வியாழன், மார்ச் 30, 2017

அப்பாவின் சிநேகிதிகள்

பதிவு எண்  23 / 2017
அப்பாவின் சினேகிதிகள்
-இராய செல்லப்பா

அடுப்பெரிக்க விறகுக் கட்டை அல்லது நிலக்கரி மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருந்த காலம் அது. 1950 – 1970 என்று வைத்துக் கொள்ளுங்களேன். இண்டேன் கேஸ், எச்பி கேஸ், பாரத் கேஸ் இவையெல்லாம் கண்டுபிடிக்கப்படாத காலம்.

அடுப்பு என்றால் இரும்பிலோ எவர்சில்வரிலோ தயாரித்ததல்ல. சுட்ட களிமண்ணால் ஆன அடுப்புதான். கடையிலும் விற்கும். களிமண் கிடைத்தால் வீட்டுப் பெண்களே செய்து கொள்வார்கள். அம்மாவுக்கு நன்றாகச் செய்யவரும். ஒற்றை அடுப்பு செய்வார். இரண்டு பாத்திரங்களை ஒரே சமயத்தில் வைக்கும் இரட்டை அடுப்பும் செய்வார். அதைக் ‘கொடி அடுப்பு’ என்பார்கள். இரண்டிலும் விறகுக்கட்டையைத்தான் பயன்படுத்தவேண்டும். ‘குமட்டி’ அடுப்பு என்று இன்னொரு வகையும் உண்டு. அதில் நிலக்கரி மட்டுமே பயன்படுத்தவேண்டும். வெந்நீர் வைப்பது, காப்பி போடுவது, மிளகு ரசம் வைப்பது போன்ற சிறிய சமையல்களுக்குத்தான் பயன்படும். 

பச்சைக் களிமண்ணால் அடுப்பு செய்து அதை நிழலில் ஒரு வாரம் உலர்த்தியபின், பகல் வெயிலில் ஒரு வாரம் உலர்த்துவார் அம்மா. பிறகு பசுஞ்சாணத்தைக் குழைத்து மேல்பூச்சாகப் பூசுவார். நல்ல நேரம் பார்த்து, பொட்டு வைத்து, கற்பூரம் காட்டிய பின், முதலில் பாலைக் காய்ச்சுவார். அதன் பிறகுதான் சோற்றுக்கு உலை வைத்தல் முதலியன நிகழும்.  வேற்றுப் பெண்மணிகள் இல்லாத நேரம் பார்த்துத்தான் புது அடுப்பை ஆரம்பிப்பார். கண்பட்டுவிடுமாம். 

தனக்குச் செய்துகொண்டது போக, கிராமத்தில் இருந்து வரும் வயதான உறவினர்களுக்கும் அடுப்புகளைச் செய்து அனுப்புவார் அம்மா என்பது நன்றாக நினைவில் இருக்கிறது. அதற்கான களிமண்ணைப் பாலாற்றங்கரையில் தோண்டி, சிறிய கோணிப்பையில் வைத்து, தலைச்சுமையாக எடுத்து வந்து கொடுக்கும் பணி அடியேனுடையது. சில சமயம் அக்கா உடன் வருவாள். ஆனால் அவளது கவனம் முழுவதும்  பாலாற்றங்கரைக்குச் சற்றுமுன் இருந்த ‘பெரிய வாய்க்கால்’ தாண்டியவுடன்  வழியெல்லாம் பூத்திருக்கும் மஞ்சள் கனகாம்பரப் பூக்கள் மீதோ, அல்லது மூன்றடி உயரம் மட்டுமே இருந்த ஈச்சமரங்களில் தேன்கூடு போல் காய்த்துத் தொங்கும் சிவந்த ஈச்சம் பழங்களின் மீதோ தான் இருக்கும்.  

மாதத்தில் ஒருமுறை யல்ல, இரண்டு, மூன்று முறை கூட கோணிப்பை சுமந்த அனுபவம் உண்டு. காலில் செருப்பின்றி, முள் குத்துவதைப் பொறுத்துக்கொண்டு, களிமண் சுமந்ததைப் பிட்டுக்கு மண் சுமந்த கதையோடு ஒப்பிட்டுப் பார்ப்பதுண்டு, பின்னாளில்.   

சராசரியாக மூன்று மாதத்திற்கு ஒருமுறை அடுப்பில் விரிசல் விழுந்து விடும். அந்த நேரத்தில் நான் வீட்டில் இருப்பதைத் தவிர்த்துவிடுவேன். சரியான களிமண்ணைத் தேர்ந்தெடுத்து வராத குற்றம் என்மீது விழுமல்லவா? உடனடியாகப் புது அடுப்பு செய்தாகவேண்டும். அவ்வளவுதான், என்ன வேலை இருந்தாலும் பாதியில் விட்டுவிட்டுப் புதிய களிமண் கொண்டு வந்தாக வேண்டும். அவசரமாக அப்படிப் போய்வந்த ஒருநாளில், களிமண் தோண்டுவதற்காகக் கொண்டுபோன உடைந்த சட்டுவத்தை மறந்து வைத்துவிட்டு, மறுபடி போய்த் தேடியதில் அது அகப்படாமல், விசேஷமான திட்டுக்களை வாங்கிய அனுபவமும் நினைவில் இருக்கிறது.  

