சனி, மே 28, 2022

நியூஜெர்சியில் தொலைந்த மோதிரம்

 நியூஜெர்சியில் தொலைந்த மோதிரம் 

(இன்று கிழமை வெள்ளி-7)

அமெரிக்காவில் 46 ஆவது நாள் 


(குடும்பம் ஒரு தொடர்கதை)

அமெரிக்காவில் சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் விடுமுறை நாட்கள் என்பதால், வெள்ளிக்கிழமை இரவு 'வீடியோ-ஆன்-டிமாண்ட்' இல் திரைப்படம் பார்ப்பது இங்கு பெரும்பாலான வீடுகளில் நடக்கும் நிகழ்ச்சி என்று கூறப்படுகிறது. ஸ்டீவன் ஸ்பீல்பர்க்-இன்  Opera Remake ஆன The Westside Story  பார்த்துவிட்டு, அரதப் பழசானாலும் சுவை குறையாத (எம்ஜிஆர் படம் போன்ற)          Makenna’s Gold இன் கடைசிப் பகுதியைப் பார்த்துவிட்டு,  ஏற்கெனவே கொஞ்சம் பார்த்து வைத்திருந்த  The Crazy Rich Asians என்ற படம் பார்க்க உட்கார்ந்தபோதுதான் மணியைப் பார்த்தேன். நியூஜெர்சியில் நேரம் 27-5-2022 வெள்ளிக்கிழமை இரவு 10.30! 


இன்னும் ஒருமணி நேரத்தில் இன்றைய வலைப்பதிவை எழுதி வெளியிட்டாக வேண்டும்!  நேற்றுவரை விடாமல் தினம் ஒன்று வீதம் 45 பதிவுகள் எழுதியாயிற்று. இன்று எழுதவேண்டியது 'அமெரிக்காவில் எனது 46ஆவது நாள்' என்னும் பதிவு. 


'என்னடா மதுரைக்கு வந்த சோதனை' என்று ஒரு படத்தில் வருமே, அதே எண்ணம் தான் எனக்கும் வந்தது. எதைப் பற்றி இன்று எழுதுவது? இந்த நிமிடம் வரை ஒன்றும் தோன்றவில்லை. மீதிப் படத்தை நாளை பார்த்துக்கொள்ளலாம் என்று (அனுமதி கேட்டுப் பெற்றுக்கொண்டு)  மாடிக்கு விரைந்தேன். அங்குதான் எனது கணினிக்கு அறை ஒதுக்கிக் கொடுத்திருந்தாள் என் (மூத்த) மகள். 


என்னுடையது லெநோவா மடிக்கணினி. அதிகம் பழசில்லை, வெறும் ஏழெட்டு வருடம்தான் ஆகியிருக்கும். எருமைக் கனம் என்றாலும் நல்ல உழைப்பாளி. என்னுடைய எல்லாப் புத்தகங்களுமே இதில் தான் எழுதி அச்சுக்கும் புஸ்தகாவுக்கும் அமேசானுக்கும் போனவை. என்னுடைய எல்லா மொழிபெயர்ப்பு நூல்களும் இதில் தான் பிரசவமானவை. இவ்வளவு ஏன், நேற்றுவரை நான் எழுதிய 45 வலைப்பதிவுகளும் இதில் எழுதியவையே. 


எனவே அதிர்ஷ்டமான அந்த மடிக்கணினியை மேசைமேல் வைத்து, தட்டத் தொடங்கினால் எழுதவேண்டிய விஷயம் எங்கிருந்தாவது கிடைத்துவிடும் என்று நம்பினேன். மனித வாழ்க்கையே ஏதோ ஒரு நம்பிக்கையில்தானே நடந்துகொண்டிருக்கிறது!


கருவியை 'ஆன்' செய்ய வலது கரத்தை நீட்டியபோதுதான் அந்த அதிர்ச்சி காத்திருந்தது. வலது கை இரண்டாவது விரலில் இருந்த மோதிரத்தைக் காணவில்லை! பயந்துவிடாதீர்கள், வெறும் தங்க மோதிரம்தான்! 


