திங்கள், மார்ச் 10, 2014

சினிமா நடிகைகள் பற்றி எதுவும் இல்லாத ஒரு பதிவு ( ‘அபுசி-தொபசி’-33)

(“அபுசி-தொபசி” என்ற இப்பகுதி வாரம் இருமுறையாக, ஒவ்வொரு திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும் இந்திய நேரம் காலை ஆறுமணிக்கு மேல் ஏழரை மணிக்குள்ளாகவோ அல்லது அதற்கும் முன்பாகவோ வெளியாகும்.)

அரசியல்  

அரசியல் கட்சிகளின் சாதிப் பார்வை
 (அகநாழிகை இதழ் 7-இல் ஸ்டாலின் ராஜாங்கம் வழங்கிய பேட்டியிலிருந்து)

“தி.க., தி.மு.க. போன்ற கட்சிகள் பா.ம.க. மீது கோபம் கொண்டிருப்பது கருத்தியல் சார்ந்து அல்ல. பா.ம.க.வும் திராவிடக் கட்சிகளும் வேறுபட்டிருப்பது போலத் தெரிவது வெறும் தோற்றமே. பா.ம.க. தலைமையிலான சாதி வாக்குகள் தமக்குச் சாதகமாக அமையுமானால் திராவிடக் கட்சிகள் அதை மறுக்கப் போவதில்லை. பா.ம.க. திராவிடக் கட்சிகளைத் தாக்குகிறது என்னும் கோபம் கொண்டுள்ள அவர்கள் அதன் தலித் விரோதப் போக்கு மீது திட்ட வட்டமான கோபம் பாராட்டுபவர்களாக இல்லை.

"தமிழகத்தின் எல்லாப் பிரச்சினைகள் மீதும் முந்தியும் வலிந்தும் வந்து கருத்து சொல்லும் கருணாநிதி, மரக்காணம் வன்முறைக்குப் பின்னரான இராமதாஸ் கைது, பா.ம.க.வினரின் வன்முறைகள் தமிழகத்தின் பெரும்பகுதி முடக்கப்பட்ட நிலையிலும் அதைப் பற்றிக் கருத்துச் சொல்லாமல் மௌனம் காத்தார். எல்லாம் நடந்துவிட்ட பிறகு, பொறுத்திருந்து, நிலைமையின் சாதக பாதகம் கருதி அதில் கருத்துக் கூறுவது திராவிடக் கட்சிகளின் வழக்கமான நடைமுறை. இதே போலத்தான் மரக்காணம் வன்முறைக்குக் கண்டனம் தெரிவித்த எல்லாக் கட்சிகளும் திருமா சென்று பார்த்த பின்னால்தான் அறிக்கை விட்டன என்பதையும் மறக்க முடியாது.

தருமபுரி வன்முறையின்போது கூட எல்லாம் நடந்து இருபது நாட்கள் கழித்து உள்ளூர் தி.மு.க. பிரமுகர்களை வைத்து ஒரு குழுவை அனுப்பினார் கருணாநிதி. அதேபோல இராமதாஸ் கைது பற்றித் தமிழகத்தின் எந்தத் தலைவர்களும் பேசாதிருந்த சூழ்நிலையில் அவரை விடுதலை செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை முதலில் கருணாநிதிதான் எழுப்பினார். இதில் அவர் கூறியது போல, மனிதாபிமானம் என்பதெல்லாம் ஒரு சாக்குதான். இதில் அவர்களின் கணக்கு சாதி வாக்குகள் மட்டுமே. அதாவது, வன்னியர்களின் கோபம் ஜெயலலிதா மீது திரும்புகிறது என்ற நிலையில் யாருக்கும் பாதிப்பில்லாதவகையில் கருணாநிதி ஓர் அறிக்கை வெளியிடுகிறார். தேர்தல் சார்ந்து செயல்படுகின்ற கட்சிகளாக இருந்தாலும் சாதி பற்றிய பார்வை குறித்து ஆக்கபூர்வமான விமர்சனங்கள் இருந்தாலும் கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் இந்தப் போக்கு இல்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்”.

(ஸ்டாலின் ராசாங்கம் எனது வடஆர்க்காடு மாவட்டத்தில் பிறந்தவர். தமிழ்ச் சமூக வரலாற்று ஆய்வாளர் மற்றும் களச் செயற்பாட்டாளர். தலித்துகள் பற்றிய தீர்க்கமான பார்வையை வெளிப்படுத்தும் இவரது நூல்களாவன: ‘சனநாயகமற்ற சனநாயகம்’, ‘தீண்டப்படாத நூல்கள்’, ‘ஆரிய உதடும் உனது- திராவிட உதடும் உனது’, ‘சாதீயம்: கைகூடாத நீதி’ போன்றவை. மதுரை அமெரிக்கன் கல்லூரியின் தமிழ்த்துறையில்  விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார்.)

