திங்கள், ஏப்ரல் 07, 2014

ஸ்ரீஇராமன் பிறந்த நாள்: கி.மு.5114 ஜனவரி 10 ஆம் தேதி( ‘அபுசி-தொபசி’-40)

(“அபுசி-தொபசி” என்ற இப்பகுதி வாரம் இருமுறையாக, ஒவ்வொரு திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும் இந்திய நேரம் காலை ஆறுமணிக்கு மேல் ஏழரை மணிக்குள்ளாகவோ அல்லது அதற்கும் முன்பாகவோ வெளியாகும்.)

அரசியல்  
கடைசியாக NDTV நடத்திய கருத்துக்கணிப்பில் நரேந்திர மோடி அநேகமாக 259 தொகுதிகளுக்குமேல் வெற்றிபெறக்கூடும் என்றும், சுயேச்சைகள் 17 இடங்களில் ஜெயிக்கக்கூடும் என்றும் தெளிவாகியுள்ளது. இரண்டையும் கூட்டினால் மோடிக்கு வேண்டிய அறுதிப் பெரும்பான்மையான 273 இடங்கள் எளிதாகக் கிடைத்துவிடும். எனவே, பிரதமர் பதவிமேல் ஆசை கொண்டிருந்த ஜெ.யின் கனவு நிச்சயமாகத் தகர்ந்துபோவது மட்டுமல்ல, அஇஅதிமுக  ஆதரவில்தான் மோடி அரசு பதவியேற்கமுடியும் என்ற அடுத்த எதிர்பார்ப்பும் நிறைவேறப்போவதில்லை. 

ஜெ.யின் மூன்றாவது அனுமானமான, காங்கிரசுக்கு அடுத்தபடியாக ‘தனிப்பெரும்’ குழுவாக அஇஅதிமுக இருக்கும் என்பதும் தகர்ந்துபோகலாம். ஏனெனில், ஜெ.யை விட, மம்தா அம்மையாருக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்று NDTV கணிப்பு கூறுகிறது.


மேற்படி விவாதத்தில் பிரணாய் ராய் கூறியபடி,  தேர்தல் நெருங்க நெருங்க, எந்தக் கட்சியையும் சாராத ‘ஊசலாடும்’ வாக்காளர்களில் சுமார் 1% பேர், அதிகம் வெற்றி பெறக்கூடும் என்று கருதப்படும் கட்சிக்கு ஆதரவாகத் திரும்பும் சாத்தியக்கூறு இருக்கிறதாம். ஆகவே, மோடி சுமார் 300 இடங்களில் வெல்வதும் கூட சாத்தியமாகலாம் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால், எவ்வளவு இடங்களில் அவர்கள் ஜெயிக்கிறார்கள் என்பதெல்லாம் நமக்கு முக்கியமில்லை. உலக அரங்கில் முதுகெலும்பில்லாத அரசாக ஏளனமாகப் பார்க்கப்படும் சோனியா-மன்மோகன் அரசுக்கு மாற்றாக இனி வரப்போகும் எந்த அரசும், தனிப் பெரும்பான்மையுடன் வரமுடிந்தால், அதுவே அமெரிக்கா, சீனா  உள்ளிட்ட உலக நாடுகளுக்கு மிகச் சரியான சமிக்ஞையை அனுப்புவதாக அமையும். ரூபாயின் மதிப்பு பலப்படுவதோடு, உறுதியான பொருளாதாரச் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படுவதற்கும் வழிவகுக்கும். நாட்டில் நிலவும் POLICY PARALYSIS  என்னும் ‘கொள்கை முடக்க நோய்’ விரைவில் கட்டுப்படுத்தப்படுவதற்கும் பாதை அமையும்.

புத்தகம்

தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை சார்பில் ‘HISTORICAL RAMA’ என்ற தலைப்பில் சென்னை திநகர் தக்கர்பாபா பள்ளி அரங்கில் டாக்டர் டி.கே.ஹரி நிகழ்த்திய உரை-காட்சியை 05-04-2014 சனிக்கிழமை மாலை கேட்டேன்/கண்டேன். பத்ரி சேஷாத்ரியும் நண்பர்களும் மாதம்தோறும் முதல் சனிக்கிழமையன்று இப்படியொரு நிகழ்வை ஏற்பாடு செய்கிறார்களாம். 

இராமன் என்பது வெறும் கதைப் பாத்திரமல்ல; உண்மையில் வாழ்ந்த சரித்திர புருஷனே என்பதை அறிவியல்பூர்வமான ஆதாரங்களுடன் நிறுவினார் ஹரி. அதைப் புரிந்துகொள்ள நமக்கும் சற்று முயற்சி தேவை என்பது தெரிந்தது.

இராமன் பிறந்த நாள்: கி.மு.5114 ஜனவரி மாதம் 10 ஆம் தேதி பகல் 12.30 மணிக்கு என்று அவரது ஆராய்ச்சி கூறுகிறது. இதை நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் வேளையில், அதாவது, 2014 ஏப்ரல் 08ஆம் தேதியன்று, இராமனுக்கு 7128 ஆவது பிறந்தநாள்! (5114 + 2014 = 7128).

இந்த ஆராய்ச்சிக்கு வானவியல் மென்பொருள் மிகவும் பயன்பட்டது என்றார் ஹரி. இராமாயணத்தில் கூறப்பட்ட வானவியல் சான்றுகளை, மேற்படி மென்பொருள்மூலம் ஊர்ஜிதப்படுத்திக்கொண்டதால் கிடைத்த தகவல்கள் இவை:

 • நாசிக் என்ற இடத்தில் இலக்குமணன், சூர்ப்பனகையின் மூக்கை வெட்டியது,  கி.மு. 5077 அக்டோபர் 7 ஆம் தேதி.
 • வாலி வதம் நடைபெற்றது, கி.மு.5076 ஏப்ரல் 03ஆம் தேதி.
 • ஹனுமான் இலங்கைக்குச் சென்ற தேதி: கி.மு. 5076 செப்டம்பர் 12.
 • சுக்ரீவனின் படை ஹம்பியிலிருந்து (‘கிஷ்கிந்தா’) புறப்பட்டது: கி.மு. 5076 செப்டம்பர் 19.
 • அது ராவணன் கோட்டையை அடைந்தது: கி.மு. 5076 அக்டோபர் 12.

நிகழ்ச்சியின் முக்கியமான அம்சம், சுக்ரீவன் உத்தரவின் பேரில், அவனது இராணுவம் இலங்கைக்குச் செல்வதற்காகக்  கட்டப்பட்ட பாலம் (‘ராமசேது’) எத்தகைய தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டது என்பதைப் பற்றியதாகும். 
 
