திங்கள், பிப்ரவரி 17, 2014

50 காதல் கவிதைகளும், பெரியார் கொடுத்த திருநீறும் ( ‘அபுசி-தொபசி’-30)

(“அபுசி-தொபசி” என்ற இப்பகுதி வாரம் இருமுறையாக, ஒவ்வொரு திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும் இந்திய நேரம் காலை ஆறுமணிக்கு மேல் ஏழரை மணிக்குள்ளாகவோ அல்லது அதற்கும் முன்பாகவோ வெளியாகும்.)

அரசியல் 
புதுடில்லியில் அரவிந்த கேஜ்ரிவால், தன் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இது இப்படித்தான் நடக்கவேண்டும் என்று காங்கிரஸ் செய்திருந்த முடிவின்படியே இது நடந்திருக்கவேண்டும் என்று தோன்றுகிறது.

முன் அனுபவமில்லாத கேஜ்ரிவாலை ஆதரித்து வைப்போம், பிறகு அவரை சமயம் பார்த்துக் காலை வாரிவிடலாம் என்பதுதானே அவர்களின் திட்டம்! கேஜ்ரிவால் அதிபுத்திசாலி. ‘லோக்பால் மசோதாவை அவையில் நுழைக்கமுடியாமல் காங்கிரஸ், பா.ஜ.க. இருவரும் சதி செய்துவிட்டார்கள்’ என்று மக்களிடம் அனுதாபம் கோரும்வண்ணம்  தனது ராஜினாமாவைச் சமர்ப்பித்துவிட்டார். ஆனால் அதே சமயம், அரசியல் சட்டத்திற்கு முரணாகவும் நடந்துகொண்டுவிட்டார் என்பதால் நேர்மையானவர்களையும் அறிவிஜீவிகளையும் ஒரேகல்லில் காயப்படுத்திவிட்டார். முதலமைச்சராக இருந்துகொண்டு ஆர்பாட்டக்காரகளுடன் அமர்ந்து போராடுவது அரசியல் சட்டத்தில் அனுமதிக்கப்படுமா என்றுகூட எண்ணாமல் மனம் போன போக்கில் நடந்துவந்தார் கேஜ்ரிவால்.

இனி ஆம் ஆத்மி கட்சியை ஆதரித்து வாக்களிக்க எத்தனை பேர் முன்வருவர் என்பது கேள்விக்குறியே.

புத்தகம்
சரித்திரப் புகழ்பெற்ற நட்புகள் என்றவுடன் உங்களுக்கு எந்தெந்த நட்புகள் நினைவுக்கு வருகின்றன? கோப்பெருஞ்சோழன்-பிசிராந்தையார் அனைவருக்கும் நினைவுக்கு வரலாம். குடியாத்தம் நகரைச் சேர்ந்த இளைஞர், ஈ.எஸ்.லலிதாமதிக்கு மேலும் பதின்மூன்று நட்புகள் நினைவுக்கு வருகின்றன. அவையாவன: (1)அவ்வையார்-அதிகமான், (2)பாரி-கபிலர், (3)ராஜா தேசிங்கு-மகமது கான், (4)கர்ணன்-துரியோதனன், (5)கண்ணன்-குசேலர், (6)கைகேயி-மந்தரை, (7)குகன்-ராமன், (8)ராமன்-சுக்ரீவன், (9)துரோணாச்சாரியார்-துருபன், (10)இராஜாஜி-பெரியார் ஈ.வெ.ரா., (11)கார்ல் மார்க்ஸ்-ஏங்கல்ஸ், (12)ஜூலியஸ் சீசர்-புரூட்டஸ், (13)காமராசர்-பெரியார் ஈ.வெ.ரா.