புத்தகம்

சனிக்கிழமை (8-3-2014) அன்று டிஸ்கவரி புத்தகக் கடையில் வேல் கண்ணனின் ‘இசைக்காத இசைக்குறிப்பு’ என்ற கவிதை நூலின் விமர்சனக் கூட்டம் நடந்தது. கதிர்பாரதி, அமிர்தம் சூர்யா, அய்யப்ப மாதவன், நிஜந்தன், ஜெ.டி.ஆர்., பொன்.வாசுதேவன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.  


வேல் கண்ணன், கண்ணாடி அணிந்த உயரமான இளைஞர். இந்த நூலில் உள்ளது போன்ற எளிமையான கவிதை வழங்கலைத் தொடர்ந்து  கடைபிடித்தால் இன்னும் உயரமாவார் எனபது உறுதி. 64 பக்கம், அறுபது ரூபாய். தெளிவான அச்சு. திருவண்ணாமலை வம்சி புக்ஸ் வெளியீடு. அரங்கிலேயே படித்து முடித்துவிட்டேன். அமிர்தம் சூர்யா வழக்கம்போல அற்புதமான, ஆழமான இலக்கிய உரை நிகழ்த்தினார். கதிர்பாரதி எழுதிவந்து படித்தார். சற்று நிதானமாகப் படித்திருக்கவேண்டும் என்று தோன்றியது. பிறகு வந்த கவிதைக்காரன் இளங்கோ சற்றே நீளமான உரை நிகழ்த்திவிட்டார். நேரம் கடைபிடித்தல் பேச்சாளர்களுக்கு முக்கியம். நான் இறுதிவரை இருக்கமுடியாமல் போய்விட்டது.

வேல் கண்ணனின் எழுத்து, அனாவசியமான படிமங்கள், சிதைக்கப்பட்ட வாக்கிய அமைப்புகள், மூளையைக் குழப்பிக் கவிதையையே வெறுப்படையச் செய்யும் உட்கருத்துக்கள் இல்லாமல் கிராமத்து பம்புசெட்டில் குளிக்கும்போது வந்து விழும் சரிவேகத் தண்ணீர் மாதிரி அமைதியானது. சில எடுத்துக்காட்டுகள்:

மௌன புரிதல் (பக்.12)
உனக்கும் எனக்கும் பொதுவானவை
மௌனம்.
இருப்பினும்
நீ
மௌனித்த வேளைகள்
என்னைக் கலவரப்படுத்துகிறது.
நான்
மௌனித்த வேளைகள்
உன்னை சந்தேகிக்கவைக்கிறது.

ரகசிய அழைப்பு(பக்.22)
 பிறிதொரு ரகசிய அழைப்பு வரும்வரை
உன் ஞாபகப் பிசுபிசுப்பில் கடந்துபோகும்
எனக்கான இரவுகள்.

நினைவோட்டம் (பக்.37)
 கரையோரத்து மணலை
இருகைகளால் அள்ளி
மூடினேன்.
மூடிய கைகளுக்குள்
குறுகுறுத்து
ஓடிக்கொண்டிருக்கிறது
நதி.

999 ஆணுறைகள்(பக்.45)
வீதியோரம் நின்றிருந்த தசரதன்
தன்னிடம் வகை ரீதியாக 1000 பெண்கள்
இருப்பதாகக் கூறினான்.
இடவசதி தானே அமைத்துக் கொடுப்பதாகவும்
பணத்துடன் ஆணுறையும் சொந்தமாக
கொண்டுவரச் சொன்னான்.
999 ஆணுறைகள் மற்றும் இந்தக் கேள்வியுடனும்
சென்றுகொண்டு இருக்கின்றேன்.

ஆயிரத்துக்கு ஒன்று குறைகிறதே  என்ற கேள்விக்கு வேல்கண்ணன் தன் அடுத்த கவிதைநூலில் விடையளிக்ககூடும். வாங்கிப் படிக்கலாம். முன்னுக்கு வரவேண்டிய கவிஞர்.

சினிமா & தொலைக்காட்சி : (மன்னிக்கவும், பார்க்க நேரமில்லை!)