டாக்டர் டி.கே.ஹரி - மனைவி ஹேமா ஹரி
இன்னும் பல செய்திகளைப் பற்றிச் சுருக்கமாகத்தான் பேசமுடிந்தது ஹரியால். நேரமின்மைதான் காரணம். எனவே தனது புத்தகங்களைப் படித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். HISTORICAL RAAMA  என்ற பெயரிலேயே புத்தகம் வந்துள்ளது.  பார்க்கவும்:

அதுபற்றியும், இன்னும் அதிகத் தகவல்களுக்கும் நீங்கள் பார்க்கவேண்டிய அவரது இணையதளம்:           www.bharathgyan.com
(தன் மனைவி வந்திருந்தால் இன்னும் சில தகவல்களைச் சிறப்பாகத் தந்திருப்பார் என்று அடிக்கடி கூறிக்கொண்டே இருந்தார் ஹரி.) 

ஒருநல்ல நிகழ்ச்சிக்குக் காரணமாயிருந்த பத்ரி சேஷாத்ரிக்கு நன்றி. என்னோடு நிகழ்ச்சிக்கு வந்திருந்து ரசித்த நண்பர் ஜனார்த்தனன் – விமலா ஸ்ரீராம் தம்பதிக்கும் நன்றி.

(திருமதி விமலா ஸ்ரீராம், இந்திரா பார்த்தசாரதியின் ‘சுதந்திர தாகம்’ நாவலை  INTO THE HEAVEN OF FREEDOM  என்ற பெயரில்  ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். கிழக்கு பதிப்பகத்தின்  NHM  வெளியீடு. பாலகுமாரனின் ‘இரும்புக்குதிரைகள்’ நாவலையும் அவர் மொழிபெயர்த்து முடித்திருக்கிறார்.)

சினிமா
முன்பெல்லாம் எஸ்.எஸ்.வாசனும், ஏ.வி.எம்.மும் தான் படம் எடுக்க வருவார்கள். அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, இன்று படம் எடுக்கும் கருவிகளும் அவற்றைக் கையாளும் திறமும் எளியவர்களுக்கும் கைவந்திருக்கிறது. எனவே, குறும்படம் என்ற பெயரில் குறைந்த செலவில் படம் எடுத்து, தம்மை வெளிப்படுத்திக்கொள்ள முடிகிறது.

அண்மையில் இம்மாதிரியான இரண்டு குறும்படங்களைப் பார்த்தேன். ஒன்று, ‘மகாமுடி’ -  MAHAMUDI; இன்னொன்று: PAROLE.  – பரோல்.

‘மகாமுடி’ என்பது கேரளத்தின் மாகாபலிச் சக்கரவர்த்தியின் கதை. ‘பரோல்’ என்பது சமூக உளவியல் சார்ந்த சிந்தனையைக் கிளறும் சிறுகதை. இரண்டையுமே எழுதி, உருவாக்கி, நடித்தும், இயக்கியும்  இருப்பவர் யார் தெரியுமா? நம் வலைப்பதிவர்களுக்கு நன்கு அறிமுகமான திருவாளர். துளசிதரன் தில்லையகத்து  அவர்கள்! (http://thillaiakathuchronicles.blogspot.com)

பள்ளியில் மாணவர்களுக்குப் பாடமாக நடத்துவதற்குத்தான், இப்படங்களைத் தம் சொந்த செலவில் தயாரித்து, வெளியிட்டிருக்கிறார், துளசிதரன். எத்தகைய இலட்சியவாதி பாருங்கள்!
'பரோல்' - துளசிதரன், அவர் மனைவி உஷா

‘பழிக்குப் பழி, ரத்தத்திற்கு ரத்தம் என்பது எல்லோர் கண்களையுமே குருடாக்கிவிடும்’ என்று மகாத்மா காந்தி கூறிய கருத்தே,  ‘பரோல்’ குறும்படத்தின் அடிநாதம்.   உடற்குறை உள்ளவர்களுக்கு (  PHYSICALLY CHALLENGED) நாம் சிகிச்சை யளிக்கத் தயாராக இருக்கிறோம்;  உணர்வுக்குறை உள்ளவர்களுக்கு ( EMOTIONALLY CHALLENGED) அப்படிச் செய்கிறோமா? என்று கேட்கிறார் துளசிதரன்.
'பரோல்- கதாநாயகன்-கொலையாளி

ஒரு சிறுமியைப் பலவந்தப்படுத்திக் கொன்றுவிடுகிறான் ஒரு மாணவன். அது தெரிந்து ஆக்ரோஷத்துடன் அவனைக் கொன்றுபோடுகிறார் சிறுமியின் தந்தை. அதனால் ஜெயிலுக்குப் போகிறார். நிம்மதியில்லை. ஜெயிலில் அவருடன் இருப்பவன் சொல்கிறான்: ‘நாம் கொலைகாரர்கள். திரும்பவும் வெளியே போனால் ஒருவரும் சேர்க்கமாட்டார்கள். ஒதுக்கிவிடுவார்கள். நமக்குள்ள  ஒரே வழி, தற்கொலை செய்துகொண்டு உலகைவிட்டே போவதுதான்.’
'பரோல்'- கொலையாளியின் தற்கொலையைத் தடுக்கும் துளசிதரன்

இவர் பரோலில் வருகிறார். எல்லோரும் இவரைக் கண்டு ஒதுங்குகிறார்கள். தனிமைப்படுத்தப்படுகிறார். சமூகம் இவரை வெறுக்கிறது. யாருக்கும் தெரியாமல்,  ஒரு மரத்தில் தூக்கு மாட்டிக்கொள்ள முயல்கிறார். அப்போது அவரை ஓடிப்போய்த் தடுக்கிறார், கொல்லப்பட்ட மாணவனின் தந்தை.  ‘உன் உயிரை நீக்கிக்கொள்வதால் எந்தப் பயனும் இல்லை. திருந்தி வாழவேண்டும்’ என்கிறார்.  இக்கதாபாத்திரத்தில் வருபவர்தான், துளசிதரன். அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். (அவர் மனைவியும், மகளும் கூட!) அது மட்டுமன்றி, படத்தில் நடிக்கும் அனைவரிடமிருந்தும் நல்ல நடிப்பை வெளிக்கொணரும் முயற்சியிலும் வெற்றி பெற்றிருக்கிறார். வாழ்த்துக்கள், தில்லையகத்து துளசிதரன் அவர்களே!  

