திங்கள், மே 02, 2022

ஒரு முறை தான் வரும் காதல் (இன்று கிழமை ஞாயிறு -3)

ஒரு முறை தான் வரும் காதல்

இன்று கிழமை ஞாயிறு -3


அமெரிக்காவில் 20ஆவது நாள் 

(அட்லாண்டிக் கடலோரம்)


‘அமெரிக்காவில் காதல்’ என்ற தலைப்பில் எழுதலாமே என்று அடியெடுத்துக் கொடுத்தார் ஓர் இளைய நண்பர். ஏதோ ஒரு சிக்கலுக்கு அடிபோடுகிறார் என்பது புரிந்துவிட்டது. 


காதல் வரும் காலத்தில் நான் அமெரிக்கா வரவில்லை. அமெரிக்கா வந்திருக்கும் நாளில் காதலிக்க வழியில்லை. காரணம் வயதும் கொரோனாவும். நண்பர்கள் யாராவது தங்கள் காதல் அனுபவத்தைக் கூறினால் அதைக்  கொஞ்சம் மேம்படுத்தி எழுதலாம். யாரும் முன்வரவில்லை. 


“ஒருமுறைதான் வரும்; கதை பல கூறும்; உல்லாசப் புதுமைகள் காட்டும்”  என்று இளமையைப் பற்றிச் சொன்ன கவிஞர், “ ஒரு கொடியில் ஒரு முறைதான் மலரும் மலரல்லவா? ஒரு மனதில் ஒரு முறைதான் வளரும் உறவல்லவா?” என்று காதலுக்கு இலக்கணம் வகுக்கிறார். 


இந்த இலக்கணம் அமெரிக்கா போன்ற மேற்கு நாடுகளுக்குப் பொருந்துமா என்று தெரியவில்லை. “இங்கு காதல் என்பது காபி டீ சாப்பிடுவது போல எளிமையானதோர் தாகமே தவிர, கிழக்கு நாடுகளைப் போல் அடிமனதில் இருந்து எழும் ஒரு பசியல்ல” என்று ஒரு நண்பர் கூறினார்.    


“உங்கள் நாட்டில் காதலிக்கும் பெண் அடிமையாக்கப்படுகிறாள்.  இந்த நாட்டிலோ  தமக்குள்ள மட்டில்லாத  சுதந்திரத்தினால் பெண்கள் காதலை  மிகவும் எளிதாகக் கடந்து போகிறார்கள். திருமணத்துக்கு முந்தைய காதல் என்பதை ஆண் பெண் இருபாலாரும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை” என்றார் இங்கு பல்லாண்டுகளாக வாழும் இன்னொரு நண்பர்.  


அமெரிக்கா என்பது ஒரு நாடல்ல. உலக நாடுகளின் சங்கமம். மானிடப் பண்பாடுகளில் எத்தனை வகைகள் உண்டோ அத்தனையும் இங்கு தனித்தனியாகவோ ஒன்றுகலந்தோ காணப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட நாட்டின் பண்பாடுதான் சிறந்தது என்ற கோட்பாடே பிழையானது என்னும் கருத்து இங்கு பலராலும் ஆதரிக்கப்படுகிறது. 


சிலப்பதிகார காலத்திலேயே குடும்பம் தாண்டிய காதல்முறை நிலவிய தமிழ்நாட்டிலிருந்து இங்குவந்து படிக்கும், அல்லது வேலைபார்க்கும், அல்லது வசிக்கும் நம்மவர்களுக்கு,  இன்று அமெரிக்காவில் நிலவும் குற்ற உணர்வில்லாத காதல் முறை மிகவும் இயல்பானதாகவே தோன்றுகிறது. சங்கத் தமிழ்ப் பண்பாட்டின் நீட்சியாகவே இது பார்க்கப்படுகிறது. 


ஆகையினால்தான் திருமணம் ஆகாத இந்திய ஆண்களும் பெண்களும் ஒரே வீட்டை வாடகைக்கு எடுத்துக்கொண்டு வசிப்பது,  மும்பாய், பெங்களூர், ஏன்  சென்னையிலும் கூட, நடப்பது போலவே இங்கும் இயல்பாக நடக்கிறது.


