பதிவு
எண் 24/2017
முனியம்மாவின் இளம்கழுதை
-இராய
செல்லப்பா
வாசலில்
நின்றுகொண்டு, “முனியம்மா வந்துவிட்டாளா?” என்று தாத்தா கேட்டால், ஐந்து
அர்த்தங்கள் உண்டு.
1
முனியம்மா வந்திருக்கிறாள், 2 அவர் எதிரில்தான் நிற்கிறாள், 3 ஆனால் தாமதமாக வந்துவிட்டாள்,
4 ஆகவே அவர் கோபமாக இருக்கிறார், 5 இன்று புதன்கிழமை -
என்று ஐந்து அர்த்தங்கள்.
தாத்தா
வேதங்களை நன்றாகப் படித்தவர். சாமவேத அறிஞர். யாகங்கள், ஹோமங்கள் நடத்துவிக்கும்
தலைமைப் புரோகிதர். வீட்டில் தவறாமல் வெள்ளிக்கிழமைகளில் துர்காபூசை நடத்துவார். இரவு
ஏழு மணிக்குத் தொடங்கினால் சகஸ்ரநாமம் முடிந்து, வடையும் பாயசமும் நைவேத்தியம்
செய்யப்பட்டு என் கைக்கு வரும்போது (நான்காவது வகுப்பு படித்துக் கொண்டிருந்த நான்)
பாதித் தூக்கத்தில் இருப்பேன்.
ஆனால் முனியம்மா அவ்வளவு நேரமும் நின்றுகொண்டே
இருப்பாள். சில சமயம் வாசல் திண்ணையில் அமர்ந்து கொண்டிருப்பாள். பூசை ஆரம்பமாகும்
முன்பு, தானே கட்டிய மல்லிகைப்பூச் சரத்தை பக்தியோடு தாத்தாவிடம் கொடுப்பாள். அதை
அவர் துர்கைக்குச் சாத்திவைப்பார். பூசை முடிந்ததும், ‘முனியம்மா’ என்று அழைத்து, அதே
பூவை எடுத்து, குங்குமம் தெளித்து அவளிடம்
கொடுப்பார். அதை மிகுந்த பணிவோடு வாங்கித் தன் தலையில் சூடிக் கொள்வாள். பாயசம் இன்னும்
வேண்டும் என்று கேட்டு வாங்கிக் குடிப்பாள். வடை மூன்று கேட்பாள். அதில்
பாட்டிக்கு மிகவும் ஆனந்தம்.
வெள்ளிக்கிழமை
பூசைக்குக் காலையில் இருந்தே ஏற்பாடுகள் நடக்கும். இங்குதான் முனியம்மா வருவாள். அதாவது,
அவள் சலவை செய்து கொடுத்த, தாத்தாவின் சரிகை போட்ட பத்தாறு வேஷ்டியும் அங்கவஸ்திரமும் வரும். புதன்கிழமை அவற்றைக் கொடுப்பார்.
வியாழக்கிழமை மாலை நாலு மணிக்குள் சலவைசெய்து, வெறுமனே மடித்துக் கொண்டுவந்து
தருவாள் முனியம்மா. தாத்தாவுக்கு இஸ்திரி வேண்டாம். சலவைக்குப் போய்வந்த துணிகளை ஒரு
வாளித் தண்ணீரில் முக்கி, நீளவாட்டத்தில் ஒருமுறையும் அகலவாட்டத்தில் ஒருமுறையும் அலசிப்
பிழிந்து, திண்ணைக்கு மேல் இருந்த மூங்கில் கொடியில் உலர்த்துவார். அதை யாரும்
தொடக்கூடாது. வெள்ளிக்கிழமை மாலை குளித்தபின்பு
அதை அணிந்துகொண்டுதான் துர்கா பூசையைத்
தொடங்குவார். ஆகவே புதன்கிழமையன்று அவள் வந்து சலவைக்கான துணிகளை எடுத்துப் போகவில்லை என்றால்
தாத்தாவுக்கு டென்ஷன் வந்துவிடும்.
பெயர் முனியம்மா
என்பதால் வயதானவளோ என்று மேற்கொண்டு படிக்காமல் போய்விடாதீர்கள். அவள்
இளம்பெண்தான். ராஜாத்தி கணக்காக இருப்பாள் என்று பாட்டி சொல்வதுண்டு. (யார் ராஜாத்தி?) அவளுக்கு அப்பா அம்மா யாரும் இருந்ததாக நான்
பார்த்ததில்லை. எங்கள் வீட்டுக்கு மிக அருகில் இருந்த ஒரு குடிசை வீட்டில் அவள்
குடியிருந்தாள், தனது தோழியுடன்.
‘தோழி’ என்பது அவளுடைய கழுதையின்
பெயர். வெளுப்பும் கருப்பும் கலந்த நிறம். சுறுசுறுப்பாக இருக்கும். அதற்கும் இளம்
வயதுதான். இராணிப்பேட்டை சந்தையில் முன்னூறு ரூபாய்க்கு வாங்கினாளாம். (உயர் ரகப்
பசுமாடு அப்போது இருநூறு ரூபாய்க்குக் கிடைக்கும்.) குழந்தைகள் அதை அழகான குதிரைக் குட்டி என்றே முதலில்
நினைத்தார்கள்.
அதிகாலையில் நாலரை
மணிக்கே எழுந்து தோழி குரல் கொடுக்கும். முனியம்மாவுக்கும் எங்கள் தெருவுக்கும் அதுதான் அலாரம். (இப்படி அகாலத்தில் கழுதை
கத்தினால் குழந்தைகள் மிரண்டு போய்விடாதோ என்று சில பாட்டிமார்கள்
பேசிக்கொள்வதுண்டு. ஆனால் முனியம்மாவிடம் யாரும் சொல்வதில்லை. சண்டைக்காரி,
அடுத்த நாள் சலவையெடுக்க வரமாட்டாளோ என்ற தயக்கம்.)