இந்தப் படத்தை யூடியூபில் பார்க்கலாம்: 
https://www.youtube.com/watch?v=U350Teh_-_o

தொலைக்காட்சி :
நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று (06-04-2014 ஞாயிறு) விஜய் டிவியில் ‘நீயா நானா’ பார்த்தேன். அதுவும் தற்செயலாகத்தான். இல்லையெனில், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே T-20 கிரிக்கெட் இறுதிப் பந்தயம் டாக்காவில் நடந்துகொண்டிருக்கும் வேளையில் ‘நீயா நானா’வை யார் பார்க்கப் போகிறார்கள்!

கோபிநாத் -திருமணத்தில்
நிகழ்ச்சியின் தலைப்பு: “அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள் சந்திக்கும் இன்ப துன்பங்கள், சவால்கள், அவற்றை அவர்கள் எதிர்கொள்ளும் வழிமுறைகள்“ என்பதாகும். எழுத்தாளர்கள் பி.ஏ.கிருஷ்ணன், சோம.வள்ளியப்பன், ‘பாரதி மணி’ ஆகியோர் பார்வையாளர்களாக வந்திருந்தனர்.

நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்ட கேள்விகளில் சில:

கேள்வி (1): தனியாக இருப்பதை விரும்புகிறீர்களா, உங்கள் பிள்ளை/பெண்களுடன் வாழ்வதை விரும்புகிறீர்களா?

விடை: பிள்ளை/பெண்களுடன் சேர்ந்து வாழ்வதையே விரும்புகிறோம். ஆனால், வேலை நிமித்தம் அவர்கள் வெளியே போய்விடுகிறார்களே! எனவே தனியாக வாழ்வது தவிர்க்க முடியாமல் போகிறது.

கேள்வி (2): நீங்கள் உங்கள் குழந்தைகளை எந்தவிதமான அன்பும் கரிசனமும் காட்டி வளர்த்தீர்களோ, அதே மாதிரி அன்பையும் கரிசனத்தையும் உங்கள் பிள்ளைகள்/பெண்கள் உங்களிடம் இந்த வயதில் காட்டுகிறார்களா?

விடை: நிச்சயமாக இல்லை.

(ஆனால் நிகழ்ச்சியில் பேசிய ஒரு பெண்மணி மிகத்தெளிவாகச் சொன்னார்: ‘நாங்கள் அவர்களுக்குக் காட்டிய அன்பையும் கரிசனத்தையும் அவர்கள, தங்கள் குழந்தைகளிடம் நிச்சயம் காட்டுகிறார்கள். சந்தேகமேயில்லை. ஆனால், எங்களிடம்தான் காட்டுவதில்லை.’)

கேள்வி (3): பேரக் குழந்தைகளை வளர்க்கும் பணிக்காக உங்களை, உங்கள் பிள்ளைகள் எதிர்பார்க்கிறார்கள் என்றால், அதை இன்பமாகப் பார்க்கிறீர்களா, துன்பமாகப் பார்க்கிறீர்களா?

விடை: குறுகிய காலம் என்றால் அது இன்பமே. பேரன்களும், கொள்ளுப் பேரன்களும் சூழ்ந்திருக்கும் வாழ்க்கை மிகவும் இன்பமானதே. ஆனால், குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் பணியே நமக்கு முதன்மையான பணியாய் இருந்துவிட்டால், வயதான காலத்தில் அது ஒரு சுமையாகத்தான் அமைந்துவிடுகிறது. (உதாரணமாக: குழந்தையைத் தூக்கிக்கொள்ளவும், ஓடும் குழந்தையைத் துரத்திப் பிடிக்கவும் உடலில் வலிமை இல்லாமல் போதல்.)

கேள்வி (4): அறுபது வயதுக்கு முன்பு, அறுபது வயதுக்குப் பின்பு – என்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

விடை: அறுபது வயதில் பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிடுவோம் ஆதலால், ஐந்துமணிக்கே எழுந்து அடுப்பு பற்றவைக்கவேண்டியதில்லை. செய்தித்தாளை முழுமையாகப் படிக்கலாம். காலைவேளையிலும் டிவி பார்க்கலாம். நினைத்த இடத்திற்குச் சென்று வரலாம். டென்ஷன் குறைவு. வயதானவர்கள் என்றால் மக்கள் பொதுவாக மரியாதை கொடுக்கிறார்கள்.

(இந்த இடத்தில், 77 வயதான பாரதிமணி ஒரு ஜோக் அடித்தார். எப்போதும் கைத்தடி வைத்திருக்கும் அவரைக் கண்டால் இளம்பெண்கள் ஓடிவந்து கைபிடித்துச் சாலையைக் கடக்க  உதவுகிறார்களாம். ‘அவர்களின் கையை விடுவதற்கே மனம் வருவதில்லை’ என்று சிரித்தார் அவர்.)

கேள்வி (5): வயதானவர்களுக்கு வரும் நோய்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?

விடை: கூடியவரையில், செலவு அதிகம் வைக்காத அக்குப்பஞ்சர், யோகா முதலியவற்றை மேற்கொள்கிறோம். ஆனால், இதயநோய், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்கள், கை கால்களை முடக்கும் ஆர்த்ரைட்டிஸ், மற்றும் கேன்சர்  போன்ற நோய்கள்  எங்களை இயங்கவிடாமல் தடுப்பது மட்டுமல்ல, சுயபச்சாதாபம் கொள்ளவும் வைக்கின்றன. இதனால் ஓரிடத்திலேயே அடைந்துகிடப்பது தவிர்க்கமுடியாத விஷயமாகிறது.

(ஆனால், நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களில் தொண்ணூறு சதம்பேர் நடுத்தர, மேல்-நடுத்தர வர்க்கத்தினராக இருந்தபடியால், மேற்படி நோய்களுக்கு மருத்துவம் பார்த்துக்கொள்ளும் வசதி தங்களுக்கு இருப்பது இறைவன் கொடுத்த வரம் என்றனர். தம் குழந்தைகளும் போதுமான அளவுக்கு நிதிஉதவி செய்வதாகக் கூறினார். ஆனால், தங்களின் பிள்ளைகளின் வாழ்க்கைக்குப் பயன்படவேண்டிய பணத்தை, வயதான தங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டியிருப்பது குற்ற உணர்ச்சியை ஊட்டுவதாகத் தெரிவித்தனர்.)

கேள்வி (6): தனிமையை எப்படி எதிர்கொள்கிறீர்கள்? அறுபது வயதுக்குப் பிறகு புதிதாக ஏதேனும் கற்றுக்கொண்டீர்களா?

