செவ்வாய், ஜனவரி 14, 2014

பாரதியாரால் பூணூல் அணிவிக்கப்பட்ட கனகலிங்கம் ( ‘அபுசி-தொ பசி’- 22)

சனாதனவாதிகளை எதிர்த்துச் சமூகப் புரட்சிக்கு வித்திட்ட முதல் தமிழ்க் கவிஞன் பாரதி. சாதி ஒழிப்பும் சமத்துவமும் அவனது கண்கள். அக்கிரகாரத்தில் இருந்தவர்கள் அவனது முற்போக்கு கொள்கைகளைப் புரிந்துகொள்ள இயலாத பழமையில் ஊறிப்போயிருந்த நிலையில், அதிரடியாக ஒரு ஹரிஜனத் தோழரான ரா.கனகலிங்கம் என்பவருக்குப் பூணூல் அணிவித்து அவரைப் பிராம்மணராக அறிவித்தார் பாரதியார். அந்த நிகழ்ச்சியைக் கனகலிங்கமே தனது நூலில் எப்படி விவரிக்கிறார் தெரியுமா?  சென்னை புத்தகப் பொருட்காட்சியில் வாங்கிய நூல்.

“என் குருநாதர் பாரதியார்” – ரா.கனகலிங்கம் (தையல் வெளியீடு, சென்னை தொலைபேசி:  044-26621530  பக்கம் 80, ரூ. 50,  2007)  

(பாரதியார் புதுவையில் வாழ்ந்து வருகையில்) ஒருநாள் என்னை நோக்கி, “உனக்கு உபநயனம் செய்ய நிச்சயித்திருக்கிறது. அதிகாலையில் எழுந்து நீராடிச் சுத்தமான உடையுடன் இங்கு வந்து சேர வேண்டும். சட்டையொன்றும் போட்டுக்கொள்ள வேண்டாம்” என்றார். அப்படியே மறுதினம் காலை நான் பாரதியார் வீட்டை நோக்கிச் சென்றேன்.
உள்ளே போய்ப் பார்க்கையில் அங்கே பிராம்மணரும் பிராம்மணர் அல்லாதாரும் ஆகிய பாரதி நண்பர்கள் காணப்பட்டார்கள். அவர்களிடையே அறிஞர் வ.வே.சு.ஐயர் கம்பீரமாக வீற்றிருந்தார். திரு. ஸ்ரீநிவாசாச்சாரியார், திரு நாகசாமி ஐயர், குவளைக்கண்ணன் என்ற திரு கிருஷ்ணமாச்சாரியார், திரு கோவிந்தராஜுலு நாயுடு முதலானவர்களும் இருந்ததாக நினைவு.

(அவர்களை) மனதார நமஸ்கரித்தேன். அவர்களும் என்னை உற்று நோக்கி நமஸ்கரித்து, ‘வந்தே மாதரம்’ சொல்லி வாழ்த்தினார்கள். பாரதியார் சுறுசுறுப்பாகக் கூடத்திற்கும் சமையல் கட்டிற்கும் நடந்தவண்ணமா யிருந்தார்.

‘நாழிகையாகிறது, நடக்கட்டும்’ எனக் கணீரென்று ஒலித்தது வ.வே.சு.ஐயரின் குரல். ‘இதோ வந்துவிட்டேன்!’ என்று எதிரொலித்தது பாரதியாரின் வெண்கல மணிக்குரல். உடனேயே பாரதியார் பிரசன்னமாகிவிட்டார், குங்கும திலகமும் நெற்றியுமாக.

கூடத்தில் லட்சுமி, சரஸ்வதி, கிருஷ்ணன் ஆகிய மூவருடைய  படங்கள் மாட்டியிருந்தன. இம்மூன்று படங்களையும் பூக்களால் அலங்கரித்தார் பாரதியார். கிருஷ்ணன் படத்திற்கு அடியில் பிச்சுவா என்ற வளைவான கத்தியொன்று மாட்டியிருந்தது. அந்தக் கத்திக்கும் குங்குமப் பொட்டு இட்டார். சற்று நேரம் தேவி பராசக்தியைத் தியானித்துப் பாடினார்.

பிறகு என்னிடம் வந்து கிழக்கு முகமாய் உட்காரச் சொன்னார். நான் உட்கார்ந்ததும், அந்த வீர விழியால் ஒரு பார்வை பார்த்துவிட்டு குருநாதர், தம் திருக்கரத்தால் என் நெற்றியிலும், புறத்திலும், மார்பிலும் திருநீற்றுக் காப்பு இட்டார். பிறகு என்னை மண்டியிட்டு உட்காரச் சொன்னார். கையில் பூணூலை எடுத்துக்கொண்டு சூரிய வழிபாடு செய்து வெகுநேரம் ஜபம் செய்து முடித்ததும், எனக்குப் பூணூல் அணிவித்தார்.