இவர் எழுதிய நட்பதிகாரம் என்ற 80 பக்கமும் 50 ரூபாய் விலையுமுள்ள நூல், (நக்கீரன்) சாருபிரபா பப்ளிகேஷன்சால் வெளியிடப்பட்டுள்ளது. ஜனவரி  2014  வெளியீடு. பள்ளி மாணவர்களுக்கும் அதைவிட முக்கியமாகப் பட்டிமன்றப் பேச்சாளர்களுக்கும், (தேர்தல் நேரத்தில்) அரசியல் பேச்சாளர்களுக்கும் மிகவும் பயன்படத்தக்க அளவில், சுருக்கமாகவும், நிறைவாகவும்  தெளிவாகவும் எழுதியிருக்கிறார் இந்த இளைஞர்.

“....முன் நூறு ஊரும் பரிசில் பெற்றனர்
யாமும் பாரியும் உளமே
குன்றும் உண்டு நீர் பாடினிர் செலினே”

என்று, படை எடுத்து வந்த மூவேந்தர்களை எதிரில் வைத்துக்கொண்டு பாரிக்கு ஆதரவாக அவ்வையார் பாடியதை அழகாக எடுத்துக்காட்டுகிறார்.

இராஜாஜி-பெரியார் நட்பின் இடையே, பெரியார்-திரு.வி.க. நட்பு பற்றியும் பேசுகிறார்:

“திரு.வி.க.வோ கடவுள் பக்தி உடையவர். ஒரு முறை பெரியாரின் வீட்டிற்கு வந்திருந்தார். அன்றிரவு பெரியார் வீட்டிலேயே தங்கினார். மறுநாள் எழுந்து குளித்து முடித்து திரு.வி.க. வந்தவுடன், அவருக்கு ஒரு கிண்ணத்தில் திருநீறை எடுத்து நீட்டினார் பெரியார்.

‘நீங்களோ கடவுள் மறுப்பு கொள்கை உடையவராயிற்றே? உங்கள் வீட்டில் எப்படி திருநீறு’ என்று கேட்க, ‘நான்தான் கடவுள் நம்பிக்கை இல்லாதவன். ஆனால் என் நண்பராகிய நீங்கள் நம்பிக்கை கொண்டவராயிற்றே? எனது விருந்தாளியான உங்களுடைய விருப்பத்தை நிறைவேற்றுவது என்னுடைய கடமை’ என்று பெரியார் சொல்லவும், பெரியாரை அப்படியே கட்டியணைத்துக் கொண்டார் திரு.வி.க.(பக்.60).

பெரியார் – காமராசர் நட்பும் சிறப்பாக விவரிக்கப்படுகிறது:

1967  தேர்தலில் விருதுநகரில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சீனிவாசன் என்பவரிடம் காமராசர் தோற்றுப் போனார். இதைச் சிலர் கேலியாக ‘படித்த சீனிவாசனிடம் படிக்காத காமராசர் தோற்றுப் போனார்’ என்று சுவரொட்டி ஒட்டினர். இது பெரியாரை மிகவும் பாதித்தது.

அந்தச் சுவரொட்டிக்கு அருகிலேயே படிக்காத காமராசர் கட்டிய பள்ளியில் படித்த சீனிவாசன் வெற்றி பெற்றார்’ என்று ஒட்டச் செய்தார்.(பக்.75).

மனிதாபிமானம் நிரம்பிவழிந்த காலம் அது!

குடியாத்தம் என்றால் பீடி சுற்றும் தொழில்தான் எல்லோருக்கும் கவனம் வரும். இனிமேல், இளைஞர் ஈ.எஸ். லலிதாமதியும் கவனத்திற்கு வருவார்.

சினிமா & தொலைக்காட்சி : அடுத்த இதழில்.

பத்திரிகை
கல்கி வார இதழ் இப்போதெல்லாம் முழுக்க முழுக்க இளைஞர்களையே சுற்றி வருகிறது. காரணம் தெரியாமலில்லை. இன்றைய இளைஞர்களை ஈர்த்துப் பிடித்தால்தானே இன்னும் ஐம்பதாண்டுகளுக்கு ஒரு  captive audience  கிடைக்கும்? (என்னைப் போல?)