பத்திரிகை
அறுபதுகளில், மேடைகளில் மணிக்கணக்காக அரசியல் பேசும் திறமையுள்ளவர்களை நல்ல மேய்ப்பர்களாகக் கருதி அவர்கள் பின்னே ஓடும் ஆடுகளாய் ( என் போன்ற) மக்கள் இருந்தார்கள். மாலை ஆறுமணிக்குப் பொதுக்கூட்டம் என்றால் ஐந்துமணிக்கே ஆஜராகிவிடுவேன். ஆனால் பேச்சாளர் எப்போது வருவார் என்று தெரியாது. முதலில் திரைப்படப் பாடல்களை அசுர ஒலியில் வெளிப்படுத்தி அசரவைப்பார்கள். பிறகு குட்டித் தலைவர்கள் கிரேக்க ரோமானியக் கதைகளைக் காமரசம் ததும்ப வருணிப்பார்கள். அதில் ஒருமணிநேரம் போகும். அப்போதும் பேச்சாளர் வந்துவிடமாட்டார். பிறகு யாராவது மேடையில் ஏறி இலக்கியம் பற்றிப் பேசுவார்கள். பெரும்பாலும் ‘செம்புலப்பெயல் நீர்போல’ அல்லது ‘முளிதயிர் பிசை இய காந்தள் மெல்விரல்’  என்ற இரண்டு பாடல்களைத்தான் விவரிப்பார்கள். வேறு பாடல்களை அவர்கள் படிக்கவேண்டிய அவசியம் இருக்கவில்லை போலும். பின்னர் இன்னும் யாராவது பேச்சாளர்- பெரும்பாலும் ஒரு கல்லூரி மாணவர்- மேடைக்கு வருவார். ’ஆனால்’ என்ற தலைப்பில் இரண்டுமணிநேரம் பேசினார் எங்கள் தலைவர் என்று அவர் பேசியதை மீண்டும் ஒப்பித்துக் கைதட்டல் பெறுவார். அதில் இன்னொரு மணிநேரம் போகும். மேலும் இரண்டு மூன்று இரண்டாம் கட்டத்தலைவர்கள் பேசி இரண்டுமணி நேரத்தைக் கழிப்பர். அப்போதும் பேச்சாளர் வந்துவிட மாட்டார். கடைசியாக இன்னொருவர் வந்து மைக்கைப் பிடுங்கி அறிவிப்பார்--- “தலைவர் வருகிறார், வருகிறார், வந்துகொண்டே இருக்கிறார்...இதோ அரக்கோணத்தைத் தாண்டிவிட்டார்...இதோ காஞ்சிபுரம் தாண்டிவிட்டார்...இதோ வாலாஜாவை நெருங்கிக் கொண்டிருக்கிறார்..... இன்னும் கால்மணி நேரத்தில் வந்துவிடுவார்..” என்று, அவர் வரும்வரையில் மைக்கை யாருக்கும் கொடுக்காமல் தானே பிடித்திருப்பார். உண்மையில் அந்தப் பேச்சாளர்/தலைவர் மேடைக்கு வந்துசேரும்போது இரவு பதினோருமணி ஆகிவிடும். விஷயம் என்னவென்றால், இரவு ஏழுமணிக்குத்தான் சென்னையிலிருந்தே அவர் கிளம்பியிருப்பார்!

பார்க்கும்போதெல்லாம் ‘இதோ வந்துவிடும், இன்னும் ஒரு வாரத்தில் வந்துவிடும்’ என்றே சொல்லிக்கொண்டிருப்பார் பொன்.வாசுதேவன். திடீரென்று ஒருநாள் மேல் அட்டையை வெளியிட்டு அசத்துவார். சரி, வாங்கலாம் என்று போனால், இப்போதுதான் அச்சுக்குப் போயிருக்கிறது என்பார். ஒருவழியாக இந்த வாரம் கொண்டுவந்துவிட்டார். ‘அகநாழிகை’ இலக்கிய இதழைத்தான் சொல்கிறேன்!


புதுடில்லியிலிருந்து சாகித்ய அக்காதெமி ‘இந்தியன் லிடரேச்சர்’ என்ற காலாண்டிதழை நடத்திவந்தது. புத்தக வடிவிலேயே வரும். 100 – 200 பக்கங்கள் இருக்கும். படித்தபிறகு அப்படியே பாதுகாக்கத்தோன்றும். விளம்பரங்கள் இருக்காது. அதேபோன்ற வடிவத்தில், அதேபோன்ற உயர்ந்த உள்ளடக்கத்துடன் வாசு கொண்டுவந்திருக்கிறார். அரசியல், கலை, இலக்கியம், சமூகவியல், கவிதை, ஆளுமைகளின் பேட்டிகள் எனப் பல்வகைப்பட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. 160 பக்கம். உயர்ந்த தாளில் அழகான அச்சு. எனவே விலை ரூபாய் நூற்றி இருபது. (இந்த விலைக்குச் சென்னையில் நல்ல உணவகங்களில் ஒருவேளை சாப்பாடு கூடக் கிடைக்காது!)

