிக்காகப் போடப்பட்டிருந்த சரக்கு
ரயில்கள் வந்துபோகும் ரயில் நிலையம் அது. இராணிப்பேட்டைக்கும் வாலாஜாரோடு என்னும்
அம்மூருக்கும் இடையே ஒரு பாசஞ்சர் ரயில் காலையில் ஒன்றும் மாலையில் ஒன்றும் வரும், போகும். மற்றப்படி
அமைதியான இடம். பள்ளியின் அருகாமையில் வெள்ளிக்கிழமை சந்தை கூடும் இடம் இருந்தது.
ஒருநாள் காலை பள்ளியின் வாசலை
இழுத்துச் சங்கிலி போட்டிருந்தது. மாணவர்கள் யாரையும் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை
ஒரு பெரும்கும்பல். இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்றார்கள். யாருக்கும் ஒன்றும் தெரியவில்லை. நிற்பதா, வீட்டிற்குச் சென்று விடுவதா என்று குழப்பம்.
கையில் சவுக்குக் கட்டைகள், மண்ணெண்ணெய் புட்டிகள்,
தார் நிறைந்த பெயின்ட் டப்பாக்கள், சுவற்றில்
எழுதுவதற்கான பிரஷ்கள் -இவையெல்லாம் அவர்கள்வசம் இருந்தன. பள்ளிக்கு எதிரில்
திறந்த வேன்களில் பெட்ரோல் டின்களும் தார் டப்பாக்களும் இருந்தன. இரண்டடி நீளமுள்ள
மூங்கில் குச்சிகளின் நுனியில் துணி சுற்றப்பட்டுத் தயாராக இருந்தன.
உள்ளூர் எதிர்க்கட்சிப் பிரமுகர் அங்கே நின்றிருந்தார். அவரை எனக்குத் தெரியும். அவருடைய மகனும் என் வகுப்புதான்.
ஆனால் அன்று அவன் வரவில்லை. அவர் என்னை அழைத்தார். ‘தம்பி நல்லாப் படிக்கிறியா?’ என்றார். ‘ஆமாம்’
என்று புன்னகைத்தேன். அதே சமயம் பேச பயமாகவும் இருந்தது. ஏனெனில் அவர் கையிலும்
சவுக்குக்கட்டை இருந்தது.
பிறகு, என்னிடம் ஐந்து ரூபாய் நோட்டைக் கொடுத்தார். ‘எனக்கு
ஓர் உதவி செய்யவேண்டும். ஓடிப் போய் இரண்டு எண்பது பக்கம் ரூல்டு நோட் வாங்கி
வருகிறாயா?’ என்றார். சரியென்றேன். பிறகு எனக்கு மட்டும்
கேட்கும்படியாக, ‘வாங்கிக் கொண்டு என் வீட்டில்
கொடுத்துவிடுகிறாயா? இன்று எப்படியும் பள்ளிக்கூடம்
கிடையாது. நீயும் உன் ஃபிரண்டும் அமைதியாக வீட்டில் படித்துக் கொண்டிருங்கள்.
சாயந்திரமாக நீ உன் வீட்டிற்குப் போனால்
போதும்’ என்றார்.
நான் நடந்து கடைத்தெரு பக்கம் போக
ஆரம்பித்தேன். என் நண்பர்கள் சிலர் ஓடி வந்தார்கள். கையில் மண்ணெண்ணெய் புட்டியும், தீப்பந்தக்
குச்சியும் இருந்தன. மகிழ்ச்சியாக இருந்தார்கள் அவர்கள். ‘நீயும் வரியா? நாங்கள் ரயில் நிலையம் போகிறோம். ரயிலைக் கொளுத்தப்போகிறோம். ஆளுக்கு நூறு
ரூபாய் கொடுக்கிறார்கள் தெரியுமா?’ என்றான் நண்பன். ஒரு
நிமிடம் எனக்கும் சபலம். நூறு ரூபாய் என்பது பெரிய தொகை. இன்னும் சில மாதங்களில்
பள்ளிக்கல்வி முடிந்து கல்லூரிக்குப் போகவேண்டுமானால் எண்பது ரூபாய் வேண்டும்.
வேலூர் ஊரீஸ் கல்லூரியில் புகுமுக வகுப்பிற்கு முதல் பருவக் கட்டணம் அது.
ஆனால் கைவசம் இருந்த ஐந்துரூபாய்
நோட்டு என்னைத் தடுத்தது. ‘நான் வரவில்லை’ என்று சொல்லி கடைக்கு ஓடினேன். நடந்தால், என்னையும்
இழுத்துக்கொண்டு போய்விடக் கூடும். ரயிலைக் கொளுத்தினால் போலீஸ் வராதா?
கடையருகே மேலும் சில நண்பர்கள்
இருந்தார்கள். சுவற்றில் தார் கொண்டு ‘இந்தி ஒழிக’ என்று எழுதுவதில் முனைப்பாக
இருந்தார்கள். ஒரு தடவை எழுதினால் பத்துரூபாய் தருகிறார்களாம். அவர்களில்
ஒருவனுக்குத் தமிழே கொஞ்சம் குளறுபடி. ‘இந்தி ஒழிக’ என்பதை ‘இதி ஒழிக’ என்று ‘ந்’ இல்லாமல்
எழுதினான். இன்னோரிடத்தில் ‘இந்தி ஒக’ என்று ‘ழி’ இல்லாமல் எழுதினான். பரவாயில்லையாம்.
அதற்கெல்லாம் பணம் குறைக்கமாட்டார்களாம். சொன்னபடி கொடுத்துவிடுவார்களாம். ஆனால்
ஒவ்வொருத்தனும் 25 இடங்களில் எழுதவேண்டுமாம்.
இரண்டு ரூல்டு நோட்டுக்களையும்
வாங்கிக்கொண்டு நண்பனின் வீட்டை அடைந்தேன். அப்போது இன்னும் சில நண்பர்களைப்
பார்த்தேன். ஆளுக்கொரு தடிமனான துணிப்பை வைத்திருந்தார்கள். அதில் கனமாக ஏதோ
இருந்தது. சாலை போடுவதற்காகக் கொட்டப்பட்டிருந்த ஜல்லிக்கற்கள். ‘பஸ் நிலையத்தில்
நின்றுகொண்டு வருகின்ற பஸ்களின் மேல் கல் எறியவேண்டும். ஆனால் மக்கள்மீது படாதபடி
எறியவேண்டும். ஒரு பைக்கு இருபது ரூபாய் கொடுப்பார்கள்’ என்றான் ஒருவன்.
‘இளமையில் கல்’ என்று ஔவையார்
சொன்னது ஞாபகம் வந்தது.
‘இன்று ஊர் முழுதும் கலாட்டா
நடக்குமாம். அப்பா என்னை வெளியில் போகவே கூடாது என்று சொல்லியிருக்கிறார். வா, மாடிக்குப்
போய்விடலாம்’ என்றான் நண்பன்.
****
1974. வங்கியில் வேலை கிடைத்து சென்னைக்குக்
குடியேறினோம். மேற்கு மாம்பலத்தில் வீடு. ஒரு காலை நேரம். வங்கிக்குக் கிளம்பிக் கொண்டிருந்தேன்.
