சனி, ஏப்ரல் 30, 2022

பாஸ்போர்ட் என்னும் பாசச் சங்கிலி-1 இன்று கிழமை வெள்ளி -3

 பாஸ்போர்ட்  என்னும்  பாசச் சங்கிலி-1

இன்று கிழமை வெள்ளி -3


அமெரிக்காவில் 18ஆவது நாள் 

(பெங்களூர் எக்ஸ்பிரஸ்)


பாஸ்போர்ட் வாங்குவது என்பதே ஒரு காலத்தில் பிரம்மப் பிரயத்தனமாக இருந்தது இந்தியாவில். 


1998/99 இல் நான் மங்களூரில் பணியாற்றிக் கொண்டிருந்த பொழுது முதன்முறையாக பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்தேன்.  பாஸ்போர்ட் துறை கணினிமயம் ஆகாத நாட்கள்.  எங்கள் வங்கியின்  தலைமை அலுவலகத்திற்கு எதிரில் இருந்த மங்களூர் (பாண்டேஸ்வர்)  போஸ்ட் ஆபீஸில் விண்ணப்பத்தைப்  பூர்த்தி செய்து அங்கேயே பணம் செலுத்தும் வசதி அப்போது இருந்தது. 


எல்லா விண்ணப்பங்களிலும் இருப்பதுபோலவே, பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் ‘தற்போதைய முகவரி’ மற்றும் ‘நிரந்தர முகவரி’ என்று இரண்டு விவரங்கள் கேட்டிருந்தார்கள். எனது நிரந்தர முகவரி சென்னை; தற்காலிக முகவரி மங்களூர் என்று பூர்த்தி செய்தேன். தெரிந்த நபர்கள் இருவரின் பெயர்  முகவரி கேட்டிருந்தார்கள். கொடுத்தேன். அரசுத்துறையில் பணிசெய்வதால், அலுவலகத்திலிருந்து ‘என்ஓசி’ இணைக்கவேண்டி இருந்தது. செய்தேன். மங்களூரில் பாஸ்போர்ட் அலுவலகம் இல்லாததால், பெங்களூருக்கு என் விண்ணப்பம் அனுப்பப்பட்டது. 


ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஒற்றைத்தாளில் ‘உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது’ என்ற கடிதம் வந்தது. ‘உங்கள் நிரந்தர முகவரி சென்னை என்பதால், சென்னை பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு விண்ணப்பிக்கவேண்டும்’ என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.  


அதற்குள் எனக்கு பெங்களூருக்கே மாற்றலாகி விட்டது. மேலும் உடனடியாக வெளிநாடு செல்லும் எந்தத் திட்டமும் என்னிடம்  இல்லை. எனவே பாஸ்போர்ட் பற்றிய கவலையை அப்போதைக்கு ஒதுக்கிவைத்தேன். ஆனால் அடுத்த ஆண்டு என்னை அமெரிக்கா வரச்சொல்லி மகள் அழைத்ததால், மீண்டும் விண்ணப்பிக்க நேர்ந்தது. இம்முறை பெங்களூர் பாஸ்போர்ட் ஆபீசுக்கு விண்ணப்பிக்காமல், அவர்கள் ஏற்கெனவே அறிவுரைத்தபடி,  என் நிரந்தர முகவரிக்குட்பட்ட சென்னை பாஸ்போர்ட் ஆபீசுக்கு விண்ணப்பத்தை அனுப்பினேன்.


ஒரு மாதத்திற்குள் மீண்டும் ஒரு நிராகரிப்புக் கடிதம் வந்தது! இம்முறை காரணம் என்ன தெரியுமா? ‘உங்கள் தற்போதைய முகவரிக்குட்பட்ட பெங்களூர் அலுவலகத்துக்கு விண்ணப்பிக்காமல், சென்னைக்கு விண்ணப்பித்தது தவறு’ என்று கடிதம் கூறியது!