நான் உடனே சாஷ்டாங்கமாக விழுந்து பாதத்தைத் தொட்டு நமஸ்கரித்தேன். குருநாதர் (பாரதியார்) என்னை ஆசீர்வதித்து, “இன்று முதல் நீ பிராம்மணன்!” என்று உரத்த குரலில் கோஷித்தார். “இனி யாராகிலும் என்ன ஜாதி என்று கேட்டால் –‘நான் பிராம்மணன்’- என்று தைரியமாகச் சொல்லு” என்றும் கட்டளையிட்டார்.
“அப்படி ஆய்விடலாமா என்று யாராவது கேட்கத் துணிந்தால், -‘அது எனக்குத் தெரியாது; என் குரு பாரதியாரைக் கேளுங்கள், அவர் உங்கள் ஐயத்தைத் தெளிவிப்பார்’- என்று  பதில் சொல்லிவிடு” என்பதும் எனக்குப் பாரதியார் இட்ட கட்டளை. இந்த உபநயனச் செய்தி ஊரெல்லாம் பரவிவிட்டது. புதுவை வாசிகளில் யாராவது ஒருவர் தம்மைக் கேள்வி கேட்க மாட்டாரா என்று பாரதியார் ஆவலாக எதிர்பார்த்திருந்தார். அதை ஒரு சந்தர்ப்பமாகக் கொண்டு பழைய வேத முனிவர்களின் பரந்த மனப்பான்மையையும், உண்மையான இந்து மதத்தின் உயர்ந்த லட்சியங்களையும் வெளியிட்டு விவரிக்கத் துடித்துக் கொண்டிருந்தார்.

ஆனால் ஒருவரும் பாரதியார் எதிர்பார்த்தபடி தலைகாட்டவில்லை. ஒரே ஒரு செட்டியார் மாத்திரம் – புதுவை ஈசுவரன் கோவில் தெருவில் வசித்து வந்த மணிலா வியாபாரி – ‘பாரதி புதுச்சேரியைக் கெடுக்க வந்திருக்கிறான்! கனகலிங்கத்திற்கு உபநயனம் செய்து பிராம்மணன் என்று சொல்லும்படி தூண்டி விடலாமா?’ என்று சொல்லிக் கொண்டிருந்தாராம். அந்தச் செட்டியாரும் பகிரங்கமாகப் பாரதியாருடன் வாது செய்யத் துணியவில்லை. வீட்டுக்குள்ளே முணுமுணுத்துக்கொண்டிருந்தார் என்றுதான் பாரதியார் கேள்விப்பட்டாராம். பாரதியாரே இதை என்னிடம் சொல்லிச் சிரித்தார்....
***** 
கனகலிங்கம் மேலும் கூறுகிறார்...

ஹரிஜனங்களுக்கு ஆலயப் பிரவேசம் அளித்துவரும் இன்றைய தமிழகத்திலும், ‘இதயப்பிரவேசம்’ அளிக்கும் உயர்குலத்தினர் மிகச் சிலரேயாவர். இப்படியிருக்க, அந்த நாளிலேயே பாரதியார் தம் இதயக்கோவிலில் ஹரிஜனங்களைத் தாராளமாகப் பிரவேசிக்கச் செய்து, அத்தகைய பிரவேசத்தைத் தேச சேவையின் முக்கிய அம்சமாகவும் கருதினார். இதைக் குறித்து மணிக்கணக்கில் பேசலாம்...

ஒருநாள் நான் பாரதியார் வீட்டிற்குச் சென்றிருந்தேன். என்னைக் கண்டதும் பாரதியார், ‘உனக்குத் தம்பலா வீடு தெரியுமா?’ என்று கேட்டார். ‘தெரியும்’ என்றேன். ‘அப்படியானால் அந்த வீட்டுக்குப் போய்வருவோம்’ என்றார். நான் திடுக்கிட்டுப் போனேன். குருநாதர் இருந்தாற்போலிருந்து தோட்டி தம்பலா வீட்டுக்கு அழைக்கிறாரே என்றும், அவர் இதயம் வருந்தலாகாதே என்றும் எண்ணிக் கொண்டே, ‘சுவாமி, வாருங்கள், போய் வருவோம்!’ என்று பதில் சொன்னேன்.