ரயில் பாதையைக் கடந்தால் எதிரே மகாலட்சுமி தெருவில்தான் எமது வங்கி. நடந்து போகும்
தூரம்தான்.
அப்போது ஒரு சிறுவன்,
பத்து வயதிருக்கலாம், ‘சார் சார்’ என்று ஓடி வந்தான். மிக எளிமையான ஆடையில்
இருந்தான். ஏழை என்பது கண்கூடு. ‘சார், எனக்கு உதவி பண்ணுங்க சார். இன்னிக்கு
நோட்டு வாங்கிண்டு வரலேன்னா பள்ளிக்கூடத்தில் உள்ளேவிட மாட்டார்கள் சார். நான்
நல்லாப் படிப்பேன் சார். ஒருநாள் பாடம் போயிட்டாக்கூட ரொம்ப கஷ்டம் சார்’ என்று
அழுதபடியே கூறினான். ‘அப்பா கெடையாது சார்’ என்று விசும்பினான்.
ஐந்துரூபாய் கொடுத்துவிட்டு நடந்தேன். பாவம், தகப்பன் இல்லாத பையன். கொடிது கொடிது இளமையில் வறுமை. எனக்கும் ஒளவையாருக்கும் நன்றாகத் தெரியும்.
காலை எட்டுமணிக்கே
ஆரம்பித்துவிடும் வங்கி. பத்தரை மணிக்குக் கூட்டம் குறைந்துவிடும். அப்போது இரண்டு
பேராக வெளியில் வந்து தேநீர், உப்புமா சாப்பிடுவதுண்டு. அந்நேரம் வங்கிக்குள்
நுழைந்தான் அதே சிறுவன். ‘யார் அவன்?’ என்றேன் நண்பரிடம். ‘படிக்கிற பையன்
இல்லை. எங்கேயோ வேலை செய்கிறான் போலிருக்கிறது. தவறாமல் தினமும் காலையில் இருபது
அல்லது முப்பது ரூபாய் தன்னுடைய கணக்கில் கட்டுவான்’ என்றார். எனக்குப் பகீரென்றது. எம்எஸ்சி முடித்து
வேலைக்கு வந்த எனக்கு மாதச் சம்பளம் அப்போது நானூற்று ஐம்பது ரூபாய்தான். அதாவது
ஒரு நாளைக்குப் பதினைந்து ரூபாய்!
****
1986. பஜாஜ் ‘சேடக்’ ஸ்கூட்டர்
புதிதாக வாங்கியிருந்த நேரம். பாண்டிச்சேரியில் முன்பதிவு செய்து ஆறு வருடங்கள்
கழித்துக் கிடைத்த வண்டி. சென்னை திநகரில், பாண்டி பஜார் நாயுடு ஹால் அருகில் வண்டியை
நிறுத்திவிட்டுத் துணி வாங்கப் போனேன். ஒரு சிறுவன் ஓடிவந்தான். கையில் ஒரு பாலிஷ்
டப்பாவும் சில கந்தைத் துணிகளும் இருந்தன. ‘சார், வண்டி துடைக்கட்டுமா? பத்து ரூபா
தான் சார்’ என்று ஆவலோடு கேட்டான். 'வேண்டாம், புது வண்டி, அழுக்கு ஒண்ணும்
இல்லையே’ என்றேன். அவன் விடாப்பிடியாக ‘அஞ்சு ரூபாய் கொடுங்க சார். நல்ல பாலீஷ்
பண்ணிடுவேன்’ என்று கெஞ்சினான். மறுத்துவிட்டேன்.
திரும்பிவந்து
பார்த்தால் புத்தம்புதிய ஸீட்டில் யாரோ பிளேடு கொண்டு நேர்க்கோடாக ஒரு கீறல் உண்டாக்கி
இருந்தார்கள். சீட் கவரைக் கழற்றினேன். அடியிலிருந்த சீட்டிலும் கீறல் விழுந்திருந்தது. அந்தப் பையன்தான் செய்திருக்கவேண்டும். சீட், கவர் இரண்டையும் மாற்றியாக வேண்டும். வேறு வழியில்லை. முன்னூறு ரூபாய் ஆகும். கோபத்தோடு
சுற்றுமுற்றும் பார்த்தேன். அப்போது மெக்கானிக் மாதிரி கையில் சில ஸ்க்ரூடைவர்களுடன்
ஒருவர் என்னை நோக்கிவந்தார். கடையில் நுழையும்போதும் அவர் அங்கே நின்றிருந்தது
நினைவுக்கு வந்தது. என் கோபத்தை அவரிடம் காண்பித்தேன். ‘என்னங்க இது, நீங்கல்லாம்
இங்கே தானே இருக்கீங்க. ஒருத்தன் இப்படி ஸ்கூட்டர் ஸீட்டைக் கிழிச்சிருக்கான்.
நீங்க ஏன்னு கேக்க மாட்டீங்களா?’ என்றேன்.
அவர் கிழிந்த ஸீட்டைப்
பார்த்தார். ‘சார், இது ஒவ்வொரு நாளும் நடக்கிற விஷயம். கடைக்காரங்களும் எவ்வளவோ
செஞ்சு பார்த்துட்டாங்க. ஒண்ணும் நடக்கல. அதனால, அடுத்த தடவ இங்க வந்தா, அந்தப்
பையன்களுக்கு அஞ்சுரூபா தண்டம் அழுதுட்டு உள்ள போங்க. வண்டியைக் காவல் காக்கறதுக்கு
அஞ்சு ரூபா கொடுத்தோம்னு நெனைச்சுக்கிடுங்க. இல்லாதப்பட்டவங்க. பொழைச்சிப்
போகட்டும்’ என்றார். பிறகு என்னைக் கேட்காமலேயே, தன் கையிலிருந்து நீண்ட டேப்பை எடுத்து, கிழிந்த ஸீட்டை
ஒட்டினார். ‘அடிக்கடி இங்க வருவீங்களா? அப்படின்னா சீட் கவர் மாத்தாதீங்க. கிழிஞ்சமாதிரியே
இருக்கட்டும். இல்லாட்டி மறுபடியும் கிழிச்சிடுவானுங்க’ என்றார். ‘இருபது ரூபா கொடுங்க, போதும்’ என்றார் பெருந்தன்மையுடன்.
வேறு வழி?
****
‘இளமையில் கல்’ என்பது
சரியே. ஆனால் கற்பது எதனை?
****
© Y Chellappa
சம்பவங்களைப் படிக்கும்போது காலம் அப்போதே கெட்டுப்போச்சு என்பது தெரிகிறது. சிறுவர்கள் கூடவா! கஷ்டம்தான். தம சப்மிட் ஆகவில்லை.
பதிலளிநீக்குஸ்ரீராம் காலம் கெட்டுப் போச்சுனு ராமாயணக் காலத்திலேயே பேசப்பட்டதுனு எங்கேயோ வாசித்த நினைவு!!!!
நீக்குகீதா
நன்றி நண்பரே! தமிழ் மணத்தில் இணைத்தால் "புது இடுகைகள் எதுவும் காணப்படவில்லை" என்று வருகிறது. நம் வலைச்சித்தர் திண்டுக்கல் தனபாலனுக்கு எழுதியிருக்கிறேன். அவர் திருப்பதியில் சாமி கும்பிட்டுக்கொண்டிருக்கிறாராம். நாளைக்குள் சரிசெய்து கொடுக்காமலா போவார்! நல்ல மனிதர் ஆயிற்றே!