விடை: சிலர், கீபோர்டு கற்றுக்கொண்டனர். சிலர் கார் ஓட்டக் கற்றுக்கொண்டனர். சிலர் கம்ப்யூட்டர், ஸ்மார்ட் போன் பயன்படுத்தக் கற்றுக்கொண்டனர். சிலர், ஒத்த கருத்துடைய சங்கங்களில் சேர்ந்து பணியாற்றுகின்றனர். பாரதிமணி, தான், அறுபது வயதுக்குப் பிறகுதான் எழுத ஆரம்பித்ததாகக் கூறினார்.

கேள்வி (7): உங்களிடம் உள்ள சொத்து – வீடு, பணம் முதலியன – பற்றிய உங்கள் பார்வை என்ன?

விடை: வயதானவர்களின் சொத்துக்கள் சாகும்வரையில் அவர்கள் பெயரிலேயே இருப்பதுதான் நல்லது. (சோம. வள்ளியப்பன் இதைத் தீவிரமாக ஆதரித்தார்.) ஆனால், தன் பிள்ளை, பெண்களுக்கு இன்னின்ன சொத்து தரப்படும் என்பதை முன்கூட்டியே அறிவித்துவிடுவது நல்லது. (அதாவது உயில் எழுதி வைத்துவிடுதல்.)
பி.ஏ.கிருஷ்ணன் - எழுத்தாளர் -(படம்: நன்றி: இணையம்)
பி.ஏ.கிருஷ்ணன், நாட்டில் தற்போது வாழக்கைத்தரம் உயர்ந்துவருவதால், எழுபத்திரண்டு வயதுவரை உயிர்வாழ்வது சாத்தியமாகியிருக்கிறது என்றார். தமிழ்நாட்டையும் கேரளத்தையும் ஒப்பிட்ட அவர், கேரளத்தில் சராசரி உயிர்வாழ்தல் 77 வயது என்றார். (தமிழ் நாட்டில் 72.) இந்த உயர்வுக்குக் காரணம், அங்கு, தனிமையில் வாழும் வயோதிகர்கள் தமிழ்நாட்டைவிடக் குறைவாக இருப்பதுதான் என்றார்.

எனவே, ‘தனிமையை வெற்றி கொள்ளுதல்’ என்பதுதான் அறுபது வயதுக்குப் பிறகு மனிதன் எதிர்கொள்ளும் தீவிரமான சவால் என்று தெரிந்தது.

‘நம் நாட்டில், பெரும்பாலானவர்களிடம், அறுபது வயதுக்குப் பிறகு எப்படி வாழ்வது என்பதைப் பற்றிய திட்டமிடல் இல்லவே இல்லை என்பது அபாயகரமானதாகும்’ என்று சொல்லி விவாதத்தை முடிவுக்குக் கொண்டுவந்தார் கோபிநாத்.

திடீரென்றுதான் நினைவுக்கு வந்தது,  கிரிக்கெட் பார்த்துக்கொண்டிருந்தோமே, என்ன ஆயிற்றோ என்று. இந்தியா தோற்றுப்போயிருந்தது. பலநாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல ‘நீயா நானா’வைப் பார்த்த திருப்தியில் இருந்த எனக்கு, இத்தோல்வி பெரிதாகப் படவில்லை. வாழ்த்துக்கள், கோபிநாத்!

பத்திரிகை 
2000களின் ஆரம்பத்தில் பெங்களூரில் இருந்தேன். அப்போதுதான் 'டைம்ஸ் ஆப். இந்தியா' தனது பெங்களூர் பதிப்பைத் தொடங்கியிருந்தது. இந்தியப் பத்திரிகைகளிலேயே அதிக பணபலம் உடைய டைம்ஸ்,  PREDATORY MARKETING  என்ற உத்தியைப் பயன்படுத்த முனைந்தது. அதாவது, அன்று, டெக்கன் ஹெரால்டு, இந்தியன் எக்ஸ்பிரஸ், ஹிந்து -இவையெல்லாம் இரண்டரை முதல் மூன்று ரூபாய் விலையில் வந்துகொண்டிருக்கையில், டைம்ஸ், தன் விலையை வெறும் ஒரு ரூபாயாகக் குறைத்தது. எதிர்பார்த்தபடியே விற்பனை கிறுகிறுவென்று கூடியது. வாசகர்கள் தங்களைக் கைவிட மாட்டார்கள் என்று நம்பிய மற்ற மூன்று பத்திரிகைகளும் விற்காமல் தேங்கின. வேறு வழியின்றி அவையும் தங்கள் விலையைக் குறைத்தாகவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஓராண்டுக்குமேல் அவர்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. தங்கள் வழக்கமான விலைக்கு மீண்டும் தாவினார்கள். ஆனால் அதற்குள் டைம்ஸ், பெங்களூரில் அதிக விற்பனையாகும் இதழ் என்ற நிலையை எட்டிவிட்டது. இன்றுவரை அதுதான் 'லீடிங்.'

சென்னையில் அதுபோல் தனது பதிப்பைத் தொடங்கியவுடன்  டைம்ஸ் ஆப் இந்தியா இன்னொரு புதிய உத்தியையும் கடைபிடித்தது. வீடுவீடாகச் சென்று 'ஆண்டுச் சந்தா வெறும் 299 ரூபாய்' என்று வசூலிக்கத் தொடங்கினார்கள். கடந்த மூன்று வருடங்களாக நான் அவர்களின் வலையில் விழாமல் கழன்றுகொண்டே வந்தேன். காரணம், டைம்ஸில் எழுத்துக்கள் மிகவும் சிறியதாக இருக்கும்.  நல்ல வெளிச்சம் இல்லாத நிலையில் படிக்கவே முடியாது. காகிதம் மிகவும் திராபையான காகிதமாக இருக்கும். செய்திகளை எடுத்து வழங்குவதிலும் (PRESENTATION), எந்தப் பக்கத்தில் எந்தவகையான செய்திகளை அச்சிடுவது என்பதில்  ஒரு தொடர்ச்சி (CONSISTENCY)    இல்லாமலும் இருக்கும். ஆனால் சென்ற வாரம் அந்த '299 ரூபாய்க்கு ஒரு வருடச் சந்தா' வியாதிக்கு நானும் இரையானேன்.  

