வியாழன், ஜூன் 16, 2022

தலைநகர் போகிறான் தமிழன்

 தலைநகர் போகிறான் தமிழன் 

(புதுடில்லிப் புராணம்-1)

அமெரிக்காவில் 64 ஆவது நாள் (14-6-2022)


வங்கிப் பணியில் சேர்ந்தபோது மூன்றாண்டுகளுக்கு ஒருமுறையாவது ஒரு மாற்றம் இருக்கும் என்று தெரிந்துவிட்டது. எனவே அதைச் சுமையாகக் கருதாமல் சுவையாகக் கருதிக் கொள்ளும் மனநிலைக்கு என்னை ஆட்படுத்திக் கொண்டு விட்டேன். ஏழு ஊர்களில் 12 முறை இடமாற்றம் ஏற்பட்டது. அதில் பொருளாதார ரீதியாக எனக்கு மிகுந்த இழப்பு ஏற்படுத்திய இடமாற்றம் சென்னையிலிருந்து டெல்லிக்கு நான் மாற்றப்பட்டதே. ஆனால் என் வாழ்க்கையில் - குறிப்பாக இலக்கிய வாழ்க்கையில் - எனக்கு உரிய அங்கீகாரத்தை அளித்து நான் சிகரம் தொடுவதற்கு வாய்ப்பளித்தது அந்த இடமாற்றமே ஆகும்.



டில்லி கரோல் பாகில் ஆரிய சமாஜ் அருகிலிருந்த கார்ப்பரேஷன் வங்கியில் மண்டல அலுவலகத்தில் நான் அதிகாரியாகப் பணியாற்றியது மூன்று ஆண்டுகள் (1989-92). ஆனால் அலுவல் காரணமாக ஆண்டுக்கு ஒரு முறையாவது டெல்லிக்கு வந்து செல்லும் வாய்ப்பு எனக்கு இருந்தது. அந்த வகையில் அடுத்த 15 ஆண்டுகள் தொடர்ந்து உறவு கொண்டிருந்தேன்.


பயணக் கட்டுரை எழுதுவதில் பல வகை உண்டு. தமிழில் இந்த இலக்கிய வகையின் பிதாமகர் ஏகே செட்டியார் என்பார்கள். அவருக்குப் பின்னால் ஆனந்த விகடனில் மணியன் அவர்கள் பயணக்கதையைப் பிரபலம் ஆக்கினார். 'இதயம் பேசுகிறது' என்ற தலைப்பில் பல நாடுகளுக்குச் சென்று அவர் எழுதிய கட்டுரைத் தொடரே அந்தச் சில ஆண்டுகளில் விகடனின் அதிக விற்பனைக்குக் காரணமாக இருந்தது என்றால் மிகையாகாது. பின்னாளில் அவர் தனியாகப் பிரிந்து சென்று "இதயம் பேசுகிறது" என்ற பெயரிலேயே வாரப் பத்திரிகை தொடங்கி  நடத்தினார் என்பது வரலாறு.


ஆனால் மணியனின் கட்டுரைகளில் அனைவரையும் கவர்ந்த அம்சம், தான் சென்ற நாடுகளில் சைவ உணவும் குறிப்பாக இட்லி தோசையும் கிடைக்காமல் எவ்வாறு அவதிப்பட்டார் என்பதை அவர் சுவைபட வர்ணித்த பகுதிகளே. அப்போது விகடனில் பணியாற்றிய வரும், மணியன் சென்ற வேளையில் தானும் பிரிந்து சென்று கலைஞர் மு கருணாநிதிக்காக 'குங்குமம்' என்ற வார இதழைத் தொடங்கியவருமான சாவி அவர்கள், மணியனின் பயணக் கட்டுரைகளை 'இட்லி சாம்பார் கட்டுரை'  என்று கிண்டலாகக் கூறுவாராம்.