பதிலளிநீக்குஇளமையில் "கல்" ஸூப்பர்....
பதிலளிநீக்குதங்கள் வரவுக்கும் ரசனைக்கும் நன்றி நண்பரே!
நீக்குதெளிவான நடையில் அராஜகமான நிகழ்வுகள். மனம் கனமானது, வாழ்க்கையின் அபத்தங்களைப் படிக்கும்போது. அபாரமான நினைவலைகள். பெருமைப்படுகிறேன் செல்லப்பா ! நன்றி.
பதிலளிநீக்குதங்கள் வரவுக்கு நன்றி நண்பரே! தொடர்ந்து வாருங்கள். உங்களைப் பற்றியும் ஒருநாள் எழுதக்கூடும் அல்லவா?
நீக்கு//1965-66 ஆம் வருடம். இந்தி எதிர்ப்புப் போராட்டம். நான் பதினோராம் வகுப்பில் இருந்தேன்.//
பதிலளிநீக்குநானும் அதே 1965-66 ஆண்டு SSLC-XI Std. திருச்சி நேஷனல் காலேஜ் ஹைஸ்கூலில். படிப்பு கெட்டுப்போய் எல்லா அவஸ்தைகளும் நானும் பட்டுள்ளேன். ஆசிரியர்கள் தலைமையில் கடும் வெயிலில் கோஷம் போட்டபடி, ஊர்வலம் சென்றதும் உண்டு.
ஒவ்வொன்றையும் உங்கள் பாணியில் அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்.
இளமையிலேயே ‘கல்’ - அதுவும் பை நிறைய கல் (கற்கள்)! மிகவும் அநியாயமாக உள்ளது.
நீங்களும் நானும் ஒரே வகுப்பு ஒரே சமயம் படித்தோமா? மகிழ்ச்சி...உங்களுக்கு BHELஇல் நிலையாக ஒரே இடத்தில் வாழ்க்கை அமைந்துவிட்டது. நான் 13 தடவை இடமாற்றம் பெற்றேன்! வாழ்க்கை என்பது ஒவ்வொருவருக்கும் விதவிதமான அனுபவங்களைத் தருகிறது. (2) இந்தி எதிர்ப்பு நாட்களில் ஒவ்வொரு நாளும் ஒரு யுகமாக இருக்கும். எப்படித்தான் அந்தக் குரூரமான நாட்களைக் கடந்துவந்தோம் என்று வியப்பாகவே இருக்கிறது. மாணவர்களை எப்படியெல்லாம் பயன்படுத்திக்கொண்டார்கள் அரசியல்வாதிகள்!
நீக்கு//இளமையில் கல், கற்பது எதை?// நல்ல கேள்வி. இப்போது மீண்டும் ஹிந்தி எதிர்ப்பை கையில் எடுத்துள்ளாரே தளபதி. இந்த பருப்பு இப்போது வேகுமா?
பதிலளிநீக்குஇன்றைய மாணவர்கள் விவேகமானவர்கள். அவர்களை அரசியல்வாதிகளால் அசைத்துவிடமுடியாது. இந்தி எதிர்ப்பு இன்றும் தேவைப்படலாம் - சில அனாவசியமான சங்கதிகளில் இந்தியை நுழைக்கப் பார்க்கிறார்கள். அது தேவையற்றது. உதாரணமாக, திரைப் படங்களுக்கு இந்தியில் சப்-டைட்டில் வேண்டும் என்பது. அடிமுட்டாள்தனமான செய்கை. ஆனால் அரசியல்வாதிகளுக்கு காரணம் என்று எதுவும் தேவையில்லையே ஒரு விஷயத்தை எதிர்ப்பதற்கு?
நீக்குஇந்தியை எதிர்க்கும் தலைவிதி... ஸாரி தளபதி முதலில் அவரது மருமகள் நடத்தும் ஹிந்தி ஸ்கூலை இழுத்து மூடட்டும்.
நீக்குநாட்டில் மூடர்கள் உள்ளவரை ஏமாற்றத்தான் செய்வார்கள்.
இந்தியை எதிர்க்கும் தலைவிதி... ஸாரி தளபதி முதலில் அவரது மருமகள் நடத்தும் ஹிந்தி ஸ்கூலை இழுத்து மூடட்டும்.
நீக்குநாட்டில் மூடர்கள் உள்ளவரை ஏமாற்றத்தான் செய்வார்கள்.
இளமையில் கல்
பதிலளிநீக்குஒவ்வொன்றும் ஒரு பாடம்தான் ஐயா
ஆசிரியர் நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்!
நீக்குசிறப்பான அனுபவம் நண்பரே. எது எப்படியோ இந்தி மொழி ஆதிக்கத்தை எதிர்க்கிறேன்.
பதிலளிநீக்குஇன்னொரு மொழி நம் மீது ஆதிக்கம் செலுத்தவந்தால் நிச்சயம் எதிர்க்கவேண்டியதுதான். அதற்குக் கையாளவேண்டிய வழிமுறைகளைப் பற்றித்தான் விவாதிக்கவேண்டியுள்ளது. தங்கள் வரவுக்கு நன்றி நண்பரே!
நீக்குஅந்த சமயத்தில் எனக்கு பத்து வயது.. நானும் வேடிக்கை பார்த்திருக்கின்றேன்..
பதிலளிநீக்குதஞ்சை கீழவாசல் மார்க்கெட் அஞ்சலகம் பெரிய கும்பலால் அடித்து நொறுக்கப் பட்டது..சந்தைப்பேட்டை கடைகளில் இருந்து - கிடைத்தவற்றை அள்ளிக் கொண்டு ஓடினார்கள்..
தஞ்சாவூருக்கு அடுத்த வடவாறு ரயில்வே நிலையம் சூறையாடப்பட்டது என்று பெரியவர்கள் பேசிக் கொண்டார்கள்..
மணியார்டர் படிவங்களைக் கிழித்துப் போட்டார்கள்..
ஆனால் - ரூபாய் தாள்களில் நாணயங்களில் இந்தி இருந்தாலும் ஒன்றும் செய்யாமல் இடுப்பரையில் முடிந்து கொண்டார்கள்..
மகாகவி ஒருமுறை சொன்னாராம் -
இளமையில் கல் என்றால் முதுமையில் மண் தானே!.. - என்று..
வன்முறை என்பதை நான்முதல்முறையாக நேரில் கண்டது அப்போதுதான். இன்று நடக்கும் வன்முறைகளைப் பார்க்கும்போது அதெல்லாம் ஜூஜூபி! தங்கள் வரவுக்கு நன்றி.
