ஞாயிறு, ஆகஸ்ட் 04, 2019

சொல்ல மறந்த கதைகள் - ஒரு பேட்டி


சொல்ல மறந்த கதைகள் - ஒரு பேட்டி

குளித்து உடைமாற்றிக்கொண்டு தலை சீவுவதற்கு நிலைக்கண்ணாடி முன்பு நின்றுகொண்டிருக்கிறேன். அப்போது….

“வணக்கம் நண்பரே, பேட்டியைத் தொடங்கலாமா?”

என்று ஒரு குரல் தெளிவில்லாமல் கேட்கிறது. திரும்பிப் பார்த்தால் யாருமில்லை. திகைப்புடன் சீப்பைத் தலையில் அழுத்துகிறேன்.  உடனே அதே குரல் சற்றே தெளிவாகவும் ஆனால் கேலியோடும்  சிரிப்பொலியோடும்  எழுகிறது. மீண்டும் அதே கேள்வி: 

“வணக்கம் நண்பரே, பேட்டியைத் தொடங்கலாமா?”

யாரும் கண்ணெதிரில் காணோம். தொலையட்டும், நம்மைக் கூடப் பேட்டி காணும் அளவுக்கு நாம் உயர்ந்துவிட்டோமா என்ற ஐயத்துடன் பதிலளிக்க ஆரம்பிக்கிறேன்.
அறிவுஜீவியும், என் வலைப்பதிவின் தொடர்ந்த வாசகருமான
நடிகை கஸ்தூரி அவர்களுக்கு இந்தக் கட்டுரை அர்ப்பணம்

“வணக்கம்! பேட்டியா?  நானா? ஆமாம், நீங்கள் யார்?”

ஓஹோ, யார் என்று சொன்னால்தான் பேட்டி கொடுப்பீர்களோ? தமிழ்நாட்டில் எழுத்தாளர்கள் அவ்வளவு கொழுத்து விட்டார்களா?

மன்னிக்க வேண்டும், தாங்கள் யார் என்பதைத் தெரிந்து கொண்டால் பதில் சொல்வது எளிதாக இருக்கும் அல்லவா?

அதாவது கேள்வி கேட்பவரைப் பொறுத்து தான்  பதில் கூறுவீர்கள், அப்படித்தானே? கேள்வியைப் பொறுத்து அல்ல...சரியா?

மறுபடியும் மன்னிக்க வேண்டும் ஐயா. தாங்கள் பெரிய இடம் போலிருக்கிறது. இதுவரை பார்த்ததில்லை. அதனால் என்ன,  பரவாயில்லை. பேட்டியைத் தொடங்குங்கள்.

அப்படி வாருங்கள் வழிக்கு. முதல் கேள்வி, உங்கள் மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?

மீண்டும் மன்னிக்க வேண்டும் நண்பரே. நீங்கள் சொல்லியிருந்தால் எதையாவது நினைத்துக் கொண்டிருப்பேன்.  சொல்லவில்லையே! சரி, 47 க்குள் ஒரு நம்பரை நினைத்துக் கொள்ளட்டுமா?

இதைத்தான் அய்யா கொழுப்பு என்பது! நான் கேட்பது என்னவென்றால், உங்கள் வலைப்பதிவைப் பற்றி.  2017இல் 45 கதை கட்டுரைகளை எழுதினீர்கள். ஆனால் 2018இல் வெறும் 8 தான் எழுதினீர்கள். 2019 இலும் இதுவரை 6 தான் எழுதி இருக்கிறீர்கள். உங்கள் மனதில் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?

அடடே விஷயம் இவ்வளவுதானா! நான் என்னவோ ஏதோ என்று பயந்து விட்டேன். அதிலே பாருங்கள், 2013இல் நான் ப்ளாக் எழுத ஆரம்பித்த பொழுது ஏராளமானவர்கள் எழுதிக் கொண்டிருந்தார்கள். இப்போது நூறு அல்லது நூற்றைம்பது பேர்கள் தான் தவறாமல் எழுதுகிறார்கள். மற்றவர்களெல்லாம் முகநூல் பக்கமோ வாட்ஸ் அப் பக்கமோ போய்விட்டார்கள். நானும் அதையே செய்தேன்.