ஆனால், இந்தக் க(தை)ட்டுரை அடுப்பு செய்வதைப் பற்றியதல்ல, அதில் பயன்படுத்தும் விறகுக்கட்டையைப் பற்றியது என்பதைப் பணிவோடு தெரிவித்துக்கொள்கிறேன். எனவே எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் விறகுக்கடை வைத்திருந்த  கண்ணம்மாவைப் பற்றி நீங்கள் அறிந்தாக வேண்டும்.

கண்ணம்மா என்பவருக்கு அப்போது முப்பது அல்லது முப்பத்தைந்து வயது இருக்கலாம் என்று நினைக்கிறேன். (அப்போது எனக்கு வயது  எட்டு அல்லது ஒன்பதுதான். எனவே பெண்களின் சரியான வயதைக் கணிக்கும் ஆற்றல் இருந்திருக்க முடியாதல்லவா?) அவரது பெயரால் ‘கண்ணம்மா தொட்டி’ என்று அந்தக் கடைக்குப் பெயர் ஏற்பட்டிருந்தது. தொட்டி என்றால் விறகுக்கடை என்று பொருள். இராணிப்பேட்டை பஸ் நிலையத்தில் இருந்து வக்கீல் தெருவை நோக்கி நடந்தால், இடதுபுறமாக, தபாலாபீஸ் தெரு பிரியும் இடத்தில் இருந்தது கண்ணம்மா தொட்டி.

ஒருபக்கம் சுவரும், மூன்று பக்கம்  மூங்கில் வேலியுமாக இருந்த பெரிய கடை. ‘ஐந்து கிரவுண்டு இடத்தில் விறகுதொட்டி வைத்த ஒரே ஆள் நான்தான்’ என்று கண்ணம்மா பெருமையாகச் சொல்லக் கேட்டிருக்கிறேன். அவ்வளவு பெரிய தொட்டி வேறு எந்தத் தெருவிலும் இல்லை. இரண்டு கொடுக்காப்புளி மரங்கள் இருந்தன. நெடிதுயர்ந்த மரங்கள். எப்போதும் பத்துப் பதினைந்து கிளிகள் அதில் பறந்துகொண்டிருக்கும். சுருள்சுருளாக இருக்கும் கொடுக்காப்புளிக் காய்களைக் கிளிகள் தம் அலகால் கத்தரித்து எடுக்கும். சிவந்த பகுதியை மட்டும் - அதிலும் பாதியளவே - கொத்திச் சாப்பிட்டுவிட்டு மீதமுள்ள பழத்தைக் கீழே போட்டுவிடும். பள்ளிக்கூடம்  போகும் நேரத்தில் அந்தப் பழங்களைப் போட்டி போட்டுக்கொண்டு பொறுக்குவோம். கிளி கடித்த பழம் இனிக்கும்.

அநேகமாக இரண்டு நாளைக்கு ஒருமுறை லாரியில் பெரிய பெரிய மரத்துண்டுகள் வந்திறங்கும். பெரும்பாலும் புளிய மரத்தின் அடிப்பகுதியாக இருக்கும். ஒவ்வொன்றும் ‘அம்பது அறுபது கிலோ இருக்கும்’ என்பார் கண்ணம்மா. அவரது மேற்பார்வையில்தான் லாரியில் இருந்து இறக்கவேண்டும். பிறகு இரண்டு ஆட்கள் பெரிய கனமான கோடாரிகளுடன் வந்து கட்டைகளைப் பிளப்பார்கள். பச்சை மரத்தின் வாசனை தூரத்திலேயே தெரியும்.  கட்டைகளைப் பிளந்து, ஒவ்வொன்றும் சுமார் இரண்டு முதல் இரண்டரை அடிக்குள் இருக்குமாறு சிறிய துண்டுகளாக ஆக்கி, அவற்றை அழகாக அடுக்கி வைக்கவேண்டும். ஒருநாள் கூலி ஒன்றேகால் ரூபாய். வீட்டுக்கென்று சில விறகுத்  துண்டுகளையும் எடுத்துக்கொள்ளலாம். டீ குடிக்க  இரண்டணாவும் தருவார் கண்ணம்மா.

ஆளுயரத்திற்கு ஒரு தராசு இருக்கும். ஒரு பக்கம் எடைக் கற்களும் இன்னொரு பக்கம் நாம் தேர்ந்தெடுக்கும் விறகுக் கட்டைகளும் வைக்கவேண்டும். தராசின் இரண்டு பக்கமும் சமமாக இருந்து எடை போட்டதாக நினைவில் இல்லை. எப்பொழுதும் ஏதோ ஒரு பக்கம் தூக்கலாகவே இருக்கும். ‘சரி, எடுத்துக்கொள்’ என்பார். விறகுக் கட்டைகளை சைக்கிளின் கேரியரில் வைத்துக் கயிற்றால் கட்டுவேன். 