நீக்குஇந்தி எதிர்ப்பு என்பதைப் பொதுவில் பார்க்காமல் உள்நோக்கம் கொண்டு எழுதி, தமிழர்களில் பலர் இந்திப் படிக்காமல் வீணாகிப் போய்விட்டோம் என்பவர்கள் வயிற்றில் பாலை வார்த்துள்ளீர்கள். அப்படியே இந்தியர் என்று சொல்லிக்கொண்டு இந்தியை வளர்த்து தாய்மொழியுணர்வை மங்கச்செய்யும் பாம்பு குணம் கொண்டவர்களுக்கும் பால் வார்த்துள்ளீர்கள். வாழ்க உங்களின் இந்திப் பற்று. இந்திப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் உங்களின் நல்ல மனத்திற்கு எம் வாழ்த்துகளும் வணக்கங்களும். இப்படியே எழுதுங்க…. நல்ல வளருவீங்க……
பதிலளிநீக்குநண்பரே, எந்த ஒரு மொழியை இன்னொரு மொழியின் மீது திணித்தாலும் அது எதிர்க்கப்படவேண்டியதே. ஆனால் மொழியை எதிர்த்தாலும், அந்த மொழியின் பயன்பாட்டை உணர்ந்து அதைக் கற்றுக்கொண்டு அந்த மொழிக்காரர்களை வெல்ல வேண்டும் என்ற உணர்ச்சிவேகத்தையும் பெறவேண்டும் என்பது தான் நமது உத்தியாக இருக்கவேண்டும். தமிழ்நாட்டுக்கு வெளியில் பணியாற்றும்போது இந்த உண்மையை மிக எளிதாக உணரமுடியும். எனது கட்டுரையின் நோக்கம், மாணவர்களை வன்முறையில் ஈடுபட வைத்து அதன்மூலம் அரசியல் பதவி பெற்றவர்களின் நடைமுறை சரியானதா என்பதே. அப்படிப் பதவிக்கு வந்தவர்கள், தாம் ஆட்சியில் இருக்கும்போது, இந்தி எதிர்ப்பிற்காக ஏதாவது உருப்படியாக செய்தார்களா என்பதை வரலாறு காட்டும். செய்திருந்தால் இன்று மீண்டும் இம்மாதிரி மொழித்திணிப்பு என்னும் பாம்பு எட்டிப்பார்க்குமா?! இன்னொன்றையும் கவனிக்கவேண்டும். எதிர்க்கட்சியாக இருக்கும்போது மட்டுமே இந்தி திணிப்பை எதிர்க்கிறார்களே அது ஏன் என்பதையும் கவனிக்கவேண்டும். எனது கட்டுரையின் நோக்கம் மாணவர்களை வன்முறைக்கு பழக்குவது தவறு என்பதே. கட்சி அரசியல் என்பது அன்றைய நடைமுறையைச் சுட்டுவதற்காக சொல்லப்பட்டதே அன்றி, எந்தக் கட்சிக்கும் ஆதரவாகவோ எதிராகவோ அன்று. தங்கள் வரவுக்கும் கருத்துரைக்கும் நன்றி.
நீக்குஅழகான பதில் கருத்து சார்!!
நீக்குகீதா
இளமையில் கல்...ல்லுக்கு இப்படி ஒரு பாடமா
பதிலளிநீக்குதீயசெயல்முறைகளை இளமையிலேயே விதைத்து விடுகிறதே இந்த சமூகம் என்ற ஆதங்கத்தையே வெளிப்படுத்தினேன். தங்கள் வரவுக்கு நன்றி.
நீக்குஇந்தி எதிர்ப்புப்போராட்ட அரசியலைத் தொட்டுச் சென்றிருக்கிறீர்கள். 'பிம்பம்' உடைந்துபோகிறதே என்று நிறைய எதிர்ப்புப் பின்னூட்டங்கள் வரும். இவர்கள் சொல்வது ஒன்று செய்வது வேறு.
பதிலளிநீக்கு74களில் மேற்கு மாம்பலம், தி.நகர் இவைகள் இருந்த விதமும், ஹோட்டல்கள் (உப்புமா சாப்பிட்டேன் என்று எழுதியிருக்கிறீர்களே) வசதியையும் வைத்தே நீங்கள் இன்னொரு இடுகை எழுதலாம். நிச்சயம் ரங்கனாதன் தெரு வழியாகத்தான் மகாலட்சுமி தெருவிற்கு வந்திருப்பீர்கள். அதற்கு கொஞ்சம் தள்ளி வலப்புறத்தில் கிளப் ஹவுஸ், அதற்கு எதிரில் சிவா விஷ்ணு ஆலயம்... 1986ல் நான் பார்த்தபோதும் அவ்வளவு கமர்ஷியலாக இந்த இடங்கள் ஆகவில்லை.
நீங்கள் சொன்னமாதிரியே பின்னூட்டங்கள் வர ஆரம்பித்துவிட்டன. நம்முடைய கடந்த காலத்தைத் திரும்பிப் பார்க்கும்போது, அன்றைய வரலாற்றைச் சொல்லித்தானே ஆகவேண்டும்? (வன்முறையை மாணவர்களுக்குப் பழக்குதல்) நிச்சயம் சிலருக்குக் கசக்கத்தான் செய்யும். அதற்காக உண்மையை மறைக்கமுடியுமா? (2) பழைய திநகர் குறித்து மிகப்பல பக்கங்கள் எழுதலாம். நெஞ்சிலே இருக்கிறது. ஆனால் வெறும் பழங்கதையாக எழுதநேர்ந்துவிடுமே என்பதால் எச்சரிக்கையோடு அவ்வப்பொழுது எழுதிகிறேன். விரைவில் உங்கள் ஆசை பூர்த்தியாக ஆரம்பிக்கும். தங்கள் வரவுக்கு நன்றி.
நீக்குஅப்போதெல்லாம் இவ்வளவு கூட்டம் இருந்திருக்குமா என்று தெரியவில்லை.ஏனென்றால் நான் அப்போதெல்லாம் ஊரில்தால். சென்னை பற்றித் தெரியாது. ஆனால் 1987ல் எல்லாம் ரங்கநாதன் தெருவில் கூட்டம் வரத் தொடங்கிவிட்டது. இப்போது கேட்கவே வேண்டாம்.....நாமே தொலைந்துவிடுவோம்!!!
நீக்குகீதா
ஹிந்தித் திணிப்பை காசு வாங்கிக் கொண்டு எதிர்த்து போராடியிருந்தாலும் தப்பில்லை :)
பதிலளிநீக்குநிச்சயமாக! நம் மொழிமீது ஆதிக்கம் செலுத்த ஓடிவரும் எந்த ஒரு மொழியும் எதிர்க்கப்படவேண்டியதே என்பதில் இரண்டு கருத்துக்கு இடமில்லை. இளமையில் வன்முறைக்குப் பழக்குகிறார்களே என்ற வேதனையை வெளிப்படுத்தினேன். சோவியத் நாடு துண்டுதுண்டுகலாகப் பிளவுபட்டதற்கே ரஷ்ய மொழித் திணிப்புதானே இரண்டாவது பெரிய காரணம்! தங்கள் வரவுக்கு நன்றி.