மற்றவர்கள் செய்வதைப் போல நீங்கள் ஏன் செய்ய வேண்டும்?

ஊரோடு ஒத்து வாழ் என்ற பழமொழி இருக்கிறது அல்லவா! ஆடை இல்லாத மனிதர்கள் நடுவே ஆடை கட்டிக் கொண்டிருப்பது தவறல்லவா? ஆகவே நானும் சிறிது காலம் முகநூலில் சஞ்சரித்தேன். வாட்ஸ் அப்பில் கூட எழுதினேன். ஆனால் முகநூலில் நம்முடைய நேரம்தான் வீணாகிறதே தவிர, உருப்படியாக ஒன்றும் ஆவதில்லை. லைக் போடுபவர்கள் உண்மையில் நாம் எழுதுவதைத் படிக்கிறார்களா என்று நம்பமுடியாது. இதைத் தெரிந்து கொள்வதற்கு ஓராண்டு ஆகிவிட்டது. அதனால்தான் ப்ளாக் பக்கம் வர முடியவில்லை. ஆனால்  2018-19 இல் நான் எதுவுமே எழுதவில்லை என்று அர்த்தமாகாது.

அதாவது…

அதாவது பிளாக் எழுதவில்லையே தவிர, நிறைய புத்தகங்கள் எழுதியிருக்கிறேன். முதலாவதாக மற்ற வலைப்பதிவாளர்களைப் போலவே நானும் PUSTAKA.Com இல் 6 மின் புத்தகங்கள் வெளியிட்டு இருக்கிறேன். அவற்றில் நான்கை அச்சுப் பிரதிகளாகத் தங்கத்தாமரை பதிப்பகம் இந்த ஆண்டு வெளியிட்டிருக்கிறது. (ஊர்க்கோலம், சொல்லட்டுமா கொஞ்சம், உண்மைக்குப் பொய் அழகு, காதல் பூக்கள் உதிருமா ஆகியவை.)

இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களில் மிக வலிமை வாய்ந்த 3 நிறுவனங்களின் தலைவராகப் பணியாற்றி, பின்னர் திட்டக்கமிஷனின் உயர் பொறுப்பில் இருந்து, இன்று 94 வயதிலும் இயங்கிக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழில் தலைவர் டாக்டர் வி. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை "சிகரம் பேசுகிறது" என்ற பெயரில் சுமார் 420 பக்க புத்தகமாக எழுதியிருக்கிறேன். அதையும் அவரது அறக் கட்டளைக்காகத் தங்கத்தாமரை பதிப்பகமே வெளியிட்டுள்ளது.  

அந்த நூலை, சென்னை இலக்கிய உலகில் செல்வாக்குமிக்க புத்தக நண்பர்கள் குழு என்னும் அமைப்பு விமர்சனத்துக்கு எடுத்துக்கொண்டது. தமிழ்நாட்டின் பழம்பெரும் புதுக் கவிஞர்களுள் ஒருவரான எஸ்.வைதீஸ்வரன் அதை விமர்சனம் செய்தார்கள். ஆசிரியர் என்ற முறையில் அவையினரின் கேள்விகளுக்கு நான் பதில் அளித்தேன்.

அதே நூலைப் பாராட்டி அடையாறு காந்தி நகர் நூலகத்தின் வாசகர் வட்டத்தில் எழுத்தாளர் வையவன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எனக்குப் பொன்னாடை போர்த்தினார்கள். அந்தக் கூட்டத்தில் என்னுடைய கவிதை நூல் ஒன்றை வெளியிட்டே தீர வேண்டும் என்று எழுத்தாளரும் பதிப்பாளரும் ஆன வையவன் அன்புக் கட்டளை இட்டதை ஏற்றுக்கொண்டு, என்னுடைய பழைய புதிய கவிதைகளைத் தொகுத்து "பனியில் நனைந்த கவிதைகள்" என்ற ஒரே புத்தகமாகக் கொண்டு வந்தேன்.
நான், கவிஞர் மு,முருகேஷ், ஆலந்தூர் கோ மோகனரங்கன், வையவன்

ஆக ஒரு வருடத்தில் உங்களுடைய ஆறு புத்தகங்கள் வந்திருக்கின்றன. இது ஒரு பெரிய விஷயமா? சுபா, ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், இந்திரா சௌந்தரராஜன் போன்றவர்கள் வாரம் ஒரு புத்தகம் எழுதுகிறார்களே!