காதலர் தினத்தை ஒட்டியோ என்னவோ, இந்த இதழில் ஓர் அற்புதமான சிறுகதை வந்திருக்கிறது. ஜி.ஆர்.சுரேந்திரநாத் எழுதிய YES காயத்ரி என்ற சிறுகதை. மெல்ல இழையோடும் நகைச்சுவையும், அருவிபோல் ஊற்றும் மொழிநடையும், ஒவ்வோர் எழுத்திலும் நடனமிடும் இளைமையின் துள்ளலும் உங்களைக் கவர்வது நிச்சயம். ஒரு சாம்பிள்:


“ஒரு ஆண் தன்னைப் பார்க்கும்போது பெண்கள் காட்டும் விதவிதமான ரி-ஆக்சன்களை யாராவது ஆராய்ச்சி செய்து பி.ஹெச்.டி.பட்டம் வாங்கலாம்.

“தன்னை ஒருவன் பார்ப்பது குறித்தப் பெருமையும், அதே சமயத்தில் கொஞ்சம் பயமும், அதே சமயத்தில் யாராவது கவனித்து விடுவார்களோ என்ற தவிப்பும், மறுபடியும் பார்க்கமாட்டானா என்ற ஏக்கமும் கலந்து அது ஒரு தனி பார்வை பாஸ். அந்த தனிப் பார்வையை என் மீது எய்ய, நான் கப்பென்று பிடித்து நெஞ்சுக்கூட்டில் பத்திரமாக வைத்துக் கொண்டேன்.

“ஒருநாள் என்னை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே, உலகில் நான் மட்டுமே அறிந்துகொள்ளும் ஒரு அதிரகசியப் புன்னகையுடன் கர்ச்சீப்பை  வேண்டுமென்றே கீழே போட்டாள். நான் எனது கர்ச்சீப்பை கீழே போட, முகம் மலரச் சிரித்தாள். நான் சிரித்தபடி என் கர்ச்சீப்பை எடுக்கக் குனிந்தேன். சட்டென்று முடிவுசெய்து, அவள் கர்ச்சீப்பையும் எடுத்து என் பாக்கெட்டில் வைத்துக்கொள்ள... அவள் முறைத்தாள். அந்த முறைப்பில் செல்லம், கனிவு, பிரியம், அன்பு போன்றவற்றோடு லைட்டாக காதலும் கலந்திருந்தது.
***
“அவளுக்கு அளித்த புளியோதரையுடன் (கோவிலில்) பிரசாதம் தீர்ந்துவிட்டது. நான் ஏமாற்றத்துடன் திரும்ப...’இந்தாங்க..ஆளுக்கு கொஞ்சம் சாப்பிடுவோம்’ என்றபடி அவள் கொஞ்சம் புளியோதரையை எடுத்து என் கையில் வைக்க... அப்போது அவள் நுனிவிரல்கள் என் உள்ளங்கையில் பட...நான் காற்றில் மிதந்தேன்.

‘இதை அப்படியே வச்சிருந்து,   தினம் ஒரு பருக்கையா சாப்பிடப்போறேன்’ என்றேன்.
‘ஏன்?’
‘நீங்க கொடுத்ததாச்சே, அவ்வளவு சீக்கிரம் தீத்துடலாமா...’ என்று நான் கூற அவள், ‘சீ..’ என்று வெட்கத்துடன் கொலுசுகள் ஒலிக்க, தாவணி காற்றில் பறக்க...அழகாக ஓடிப் போனாள்......

இந்த வார இதழ் தானே, கடையில் நிச்சயம் கிடைக்கும். உடனே வாங்கி மீதிக்  கதையைப் படித்துக்கொள்ளுங்கள். வாழ்த்துக்கள், ஜி.ஆர்.சுரேந்திரநாத்!
****

தமிழின் சிறந்த காதல் கவிதைகள் ஐம்பது’ என்ற தலைப்பில் அந்திமழை- பிப்ரவரி  2014 இதழில் சிறப்புத் தொகுப்பு வந்துள்ளது.

மீரா முதல் கனிமொழி வரை, பிரமிள் முதல் யூமா வாசுகி வரை, அப்துல் ரகுமான் முதல் நா.முத்துக்குமார் வரை என்று ஐம்பது கவிஞர்களின் படைப்புக்களைத் தேர்ந்தெடுத்துக் கொடுக்க அந்திமழை ஆசிரியர் குழு நிச்சயம் பல நாட்கள் உழைத்திருக்கவேண்டும். வாழ்த்துக்கள்!

 அகப்பட்டுக் கொள்ளத்தான்
இந்த மீன்
அலைகிறது!
தொடமாட்டோம் என்று
தூண்டில்கள்
சொல்லிவிட்ட பிறகும்!

என்ற மு.மேத்தாவின் கவிதையைப் பல ஆண்டுகளுக்குப்பின் படிக்கும்போது காலம் விரைந்து பின்னோக்கி நகர்ந்து நம் இளைமைக் காலத்தில் கொண்டுபோய்விடுவதை மறைக்கமுடிவதில்லை.

என்னைக் கண்டதும்
கவிழும் உன் இமைகள்
கொசுவலையா?
மீன்வலையா?
....
சில நேரங்களில்
இமைச் சிறகுகளை
விட்டுவிட்டு
உன் பார்வைகள்
பறந்து வருவது
என் கிளைகளில்
இரை தேடவோ?
கூடு கட்டவோ?

என்ற அப்துல் ரகுமானின் பிரபலமான கவிதை இடம் பெற்றுள்ளது. அதே சமயம், ஆண்களின் பலவீனத்தைப் புடம்போட்டுக் காட்டும் லட்சுமி மணிவண்ணனின் இந்தக் கவிதையும் இருக்கிறது:

எனது பெண்ணைக்
கண்டுபிடிக்க முடிவதில்லை
அவள் எல்லா பேருந்து
நிலையங்களிலும்
என் கண்ணில் படாமல் ஒளிந்து
கொள்கிறாள்

அவளைத் தேடிச் சலித்த கண்களில்
முலைகளும் பிருஷ்டங்களுமே
படுகின்றன

'கவிஞன் சாதாரணமானவனல்ல, சதா ரணமானவன்’ என்பார், இளந்தேவன்.    நா.முத்துக்குமாரின் கவிதை ஒரு சான்று:

நீ தரிசனம் தந்த கோயில்..
வௌவால் சந்ததி பெருகி
புராதன வாசத்தில்.

உன்னைக் காதலித்த
எங்கள் கவிதைகள்
பரணேறிய டைரித்தாளில்
கன்னி கழியாமல்.

தெரியும்,
மிலிட்டரிக்காரனுக்கு மணமாகி
நீ டெல்லியில் இருப்பது.

அதற்குச் சற்றும் குறையாத சோகம் வெளிப்படுகிறது, செல்வராஜ் ஜெகதீசனின் இந்தக் கவிதையில்:

ஏதாவது சொல் என்றேன்
என்ன சொல்ல என்றாய்.

எதையாவது சொல்லி
இருக்கலாம் நீ.

பிரிவின் சாசனமாய்
ஒரு பதிவாவது
எஞ்சியிருக்கும்
நமக்குள்.

ஆனால்  ஐம்பதாண்டுகளுக்கு மேலாகியும் மறக்க முடியாத  கவிதை, பொருளாதாரத்திற்கும் சமூக ஜாக்கிரதை உணர்வுக்கும் முன்னிலை வழங்கும்  சமுதாயத்தைப் பிரதிநிதிப்படுத்தும் மீராவின் கவிதைதான்:

உனக்கும் எனக்கும்
ஒரே ஊர்-
வாசுதேவநல்லூர்.