இதென்னடா இழவு என்று பெங்களூர் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு நேரில் சென்றேன். அங்கிருந்த அதிகாரி எங்கள் வங்கிக்குத் தொடர்பில் இருந்ததால், அவரிடம் விஷயத்தை விளக்கினேன். இப்போது விதிகள் மாற்றப்பட்டுவிட்டதாகவும், ‘தற்போதைய முகவரி’ தான் எந்த பாஸ்போர்ட் அலுவலகம்  என்பதை முடிவுசெய்யும் காரணி என்றும் தெரிவித்தார். எனவே மீண்டும் ஆத்திச்சூடியிலிருந்து ஆரம்பித்தேன். பதினைந்து நாட்களில் பாஸ்போர்ட் வந்துவிடும் என்றும் வராவிட்டால் தன்னை மீண்டும் சந்திக்கும்படியும் கனிவுடன் கூறினார். 


அதன்படியே பதினைந்தாவது நாள்  வந்தது. பாஸ்போர்ட் அல்ல, வெறும் கடிதம்! ‘உண்மைத் தகவலை மறைத்து விண்ணப்பித்த காரணத்தால் உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. மேலும், இதுபற்றி, தேவைப்பட்டால் காவல்துறை மூலம் நடவடிக்கையும் எடுக்கப்படும்’ என்று கடிதத்தில் இருந்தது!


எனக்கு ஒன்றும் புரியவில்லை. எந்த உண்மையை நான் மறைத்தேன் என்று எனக்குத் தெரியவில்லை. விண்ணப்பத்தில் இருந்ததெல்லாம், என்னுடைய பெயர், பிறந்த நாள், தந்தை-தாய் பெயர், பணிபுரியும் அலுவலகம், இதற்கு முன்பு ஏதேனும் குற்றச் செயல்களில் ஈடுபட்டேனா, வழக்குகள் என்மீது நிலுவையில் உள்ளனவா என்ற விவரங்கள்தான். இதில் எதையும் மறைப்பதற்கே வழியில்லையே!


எனவே சற்றே அச்சத்துடன், பாஸ்போர்ட் அதிகாரியோடு நெருங்கிய தொடர்பில் இருந்த எனது வங்கியின் மண்டலா அலுவலக நண்பர் ஒருவருடன் சென்று பாஸ்போர்ட் ஆபீசரைச் சந்தித்தேன். 


“வாருங்கள், பாஸ்போர்ட் வந்துவிட்டதல்லவா? என்ன சாப்பிடுகிறீர்கள், காபியா டீயா?” என்றார்.


எனக்கு வந்த கடிதத்தைக் காட்டினேன். அவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. உடனே என்னுடைய ஃபைலை எடுத்துவரச் சொன்னார். அதை பார்த்தவுடன் அவர் முகத்திலும் சற்றுக் கடுமை படர்ந்தது. “எதையோ நீங்கள் மறைக்கிறீர்கள் போல் தெரிகிறதே!” என்றார்.

 

நானும் நண்பரும் எதுவுமில்லை என்று பலமாகத் தலையாட்டினோம். “இல்லை! உங்கள் விண்ணப்பங்கள் இரண்டுமுறை நிராகரிக்கப்பட்டதாகக் குறிப்பில் இருக்கிறதே! சென்னை ஆபீஸ் ஒருமுறையும் இதே பெங்களூர் ஆபீஸ் ஒருமுறையும்! ஆனால் நீங்கள் இதற்குமுன் என்னைப் பார்த்தபோது ஒன்றும் கூறவில்லையே! இப்போதாவது எல்லா உண்மையையும் சொல்லிவிடுங்கள். நிச்சயம் என்னால் உதவமுடியும்” என்றார்.


“பாஸ்போர்ட் என்பது மிகவும் முக்கியமான ஆவணம். ஆகவே சின்னச் சின்னத் தவறுகள் கூட நிலைமையைச் சிக்கலாக்கிவிடும்” என்று மேலும் எச்சரித்தார்.


நல்லவேளையாக, ஏற்கெனவே வந்திருந்த இரண்டு கடிதங்களையும் கையோடு கொண்டுபோயிருந்தேன். பார்த்தார். உடனே விஷயத்தைப் புரிந்துகொண்டார். அதற்குள் காபி வந்தது. “குடியுங்கள், விஷயம் தெரிந்துவிட்டது. நாளைக்கே உங்களுக்கு பாஸ்போர்ட் கொடுத்துவிடுகிறேன். கவலைவேண்டாம்” என்றார்.