சில (அல்லது பல) ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் திருமண ஆண்டுநிறைவுநாளில் எனக்கு அணிவிக்கப்பட்ட மோதிரம் அது. இரண்டு கைகளின் பத்து விரல்களும் கோர்த்த மாதிரியான வடிவமைப்புடன் அப்போது அழகாகவே இருந்தது அந்த மோதிரம்.


சாப்பிடும்போது மட்டும் அதை இடது கைக்கு மாற்றிக்கொள்ளுவேன். இல்லையெனில் வேகமாகத் தேய்ந்துவிடுமே!  புதிதாக வாங்கிக்கொடுக்க நமக்கு  மாமனாரா இருக்கிறார்? ஆனாலும் அந்த மோதிரம் நாளடைவில் இளைத்துக்கொண்டே வந்து இப்போது குஷ்பு மாதிரி ஆகிவிட்டிருந்தது. வாங்கிய புதிதில் அது நிச்சயம் வட்டமாகத்தான் இருந்தது. நான்தானே பார்த்து வாங்கினேன்! அதன்  இப்போதைய வடிவத்தை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. அந்த மோதிரம் தான் இப்போது காணவில்லை! 


எங்கே போயிருக்கும்?


காலையில் இருந்து வீட்டைவிட்டு எங்கும் போகவில்லை. காலையில் இட்லி சாப்பிடும்போது கைமாற்றி அணிந்துகொண்டேன். கை கழுவியபின்பு மீண்டும் வலது கையில் அணிந்தது நினைவிருக்கிறது. குளிக்கும்போது நழுவியிருக்க வாய்ப்பு இருக்குமோ? குளியல் தொட்டியைப் பார்த்தாயிற்று. இல்லை! சட்டைகளை இஸ்திரி செய்தேனே அப்போது நழுவியிருக்குமோ? அந்த இடத்தையும் துழாவினேன். இல்லை! மடித்துவைத்த துணிமணிகளுக்குள்  சிக்கியிருக்குமோ? அங்கும் இல்லை. 


ஒருவேளை...இரண்டுமணி நேரத்துக்கு முன்பு  நியூ ஜெர்சியில் இருக்கும் ஃபார்லே டிக்கின்சன் யூனிவர்சிடி வளாகத்தில் நடைபயின்றபோது தவறி யிருக்குமோ? அவ்வளவு பெரிய நிலப்பரப்பில் இந்தக் குட்டி மோதிரத்தை எப்படிக் கண்டுபிடிப்பது?


மனம் ஒரு குரங்கு என்பார்கள். என் மனம் மட்டும் விதிவிலக்கா? அந்த மோதிரத்தின் இன்றைய விலை என்னவாக இருக்கும் என்று கணக்குப் போட்டது. சென்னையில் இன்றைய தங்கம் விலை எவ்வளவு என்று பார்த்துக்கொண்டிருக்கும்போது நெட் போய்விட்டது. சில நிமிடங்களில் மீண்டும் வந்துவிட்டது. "கிடைத்து விட்டதா, இல்லையா?" என்றுகீழிருந்து கேட்ட தடிமனான குரல் யாருடையதாக இருக்கும் என்று நீங்களே அனுமானிக்கலாம். 


மோதிரம் தவறியதை விட, இன்றைய வலைப்பதிவு தவறிவிடுமே என்பதுதான் என் முக்கியக் கவலையாகி விட்டது. 45 நாள் விடாமல் எழுதியிருக்கிறேன். 150 நாளாவது விடாமல் எழுதவேண்டும் என்பது என் திட்டம். அதில் ஓட்டை விழுந்துவிடுமா?


இம்மாதிரி தருணங்களில் அரவிந்த அன்னை சொல்லிக்கொடுத்த வழிமுறையை நான் பின்பற்றுவது வழக்கம். அதை இன்றும் செய்தேன். 


அதாவது, நாம் செய்த தவறை உணர்ந்து, மன்னிப்பு கேட்பதுதான் அந்த வழி. இங்கு நான் இரண்டு தவறுகள் செய்திருந்தேன். ஒன்று, மோதிரத்தைப் பத்திரமாக வைக்கத் தவறிவிட்டேன். அதற்காக அந்த மோதிரத்திடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டேன். இரண்டாவது தவறு, இன்று எழுதவேண்டிய வலைப்பதிவை இவ்வளவு நேரம் தாமதித்தது. .அதற்காக என் மடிக்கணினியிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதற்காக, மவுஸ் மீது கைவைத்தேன். அப்போது கையில் ஏதோ கீறுவதுபோல உணர்ந்தேன். ஆஹா, கிடைத்துவிட்டது காணாமல் போன என் மோதிரம்!     