எனக்கு பயணக் கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் கிடையாது. இன்று தமிழ்நாட்டில் உள்ள 100இல் 50 நடுத்தர குடும்பங்களிலாவது வீட்டுக்கு ஒரு இளைஞனோ யுவதியோ கம்ப்யூட்டர் படித்திருந்தால் அமெரிக்காவில் வேலை கிடைத்து தங்கி விடும் சூழ்நிலை இருப்பதால், அவர்களைப் பார்க்க பெற்றோர்கள் ஒருமுறையாவது சென்று வரும் வாய்ப்பு கிடைப்பதால், வெளிநாட்டு பயணம் என்பது புதுமையோ புதிரோ அல்ல. உள்நாட்டு பயணமும் புதுமையானதாக இல்லை. காரணம் விரைவு ரயில்களும் விமானங்களும் பல்வகை டிவி சேனல்களும் சமூக ஊடகங்களும். 


புதிய ஊர்களுக்கு பயணம் போனால் நான் முதலில் கவனிப்பது அங்குள்ள கட்டமைப்புகளை அல்ல, உணவங்காடிகளை அல்ல. அங்குள்ள மனிதர்களையே. எந்த வகையில் அவர்கள் நானறிந்த மனிதர்களிடமிருந்து வேறுபடுகிறார்கள் என்பதையே நான் கூர்ந்து கவனிப்பேன். அதைப் பற்றி எழுதுவது தான் என்னுடைய பயணக் கதைகளில் முக்கியமானதாக இருக்கும்.


ஏற்கனவே "ஊர்க்கோலம்" என்ற பெயரிலும் "சொல்லட்டுமா கொஞ்சம்" என்ற பெயரிலும் இந்த வகைப் பயணக் கதைகளை நான் நூல் வடிவில் பகிர்ந்து கொண்டு இருக்கிறேன். அவற்றில் சொல்லாமல் விட்டதை மட்டுமே  இப்பொழுது எழுதிவிட முயல்கிறேன்.

*** 

கரோல்பாகில் எப்போதுமே வீட்டு வாடகை அதிகம் என்பதால்  தில்லிக்கு மாற்றல் வேண்டாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் அங்கு என்னைப் போன்றவர்களுக்காகக் கட்டப்பட்ட குவார்ட்டர்ஸ் தயாராக இருப்பதாகக் கூறப்பட்டதால் சரியென்று கிளம்பினேன். 


டெல்லியையும் உத்திரப் பிரதேசத்தையும் பிரிக்கும் தேசிய நெடுஞ்சாலையில், ஒரு பக்கமாக ஆனந்த விகாரும் எதிர்ப்புறத்தில் காசியாபாதும் இருந்தன. காசியாபாத்தில் ராம்பிரஸ்தா என்ற சிறிய நிலப் பகுதியில் புதிதாக குடியிருப்புகளை உண்டாக்க ஓர் அரசியல்வாதி முயன்றபோது, அங்கு கட்டப்பட்ட முதல் கட்டிடம் எங்கள் வங்கியின் அதிகாரிகளுக்கான குவாட்டர்ஸ்.


30 வருடங்களுக்கு முன்பு அந்தப் பகுதி எப்படி இருந்தது என்று கற்பனை செய்து கொள்ளலாம். சென்னையில் எப்படி மந்தைவெளி என்பது ஒரு காலத்தில் மாடு மேய்க்கும் பகுதியாக இருந்ததோ, அதேபோல் ராம்பிரஸ்தாவும் காசியாபாதின் மாடு மேய்க்கும் பகுதியாக இருந்தது. எங்கள் கட்டிடம் தவிர மற்ற இடங்கள் எல்லாம் காலி நிலம். ஒரு ரயில்வே மேம்பாலத்தின் நேர் கீழாக இருந்தது அது. கரோல்பாகில் இருந்து சுமார் 25 மைல் தூரம். அருகில் வியாபார நிறுவனங்களும் பள்ளிக்கூடங்களும் கிடையாது. மணிக்கு ஒரு முறை நகரப்பேருந்து மட்டுமே வரும். ஆட்டோ ரிக்ஷாக்கள் கிடையாது.