நீக்குவன்முறை எதிர்ப்புகள்தான் பரிசீலிக்கப்படுகின்றன. இப்போது மீண்டும் ஹிந்தி திணிப்பு வருகிறது முன்பு ஆட்சியில் இருந்தவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை இப்போது இருப்பவர்கள் பின்பற்ற வேண்டுமா என்ன. 1965 வாக்கில் நான் டி வி எஸ் லூகாஸ் கம்பனிக்கு ஒரு நேர்காணலுக்குச் சென்றி ருந்தேன் கேட்கும் கேள்விகளுக்கு நான் ஆங்கிலத்தில் பதில் கூறி வந்தேன் அவர்களுக்கு எனக்கு தமிழ் தெரியாதோ என்னும் சந்தேகம் வந்து அப்போதைய அரசியல் நிலை குறித்து சொல்லி கூடியவரை தமிழே பேசவேண்டும் என்றனர் ஹிந்தியை வலியத் திணிப்பதன் மூலம் ஒரு ஆதிக்கத்தை நிலை நாட்டவே நினைக்கிறார்கள் கல் எடுக்கும் நிலைக்குத் தள்ளுவார்கள் என்றே தோன்றுகிறது
பதிலளிநீக்குநீங்கள் பெங்களூரில் இருப்பதால் நிலைமையை இன்னும் சிறப்பாகவே ஆராய முடியும். கர்நாடகத்தில் மங்களூர் பகுதியில் இருப்பவர்களுக்கு கன்னடமே தெரியாது. துளு, கொங்கணி மொழிகள்தான் ஆதிக்கம். ஹூப்ளி, தாரவாடு, குல்பர்கா பகுதிகளில் இந்தி, மராட்டி தான் அதிகம். பெங்களூரில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மூன்று சம அளவில் ஆதிக்கம். பத்து சதம் அளவிற்கு இந்தி பேசுபவர்கள் இருக்கிறார்கள். ஆகவேதான் கன்னடம் இன்னும் வளர்ச்சி பெறாத மொழியாக இருக்கிறது. ஆகவே இந்தி அங்கே ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. தமிழில் அந்த நிலைமை இல்லை. இங்கே இருப்பது ஒரே மொழிதான். சுமார் ஒருகோடி பேர், வீட்டில் தெலுங்கு பேசினாலும் படிப்பது தமிழ்தான். ஆகவே இன்னொரு மொழி இங்கே தேவை இல்லை. எனவே இந்தி நமக்கு வேண்டாம். (1) அப்படியானால், ஆங்கில ஆதிக்கத்தை ஏன் ஏற்றுக் கொண்டோம்? பேச்சில் பாதி வார்த்தைகள் ஆங்கிலம் தானே பேசுகிறோம்? வேறு எந்த மொழிக்காரனும் அப்படி இல்லையே? இதை எப்போது எதிர்க்கப்போகிறோம்? (2)வருடத்திற்கு ஐம்பதாயிரம் பேருக்கு அமெரிக்காவில் வேலை கிடைக்கும் என்பதற்காக, ஏழு லட்சம் மாணவர்களை தமிழே தெரியாமல், LKG முதற்கொண்டு ஆங்கிலம் படிக்கவைக்கிறோமே, இதை யார் எதிர்ப்பது? இதை மறைப்பதற்காகவே இந்தி எதிர்ப்பு நடக்கிறது என்பதால் அது போலியானது என்றே நடுநிலையாளர்கள் கருதவேண்டி உள்ளது. மத்திய அரசின் இந்தி திணிப்பும், மாநில அரசின் ஆங்கில திணிப்பும் இரண்டும் ஒரே சமயத்தில் எதிர்க்கப்படவேண்டியதே. (3) அவ்வப்பொழுது மத்திய அரசு இந்தி திணிப்பை செய்துகொண்டுதான் வருகிறது. அதை எதிர்ப்பதற்குரிய தார்மீக பலம் நமது அரசியல்வாதிகளிடம் இல்லை. ஆட்சியில் இருக்கும்போது மத்திய அரசோடு இணைந்து அரசு இயந்திரத்தைப் பயன்படுத்தி கோடிக்கணக்கில் ஊழல்செய்வதும், எதிர்க்கட்சியானபிறகு மத்திய அரசை எதிர்ப்பதும், பல மாநிலங்களில் மாநிலக்கட்சிகள் செய்திடும் வெறுப்பான காரியமே. தமிழநாட்டில் மட்டும் அல்ல. ஆனால் இந்தி எதிர்ப்பை இந்த சந்தர்ப்பவாத அரசியலுக்குப் பயன்படுத்துவது சரியா? அதை இன்னும் வலிமையோடு எதிர்க்க வேண்டாமா? (4) எனது கட்டுரையின் நோக்கம், மாணவர்களை அந்தநாளில் வன்முறைக்கு பழக்கினார்கள் என்பதே. அது தடுக்கப்படவேண்டும் என்பதே.தங்கள் வரவுக்கு நன்றி.
நீக்குகேரளாவில் என்னதான் இந்தி மொழி பாடத் திட்டத்தில் இருந்தாலும், பலருக்கும் இந்தி ஓரளவேனும் தெரிந்திருந்தாலும், அதுவும் வளைகுடா நாட்டில் கேரளத்தவர்கள் அதிகம் புகுவதாலும், கேரளத்திற்கும் வளைகுடாவிற்கும் அதிகத் தொடர்பு உண்டு என்பதாலும்,(எர்ணாகுளத்தில் இருக்கும் லுல்லு மால் மற்றும் கேரளத்து வங்கிகளில் புரளும் பணம்... இதற்குச் சிறந்த உதாரணம்) அவர்களுக்கு இந்தி மொழி தெரிந்திருக்கிறது என்றாலும் மலையாளத்தை அவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை. அமெரிக்காவில் வசித்தாலும் வீட்டில் மலையாளம் தான் பேசுகிறார்கள். எனக்குத் தெரிந்து குழந்தைகள் கூட...தற்போது கேரள அரசு தங்கள் தாய் மொழியைக் கட்டாயப் பாடமாக கல்லூரி உட்பட அறிவித்துள்ளது.
நீக்குதாய்மொழியை பலப்படுத்தும் எந்த முயற்சியும் வரவேற்கப்படவேண்டியதே.
நீக்குஅரிசியில் கல் என்பதுதான் எனக்கும் தெரியும் இளமையின் கல் என்பதை தெரிந்து கொண்டேன்
பதிலளிநீக்குசிறுவர்களை ஊனப்படுத்திப் பிச்சைஎடுக்கும் தொழிலில் ஈடுபடுத்துவது பற்றி பாலா ஒரு படத்தில் காட்டினாரே! பாவிகள், எல்லா தீய செயல்களுக்கும் இளைஞர்களை பழக்கப்படுத்திவிடுகிறார்களே, என்றுதான் வேதனைப்படுகிறேன். தங்கள் வரவுக்கு நன்றி.
நீக்கு//ஒருநாள் காலை பள்ளியின் வாசலை இழுத்துச் சங்கிலி போட்டிருந்தது.இந்தி எதிர்ப்பு போராட்டம். மாணவர்கள் யாரையும் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை ஒரு பெரும்கும்பல்.//
பதிலளிநீக்குஇப்போது மட்டுமல்ல, முற்காலத்திலும் ஒரு பெரும் கும்பல் தங்களது சுய அரசியல் லாபங்களுக்காக மாணவர்களது, மக்களது கற்றலுக்கு தடையாகவே இருந்து வந்துள்ளது என்பதை உங்க பதிவின் மூலம் அறிந்து கொண்டேன்.