நீயும் நானும்
ஒரே மதம்..
திருநெல்வேலிச்
சைவப் பிள்ளைமார்
வகுப்பும் கூட..

உன்றன் தந்தையும்
என்றன் தந்தையும்
சொந்தக்காரர்கள்..
மைத்துனன்மார்கள்.

எனவே
செம்புலப்பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந்தனவே.

ஒரு கேள்வி: வழுவழுப்பான உயர்தரத் தாளில், கல்கி அளவில், 64 பக்கம், இருபதே ரூபாய்க்கு எப்படித் தர முடிகிறது, அந்திமழையால்? வாங்கி வாசிக்கும் நேயர்கள் அதிர்ஷ்டசாலிகள். தொலைபேசி: 044-43514540, 9443224834.

நான் ரசித்த கேள்வி-பதில்

கேள்வி:  ஆசிரியர் தகுதித் தேர்வில் 55 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்றாலே தேர்ச்சி என்று முதல்வர் அறிவித்துள்ளாரே? (ப.முரளி, சேலம்)

தராசு பதில்: மாணவர்களின் எதிர்காலத்தைச் சற்றும் மனத்தில் நினைக்காது எடுக்கப்பட்ட அரசியல் முடிவு இது. அறுபது சதவிகிதமே மிகக் குறைவு. ஆசிரியர்களின் தேர்ச்சியே, மாணவர்களின் வளர்ச்சிக்கு அடிப்படை. ஆசிரியர் பணி என்பதை வெறும் நாற்காலி தேய்க்கும் வேலையாகக் கருதுவதால் வந்த வினை இது. கல்வி கற்பிப்பதுடன் மாணவர்களின் உடல், மன வளங்களைப் பெருக்க வேண்டிய பெரும் பொறுப்பு ஆசிரியர்களுக்கு உண்டு.
(நன்றி: கல்கி, 23 பிப் 2014  பக். 43)

சிரிப்பு

“காலிலே பெரிய பேண்டேஜோட இருக்கிற இந்த பேஷண்ட், ஒரு கிரிக்கெட் வீரர்ன்னு எப்படி கரெக்டா சொன்னீங்க?”

“பேண்டேஜ் மேல, குளிர்பான விளம்பரம் எழுதி இருக்குதே, அதை வச்சுத் தான்!”

(தினமலர் வாரமலர் 16 பிப் 2014 இதழில் பக்.21 – எழுதியவர்: பொன். பிரபாகரன். நன்றி!)

குறிப்பு: இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், கீழுள்ள ‘தமிழ்மணம்’ பட்டையில் இடதுபுறமுள்ள ‘மேல்நோக்கிய கட்டைவிரல்’ அடையாளத்தின்மீது ஒரு கிளிக் செய்யுங்கள். நன்றி.
© Y Chellappa (எடுத்துக்காட்டுகள் நீங்கலாக)
Email: chellappay@yahoo.com

21 கருத்துகள்:

  1. சிறப்பான செய்திகளுடன் இருந்தாலும் ஒரு குறை இருக்கிறதே ஆம்.எப்போதும்போல நடிகைகள் பற்றிய படமும் விமர்சனமும் குரந்துபோநாதன் காரணம் என்ன?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொஞ்ச நாளைக்கு நடிகைகள் வேண்டாமய்யா! தேர்தல் முடியட்டும், பார்க்கலாம்!

      நீக்கு
  2. கல்கி காதலர் சிறுகதை நன்றாகவே இருந்தது... கவிதைகள் அருமை ஐயா... தராசு பதில் மிகச் சரி...! ஜோக் : ஹா... ஹா... விளம்பர உலகம்...!

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்
    ஐயா.