இப்படிப்பட்ட அபூர்வ சூழ்நிலையில் அமைந்திருந்த குவார்ட்டர்சில்  எந்த அதிகாரியும் வசிக்க முன்வராததில் ஆச்சரியமில்லை. கட்டி முடித்து எட்டு வருடங்கள் ஆன பிறகும் அதற்கு தண்ணீர் வசதியோ மின் வசதியோ  கிடையாது. அதன் மூன்று மாடிகளிலும் இருந்த 12 குடியிருப்புகளில் ஒன்று விடாமல் வசித்த புறாக் கூட்டங்களும் வாடகை தர முன்வரவில்லை. ஆனால் மழையாலும் புயலாலும் கதவுகளும் ஜன்னல்களும் உளுத்துப் போய் இருந்ததை பற்றி  அவை புகார் தெரிவித்ததுமில்லை. இரவில் தெருவிளக்கு இல்லாத, மக்கள் நடமாட்டமே இல்லாத பகுதி அது. ஆனால்  நெடுஞ்சாலையில் இரவு முழுவதும் கனரக வாகனங்கள் இடைவிடாமல் பெருத்த ஓசையோடு சென்றுகொண்டிருக்கும்.


எனக்கு வந்த கடிதத்தில் ராம்பிரஸ்தாவில் எனக்கு ஒரு குவார்ட்டர்ஸ் ஒதுக்கப்பட்டுள்ளது என்று மட்டுமே இருந்ததே தவிர மேற்சொன்ன  உண்மைகள் தெரிவிக்கப்படவில்லை. அதிகாரப்பூர்வக் கடிதங்களில் உண்மைகளைத் தெரிவிக்கக்கூடாது என்ற உண்மை எனக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.


***

அப்பொழுது என்னுடைய மூன்று குழந்தைகளும் சென்னையில் படித்துக் கொண்டிருந்தார்கள். மனைவி அரசாங்க உத்தியோகத்தில் இருந்தார். எனவே குடும்பத்தை இடப்பெயர்ச்சி  செய்யாமல் என்னை மட்டும் பெயர்த்து நடுவது என்று முடிவாயிற்று. என் ஒருவனுக்காக அதிக வாடகை கொடுத்து கரோல் பாகில் இருப்பதை விட, 25 மைல் தூரத்தில் ராம்பிரஸ்தாவில் தனிக்காட்டு ராஜாவாக இருந்து விடலாம் என்று தீர்மானித்தேன்.


எனக்கு எப்போதுமே ஒரு ராசி உண்டு. நான் எதைத் தொடுகிறேனோ அது பிரபலமாகிவிடும். ராம்பிரஸ்தாவும் அப்படியே. மங்களூர் பெண்மணி ஒருத்தி குடும்பத்தோடு அங்கு வசிக்க முன்வந்தார். ஹூப்ளியில் இருந்தும்   ஒரிசாவில் இருந்தும்  மாற்றலான  இரண்டு பேர் குடும்பத்தோடு வந்தார்கள். மதுரைக்காரரான  மதன்மோகன் என்பவர் தன் மனைவி குழந்தையோடு சந்தோஷமாகக் குடிவந்தார். அவருடைய அதிர்ஷ்டம், அதற்கு ஒரு மாதம் முன்புதான் எங்கள் கட்டிடத்தின் எதிரிலேயே ஒரு சிபிஎஸ்இ பள்ளி தொடங்கியது. இரண்டாவது வருடம் எங்கள் கட்டிடத்தின் எல்லாக்  குடியிருப்புகளும் நிரம்பிவிட்டன.


அந்த முதல் வருடத்தில் நாங்கள் பட்ட கஷ்டங்கள் சொல்லி முடியாது. குடிக்கும் தண்ணீருக்கு தேசீயநெடுஞ்சாலையைக் கடந்து போக வேண்டி இருந்தது. கட்டுமான நிறுவனத்திடமிருந்து தற்காலிக மின்சாரம் வழங்கப்பட்டது. அது எப்போது வேண்டுமானாலும் வரும் போகும். ஒரு காலத்தில் புகழ்பெற்று பின்னால் மறைந்து போன "மாம்பலம் கொசு" வைவிட வீரியமுள்ள கொசுவகைகள் காசியாபாத்தில் இருந்தன. அவற்றுக்கு எங்கள் தென்னிந்திய இரத்தம் மிகவும் பிடித்துப் போய்விட்டது. நான் அந்தக் கட்டிடத்தை விட்டு சென்னை திரும்பிய பிறகும், அங்கிருந்தவர்களுடன் அதற்கு ஏற்பட்ட இரத்தபந்தம் விடவில்லை என்று கேள்வி.