புளியம் விறகுதான் விலை அதிகம். நின்று எரியும் என்பார் அம்மா. ‘எடை நாலு ரூபாய்.’ (எடை என்றால் எவ்வளவென்று தெரியாது. பத்து கிலோ இருக்குமோ?) மற்ற மரங்கள் என்றால் சீக்கிரம் எரிந்துவிடும். அதனால் விலை குறைவு. எடை இரண்டு ரூபாய் இருக்கும். இரண்டுக்கும் நடுவில் சவுக்கு விறகு. உருட்டுக் கட்டை என்றால்  எடை இரண்டரை ரூபாய். பிளந்த கட்டை என்றால் மூன்று ரூபாய்.

இரண்டு மூன்று நாளைக்குத் தேவையான அளவுதான் விறகு வாங்குவது வழக்கம். அதிகம் வாங்கி அடுக்கினால், தேளோ தேரையோ ஒளிந்து கொள்ளும் என்பார் அம்மா. அதனால் அரை எடை அல்லது முக்கால் எடைதான் விறகு வாங்குவோம். அது எனக்கும் வசதியாக இருந்தது. ‘கண்ணம்மா தொட்டியில் போய் விறகு வாங்கி வா’ என்றால் எனக்கு சர்வீஸ் சார்ஜ் ஓரணா கொடுக்கவேண்டும் என்பது எழுதப்படாத ஒப்பந்தம். எவ்வளவு நடை அதிகமோ அவ்வளவு ஓரணாக்கள் கிடைக்குமே.  மழை வரும்போல் இருந்தால்  போக மாட்டேன் என்று பிகு பண்ணினால் அது இரட்டிப்பாவதுண்டு.

விறகை அடுக்கிக்கொண்டு சைக்கிளில் நான் கிளம்பும்போது என்னைப் பார்த்து அன்பொழுக, ‘பார்த்துப் போடா கண்ணு’ என்பார் கண்ணம்மா. திடீரென்று என்னை நிறுத்தி, ‘ஒரு நிமிஷம் இரு’ என்பார். ‘டீ குடிச்சிட்டுப் போறியா?’ என்பார். வெளியில் எங்கும் நான் டீ குடித்ததில்லை. வீட்டிலும் டீ போட மாட்டார்கள்.  டீ என்ன சுவை என்பதே எனக்குத் தெரியாது. ‘வேண்டாம்’ என்பேன். ‘ஒங்க அப்பாவும் இப்படித்தான். டீயே குடிக்க மாட்டார். ஆனால் நீ அவர் மாதிரி இருக்காதே. நல்லாப் படிக்கணும். சரியா?’ என்பார். தலையாட்டுவேன். ‘என்ன படிக்கிறாய்? என்பார். ‘நான்காம் வகுப்பு’ என்று சொல்லிவிட்டு நிற்காமல் கிளம்பிவிடுவேன். நேரமானால் அம்மா கத்துவார்.

சிலநாள் கழித்து மீண்டும் போனால் அப்போதும் இதே மாதிரிதான். ‘என்ன படிக்கிறாய்’ என்பார். ‘நான்காம் வகுப்பு’ என்றால், ‘போன  வாரமும்  இதையேதான் சொன்னாய். எவ்வளவு நாள் நாலாம் கிளாசிலேயே இருப்பாய்’ என்பார். பைத்தியம் போலிருக்கிறது என்று மனதிற்குள் சிரிப்பேன்.

விறகு வாங்குவதோடு என் வேலை முடிந்தது. பணம் என்னிடம் கேட்க மாட்டார் கண்ணம்மா. சின்னதாக இருந்த நோட்டுப் புத்தகம் ஒன்றில் அப்பா பெயர் எழுதிய பக்கத்தில், தேதி போட்டு என்ன விறகு எவ்வளவு எடை என்று எழுதிக்கொள்வார். மாதம் ஒருமுறையோ, அல்லது இரண்டு மாதத்திற்கு ஒரு முறையோ பணம் கொடுப்பார் அப்பா என்று நினைக்கிறேன்.

கண்ணம்மா, நெற்றியில் பெரிய பொட்டு வைத்திருப்பார். கறுப்பு மையால் ஆனது. அப்போதெல்லாம் ஸ்டிக்கர் பொட்டுக்கள் கிடையாது. குங்குமம் அல்லது சாந்துப் பொட்டுதான். (ஈரமில்லாத கொட்டாங்கச்சி, கொஞ்சம் விளக்கெண்ணெய், சிறிய பெட்ரூம் விளக்கு அல்லது அகல் விளக்கு - இந்த மூன்றும் இருந்தால் சாந்து செய்துவிடலாம்.) கண்ணம்மா ஏன் குங்குமம் வைத்துக் கொள்வதில்லை என்று தெரியாது. வேர்வையில் அழிந்திருக்கலாம் என்று எண்ணிக்கொள்வேன்.