இந்தக் குசும்பு தானே வேண்டாம் என்கிறது.  ஜாம்பவான்களையும் ஜாம்பஜார்-வாசியையும் ஒரே தட்டில் வைத்து நிறுக்கப் பார்க்கிறீர்களே, நியாயமா? மேலும் "சிகரம் பேசுகிறது" புத்தகத்திற்கு மட்டும் ஒன்றரை வருடம் ஆயிற்று தெரியுமா?

கோபித்துக் கொள்ளாதீர்கள். நீங்கள் நிறைய எழுத வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் சொன்னேன். மற்றபடி, வேறு யாராலும் செய்ய முடியாத சாதனை ஏதேனும் இந்த ஆண்டில் நிகழ்த்தி இருக்கிறீர்களா?

ஆம். அதற்காக எழுத்தாளர் சுபா இரட்டையரில் ஒருவரான பாலகிருஷ்ணன் அவர்களுக்கு நான் நன்றி தெரிவித்தாக வேண்டும். இந்து மதத்தின் நான்கு வேதங்களையும் இனிய தமிழில் பாமர மக்களுக்குப் சென்று சேரும் வகையில் வெளியிட வேண்டும் என்று தன்னுடைய நீண்ட நாள் விருப்பத்தை அவர் தெரிவித்தார். அப்போது நான் அமெரிக்காவில் இருந்ததால் அதற்குத் தேவையான ஆதாரமான விஷயங்கள் தமிழில் எனக்கு உடனடியாகக் கிடைக்கவில்லை. திரும்பி,  சென்னை வந்த பிறகு சில மாதங்கள் முயற்சி செய்ததில், பல அறிஞர்கள் பல்வேறு காலகட்டங்களில் வேதங்களில் சில பகுதிகளைத் தமிழில் மொழி  பெயர்த்திருப்பது தெரிய வந்தது. அவற்றையெல்லாம் ஒப்பிட்டு அவற்றை விட உயர்ந்ததாக ஒரு படைப்பைக் கொண்டுவர வேண்டுமானால் அதற்கு ஐந்தாறு ஆண்டுகள் ஆகும் என்று தோன்றியது. 

ஆகவே தென் இந்தியாவில் இராமாயணம், மகாபாரதம், விஷ்ணு சகஸ்ரநாமம் இவற்றுக்கு அடுத்தபடியாக கருதப்படும் பக்தி நூலான "நாராயணீயம்" என்ற வடமொழிக் கவிதை நூலைத் தமிழாக்கம் செய்வது என்று முடிவாகியது. இதற்கும் கிட்டத்தட்ட 15 மாதங்கள் ஆயின.   நாராயணீயத்தில் நூறு அத்தியாயங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் உண்டு. இவற்றைப் பொருள் உணர்ந்து, ஏற்கனவே இதைத் தமிழ்ப் படுத்தியிருக்கும் சான்றோர்களின் கருத்துக்களையும் கவனத்தில் எடுத்துக்கொண்டு, அவற்றிலிருந்து மேலும் எளிமையாக, மேலும்  இனிமையான தமிழில் நான் எழுதியுள்ள "நாராயணீயம் மூலமும் உரையும்" என்ற நூலைத் தங்கத்தாமரை பதிப்பகம் பெருத்த பொருட்செலவில் வெளியிட்டுள்ளது. இது தமிழ் உலகிற்கு நான் செய்துள்ள மிகப்பெரிய தொண்டு என்று பணிவோடு கூறிக்கொள்கிறேன்.

