வெள்ளி, மே 27, 2022

‘தவம்’ செய்து அமெரிக்காவில் தமிழ் வளர்க்கும் அனிதா ராஜேஷ்



‘தவம்’ செய்து அமெரிக்காவில் தமிழ் வளர்க்கும் 

அனிதா ராஜேஷ் 


(இன்று கிழமை வியாழன்-7)

அமெரிக்காவில் 45ஆவது நாள் 


(விட்டுப்போன கட்டுரைகள்) 

இணையம் தொடங்கிய காலத்திலிருந்தே தமிழில் மின் இதழ்கள் பல தொடங்கப்பட்டு இயங்கி வந்துள்ளன. ‘அம்பலம்’ என்ற இதழை சுஜாதா சென்னையிலிருந்து தொடங்கியதாக நினைவு.  பிறகு மாலன் பொறுப்பேற்றுக் கொண்டார் என்று எண்ணுகிறேன். 


வடிவமைப்பு  போன்ற ஆடம்பரங்களைப் பற்றிய  கவலையில்லாமல் நீண்ட நாட்களாகத்  தொடர்ந்து வரும்  வார இதழ்,  கனடாவில் இருந்து வரும் ‘திண்ணை’ ஆகும்.  ஏராளமான ஆய்வுக்கட்டுரைகள் அதில் இடம் பெற்றுள்ளன.


அச்சு இதழ்களில் விகடன் குமுதம் கல்கி போன்று தரமான இணைய வார இதழாக வெளிவந்து கொண்டிருக்கிறது,  ‘சொல்வனம்’ இதுவரை 271 இதழ்கள் வெளியாகியுள்ளன. பிரபல எழுத்தாளர் இரா முருகனின் ‘மிளகு’  நாவல் இதில்தான் தொடர்கதையாக வந்து கொண்டிருக்கிறது. 


DTP இல் பயிற்சி உள்ள நண்பர்கள் பலர் ஆர்வமிகுதியால் இணைய இதழ்கள் தொடங்குவது தமிழில் வாடிக்கையாக உள்ளது.  BLOG என்னும் வலைப்பதிவில்  அனுபவமுள்ள நண்பர்கள்  பலபேர் இணைய இதழ்களை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.  நிறைய கனவுகளோடு, அழகான வடிவமைப்போடு,  அச்சு இதழ்களையே  தோற்கடிக்கும்  அளவுக்குத் தரமானதாக  ஆரம்பித்து,  வைட்டமின் ‘ப’ காரணமாக  நின்றுபோன இணைய இதழ்களில் ‘காகிதப் படகு..’ பெ.கருணாகரனின் ‘கல்கோனா’ வும் ஒன்று.



வங்கியிலிருந்து ஓய்வு பெற்றவர்களும்,   ‘ஒருமனம் கொண்ட இருவர்’
என்னும் பட்டப்பெயருக்கு உரியவர்களும், இளமை முதலே  எழுத்துச் சுடரை இதயத்தில் ஏந்தியவர்களுமான  சுந்தரராஜன் - கிருபாகரன் ஆகிய நண்பர்கள் சென்னையிலிருந்து ‘குவிகம்’ என்ற இலக்கிய அமைப்பை நடத்திவருகிறார்கள். அதன் முக்கிய அம்சம் ‘குவிகம் மின்னிதழ்’ ஆகும். நவம்பர் 2013 முதல் வெளியாகிக் கொண்டிருக்கும் ‘குவிகம்’ ஒரு மாத மின்னிதழாகும்.

‘விருட்சம்’ என்ற இலக்கியப் பத்திரிகையை  40 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து நடத்திவரும்  சந்திரமௌலி என்னும் அழகிய சிங்கர்,  அதையே ‘நவீன விருட்சம்’  என்ற பெயரில் இணைய நாளிதழாக- கதை கட்டுரை கவிதை என்ற பல்வேறு அம்சங்கள்  கொண்டதாக இப்போது வெளியிடுகிறார்.     