இந்த இதழில் என்னைக் கவர்ந்தவை, ஸ்டாலின் ராஜாங்கத்தின் பேட்டியும் (இங்கு ‘அரசியல்’ பகுதியில் படித்தீர்களே!), பெரியாரின் பெண்ணியச் சிந்தனைக் குழப்பத்தைத் தோலுரித்துக் காட்டும் தி. பரமேஸ்வரியின் கட்டுரையும்,  கடல்சார்ந்த எழுத்தாளர் ஜோ.டி. குரூஸ் பேட்டியும் ஆகும். 

ஆழிசூழ் உலகு’ ‘கொற்கை’ என்ற இரண்டு நாவல்கள் மூலம் புகழ்பெற்றவர் குரூஸ். மீனவச் சமுதாயத்திற்குள்ளிருந்தே மீனவர்கள் வாழ்வியலைப் பற்றி எழுதிய முதல் எழுத்தாளர் இவர். பேச்சுவழக்கில் உள்ள வார்த்தைகளைக் கையாண்டு இவர் எழுதிய வரிகள் சிலரால் ஆட்சேபிக்கப்பட்டு இவர்மீது வன்முறை பிரயோகிக்கப்படும் அளவுக்குப் போனதாம். இப்பேட்டியிலிருந்து ஒரு பகுதி:

கேள்வி:   ‘ஆழிசூழ் உலகு’ ‘கொற்கை’ என்ற இரண்டு நூல்களிலும்  காலமும், மரணமும் புத்தகம் முழுவதும் பேசப்பட்டுக்கொண்டே இருக்கிறது...

ஜோ.டி. குரூஸ் பதில்: மரணம் வரை காமம் இருந்துகொண்டேதான் இருக்கிறது. மரணம் வரும்வரை காமம் விளையாடிக்கொண்டுதான் இருக்கிறது. வயதாகி விட்டது நான் அதை விட்டுவிட்டேன் என்று யாராவது கூறினால், அவன் பொய்தான் கூறுகிறான் எனலாம். காமம் என்பது விட்டுப்போகக்கூடிய ஒரு உணர்ச்சி அல்ல. காலம் இருக்கும்வரை அது தொடர்ந்துகொண்டே இருக்கும். காமத்தினுடைய செய்கைகள் முடியாமல் போகலாம். ஆனால் வக்கிரமான சிந்தனைகள் வரக்கூடாது என்பதில்லை. மரணம்தான் காமத்திலிருந்து விடுவிக்கக்கூடியது என்பது என்னுடைய எண்ணம்.

(அரவிந்தரின் ‘சாவித்திரி’ காவியத்தில், யமன், சாவித்திரியிடம் பேசும்போது இதே கருத்தைக் கூறுவது என் நினைவுக்கு வந்தது. நேரமிருக்கும்போது குரூஸ் அதைப் படிக்கலாம்.)

கேள்வி: (உங்களுக்கு முன்) வேறு யாரேனும் இவ்வகையான (மீனவர் சமூகவியல் குறித்து) படைப்பாக்கங்களைத் தந்திருக்கிறார்களா?

ஜோ.டி. குரூஸ் பதில்: கண்டிப்பாக. வலம்புரி ஜான் அவர்கள் உவரியிலிருந்து வந்தவர். எங்கள் வீட்டிலிருந்து இரண்டு அல்லது மூன்று வீடுகளுக்கு அப்பால் வசித்தவர். நீர்க்காகங்கள், ஒரு ஊரின் கதை என்று மீனவர்களைப் பற்றித்தான் எழுதினார். ஆனால் 30, 40 பக்கம் எழுதவேண்டுமென்று இருந்திருக்கும்போல. நாவலாகப் படைக்கவில்லையாயினும் நெய்தல் சார்ந்து அவருடைய பங்களிப்பு இருந்தது. இருப்பினும் அவை பரவலாக வெளியுலகிற்கு அறிமுகம் ஆகவில்லை. ஆனால், முன்னோடி என்றால் வலம்புரி ஜான்தான்.