மன்னித்து விடுங்கள் ஐயா, உண்மை தெரியாமல் உங்களைப் புண்படுத்தும் வகையில் கேள்வி கேட்டு விட்டேன். ஆக வடமொழியிலிருந்து தமிழுக்கு ஒரு பெரிய நூலைக் கொண்டு வந்திருக்கிறீர்கள். மற்ற மொழிகளிலிருந்து மொழிபெயர்ப்புகள் செய்ததுண்டா?

தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் மொத்தம் நான்கு நூல்களை மொழிபெயர்த்திருக்கிறேன். "லாக்கப்" என்ற நாவலை எழுதிய சந்திரகுமாரை உங்களுக்குத் தெரிந்திருக்கும். அது "விசாரணை" என்ற பெயரில் வெற்றிமாறன் மூலம் திரைப்படமாக்கப் பட்டது நினைவிருக்கும். அதன் தொடர்ச்சியாக அவர் எழுதிய "கட்டுத் தளையின்  ஊடே காற்று"  என்ற சிறை அனுபவக் கதையை நான் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறேன். The Prison Diary என்ற பெயரில் Westland வெளியிட்டுள்ள அந்த புத்தகம் அமேசானில் கிடைக்கும்.

அனுராதா ரமணனின்  இரண்டு பாகங்கள் கொண்ட  கட்டுரைத் தொகுப்பையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறேன். இது விரைவில் மின் புத்தகமாக  (மட்டும்) வெளியாகும்.

உலகப் புகழ்பெற்ற சுயமுன்னேற்ற எழுத்தாளரான நெப்போலியன் ஹில் எழுதிய "Think and Grow Rich" என்னால் தமிழாக்கம் செய்யப்பட்டு  அடுத்த மாதம் வெளியாக உள்ளது.

இதைத் தவிர இன்னும் சில மொழிப்பெயர்ப்பு வேலைகளும் உள்ளன. (மணிரத்னம் படம் மாதிரி) வெளியில் சொல்லக்கூடாது என்ற கட்டுப்பாடு இருப்பதால் வேலை முடியும்வரை அமைதி காக்கவேண்டியுள்ளது. 

இலக்கியக் கூட்டங்களிலும் உங்களை அடிக்கடிப் பார்க்க முடிகிறது என்று தகவல் வருகிறதே!

ஆம். மாதந்தோறும் ஆழ்வார்ப்பேட்டை TAG  சென்ட்டரில் நடைபெறும் புத்தக நண்பர்கள் குழுவின் இலக்கிய விமர்சனக் கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்கிறேன். அடையாறு காந்திநகர் நூலகத்தின் மாதாந்திர இலக்கிய நிகழ்விலும் கலந்துகொள்கிறேன். இலக்கிய அமுதம், குவிகம் நடத்தும் கலந்துரையாடல்களிலும் பங்குபெறுகிறேன். தீபம் திருமலை அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் ‘தும்பி’ சிறுவர் இதழ்  நிகழ்ச்சிகளிலும் நான் இருப்பதுண்டு. இந்த இலக்கிய முயற்சிகளில் எனக்கு ஊக்கம் அளித்துவரும் பழம்பெரும் எழுத்தாளரும் ‘தாரிணி பதிப்பகம்’ என்ற பெயரில் பலமொழிகளில் பல புத்தகங்களை வெளியிட்டிருப்பவருமான திரு வையவன் அவர்களுக்கு நன்றி சொல்லியாகவேண்டும். 

இலக்கியக் கூட்டங்களில் சுவையான நிகழ்வுகள் ஏதேனும்  நடந்துண்டா?