எனவேதான், இங்கிலாந்து செல்லும் முன்பு மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியிடம் அவர் தாயார் பெற்றுக்கொண்ட மூன்று சத்தியங்களை இன்று எந்த இந்தியத் தாயும் மேற்கு நாடுகளுக்குச் செல்லும் தன் மக்களிடம் கோரிப்பெறுவதில்லை. 


“காதலிலே தோல்வியுற்றான் காளை ஒருவன் - காலம் - கடந்த பின்னே அமைதி எங்கு பெறுவான்?”  என்றெல்லாம் இன்று கவிஞர்கள் எழுதுவதில்லை. அதே போல் “ஆசையெனும் பாத்தி கட்டி அன்பை விதைக்கும்” பெண்களும் அதில் விளையும் பயிர் நிரந்தரமான பயிராக இருக்கவேண்டும் என்று நம்புவதுமில்லை, எதிர்பார்ப்பதுமில்லை. பொருளாதார யதார்த்தத்தின் அடிப்படையில் இயங்குவதே இன்றைய காதல் என்கிறார்கள். அதனால்தானோ என்னவோ, இன்றைய இளைஞர்கள் (ஆன், பெண் இருபாலரும்)  திருமணம் என்ற ஒன்றை இன்றியமையாத நிகழ்வாகக் கருதுவதில்லை. 


ஆனால், “காதல் என்னும்  உணர்வை விட மனிதநேயம் என்னும் உயர்ந்த உணர்வையே மானிட சமூகம் இன்று தழுவிநிற்கிறது. இதில் அமெரிக்கா என்றோ, இந்தியா என்றோ பேதங்கள் இருப்பதாகத் தெரியவில்லை” என்ற கருத்தும் பொதுவெளியில் இருக்கிறது. 


ஆனால் இதே நாட்டில்தான் ஒரே பாலினர் திருமணம் செய்துகொள்ளும் வழக்கம் சட்டபூர்வமாக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. அதேபோல,   “மீ டூ” என்ற இயக்கம் சில பெண்களால் முன்னிறுத்தப்பட்டு, பரபரப்பு ஊடகங்களால் நீர்வார்க்கப்பட்டு சில காலம் செழித்து வளர்ந்தது, நகைமுரணே. அதன் தாக்கம் இந்தியாவிலும் உணரப்பட்டது. சென்னையில் எனக்குத் தெரிந்த கலைத்துறை பிரமுகர்  ஒருவர்மீது  (அவர் சினிமாத் துறையில் இல்லாதவர்)  இக்குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு அவருடைய எதிர்காலம் சோதனைக்குள்ளாகியது. இந்தச் சிக்கல்களை எவ்வாறு புரிந்துகொள்வதென்று தெரியவில்லை.  


-இராய செல்லப்பா  நியூஜெர்சியில் இருந்து 

13 கருத்துகள்:

  1. கு.மா.பா.திருநாவுக்கரசு2 மே, 2022 அன்று AM 10:32

    கருத்தொற்றுமை இன்றி காதலர்களாகவோ,கணவன் மனைவியாகவோ சேர்ந்திருப்பதென்பதில் இருவருடைய மனநிலையும் பாதித்து விடும். மேலை நாடோ கீழை நாடோ, இக்காலத்தில் அடிப்படை மனிதநேயம் மட்டுமே உறவுகளின் பந்தத்தை உறுதிப்படுத்துகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்து சரியே. இயற்கைக்கும் நமது பழக்க வழக்கங்களுக்கும் ஒவ்வாத உறவுமுறைகள் நிச்சயம் மன உளைச்சலில்தான் கொண்டுபோய்விடும்.