(வலம்புரி ஜான், திராவிடக் கட்சிகளின் அரசியல் ஆட்டத்தில் தன்னை இழந்துபோனவர். அவரின் ‘சீனம் சிவப்பானது ஏன்’ போன்ற நூல்களை மாணவர்கள் கட்டாயம் படிக்கவேண்டும். அடுக்குமொழியில்  பேசிக்கொண்டிருந்த ஆரம்பகால திராவிட எழுத்துக்கும், பிறகுவந்த வெகுஜனப் பத்திரிகை எழுத்துக்கும் இடைப்பட்ட சுயசிந்தனையுள்ள எழுத்து வலம்புரிஜானுடையது. ‘தாய்’ பத்திரிகையில் அவர் பணிபுரிந்தபோதும், ஜெயலிதா அம்மையாருக்குப் பாராளுமன்றத்தில் ஆசானாக அவரை எம்.ஜி.ஆர். நியமித்தபோதும், அவரை அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு, நான் சார்ந்திருந்த வங்கியின் அலுவலால் வாய்த்தது. அலுவல் விஷயங்களில் வாக்குறுதிகளை நிறைவேற்றமுடியாமல் எங்களைச் சிக்கலில் மாட்டிவிட்ட வலி இன்னும் இருக்கிறது. ஆனால் அவரின் எழுத்துத் திறமையை யாரும் குறைத்து மதிப்பிடவேண்டியதில்லை. ஏராளமான புத்தகங்கள் எழுதியிருக்கிறார். பின்னாளில் நக்கீரனில் ஜெ. யுடனான தனது  அனுபவங்களைக் தொடராக  அவர் எழுதியதைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். பெயர் மறந்துவிட்டது. நக்கீரனில் புத்தகமாகக் கிடைக்கிறது. திராவிட அரசியல்-வரலாற்று-இலக்கியத்தில் அது ஓர் அழிக்கமுடியாத நூல்.)

சிரிப்பு
அந்தக் காலத்தில் மண்ணில் விளையாடும் குழந்தைகளுக்குச் சிரங்கு என்ற நோய் வரும். கை, கால்கள் புண்ணாகும். அரிப்பு ஏற்படும். சொரிந்துகொண்டே இருக்கவேண்டும். பெற்றோர்கள் அக்குழந்தைகளைத் தூக்கிவைத்துக்கொள்வதால் அவர்களுக்கும் சிரங்கு வரும். எனவே, குழந்தைக்குச் சொரிந்துவிட்டுத் தானும் சொரிந்துகொள்ள நேரிடும். தொற்றுநோய் என்பதால் ஒரு வீட்டில் ஒருவருக்கு வந்தால் எல்லாருக்கும் வந்துதான் போகும். தாத்தா பாட்டி முதல் கைகுழந்தை வரை இவர்கள் சொரிந்துகொள்ளும் அழகு(!) பார்க்கவேண்டுமே!

கவிஞர்கள் எதைப் பற்றி வேண்டுமானாலும் பாடுவார்கள். தமக்கு வரும் நோய்களையா பாடமாட்டார்கள்? ஒரு கவிஞர் இப்படித்தான் தனக்கு வந்த சிரங்கு நோய் பற்றிப் பாடுகிறார். முருகனை வேண்டுகிறார். என்னவென்று? சொரிந்துகொள்ள இன்னும் இரண்டு கைகள் தரக்கூடாதா என்று!

“செந்தில் குமரா! திருமால் மருகா! என்
சிந்தை குடிகொண்ட தேசிகா! – நொந்த இம்
மெய்யிற் சிரங்கை விடியுமட்டும் சொரியக்
கையிரண்டும் போதாது காண்!”

இந்தக் கவிஞரின் பெயர் தேசிக விநாயகம் பிள்ளை. குழந்தைகளுக்காக ‘மலரும் மாலையும்’ என்ற கவிதைநூலைப் படைத்தவர்.  மாமியார்களின் கொடுமைகளைப் பற்றி மருமக்கள் கூறுவதாக அமைந்த ‘மருமக்கள் வழி மான்மியம்’ என்ற நூலும் தந்தவர். இந்த நூல் கொடுத்த உத்வேகத்தில்தான் பாரதிதாசன் ‘குடும்ப விளக்கு’ உருவாக்கினார் என்பர்.



(தினமணி- ஞாயிறு- இதழில் நடுப்பக்கம் வரும் ‘தமிழ்மணி’யில் ‘தமிழ்ச்செல்வங்கள்’ என்ற தலைப்பில் தொடர் கட்டுரை எழுதும் புலவர் இரா.இளங்குமரன் அவர்களால்  9-3-2014  இதழில் எடுத்துக்காட்டப்பட்ட பாடல். அவருக்கு நன்றி!)