ஆறு பேர் கொண்ட பெரிய குடும்பம் எங்களுடையது. அப்பாவின் வருமானம் நிலையில்லாதது. எனவே, கண்ணம்மாவின் பாக்கி அவ்வப்பொழுது தீர்க்கப்படாமல் நின்றுவிடும். ஆனால்  நான் விறகு வாங்கப் போனால் இல்லை என்று சொன்னதில்லை கண்ணம்மா. ‘அப்பா ஊர்ல இல்லையாப்பா’ என்று மெதுவாகத்தான் கேட்பார். கேள்வியின் அர்த்தம் எனக்குப் புரியும். ‘ஆமாம், மெட்ராஸ் போயிருக்கார்’ என்று சொல்லித் தப்பித்துக்கொள்வேன். சில சமயம் நான் பள்ளிக்கூடம்  போகும் சமயம் என்னை அழைப்பார். ‘அப்பா ஊர்ல தான இருக்காரு? கண்ணம்மா கேட்டாங்கன்னு சொல்லு’ என்பார். ஒரு நாளாவது கடுமையான சொற்கள் அவர் வாயிலிருந்து வந்ததில்லை.  

அம்மாவிடம் கேட்பேன், கண்ணம்மாவுக்கு இன்னும் பணம் கொடுக்க வில்லையா என்று. அம்மாவுக்கும் சரியான விவரம் தெரியாது. ஆனால் பாக்கி சற்றே அதிகம் என்பது தெரியும். ‘ஒன்கிட்ட கேட்டா அடுத்த மாசம் கணக்கு தீர்த்துடறோம்னு சொல்லு’ என்பார்.

சில சமயம் அம்மாவுக்கு அழுகையாக வரும். பணமில்லாத குறைதான். ‘நம்ம வீட்டுல அடுப்பு எரியறதே கண்ணம்மாவோட கருணையால  தான்’ என்பார். ‘அக்னியை ஏமாற்றக் கூடாது’ என்பார். கூடத்திலிருந்து அப்பா வந்து  ‘கவலைப்படாதே, கண்ணம்மாவோட பாக்கியை முழுசா தீர்த்துடலாம்’ என்று உறுதியளிப்பார். எப்போது என்பதற்கு அவரிடம் பதில் இல்லை.

ஆள் நடுத்தர உயரம்தான், மெலிந்த உடல்தான், என்றாலும் கண்ணம்மாவின் குரலுக்கு ஊரில் தனி மரியாதை இருந்தது. ஒருதரம் ஓட்டல்காரர் ஒருவர் நிறைய பாக்கி வைத்துவிட்டு பதிலே சொல்லாமல் ஏய்த்துக் கொண்டிருந்தாராம். கேட்டுக் கேட்டுப் பார்த்துப்  பொறுமை இழந்த கண்ணம்மா, நேராக  ஓட்டலுக்கே போய், கதவை இழுத்துப் பூட்டி விட்டாராம் - உள்ளே சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் உள்பட. உரிமையாளரின் வீட்டில் இருந்து யாரோ வந்து கணக்கை முழுதுமாகத் தீர்த்தபிறகுதான் கதவைத் திறந்தாராம்.

ஒரு நாள், விறகு முழுதும் தீர்ந்துவிட்டது. அவசரமாக வாங்கியாக வேண்டும். பாக்கி தீர்க்காமல் தருவாரோ மாட்டாரோ என்று மிகுந்த தயக்கத்துடன் கண்ணம்மா தொட்டிக்குப் போனால், அன்று கடை பூட்டியிருந்தது. எனக்கு வியர்த்துக் கொட்டியது. வேறு கடைக்குப் போய் வாங்கலாம் என்றால் கையில் பணமில்லையே! அப்பாவும் ஊரில் இல்லை.

அம்மாவுக்கும் எதுவும் தோன்றவில்லை. சிறிது நேரம் கழித்து என்னை அழைத்து, ‘கண்ணம்மா வீட்டிற்குப் போய்ப் பார்த்து வா’ என்றார். ‘இந்த கூஜாவில் ஒரு டம்பளர் காப்பி ஊற்றித் தருகிறேன், கொண்டு போ’ என்றார்.  அடுத்த தெருதான். தனியாக வாழ்ந்து வந்தாராம் கண்ணம்மா. கடை திறக்கவில்லை என்றால் ஒன்று, அவர் ஊரில் இல்லை என்று அர்த்தம். அல்லது, அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று அர்த்தம் என்றார் அம்மா.

நினைத்தபடியே, கண்ணம்மாவுக்கு உடம்பு சரியில்லை தான். என்னைப் பார்த்ததும் மெதுவாகப் படுக்கையில் இருந்து எழுந்தார். ‘மன்னிக்கனுண்டா ராஜா! ஜுரமா இருக்குது, எழுந்துக்கவே முடியலே, அதான் கடை தெறக்கலே. இரு வரேன்’ என்றார்.

‘இந்தாங்க காப்பி’ என்று கூஜாவை மேசைமீது வைத்துவிட்டு நான் வெளியில் வந்து நின்றுகொண்டேன்.  

என்னைப் பார்த்ததும் கடன்காரன் வந்திருக்கிறான் என்பதுபோல் ஏதேனும் சொல்வாரோ என்று பயந்தேன். அப்பாவைக் குறை சொல்வாரோ என்று கலங்கினேன். இல்லை. வழக்கம் போலவே இருந்தார் கண்ணம்மா. கடையைத் திறந்து ஒரு எடை விறகை எனக்குக் கொடுத்த பிறகு பூட்டிக்கொண்டு வீட்டிற்கே போய்விட்டார். ஜுரத்தால் நடக்க முடியாமல் நடந்தார்.

எனக்கு மனத்தில் குற்ற உணர்ச்சி படுத்த ஆரம்பித்தது. பாக்கியை ஒழுங்காகச் செலுத்தாத வாடிக்கையாளருக்கு எந்தக் கடைக்காரர், தனக்கு உடல்நிலை சரியில்லாதபோதும், பூட்டிய கதவைத் திறந்து மறுபடியும் கடன் கொடுப்பார்?

அப்பாவிடம் சொன்னேன். இன்மேல் நான் கண்ணம்மா தொட்டிக்குப் போகமாட்டேன். பாக்கித் தொகை முழுவதும் பைசல் செய்தால் தான் போவேன் என்று உறுதியாகக் கூறிவிட்டேன்.

அன்று மாலை, திடீரென்று கண்ணம்மா எங்கள் வீட்டிற்கு வந்துவிட்டார். சரிதான், இன்று கடன் பாக்கிக்காக நிச்சயமாகக்  கூச்சல் போடத்தான் போகிறார் என்று தோன்றியது. அம்மாவுக்கும்  சற்றே வியர்த்தது. என்றாலும் காட்டிக்கொள்ளாமல், ‘வாங்க கண்ணம்மா, உடம்பு பரவாயில்லையா?’ என்றார்.

அதைக் கண்டுகொள்ளாமல், என்னைப் பார்த்து, ண்டா கண்ணா, காப்பி கொண்டுவந்து கொடுத்தாயே, கூஜாவைத் திருப்பி  எடுத்துக்கொண்டு போக வேண்டாமா? என்று சிரித்தார். அம்மாவுக்கு உயிர் வந்தது. கூஜாவைப் பெற்றுக்கொண்டார்.

‘உட்காருங்க. காப்பி தர்றேன்’ என்று உள்ளே போனார்.

கண்ணம்மா ஒரு திண்ணையில் உட்கார்ந்தார். எதிர்த் திண்ணையில் நான் உட்கார்ந்தேன். ‘ஒங்க வீட்டு காப்பி ரொம்ப நல்லா இருக்குது’ என்றார்.

அவராகக்  கடன் பாக்கியைப் பற்றிப் பேசுவதற்குள் நானாக ஏதேனும் சொல்லிவிடலாம்  என்று தோன்றியது. அப்பா இன்னும் வரலே. எப்படியும் இந்த மாதக் கடைசிக்குள் கொடுத்துவிடுவார் என்றேன். அதற்குள் அம்மா காப்பியுடன் வந்தார்.

காப்பியைக் குடித்தபடி கண்ணம்மா பேசினார். ஏண்டா ராஜா, என்னை வெறும் வெறகுக் கடைக்காரின்னு நெனக்கறியா? பாக்கி வசூல் பண்ண வந்தேன்னு பார்த்தியா? நான் ஒங்க அப்பாவோட கிளாஸ்மேட்டு டா என்றார்.  

அப்படியா? எனக்கு அதுவரை தெரியாத செய்தி. அம்மாவுக்கும் தான்.

அந்தக் காலத்துல நடராஜ வாத்தியார்னு இருந்தார். அவர்தான் எங்களுக்கு மூணாங்கிளாசு வரைக்கும் வாத்தியார். எல்லாரும் தரையில் தான் ஒக்காரணும். ஒங்கப்பா மொத வரிசையில் இருப்பார். நான் மூணாவது வரிசை.  பெண்கள் மூணாவது வரிசையில தான் இருப்பாங்க என்று தொடர்ந்தார் கண்ணம்மா.

ஒருநாள் வாத்தியார் கேட்டார்: நாலையும் மூணையும் பெருக்கினால் எவ்வளவுன்னு. நான் ஏழுன்னு சொன்னேன். ஒங்கப்பா நாப்பத்தி மூணுன்னார்.... 

எல்லாரும் சிரித்தோம். அப்ப யாருக்குமே கணக்கு தெரியாது. நாலாங்கிளாஸ் போனபிறகுதான் நடேசய்யர்னு புது வாத்தியார் வந்தார். அவர் தான் எங்களுக்கு கணக்கு நல்லாப் புரிய வச்சார்.. என்று கண்ணம்மா பழைய நினைவுகளில் மூழ்கினார்.

அந்த வருஷமே எனக்குக் கல்யாணம் பண்ணிட்டாங்க. வேலூர்ல தான் குடுத்தாங்க. ஹும்..எல்லாம் ரெண்டே வருஷம் தான். அவரு மஞ்சக் காமாலைன்னு ஒருவாரம் படுத்தார். எழுந்துக்கவே இல்லே. அப்பா அம்மா இருக்கறவரைக்கும் கூடவே இருந்துட்டேன். அப்புறம்தான் இந்த வெறகு தொட்டி ஆரம்பிச்சேன்...  என்றார். கண்களைத் துடைத்துக்கொண்டார்.
எழுந்தார். அதுனால, எனக்கு எப்பவும் நீ என் நண்பரோட புள்ளைதான். நீ கடன்காரன் இல்லே. நான் கடைக்காரியும் இல்லே. புரிஞ்சுதா? ஒங்கப்பா எப்ப குடுக்கறாரோ அப்ப வாங்கிக்கறேன். நீ நல்லாப்  படிக்கணும். படிச்சிருந்தா நான் இப்படி இருப்பேனா? உங்கப்பாதான் இப்படி கஷ்டப்படுவாரா?  அதனால எவ்வளோ கஷடம்னாலும் தாங்கிக்கிட்டு நீ படிக்கணும். வரட்டுமா? என்று கிளம்பினார் கண்ணம்மா.

அம்மாவிடம் திரும்பி, எங்கிட்ட நூறுபேர் வியாபாரம் பண்றாங்க. ஆனா, எனக்கு ஒடம்பு சரியில்லேன்னு வீடு தேடிவந்து காப்பி கொடுத்தது நீங்க மட்டும் தாம்மா..என்று நெகிழ்ச்சியோடு கூறினார்.

அன்று இரவே அப்பா மெட்ராசிலிருந்து வந்துவிட்டார். அம்மா என்னைப் பார்த்து  கண் ஜாடை காட்டிவிட்டு, அப்பாவிடம் கேட்டார்:

நாலையும் மூணையும் பெருக்கினால்  எவ்வளவு?

நாப்பத்தி மூணு என்று சத்தமாகச் சிரித்தேன் நான்.

ஒன்றும் புரியாமல் விழித்தார் அப்பா.

****
(பின்குறிப்பு: அப்பாவின் சிநேகிதர்கள் என்ற கதையால் புகழ் பெற்ற அமர எழுத்தாளர் அசோகமித்திரனுக்கு அஞ்சலி.)

© Y Chellappa

46 கருத்துகள்:

 1. அருமையான் ஒரு நினைவு நதியில் நீந்தியிருக்கின்றீர்கள்...
  சீமைக்கருவை முள்ளொடித்த நினைவுகள் சிலிர்த்துக் கொள்கின்றன..

  விறகுக்கார கண்ணம்மா...
  கண்களுக்குள் ஈராமாய் படர்கிறார்....

  இதமான முடிப்பு...

  அழகு...அழகு.
  .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி தங்கள் வருகைக்கும் கருத்திட்டதற்கும்! நானும் சீமை கருவேலத்தை முள் ஒடித்து அண்டா வெந்நீர் காய்ச்சியவன் தான்!

   நீக்கு
 2. கண்ணம்மா கலங்கத்தான் வைக்கிறார்
  எழுத்தாளர் அசோகமித்திரனுக்கு ஒரு சிறந்த அஞ்சலி

  பதிலளிநீக்கு
 3. கண்ணம்மாக்கள் அதிசயம் தான்....மனம் நெகிழ்வாய்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்னும் பல கண்ணம்மாக்கள் இருக்கிறார்கள்.(மனத்தில்). நாமாகத் தேடிப்போனால் அவர்கள் வெளியே வருவதில்லை. அவர்களாக வரும்வரையில் காத்திருக்க வேண்டியுள்ளது. தங்கள் வரவுக்கு நன்றி.

   நீக்கு
 4. மிக மிக அற்புதமான கதை
  இதுவரைபடித்திராத கதையும்கூட
  பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மையோடு சிறிதே கற்பனை கலந்தது. தங்கள் வரவுக்கு நன்றி!

   நீக்கு
 5. அருமை.வெ்ங்கடாபுரம்
  வாழ்ந்த பால்ய ஞாபகம் வரவதை்ு விட்டீர்கள்்.பாட்டி விறகு அடுப்பு
  மூட்டி களிமண் குமிட்டியில் சாம்பார் மணம் வருகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி நண்பரே! பழைய ஞாபகங்கள் திடீரென்று தலை தூக்குவது இயற்கை தானே! சிலருக்கு அவற்றை எழுத்தில் வடிக்கும் பாக்கியம் கிடைக்கிறது.நான் பாக்கியசாலி!

   நீக்கு
 6. சிறு வய்தில் விறகு தொட்டிக்குச் சென்று விறகு வாங்கி வந்தது நினைவுக்கு வருகிறது அது சரி இது உங்கள் கதைதானே அசோக மித்திரனிடம் சுட்டதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சுடுவது, மறுபதிவு இடுவது என்பதெல்லாம் இன்னும் என் கைக்கு வராத நுட்பங்கள் தலைவரே! எழுதியதெல்லாம் சொந்தமே, சொந்தமே, சொந்தமல்லால் வேறில்லை! (உசுப்பியதற்கு நன்றி!)

   நீக்கு
 7. மிகவும் அருமையான படைப்பு என்பது சம்ப்ரதாயமான கமெண்ட் ஆகி விடும். உண்மையில் மிக அருமை.

  பதிலளிநீக்கு
 8. அப்பாவின் சிநேகிதிகள் என்கிற பன்மை இருப்பதனால் இன்னும் சில படைப்புகள் வரும் என்று எதிர்பார்க்கலாமா?!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வரவேண்டும். இன்னும் எவ்வளவோ இருக்கிறது. வரும். எப்போது என்று தெரியாது. அவ்வப்போது சில சம்பவங்கள் மனதில் புகுந்துகொண்டு 'என்னை உடனே எழுது' என்று உத்தரவிடும். அப்படி வந்தால் தான் உண்டு. உங்களைப் போலவே நானும் காத்திருப்பதைத்தவிர வேறு வழியில்லை. நன்றி ஸ்ரீராம்!