இரண்டு காரணங்கள்: ஒன்று, அந்த விற்பனையாளருக்கு ஆதரவு தெரிவிக்கவேண்டியிருந்தது. இரண்டு, பத்திரிகையைப் படிக்கவேண்டும் என்பதில்லை. அப்படியே வாங்கிவைத்துக்கொண்டு, பழைய பேப்பர்காரரிடம் போட்டாலும் மாதம் இருபது ரூபாய் திரும்பக் கிடைத்துவிடும். அதாவது, மாதம் ஒன்றுக்கு நிகரச் செலவு வெறும் ஐந்து ரூபாய்க்கும் குறைவு. (இந்த இரண்டாவது தான் வலிமையான காரணம். இதைக் கண்டுபிடித்துச் சொன்னவர் எனது குடியிருப்பிலுள்ள ஒரு  நண்பர்.) இப்படிப்பட்ட சூழ்நிலையில் வெளியாகும் பத்திரிகைகளில் நேர்மை, நீதி, நியாயம் என்பதையெல்லாம் எதிர்பார்க்க முடியுமா என்ற சந்தேகம் எழாமல் இல்லை.

சிரிப்பு

"காங்கிரசுக்கு இனி வசந்த காலம்தான்...." 

கரூரில் தனித்துப் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து மத்திய அமைச்சரும், இத்தேர்தலில் போட்டியிட முன்வராதவருமான ஜி.கே.வாசன் பேச்சு. (தமிழ் இந்து - 6-4-2014 பக்கம் 7)
   
குறிப்பு: இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், கீழுள்ள ‘தமிழ்மணம்’ பட்டையில் இடதுபுறமுள்ள ‘மேல்நோக்கிய கட்டைவிரல்’ அடையாளத்தின்மீது ஒரு கிளிக் செய்யுங்கள். நன்றி.
 © Y Chellappa

41 கருத்துகள்:

 1. கருத்துக் கணிப்புகள் எந்த அளவு சரியாக இருக்கும் என்றும் சொல்ல முடியாது! கூடக் குறைய இருக்கலாம். பெரும்பான்மை இல்லாத மைனாரிட்டி அரசின் பலவீனத்தை நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள்.


  நல்ல ஒரு புத்தகத்தின் அறிமுகம். மிகவும் சுவாரஸ்யம். லிங்க் க்ளிக் செய்தால் தனி 'டேபி'ல் திறக்குமாறு செட்டிங்க்ஸ் அமைத்தால் படிப்பவர்களுக்கு உதவியாக இருக்கும். புத்தகம் எங்கு கிடைக்கும்? கிழக்கில்?

  துளசிதரனுக்கு பாராட்டுகள்.

  நீயா நானா தலைப்பு நல்ல தலைப்பு. நான் பார்க்கவில்லை. நீங்கள் தொகுத்துக் கொடுத்துள்ள , அந்த நிகழ்ச்சியில் வெளிப்பட்ட கருத்துகள், சிந்தனையைத் தூண்டுகின்றன.

  தமிழ் நாட்டிலும் ஒரு ரூபாய் செய்தித் தாள் எல்லாம் வந்ததே... அப்புறம் 2 ரூபாய், மூன்று ரூபாய்... இங்கும் எடைக்குப் போட்டால் நஷ்டம் வராது என்று நாங்களும் வாங்கினோம்!

  காங்கிரசுக்கு கண்டிப்பாக இனி வசந்த காலம்தான். நல்ல ஓய்வு கிடைக்குமே! :)))


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி நண்பரே! புத்தகம் 'கிழக்கில்' கிடைக்கும். அதே நூலைத் தமிழிலும் அவர்கள் கொண்டுவர்ப்போவதாகத் தகவல்.

   நீக்கு
 2. அருமையான பதிவு - தெள்ளிய பிழையற்ற தமிழில். வாழ்த்துகள். பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 3. கண்டிப்பாக வயதானவர்களின் சொத்துக்கள் சாகும்வரையில் அவர்கள் பெயரிலேயே இருக்க வேண்டும்... முதியோர் இல்லங்களில் எண்ணிக்கை குறையும்...! ஆனால், இன்னின்ன சொத்துகள் என்பதை தெரிவிக்காமல் இருப்பதும் நல்லது என்றே தோன்றுகிறது... சரியான பங்கீடுடன் உயில் எழுதி வைத்தாகி விட்டது என்று அறிவித்தாலே போதும்... இல்லையென்றால் அங்கிங்கு அலைச்சல் அதிகமாகி, முதியோர் இல்லமே சிறந்தது என்று அங்கு செல்பவர்களும் உண்டு...! அதனால் எதையும் மிகச்சரியாக பெற்றவர்கள் செய்வார்கள் என்னும் நம்பிக்கையும் வாரிசுகளுக்கு இருக்க வேண்டும் / வர வேண்டும்...

  இனிய நண்பர் திரு. துளசிதரன் அவர்களை விரைவில் சந்திக்கும் வாய்ப்பை எத்ரிப்பார்த்துக் கொண்டிருக்கிறேன்...

  கொள்கை முடக்க நோய் இல்லாமல் போகட்டும்...

  திரு. துளசிதரன் அவர்களின் யூடியூப் இணைப்பிற்கும், டாக்டர் டி.கே.ஹரி அவர்களின் இணையத்தள முகவரிக்கும் நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வரவுக்கும் கருத்துரைக்கும் நன்றி தனபாலன் அவர்களே!

   நீக்கு
 4. #அமெரிக்கா, சீனா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு மிகச் சரியான சமிக்ஞையை அனுப்புவதாக அமையும்.#
  இது மட்டுமல்லாமல் சுண்டக்காய் நாடான ஸ்ரீலங்காவின் மீனவ விரோத கொட்டத்தையும் அடக்கணும் !
  நண்பர் துளசிதரன் அவர்களின் பன்முகத் திறமை கண்டு அசந்து விட்டேன் ,அவருக்கும் உங்களுக்கும் பாராட்டுக்கள் !
  த ம 4