ஏன்  இல்லாமல்? ஒரு கூட்டத்தில் பேசி முடித்துவிட்டு வாசகர்களுடன் அளவளாவிக் கொண்டிருக்கையில் ஒரு பள்ளி மாணவர் கேட்டார்: ‘சார், நீங்க ஆசிரியராக இருந்தீர்களா?’ என்று.  40 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராகத் தானே வாழ்க்கையைத் தொடங்கினேன். ‘ஆமாம், ஏன்  கேட்கிறீர்கள்?’ என்றேன்.  ‘இல்லை, நேற்று இராத்திரி சாப்பிட்ட கீரை உங்கள் பல்லில் இருக்கிறதே’ என்று பதில் வந்தது. உண்மையில் அந்த வாரம் முழுவதுமே நான்  கீரை சாப்பிட்டதாக  நினைவில்லை. எல்லாம் விளம்பரத்தால் வரும் வினை.

இனிமேல் நமது  கூட்டங்களில் பள்ளி மாணவர்களை அனுமதிப்பது பற்றி எழுத்தாளர் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றுவது நல்லதென்று தோன்றுகிறது.

இந்த ஆண்டு வேறென்ன புத்தகங்கள் வெளியிட இருக்கிறீர்கள்?

இன்னும் நான்கு புத்தகங்களுக்கான கட்டுரைகள் எழுதப்பட்டு எடிட் செய்யவேண்டிய அளவில் நிற்கின்றன. அவற்றில் இரண்டு புத்தகங்கள் அமெரிக்க வாழ்க்கை மற்றும் நிகழ்ச்சிகள் பற்றியதாக இருக்கும்.

ஐந்து வருடம் முன்பு அகநாழிகை வெளியீடாக  உங்கள் சிறுகதைத் தொகுதி வந்ததே, என்ன ஆயிற்று அந்த ‘தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய்?’

அதை ஏன்  கேட்கிறீர்கள்? வெளியானதில் பாதி செலவாகி விட்டது - கவனிக்கவும் - 'விற்பனையாகி விட்டது' என்று கூறவில்லை. மீதி, பதிப்பாளரின் அலுவலகத்தில் 2015 அடைமழையில் நனைந்து வீணாகி விட்டதாகத் தெரிகிறது. என்னிடமே  ஒரு பிரதி கூட இல்லை.  அடுத்த பதிப்பு இந்த ஆண்டு வரக்கூடும்.

சரி, இனிமேலாவது ஒழுங்காக பிளாக் எழுதுவீர்கள் என்று எதிர்பார்க்கலாமா?

‘ஒழுங்காக’ என்பதற்குப் பல அர்த்தங்கள் இருக்கிறதே, நீங்கள் எந்த அர்த்தத்தில் சொல்கிறீர்கள்?

பார்த்தீர்களா, உங்கள் எழுத்தாளக் குறும்பை ஆரம்பித்துவிட்டீர்களே ! நான் கேட்பது  வாரத்திற்கு ஒருமுறையோ இரண்டுமுறையோ விடாமல் பிளாக் எழுதுவீர்களா என்றுதான்.

கரும்பு தின்னக் கூலியா வேண்டும்? வாரம் இரண்டுமுறை நிச்சயமாக எழுதத்தான் போகிறேன். ஆனால் வாசகர்கள் தயாரா? அவர்களைக் கொடுமைப்படுத்தக் கூடாதல்லவா? 

ஐயா! நீங்களே சொன்னபடி, இப்போது தீவிரமாக பிளாக் எழுதுபவர்கள் நூற்றைம்பது பேர்கள் கூட இல்லை. எனவே ஏற்கெனவே  பிளாக்  படித்துவந்த  நல்ல வாசகர்கள் தங்கள் சிந்தனைக்குத் தீனி கிடைக்காமல்  தவிக்கிறார்கள். அதனால்தான் முகநூல் அரட்டை, வாட்சப் குறும்பு என்று போகிறார்கள். தொடர்ந்து பலரும்  நல்லபடியாக  பிளாக் எழுதினால் அவர்கள் எல்லாரும் மீண்டும் ஓடிவரக் காத்திருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.

அப்படியா, உங்கள் வார்த்தை பலிக்கட்டும். அது சரி, பேட்டியே முடியப்போகிறது, நீங்கள் யார் என்று இதுவரை சொல்லவில்லையே! 