குறிப்பு: இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், கீழுள்ள ‘தமிழ்மணம்’ பட்டையில் இடதுபுறமுள்ள ‘மேல்நோக்கிய கட்டைவிரல்’ அடையாளத்தின்மீது ஒரு கிளிக் செய்யுங்கள்.நன்றி.
 © Y Chellappa

37 கருத்துகள்:

  1. தேசிக விநாயகம் பிள்ளையின் கவிதை அருமை
    த,ம.2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம் பிள்ளைகளுக்காகத் தேசிக விநாயகம் 'பிள்ளை' எழுதிய பாடல்களை யார் மறக்க இயலும்? தங்கள் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  2. எல்லாமே அருமை! நல்ல பகிர்வுகள்! வேல்கண்ணன் கவிதைகள் அற்புதம்! அதுவும் தசரதன் கவிதை....999 அப்படியென்றால் 1000 ல் கௌசல்யா, கைகேயி, சுமத்திரா எல்லாம் அடக்கமில்லையோ?

    கவிமணி எங்கள் ஊர் காரர் ஆயிற்றே! - கீதா

    த.ம.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விட்டால் தமிழ்நாடு முழுவதையுமே பாலக்காட்டிற்குக் கடத்திக்கொண்டு போய்விடுவீர்கள் போலிருக்கிறதே! அவர் உங்கள் ஊர்க்காரராகவே இருக்கட்டும், ஆனால் எல்லாத் தமிழர்களுக்கும் சொந்தமானவர் என்று கொள்ளலாம் அல்லவா? தவறாமல் வருகைதரும் தங்கள் ஒழுங்குமுறை மகிழ்ச்சி தருகிறது.

      நீக்கு
    2. நன்றி துளசிதரன்
      நன்றி செல்லப்பா அவர்களே

      நீக்கு
  3. ஒருவேளை சாப்பாடு உட்பட நல்ல விமர்சனம் ஐயா... நன்றி...

    சிரிப்பு செம...!

    கவிஞர் வேல்கண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  4. எல்லாமே அருமை. வேல் கண்ணனின் கவிதைத் துளிகளை ரசிக்க முடிந்தது.

    பதிலளிநீக்கு
  5. வேல்கண்ணன் என்ற பெயரில் கவிதை எழுதுபவர் இருப்பதை உங்கள் பதிவின் மூலமே அறிந்தேன். அருமையான தொகுப்புக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவருக்கு நிறைய நண்பர்கள் இருப்பதை அந்தக் கூட்டத்தில் அறிந்தேன். அதற்கு வெளியே அவரை இன்னும் நிறைய பேர்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என்றே அவரைப் பற்றி எழுதினேன். தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே!

      நீக்கு
  6. தசரதனுக்கு அறுபதினாயிரம் மனைவியர் என்பதை எங்கே, யார் சொன்னார்கள் எனத் தெரியவில்லை. எல்லாருமே அதை நிஜம் என நம்பிக் கொண்டிருக்கின்றனர். :))))

    வால்மீகி எழுதியதன் படி அவன் அந்தப்புரம் அறுபதினாயிரம் பெண்களால் நிறைந்து இருந்தது என்பதே. இதன் அர்த்தம் அறுபதினாயிரம் பேரும் மனைவியர் என்ற பொருள் அல்ல. இவ்வளவு பெண்களையும் வைத்துப் பராமரித்தான் என்றே பொருள். இவர்களில் சேடிப் பெண்கள், அரண்மனையின் பல பாகங்களிலும் வேலை செய்பவர்கள், முந்தைய ராஜாக்களின் பட்டமஹிஷிகள், அவர்களின் பெண்கள், மருமகள்கள், பெண் குழந்தைகள் என அனைவரும் அடங்குவார்கள். :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வதை வேல்கண்ணனும் நாநும் ஏற்றுக்கொள்ளலாம் என்றே தோன்றுகிறது. வேல்கண்ணன், உரிய முன்ஜாக்கிரதையோடுதான் 999 என்ற எண்ணைப் பயன்படுத்தியிருக்கிறார். அறுபதினாயிரத்தில் ஒரே ஒரு ஆயிரம் பேராவது மனைவிகளாக இருந்திருக்க மாட்டார்களா? (2) அபிதான சிந்தாமணி-பக்கம் 769இல் 'தசரதன்' என்ற பெயருக்கு விளக்கம் அளிக்கும்போது ஆசிரியர் கூறுவது: அவன் 60,000 ஆண்டுகள் உயிர் வாழ்ந்தான் என்பதே. அவனுக்கு அதே எண்ணிக்கையில் மனைவியர் இருந்ததாகச் சொல்லவில்லை. (3) இனிமேல் எதை எழுதும்போதும் குறைகள் ஏதும் உங்கள் கண்ணில் பட்டுவிடாதபடி எழுதவேண்டும் என்பவதை வேல்கண்ணன் புரிந்துகொள்வாராக!