  பதிலளிநீக்கு
 5. ஐயா ! மைசூர் ராஜ்யத்தில் உயர் நீதிமன்ற நிதிபதியாக இருந்தவர் பரமேஸ்வர ஐயர் ! தமிழ்,ஆங்கிலம்,சம்ஸ்கிருதம் அகிய மொழிகளிம் பாண்டித்யம் பெற்றவர் ! Ramaayana as i seev it என்று புத்தகம் எழுதியுள்ளார் ! மிகச்சிறந்த ராம பக்தர் ! ஆனால் வால்மீகி ராமாயணத்தில் உள்ள இடைசொருகல்களை சுட்டிக்காட்டி எழுதியுள்ளார் ! ராமர் விந்திய மலயைத் தாண்டி வரவில்லை ! திரிகோனமலை,இலங்கை ஆகியவை மத்தியப் பிரதேசத்தில் உள்ள மலவாழ் மக்கள் இருப்பிடம்.என்கிறார் ! அந்தக் காலத்திலேயே வண்ணத்தில் வரைபடத்தோடு புத்தகமாக வெளியிட்டுள்ளார் !
  அவருடைய சகோதரர் அமிர்தலிங்கம் ஐயர் ! திண்டுக்கல்லில் பிரபலமான வக்கீல் ! அவர் Ramayana Rasanaa என்றொரு புத்தகம் எழுதியுள்ளார் ! பெரியார் இவர்களொடு விவாதித்து அதன் பிறகுதான் ராமர் எதிர்ப்பை கைக்கொண்டார் !
  இந்த இரண்டு புத்தகங்களும் ராமாயனம் பற்றிய உண்மைகளையும் புரட்டுகளையும் அம்பலப்ப்டுத்தூபவையாகும்! அமிர்த லிங்கம் ஐயரின் மகன் தான் சமூக விஞானியும் மார்க்ஸிஸ்ட் தலவருமான மறைந்த ஏ.பாலசுப்பிரமணியம் ! தகவலுக்காக ---காஸ்யபன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் கருத்துக்கும் தகவலுக்கும் நன்றி. ராமாயணம் குறித்த அதீதமான தேட்டம் எனக்குக் கிடையாது. டாக்டர் ஹரியின் வாதங்கள் குறித்த பார்வையைத்தான் நான் தெரிவித்தேனே ஒழிய, என்னுடைய கருத்துக்களை அல்ல. தாங்கள் குறிப்பிட்டுள்ள நூல்களை விரைவில் தேடிப் படிக்க வேண்டும் என்ற நாட்டம் ஏற்படுகிறது....!

   நீக்கு
 6. ராமனைப் பற்றிய தகவல்கள் வியப்பைத் தந்தன. இத்தனை துல்லியமாக எப்படிக் கணக்கிட்டார் என்பதும் அறிய வேண்டிய ஒன்று. புத்தகம் வாங்கும் ஆசையும் ஏற்படுகிறது.
  திரு துளசிதரன் அவர்களின் பின்னூட்டங்கள் பல தளங்களிலும் பார்த்திருக்கிறேன். அவரது திறமையும், சமூகத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என்ற ஆவலும் மிகவும் போற்றப்பட வேண்டிய ஒன்று.
  திரு காஷ்யபன் கூறியுள்ளது பற்றி மேலும் அறிய ஆவலாக இருக்கிறது. காஷ்யபன் ஸார், இணையதளத்தில் இந்தப் புத்தகங்கள் படிக்கக் கிடைக்குமா?

  நாங்கள் கிரிக்கெட் பார்த்ததால் (பார்க்காமலே இருந்திருக்கலாம்!, விதி யாரை விட்டது?) நீயா? நானா? பார்க்க முடியவில்லை. வயதானவர்கள் பாடு கஷ்டம்தான். செல்வம் இருந்தாலும் கஷ்டம்; இல்லாவிட்டாலும் கஷ்டம். கடவுள் சீக்கிரம் இரங்கவேண்டும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு நன்றி. தாங்கள் ஏன் 'நீயா நானா' போன்ற விவாதங்களில் கலந்துகொள்வதில்லை?

   நீக்கு
  2. அட! இப்படி நான் நினைத்ததே இல்லையே! அதெல்லாம் யாரோ, எங்கேயோ உட்கார்ந்து கொண்டு செய்கிறார்கள், நமக்கெல்லாம் எட்டாக்கனி என்றல்லவா நினைத்திருந்தேன், இவ்வளவு நாளும்! :)))

   நீக்கு
 7. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 8. பதிவு அருமை. நிறைய தகவல்கள் இருப்பதை படிக்க நேரம் போதவில்லை

  பதிலளிநீக்கு
 9. துளசிதரன் அவர்களுக்கு வாழ்த்துகள்!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நேரில் சந்திக்கும்போது அவரிடம் தெரிவிக்கிறேன். சரியா?

   நீக்கு
 10. அருமையான பதிவு. ராமன் பெயரைப் பார்த்ததுமே ஓடோடி வந்தேன். ஏமாறவில்லை. இந்தச் செய்திகள் ஏற்கெனவே படிச்சிருக்கேன் என்றாலும் புத்தகம் படித்தது இல்லை. எத்தனையோ படிக்க வேண்டிய புத்தகங்களின் லிஸ்டில் இதுவும்! :)))

  துளசிதரனைப் பல பதிவுகளின் பின்னூட்டங்களில் பார்த்திருக்கிறேன். அவரின் திறமையை இப்போது தான் கேள்விப் படுகிறேன். வாழ்த்துகள்.

  நீயா, நானா எப்போதுமே பார்ப்பது இல்லை! அதனால் அந்த நேரம் பார்க்கவேண்டும் என்றே தோன்றுவதில்லை. தொலைக்காட்சி பார்ப்பதும் குறைவு! :)) ஆனால் இங்கே கூறியுள்ள கருத்துகள் அனைத்துமே அருமையானவை.

  பதிலளிநீக்கு
 11. செல்லப்பா சார், இராமனைப் பற்றி பதிவில் வந்துள்ள கருத்துக்கள் ( தேட்டம் கிடையாது என்கிறீர்கள் புரியவில்லை) உங்களுடையது அல்லஎன்று தெரிகிறது. இந்த இதிகாசங்களே அதீதமான ,அபரிமிதமான கற்பனையின் வெளிப்பாடு என்பது என் எண்ணம். இதன் ஆசிரியர்கள் கற்பனையில் உதித்ததை வாய்வழியே பிறருக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகும். எத்தனை இடைச் செருகல்களோ தெரியாது. கற்பனைப் பாத்திரங்களுக்கு கடவுள் அந்தஸ்து கொடுத்து அவர்களை விமரிசிப்பதையே நாத்திக வாதம் என்கிறார்கள். நம் மக்களின் gullibility காசாக்குகிறார்கள். அடப் போங்கசார். எனக்குத் தெரியும் நான் கூறுவது பொதுமக்களின் மனதில் ஏறாது. இருந்தாலும் சொல்லாமல் இருக்க முடியவில்லை.
  நீயா நானாவில் முதியவர்களின் கருத்துக்களைப் பதிவு செய்திருக்கிறீர்கள் இந்த முதியவனின் கருத்தும் என் தளத்தில் பதிவாக்கி இருக்கிறேன் சுட்டி தருகிறேன் படித்துப் பாருங்கள்
  செய்யாத குற்றம் gmbat1649.blogspot.in/2010/12/blog-post_05.html
  முதுமையின் வரம் gmbat1649.blogspot.in/2012/07/blog-post_29.html