அதிகாலை எழுந்தவுடன்
முனியம்மா, தோழியை இடம் மாற்றிக் கட்டுவாள். கழிவுகளைப் பெருக்கிச் சுத்தம்
செய்வாள். முகம் கழுவி, வாய் கொப்பளிப்பாள். சலவைக்கான துணிகளை நான்கைந்து மூட்டைகளாக்கித்
தோழியின் முதுகில் ஏற்றுவாள். பிறகு குனிந்து அதன் கழுத்தின்மீது தன் முகத்தை
அழுத்திக்கொண்டு, ‘தோழிக் கண்ணு, போகலாமாடி?’ என்று கொஞ்சுவாள். அது சரி என்று
தலையசைத்தால்தான் இருவரும் கிளம்புவார்களாம்.
(நான் பார்த்ததில்லை. ஆறு மணிக்குத்தான் நான் எழுவது வாடிக்கை.) எதிர் வீட்டு
நாயர் தன் சன்னல் வழியாக முனியம்மா, தோழியைக் கொஞ்சுவதைப் பார்த்துக்கொண்டிருப்பாராம்.
தானும் அவர்களுக்குத் துணையாக நடப்பாராம். எப்படியும் காலைக் கடன் கழிக்க அவர்
பாலாற்றங்கரைக்குத்தான் போகவேண்டும். அத்துடன் தோழிமீது அவருக்குப் பிரியமோ என்னவோ.
பாலாற்றங்கரையில் சலவைத்
தொழிலாளர்களுக்கென்று ‘டோபி கானா’ இருந்தது. வெள்ளாவிப் பாத்திரங்களை
வைப்பதற்கும், பிழிந்த துணிகளை வைப்பதற்கும் ஒவ்வொருவருக்கும் சிறிய இடம்
ஒதுக்கப்பட்டிருந்தது. கழுதைகளைச் சற்று தூரத்தில் கட்டியிருப்பார்கள். சிலவற்றை அவிழ்த்தும்
விடுவார்கள். காலைக்கடன் கழிக்கவும், காதல் உணர்வுக்கு வடிகால் தேடவும் அதுதான்
நேரம். முனியம்மா போய்ச் சேருவதற்குள் அங்கே இருபது முப்பது பேர் தங்கள் தொழிலில்
தீவிரமாக ஈடுபட்டிருப்பார்கள். தோழியை எதிர்பார்த்து சில கழுதைகள் ஆவலோடு
காத்திருப்பதும் உண்டு. தோழியைத் தூரத்தில் கண்டதுமே தங்கள் குரலில் வரவேற்பு
கீதம் இசைப்பதும் உண்டு. அந்தக் குரல்களைக் கேட்டதும், நீண்ட கற்களின் மீது
வெள்ளாவி வைத்த துணிகளைப் பேராவேசத்துடன் ஓங்கி அறைந்து தோய்த்துக் கொண்டிருக்கும் இளைஞர்கள் ‘குட்டி வந்துடுச்சி’ என்று கண்களாலேயே
தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவிப்பதுண்டு.
ஆற்றில் குளிக்கப்
போகும் நாட்களில் அந்த டோபிகானாவைக் காட்டியிருக்கிறார் அம்மா. எனக்கு இரண்டு
வருடங்களுக்குப் பிறகு ஒரு தம்பி பிறந்தானாம். தெரியாமல் விஷ ஆமணக்குக் காயைச் சாப்பிட்டதால் வாயெல்லாம் நுரைதளும்பி
உடனே இறந்துவிட்டானாம். அவனை அங்குதான் புதைத்தார்களாம். புதைத்த இடத்தில் நட்ட கனகாம்பரம்
செடி இப்போது புதர்மாதிரி வளர்ந்துவிட்டதால் புதைத்த இடம் சரியாகத் தெரியவில்லை என்பார். ‘அவன்
எப்படி இருப்பான்’ என்றால் அம்மாவின் கண்கள் குளமாய்விடும். ‘நீயே சின்னக் குழந்தை
அப்போது. உனக்கு அவனை எப்படித் தெரியும்? எனக்கே அவன் மூஞ்சி மறந்துடுத்து கண்ணா’ என்று கனகாம்பரச் செடிகளையே உற்றுப் பார்ப்பார். சற்று
நேரம் கழித்து, கண்களைத் துடைத்துக்கொண்டு சொல்வார்: ‘பௌர்ணமிதோறும் சத்தியநாராயண
பூசை பண்ணுவோம். அதனால் சத்தியநாராயணன் என்று பெயர் வைத்தோம். தங்காமல்
போய்விட்டான். நான் செய்த பாவம். இனிமேல் அந்தப் பூசையே வேண்டாம் என்று
நிறுத்திவிட்டோம்.’
டோபிகானாவில் இருந்து
வேலைகளை முடித்துக்கொண்டு தோழியின் முதுகில் சலவைத் துணிகளை ஏற்றிக்கொண்டு
குதூகலமாக வருவாள் முனியம்மா. வெயிலுக்குமுன் கிளம்பிவிட்ட மகிழ்ச்சி தோழிக்கும்
இருக்கும். முதுகில் சுமை இருந்ததால் அதனால் துள்ளமுடியாது. ஆனால் வேகமாக நடக்கும்.
தன் குடிசைக்கு
வந்தவுடன் முதல் காரியமாக எங்கள் வீட்டு சலவைத்துணிகளைக் கொண்டுவந்து
கொடுத்துவிடுவாள். இல்லையென்றால் தாத்தா கத்துவார் என்பதுடன், துணிகள் வந்தவுடன்
பாட்டி முனியம்மாவை அன்போடு அழைத்து ஒரு கிண்ணத்தில் அல்லது தட்டில், அன்று வைத்த
சாம்பாரோ, குழம்போ, கூட்டோ, பொரியலோ அல்லது இவை எல்லாமோ ஒரு ஆள் சாப்பிடக்கூடிய
அளவுக்குக் கொடுப்பார்.