இதுவரை சொன்ன இதழ்கள் எல்லாவற்றையும் நடத்துபவர்கள் வயதிலும் வாழ்க்கையிலும் பத்திரிகை துறையிலும் அனுபவம் மிக்கவர்கள். ஆனால் திருமணமான கையோடு, கல்வி ஒன்றே துணையாக,  இதயத்தின் சிந்தனை வளம் ஒன்றே வழிகாட்டியாக,  அமெரிக்க மண்ணில் குடியேறி,  வழக்கமான அமெரிக்கக் கனவுகளைத் துரத்துவதற்கு பதிலாக, தமிழ்க் கனவுகளைத் துரத்திக்கொண்டு, சற்றும் அனுபவமில்லாத பத்திரிகை துறையில் இணையவழியில் நுழைந்து, சாதனை படைத்துக் கொண்டிருக்கும் இளநங்கை தான் அனிதா  ராஜேஷ் அவர்கள்! 


அட்லாண்டாவில் இருந்து அவர் 33 வாரங்களாக நடத்தி வரும் வாரப்பத்திரிக்கை தான் “தவம்”.  அந்தப் பெயருக்கே ஒரு சிறந்த காரணம் இருக்கிறது. ‘TA’mil ‘VA’sipin ‘M’anam - 'த'மிழ் 'வா'சிப்பின் 'ம'ணம்  என்பதிலுள்ள முதல் எழுத்துக்களைச் சேர்த்து TA-VA-M ‘தவம்’ என்று தன் இதழின் பெயரை அமைத்திருக்கிறார் அனிதா ராஜேஷ். 


வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று வெளியாகும் தவம் இதழின் மேல் அட்டையை அழகாக வடிவமைத்துக் கொடுப்பவர்கள் யார் தெரியுமா? பள்ளியில் பயிலும் அவருடைய இரண்டு பெண்குழந்தைகளான ரஜிதாவும் ரஷ்மிதாவும் தான்!  


ஒரு குக்கர் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதனால்,  மே 20, 2022 தவம் இதழை ஒரு புரட்டல் புரட்டிவிட்டு அனிதா ராஜேஷின் கதையைப் பார்ப்போமா?


மொத்த பக்கங்கள் 143 என்பதே ஒரு பெரிய சாதனைதான்! இத்தனை பக்கங்களுக்கு ‘கண்டெண்ட்’ - உள்ளடக்கம்- பலரிடமிருந்தும் கேட்டுப் பெறுவதும், வெவ்வேறு ஃபார்மட்களில் வரும் கோப்புகளைச் சீராக்கி வேர்டு ஃபைல் ஆக்குவதும்,  பின்னர் வகைப்படுத்தி மேலேற்றுவதும் என்னதான் பி. ஈ.(EEE ) படித்து, மெப்கோ ஷ்லெங்கில் எம். ஈ. முடித்து, ஐஐடி சென்னையில் பி. எச்டி. முடித்திருந்தாலும் சாதாரண வேலையா என்ன?


எம்.ஈ.  முடிக்கும்போதே ஐஏஎஸ். தேர்வையும் எழுதி, முதல் முயற்சியிலேயே  முதல் மற்றும் முக்கியத் தேர்வுகளில் வெற்றி பெற்றும், அந்தப் பணியிலுள்ள எதிர்காலச் சிரமங்களைக் கருத்தில்கொண்டு பெற்றவர்கள் எழுப்பிய கவலையினால்  நேர்முகத் தேர்வை அனிதா புறக்கணிக்கவேண்டியக் கட்டாயம் ஏற்பட்டது. அதன் பிறகே ஐ.ஐ.டி.யில்  கம்ப்யூட்டர் துறையில் பி.எச்டி. க்குப் போனார். (IIT Madras - research in Speech and Image Processing of Indian Languages using Artificial Neural Networks). 


ஆச்சரியம் என்னவென்றால், தமிழ்நாட்டிலுள்ள 80 சதவீதம்  மாணவர்களைப் போன்றே இவரும் ஆங்கிலவழிக் கல்விதான் பயின்றவர்!  தமிழோடு இருந்த தொடர்பு வாசிப்புடன் கூடிய பேச்சு மொழி மட்டுமே. 


சிறிது காலம் ஆசிரியப் பணி, ஐஐடி-யில் ஆய்வுப் பணி என்று இருந்தவருக்கு மனமொத்த இளைஞரான ராஜேஷுடன் திருமணம் நடந்தது. கணவருக்கு அமெரிக்காவில் வேலை என்பதால் அவருடன் இவரும் விமானம் ஏறினார். (அதற்கும் முன்பே தன் ஆய்வறிக்கையைச் சமர்ப்பிக்கவென அனிதா இருமுறை அமெரிக்கா வந்துசென்றது குறிப்பிடத்தக்கது). கனெக்டிகட், விஸ்கான்சின், நியூ ஜெர்சி, ஹூஸ்டன் என்று மாறிக்கொண்டே இருந்தவர்கள் இப்போது 2018 முதல் அட்லாண்டாவில் வசித்து வருகிறார்கள்.