தங்கள் வரவுக்கு நன்றி. ஏதும் அறியாத, உணர்ச்சி வசப்பட்டு செயல்புரியும் பருவத்தில் இருந்த, இளம் மாணவர்களை தங்கள் காரியங்களுக்குப் பயன்படுத்திக்கொண்டார்கள் அந்த நாள் அரசியல்வாதிகள் என்பது வரலாறு. அதனால் எவ்வளவோ ஏழை மாணவர்கள் பாதிக்கப்பட்டனர் என்பதை இன்றைக்கு அறுபது வயது ஆனோர் நன்கறிவர். அதனாலேயே, அன்றைய இந்தி எதிர்ப்பு போராட்டம் மாதிரி இன்னொரு போராட்டத்தில் மாணவர்களை ஈடுபடுத்த அரசியல்வாதிகளால் முடியவில்லை. ஜல்லிக்கட்டு போராட்டத்திலும் மாணவர்கள் சுயசிந்தையோடு தன்னிச்சையாகப் போராடினார்களே அல்லாமல் அரசியல் தலைமையை ஏற்கமறுத்து விட்டது தெரிந்ததே! இது வரவேற்கத்தக்க நிலைமையே. தங்கள் வரவுக்கும் கருத்துரைக்கும் நன்றி.
நீக்குவணக்கம்.
பதிலளிநீக்குதங்கள் இடுகையை முதலில் படித்தவர்களுள் நானும் ஒருவனாய் இருப்பேன்.
அலைபேசியில் படித்தமையால் கருத்திட முடியவில்லை.
இந்தி எதிர்ப்புப் போராட்டங்களுக்குத் தசாப்தங்களின் பின் பிறந்தவன். அதனால் இது குறித்து கேட்டறிந்ததுதான். மாற்றுப்பார்வை ஒன்றை உங்கள் அனுபவத்தின் வாயிலாகவே அறிகிறேன்.
இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் ஒரு மொழியை வலிந்து கற்க வேண்டும் என்று வற்புறுத்துவது என்பது அதன் இறையாண்மைக்குத் தகுந்ததன்று.
இந்தி என்ன எந்த மொழியை வேண்டுமானாலும் கற்க நம் மாணவர்களுக்கு வாய்ப்பினை அரசு வழங்கட்டும். அது, அவர்கள் விரும்பினால். விரும்பும் போது.
அவர்கள் தாய்மொழியில் அடிப்படை அறிவைப் பெற்றபின் அவர்களுக்கு விருப்பப்பாடமாக எந்த மொழியைப் பயில்கிறார்களோ அதனைப் பயில அவர்களுக்கு வாய்ப்பினை அரசு ஏற்படுத்தட்டும்.
இன்று பத்தாம் வகுப்பிற்குமேல் விருப்பப்பாடமாக சமஸ்கிருதம் பிரஞ்சு இருப்பதைப் போல.
ஆனால், அதை முன்னிறுத்துவது.... மெல்ல மெல்ல அதைப்படித்தால்தான் மத்தியப் பணிவாய்ப்புகள் கிட்டும் என்பது போன்ற சூழலை ஏற்படுத்துவது என்றெல்லாம் இதனை முன்னெடுக்கும்போது அது நமக்குப் பாதிப்பாய் முடியும். அடுத்த கட்ட நகர்வு அப்படித்தான் இருக்கும் என்பதை அறிந்தோர் அறிவர்.
மும்மொழிக்கொள்கை பற்றிக் கல்வித்திட்டத்தில் படித்திருக்கிறேன்.
நீங்கள் படிக்கும் போது, தமிழ் வழிக் கல்வியே இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஆங்கிலம் ஒரு பாடம் அவ்வளவே.
அன்று தமிழ் வழிக்கல்வியில் பயின்று ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாக எடுத்துப் பயின்றவர்கள் எத்தனையோ பேர் இருமொழிப்புலம் மிக்கவர்களாக இருக்கிறார்கள்.
அது அவர்கள் ஆர்வமும் தேவையும் பொறுத்தவிடயம்.
அதே நேரம், எனது பணிச்சூழலோடு தொடர்புடையதால் இன்றைய மாணவர்களின் கல்வி நிலையை மிகமிக வருத்தத்தோடு காண்கிறேன்.
ஆங்கிலம் படிப்பது உயர்வு என்ற எண்ணம் பெற்றோரிடம் வலுப்பட்டுவிட்டது.
தமிழ் படித்தல் தாழ்வு என்ற எண்ணம் வந்தாயிற்று.
ஆங்கிலத்தை மொழியாகப் படிக்காமல் வழியாகப் படிக்கும் சூழல் பெருகிவிட்டது.
இப்படிப் படிக்கும் பெரும்பாலான மாணவர்களுக்கு ஆங்கிலமும் தெரியவில்லை. தமிழும் தெரியவில்லை.
என் அனுபவத்தில் கண்ட கசப்பான உண்மை இது,
என் பணி சார்ந்ததென்பதால் இதனைக் கூறுகிறேன்.
இதுதான் நம்முன் உள்ள அபாயம். நாம் உணர வேண்டிய எச்சரிக்கை.
மும்மொழிக் கொள்கை என்று வந்தால், இப்போது ஆங்கிலத்தை அடுத்து இரண்டாம் இடத்தில் இருக்கும் தமிழ் மூன்றாம் நிலைக்குத் தள்ளப்பட்டு விடும்.
உலகெங்கும் போக ஆங்கிலம், இந்தியாவிற்குள் சுற்ற இந்தி தெரிந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெறும்.
ஒவ்வோராண்டும் பள்ளிக் கல்வி முடித்துச் செல்கின்ற பல இலட்சம் பேர்களுள், தமிழகத்தை விட்டு வேறு மாநிலங்களில் சென்று பணியாற்ற வேண்டிய அவசியம். சில ஆயிரம் பேர்களுக்கு இருக்கலாம்.
வெளிநாடு போகும் தேவை, அதனினும் குறைந்தவர்க்கு வரலாம்.
இந்தச் சில ஆயிரம் பேர்களின் பயனுக்காக ஒவ்வோராண்டும் பள்ளிக்கல்வி பயின்று வெளியேறும் பல லட்சம் மாணவர்கள் இம்மொழியைக் கற்றுத் தேர்ச்சி பெற்றாக வேண்டும் என வற்புறுத்துவது எந்த விதத்தில் நியாயம்? ஏன் இந்தச் சுமையை அவர்களும் சேர்ந்து சுமக்க வேண்டும்?
அம்மொழியைக் கற்பதால் அவனுக்கு வேறென்ன பயன் ஏற்படப்போகிறது.?
தேவை இருக்கும் சூழலில் யாராலும் ஒரு மொழியைக் கற்றுவிட முடியும் என்பதே எதார்த்தம்.
நான் டார்ஜலிங் சுற்றுப்பயணம் சென்றிருந்தபோது, அங்கிருந்த உணவகம் ஒன்றின் உரிமையாளரிம் நாங்கள் தங்கியிருந்த விடுதிக்கு வழியை ஆங்கிலத்தில் கேட்டபோது அவன் சொன்னான்.
ஹிந்தி நை மாலும்? கியா ஆப் இந்தியன் ஹே?
இந்தியைத் தமிழர்கள் படித்தால்தான் அவர்கள் இந்தி'யர்கள் என அழைக்கப்படும் சூழல் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது.
இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளுள் ஒன்றாகிய தமிழை விருப்பப்பாடமாகப் படிக்க கேந்திரவித்யாலயாவில் பயிலும் தமிழ் மாணவர்களுக்காவது வாய்ப்பு வழங்கப்படுமா என்று கேட்க முடியுமா?
அடுத்த கணம் நம்மை தேசத்துரோகி எனச் சொல்ல ஒரு கூட்டம் காத்திருக்கும்.
எனக்கென்ன வருத்தமென்றால், ஒரு காலத்தில் பண்டிதர்கள் சொல்லிய தமிழ் நீச பாஷை என்ற கற்பிதம் மெல்ல பாமரர்கள் மத்தியிலும் ஏற்பட்டுவிட்டதே என்பதுதான்.
அதிகம் பேசிவிட்டேனோ?!
தவறாகக் கருத மாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன்,,,,
நன்றி.
அன்பு நண்பரே, நீங்கள் கூறிய கருத்துக்களில் ஒன்று கூட தவறில்லையே! ஒரு ஆசிரியராக மட்டுமின்றி, ஒரு பெற்றோராகவும் நீங்கள் தெரிவிக்கும் கருத்து, இன்று தமிழ்நாட்டில் ஆங்கில மீடியத்தில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர் அனைவரின் கருத்தாகும். அதாவது (1) ஏன் என் குழந்தைகளுக்கு, தனியார் பள்ளிகளில், தமிழில் படிக்கும் வாய்ப்பு இல்லை? ஏன் ஆங்கில மீடியம் மட்டுமே உள்ளது? (2) என் மகன் நன்றாகப் படிக்கும் திறன் பெற்றவன். ஆங்கிலம் தவிர, இன்னொரு மொழியை -அது இந்தியோ, ஃப்ரெஞ்ச்சோ கற்றுக்கொள்ள ஏன் பள்ளிகளில் அரசு அனுமதிப்பதில்லை? (3) தமிழ் மொழியை யார் காப்பற்றப் போகிறோம்? இந்தியை எதிர்த்தா, அல்லது ஆங்கிலத்தை எதிர்த்தா? (4) ஆங்கிலம் படிப்பதால், அமெரிக்கா போய் பிழைக்கலாம், ஆனால் ஐரோப்பாவில் பிழைக்கமுடியுமா? அமெரிக்காவிலேயே ஆங்கிலம் மட்டும் போதாது, ஸ்பேனிஷ் படிக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. (5) ஆங்கிலம் படித்தால் ஆந்திராவிலோ, கர்நாடகாவிலோ, என், குறைந்தபட்சம் கேரளாவிலோ போய் பிழைக்க முடியுமா? அந்த மாநில மொழியைக் கற்றாகவேண்டும். ஆனால் இந்தி தெரிந்திருந்தால் தமிழ்நாட்டை தவிர வேறு எல்லா மாநிலங்களுக்கும் சென்று வசிக்கமுடியுமே! அப்படியானால் கன்னடம், தெலுங்கு, மலையாளம், பெங்காலி போன்று இருபது மொழிகளை கற்பதைவிட, அந்தச் சுமையைத் தாங்குவதைவிட, இந்தி என்ற ஒரே ஒரு மொழியைக் கற்பது தானே சுலபமான காரியம்? (6) மொழிப் பிரச்சினையை வாழ்வின் ஆதாரமாகப் பார்க்கவேண்டும். அப்படிப் பார்த்தால் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி இரண்டும் ஒன்றுசேர்ந்து குரல் கொடுக்கலாம். அது நடக்கிறதா இங்கே? மாணவர்கள் தான் எல்லாவற்றுக்கும் குரல் கொடுக்க வேண்டுமா? .....இப்படிப் பலமுனைகள் கொண்ட பிரச்சினை இது. என் பிள்ளைகளுக்கு என்னுடைய தாய்மொழியில் பாடங்களைப் படிக்குமாறு செய்ய என்னுடைய அரசாங்கம் ஏதும் செய்யவில்லையே என்ற வேதனையை யாரிடம் சொல்வது? எனக்கு ஆறு மொழிகள் தெரியும். விரும்பிக் கற்றேன். தமிழ்நாட்டில் பிறந்து, தமிழ்நாட்டில் படிக்கும் என் பேரக்குழந்தைகளுக்கு, அவர்களின் தாய்மொழியான தமிழ் மொழியே தெரியவில்லையே, நண்பரே, இதை யாரிடம் சொல்லி அழுவது? இந்தி திணிப்பை எதிர்க்கவேண்டும் என்பது உண்மையே. கட்டாயமே. ஆனால் என் தமிழுக்காகப் போராடப்போவது யார்? எந்த அரசியல் கட்சி தயார்? எப்போது?
நீக்குதங்கள் வரவுக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி.
இளமையில் கல்- கட்டுரைக்குப் பொருத்தமானத் தலைப்பு. தமிழ் நாட்டின் மொழி அரசியல் படு கேவலமானது. தமிழ்க் குழந்தைகளுக்குத் தமிழ் தெரியாது என்ற நிலை மெல்ல வருகிறது. நாம் எங்கே போகிறோம்?
பதிலளிநீக்குசொல்லிக்கொள்ளவே அவமானமாக இருக்கிறது நண்பரே! தாய்மொழி தெரியாமல் தமிழ்நாட்டில் ஒரு மாணவன் பன்னிரண்டு வகுப்புகள் படிக்க முடிகிறது என்பதை வெளிநாடுகளில் உள்ள தமிழர்களிடம் சொன்னால் நம்மை கேவலமாகப் பார்க்கிறார்கள். தங்கள் வருக்கு மிக்க நன்றி.
நீக்குஅந்த நாட்களெல்லாம் எனக்கத் தெரியும். எல்லா ஸடேஷன்களிலும் இந்தியில் எழுதியுள்ள பேரைத் தார் பூசி அழித்திருக்கும். பெற்றோர்களெல்லாம் மிகவும் டென்ஷனில் இருப்பார்கள். அந்தக்காலத்தைக் கண் முன்னால் நிறுத்தி விட்டது இளமையில் கல். நல்ல தலைப்பு. அன்புடன்
பதிலளிநீக்குஆம், பெற்றோர்கள் அந்த நாட்களில் எவ்வளவு கவலைப்பட்டிருப்பார்கள் என்பதை பெற்றோர்களின் கோணத்தில் இருந்து நான் எழுதாமல் போனேன். நான் அப்போது மாணவன் தானே! எனக்குத் தெரிந்து சில மாணவர்களை போலீஸ் பிடிக்கலாம் என்று பயந்து, சில அரசியல்வாதிகள் அவர்களுக்குப் பாதுகாப்பு தரும் விதமாக வேறொரு இடத்தில் ஒளித்து வைத்திருந்து, அந்த இடம் தெரியாமல் பெற்றோர்கள் பல இடங்களில் அலைந்து....அப்பப்பா, ஐந்தாறு நாட்களுக்குப் பின் பத்திரமாக அவர்கள் வந்தபோது நாங்கள் அடைந்த மகிழ்ச்சி இருக்கிறதே, சொல்லி மாளாது. அதேபோல், அவர்கள் காணாமல் போனதில் இருந்து திரும்பிவரும் வரையான நாட்களில் ஒவ்வொருநாளும், அவர்களை போலீஸ் அடித்துக் கொன்றுவிட்டிருக்கவேண்டும் என்று எண்ணிஎண்ணி பயந்ததும் இன்றும் நினைவில் இருக்கிறது. தங்கள் வரவுக்கு நன்றி!