‘இன்னும் எவ்வளவு
நாள்தான் ஒற்றை ஆளாகவே இருக்கப்போகிறாய்? புருஷன்னு ஒருத்தன் வேண்டாமா? வெறுமே
தோழியைக் கட்டிக்கொண்டு குடும்பம் நடத்தலாம்னு இருக்கியா?’ என்பார் பாட்டி.
முனியம்மா ‘போங்க
மாமி..’ என்று வெட்கத்துடன் கொடுத்ததை வாங்கிக்கொள்வாள்.
‘ஏண்டி, ஒங்க சாதியிலே
நல்ல ஆண் பிள்ளைகள் கிடையாதா? இவ்வளவு அழகா ஒருத்தி இருக்கியே, யாரும் வந்து
பொண்ணு கேக்கலியா? சொந்தமா குடிசை இருக்கு, கழுதை இருக்கு, நல்லா உழைக்கிறே, இதை
விட என்ன வேணும் ஒருத்தனுக்கு?’ என்று பாட்டி அவளை நிறுத்திவைத்துக் கேட்பார்.
முனியம்மா பேசாமல்
போய்விடுவாள். ஆனால் குடிசை அருகில் போனவுடன் நாலு பேருக்குக் கேட்கும்படியாக, ‘யாரோ ஒரு தடியனுக்கு நான் ஏன் சம்பாரிச்சிக்
கொடுக்கணும் மாமி? அவனுக்கு வேணும்னா அவனே வந்து என்கிட்ட கேக்கட்டுமே.
அதுவரைக்கும் என் தோழி மட்டும் போதும்’
என்பாள்.
**
அப்புறம் ஒரு
வெள்ளிக்கிழமை. துர்காபூசை. முனியம்மா வழக்கம்போல் மல்லிகைப்பூச்சரம் கொண்டுவந்தாள்.
அத்துடன் ஒரு கதம்ப மாலையும் கொண்டுவந்திருந்தாள். என்னடி விசேஷம் என்பதுபோல்
பாட்டி அவளை நோக்கினார். பூசை முடிந்தவுடன் சொல்கிறேன் என்று இவளும் சாடை காட்டினாள்.
பூசை முடியும்போது (இரவு)
எட்டரை மணி. வடையும் பாயசமும் கொடுத்தார் பாட்டி. அதை வாங்கிக்கொண்ட முனியம்மா,
‘மாமி, இந்த ஆளுக்கும் குடுங்க’ என்றாள். முகத்தில் அந்த இருட்டிலும் வெளிச்சம்
தெரிந்ததைப் பாட்டி கவனிக்கத் தவறவில்லை.
இருட்டில் அதுவரை நின்றுகொண்டிருந்த ஓர்
இளைஞன் வெளிச்சத்திற்கு வந்தான். அதிர்ச்சியாக இருந்தாலும் பாட்டிக்குப்
புரிந்துவிட்டது. இதற்குமுன் இவனைப் பார்த்ததில்லை. சரிதான், வயது அதனுடைய
வேலையைக் காட்டிவிட்டது போலும். நீலமும்
கருப்பும் கலந்து கோடுபோட்ட சங்கு மார்க்கு லுங்கியும் எம்ஜியார் படம் போட்ட
பனியன் மாதிரியான சட்டையும் அணிந்திருந்தான். ‘இவன் தான் இவளோட ஆளா? நன்றாகத்தான்
இருக்கிறான்.’
அவனுக்கும் வடை, பாயசம்
கொடுத்தார் பாட்டி. அவர்கள் கிளம்பினார்கள். ‘முனியம்மா..’ என்று அழைத்தார். ‘இவன் யார்னு
கேக்க மாட்டேன். புரிஞ்சிடுத்து. இவன் வீடு எங்கே இருக்குன்னு மட்டும் சொல்லு.’
முனியம்மா தயங்கினாள்.
‘இவரு அநாதைங்க.. வெளியூரு’ என்றாள். அவனும் குற்றம் செய்துவிட்டவன் மாதிரி
தலையைக் குனிந்து கொண்டான்.
பாட்டிக்கு ஷாக் அடித்தது
போல் இருந்தது. ‘என்னடி சொல்றே, முட்டாள் பொண்ணே! முன்பின் தெரியாத ஒருத்தனை எந்த
தைரியத்துல ஒன்னோட சேத்துக்கப் பாக்கறே? அதுவும் இப்ப ராத்திரி வேளை. நாலு பேரு
என்ன சொல்வாங்க? சரி, இப்ப ராத்திரிக்கு எங்க தங்கப் போறான் இவன்?’ என்று
முனியம்மாவின் கண்களை ஆழமாக நோக்கினார்.
முனியம்மாவுக்குக்
கண்களில் நீர் சுரக்க ஆரம்பித்துவிட்டது. முகத்தில் வியர்வை பூக்கத் தொடங்கியது. என்ன
பதில் சொல்வதென்று தெரியவில்லை. தான் தவறு செய்ய இருந்தது புரிந்துவிட்டது. ‘ஆமாம்,
இவனை எங்கே தங்கச் சொல்வது?’
பாட்டி யதார்த்தம் தெரிந்தவர்.
‘இங்கப் பாருடி. அறிவில்லாம ஏதாவது பண்ணிட்டு நிக்காதே...’ என்றவர், அவனைப்
பார்த்து, ‘இதோ பாருப்பா, நீ யாரோ எனக்குத் தெரியாது. இந்தப் பொண்ணு ரொம்ப நல்ல
பொண்ணு. அவளோட வாழக்கை பாழாய்டக் கூடாது. அம்மா அப்பா கெடயாது. சாதி சனம் கெடையாது. கையிருக்கு, கழுதை இருக்கு.