   நீக்கு
 9. நானும் தில்லியோ,அமெரிக்காவோ என்று நினைத்தேன்.நாளும் மூனும் 43 என்ற அப்பாவின் சிநேகிதி என்று அந்த கால நிகழ்வை அருமையாய் பதிவிட்டுள்ளீர்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்பா காலத்தில் கணினி இல்லை, இணையம் இல்லை, H1-B விசா இல்லை. எனவே அவரது சினேகிதிகள் எல்லாரும் இந்தியரே. போதுமா? தங்கள் வரவுக்கு நன்றி. (தமிழ்மணத்தை மறந்துவிட்டீர்களே! வோட்டு போடும் முறை இன்னும் அமலில் உள்ளது. சோதித்துப் பாருங்களேன்! ரமணி அவர்கள் இங்கு வந்துள்ளார். விரைவில் சந்திக்கப்போகிறோம்.)

   நீக்கு
 10. பராவாயில்லை உங்களுக்கு விறகு கடனாக கிடைக்கிறது..

  பதிலளிநீக்கு
 11. வழக்கமான உங்கள் நடையில் உங்கள் அனுபவ விவரணம் சார். கண்ணம்மா கண்ணில் நிற்கிறார்!

  கீதா: அந்தக் கருத்துடன், எனக்கு நான் சிறு வயதில் இந்தக் களி மண் அடுப்பு செய்ததும், அதில் சாணம் குழைத்துப் பூசியதும், முக்குத்தி அடுப்பு அதாவது மூன்று அடுப்பு இருக்கும் அதுவும் செய்திருக்கிறேன் சார். அப்போ எல்லாம் இந்தக் களிமண் அடுப்பு, விறகு, மற்றும் கரியடுப்புதான் சமையலுக்கு. கரியடுப்பில் அப்பளம் சுடுவார்களே அதற்கும் அது பயன் படும்..சுட்ட களி மண் அடுப்பு பானை போல சிவப்பு கலர், கறுப்பு கலர் அடுப்பும் வீட்டில் இருந்திருக்கிறது. அப்போதெல்லாம் விறகு சில சமயம் வாங்கினாலும், வீட்டின் பின் புறம் இருக்கும் மரங்கள் வெட்டப்பட்டால் அவை வெயிலில் காயவைக்கப்பட்டு அதுவும் பயன்படுத்தப்படும். சுள்ளி பொறுக்கிக் கொண்டும் வந்திருக்கிறோம். பழைய நினைவுகள்...

  பதிலளிநீக்கு
 12. என்ன ஒற்றுமை பாருங்கள்! கன்னியாகுமரி முதல் வட ஆர்க்காடு வரை எல்லா மாவட்டங்களிலும் மண் அடுப்பு இருந்திருக்கிறது! எல்லாரும் சுள்ளி பொறுக்கி இருக்கிறோம்! இதுதான் வேற்றுமையில் ஒற்றுமை என்பதோ! தங்கள் வருகைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 13. பதிவை/ கதையை எழுதிய பின்
  முடிவை
  வாசகர் வாசித்தறிய விடலாம்
  அல்லது
  வாசகரைத் தீர்மானிக்க விடலாம்
  இல்லையேல்
  இப்படி முடிவு கொள்ளலாமென
  உதவிக் (Hint) குறிப்பிடலாம்
  அல்லது
  ஈற்றில் நாமே
  முடிவைச் சொல்லி விடலாம்!
  இதனால்
  வாசகன் நிறைவடைய வாய்ப்புகள் அதிகம்!

  அவ்வாறே
  "இந்தக் க(தை)ட்டுரை அடுப்பு செய்வதைப் பற்றியதல்ல, அதில் பயன்படுத்தும் விறகுக்கட்டையைப் பற்றியது என்பதைப் பணிவோடு தெரிவித்துக்கொள்கிறேன். எனவே எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் விறகுக்கடை வைத்திருந்த கண்ணம்மாவைப் பற்றி நீங்கள் அறிந்தாக வேண்டும்." என்பதை
  தங்கள் பதிவின் முடிவினில் தெரிவித்திருக்கலாம்!

  தங்கள் சிறந்த பதிவுக்குப் பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனது எழுத்தை மேலும் சுவையுள்ளதாக்கத் தாங்கள் முன்வந்து கூறிய சிந்தனைகளை இனிவரும் பதிவுகளில் முயற்சிக்கப் போகிறேன். நன்றி நண்பரே!

   நீக்கு
 14. அட்டகாசம் சார்.சிறப்பான நடை.நிறைவு வரை சுவாரசியம் குறையவில்லை.

