புதன், ஜூலை 17, 2013

தொல்காப்பியம் கூறும் திருமணப் பொருத்தங்கள் பத்து


சைந்தவி- ஜி.வி.பிரகாஷ் திருமணம் (முகநூல்)
திருமணத்திற்குப் பத்து பொருத்தங்கள் பார்ப்பது தமிழ்நாட்டில் வழக்கமாக உள்ளது. இது பற்றிக் கையடக்கப் புத்தகங்கள் நிறைய கிடைக்கின்றன. பஞ்சாங்கங்களில் விளக்கமான குறிப்புகள் உண்டு. தங்கள் குடும்ப சோதிடரிடம் மணமகன்-மணமகள் இருவரின் ஜாதகங்களையும் காட்டி இந்தப் பத்து பொருத்தங்களில் எவ்வளவு பொருத்தங்கள் உள்ளன, திருமணம் செய்யலாமா கூடாதா என்று தெரிந்து அதன்படி செய்வது பெரும்பாலானவர்களின் வழக்கம். அதே ஜாதகங்களை வேறு ஒரு ஜோதிடரிடம் காட்டினால் அவர் நேர்மாறான கருத்தையும் சொல்லக்கூடும். அதற்கு ஆதாரங்களையும் தரக்கூடும். திருமண வயதில் பிள்ளைகள், பெண்களை உடையவர்களுக்கு மிகுந்த மனக் குழப்பத்தைத் தரவல்லது இந்தப் பொருத்தம் பார்க்கும் முறை. (சிவாஜி கணேசன், கே.ஆர்.விஜயா நடித்த ‘செல்வம்’ என்ற படம் பார்த்திருக்கிறீர்களா? இல்லையென்றால் அதில் வரும் 'ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல' என்ற பாடலையாவது யூடியூபில் பார்த்துவிடுங்களேன்!)
நான் கர்னாடக மானிலம் மங்களூரில் பல வருடங்கள் இருந்தேன். அங்குள்ள துளு, கொங்க்கிணி மொழிகள் பேசுவோரிடம் இத்தகைய பொருத்தம் பார்க்கும் முறை இல்லை. மாறாகத் தங்கள் குடும்பக்கோயில் அர்ச்சகரிடம் ‘ஆரூடம்’ கேட்பார்கள். அவர் ‘இந்த வருடம் வேண்டாம், அடுத்தவருடம் ஜாதகத்தை எடுங்கள்’ என்று சொல்லிவிட்டால், அவ்வளவு தான். ஒரு வருடம் திருமணப் பேச்சை எடுக்கவே மாட்டார்கள். வேறு ஜோதிடரிடமும் இரண்டாவது கருத்து கேட்பதெல்லாம் கிடையாது.

திருமணத்திற்காக அவர்களால் பார்க்கப்படும் முக்கிய பொருத்தங்கள் இரண்டு தான்: ஒன்று, தமிழ்நாட்டில் பார்ப்பது போன்ற ‘நட்சத்திரப் பொருத்தம்’. இன்னொன்று ‘தசா சந்தி’ என்பது. அதாவது, மணமகனுக்கும் மணமகளுக்கும் ஒரே சமயத்தில் ஒரு குறிப்பிட்ட கிரகத்தின் தசை நடவாமல் இருக்கவேண்டும். (இந்த முக்கியமான பொருத்தத்தைத் தமிழ்நாட்டில் ஏனோ பார்ப்பதில்லை. காரணம் தெரியவில்லை).
பத்து பொருத்தங்கள் பார்க்கும் முறையை முதன் முதலில் விதியாக எழுதிய ஜோதிடர் யார் தெரியுமா? அவர் ஒரு ஜோதிடரா என்று கூட கேட்பீர்கள். ஏனென்றால் அவரை ஒரு மாபெரும் கவிஞராகத்தான் நீங்கள் அறிந்திருப்பீர்கள். அவர் தான்  மாகாகவி காளிதாசன்!  ஆம், இன்று தமிழ்நாட்டில் பல திருமணங்கள் நடப்பதற்கும் சில திருமணங்கள் நடவாமல் இருப்பதற்கும் காரணமானவர் இந்தக் கவிஞர் தான்! ‘மேக சந்தேசம்’, ‘விக்ரம-ஊர்வசீயம்’, ‘மாளவிகா-அக்னிமித்ரம்’ போன்ற காதல் காவியங்களையும், ‘ரகுவம்சம்’ போன்ற வரலாற்றுக் காவியங்களையும் அளித்த அதே கவிஞர் தான்!
****
அண்மையில் நியூஜெர்சியிலிருந்து அட்லாண்ட்டா பயணம் போகும்போது தமிழண்ணல் உரையுடன் மீனாட்சி பதிப்பகம் வெளியிட்ட  ‘தொல்காப்பியம்’ நூலை மறுவாசிப்பு செய்ய நேரிட்டது. அப்போது ஆச்சரியப்படத்தக்க செய்தி கண்ணில் பட்டது. திருமணம் செய்வதற்கு முன் கவனிக்க வேண்டியதாகப் பத்து பொருத்தங்களைத் தொல்காப்பியரும்  கூறி இருக்கிறார் என்பது தான் அது! 