      நீக்கு
    2. ஹாஹாஹா, செல்லப்பா சார், நல்லாச் சிரிக்க வைச்சீங்க. ஆனாலும் பாருங்க, ஆயிரம் மனைவியர் என்பதெல்லாம் டூ மச் கூட இல்லை. த்ரீ, ஃபோர் மச். ஆயிரம் மனைவியர் என்று அப்படி எல்லாம் இல்லை ஐயா. தசரதனுக்கு மூன்று மனைவியர். அவ்வளவே! :))))))

      நீக்கு
    3. நன்றி நண்பர் கீதா சாம்பசிவம்
      நன்றி ஐயா செல்லப்பா அவர்களுக்கும்.

      நீக்கு
  7. அப்படியே ஆகட்டும் அம்மணி! அந்த மூன்றில், மூன்றாவது வெறும் அசமஞ்சம். அதனால் தசரதனுக்கு எந்தக் கவலையுமில்லை. இரண்டாவது ஆடிய ஆட்டம் இருக்கிறதே, ராமனையே காட்டுக்கு அனுப்பிவிட்டதே! தசரதனின் உயிரையே எடுத்துவிட்டதே! ஆக, தசரதன் காடும் வழி என்னவென்றால், ஒரு மனிதனுக்கு இரண்டு மனைவிகள் என்பதே தாள முடியாத துயரத்தைக் கொடுக்கும் என்பதுதான்! ஆகவே, மரியாதையாக எல்லா ஆண்களும் ஒரே ஒரு மனைவி போதும் என்று திருபதி அடைவார்களாக!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை. மூன்றாமவளே தேர்ந்த ஞானி. எதற்கும் கலக்கமடையா உள்ளம் உள்ளவள். பற்றறுத்தவள். கைகேயியால் துன்பப் பட்ட தசரதன் தான் ஆறுதல் அடையத் தன்னை அவளுடைய அந்தப்புரத்துக்கே தூக்கிச் செல்லுமாறு கேட்டுக் கொள்வான். :))))))

      ஆண் குழந்தைக்காக, வாரிசுக்காக அரசர்கள் பல தார மணம் புரிவது சகஜமே. அவ்வகையிலேயே தசரதன் மூன்று பேரை மணக்க நேரிட்டது. பிறந்த ஒரே பெண் சாந்தலையையும் தத்துக் கொடுக்குமாறு சொல்ல தன் நெருங்கிய நண்பன் ஆன அங்க தேசத்து மன்னனுக்கு அவளை தத்துக் கொடுக்கிறான். இவளைத் தான் ரிஷ்யச்ருங்கருக்குத் திருமணம் செய்து வைப்பார்கள்.

      நீக்கு
    2. விட்டால், இங்கேயே ராமாயணத்தை எழுத ஆரம்பிச்சுடுவேன் போல! :)))) "எஸ்" ஆகிக்கறேன். :))))

      நீக்கு
    3. உங்களிடமிருந்து எப்படி தப்பித்து வருவது என்று தெரியவில்லை. என்னை விட்டு விடுங்கள் ப்ளீஸ் !

      நீக்கு
    4. ஹிஹிஹி, ரொம்ப பயமுறுத்திட்டேனோ? அதான் நானே "எஸ்"கேப் ஆவதாக எழுதிட்டேனே!:))))))

      நீக்கு
    5. ஆரோக்கியமான விவாதத்தற்கு என் கவிதை காரணம் என்பதுமகிழ்வை தருகிறது நண்பர்களே. நன்றி. எனது அன்பு வணக்கங்களும் நன்றியும்.
      //எளிமையான கவிதை வழங்கலைத் தொடர்ந்து கடைபிடித்தால் இன்னும் உயரமாவார் எனபது உறுதி.//
      //முன்னுக்கு வரவேண்டிய கவிஞர்.// இந்த வார்த்தைகள் என் படைப்புக்கு கிடைத்த "ஆகக் பெரும் ஊக்கங்கள்".
      எனது அடுத்த நகர்த்தலுக்கு இவைகள் வழி வகுக்கும். நன்றி

      நீக்கு
  8. #ஆயிரத்துக்கு ஒன்று குறைகிறதே என்ற கேள்விக்கு வேல்கண்ணன் தன் அடுத்த கவிதைநூலில் விடையளிக்ககூடும்.#
    ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ ன்னுஅ வர் யாரைப் பார்த்து பாடினார்என்ற விபரம் தெரிந்து கொள்ள எனக்கும் ஆசையாய் இருக்கிறது !
    த ம 5

    பதிலளிநீக்கு
  9. * இன்று எல்லாமே இதழ்கள் பற்றியதாகவே அமைந்துள்ளனவே! எனினும் சுவையாய் இருக்கின்றன.