ஒழைச்சி தொழில் பண்றா. நாலு காசு வருது. அவ்ளோதான். மத்ததெல்லாம் நாளைக்கு பேசிக்கலாம். போய்
சாப்பிட்டுவிட்டு எங்க வீட்டுத் திண்ணையில படுத்துக்கோ. நாளைக்கு நாலு பேர வச்சி
நடக்கவேண்டியதப் பாக்கலாம்’ என்று முடிவாகச் சொன்னார். ‘ஏம்ப்பா, நீ பீடி கீடி
குடிப்பியா?’ என்றார்.
அவன் இல்லை என்று
தலையாட்டினான். ‘பாலத்துக்கீழே போவியா?’ என்றார். இல்லை என்றான். பாலத்தின்
கீழ்தான் கள்ளச் சாராயம் விற்பதாகக் கேள்வி.
அத்துடன், ‘முனியம்மா,
போய் இன்னும் ரெண்டு தட்டோ கிண்ணமோ கொண்டுவா. இவனுக்கும் சேர்த்து சாதம் கொழம்பு
தர்றேன். ஏம்ப்பா, ஒனக்கு எலுமிச்சம் ஊறுகா புடிக்குமா?’ என்றார்.
‘மாமி நீங்க தெய்வம்
மாதிரி.’ முனியம்மா நெகிழ்ந்து போனாள்.
அன்று இரவு அந்த ஆசாமி
எங்கள் வீட்டுத் திண்ணையில் படுத்துக் கொண்டான். தூங்கினானா என்று தெரியாது. முனியம்மாவும்
தூங்கியிருக்க மாட்டாள் என்றுதான் தோன்றியது.
**
‘தோழி’ கத்துவதற்கு
முன்பே தாத்தாவும் பாட்டியும் எழுந்து விட்டனர். தாத்தா எழுந்துவிட்டால்,
திண்ணையில் யாரும் படுத்திருக்கக் கூடாது என்பது சட்டம். திண்ணைக்குத் தண்ணீர்
தெளிக்காமல் வாசலில் கோலம் பாடமாட்டார் பாட்டி. ஆகவே அவன்
எழுந்துவிட்டான்.
பாட்டி தண்ணீர்
தெளிக்கும் சப்தமோ, அல்லது, தாத்தா கிணற்றடியில் தண்ணீர் சேந்திக் குளிக்கும்
சப்தமோ முனியம்மாவை எழுப்பி யிருக்கவேண்டும். தோழி கத்துவதற்குச் சற்றுமுன்பே
விழித்துவிட்டாள்.
வழக்கமான வேலைகளை
முடித்துக்கொண்டு, மூட்டைகளைத் தோழியின் முதுகில் வைத்துக்கொண்டு
பாலாற்றங்கரைக்குப் புறப்பட்டாள். எங்கள் வீட்டுக்கதவு திறந்திருந்ததும் பாட்டி
அந்த வேளையில் கோலம்போட்டுக் கொண்டிருந்ததும் அவளுக்குப் புதுமையாக இருந்தது. ஆறு
புள்ளிக் கோலம் போட்டுக்கொண்டிருந்த பாட்டி அடிக்கடித் தன் குடிசைப்பக்கம்
பார்ப்பதுபோல் இருந்தது அவளுக்கு.
அவனுடன் பேசுவதற்கே கூச்சமாக இருந்தது. அவனும்
என்ன செய்வதென்று தெரியாமல் அவளைப் பின்தொடர்ந்து நடந்தான்.
***
அன்றும் அதற்கடுத்த
நாளும் வேகமாகக் காரியங்கள் நடந்தேறின. அதாவது, என் பாட்டியின் தலைமையில் தெருவில்
இருந்த திருமணமான ஐந்தாறு பெண்மணிகள் கூடிப்பேசி, முனியம்மாவுக்கும் அந்த இளைஞனுக்கும்
திருமணம் செய்துவைத்தார்கள். அவனுக்கும் சொந்தபந்தம் இல்லை. இவளுக்கும் இல்லை.
எனவே தெருக்காரர்கள் தான் எல்லாம். அவளுடைய குடிசைக்கு வெளிப்புறம் இருந்த காலி
இடத்தில் பந்தல்போட்டு அதுவே மணமேடையாயிற்று. படவேட்டம்மன கோவில் பூசாரி தானே
முன்வந்து திருமணத்தை நடத்திவைப்பதாகச் சொல்லி, முடிந்தபிறகு அடாவடியாக
இருபத்தைந்து ரூபாய் வசூல் செய்துகொண்டு போனார்.
தாத்தாவும் பாட்டியும் புதிய
துணிமணிகள் வாங்கிக்கொடுத்தனர். நாயர் அன்புமிகுதியால் ஒரு பட்டுப்புடவை வாங்கிக்
கொடுத்தார். ஓட்டல் வைத்திருந்த வைத்தியநாத அய்யர் எல்லாரையும் ஓட்டலுக்கு
வரச்சொல்லி விருந்து கொடுத்தார். முனியம்மா
வாடிக்கையாகச் சலவை எடுக்கும் வீடுகளில் இருந்து பலரும் வந்து மொய்
எழுதினார்கள். முன்னூறு ரூபாய் வந்தது. அதைத் தாத்தாவிடம் பாதுகாப்புக்காகக்
கொடுத்தாள் முனியம்மா.
பாட்டியின் கால்களில்
விழுந்து விழுந்து வணங்கினார்கள் இருவரும். ‘எங்க அம்மா இருந்தாக்கூட இப்படிப்
பண்ணியிருக்க மாட்டாங்க..’ என்று சொல்லிக்கொண்டே இருந்தாள் முனியம்மா. ‘போடி அசடே!