      நீக்கு
  2. ஒரு கொடியில் ஒருமுறைதான் இலக்கணம் இப்போது இந்தியாவிலேயே அதிகம் இல்லை...  வழக்கொழிந்து வருகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வயத்துல புளியைக் கரைக்காதீங்கப்பா

      நீக்கு
    2. நெல்லைத் தமிழரை அச்சுறுத்தாதீர் ஸ்ரீராம் அவர்களே! ஐயா நெல்லைத் தமிழர் அவர்களே, இந்தியாவில் இம்மாதிரி நிகழ்வுகள் ஏற்பட்டு வருகின்றன என்றாலும், அவற்றுக்கு எதிரான சக்திகளும் தொடர்ந்து செயல்பட்டுவருவதால் சமுதாய்த்தில் பெரிய தீவினைகள் உடனே நேர்ந்துவிடப் போவதில்லை என்றே படுகிறது.

      நீக்கு
  3. இப்போது இங்கும் நீங்கள் சொல்வது நடக்கத்தான் செய்கிறது... பண்டும் இருந்ததுதான். திருமணம் என்ற சட்டத்திற்குள் சிக்காமல் வாழும் வாழ்க்கை.
    காதலை ஜஸ்ட் லைக்தட் கடந்து செல்வது. அற்ப காதல்கள், பணத்திற்காக வசதிக்காக ஆளை மாற்றுவது, நேர்மையற்ற காதல் இதில் உடன்பாடு கிடையாது.

    அதே சமயம் உண்மையான உறுதியான விருப்பத்துடன் திருமணம் செய்பவர்கள் சந்தோஷமாக வாழட்டும்.

    மீ டூ வினால் ஏதேனும் குற்றங்கள் குறைந்திருக்கிறதா? சில வெளியில் வராதவை உண்டு. அதே சமயம் அதைச் சாதகமாகப் பயன்படுத்திய நிகழ்வுகளும் உள்ளதாகத் தெரிகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீடூவினால் சில நல்ல பெண்மணிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்ததை நாம் அறிவோம்தானே! சில ஆண்களின் நிறம் மட்டுமா கருப்பு? நெஞ்சமும் கருப்பாக இருக்கிறதே! ஆண்டுகள் சில ஆனாலும் அப்பெண்களுக்கு இன்னும் தொடர்ந்து மிரட்டல்கள் விடுக்கப்படுகிறதே! அதே சமயம், ஆணாதிக்க சக்திகள் எப்படியாவ்து மீண்டுவந்து மீண்டும் அதே களியாட்டத்தில் ஈடுபடுகின்றனவே!

      நீக்கு
  4. காதல் என்பது மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே இருப்பதுதானே. மாபெரும் குற்றமல்ல. பாதகமல்ல ஆனால் காதல் என்ற பெயரில் பெரும்பான்மையான இப்போதைய நிகழ்வுகள், இளைஞர்களின் எண்ணங்கள், வெளிப்பாடுகள், செயல்பாடுகள் சரியான ரீதியில் இல்லை என்பதுதான் வேதனை.

    மீ டூ என்பது பெரிய மாற்றத்தைக் கொண்டுவரவில்லை என்றே தோன்றுகிறது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காதலின் கண்ணியத்தைக் கருவாடாக்கியதில் கணினிக்கும் கணினித் துறைக்கும் காட்சி ஊடகங்களுக்கும் மிகுந்த பொறுப்பு உண்டு.

      நீக்கு
  5. ஒரு முறை மட்டுமே மலரும்..... நல்ல கட்டுரை. இங்கேயும் இப்படி நிறைய மாற்றங்கள்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாற்றங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. நம்மால் தான் ஓரளவுக்கு மேல் மாறமுடியவில்லை.

      நீக்கு
  6. வளர்ப்பு, வளர்ந்த சூழல் பொறுத்தே என்றாலும்...

    ...


    காதல் காதலே...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாங்க, எப்படிப்பட்ட பாதுகாப்பையும் மீறி காதல் என்னும் கொடி எங்கோ படர்ந்து விடுகிறது. விளைவுகளை அனுபவிப்பது அவர்கள் மட்டுமா? பெற்றோர்களும் அல்லவா?

      நீக்கு