விஷயம் இவ்வளவுதான். அண்மையில் என் மகன் எனக்குப் புதியதொரு மடிக்கணினி வாங்கிக் கொடுத்திருந்தார். பழையது எருமை கனம் என்றால் இது மயில் இறகு மாதிரி மெல்லியது. பொறாமை -13 என்று பெயர். (HP-ENVY-13") அதில் தொடுதிரை இருந்ததால் வெளிப்புற மவுசுக்கு வேலையில்லை. ஆகவே வழக்கமாகப் பயன்படுத்தும் மவுஸ் மேசையின் ஓர் ஓரத்தில் ஒதுங்கிவிட்டது. அதன் ஒரு பக்கத்தில் இந்த மோதிரம் நழுவி, நல்ல வேளை,  அங்கேயே நின்றுவிட்டிருக்கிறது!



மவுசுக்கு நன்றி தெரிவித்தேன். இரண்டு விஷயங்களுக்காக. ஒன்று,
தொலைந்த  மோதிரம் கிடைத்தற்காக. இன்னொன்று,  இன்று வலைப்பதிவிற்குத் தலைப்புக்  கொடுத்ததற்காக!


"இனிமேலாவது பொருள்களை ஒழுங்காக வைத்துக்கொள்ளவேண்டும். சொல்வதைச் சொல்லிவிட்டேன்" என்று ஒரு குரல் கீழிருந்து கேட்கிறது. யாருடையதாக இருக்கும் என்று உங்களுக்கா சொல்லவேண்டும்?


-இராய செல்லப்பா நியூ ஜெர்சியில் இருந்து..


24 கருத்துகள்:

  1. பெயரில்லா28 மே, 2022 அன்று AM 9:54

    தன் மோதிரக் கையால் தனக்கே குட்டு! ஜமாயுங்கள்!! - Neighbour's envy on owner's envy - சுந்தரராஜன்

    பதிலளிநீக்கு
  2. இதன் மகிழ்ச்சி பதிவின் படத்தில் காண்கிறேன்...

    எதற்கும் தொலையப் போகும் மூக்கு கண்ணாடிக்கும், ஒரு நன்றி சொல்லி வைக்கிறேன்... நன்றி...!

    பதிலளிநீக்கு
  3. சாப்பிடும் கையில் மோதிரம் இருந்தால் தேயுமா...? ஆத்தாடி...!

    அப்புறம் சமீபத்திய குஷ்பூவை விட மோதிரம் நன்றாகவே இருக்கும் என்று உறுதியாக சொல்கிறேன் ஐயா...(!)

    பதிலளிநீக்கு
  4. பயந்துவிடாதீர்கள், வெறும் தங்க மோதிரம்தான்! // ஹாஹாஹா எப்படியோ மோதிரம் கிடைத்துவிட்டதே.

    மயிலறகு கணினி நிஜாமாகவே பொறாமைப்பட வைக்கும் கணினிதான். இங்கும் பார்த்திருக்கிறேன் கடையில்!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  5. குஷ்பு ஒப்பீடு சிரித்துவிட்டேன். சார் வலது கையில் இருந்து சாப்பிடும் போது தேய்ந்தால் நல்லதுன்னு சொல்றாங்களே. எம் ஜி ஆர் கூட தங்கம் (பஸ்பம்??) கொஞ்சம் சாப்பிடுவாராமே!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதனால்தான் அவருக்கு கிட்னி ஃபெயிலியர் ஆனது என்ற செய்தியை செல்லப்பா சார் படிக்காமல் இருந்திருப்பாரா?

      நீக்கு
  6. பெயரில்லா28 மே, 2022 அன்று PM 1:02

    உங்களுக்கும் மோதிரத்துக்கும் ஏதோ விடாத பந்தம் இருக்கிறது.
    உங்களுடைய கவிதாவும் கணையாழியும் நினைவில் வந்து போயின.
    மோதிரக்கதைகளும் கவிதைகளும் தொடரட்டும்!