எல்லாம் நல்லபடியா இருக்கும். புருஷன் பொஞ்சாதி ரெண்டுபேரும் சந்தோஷமா இருக்கணும்.
எத்தனை வெள்ளிக்கிழமை துர்கா பூசைக்கு வந்திருக்கே, ஒனக்கு ஒரு கொறைச்சலும் வராது’
என்று மனதார வாழ்த்தினார் பாட்டி.
தாத்தா ஒருபடி மேலே
போய், முனியம்மாவின் கணவனை அழைத்து, ‘இந்தாப்பா, நான் சொல்றேன்னு கோவிச்சுக்க
மாட்டியே’ என்ற பீடிகையோடு ஆரம்பித்தார். ‘இல்லீங்க, நீங்க என்ன சொன்னாலும்
கேக்குறேன்’ என்றான் அவன்.
மொய்ப் பணம் முன்னூறு
ரூபாயில் ஒரு இஸ்திரிப் பெட்டியும், மேசையும் இரண்டு நாற்காலிகளும் ஒரு
பெட்ரோமாக்ஸ் விளக்கும் வாங்கிக் கொள்ளும்படி தாத்தா யோசனை கூறினார். ஒரு தச்சர்
வரவழைக்கப்பட்டு அவரிடம் மரவேலை ஒப்படைக்கப்பட்டது. மனைவி
துவைத்துக்கொண்டு வந்தால், கணவன் இஸ்திரி போட்டுத்தர வேண்டும் என்று ஏற்பாடு.
முதலில் குடிசையின் வெளிப்புறமே இஸ்திரிக் கடை நடக்கும் என்றும், சில மாதங்களில்
மெயின்ரோட்டில் ஓர் இடம் பார்த்துக்கொள்ளலாம் என்றும் அதிக வருமானம் கிடைக்கும்
என்றும் தாத்தா ஏற்பாடு செய்தார்.
நாயர் வந்து தாத்தாவின்
காதில் ஏதோ சொன்னார். சரி என்று விஷமமாகச்
சிரித்தார் தாத்தா. சற்றுநேரத்தில் நாயர் வீட்டில் இருந்து பழைய இரும்புக்
கட்டில் ஒன்று முனியம்மாவின் குடிசைக்கு
இடம் மாறியது.
மறுநாள் காலை,
வழக்கம்போல் தோழி நாலரைமணிக்கே கத்தியது. ஆனால் குடிசையின் கதவு திறக்க மேலும்
இரண்டுமணிநேரம் ஆயிற்று.
***
சில மாதங்கள் எல்லாம்
நல்லபடியாகப் போய்க்கொண்டிருந்தது, ‘அந்த’ வெள்ளிக்கிழமை வரும் வரை.
வெள்ளிக்கிழமை சந்தை
கூடும்நாள். (சந்தை என்றால் தெரியாதவர்களுக்கு: அது ஒரு திறந்தவெளி டிபார்ட்மென்ட்டல்
ஸ்டோர் என்று வைத்துக் கொள்ளலாம்.) முனியம்மா
பகல் இரண்டு மணிக்குக் கிளம்பினாள்.
அவளும் இன்னொரு பெண்ணும் சந்தைக்குப் போய் ஒரு வாரத்திற்கு வேண்டிய சாமான்களை வாங்கிவருவது
சமீப காலமாக வழக்கமாகி விட்டிருந்தது.
அவன் பகல் உணவு
சாப்பிட்டவுடன் இஸ்திரி வேலையில் ஈடுபட்டிருந்தான். ஒரு பாத்திரத்தில் நிலக்கரி
புகைந்து கொண்டிருந்தது. ஒரு குவளையில் தெளிப்பதற்காகத் தண்ணீர் இருந்தது. நிறைய
துணிகள் மேசையின் ஒருபுறம் குவிந்திருந்தன. அப்போதுதான் அது நடந்தது.
வாட்ட சாட்டமான மனிதர்
ஒருவர் வந்து முனியம்மா வீடு எது என்று கேட்டார். இஸ்திரி செய்துகொண்டிருந்தவன்
பக்கம் கையைக் காட்டினார் ஒருவர். அவ்வளவுதான், வந்தவர், அவனைத் தன்
இரும்புக்கைகளால் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார். உதடுகளை மடித்து விசில் ஓசையை
எழுப்பினார். சில நிமிடங்களில் ஒரு போலீஸ் ஜீப் வந்து அவனை அள்ளிக்கொண்டு
போயிற்று. யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. திருட்டு கேசாக இருக்கும் என்று
நினைத்தார்கள்.
‘இப்படி ஆகும்னு அப்பவே
தெரியும்’ என்றார் ஒரு தீர்க்கதரிசி. அவன் பேரு கூடத் தெரியாதே என்றார் ஒருவர்.
பாவம், முனியம்மா, எங்கிருந்தோ வந்த ஒரு திருடனைப் போய்க் கல்யாணம் பண்ணிக் கொள்ள
நேர்ந்ததே என்று பெண்கள் ஆதங்கப்பட்டார்கள். யார் இந்தக் கல்யாணத்தை முன்னின்று
நடத்தினார்கள் என்று கேட்டார் ஒரு புதியவர். அதிர்ச்சியான தாத்தா, ஒரு பையனை அழைத்து
போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் விஷயத்தைத் தெரிந்துகொண்டுவரச் சொன்னார்.
சந்தையில் இருந்து மாலையில்
திரும்பினாள் முனியம்மா. அவளிடம் விஷயத்தைச் சொல்ல ஆவலோடு ஓடிவந்தார்கள் தெருவாசிகள்.