  திரு.துளசிதரன் வலைத்தளம் சென்று பார்க்க வேண்டும் பாஜக ஆட்சியமைப்பது எனக்கு உடன்பாடில்லாதது. ஆனால் மக்கள் விருப்பம் எது என்று சில நாட்களில் தெரிய வரும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜி எம் பி ஐயா அவர்களே! நீங்கள்; எழுதாத விஷயங்களும் உண்டா? நீங்கள் கொடுத்துள்ள இணைப்பைப் படித்துப்பார்க்கிறேன்.(2) கடவுள் இல்லையா, அது கற்பனையா - என்பவர்களுக்கு நான் கூறும் ஒரே பதில்: கடவுள இருக்கிறார் என்பதுதான்..... முயன்றால் உங்களால் அவரை உணரமுடியும்-. உணரவேண்டாம் என்று முன்கூட்டியே முடிவுசெய்துகொண்டவர்களைத் தவிர-. ஆனால் இதிகாசங்களுக்கும் சரித்திரத்திற்கும் எப்போதுமே ஒரு முரண்பாடு இருக்கக்கூடு ம் என்பதை அனைவரும் அங்கீகரித்தாகவேண்டும். அறிவியல் கருவிகள் நாளுக்குநாள் மேம்படுத்தப்பட்டு வருவதால், கடந்த காலத்தில் கற்பனை என்று நம்பப்பட்டவைகளில் சில, எதிர்காலத்தில் உண்மையானவைகளாக நம்பவேண்டி வரலாம் என்ற சாத்தியத்தை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.

   நீக்கு
 12. பயனுள்ள தகவல்களைத் தாங்கிய
  அருமையான பதிவு
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 13. ஏராளமான செய்திகளை சொல்லி இருக்கிறீர்கள் ஐயா அனைத்தும் அருமை. சுவராசியமாகவும் இருந்ந்தது. நீயா நானா நிகழ்ச்சியை நானும் பார்த்தேன்.

  பதிலளிநீக்கு
 14. எப்பா எவ்வளவு தகவல். பல பதிவுகளாக தேற்ற வேண்டிய விடயங்களை அள்ளிக் குவித்துள்ளீர்கள்.

  அதுவும் நமது தில்லையகத்து துளசிதரன் ஒரு நடிகராக எனக்குத் தெரியாத விடயம், வாழ்த்துக்கள்.

  ராமரை வரலாற்று ராமராக நிறுவ முயலும் கதை கொஞ்சம் ஓவராகத் தான் படுகின்றது என்ற போதும், என்ன எழுதியுள்ளார்கள் என்பதை வாசிக்கும் ஆர்வம் வருகின்றது. இலங்கைத் தீவு இந்திய துணைக்கண்டத்தை பிரிந்ததே 5000 ஆண்டுகள் எனக் கூறும் போது, ராமரின் வயது அதை விட அதிகமாக கூறுவது வேடிக்கை. இந்தியாவில் கங்கை நதிப் புறத்து ஆரிய பண்பாடு எழுந்ததும் சுமார் 3500 ஆண்டுகள் என்ற ஆய்வாளர்கள் கூறும் போது, ராமரின் வயது அதை விட அதிகம் என்பது பொருத்தமாக படவில்லை.

  காசியபன் அவர்கள் பரிந்துரைத்த தகவல் பயன் தருபவையாக இருக்கின்றது. அவை குறித்து கேள்வி உற்றிருக்கின்றேன், வாசித்து பார்த்ததில்லை.

  நீயா நானா நிகழ்ச்சி நானும் கண்டேன், சுவையான விவாதமாக அமைந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் விவரமான பின்னூட்டம் மகிழ்ச்சியளிக்கிறது. (2) டி.கே.ஹரிக்குத் தங்கள் கேள்விகளை அனுப்பிவைக்கிறேன். அறிவுபூர்வமான விவாதங்கள் சமுதாயத்துக்கு என்றுமே நன்மை பயப்பவை. நீங்களும் அவருடைய தளத்திற்குச் சென்று மேற்கொண்டு எழும் ஐயங்களையும் முன்வைக்கலாம். அடுத்த பத்தாண்டுகளில் இன்னும் தெளிவான விடை கிடைக்கலாமல்லவா?

   நீக்கு
 15. //இராமன் என்பது வெறும் கதைப் பாத்திரமல்ல; உண்மையில் வாழ்ந்த சரித்திர புருஷனே// இதைப் புரிந்துகொள்ள சற்று முயற்சிகள் தேவை என்பது தான் உண்மையிலும் உண்மை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பரே! பள்ளிப்பருவத்திலிருந்தே மனப்பாடம் செய்து பழகிவிட்டபடியால், தத்தம் மூளையைப் பயன்படுத்திச் சுயமாகச் சில கருத்துக்களைக் கண்டுபிடிப்பதில் நம்மில் சிலருக்குப் போதுமான பயிற்சி இல்லாமல் இருக்கிறது. இந்தப் பயிற்சியை மேற்கொண்டால் புதிய கருத்துக்களை உடனே உள்வாங்காமல், சோதித்துப் பார்த்து அங்கீகரிக்கும் பழக்கம் ஏற்பட வாய்ப்புண்டு. அப்போதுதான் சரித்திரமானது, புராண, இதிகாசக் கதைகளிலிருந்து சற்றே மாறுபட்டது என்று புரியவரும். தங்கள் வருகைக்கு நன்றி.

   நீக்கு
 16. ஸார், முதலில் நாங்கள் உங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்!..எனது குறும்படங்களைக் கண்டு, அதில் பரோலைப் பற்றி இங்குச் சொல்லி, அதன் சுட்டியையும் கொடுத்து, அங்கீகரித்ததற்கு மனப்பூர்வமான நன்றி!

  ராமரைப் பற்றிய தகவல்கள் சற்றுப் புதியதாகத்தான் இருக்கின்றது!

  நீயா நானா நிகழ்ச்சி பார்க்கவில்லை என்றாலும் தாங்கள் தொகுத்துள்ளதைப் பார்க்கும் போது மிக அருமையான கேள்விகள், பதில்கள் என்றே தோன்றுகின்றது! வயதானவர்களின் கோணத்தில் மிகவும் சரியான பதில்களே! ஆனால், ஒன்றே ஒன்று தோன்றியது....அந்தக் காலத்தில் எல்லாம் இந்த அளவு வயதான்வர்களின் மனநிலை இருந்திருக்குமா? இப்போதுதான் இப்படி இருக்கிறதா? வாழ்க்கை முறையும், வாழிவியல் தத்துவங்களும் காலத்திற்கேற்றார் போல மாறி வருவதால் இருக்குமா? நியூக்ளியர் குடும்பகங்கள் ஆகிப்போனதாலா? திருமண பந்தங்களே வெகு ஏலிதாக, ஒரேநாளில் கூட உடையும் நிலை வந்திருப்பதால்....ஒருவேளை பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் இடையேயும் கூட அந்த உறவின் இடம் பெரிதாகி வருகின்றதோ? என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன!