தொல்காப்பியர் கூறும் பத்து பொருத்தங்களாவன:
1.       குடும்பத்தின் பரம்பரை வரலாறு. (இருவருடைய குடும்பங்களும் குற்றமில்லாத குடிப்பிறப்பைக் கொண்டனவா என்று பார்த்தல்)
2.       இருவரின் ஒழுக்கம். (தனி நபருக்குரிய ஒழுக்கனெறியில் இருவரும் சிறந்தவர்களா என்று பார்த்தல்)
3.       ஆளுமை. (ஆணாகின், ஆண்மைக்குரிய ஆளுமையும், பெண்ணாகின், பெண்ணுக்குரிய அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு முதலியன கொண்ட ஆளுமையும் உள்ளனவா என்று பார்த்தல்)
4.       வயது. (இருவரும் ஒத்த வயதினரா என்று பார்த்தல்)
5.       வடிவம். (இருவருக்கும் உருவ ஒற்றுமை உள்ளதா என்று பார்த்தல்)
6.       காம உறுப்பு. (இருவருக்கும் காம உறுப்புப் பொருத்தம் உள்ளதா என்று பார்த்தல். தோற்றத்திலிருந்தும் பழக்க வழக்கங்களிலிருந்தும் இதனை அறிய வேண்டும். வெளிப்படையாகக் கூறாமல் ‘ஒத்த காம உணர்ச்சி உடையனரா என்று பார்த்தல்’ என்று உரையாசிரியர்கள் மழுப்புவர்)
7.       மனவுறுதி.
8.       அருளுடைமை.(பெண், ஆணின் பாலும், ஆண், பெண்ணின் பாலும், திருமணத்திற்குப்பின் குறை கண்டவிடத்து, புரிந்துணர்வோடு ஒன்றாதல்)
9.       உணர்வு. (ஒத்த சிந்தனை உடையவர்களா என்று பார்த்தல். எடுத்துக்காட்டாக, இருவருமே முன் கோபம் உடையவர்களாகவோ அல்லது இருவருமே முன்யோசனை யில்லாதவர்களாகவோ இருந்துவிடலாகாது)
10.   பொருளாதாரம். (இருவரும் ஒத்த பொருளாதார அந்தஸ்து உடையவரா என்று பார்த்தல்).

 வடக்கே தோன்றிய கவிஞனுக்கும் தெற்கே தோன்றிய கவிஞனுக்கும் ‘பத்து பொருத்தங்கள்’ என்ற ஒரே கருத்து எப்படித் தோன்றியிருக்க முடியும் என்று ஆச்சரியமாக இல்லை?
****
இப்படியெல்லாம் பத்து பொருத்தங்கள் முழுமையாக அமைந்த திருமணங்களும் தோற்பதுண்டு. எதையும் பார்க்காமல் நடக்கின்ற திருமணங்களும் வெற்றிபெறுவதுண்டு. அதைத் தான் ‘ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும்’ என்கிறாரோ இளங்கோ அடிகள் ?

தொல்காப்பியத்தின் (1219வது) பாடல்வரிகள் இவை:

பிறப்பே, குடிமை, ஆண்மை, ஆண்டோடு,
உருவு, நிறுத்த காம வாயில், 
நிறையே, அருளே, உணர்வொடு, திரு -என 
முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே. 

© Y.Chellappa

6 கருத்துகள்:

 1. மனப் பொருத்தம் ஒன்றே சிறந்தது...!

  நன்றி ஐயா...

  பதிலளிநீக்கு
 2. பத்து பொருத்தங்கள் எனச் சொல்லி தற்போது மணவீட்டார் படும் சிரமங்களைக் காணமுடிகிறது. என்னதான் பொருத்தம் பார்த்தாலும் பொருந்தாத திருமணங்களும் உண்டு. பொருத்தம் பார்க்காமல் ராசி மட்டும் பார்த்துப் பொருந்தும் திருமணங்களும் உண்டு. அடிப்படையில் சொல்லப்போனால் எதுவும் அவரவர் மனதைப் பொருத்தும் அவரவர் நினைக்கும் நினைவுகளைப் பொருத்தும் அமைவனவே.

  பதிலளிநீக்கு
 3. ஒரு காலத்துல சாமுத்திரிகா லட்சணம் படிச்சுட்டு ஒவ்வொருத்தரையும் மதிப்பீடு செய்யறதுல தீவிரமா இருந்தது ஞாபகம் வருது.

  பதிலளிநீக்கு
 4. மனப் பொருத்தமே சிறந்த பொருத்தம் என்று நினைக்கின்றேன் அய்யா.

  பதிலளிநீக்கு
 5. நான் தேடிக்கொண்டிருந்த நல்ல பதிவு

  பதிலளிநீக்கு