    பதிலளிநீக்கு
  7. நீங்கள் கதையையே மாற்றி விட்டீர்கள் . வலது கையில் தங்க மோதிரம் அணிவதே , சாப்பிடும் போது , சூடான உணவு தங்கத் தை உரசிக் கொண்டு கொஞ்ஜூண்டு உள்ளே போகட்டும் என்றுதான் . நீங்கள் அதை இடது கையில் மாற்றிக் கொண்டு சாப்பிட்டு வந்திருக்கிறீர்கள் !!! இனிமேல் கை மாற்ற வேண்டாம்.

    பதிலளிநீக்கு
  8. பெயரில்லா28 மே, 2022 அன்று PM 6:44

    சரியான சமயத்தில் தங்களது பதிவு படிக்கும் சந்தர்பம் கிடைத்தது.நானும் ஒரு மடிக்கணினி மெமோரியல் நாள் தள்ளுபடி விற்பனையில் வாங்குவதற்காக தேடிக் கொண்டிரந்தேன்.எச்.பி.பொறாமை 13 வாங்க முடிவு செய்து விட்டேன்.இந்த சமயோசித யோசனைக்கும் நகைச்சுவை இழையோடிய கட்டுரை பதிவிற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  9. பெயரில்லா28 மே, 2022 அன்று PM 6:46

    கடைசியாக பதிலளித்தது நாராயணன்_சீ டி எச்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெற்றிகரமாக ஒரு மடிக்கணினி வாங்க எனது வாழ்த்துக்கள்!

      நீக்கு
  10. ஹாஹா! எப்படியோ ஒரு பதிவு தேர்த்தியாச்சு. பாண்டிச்சேரி அன்னைக்கு நன்றி சொன்னீர்களா?

    பதிலளிநீக்கு
  11. பெயரில்லா28 மே, 2022 அன்று PM 10:43

    உஷா மோதிர விரலால் ஒரு குட்டுப்போட்டுக்கொண்டால் இனி மறக்காது நழுவாது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதை உடனே செய்து கொண்டேன்! இன்னும் கொஞ்சநாள் நினைவில் இருக்கும்!

      நீக்கு
  12. காய்கறி இல்லையென்று வத்தக்குழம்பு வைத்தால் ...அதுவே காய்கறிக் குழம்பினும் அதிக ருசி..

    பதிலளிநீக்கு
  13. 1. இதுவரையில் வலதுவிரல் மோதிரத்தை சாப்பிடும் போது இடது கை விரலுக்கு மாற்றிய யாரையும் நான் பார்த்தது இல்லை. மோதிரத்தை கிழற்றாமல்தான் உணவைச் சாப்பிடுவார்கள்.

    2. ஆசை தோசை....இன்னமும் கூட மாமனார் வாங்கித்தருவாரா.?

    பதிலளிநீக்கு
  14. ""கிடைத்து விட்டதா, இல்லையா?" என்றுகீழிருந்து கேட்ட தடிமனான குரல் யாருடையதாக இருக்கும் என்று நீங்களே அனுமானிக்கலாம். ""//

    திருமணம் ஆன புதிதில் "குயிலே ", "தேன்மொழியே "- என்று புகழ்ந்த குரல் இப்போது தடிமன் ஆகி தங்களுக்கு நாராசம் ஆகி விட்டதா.?

    பதிலளிநீக்கு
  15. தங்க மோதிரம் கிடைத்தது கூடவே ஒரு பதிவும். பதிவினை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  16. மோதிரம் தொலைந்து எவ்வளவு முயற்சி செய்தும் கையில் சிக்காமல் பிறகு அரவிந்தர் அன்னையின்
    அருளால் & அறிவுரையால்
    பிறகு கிடைத்தது நல்ல அனுபவம். அதை எழுதும் சாக்கில் எச்.பி.என்வி புதிதாக கைக்கு வந்ததையும் தெரிவித்த பாங்கு அருமை.
    ஜயசங்கரன் சென்னை

    பதிலளிநீக்கு
  17. தலைப்பைக் கண்டபோது கடல் அலையெனப் பதட்டம், நிறைவில் கரை மணலென சாந்தம். இடையில் அரவிந்த அன்னையின் தகவல் உபயம். நன்றி!
    ...மீ.மணிகண்டன்

    பதிலளிநீக்கு