முனியம்மாவின்
முகத்தில் சற்றும் அதிர்ச்சி இல்லை. வருத்தம் இல்லை. கலக்கம் இல்லை. என்ன பெரிதாக
நடந்துவிட்டது என்ற பாவனையில் அவள் இருந்தது எல்லாருக்கும் திகைப்பை
உண்டுபண்ணியது. கையில் இருந்த சுமைகளை உள்ளே வைத்துவிட்டு நிதானமாக வந்தாள்.
‘போலீஸ்
ஸ்டேஷனுக்குப் போயிட்டுத்தான் வர்றேன்..’ என்றாள் முனியம்மா.
இது அவள்
எதிர்பார்த்தது தானாம். அவனை அவளுக்கு நீண்ட நாட்களாகவே தெரியுமாம். அவன் திருடன்
அல்லவாம். அதை விடக் கொஞ்சம் மேலாம். கொலைகாரனாம். ஒரு வருடம் முன்பு, லாரி கிளீனராக
ஆந்திராவில் இருந்தபோது, குடிபோதையில் ஒரு சாராயக் கடைக்காரனைக் கொலை செய்துவிட்டுத்
தப்பி வந்துவிட்டானாம். அன்றுமுதல் குடிப்பதில்லையாம். முனியம்மாவிடம் சொல்லி
அழுதானாம்.
‘யாரும் இல்லாத
அநாதைங்க அவரு. அதான் பரிதாபப்பட்டு இங்க வரச் சொன்னேன். என்னிக்கிருந்தாலும்
ஜெயிலுக்குப் போவார்னு எனக்கும் தெரியும், அவருக்கும் தெரியும்...என்ன பண்றதுங்க,
எம் பொழப்பு இப்படித்தான்னு ஆகிட்ட பிறகு வருத்தப்பட என்ன இருக்கு? விடுங்க,
இஸ்திரி துணி ஏராளமா இருக்கு. சீக்கிரம் முடிக்கலேன்னா எல்லாரும்
கோவிச்சுக்குவாங்க...’ என்று வேலையில் இறங்கினாள் முனியம்மா.
வயதான பெண்மணி ஒருத்தி
அவளை நேருக்கு நேர் பார்த்துக் கேட்டார். ‘ஏண்டி முனியம்மா, ஒனக்கு இப்படியா
புத்தி போகணும்? ஒனக்கு என்ன அழகில்லையா, தொழில் இல்லையா? ஒரு கொலைகாரனைப் போய்க்
கல்யாணம் பண்ணிக்கிட்டியே, வேண்டாம்னு சொல்லியிருக்கலாமே.’
சற்று நேரத்தில் மறுபடியும்
போலீஸ் ஜீப் அவள் வாசலில் வந்து நின்றது. சப்-இன்ஸ்பெக்டர் இறங்கினார். கூடவே
தாத்தா அனுப்பிய ஆளும் இறங்கினார். பருந்தைக்கண்ட கோழிக்குஞ்சு மாதிரி ஒடுங்கி நின்றாள், முனியம்மா. அவள் கழுத்தில்
மின்னிய மஞ்சள் மெருகழியாத தாலிச்சரட்டைக் கூர்ந்து நோக்கினார் சப்-இன்ஸ்பெக்டர்.
‘போலீஸ் ஸ்டேஷனுக்கு
வந்தவ நீ தானே?’ என்றார்.
‘ஆமாங்க.’
‘ஒன்னைத்தான் மொதல்ல
உள்ள போடணும் தெரியுமா? ஒரு கொலைகாரனுக்கு எடம் கொடுத்ததும் அல்லாம அவனையே தைர்யமா
கல்யாணம் வேறே செஞ்சிருக்கியே!’
ஓவென்று அழ ஆரம்பித்தாள்
முனியம்மா. அழுதுகொண்டே இருந்தாளே தவிர பதில் பேசவில்லை.
கூட்டம் அதிகமாகியது. அவ்வளவு
பேருக்கு மத்தியில் ஓர் இளம்பெண்ணை அழஅழக்
கேள்விகேட்கும் நிலைமை ரசமானதாக இல்லை
என்று தோன்றியது. ‘அழறத நிறுத்து’ என்றார் அதிகாரமான தொனியில். அவளோ மூர்ச்சையானவள்போல்
தரையில் விழப்போக, அருகில் இருந்தவள் தாங்கிக்கொண்டாள்.
‘நான் இப்ப வந்ததுக்கு
முக்கியமான காரணம் என்ன தெரியுமா? ஒனக்கு ஒரு நல்ல சேதி சொல்றதுக்குத்தான்....’
என்று நிறுத்தினார் சப்-இன்ஸ்பெக்டர்.
முனியம்மா மட்டுமின்றி,
மற்றவர்களும் ஆவலோடு அவர் முகத்தையே பார்த்தார்கள்.
‘அவன் யாரைக் கொலை
செஞ்சதா கேஸ் இருக்குதோ, அந்தாளு சாகலை. ஒரு வருஷமா கோமாவுல படுத்திருந்தவர் இப்ப பொழைச்சிட்டாராம்.
ஆந்திரால இருந்து தகவல் வந்தது. அதனால ஒம் புருஷனுக்கு ஆயுள்தண்டனை கெடைக்காது, அதிக பட்சம் அஞ்சு
வருஷம் தான். புரிஞ்சுதா? ஒனக்குத் தாலி கட்டின அதிர்ஷ்டமாத்தான் இருக்கணும்’
என்றார் சப்-இன்ஸ்பெக்டர்.
கெட்டதில் ஒரு நல்லது
என்று கூட்டம் பெருமூச்சு விட்டுக்கொண்டே கலைந்தது.
இஸ்திரி போடும்போது
தெளிப்பதற்காக வைத்திருந்த தண்ணீரை அவள் முகத்தில் தெளித்தார்கள். பரபரப்புடன்
எழுந்த முனியம்மா ‘தாயே துர்காதேவி,
என்னைக் காப்பத்திட்டே அம்மா’ என்று கண்களைத் துடைத்துக்கொண்டாள்.