ராம்பிரஸ்தாவில் இரண்டாவதாக எழுந்த ஒரு கட்டிடத்தின் தரைப் பகுதியில் சிறிய மளிகைக்கடை,  கெரசின் கடை,  காய்கறிக் கடை ஆகியன தோன்றின. முக்கியமாக ஒரு இஸ்திரி போடும் கடையும்  எழும்பியது எங்களுக்கு வசதியாக இருந்தது. இஸ்திரிக்காரரின் பெயர் ஜெய்சிங். (சர்தார்ஜி அல்ல). அவர் மனைவி பெயர் ராக்கி.  சிங்கும் ராக்கியும்  கட்டி முடிக்கப்படாத அக் கட்டிடத்தின் ஓர் அறையில் தற்காலிகமாகத் தங்கிக் கொண்டார்கள். மதன்மோகன் மிகவும் கெட்டிக்காரர். சிங்கின் துணையால்,   ஓரளவு அன்பளிப்புக்கான செலவு  செய்தபிறகு, எங்களில் சிலருக்கு ரேஷன் கார்டு வாங்கிக் கொடுத்தார். அவருடைய முயற்சியால எஸ்டிடி பூத் ஒன்றும் ஏற்படுத்தப்பட்டது. எனக்கு எல்லாவகையிலும் பக்க பலமாக இருந்தார். 


இனி டில்லியில் நீங்கள் சந்திக்கப்போகும் பல வித்தியாசமான மனிதர்களில்  இந்த ஜெய்சிங்கும் ராக்கியும்தான் முதலாமவர்கள். எளிமையான குடும்பம். ஏழ்மையில் உழன்றாலும்  நேர்மையான குடும்பம். வீட்டு வேலைகளும் செய்து கொடுத்தாள் ராக்கி. ஸ்கூட்டர் பங்ச்சர் ஆனால் போட்டுக் கொடுப்பார் ஜெய்சிங்.  ஆனால் கொடுத்ததை வாங்கிக்கொள்வார்கள். மீந்த உணவை மட்டும் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள். இந்த ராக்கியின் உண்மைக் கதையைத்தான் நாளை படிக்கப்போகிறீர்கள். படித்துவிட்டு அவள் செய்தது நியாமா என்று முடிவு சொல்லுங்கள். 


          -இராய செல்லப்பா நியூ ஜெர்சியில் இருந்து. 

8 கருத்துகள்:

  1. படிக்க மிகவும் சுவையாக இருந்தது. Carol Bagh ல் 4 or 5 நண்பர்கள் சேர்ந்து தங்கி இருக்கலாமே. இந்த அத்வானத்தில் அவஸ்தை படுவதற்கு பதில். எப்படி்யும் சம்பளத்தில் HRA cut ஆடும் அல்லவா குவாட்டர்ஸில் இருந்தால்.?

    பதிலளிநீக்கு
  2. ராமரின் பாதங்களால் அகலிகைக்கு விமோசனம்
    இராய செல்லப்பா சாரின் பாதங்களால் ராம்பிரஸ்தா பிரபலம்!

    பதிலளிநீக்கு
  3. அனுபவங்கள் சுவையானவை, சுவையானவை. ராக்கியின் உண்மைக் கதையை அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  4. நூலில் இல்லாதவற்றை இதுபோல் பகிர்வது கொள்வது அருமை ஐயா...

    பதிலளிநீக்கு
  5. I appreciate your writing. Very interesting. அதுக்காக ஹைதையைக் கைவிடாமல் அந்த அனுபவத்தையும் தொடரவும்

    பதிலளிநீக்கு
  6. "தலைநகர் போகிறான் தமிழன்"

    மிக நல்ல தலைப்பு.

    பதிலளிநீக்கு
  7. வழக்கம் போல் சுவாரசியமான எழுத்து. நம்ம ஊர் நீதிமன்றம் போல ராக்கி செய்ததுக்கு இத்தனை வருஷம் கழித்துப் பஞ்சாயத்தை கூட்டியிருக்கீங்களே!!! அப்படி என்ன செய்தாள் என்று பார்க்கப் போகிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு