பாஸ்போர்ட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாஸ்போர்ட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, மே 01, 2022

பாஸ்போர்ட் என்னும் பாசச் சங்கிலி-2 (தொடர்ச்சி)

 பாஸ்போர்ட்  என்னும்  பாசச் சங்கிலி-2 (தொடர்ச்சி)

இன்று கிழமை சனி  -3


அமெரிக்காவில் 19ஆவது நாள் 


(பெங்களூர் எக்ஸ்பிரஸ்)

இதன் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

அடுத்த முறை என்னுடைய பாஸ்போர்ட் ரினிவல் செய்வதற்காக முயற்சித்தபோது இதுவரை அனுபவித்த எந்தத் தொல்லையும் எனக்கு ஏற்படவில்லை.  காரணம் பாஸ்போர்ட் அலுவலகத்தின்  மொத்தப் பணிகளும் டிசிஎஸ் என்ற ஐடி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதே. மூத்த குடிமகன் என்பதால் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு நேரில் போகவேண்டிய வேலையும் இல்லை. ஆன்லைனில் விண்ணப்பம் அனுப்பிவைத்த ஒரே வாரத்தில் புதிய பாஸ்போர்ட் வந்துவிட்டது. கணினி மயமாக்கலின் பலனை இந்தியக் குடிமகன் முழுமையாக அனுபவிக்கும் வேளை இப்போது வந்துவிட்டது.


கார்க் கண்ணாடியில் என் பிம்பம் - புதுமையல்லவா? 


ஆனால் வேறொரு நண்பருக்கு உதவியாக அந்த அலுவலகத்திற்கு நான் செல்லவேண்டி வந்தது. வடபழனியில் பழம்பெரும் நடிகை பானுமதிக்குச் சொந்தமான பரணி ஸ்டூடியோவுக்கு எதிரில் அமைந்த அலுவலகம் அது.


எனது நண்பரை அழைத்துக்கொண்டு ரிசப்ஷனில் இருந்த டிசிஎஸ் நிறுவன அதிகாரியிடம் போய் அமர்ந்தேன். நண்பரின் சிக்கலை உடனே தீர்த்துவைத்தார் அந்த அதிகாரி. நன்றி சொல்லிவிட்டு நான் கிளம்பும்போது என்னை அணுகினார் ஒரு முதியவர். வயது சுமார் எண்பது  அல்லது அதற்கு அதிகமாகவும்  இருக்கலாம். எனது நண்பருக்கு வேகமாக உதவிய அதிகாரியால் இவருக்கு உதவமுடியவில்லை. காரணம் இருந்தது.


முதியவரின் பாஸ்போர்ட் காலாவதியாகி மூன்றாண்டுகள் ஆகிவிட்டன. எனவே அதை ‘ரினியூவல்’ என்ற வகையில் சேர்க்க முடியாது. புதிய விண்ணப்பமாகவே கருதவேண்டும். அதற்கான காகிதங்கள் அவர்வசம் இருந்தன. ஆனால், விண்ணப்பத்தை ஆன்லைனில்தானே அனுப்பவேண்டும்! அதற்கான வழிமுறை அவருக்குத் தெரியவில்லை. அவரைப் பார்த்தால் ஏதேனும் நல்ல நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவராகத்தான் தோன்றினார். முதுமை காரணமாகச் செவித்திறன் சற்றே குறைந்திருந்தது. 


பாஸ்போர்ட் அலுவலகத்தின் வெளியே இம்மாதிரி ஆன்லைன் பதிவு செய்துதரும் தனியார் அமைப்புகள் இருந்தன. ஆனால் இவருக்கு அவர்கள்மேல் நம்பிக்கை இல்லை. தன்னுடைய ஆதார்கார்டு, பான் நம்பர், முகவரி இவற்றை அவர்கள் பயன்படுத்தித் தனக்குத் தெரியாமல் தன்னுடைய வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை சுருட்டிக்கொண்டு விடுவார்கள் என்று அவர் அஞ்சினார். அது போன்ற நிகழ்வுகள் அப்போது தினந்தோறும் நடந்து கொண்டுதான் இருந்தன.  ஆகவேதான் பாஸ்போர்ட் அதிகாரியே தன்  விண்ணப்பத்தை நேரில் டைப் செய்துகொள்ளவேண்டும் என்பது அவருடைய வேண்டுகோள். 


அதற்கு வழியில்லை என்று எடுத்துக்கூறியும் அவர் நகர்வதாயில்லை. சற்று தூரத்தில் இருந்த இ-சேவை மையத்திற்குச் செல்லுமாறு கூறியும் அவர் மறுத்துவிட்டார். ஆகவே அந்த அதிகாரி அவரை என்னிடம் அனுப்பி அவருக்கு உதவச் சொன்னார். நான் கையோடு லேப்டாப் கொண்டுபோயிருந்தேன். இணையத் தொடர்புக்கான டாங்கிளும் இருந்தது. ஆகவே என்னையும்  அவரையும் அந்த அலுவலகத்திற்குள்ளேயே ஒரு மேஜையில் அமரவைத்து அவருக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டார். முதியவருக்கு மிகவும் திருப்தி. தன்னுடைய தனிப்பட்ட தகவல்கள் வெளியில் போகாது என்ற நம்பிக்கை ஏற்பட்டது.


எல்லா விவரங்களும் அவர்வசம் இருந்ததால் கடகடவென்று வேலை முடிந்தது. 

அந்த அதிகாரியே நேரில் வந்து மேற்கொண்டு ஆகவேண்டியவற்றை அவரிடம் விளக்கினார். அவரும் திருப்தியோடு கிளம்பினார். எனக்கு நன்றி சொல்லிவிட்டு என்னுடைய வீட்டு முகவரியையும் தொலைபேசி எண்ணையும் கேட்டு வாங்கிக்கொண்டார். நான் நூறாண்டு வாழவேண்டுமென்று வாழ்த்தவும் செய்தார். 


இம்மாதிரி எவ்வளவோ பேருக்கு விண்ணப்பங்கள் பூர்த்திசெய்து கொடுப்பது, முடிந்தவரை அவர்களுடன் கூடவே சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்குச் சென்று வருவது போன்றவை எனக்கு வாடிக்கை என்பதால் இந்த முதியவருக்குச்  செய்த சிறு உதவி என் மனதில் நிற்கவேயில்லை.


ஒரு மாதம் கழித்து ஒருநாள். என் வீட்டு அழைப்புமணி ஒலித்தது.  அந்த முதியவர் மலர்ந்த முகத்தோடு நின்றிருந்தார். அவர் கையில் பளபளக்கும் புதிய பாஸ்போர்ட் இருந்தது. கூடவே ஒரு உதவியாளரும் இருந்தார். 


அவர்களை உட்காரச் சொல்லிவிட்டு இருவருக்கும் காபி கொடுத்தேன். 


“உங்கள் உதவியால் பாஸ்போர்ட் வந்துவிட்டது. எனக்கு இப்போது எண்பத்திரண்டு வயதாகிவிட்டது. உடம்பில் சக்தி இருக்கும்போதே அமெரிக்கா போய் என் மகனைப் பார்த்துவிடவேண்டும். எனக்கு ஏர் டிக்கட் முன்பதிவு செய்து கொடுக்கிறீர்களா?” என்றார் முதியவர்.


“அது ஒன்றும் பெரிய விஷயமில்லையே, ஏர் இந்தியா அல்லது ஜெட் ஏர்வேஸ் அலுவலகத்திற்கு நேரில்போனால் பயமின்றி நீங்களே டிக்கட் வாங்கிவிடலாமே” என்றேன். 


“அப்படி இல்லை ஐயா! எந்த ஏர்லைன்ஸில் எந்த தேதியில் டிக்கட் குறைவாகக் கிடைக்கும் என்று நீங்கள் பார்த்துக் கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு வந்திருக்கிறேன்” என்றார். 


அதுவும் பெரிய வேலையில்லை. டிக்கட் முன்பதிவு செய்யும் செயலிகளில் நுழைந்தால் சுமார் அரைமணிநேரம் ஆகலாம். “சரிங்க” என்றேன்.


அவருடைய மகன் டெக்சாஸில் பெரிய பதவியில் இருக்கிறாராம். ஏர்போர்ட்டுக்கு வந்து தன்னை வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போகும் அளவுக்கு அவருக்கு நேரம் இருக்காதாம். ஆகவே, பகல் நேரத்தில் சென்று சேரக்கூடிய விமானமாகப் பார்த்து பதிவுசெய்யவேண்டும் என்றார். கையோடு பேங்க் பாஸ்புத்தகமும் டெபிட் கார்டும் வைத்திருந்தார். போதிய பணம் கணக்கில் இருந்தது. பதினைந்தே நாளில் திரும்பிவிடவேண்டும் என்றார். மகனுக்குத் தன்னால் எந்தச் சுமையும் கூடாது என்றார். என்ன இருந்தாலும் பெற்றவர் பெற்றவர்தானே!


“நீங்கள் எனக்கொரு வாக்குறுதி அளிக்கவேண்டும். நான் அமெரிக்கா  போகும் விஷயத்தை யாரிடமும் கூறக்கூடாது. ஏனென்றால் என் மகனுக்கும் எனக்கும் ஐந்தாறு வருடங்களாகக் கடிதமோ ஈமெயிலோ  தொலைபேசியோ எந்தத் தொடர்பும் கிடையாது. அவனுடைய மனைவி அவனை அடிமை மாதிரி நடத்துகிறாள் என்று அவனுடைய நண்பர்கள் கூறுகிறார்கள். எனக்கோ, சாவதற்கு முன் ஒரு முறையாவது என் மகனைப் பார்த்துவிடவேண்டும் என்று தீவிரமான ஆசை ஏற்பட்டிருக்கிறது. நான் வருவதாக முன்கூட்டியே தெரிவித்தால் அவன் மனைவி என்னை வீட்டிற்குள் விடாமல்போனாலும் வியப்பில்லை. ஆகவே திடீரென்று போய் நிற்கவேண்டும். அவனைக் கண்ணால் பார்த்தால் போதும். தண்ணீர் கூட அங்கே அருந்தமாட்டேன். அவன் வீட்டிற்குப் பக்கத்தில் ஏதாவது சிறிய ஓட்டலில் தங்கி தினந்தோறும் அவன் அலுவலகம் போவதற்கு காரில் ஏறுவான் அல்லவா, அப்போது மறைந்திருந்து அவன்  முகத்தைப் பார்த்துவிடுவேன். அதுபோதும் எனக்கு” என்றார்  அவர். 


“அவனைப் பார்த்தால் அவனுடைய அம்மாவைப் பார்க்கவேண்டாம். அதே முகம், அதே நிறம்! எவ்வளவு நல்ல பிள்ளையாக இருந்தான்! மனைவி என்ற ராட்சசி வந்து அவனை எங்களுக்கு ஆகாமல் செய்துவிட்டாள். அந்த வருத்தத்திலேயே அவன் அம்மாவும் போய்விட்டாள். நான் இருந்து அல்லல்படுகிறேன்” என்று குலுங்கிக்  குலுங்கி அழுதார்.


சற்றே அவர் மனம் தெளிவடையட்டும் என்று அவருடைய உதவியாளரை அழைத்துக்கொண்டு பால்கனிக்குச் சென்றேன். “இவரைப் பற்றி உங்களுக்குத் தெரிந்த தகவல்களைக் கூறுங்கள். அவரை சமாதானம் செய்ய வசதியாக இருக்கும்” என்றேன்.


அவர் என் கைகளை இறுக்கமாகப் பற்றிக்கொண்டார். “தயவு செய்து அவருக்கு டிக்கட் வாங்கித் தராதீர்கள். அவர் அமெரிக்கா போகவேண்டியதில்லை” என்றார் உறுதியான குரலில்.


நான் வியப்போடு அவரைப் பார்த்தேன். “கடைசி தடவையாக ஒருமுறை மகனைப் பார்க்கவேண்டும் என்று கூறுகிறாரே!” என்றேன்.


அவர் கண்களிலிருந்து நீர் கசிந்தது. “நிச்சயம் பார்க்கவேண்டியதுதான். ஆனால் அந்த மகன் அங்கு இருக்கவேண்டாமா?” என்றார்.


இதென்னடா ஒரு மர்மக்கதை போல் போகிறதே என்று திகைத்தேன். ஹாலில் அந்த முதியவர் இன்னும் அழுதுகொண்டே இருந்தார்.


“ஆமாங்க! இவருக்கு ஒரு மகன் இருந்தான். அவன் பட்டம் வாங்குவதற்காகக் கல்லூரி செல்லும்போது ஒரு கார்மோதி அந்த இடத்திலேயே இறந்துவிட்டான். அடையாளம் தெரியாத காரணத்தால் பத்து நாளைக்குப் பிறகுதான் இவருக்கு அவனுடைய சவம் கிடைத்தது. அதைப்பார்த்தவுடனேயே இவர் மயங்கி விழுந்தவர்தான். இவருக்கு முன்பே மனைவி காலமாகிவிட்டார். பல மாதங்கள் கோமாவில் கிடந்தவர் பிறகு எப்படியோ பிழைத்துவிட்டார். ஆனால் நினைவு தவறிவிட்டது. தன் மகன் பட்டம் வாங்கியவுடன் கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைத்து  அமெரிக்கா போய்விட்டதாக அவராகவே கற்பனைசெய்துகொண்டு சில வருடங்கள் பேசிக்கொண்டிருந்தார். பின்னர், தன் மருமகள்தான் அவனைத் தன்னோடு பேசவிடாமல் செயகிறாள் என்று பேச ஆரம்பித்தார்….”


அவருக்கு இவர், தம்பி மகனாகவேண்டுமாம். 


“மருந்துகளால் இவருக்குப் பயனில்லை. வீட்டில் வைத்து பாதுகாப்பதே நல்லது என்று டாக்டர்கள் கூறிவிட்டார்கள். எங்களால் முடிந்தவரை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறோம். எங்களுக்குத் தெரியாமல் பாஸ்போர்ட் விண்ணப்பித்து இருக்கிறார். இப்போது விமானப் பயணத்திற்குத் துடிக்கிறார். நீங்கள் எப்படியாவது சமாதானம் சொல்லி அனுப்பிவிடுங்கள்” என்றார் அவர்.


நான் முதியவரிடம் வந்தேன். அவரை நெருங்கி அணைத்துக்கொண்டேன். “ஏன்  அழுகிறீர்கள்? உங்களுக்கு வேண்டிய தேதியில் விமான டிக்கட் மிகவும் குறைந்த செலவில் செய்து கொடுக்கிறேன். ஆனால் இன்று சனி, நாளை ஞாயிறு அல்லவா? அமெரிக்காவில் இந்த இரண்டு நாட்களும் விடுமுறை நாட்கள் ஆயிற்றே” என்றேன்.


அவர் கண்களைத் துடைத்துக்கொண்டார். “அப்படியானால் நான் திங்கட்கிழமை வரட்டுமா?” என்று எழுந்தார். நான் அவருடைய தம்பி மகனைப் பார்த்து புன்னகைத்தபடி தலையாட்டினேன்.


“பாருங்க, எனக்கு மனைவி கிடையாது. இருப்பது ஒரே பிள்ளை. அவன் என்னை விரும்பாவிட்டாலும், நான் அவனை வெறுக்கமுடியுமா? எப்படியாவது அவனைப் பார்க்கும்படி செய்துவிடுங்கள். செய்வீர்கள் தானே?” என்று அவர் கெஞ்சியபோது மீண்டும் அவர் கண்களில் நீர் துளிர்த்தது. 


விதி எப்படியெல்லாம் விளையாடுகிறது! அவரை அதற்குப் பின் நான் பார்க்கவில்லை. இன்று அவர் இருக்கிறாரோ இல்லையோ தெரியாது.  ஆனால் பாஸ்போர்ட்டைக்  கையில் எடுக்கும்போதெல்லாம் அவருடைய நினைவு எழாமல் இருப்பதில்லை.  


-இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து 

சனி, ஏப்ரல் 30, 2022

பாஸ்போர்ட் என்னும் பாசச் சங்கிலி-1 இன்று கிழமை வெள்ளி -3

 பாஸ்போர்ட்  என்னும்  பாசச் சங்கிலி-1

இன்று கிழமை வெள்ளி -3


அமெரிக்காவில் 18ஆவது நாள் 

(பெங்களூர் எக்ஸ்பிரஸ்)


பாஸ்போர்ட் வாங்குவது என்பதே ஒரு காலத்தில் பிரம்மப் பிரயத்தனமாக இருந்தது இந்தியாவில். 


1998/99 இல் நான் மங்களூரில் பணியாற்றிக் கொண்டிருந்த பொழுது முதன்முறையாக பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்தேன்.  பாஸ்போர்ட் துறை கணினிமயம் ஆகாத நாட்கள்.  எங்கள் வங்கியின்  தலைமை அலுவலகத்திற்கு எதிரில் இருந்த மங்களூர் (பாண்டேஸ்வர்)  போஸ்ட் ஆபீஸில் விண்ணப்பத்தைப்  பூர்த்தி செய்து அங்கேயே பணம் செலுத்தும் வசதி அப்போது இருந்தது. 


எல்லா விண்ணப்பங்களிலும் இருப்பதுபோலவே, பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் ‘தற்போதைய முகவரி’ மற்றும் ‘நிரந்தர முகவரி’ என்று இரண்டு விவரங்கள் கேட்டிருந்தார்கள். எனது நிரந்தர முகவரி சென்னை; தற்காலிக முகவரி மங்களூர் என்று பூர்த்தி செய்தேன். தெரிந்த நபர்கள் இருவரின் பெயர்  முகவரி கேட்டிருந்தார்கள். கொடுத்தேன். அரசுத்துறையில் பணிசெய்வதால், அலுவலகத்திலிருந்து ‘என்ஓசி’ இணைக்கவேண்டி இருந்தது. செய்தேன். மங்களூரில் பாஸ்போர்ட் அலுவலகம் இல்லாததால், பெங்களூருக்கு என் விண்ணப்பம் அனுப்பப்பட்டது. 


ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஒற்றைத்தாளில் ‘உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது’ என்ற கடிதம் வந்தது. ‘உங்கள் நிரந்தர முகவரி சென்னை என்பதால், சென்னை பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு விண்ணப்பிக்கவேண்டும்’ என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.  


அதற்குள் எனக்கு பெங்களூருக்கே மாற்றலாகி விட்டது. மேலும் உடனடியாக வெளிநாடு செல்லும் எந்தத் திட்டமும் என்னிடம்  இல்லை. எனவே பாஸ்போர்ட் பற்றிய கவலையை அப்போதைக்கு ஒதுக்கிவைத்தேன். ஆனால் அடுத்த ஆண்டு என்னை அமெரிக்கா வரச்சொல்லி மகள் அழைத்ததால், மீண்டும் விண்ணப்பிக்க நேர்ந்தது. இம்முறை பெங்களூர் பாஸ்போர்ட் ஆபீசுக்கு விண்ணப்பிக்காமல், அவர்கள் ஏற்கெனவே அறிவுரைத்தபடி,  என் நிரந்தர முகவரிக்குட்பட்ட சென்னை பாஸ்போர்ட் ஆபீசுக்கு விண்ணப்பத்தை அனுப்பினேன்.


ஒரு மாதத்திற்குள் மீண்டும் ஒரு நிராகரிப்புக் கடிதம் வந்தது! இம்முறை காரணம் என்ன தெரியுமா? ‘உங்கள் தற்போதைய முகவரிக்குட்பட்ட பெங்களூர் அலுவலகத்துக்கு விண்ணப்பிக்காமல், சென்னைக்கு விண்ணப்பித்தது தவறு’ என்று கடிதம் கூறியது!


இதென்னடா இழவு என்று பெங்களூர் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு நேரில் சென்றேன். அங்கிருந்த அதிகாரி எங்கள் வங்கிக்குத் தொடர்பில் இருந்ததால், அவரிடம் விஷயத்தை விளக்கினேன். இப்போது விதிகள் மாற்றப்பட்டுவிட்டதாகவும், ‘தற்போதைய முகவரி’ தான் எந்த பாஸ்போர்ட் அலுவலகம்  என்பதை முடிவுசெய்யும் காரணி என்றும் தெரிவித்தார். எனவே மீண்டும் ஆத்திச்சூடியிலிருந்து ஆரம்பித்தேன். பதினைந்து நாட்களில் பாஸ்போர்ட் வந்துவிடும் என்றும் வராவிட்டால் தன்னை மீண்டும் சந்திக்கும்படியும் கனிவுடன் கூறினார். 


அதன்படியே பதினைந்தாவது நாள்  வந்தது. பாஸ்போர்ட் அல்ல, வெறும் கடிதம்! ‘உண்மைத் தகவலை மறைத்து விண்ணப்பித்த காரணத்தால் உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. மேலும், இதுபற்றி, தேவைப்பட்டால் காவல்துறை மூலம் நடவடிக்கையும் எடுக்கப்படும்’ என்று கடிதத்தில் இருந்தது!


எனக்கு ஒன்றும் புரியவில்லை. எந்த உண்மையை நான் மறைத்தேன் என்று எனக்குத் தெரியவில்லை. விண்ணப்பத்தில் இருந்ததெல்லாம், என்னுடைய பெயர், பிறந்த நாள், தந்தை-தாய் பெயர், பணிபுரியும் அலுவலகம், இதற்கு முன்பு ஏதேனும் குற்றச் செயல்களில் ஈடுபட்டேனா, வழக்குகள் என்மீது நிலுவையில் உள்ளனவா என்ற விவரங்கள்தான். இதில் எதையும் மறைப்பதற்கே வழியில்லையே!