புதுச்சேரியில் தோட்டி சமூகத்திற்குத் தம்பலா தலைவராக இருந்தார். அவருடைய சொந்தப் பெயர் எனக்குத் தெரியாது. பொதுவாக ஜனங்கள் அழைக்கும் பெயர்தான் தம்பலா. அவர் சாராயக்கடை, கஞ்சாக்கடை இவைகளைக் குத்தகை எடுத்துப் பொருள் சம்பாதித்தவர். 1906-ஆம் ஆண்டில் நடைபெற்ற ‘லெமேர்’ தேர்தலில் அவர் வோட்டர்களைப் பயமுறுத்தியது பிரசித்தமான செய்தி. அக்காலத்தில் புதுவையில் தம்பலா என்றால், அழுத பிள்ளை வாய் மூடும் என்பார்கள்.

புதுச்சேரி ‘புல்வார்க்’ பக்கத்தில் சுண்ணாம்புக் காளவாய் என்ற இடத்தில் தமக்குச் சொந்தமான ஒரு பெரிய மாடி வீட்டில் தம்பலா வசித்து வந்தார். பாரதியாரும் நானும் அங்கே சென்றதும், அவ்வீட்டின் ஒட்டுத் திண்ணை ஒன்றில்  பாரதியார் உட்கார்ந்துகொண்டார். வீடு தாழிட்டிருந்தது. கதவைத் தட்டச் சொன்னார்.  தட்டியதும் உள்ளே தம்பலாவின் மனைவி, ‘என்ன செய்தி?’ என்று கேட்டால். ‘தம்பலா எங்கே?’ என்று நான் கேட்டதும், அவள், ‘அவர் கழனி வேலையாகப் போயிருக்கிறார். வருகிற சமயம்தான்’ என்றாள். அப்படி அவள் சொல்லி வாய் மூடுவதற்குள் தம்பலாவும் வந்து சேர்ந்தார்.

அவர் பாரதியாரைக் கண்டவுடன் வரவேற்றுத் தாழ்மையுடன் கும்பிடு போட்டு நின்றார். கவிஞர் தமக்கு எதிராயிருந்த ஒட்டுத் திண்ணையில் தம்பலாவை உட்காரச் சொன்னார். பாரதியார் எவ்வளவோ வற்புறுத்தியும் அவர் கேளாமல் தோளில் போட்டிருந்த துண்டை விரித்துப்போட்டுத் தரையிலே உட்கார்ந்துகொண்டார். ‘நான் யார் தெரியுமா?’ என்று குருநாதர் கேட்டார். தம்பலா, ‘தெரியுங்கோ! நீங்கள் சுதேசிங்கோ!’ என்றார். ‘அப்படியானால் நீர் பரதேசியா?’ என்று பாரதியார்   பளிச்சென்று கேட்டார். தம்பலா ஒன்றும் பதில் சொல்லாமல் இவரைப் பக்தியுடன் நோக்கியவண்ணம் இருந்தார்.

கடைசியாகப் பாரதியார், “உம்முடைய வீட்டில் வந்து உட்கார்ந்துகொண்டு உம்மிடம் இரண்டொரு வார்த்தையாவது பேசவேணும் என்ற அவா இருந்தது. இன்று பூர்த்தியாகிவிட்டது.நாங்கள் போய் வருகிறோம்” என்று எழுந்தார். அப்படிப் பிரிந்துவிட மனமில்லாதவர் போல் தம்பலாவும் எங்களுடன் கொஞ்ச தூரம் ரஸ்தா வரையில் வந்து, பாரதியாருக்கு நமஸ்காரம் செய்துவிட்டுத் திரும்பினார்.

அப்போது பாரதியார் என்னை நோக்கி, “கனகலிங்கம்! தம்பலா நம்மிடம் எவ்வளவு நல்லவனாக நடந்துகொண்டான், பார்த்தாயா? தேர்தல் காலங்களில் ஜனங்களை அடிப்பதும் ஹிம்சிப்பதுமாய் இருந்தான் என்று கேள்விப்பட்டுத்தான் நான் இவனிடம் சிநேகம்செய்ய மனமில்லாமல் இருந்தேன்!’ என்று சொன்னார்.

எந்தக் காரணத்தை முன்னிட்டும் சிலரை ஒதுக்கிவைப்பது தவறு என்று பாரதியார் கருதினார். கெட்ட பழக்க வழக்கங்கள் உள்ளவரானாலும் அவர்களோடு நல்லவர்கள் பழகுவார்களானால், அவர்களைத் திருத்த முடியும்; ஒதுக்கி வைப்பதோ, ஒடுக்கி வைப்பதோ, அவர்களுக்கும்கேடு, பிறருக்கும் கேடு என்பது பாரதியாரின் கொள்கை.
***
சிறு புத்தகம்தான், ஆனால் பாரதியார் பற்றிய ஆய்வு மேற்கொள்ளும் எவரும் தவறாமல் படிக்கவேண்டிய நூல் இது.

குறிப்பு: இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், கீழுள்ள 'தமிழ்மணம்' பட்டையில் இடதுபுறமுள்ள 'மேல்நோக்கிய' கட்டைவிரல் அடையாளத்தின் மீது ஒரு கிளிக் செய்யுங்கள். நன்றி.

 © Y.Chellappa

18 கருத்துகள்:

 1. ரா.கனகலிங்கம் அவர்கள் விவரித்ததை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஐயா... தமிழ்மணம் இணைத்து விட்டேன்... +1

  தங்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தித்திக்கும் இனிய தைப் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 2. தங்களின் புத்தகத் தாகம் எங்களுக்கெல்லாம் இதுபோன்ற நல்ல நல்ல செய்திகளை படிக்காமலே தெரிந்து கொள்ள முடிகிறது.இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. அருமையான பதிவு ஸ்ரீனிவாசன்

  பதிலளிநீக்கு
 4. அருமையான வரலாற்று நிகழ்வை மிகச் சிறப்பாக பகிர்ந்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 5. //கெட்ட பழக்க வழக்கங்கள் உள்ளவரானாலும் அவர்களோடு நல்லவர்கள் பழகுவார்களானால், அவர்களைத் திருத்த முடியும்; ஒதுக்கி வைப்பதோ, ஒடுக்கி வைப்பதோ, அவர்களுக்கும்கேடு, பிறருக்கும் கேடு//
  என்கிற பாரதியாரின் கொள்கையினை இப்பதிவுமூலம் அறிந்துகொண்டேன்.
  த. ம. 5

  (இன்று சிறப்பு அபசி-தொபுசி-யா?)

  பதிலளிநீக்கு
 6. வணக்கம்
  ஐயா.
  பாரதியார் பற்றியும் ரா. கனகலிங்கம் பற்றியும் சிறப்பான விளக்கம்

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 7. அருமையான வரலாற்றுத் தகவல் ஐயா நன்றி
  த.ம.6

  பதிலளிநீக்கு
 8. நல்லதொரு தகவலைப் பகிர்ந்ததற்கு மிக்க நன்றி! ஐயா!

  பதிலளிநீக்கு
 9. ஸ்ரீராமாநுஜர் செய்த அதே சீர்திருத்தத்தை, தனது காலச் சூழலில், தாழ்த்தப்பட்ட ஒருவருக்கு மகாகவி சுப்ரமண்ய பாரதியார் பூணூல் அணிவித்தது பெரிய விஷயம்தான். அந்தக் கால நிகழ்வை நூல் விமர்சனம் வழியாக பகிர்ந்து கொண்ட தங்களுக்கு நன்றி! புத்தகம் திருச்சியில் கிடைத்தால் வாங்கிப் படிக்கிறேன்.

  பதிலளிநீக்கு

 10. நீங்கள் இரண்டு ப்ளாக்குகளை வைத்து எழுதுவதை எழுதுவதை விட, ஒரே ப்ளாக்கில் மட்டும் எழுதினால் தமிழ்மணத்தில் முதல் இடத்தைக் கூட பெறலாம். வாக்குகள், வாசகர்கள் எண்ணிக்கை அதிகம் பெறலாம்.

  பதிலளிநீக்கு
 11. அறிந்து , மறந்த வரலாறு! நன்றி! நினைவில் கொண்டேன்!

  பதிலளிநீக்கு
 12. இதுவரை அறியாத வரலாறு
  அருமையாகப் பதிவு செய்து
  அறியும் ஆவலைத் தூண்டியமைக்கு
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 13. பழைய பதிவுகளை படித்து வருகிறேன்.சில காலம் எதுவும் எழுதாமல் படிக்க மட்டும் போவதாக எண்ணம். அந்தணன் அல்லாத ஒருவருக்கு பூணூல் அணிவிப்பது அந்தக் காலத்தில் ஒரு தீரச் செய்கையாக பாரதியார் கருதி இருக்கலாம். it was a show of bravdo....! பூணூல் அணிவித்து என்ன பிரயோசனம். ? அந்தணர்களே பார்ப்பனராக வாழாதபோது, ....சில செய்கைகளுக்கு நியாயம் கற்பிக்க முடியவில்லை.

  பதிலளிநீக்கு