அளவான குடும்பம். இரண்டு அழகான பெண்குழந்தைகள்.  மனைவியின் சிந்தனைச் சுதந்திரத்தில் தலையிடாத அன்பும் புரிதலும் கொண்ட துணைவர். இன்பமாக வாழ்க்கையைக் கழிக்கவேண்டிய வயதில் அனிதா ‘தவம்’ புரியவேண்டிய அவசியம் தான் என்ன?


அவரே சொல்கிறார். (அலைபேசி/வாட்ஸ்அப் வழியில் எடுத்த  பேட்டி):


அம்மாவின் புத்தக வாசிப்பு பழக்கமே என்னுள்ளும் புகுந்திருக்கிறது.  பள்ளி,  கல்லூரியில் ஆங்கிலவழிப் பாடம் என்றாலும்,  ஆங்கிலக் கலப்பில்லாமல் தமிழ் பேசித் திரிந்த நாட்கள் உண்டு!  மேலும் என் குழந்தைகளுக்குத் தமிழ் போய்ச் சேர வேண்டுமே என்ற சுயநலமே என் தமிழ் மீதான  ஈடுபாடாக  வெளிப்படுகிறதோ என்ற ஐயம் எனக்கு உண்டு!


கேள்வி:   தமிழில் உங்கள் முதல் எழுத்து அல்லது பேச்சு எப்போது வெளிப்பட்டது?    


பள்ளியில் படிக்கும்போது விகடனுக்குக் கவிதை எழுதி அது பிரசுரமானது உண்டு.  2020இல் என் முதல் சிறுவர்கள் நூல் ஆய்வு அட்லாண்டா தமிழ்ச் சங்கத்தில் வெளியானது.  ஜூலை 2020இல்  ஃபெட்னா - வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கக் கூட்டமைப்பு- அதில் பேசியது என் முதல் பட்டிமன்றப் பேச்சு.  2020இல் நான் எழுதிய 12 சிறுகதைகள் பரிசு பெற்றன.  அதே ஆண்டு என் கவிதை தொகுப்பு அமேசான் கிண்டில்  மூலமும் அடுத்த ஆண்டு 'வல்லினச் சிறகுகள்' நடத்திய போட்டியில் மூன்றாம் பரிசு பெற்று அச்சிலும் வெளியானது. 2021இல் ஃபெட்னா வின்  ஓவியப் போட்டி மற்றும் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்று நேஷனல் சாம்பியன்ஷிப் வென்றேன்!


இதே போட்டிக்கு என் மகள்கள் இருவரும் தத்தம் வயதுப் பிரிவில் ஆங்கிலத்தில் கவிதை, கதை எழுதி அவர்களே அதைத் தமிழில் மொழிபெயர்த்து ஓவியம் வரைந்து அனுப்பிப் பரிசு பெற்றது என் வெற்றியை விட மகத்தானது!



கேள்வி:  கையெழுத்துப் பத்திரிக்கை நடத்திய அனுபவம் உண்டா?


இல்லை!  ஆனால், 2015-16 இல்  இங்குள்ள தமிழ்ச் சங்கத்தின் தன்னார்வலராகப் பணியாற்றியபோது,  ஆங்கில மொழியில் உள்ளதுபோல் தமிழ் வாசிப்பை மேம்படுத்துவதற்காக Level-wise, Age-wise reading Content in Tamil  ஏற்படுத்த முயன்றேன், முடியவில்லை. 


அந்த எண்ணத்தைச் செயல்படுத்த வேண்டும் என்ற உந்துதல் தான் என்னைத் தவம் இதழைத் தொடங்க வைத்தது. ஆனால் இது சிறுவர்களுக்கான பத்திரிகை என்று எண்ணிவிட வேண்டாம்.  தமிழ் பயில விரும்பும் மாணவர்களுக்கு வயது வாரியான கதை கட்டுரை கவிதைகளை பொறுக்கி எடுப்பதற்கு வசதியாக ஒரு தளம் உருவாக்கவே இந்த இதழை நான் நடத்துகிறேன்.  மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில் சுமார் 150 முதல் 200 இதழ்கள்  வெளியாகிவிடும்  அல்லவா?  அவற்றிலிருந்து நிச்சயமாக 300 முதல் 500 வரை நல்ல எழுத்துக்கள் எனக்குக் கிடைக்கும்.  வயது வாரியாக வகைப்படுத்தி  மின்நூல்களாக வெளியிடுவதன் மூலம் என் உள்ளக் கிடக்கை நிறைவேறும் என்று நம்புகிறேன். 