நீக்கு//தாய்மொழி தெரியாமல் தமிழ்நாட்டில் ஒரு மாணவன் பன்னிரண்டு வகுப்புகள் படிக்க முடிகிறது என்பதை வெளிநாடுகளில் உள்ள தமிழர்களிடம் சொன்னால் நம்மை கேவலமாகப் பார்க்கிறார்கள்.//
பதிலளிநீக்குஐயா, தாய்மொழி தமிழ் தெரியாமல் தமிழகத்திலேயே ஒரு மாணவன் பன்னிரண்டு வகுப்புகள் படிக்க முடிகின்ற உலக அதிசயத்தை, தாய்மொழி தமிழ் பேச வெட்கபடுதல், ஆங்கிலத்தை தாய்மொழியாக ஏற்க ஏங்கும் தமிழக கேவலத்தை வேற்று இனத்தவர்களிடம் சொல்லவே முடியாது.
65 ஆம் வருட நினைவுகள்
பதிலளிநீக்குஎன்னுள்ளும் படர வைத்தது
தங்கள் பதிவு
தி.மு. க ஆரம்பிக்க
அது மாணவர் போராட்டமாய் விரிய
பின் எங்கள் மதுரையில்
எந்த காலேஜ் போராடுவதில் சிறந்தது
என நிரூபிக்க முயல...
அப்போதுதான் காளிமுத்து அவர்கள்
(பின்னாளில் மந்திரி, சபா நாயகர் ஆனவர் )
பிரபலமானது
அவர் படித்த தியாகராயர் கல்லூரியும்
தமிழுணர்வுக்கான கல்லூரி என ஆனது...
அது ஒரு கனாக்காலம்....
அருமையாகப் பதிவு செய்துள்ளீர்கள்
தொடர வாழ்த்துக்கள்
உண்மையான தமிழுணர்வைத் தட்டி எழுப்பியதும் அன்றைய இந்தி எதிர்ப்பு போராட்டமே. ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவந்ததும் அதுவே. மீண்டும் அதுபோன்ற ஒரு போராட்டத்தை இனி கொண்டுவருதல் சாத்தியமா என்ற கேள்வி எழுகிறது.
நீக்குமொழிப்போராளி என்ற போர்வையில் காளிமுத்து அவர்கள் தன் மகளுக்கு மெடிகல் சீட்டினை கருணாநிதி முதல்வராக இருந்தபோது பெற்றுக்கொண்டார்
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குகாளிமுத்து அவர்கள பதவியில் இருந்தபோது அவரது உறவினர் ஒருவர், இவருடைய செல்வாக்கைப் பயன்படுத்தி, எமது வங்கி உள்பட, ஐந்துக்கும் மேற்பட்ட வங்கிகளில் போலி ஆர் சி புத்தகங்களைப் பயன்படுத்தி சில கோடி ரூபாய்கள் மோசடி செய்தார் என்று ஞாபகம். இப்போது அமைச்சர்கள் ஆயிரம் கோடி, பத்தாயிரம் கோடி என்றல்லவா ஊழல் செய்வதாக தகவல்கள் வருகிறது? அந்தக்காலத்து மனிதர்கள், பாவம், ஊழலிலும் அளவோடு இருந்தார்கள் என்று தெரிகிறது.
நீக்கு‘இளமையில் கல்’ என்பது சரியே.
பதிலளிநீக்குஆனால் கற்பது எதனை?
அது தானே
சிந்திக்க வேண்டிய கருப்பொருள்
ஆம், நண்பரே! இளமையில் கற்க அவனவன் ஆவலாய் இருக்கிறான். அவன் விரும்பியதைக் கற்கவிடாமல், நச்சுக்கருத்துக்களையே அவனுக்குப் போதிக்கிறதே இந்தச் சமுதாயத்தின் ஒரு பகுதி, அதைத்தான் நம் கவனித்துத் திருத்தவேண்டும்.
நீக்குஅன்றே வாசித்து இந்த மொபைல் வழியாகக் கருத்திட்டு அது போகாமல்.. முடியாமல்..போனது.
பதிலளிநீக்குதலைப்பு அருமை!! முடிவில் சொல்லியிருப்பதும் அருமை! ஒவ்வொரு நிகழ்வையும் நன்றாக நினைவு வைத்துக் கொண்டு அழகாகப் பதிந்தும் விட்டீர்கள் சார்....
கீதா
உங்கள் முன்னால் இரண்டு வழிகள் உள்ளன்: ஒன்று, மொபைலை மாற்றுவது. இரண்டு, புதிதாக ஒரு கணினி (அல்லது ஒரு டேபிலேட்) வாங்குவது. விரைவில் நல்லது நடக்க வாழ்த்துக்கள். தங்கள் வருகைக்கு நன்றி.
நீக்குஇந்தி எதிர்ப்புப் போர் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அது பற்றிய விபரங்களை அறிந்து கொள்ள உதவிய பதவி. அரசியல்வாதி தம் மகனை மட்டும் பத்திரமாக வீட்டில் இருக்கச் சொல்லிவிட்டு ஊரார் பிள்ளைகளைப் போராட்டத்துக்குப் பயன்படுத்திக் கொண்ட நிகழ்வு, அரசியல்வாதிகள் எல்லாக்காலத்திலும் 'தன்னலமற்றவர்களாகவே' இருக்கிறார்கள் என்ற உண்மையை உணர்த்துகின்றது. எந்தப் போராட்டத்துக்குமே மாணவர்களை அரசியல்வாதிகள் பணம் கொடுத்துப் பயன்படுட்த்திக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இளமையில் கல் என்பதற்கு இப்படியும் ஒரு கருத்து உண்டா? ஊமைக்கனவுகள் சகோதரர் சொல்லியிருப்பது போல தமிழின் நிலைமை வர வர மிகவும் மோசமாகிக் கொண்டே வருகின்றது. அடுத்த தலைமுறை தமிழே தெரியாமல் வளரக்கூடிய சூழல் உருவாகுகின்றது என்பது மிகவும்வ் வேதனையான விஷயமே.
பதிலளிநீக்குபதிவு என்பதைப் பதவி என்று தவறாகத் தட்டச்சு செய்துவிட்டேன்.
பதிலளிநீக்குஇப்போது மாணவர்களை விட்டுவிட்டார்கள் அரசியல்வாதிகள். பணம்வாங்கிக்கொண்டு கூட்டம் சேர்த்துக்கொடுப்பதற்கு தனியான அமைப்புகளே இயங்கிக்கொண்டிருக்கின்றன. கட்சி பேதமின்றி எல்லாக் கட்சிகளுக்கும் இவர்களே வருவார்கள். தமிழ்நாட்டின் வேலையின்மையை ஓரளவுக்கு இந்த அமைப்புகள் போக்குவதாகவே கொள்ளவேண்டும். தங்கள் வரவுக்கு நன்றி.
பதிலளிநீக்கு