அதன்பிறகு விளக்கினார். “அதிகார எல்லை (ஜூரிஸ்டிக்ஷன்) சம்பந்தப்பட்ட காரணத்தால்தான் உங்கள் முந்தைய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.  உங்கள் மீது எந்தத் தவறும் இல்லை. இது முழுக்க முழுக்க சிஸ்டம் செய்த தவறு.  அதற்காக உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்றார். அவருடைய பெருந்தன்மைக்கு வணக்கம் சொல்லிக் கிளம்பினேன்.   


சொன்னபடியே மூன்றாவது நாள் என் கையில் பாஸ்போர்ட் வந்து சேர்ந்தது!


 

பாஸ்போர்ட் பத்துவருடத்துக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட வேண்டும். அதன்படி ஒரு குறிப்பிட்ட நல்ல நாளில் எனது ‘ரினியூவல்’ விண்ணப்பத்தை அனுப்பினேன். இப்போது நான் பதவியில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டேன். அத்துடன் 40 வருடமாக இருந்த முகவரியில் இருந்து வீடு மாறி, அடுத்த மாவட்டத்தில் ஒரு கிராமியச் சூழலில் இருந்த நகர்ப்புறக் குடியிருப்பு ஒன்றில் சொந்தமாக ஒரு அடுக்குவீடு வாங்கிக்கொண்டு வந்திருந்தேன். எனவே ரினியூவல் + முகவரி மாற்றம் இரண்டுக்கும் சேர்த்து விண்ணப்பித்தேன். 


இன்னும் கணினிமயமாகவில்லை பாஸ்போர்ட் ஆபீஸ்கள். எனவே தாமதம் தவிர்க்கமுடியாது என்று தோன்றியது. ஆனால் இப்போது ஏற்பட்ட தாமதம் புதுமாதிரியானது.


நமது பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் உடனே சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு அனுப்பப்படும். காவல் நிலைய அதிகாரி நம் வீடுதேடி வந்து விசாரணை நடத்தி அவர்முன்னால் நாம் ஒரு படிவத்தில் கையொப்பம் இட  வேண்டும் என்பது விதி.  


ஆனால் விதி என்பது வேறு, தலைவிதி என்பது வேறு அல்லவா? 


காவல் அதிகாரி நம் வீட்டுக்கு வரமாட்டார். மாறாக நம்மை அவருடைய அலுவலகத்திற்கு அழைப்பார். ‘நம்மை நன்கு தெரிந்த இருவர்’ (ரெஃபரன்ஸ்) என்று யாரைக் குறிப்பிட்டிருந்தோமோ அவர்களிடமிருந்து ஒரு படிவத்தில் கையொப்பம் வாங்கிவரச்சொல்லி நம்மிடமே அனுப்புவார். அவற்றைப் பூர்த்திசெய்துகொண்டு போனால் அந்த அதிகாரி தன் இருக்கையில் இருக்கமாட்டார்.  காவல்துறையில் நிமிடத்துக்கு நிமிடம் உத்தரவுகள் வந்துகொண்டே இருக்கும் என்பதால் அந்த அதிகாரி எப்போது மீண்டும் வருவார் என்பதை உறுதியாகத் தெரிவிக்க முடியாத சூழல் இருக்கும். 


இதனால் ஏற்படும் தாமதம் தவிர்க்க முடியாதது. அவர் வந்த பிறகு, நம்மிடம் ஒரு லெட்ஜரில் கையொப்பம் பெற்றுக்கொண்டு நமது விண்ணப்பத்தை மாவட்ட காவல் அதிகாரிக்கு அனுப்பிவைப்பார். அவர்கள் அதை பதிவுசெய்துகொண்டு பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு அனுப்புவார். எல்லாம் சரியாக இருந்தால் ஒரு வாரத்தில் புதிய பாஸ்போர்ட் வந்துவிடும்.    


என்னுடைய விஷயத்தில் மேற்கொண்டு புதிய தாமதம் ஒன்றும் நேர்ந்தது. அதை நீங்களோ நானோ எதிர்பார்த்திருக்க முடியாது! 