தாத்தா குளிப்பதற்காகக்
கிணற்றடிக்குப் போனார். பாட்டி முதலில் குளித்துவிட்டார். வடை, பாயசம் தயாரிக்க
வேண்டுமே! வெள்ளிக்கிழமை. துர்காபூசை. இன்று முனியம்மாவுக்குக் கொஞ்சம் அதிகமாகவே பாயசம் கொடுக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டார் பாட்டி.
© Y Chellappa
Email: chellappay@gmail.com
(பின்குறிப்பு: தனக்கு வாடகைக்கு
வீடு கொடுக்க மறுப்பதாக ஒரு கவிஞர் பேசியிருந்தார் அல்லவா, அப்போது நினைவில்
பொறிதட்டியது. விளைவு - முன்பின் தெரியாதவனுக்கு வீடு மட்டுமல்ல தன்னையே கொடுத்த
ஒருத்தியின் உண்மைக்கதை rewind ஆகி வெளியே வந்து விழுந்தது!)
வீடு கிடைக்காததை அவர் இப்படி எழுதி,மற்றவர்களை உசுப்பேற்றியிருக்க வேண்டாம் என்றுதான் எண்ணுகின்றேன் ஐயா
பதிலளிநீக்குகிராமத்து வாழ்க்கையும்,கிராமத்து வெள்ளந்தி மனிதர்களின் உள்ளமும் தங்களின் எழுத்தில் மின்னுகிறது ஐயா
தங்கள் வரவுக்கு நன்றி நண்பரே!
நீக்குகெட்டதில் நல்லது. நல்ல மனதுக்கு எந்த ஒரு குறையும் வராது என்பதை உணர்த்தும் பதிவு.
பதிலளிநீக்குமிக்க நன்றி ஐயா!
நீக்குமக்கள் ஒருவருக்கொருவர் பேதங்கள் மறந்து வாழ்ந்ததெல்லாம் கண் முன்னே கண்டிருக்கிறேன்..
பதிலளிநீக்குயாருடைய கண் பட்டதோ தெரியவில்லை..
அன்பினால் கூடியிருந்த மக்களைப் பற்றிய பதிவு.. அருமை..
ஆம், கண் பட்ட மாதிரிதான் ஆகிவிட்டது. சாதிக்கு சாதி, சாதிக்குள்ளேயே ஆயிரம் சாதி என்று பிரிவினை உணர்வுகள் அதிகரித்துவிட்டன. அன்று இதெல்லாம் இளைஞர்களுக்குத் தெரிந்திராதவை.
நீக்குஅன்பினால் கூடிவாழ்ந்த மக்களைக் கண்முன் நிறுத்தியது கதை.
பதிலளிநீக்குஉண்மைதான் நண்பரே. அன்று அன்பு என்ற ஒன்று அனைவரையும் சங்கிலியாகப் பிணைத்திருந்தது.
நீக்குசிறுகதையானாலும் மெருகேறி இருக்கிறதூங்கள் எழுத்தில் பாராட்டுகிறேன் சார்
பதிலளிநீக்குமிகச் சிறப்பான கதை ஐயா...
பதிலளிநீக்குதமிழில் பிரபல எழுத்தாளர்கள் எதை எழுதினாலும் வாசிப்பார்கள் என்ற நினைப்பிலும் பிரபலங்களின் எழுத்தே தங்கள் பத்திரிக்கை விற்பனைக்கு தேவை என்ற நினைப்பில் பத்திரிக்களும் இருக்கும் வரை இவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசுவார்கள்....
சமீபத்திய உதாரணம் பாலகுமாரன், ஜெமோ அப்புறம் மனுஷ்.
இவர் செய்தது மிக மோசமான செயல்...
முனியம்மா செய்தது மிகவும் சிறப்பான செயல்...
...குமார் உங்கள் கருத்தை வழிமொழிகிறோம்..சூப்பர்...
நீக்குவணக்கம் நண்பரே முடிவு நெகிழ வைத்து விட்டது தங்களது எழுத்துநடை நேரில் கண்ட உணர்வைத் தந்தது.
பதிலளிநீக்குநன்றி நண்பரே!
நீக்குகதையின் ஆரம்பம் பிடித்திருக்கு . அவள் வெளுத்த துணிகளை தொழிசுமந்தது இனி ஒருவன் அவளுக்கு சுமையாக இருக்கப்போறன் ஐந்து வருடத்துக்கு குடும்ப கட்டுப்பாடுதான்
பதிலளிநீக்குதங்கள் வரவுக்கும கருத்திட்டதற்கும் நன்றி ஐயா!
நீக்குதுர்கா பூஜை செய்தால் மனுசுக்கும் வீடு கிடைக்கும்னு சொல்ல வர்றீங்களா :)
பதிலளிநீக்குதெய்வத்தைப் பூசை செய்தால் நிச்சயம் கிடைக்கும் என்று தோன்றுகிறது. ஆனால் நீங்கள் சொல்வது எந்த துர்காவை?
நீக்குஅருமையான உண்மை கதை. அன்பான ஊர் மக்கள் பாசமும், நேசமுமாய் வாழ்ந்த காலங்களை அழகாய் கண்ணில் நிறுத்திய எழுத்து நடை.
பதிலளிநீக்குகருத்தூட்டத்திற்கு நன்றி!
நீக்கு....மிக மிக அருமையான உண்மைக் கதை....முனியம்மாவின் அன்பும் தைரியமும், மற்றும் தாத்தா பாட்டியின் அன்பும் அக்கறையும் வியக்க வைக்கிறது...நல்ல தாத்தா பாட்டி..அன்பான மனிதர்கள் வாழ்ந்த ஊர்....இப்போது இப்படி நினைத்துப் பார்க்க முடியுமா....முனியம்மாவும் அவள் தோழியும் கண் முன்னே நிற்கிறார்கள்....