(பதில் கிடைப்பதற்குள் உள்ளிருந்து இன்னொரு குரல் கேட்கிறது: “போதும், கண்ணாடிக்கு முன்னால் நின்றுகொண்டு  தனக்குத் தானே பேசியது! நாலு பேர் பார்த்தால் பைத்தியம் என்பார்கள்!.” பெண்குரல்.)

 © இராய செல்லப்பா 


31 கருத்துகள்:

  1. உங்களைப் பற்றிய, உங்கள் நூல்களைப் பற்றிய சில புதிய செய்திகளை அறிந்தேன். வலைப்பூவில் உங்கள் பதிவுகளுக்காகக் காத்திருப்போரில் நானும் ஒருவன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஐயா! நானும் அப்படியே. தங்கள் பதிவுகளைத் தவறாமல் படிக்கிறேன். வெவ்வேறு அலைபேசிகளின் மூலம் படிக்கும்பொழுது அதில் தமிழ் fonts இல்லாதுபோனால் பின்னூட்டம் இடமுடியாமல் போகிறது. அவ்வளவே.

      நீக்கு
  2. பிரமிக்க வைக்கிறீர்கள். வேதம் பற்றிய புத்தகம் சீக்கிரம் எழுத வேண்டும் என்று வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இறைவன் அருளும் இன்னும் தீவிரமான பயிற்சியும் வேண்டியிருக்கிறது. வெறும் மொழியறிவு மட்டும் பயன்படாது. என் தந்தை உயிரோடிருந்தபோது பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டேன். இருந்தாலும் முயற்சி ஒரு நாள் பலிக்கும் என்று கருதுகிறேன்.

      நீக்கு
  3. // நூறு அல்லது நூற்றைம்பது பேர்கள் தான் தவறாமல் எழுதுகிறார்கள்... //

    ஆரம்பத்தில் ஒரு நிமிடம் திகைத்து விட்டேன்...

    எழுதுவது ஒருபுறம் இருக்கட்டும்... தான் பதிவு எழுதும்போதும் மட்டும் அன்பர்களின்/நண்பர்களின் வலைப்பதிவுகளை எட்டிப்பார்ப்பதில் ஒரு பத்து பேரை சொல்லுங்க பார்ப்போம்...

    சில உண்மைகளில் தெளிவு வரலாம்...

    நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. ஐயா! நான் தங்களை எதுவும் சொல்லவில்லையே! வேறு பணிகளில் மூழ்கிவிட்டால் வலைப்பதிவு எழுதுவது இரண்டாம் பட்சமாகி விடுகிறது என்பதைத்தான் குறிப்பிட்டேன். அத்ற்குக் கோபிக்கலாமா? அதே சமயம், மற்றவர்களின் பதிவுகளைப் படிப்பதில், குறிப்பாக உங்கள் பதிவுகளைப் படிப்பதில் நான் தவறுவதில்லை. வெவ்வேறு அலைபேசிகளின் மூலம் படிக்கும்பொழுது அதில் தமிழ் fonts இல்லாதுபோனால் பின்னூட்டம் இடமுடியாமல் போகிறது. எனவே நான் தங்கள் தளத்திற்கு வரவில்லை என்று எண்ணிக் கொள்கிறார்கள். அவ்வளவே. (சரி, விரைவில் உங்கள் பதிவை எதிர்பார்க்கலாம் அல்லவா?)

      நீக்கு
    2. வலைத்தளங்களின் வீழ்ச்சி - யார் காரணம்...?

      மேலுள்ள தலைப்பில் சிறிது சிறிதாக உண்மையில் நடந்த / நடக்கிற சில தகவல்களை, எனது அனுபவத்தை draft-ல் சேமித்து வைத்துக் கொண்டே வருகின்றேன்.... அதில் வரும் ஒரு பத்தி தான் மேலே கொடுத்துள்ளேன்...

      மேலும் எனது draft-ல் உள்ளதை சொல்ல விருப்பம் இல்லை... அதற்கு பதிலாக :-

      மற்றபடி // இன்று நுகர்ந்த // என்பதை // எப்போதாவது நுகரும் // எனும் மாற்றிய பின் வரும் "உண்மை" புரிந்தால் மகிழ்ச்சியே...