    * வேல்கண்ணன் அவர்கள் இன்னும் சிறப்புற எனது நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  10. அனைத்துப்பதிவுகளும் வழக்கம்போல் அருமையாக உள்ளது. வலம்புரிஜானைப் பற்றிய மற்றொரு பார்வை தங்களின் பதிவு மூலமாகக் கிடைத்தது. நன்றி.

    பதிலளிநீக்கு

  11. நண்பர்களுக்காக அந்த கவிதை
    பதிவில் 'பதிலி'என்றும் (மலைகள்.காம் வெளியானது)
    தொகுப்பில் 999 ஆணுறைகள் என்ற தலைப்பிலும் வெளி வந்தது.
    முழு கவிதை வாசிக்கும் போது முழுமையான புரிதல் ஏற்படும் என்று நம்புகிறேன்.

    999 ஆணுறைகள்
    -------------------------------

    ஆழிப் பெருங்காற்றில்
    அணையாமல் காத்து இருக்கிறேன்.
    அத்தனை கண்ணீ ர் துளியிலும்
    நனையாமல் பார்த்துக் கொள்கிறேன்.
    யாரும் அறியாமல் அவ்வளவு ஆழத்தில்
    ஒளித்து வைத்திருக்கிறேன்.

    தோன்றிய நாளிலிருந்து
    தொடர்ந்திருக்க வேண்டும்.
    இப்போது என் முறை.
    பல யுகங்கள், எல்லையற்ற
    பதில்களை
    தின்றும் தீராத இந்தக்கேள்வி.

    வீதியோரம் நின்றிருந்த தசரதன்
    தன்னிடம் வகை ரீதியாக 1000 பெண்கள்
    இருப்பதாக கூறினான்.
    இட வசதி தானே அமைத்து கொடுப்பதாகவும்
    பணத்துடன் ஆணுறையும் சொந்தமாக
    கொண்டு வரச்சொன்னான்.
    999 ஆணுறைகள் மற்றும் இந்த கேள்வியுடனும்
    சென்று கொண்டு இருக்கின்றேன்.

    நன்றி : மலைகள்.காம்

    My blogspot : http://rvelkannan.blogspot.in/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே! காலம் காலமாகத் தொடர்ந்துவரும் கேள்வி. தொலையாது வரும் உணர்ச்சியின் வெளிப்பாடு. அது உங்கள் கவிதையில் தெறிக்கிறது. முழுக்கவிதையையும் வாசிப்பது எப்போதுமே நல்லதுதான். நிச்சயம் பலர் வாசிக்கக்கூடும். அப்படித் தூண்டிவிடுவதுதான் என்னுடைய நோக்கமே!

      நீக்கு
  12. ஒரு மாதத்துக்கு தேத்த வேண்டிய அத்தனை அற்புதமான சங்கதிகளையும் ஒரே பதிவில் இட்டு, பத்து வகை கறிக் கூட்டோடு தலைவாழை இலைச் சாப்பாட்டோடு பறிமாறிய பதிவு. வேல்மணியின் கவிதைகள், தேசிக விநாயகம் பிள்ளையின் பாடல் மிக அருமை.

    அகநாழிகை இதழை வெளிநாட்டில் உள்ளவர்கள் எவ்வாறு பெற்றுக் கொள்வது ? இயன்றால் தகவல் கூறுங்கள் ஐயா..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பான பதிவூட்டத்திற்கு நன்றி நண்பரே! வெளிநாட்டில் உள்ளவர்கள் www.magzter.com/aganazhigai என்ற தளத்தில் பணம் செலுத்தி வாசிக்கலாம்.

      நீக்கு
  13. சுவாரசியமான பகிர்வும் கருத்துரைகளும் கண்டு மகிழ்ந்தேன்
    வேல் கண்ணன் அவர்களின் கவிதைகள் மென்மேலும் சிறந்து
    விளங்கவும் இப் பகிர்வைத் தந்த தங்களுக்கும் என் மனமார்ந்த
    வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .

    பதிலளிநீக்கு