பதிலளிநீக்குதங்கள் வரவுக்கும் கருத்திட்ட பாங்கிற்கும் நன்றி நண்பரே!
நீக்குமனுஷ் புண்ணியத்தில் ஒரு நல்ல சிறுகதை கிடைத்தது.
பதிலளிநீக்குஆமாங்க, மனுஷ்யபுத்திரன் பல நேரங்களில் நல்லதும் செய்கிறார். நல்ல கவிதைகளும் தருகிறார்! தங்கள் வரவுக்கு நன்றி.
நீக்குகதையோ கற்பனையே! அருமை!நடை நன்று!
பதிலளிநீக்குதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா!
நீக்கு"கெட்டதில் ஒரு நல்லது என்று கூட்டம் பெருமூச்சு விட்டுக்கொண்டே கலைந்தது." எனச் சிறப்பாகக் கதை நகர்ந்து வருகிறது.
பதிலளிநீக்குபாராட்டுகள்!
தங்கள் வரவும் கருத்துரையும் மகிழ்ச்சி தருகின்றன நண்பரே!
நீக்குமுனியம்மா மாதிரி பெண்கள் ,கீழ்த்தட்டில் நிறையப் பார்க்க முடியும்.
பதிலளிநீக்குஎப்படி குடிகாரனாக இருந்தாலும் ,அடித்தாலும் விட்டுப் போக மாட்டார்கள்.
உங்கள் பாட்டிக்கும் தாத்தாவுக்கும் அனேக நமஸ்காரங்கள்.
தங்கள் வரவுக்கும் வணக்கங்களுக்கும் நன்றிகள் நண்பரே!
நீக்குஇரண்டு நாட்களுக்கு முன்பே கைபேசியில் படித்து விட்டேன்.சிறப்பான சிற்கதைகளை தந்து வருகிறீர்கள். ஜெய்காந்தன் கதையை படித்தது போல இருந்தது. முடிவு சற்றூ சினிமா பாணியில் இருந்தாலும் மன நிறைவை தந்தது.
பதிலளிநீக்குதங்கள் வரவுக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி நண்பரே!
நீக்குகதைக்களத்தையும்
பதிலளிநீக்குகதைமாந்தரின் பண்புகளையும்
நிஜமாகவே கண்ணெதிரே தெரியும் வண்ணம்
சொல்லிப்போனவிதம் அருமையிலும அருமை
எங்களூர் டோபிக்கெனாலும்
இன்னும் சரியாகச் சொன்னால்
ஏகாலி நண்பர்களும் அவர்களது
வாகனங்களும் நினைவில் வந்து போனதும்
நிஜம்
அமெரிக்காவில் இருக்கையில் ஓரு
அற்புதமான சிறுகதைத் தொகுப்பு
தயாராகிவிடும் என நினைக்கிறேன்
வாழ்த்துக்களுடன்....
தங்கள் வாக்கு பலித்துவிடும் என்றே எண்ணுகிறேன். வரவுக்கு நன்றி!
நீக்குஅருமையான கதை. மிகவும் எளிமையான நடை. ரஸித்து ருசித்துப் படித்து மகிழ்ந்தேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
பதிலளிநீக்குராஜாத்தி கணக்காக இருப்பாள் என்று பாட்டி சொல்வதுண்டு எனச் சொன்னீர்களே.
யார் அந்த ராஜாத்தி? .... என்று சொல்லுங்கோ, ப்ளீஸ். அது தெரியாட்டி எனக்கு என் தலை வெடிச்சுடும் போலிருக்குது.
//நாயர் வந்து தாத்தாவின் காதில் ஏதோ சொன்னார். சரி என்று விஷமமாகச் சிரித்தார் தாத்தா. சற்றுநேரத்தில் நாயர் வீட்டில் இருந்து பழைய இரும்புக் கட்டில் ஒன்று முனியம்மாவின் குடிசைக்கு இடம் மாறியது.
மறுநாள் காலை, வழக்கம்போல் தோழி நாலரைமணிக்கே கத்தியது. ஆனால் குடிசையின் கதவு திறக்க மேலும் இரண்டுமணிநேரம் ஆயிற்று. //
சூப்பர் ஸார் .... கதையில் இந்த இடத்தை இவ்வளவு ஸ்மூத்தாக நுழைத்துள்ளது எனக்கு மிகவும் பிடித்துள்ளது. :))))) ஸ்பெஷல் பாராட்டுகள்.
அவர்களுக்கு 'எல்லாம்' ஸ்மூத்தாக நடக்கவேண்டும் என்றுதான் நாயர் தன்னுடைய கட்டிலைக் கொடுத்திருக்கவேண்டும் என்று இப்போது தெரிகிறது. அப்போது எனக்குத் தெரியாது. நான் சின்னப் பையன்!
நீக்குதங்கள் கருத்துரை கிளுகிளுப்பூட்டுகிறது ஐயா! மிக்க நன்றி.
அப்படித்தான் இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. அம்பாளின் அருள் இருந்தால் நடவாததுதான் உண்டா? தங்கள் வரவுக்கு நன்றி. விரைவில் தமிழில் தாங்கள் கருத்துரைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். தங்களால் முடியாததா?
பதிலளிநீக்குஇது போன்ற எளிய வாழ்க்கையை எப்படி இழந்தோம்? மகிழ்ச்சி , இரக்கம், நன்றி என்று கலந்து கட்டி உணர்வை தூண்டி விட்டது உங்கள் கதை. எவ்வளவு அழகாக எழுதுகிறீர்கள்!
பதிலளிநீக்கு