      நன்றி ஐயா...

      நீக்கு
  4. உங்கள் எழுத்துக்களைப் பற்றிய அறிமுகம் புது மாதிரியாக இருந்தது. நீங்கள் ஒரு இடைவெளிக்குப் பிறகு தொடர்ந்து பதிவுலகில் பிரவேசிப்பது இனிப்பானா செய்தி.
    அடையறு காந்தி நகர் நூலகக் கூட்டம், புத்தக நண்பர்களின் இலக்கிய விமர்சனக் கூட்டங்கள் இதிலெல்லாம் கலந்து கொள்ள வேண்டுமென்ற ஆவல் கொஞ்சம் கூர்மை அடைந்திருக்கிறது. பார்க்கலாம். அன்பர் வையவனையும் இங்கு பார்த்ததில் மிகவும் சந்தோஷம். நன்றி, ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஐயா! விரைவில் தங்களையும் நேரில் சந்திக்க ஆவல்.

      நீக்கு
  5. ந்யூ ஜெர்சி சென்றால் கற்பனை சிறக்குமோ

    பதிலளிநீக்கு
  6. தங்கள் வரவுக்கு நன்றி. எப்படி பெங்களூரில் இருந்தபோது (எனக்கு) கற்பனை வறண்டுபோனதோ, அப்படி, நியூ ஜெர்சி வந்தால் கற்பனைக்கு சிறகு முளைத்து விடுகிறது. தங்கள் ஆசிகள் வேண்டும்.

    பதிலளிநீக்கு
  7. தங்கள் எழுத்துப்பணி தொடர வேண்டும்.
    தங்கள் வாசகர்களில் நானும் ஒருவன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயம் தங்கள் ஆவலை நிறைவேற்றுவேன். தங்கள் பதிவுகளையும் தொடருவேன். நன்றி நண்பரே!

      நீக்கு
  8. வாழ்க நலம்..
    தங்கள் பணி சிறப்பதற்கு
    அம்பிகை நல்லருள் புரிவாளாக....

    பதிலளிநீக்கு
  9. ஆஹா... மகிழ்ச்சி. மீண்டும் தொடர்ந்து நீங்கள் எழுத வேண்டும் என விரும்புவர்கள் பட்டியலில் நானும் உண்டு. தொடர்ந்து எழுதுங்கள்.

    எத்தனை புத்தகங்கள்... பிரமிப்பாக இருக்கிறது. நாராயணீயம் மொழிபெயர்ப்பு பற்றி அறிந்து மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிறைய புத்தகங்கள் எழுதியுள்ள தாங்கள் பாராட்டும்போது மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது. நிச்சயம் தொடர்ந்து எழுதுவேன். நனறி.

      நீக்கு
  10. // (சரி, விரைவில் உங்கள் பதிவை எதிர்பார்க்கலாம் அல்லவா?) //

    அருமை ஐயா... ஹா... ஹா...

    என்னைப் போல... என்னிடம் கோபித்த... அவர்கள் நொந்து பேசின வார்த்தைகள் நினைவுக்கு வருகிறது... அதற்கு மிகவும் நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதலில் தொழில், வயிற்றுப்பாடு. பிறகுதான் வலைப்பதிவு என்பதில் குறியாக இருக்கவேண்டும். "நமக்குத் தொழில் கவிதை" என்று பேசிய பாரதிக்கு என்ன கிடைத்தது? எனவே இலக்கியத்தைத் தொழிலாகக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றே தமிழுலகம் நமக்குச் சொல்லியிருப்பதாகக் கொள்ளவேண்டும்.

      நீக்கு
  11. சார் உங்கள் எழுத்து பற்றி சொல்லவும் வேண்டுமோ?!

    முன்பு அறிந்ததையும் விட தற்போது மேலும் பல நூல்கள் வெளி வருகிறது போலும்! வாழ்த்துகள் சார்.

    கூடவே பிரமிப்பாகவும் இருக்கிறது. கிருஷ்ணமூர்த்தி அவர்களைப் பற்றிய உங்கள் புத்தகத்தை வாசித்து வருகிறேன் கொஞ்சம் கொஞ்சமாக. நல்ல மொழி ஆளுமை சார் உங்களுக்கு.

    மீண்டும் கஸ்தூரியைச் சந்தித்தீர்க்ளா சார் அங்கு?

    //நீங்கள் சொல்லியிருந்தால் எதையாவது நினைத்துக் கொண்டிருப்பேன். சொல்லவில்லையே! சரி, 47 க்குள் ஒரு நம்பரை நினைத்துக் கொள்ளட்டுமா?//

    இதை வாசித்து சிரித்து முடியலை சார். உங்கள் குறும்பு அபரிதமானது!

    தொடர்கிறோம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி எழுத்தாள நண்பரே! தங்கள் இரண்டாவது நாவல் அல்லது கட்டுரை அல்லது சிறுகதை தொகுப்பு இந்த ஆண்டு வரும்தானே?

      நீக்கு
  12. செல்லப்பா அவர்களின் பேட்டி என்கிற
    பாணி புதுமையானது. சுய பரிசோதனை இந்த கற்பனை பேட்டி மூலமாக வெளிகொணர்ந்த பாணியைச் சொல்கிறேன். இந்த மாதிரி சுய அறிமுகம் படிப்பதற்கு சுவையாக இருந்தது. ஒரு எழுத்தாளன் மிகவும் விரும்புவது வாசகர்களின் வாசகர்களே. அதுவும் வலைத்தளத்தில் எழுதுவது நம் சுகத்திற்கே.காசே பார்க்கமுடியாது. காலத்தை விரயம் செய்யாமல் இதுபோல் எழுத்தில் ஈடுபடுவது ஒரு உத்தமமான பொழுது போக்கு. பாராட்டுக்கள். எண்ணங்கள் ஒருவரை பண்படுத்தி எழுத்தாளராக்க உந்துகிறது.அன்னாரின் படைப்புகளை படிப்பவர்கள் இதனால்பண்படுகிறார்கள். இதுதான் ஒரு நல்ல எழுத்திற்கும் அதை ஆக்கியவற்கும் கிடைக்கும் மரியாதை மகிழ்ச்சி உத்வேகம். நிறைய சிந்திக்கவும்.அதில் ஒரு பகுதியை எழுதவும். நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  13. திருத்தம்: வாசகர்களின் வாசகர்களே என்பதற்கு பதிலாக வாசகர்களின் வாசகங்களே என படிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  14. Sorry, I am yet to download Tamil script app.
    Your style of interviewing yourself is something novel. It shows your creativity. Kudos.
    Your being busy in the world of literature , staying in a far of place, is amazing considering your age.
    To know your last two years works I am surprised. Your passion for writing and maintaining the contacts, reading and reproducing is something great.
    Your intention to write translation for Vedas is divine and my pranams to you and pray God give you the spirit and letter for the noble work. GREAT...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Great! Thanks for your reading. Though I was brimming with passion for writing in Tamil, and published my three books some 25 years ago, yet the professional demands left little time for me to pursue what my heart desired. And the time came in 2013 when my children insisted I start a blog. And here I am. All this is a practice to may be something bigger. HE knows what. let me continue to write with sincerity. Why dont you put your name at the end of the narration? If you want to change or remove your text, you can click the நீக்கு box under பதிலளி நீக்கு, and then restart writing. Simple.

      நீக்கு
  15. Some words typed are missing. My feed back is not the one I typed.

    பதிலளிநீக்கு
  16. ஆஹா... மகிழ்ச்சி. மீண்டும் பிளாக் பக்கம் வந்ததற்கு ... நடிகை கஸ்தூரி உங்கள் வாசகியா? ... ம்..ம்.. கிளிக் S .ஜட்ஜ்மென்ட் .

    பதிலளிநீக்கு