எனவே சற்றே அச்சத்துடன், பாஸ்போர்ட் அதிகாரியோடு நெருங்கிய தொடர்பில் இருந்த எனது வங்கியின் மண்டலா அலுவலக நண்பர் ஒருவருடன் சென்று பாஸ்போர்ட் ஆபீசரைச் சந்தித்தேன். 


“வாருங்கள், பாஸ்போர்ட் வந்துவிட்டதல்லவா? என்ன சாப்பிடுகிறீர்கள், காபியா டீயா?” என்றார்.


எனக்கு வந்த கடிதத்தைக் காட்டினேன். அவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. உடனே என்னுடைய ஃபைலை எடுத்துவரச் சொன்னார். அதை பார்த்தவுடன் அவர் முகத்திலும் சற்றுக் கடுமை படர்ந்தது. “எதையோ நீங்கள் மறைக்கிறீர்கள் போல் தெரிகிறதே!” என்றார்.

 

நானும் நண்பரும் எதுவுமில்லை என்று பலமாகத் தலையாட்டினோம். “இல்லை! உங்கள் விண்ணப்பங்கள் இரண்டுமுறை நிராகரிக்கப்பட்டதாகக் குறிப்பில் இருக்கிறதே! சென்னை ஆபீஸ் ஒருமுறையும் இதே பெங்களூர் ஆபீஸ் ஒருமுறையும்! ஆனால் நீங்கள் இதற்குமுன் என்னைப் பார்த்தபோது ஒன்றும் கூறவில்லையே! இப்போதாவது எல்லா உண்மையையும் சொல்லிவிடுங்கள். நிச்சயம் என்னால் உதவமுடியும்” என்றார்.


“பாஸ்போர்ட் என்பது மிகவும் முக்கியமான ஆவணம். ஆகவே சின்னச் சின்னத் தவறுகள் கூட நிலைமையைச் சிக்கலாக்கிவிடும்” என்று மேலும் எச்சரித்தார்.


நல்லவேளையாக, ஏற்கெனவே வந்திருந்த இரண்டு கடிதங்களையும் கையோடு கொண்டுபோயிருந்தேன். பார்த்தார். உடனே விஷயத்தைப் புரிந்துகொண்டார். அதற்குள் காபி வந்தது. “குடியுங்கள், விஷயம் தெரிந்துவிட்டது. நாளைக்கே உங்களுக்கு பாஸ்போர்ட் கொடுத்துவிடுகிறேன். கவலைவேண்டாம்” என்றார்.


அதன்பிறகு விளக்கினார். “அதிகார எல்லை (ஜூரிஸ்டிக்ஷன்) சம்பந்தப்பட்ட காரணத்தால்தான் உங்கள் முந்தைய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.  உங்கள் மீது எந்தத் தவறும் இல்லை. இது முழுக்க முழுக்க சிஸ்டம் செய்த தவறு.  அதற்காக உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்றார். அவருடைய பெருந்தன்மைக்கு வணக்கம் சொல்லிக் கிளம்பினேன்.   


சொன்னபடியே மூன்றாவது நாள் என் கையில் பாஸ்போர்ட் வந்து சேர்ந்தது!


 

பாஸ்போர்ட் பத்துவருடத்துக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட வேண்டும். அதன்படி ஒரு குறிப்பிட்ட நல்ல நாளில் எனது ‘ரினியூவல்’ விண்ணப்பத்தை அனுப்பினேன். இப்போது நான் பதவியில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டேன். அத்துடன் 40 வருடமாக இருந்த முகவரியில் இருந்து வீடு மாறி, அடுத்த மாவட்டத்தில் ஒரு கிராமியச் சூழலில் இருந்த நகர்ப்புறக் குடியிருப்பு ஒன்றில் சொந்தமாக ஒரு அடுக்குவீடு வாங்கிக்கொண்டு வந்திருந்தேன். எனவே ரினியூவல் + முகவரி மாற்றம் இரண்டுக்கும் சேர்த்து விண்ணப்பித்தேன். 