ஆசிரியர் குழு அமைத்தால்  என்னுடைய நோக்கம் சிதறி விடுமோ என்ற அச்சத்தினால் தான்  தனி ஒருத்தியாக ஈடுபடுகிறேன்.  என் குடும்பமும் கணவரும் எனக்கு உறுதுணையாக இருக்கிறார்கள்.  ஆனால் நண்பர்கள்தான் அவ்வப்பொழுது அச்சமூட்டுவார்கள். வார இதழ் என்றால் வேலை அதிகமாயிற்றே, திரும்பிப் பார்ப்பதற்குள் வெள்ளிக்கிழமை வந்து விடுமே என்று என் மீதான நியாயமான கவலையை அவர்கள் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த கவலையே என்னை எதிர்நீச்சல் போட வைக்கிறது. 


கேள்வி: தவம் இதழின் கட்டமைப்பு பற்றி கூறுங்களேன்?


2021 அக்டோபர் 3 இல் நடந்த இரண்டாவது சிலப்பதிகார மாநாட்டில் எனக்குப் 'பெருந்தமிழர் விருது' வழங்கப்பட்டது. அது என்னைத் தமிழ்ச் சமூகத்திற்கு இன்னும் நிறைய செய்யவேண்டும் என்கிற உந்துதலைத் தந்தது. என்னை ஈன்றெடுத்த தாயின் பிறந்த தினம் அக்டோபர் 4.  அப்போதுதான் முதல் தவம் வார இதழை அமேசான் கிண்டிலில் உருவாக்கும் எண்ண விதை என்னுள் விழுந்து, பத்தே நாளில் முதல் தவம் இதழ் அக்டோபர் 15, 2021 அன்று வெளியிடப்பட்டது.    


ஒவ்வொரு இதழிலும் தலையங்கம் உண்டு.  தவிர 25 பிரிவுகளில் எழுத்துக்கள் இடம் பெற வேண்டும் என்று விரும்புகிறேன். 

சங்க இலக்கியம், நவீன இலக்கியம், மொழிபெயர்ப்பு இலக்கியம்,  அறிவியல் தமிழ், சிறுவர் இலக்கியம், தமிழர் பாரம்பரியம்  என்ற பிரிவுகள் முக்கியமானவை.  முந்தைய இதழைப் படித்தவர்கள் தரும்  பின்னூட்டத்தை ‘பாராட்டு-குட்டு’  என்ற பெயரிலும்,  உலகம் முழுவதிலும் தமிழுக்காக நடத்தப்படும் போட்டிகளை ‘போட்டித்  தகவல்கள்’  என்ற பிரிவிலும்  வெளியிடுகிறோம்.  தவிர சிறுகதை கட்டுரை கவிதை தொடர்கதை ஓவியம் நகைச்சுவை நூல் அறிமுகம் மற்றும் நூல் விமர்சனம் ஆகிய பிரிவுகளும் இடம்பெறுகின்றன.. 


கேள்வி: பெரும்பாலான இணைய இதழ்கள்,  இணையதளத்தின் மூலம் வெளியாகின்றன.  தவம் இதழ் மட்டும் கிண்டில் மூலம் தானே வெளியாகிறது!  என்ன காரணம்?


கிண்டில்  மூலம் வெளியாவதால், பக்க வடிவமைப்புக்கு நான் நேரம் செலவழிக்க வேண்டியதில்லை.  கிண்டிலுக்கே  உரிய அழகியல் அம்சங்கள் தானாகவே தவம் இதழுக்குக்  கிடைத்துவிடுகின்றன. மேலும் வலைத்தளப் பதிவிற்குச்   செலுத்துவது போல் கிண்டிலுக்கு ஆண்டு கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. வலைத்தளம் எப்போது வேண்டுமானாலும் மூடப்படலாம்.. ஆனால் கிண்டில்  அதிக ஆயுள் கொண்டது.  


மிக மிக முக்கியமான அம்சம்,  கிண்டிலில் விளம்பரங்கள் கிடையாது!  கவனச்சிதறல் இல்லாமல் குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் படிக்க முடியும் !