  பதிலளிநீக்கு
 15. //காலில் செருப்பின்றி, முள் குத்துவதைப் பொறுத்துக்கொண்டு, களிமண் சுமந்ததைப் பிட்டுக்கு மண் சுமந்த கதையோடு ஒப்பிட்டுப் பார்ப்பதுண்டு, பின்னாளில்.//

  நல்ல இடத்தில் சுவாரஸ்யம் முடிவு கண் கலங்க வைத்து விட்டது
  நண்பரே தங்களது பதிவு வருவது எனக்கு தெரிவதில்லை யதார்த்தமாக வந்தேன்
  ஃபாலோவர் க்ளிப் வைக்கலாமே...
  த.ம.6

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரே, "பின்தொடர.." என்ற இடத்தில் உங்கள் மின்னஞ்சல் முகவரியைக் கொடுங்கள். நல்லதே நடக்கும்! நன்றி.

   நீக்கு
 16. நெகிழவைக்கும் எழுத்து.. நினைவோ.. புனைவோ.. எதுவாயினும் நெஞ்சம் தொட்டது. ஈரவிறகை வாங்கிவராதே என்பார்கள் அம்மாக்கள் பொதுவாக.. இங்கே உங்கள் கதையில் ஈரமனத்துக்காரியின் ஈரஞ்சுமந்து வீட்டுக்கு வந்துவிடுகின்றன விறகுகள்.. அபாரம் ஐயா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக மிக அருமையான கதை. திருமங்கலத்தில் நான் பார்த்த விறகுத் தொட்டியின் வாசனையும், கோடரி சத்தமும்,தராசும், பாட்டி பிடித்துவைக்கும் களிமண் அடுப்பும் வெள்ளமாக நினைவுக்கு வந்தன. நெயின் அடுப்பில் சாதமும், கொடி அடுப்பில் பருப்பும் வேகவைக்கும் அம்மா நினைவு. கரியடுப்பில் காப்பி போட்டது,அப்பளம் காய்ச்சினது எல்லாம் என்னைக் கலங்கடித்தன. அந்த நாட்களின் அருமை இனி வருமா. மிக நன்றி ஜி.

   நீக்கு
  2. மிக்க நன்றி நண்பரே! எல்லா அம்மாக்களும் ஒரே மாதிரிதான் இருந்திருக்கிறார்கள் அந்தக் காலத்தில். இனிமேல் வருமா?

   நீக்கு
 17. அற்புதம் என்று சொல்வதா அல்லது அருமை என்று சொல்வதா என்று தெரியவில்லை, உங்கள் எழுத்தும் பதிவும் மனம் நெகிழச் செய்து விட்டது. அடுப்பு செய்ய மண் அள்ளியதும் அதை சுமந்ததும் என்று ஜீவனுள்ள அந்த நாள் ஞாபகங்களை அதே ஜீவனுடன் சொல்லிக்கொண்டே போயிருக்கிறீர்கள்!

  சின்ன வயதில் மண் அடுப்பில் வெந்நீர் சுட வைப்பார்கள் அம்மா. பாட்டி பக்கத்தில் அமர்ந்து கொண்டு ஊதாங்குழலால் அடுப்பூதிக்கொன்டு, தீ மேலும் எரிய தேங்காய் நார், கொட்டாங்கச்சித்துண்டுகள் என்றெல்லாம் போட்டு எரிய வைத்தது ஞாபகத்தில் எழுந்தன! அப்புறம் கொடுக்காபுள்ளி! பள்ளி வாசலில் விற்பார்கள். எத்தனை நாட்கள் சுவைத்திருக்கிறோம்! இப்போது சாப்பிட்டால் வாய் வெந்து போகிறது. தொண்டை கட்டிக்கொள்கிறது!

  என் சித்தப்பா விறகுக்கடை வைத்திருந்தார். நீங்கள் எழுதியது போல விறகுகளின் வாசம் நாம் கடைக்குச் செல்லும் முன்பேயே நம் அருகில் வந்து விடும்.

  அப்புறம் அந்த சிறுகதை! மனதைத் தொட்டது! அதில் கூட நான்கு பேரின் மன உணர்வுகளை தனிதனியே அழகழகாய் எழுதி விட்டீர்கள்!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் நெஞ்சார்ந்த பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி!

   நீக்கு
  2. கண்ணம்மா கண்கலங்கவைக்கிறார். இந்தமாதிரி மனிதர்களைத் தன்னகத்தே கொண்டுதான் வீறுநடை போடுகிறது வாழ்க்கை.

   நீக்கு
  3. தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

   நீக்கு
 18. கண்ணம்மா மனதில் நின்றுவிட்டார். இவரைப் போன்ற கண்ணம்மாக்களின் நினைவுகள் என்றும் மனதை விட்டு அகலாது. ஏதோ என் வீட்டில் நடந்ததைப் போலிருந்தது, படிக்கும்போது. நன்றி.

  பதிலளிநீக்கு
 19. ரொம்ப இயல்பான நடையில் நெகிழ்த்தும் கதை. நாடகத் தனமா இல்லாம எழுதியிருக்கீங்க. 'மனிதம்' கதையில் வெளிப்படும்போது நெகிழ்ச்சிக்குக் குறைவேது. அம்மாவின் மனிதம், கண்ணம்மாவின் மனிதம், சிறுவனின் இயல்பான பயம்... நல்லா எழுதியிருக்கீங்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் கருத்துரை மகிழ்ச்சியளிக்கிறது. நன்றி ஐயா!

   நீக்கு