  நல்ல பகிர்வு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி துளசிதரன் அவர்களே! தங்களுடைய எல்லாக் குறும்படங்களையும் பார்த்துவிட்டுத்தான் எழுதவேண்டும் என்று தாமதித்தேன். முடியவில்லை. இப்படிப்பட்ட ஒரு நல்ல நடிகர், வசனகர்த்தா, இயக்குனர், வெறும் ஆசிரியர் உத்தியோகத்துடன் நின்றுவிடக்கூடாது என்று ஏதோ ஒரு வேகம் வந்ததால், எழுதிவிட்டேன். எங்களுக்குத் திரைப்பட உலகில் - குறைந்தபட்சம் - சின்னத்திரையிலாவது- நல்ல எதிர்காலம் உண்டு என்பது இந்த எளியவனின் நம்பிக்கை. இறைவன் அருள் புரியட்டும்.

   மாறிவரும் உலகப் பொருளாதாரச் சூழ்நிலைதான் உறவுகள் உடைவதற்கும் நீர்த்துப்போவதற்கும் வலிமையான காரணியாக எனக்குப் படுகிறது. அதே சமயம், நமக்கு அமைந்ததைப் போன்ற --, பாதுகாப்பான, யாராலும் வேலையைவிட்டு எடுக்கமுடியாத, பி.எஃப், கிராஜுவிட்டி, பென்ஷன் தரக்கூடிய - அரசுப் பணியோ, அரசுடைமை நிறுவனப் பணிகளோ நம்முடைய வாரிசுகளுக்குச் சாத்தியமில்லாது போய்விட்டதே! அந்த 'நிச்சயமின்மை' தான் இன்று உறவுகளை நிர்ணயிக்கிறது; உடைக்கிறது. (இதைப் பற்றிப் பல பதிவுகள் எழுதலாம்!).

   நீக்கு
 17. 1)
  நான் எழுதிய விஷயங்கள் பிறரது பதிவுகளில் வரும்போது நான் எழுதியதைப் படிக்காதவர்களுக்கு நான் சுட்டி கொடுத்துப் படித்துப் பார்க்கச் சொல்கிறேன் நான் பல தலைப்புகளில் எழுதி வந்திருக்கிறேன். அதையே variety is the spice என்று கூறுகிறேன் உங்கள் மறுமொழி உயர்வு நவிர்ச்சியணியா தெரியவில்லை. இருந்தாலும் பரவாயில்லை. 2) கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது பற்றி நான் எழுதவில்லை. இதிகாசத்துக்கும் சரித்திரத்துக்கும் வேறுபாடு உண்டு என்று தெரிந்தும் இதைகாசத்துக்கு சரித்திர நிறம் பூசுவதையே நான் மக்களின் gullibility யில் காசு பார்க்கிறார்கள் என்றேன் .

  பதிலளிநீக்கு
 18. என்னுடைய இன்றைய பதிவில் உங்களது இந்தப் பதிவைக் குறிப்பிட்டிருக்கிறேன், ஸார். நேரம் கிடைக்கும்போது வந்து பாருங்கள்.
  http://thiruvarangaththilirunthu.blogspot.com/2014/04/blog-post.html

  பதிலளிநீக்கு
 19. நங்கள் தான் உங்கலுக்கு நன்றி சொல்ல வேண்டும். கடவுள்இருக்கிறாரா இல்லையா என்ற கேள்வி இங்கு எழுப்பபடுவது ஏன் என்றே புரியவில்லை. ஹரி அவர்கள் சொல்ல வந்தது எல்லாம், வால்மீகி ராமாயணத்தில் உள்ள பல குறிப்புகளைக் கொண்டு ஆய்வு செய்ததில் ராமரின் கதை ஒரு கற்பனைக்கதை அல்ல . ராமயண்ம உண்மையாகவே நடந்த ஒரு சரித்திர நிகழ்வு என்பதுதான். எது எப்படி என்றாலும், வால்மீகியின் டாகுமேன்டஷன் வியக்கத்தக்க வகையில் இருந்தது. நான் ஒரு இந்தியன் என்று சொல்ல்லிக்கொல்ளவதில் பெருமைப்படுகிரேன். நீயா நானா பார்க்க முடியவில்லை. டிவி யில் கிரிக்கெட் மேட்ச்! I seemed to have missed a good episode. Thanks for telling us about it! I am still not fluent with the tamil font otherwise, I have so much to say and share,,,anyway!

  பதிலளிநீக்கு
 20. இவ்வாரப் பதிவில் நான் ரசித்தது - உணர்வுக்குறை உள்ளவர்களுக்கு EMOTIONALLY CHALLENGED என்ற சொல் மிகவும் பொருத்தமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. நல்ல முயற்சி. துளசிதரனுக்குப் பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 21. மோடியின் கட்சி 200 இடங்களைத் தாண்டாது...கூட்டணியுடன் 220 இடங்கள் கிடைத்தால் அதிசயம். இன்னும் 52 இடங்கள் வேண்டும்.... சோனியா ஆதரித்தால் மோடி பிரதமர் ஆகலாம்.....இல்லாவிட்டால் .....மோடி கட்சியில் யாரோ ஒருவர் பிரதமராக வருவார்.

  பதிலளிநீக்கு
 22. நீங்கள் கூறிய ராமன் எங்கள் தாத்தாவைவிட 6 மாதம் 13 நாட்கள் சிறியவன். எங்கள் வீட்டிலும் ஓலைச் சுவடி உள்ளது. இதையெல்லாம் வெளியே சொல்வதில்லை.

  பதிலளிநீக்கு
 23. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 24. தனிமை என்பது கொடுமைதான். முதுமையில் தனிமை ஒரு விதம் என்றால், இளமைக்காலத்தை தனியாய் தொலைப்பது எவ்வளவு கொடுமைப்பாருங்கள் . என்னைக் கேட்டால், கொண்டாடுபவர்களும் குடும்பமும் சுற்றமும் நட்பும் புடைசூழ இருந்தால் வயதே ஏறாது. இதை கண்கூடாக கண்டிருக்கிறேன். அதே போல எந்த பிடிமானமும் இல்லாமல் அனாதை வாழ்க்கை வாழ்ந்தால் , விரைவாகவே சலிப்பும் மூப்பும் வந்து விடுகிறது.... இதை அனுபவித்தேவிட்டாயிற்று.

  பதிலளிநீக்கு