கேள்வி: ஆனால் கிண்டிலில் படிப்பதற்கு என்று தனியாகக்  கட்டணம் இருக்கிறதே !


அது உண்மைதான்.  கிண்டிலில் நாம் வைக்கும் எல்லா புத்தகங்களுக்கும் ஒரு விலை குறிப்பிட்டாக வேண்டும்.  அந்த வகையில் தவம் இதழின் விலை 99 ரூபாய்.  ஆனால் அதை இலவசமாகவே நீங்கள் படிக்க முடியும், எப்படித் தெரியுமா?

 

தவம் இதழ்  வாராவாரம் வெள்ளிக்கிழமை வெளியாகிறது.  அதை உடனே வெள்ளி சனி ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில்,  உங்கள் அலைபேசியில், அல்லது  டேப்லெட்டில் அல்லது  லேப்டாப்பில்  ஏற்கனவே நீங்கள் இறக்கி வைத்துள்ள ’கிண்டில் ஆப்’ பில் Download for Free என்று க்ளிக்கினால் போதும்! (உங்கள் வாட்ஸ் அப் நம்பரை மின்னஞ்சல் செய்தால், இதற்கான லிங்க்கை வாராவாரம் நானே அனுப்பிவைப்பேன்),


அந்த மூன்று நாட்களைத் தவறவிட்டுவிட்டால், கிண்டிலுக்குள் நேரடியாக நுழைந்து, tavam என்று search செய்தால் எல்லா தவம் இதழ்களையும் பார்வையிடலாம். வேண்டுவதை உங்கள் kindle unlimited சந்தா மூலம் படித்துக்கொள்ளலாம்! 


கேள்வி: ஒவ்வோர் இதழும் எவ்வளவு பக்கம் இருக்க வேண்டும் என்று ஒரு கணக்கு வைத்திருக்கிறீர்களா?   


சராசரியாக 140 பக்கமாவது வருகிறது. குறைந்தது 120 அதிகபட்சம் 170. (5 mb முதல் 30 mb அளவு). 


கேள்வி:  யார் வேண்டுமானாலும்  படைப்புகளை அனுப்ப முடியுமா?  எப்படி அனுப்புவது?


தவம் இதழின் நோக்கங்களை ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.  அதற்கு ஏற்ற வகையிலான எழுத்துக்களை வரவேற்கிறேன்.  உங்கள் கதை கட்டுரை கவிதைகளுடன் நீங்களே ஓவியம் வரைந்தும் அனுப்பலாம்.  தமிழ்க் குழந்தைகளுக்கான  தொண்டாக இதை நீங்கள் கருத வேண்டும். 


படைப்புகளை   tavam.emagazine@gmail.com  என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.  யூனிகோடில்,  லதா ஃபாண்டில், எம்எஸ் வேர்டு கோப்பாக அனுப்ப வேண்டும்.  பிடிஎஃப் அனுப்பக்கூடாது.  வேறு ஐயங்கள் இருந்தால் இதே முகவரியில் தொடர்பு கொள்ளவும். 


கேள்வி:  இதுவரை 33 தவம் இதழ்கள் வெளியாகி உள்ளன.  உங்களை ‘தவம்’ செய்ய தூண்டியவர்களில் முக்கியமாக யாருக்காவது நீங்கள் நன்றி சொல்ல வேண்டியிருக்கிறதா? 


நிச்சயமாக! 


என்னை ‘தமிழே அமுதே’வில் நூலாய்வு செய்ய முதன்முதலில் தூண்டிய ஜயசாரதி முனுசாமி அண்ணாவிற்கு என் நன்றி. என்மகள்கள்தான் 'தவம்' உருவாக அதிமுக்கியக் காரணம். அவர்கள் என்னிடம் தங்களின் சிறுவயது முதல் கேட்ட தமிழ் சார்ந்த கேள்விகளுக்கான விடையே 'தவம்' வார மின்னிதழ்! அவர்களுக்கும் என் நன்றி.

 ****

‘மதுரை மருக்கொழுந்து வாசம்’ என்று ஒரு பாடல் உண்டு.  மதுரைக்காரரான அனிதா ராஜேஷின் ‘தவம்’ அந்த மருக்கொழுந்து வாசத்தை அமெரிக்காவில் வாரந்தோறும் பரப்பிக்கொண்டு வருகிறது.  அகிலம் முழுவதும் அந்த வாசம் பரவட்டும் என்று வாழ்த்துகிறோம்!