இன்னும் கணினிமயமாகவில்லை பாஸ்போர்ட் ஆபீஸ்கள். எனவே தாமதம் தவிர்க்கமுடியாது என்று தோன்றியது. ஆனால் இப்போது ஏற்பட்ட தாமதம் புதுமாதிரியானது.


நமது பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் உடனே சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு அனுப்பப்படும். காவல் நிலைய அதிகாரி நம் வீடுதேடி வந்து விசாரணை நடத்தி அவர்முன்னால் நாம் ஒரு படிவத்தில் கையொப்பம் இட  வேண்டும் என்பது விதி.  


ஆனால் விதி என்பது வேறு, தலைவிதி என்பது வேறு அல்லவா? 


காவல் அதிகாரி நம் வீட்டுக்கு வரமாட்டார். மாறாக நம்மை அவருடைய அலுவலகத்திற்கு அழைப்பார். ‘நம்மை நன்கு தெரிந்த இருவர்’ (ரெஃபரன்ஸ்) என்று யாரைக் குறிப்பிட்டிருந்தோமோ அவர்களிடமிருந்து ஒரு படிவத்தில் கையொப்பம் வாங்கிவரச்சொல்லி நம்மிடமே அனுப்புவார். அவற்றைப் பூர்த்திசெய்துகொண்டு போனால் அந்த அதிகாரி தன் இருக்கையில் இருக்கமாட்டார்.  காவல்துறையில் நிமிடத்துக்கு நிமிடம் உத்தரவுகள் வந்துகொண்டே இருக்கும் என்பதால் அந்த அதிகாரி எப்போது மீண்டும் வருவார் என்பதை உறுதியாகத் தெரிவிக்க முடியாத சூழல் இருக்கும். 


இதனால் ஏற்படும் தாமதம் தவிர்க்க முடியாதது. அவர் வந்த பிறகு, நம்மிடம் ஒரு லெட்ஜரில் கையொப்பம் பெற்றுக்கொண்டு நமது விண்ணப்பத்தை மாவட்ட காவல் அதிகாரிக்கு அனுப்பிவைப்பார். அவர்கள் அதை பதிவுசெய்துகொண்டு பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு அனுப்புவார். எல்லாம் சரியாக இருந்தால் ஒரு வாரத்தில் புதிய பாஸ்போர்ட் வந்துவிடும்.    


என்னுடைய விஷயத்தில் மேற்கொண்டு புதிய தாமதம் ஒன்றும் நேர்ந்தது. அதை நீங்களோ நானோ எதிர்பார்த்திருக்க முடியாது! 


நான் குடிவந்த கிராமத்திற்கு அருகில் இருந்த இன்னொரு கிராமத்திற்கு போலீஸ் நிலையம் புதிதாக சாங்க்ஷன் ஆகியிருந்ததாம். அந்த அலுவலகம் சில நாட்களுக்கு முன்புதான் திறக்கப்பட்டதாம். எங்கள் குடியிருப்பையும் அந்த போலீஸ் நிலையத்தின் அதிகார எல்லைக்குள் சேர்த்துவிட்டார்களாம். அதற்கான உத்தரவு அன்றுதான் வந்ததாம். ஆகவே, எனது பாஸ்போர்ட் பற்றி விசாரணை செய்து தகவல் அனுப்பவேண்டியது அந்த நிலையத்தின் அதிகாரியுடைய வேலைதானாம்! ஏற்கெனவே பழைய போலீஸ் நிலையத்தில் செய்து முடிக்கப்பட்ட விசாரணை செல்லாதாம்! 


“அவர் உங்கள் வீட்டுக்கே வந்து பேசுவார். ஆனால் நீங்கள் புதிதாக எந்த பேப்பரும் தரவேண்டாம். நாங்கள் கையொப்பம் இட்ட அதே பேப்பரில் அவர் உறுதிசெய்யும் விதமாக இன்னொரு கையெழுத்து போடுவார். அவ்வளவுதான். இதனால் உங்கள் விஷயம் சில நாட்கள் தாமதப்படும். பொறுத்துக்கொள்ளுங்கள்” என்றார் பழைய நிலைய அதிகாரி.


பொறுத்துக்கொண்டேன். ஒரு மாதத்திற்குப் பிறகு பாஸ்போர்ட் ரினியூவல் செய்யப்பட்டு வந்துசேர்ந்தது!


(கதை இத்துடன் முடியவில்லை. நாளை தொடரும்.)


-இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.