    நட்பதிகாரம் என்ற நூல் பற்றிய விளக்கம் மற்றும் கல்கியில் வந்த கேள்வி பதில்கள் கவிதைகள் எல்லாம் நன்றாக இருக்கிறது ஐயா பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
    த.ம 4வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  4. #நிம்மதியாகத் தமிழ்மணத்தில் ஓட்டளிக்க ஒரு நல்ல பதிவு...!#என்பதால் வோட் அளித்து விட்டேன்!

    பதிலளிநீக்கு
  5. எல்லாமே அருமை வழக்கம் போல! கெஜ்ரிவால் தெரிந்ததுதானே!...

    புத்தக விமர்சனம் அருமை, காதல் கதை படிக்க வேண்டும் என அவாவைத் தூண்டிவிட்டது!

    கேள்வி பதில் மிகச் சரியே!

    அந்த ஜோக்கிற்கு நாம் சிரித்தாலும், உண்மையும் கூடவே பளிச்சிடுகின்றதே!

    பகிர்வுக்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தவறாமல் வருகைதரும் தங்கள் ஒழுங்குமுறைக்கு நன்றி!

      நீக்கு
  6. அனைத்தம்சங்களும் மிகச் சுவை. அதிலும்,
    50 கவிஞர்களின் கவித் தொகுப்பு மிகவும் இரசிக்க முடிந்தது.

    பதிலளிநீக்கு
  7. நட்பதிகாரம் என்ற நூல் பற்றிய விளக்கம் மற்றும் கல்கியில் வந்த கேள்வி பதில்கள் கவிதைகள் அனைத்தும் அருமை
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பள்ளியில் தேர்வு நடக்கும் சூழ்நிலையிலும் வலைப்பூக்களைப் படிக்க நேரம் ஒதுக்கும் தங்களுக்கு நன்றி நண்பரே!

      நீக்கு
  8. உங்கள் வாசிப்புத் திறன் கண்டு வியப்பும் என் இயலாமை கண்டு வேதனையும் படுகிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேதனைப்படவேண்டாம் ஐயா! எவ்வளவு முயன்றாலும் உலகில் ஒரு மாதத்தில் வெளியாகும் அனைத்து நூலகளையும் படிப்பதென்றால் ஒரு ஆயுட்காலம் தேவைப்படுமே! அப்படியிருக்க, நம் ஆயுட்காலத்தில் வெளிவந்த நூல்கள் அனைத்தையும் படிப்பதென்றால் அதற்கு எத்துனை ஆயுட்கள் தேவைப்படும்? முடிந்தவரை ஒவ்வொருவரும் படிப்போம். அது போதுமே!

      நீக்கு
  9. அனைத்துப்பகிர்வும் நன்று. நான் அதிகம் ரசித்தது ‘படிக்காத காமராசர் கட்டிய பள்ளியில் படித்த சீனிவாசன் வெற்றி பெற்றார்’ என்பதாகும். ஒரு முறை The Hindu வெளிவந்த காமராஜர் பற்றிய கட்டுரையைப் படித்து வாசகர் எழுதிய கடிதத்தில் காமராஜரை 'Kamaraj was a comman man's man with uncommon common sense' என்று கூறியிருந்தார். அதனால்தான் அவர் பெருந்தலைவர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஐயா! அதனால் தான், பேசத் தெரியாமல், கதை எழுதத் தெரியாமல், சினிமா வசனம் எழுதாமல், நாடகங்களில் நடிக்காமல், நேர்காணலுக்குப் பணம் வசூலிக்காமல், அவரால் தேர்தலில் வெற்றி பெற முடிந்தது! தங்கள் வருகைக்கு நன்றி!

      நீக்கு

  10. வணக்கம்

    அந்தி மழையில் அடியவன் நீராடிச்
    சிந்தை குளிர்ந்தேன் சிலிர்த்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு


    பதிலளிநீக்கு