 - இராய செல்லப்பா நியூ ஜெர்சியில் இருந்து. 


15 கருத்துகள்:

  1. மிகவும் பாராட்டப்படவேண்டிய சீரிய முயற்சி..தாங்கள் இதைத் தங்கள் வலைப்பூவில் தொடுத்தது இன்னும் பெருமை...

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா27 மே, 2022 அன்று AM 9:35

    சகோதரிக்கு மென்மேலும் தமிழ் பணி செய்திட வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா27 மே, 2022 அன்று AM 9:58

    சிவாயநம. மிகச் சிறந்த கச்சிதமான நேர்காணல். சகோதாரி அனிதா ராஜேஷ் அவர்களை வாழ்த்துகிறேன். பாராட்டுகிறேன். உங்களுக்கும் பாராட்டு.

    பதிலளிநீக்கு
  4. அமேசான் கிண்டிலில் தொடர்ந்து தவம் தரமிறக்குவேன்... பல தவங்கள் இன்னும் வாசிக்க தவம் செய்து கொண்டிருக்கின்றன...!

    பதிலளிநீக்கு
  5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  6. புது திண்ணை, சொல்வனம் - இரண்டிலும் நல்ல பல ஆய்வு கட்டுரைகளும் உண்டு... →சொல்வனம்← தளத்தை தங்களுக்கு அனுப்பிய ஆய்விலும் இணைப்பு உண்டு...

    அப்புறம் இந்தப் பதிவில் உள்ள "புது திண்ணை, சொல்வனம்" - இரண்டின் இணைப்பும் சரி செய்ய வேண்டும்... சொடுக்கிப் பாருங்கள்...! நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரிசெய்து விட்டேன் தனபாலன் சார்! கட்டுரையின் இறுதியில் இந்த மூன்று வலைதளங்களுக்கான இணைப்பைக் கொடுத்திருக்கிறேன்! மிக்க நன்றி!

      நீக்கு
  7. தமிழ் பணி தொடர வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
  8. மிக அருமையான ஒரு முயற்சி !!!. அதைச் சரியாக அறிமுகம் செய்து இருக்கிறீர்கள்!!!!. அ னி தா வுக்கும் , அதை இன்னும் அதிக பேருக்கு கொண்டு செல்லும் உங்களுக்கும் பாராட்டுகள் !!!

    பதிலளிநீக்கு
  9. பெயரில்லா27 மே, 2022 அன்று PM 5:33

    வாழ்த்துகள் தோழி... இந்தியா வந்தடைந்தீர்களா..?!

    பதிலளிநீக்கு
  10. பெயரில்லா27 மே, 2022 அன்று PM 6:46

    உஷா அற்புதமான முயற்சி வாழ்த்துக்கள் இப்போதெல்லாம் தென்றல் வருவதில்லையா?

    பதிலளிநீக்கு
  11. பல மின் நூல்களை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  12. அனிதா அவர்களைப் பற்றி இணையம் மூலம் அறிவேன். அதாவது அவரது தவம் கிண்டிலில் இலவசமாகத் தரவிறக்கம் செய்ய வாய்ப்புக் கிடைத்த போது ஒன்று இறக்கிக் கொண்டேன். இப்போது அவர் குறிப்பிட்டிருக்கும் நாட்களை குறித்துக் கொண்டேன். அவரைப் பற்றிய கூடுதல் தகவல்கள் இப்பதிவின் மூலம் அறிகிறேன்.

    அவருக்குப்பாராட்டுகள்! சிங்கப்பெண்!!!!

    அது போல கடைசியில் நீங்கள் கொடுத்திருக்கும் வலைச்சுட்டிகள் அவ்வப்போது வாசிப்பதுண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
  13. சிறப்பான தகவல்கள் - நீங்கள் எடுத்த பேட்டியும் சிறப்பு. தவம் மின் இதழை வாசித்தது உண்டு. எனது சில மின்னூல்கள் சிலவற்றை குறித்த வாசிப்பனுபவங்களை நண்பர் இரா. அரவிந்த் தவம் மின்னிதழில் வெளியிட்டு இருக்கிறார் என்பதும் கூடுதல் தகவலாக இங்கே தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  14. நல்ல தகவல்கள் நாளும் தொடரட்டும். நன்றி!
    ...மீ.மணிகண்டன்

    பதிலளிநீக்கு