நான் குடிவந்த கிராமத்திற்கு அருகில் இருந்த இன்னொரு கிராமத்திற்கு போலீஸ் நிலையம் புதிதாக சாங்க்ஷன் ஆகியிருந்ததாம். அந்த அலுவலகம் சில நாட்களுக்கு முன்புதான் திறக்கப்பட்டதாம். எங்கள் குடியிருப்பையும் அந்த போலீஸ் நிலையத்தின் அதிகார எல்லைக்குள் சேர்த்துவிட்டார்களாம். அதற்கான உத்தரவு அன்றுதான் வந்ததாம். ஆகவே, எனது பாஸ்போர்ட் பற்றி விசாரணை செய்து தகவல் அனுப்பவேண்டியது அந்த நிலையத்தின் அதிகாரியுடைய வேலைதானாம்! ஏற்கெனவே பழைய போலீஸ் நிலையத்தில் செய்து முடிக்கப்பட்ட விசாரணை செல்லாதாம்! 


“அவர் உங்கள் வீட்டுக்கே வந்து பேசுவார். ஆனால் நீங்கள் புதிதாக எந்த பேப்பரும் தரவேண்டாம். நாங்கள் கையொப்பம் இட்ட அதே பேப்பரில் அவர் உறுதிசெய்யும் விதமாக இன்னொரு கையெழுத்து போடுவார். அவ்வளவுதான். இதனால் உங்கள் விஷயம் சில நாட்கள் தாமதப்படும். பொறுத்துக்கொள்ளுங்கள்” என்றார் பழைய நிலைய அதிகாரி.


பொறுத்துக்கொண்டேன். ஒரு மாதத்திற்குப் பிறகு பாஸ்போர்ட் ரினியூவல் செய்யப்பட்டு வந்துசேர்ந்தது!


(கதை இத்துடன் முடியவில்லை. நாளை தொடரும்.)


-இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.



13 கருத்துகள்:

  1. காத்திருக்கிறேன்.ravi.vidhula@gmail.com

    பதிலளிநீக்கு
  2. சார் இதே போன்ற பாஸ்போர்ட் அனுபவங்கள் இந்த அளவு இல்லை என்றாலும் கொஞ்சம் உண்டு. நம் சிஸ்டத்திலும் நடைமுறைப் பிரச்சனைகள் நிறைய இருக்கின்றன. இன்னும் எளிதாக்கலாம். இனிமேல் பாஸ்போர்ட்டை முகவரிச் சான்றிற்குப் பயன்படுத்த முடியாதாமே.

    கீதா

    பதிலளிநீக்கு
  3. கு.மா.பா.திருநாவுக்கரசு1 மே, 2022 அன்று 12:40 AM

    கடவுச்சீட்டு அல்லவா? அது சற்றுக் காலங்கடந்து தான் வரும்.

    பதிலளிநீக்கு
  4. கு.மா.பா.திருநாவுக்கரசு1 மே, 2022 அன்று 12:43 AM

    கடவுச்சீட்டு அல்லவா? கடந்தகால விவரங்களைக் கண்டு ஆய்ந்து சற்றுக் காலங்கடந்தே வரும்.

    பதிலளிநீக்கு
  5. இப்போதெல்லாம் பாஸ்போர்ட் எடுப்பது என்பது மிகவும் எளிதாக ஆகி விட்டது..கணிணி வந்த காரணத்தால்.

    பதிலளிநீக்கு
  6. நமக்கு என்று வரும்போது எல்லாம் மர்பி விதி மாதிரிதான் நடக்கும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மர்பி என்றதும் வாயில் விரல்வைத்த சுருள்முடிக் குழந்தைதான் நினைவுக்கு வருகிறது.

      நீக்கு
  7. இராமசுப்பிரமணியன்1 மே, 2022 அன்று 10:29 AM

    பாச சங்கிலியா,பாச(கிலி)யா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாசம் என்பதே ஒரு சங்கிலிதான். பாசக்கயிறு வரும் வரைக்கும்!

      நீக்கு
  8. என்னுடைய பாஸ்போர்ட் ரினியூவல் அனுபவம் ஒரு அலாதி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதைப் பற்றித் "தம்பட்டம்" அடிக்கலாமே! (அதாவது உங்கள் 'தம்பட்டம்' பிளாகில் எழுதலாமே என்று சொன்னேன்!)

      நீக்கு
  9. நிறைய மாற்றங்கள் வந்து விட்டன என்றாலும் இன்னமும் நிறைய மாற்றங்கள் செய்யலாம். செய்து கொண்டு இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு