கவரும் கவரும் சந்தித்தால் காதல் பிறக்குமா?
(புதுடில்லிப் புராணம்- 5)
அமெரிக்காவில் 68 ஆவது நாள் (18-6-2022)
கவிதா கொடுத்த கவரை அப்படியே பத்திரமாக திருக்குறள்-பரிமேலழகர் உரை நூலுக்குள் வைத்தேன். அந்த நூலை என் பிரீஃப்கேசில் வைத்தேன். நிச்சயம் அது காதல் கடிதமாகத்தான் இருக்கவேண்டும். எவ்வளவு ஆசை இருந்தால் ஒரு பெண் தானே முன்வந்து காதல் கடிதம் கொடுப்பாள்? உடனே படிக்க ஆசை எழுந்தாலும் ஏதோ ஒன்று மனத்துக்குள்ளிருந்து ‘நில், நில், நில்’ என்று மூன்று முறை சொன்னது.
மோனிகா என்ற ஆண்டாள் என்ற கவிதா இப்படிச் செய்யலாமா? அதிகம் தெரியாத ஒருவனுக்குக் காதல் கடிதம் கொடுப்பது சரியா?
அப்படியானால் நீ மட்டும் அவளுக்குக் 'கவர்' கொடுத்தாயே அது சரியா என்கிறீர்களா? சரியில்லை போலத்தான் தோன்றும். சில சூழ்நிலைகளை முன்னிட்டு நாம் சில வேலைகளைச் செய்யுமாறு கட்டாயப்படுத்தப்படுகிறோம். அதில் இந்தக் கவரும் ஒன்று. முதலில் அவள் திறந்து பார்க்கட்டுமே! அதன் பிறகு நாம் அவளுடையதைப் பார்த்தால் போயிற்று!
***
அடுத்த பத்து நாட்கள் தலைமை அலுவலகத்திலிருந்து அதிகாரிகள் வருகையினால் மிகவும் சுறுசுறுப்பாகக் கழிந்துபோயின. என்மீது அனைவருக்கும் பரம திருப்தி. ஏனென்றால் அந்த ஆண்டின் அன்னியச் செலாவணி வர்த்தகத்தின் இலக்கை 200 சதவீதமாக நான் எட்டியிருந்தேன். இதனால் வங்கியின் இலாபம் சுமார் பத்து கோடி ரூபாய் வரை அதிகரிக்கவிருந்தது.
சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும்? அலுவலகத்தில் வெற்றியடைந்தால்தானே வெளியிலும் மரியாதை கிடைக்கும்? ஆகவே நான் சிலகாலம் ரஷ்ய மொழிபேசும் பெண்களிடமிருந்து விலகியே இருந்தேன். அலுவலகப் பணியில் முழு மனதையும் செலுத்தினேன்.
ஒரு மாலை நேரம் சற்றே ஓய்வெடுக்க எண்ணி, தரைத்தளத்திற்கு வந்தேன். அங்கு வெள்ளரிக்காய், பீட்ரூட், வெங்காயம், முள்ளங்கி, பப்பாளிப்பழம் இவை கலந்த சாலட் -ஐ வாங்கிச் சாப்பிட்டேன். டில்லியில் இதுதான் குளிர்காலச் சிற்றுண்டி. அதே வண்டிக்காரரிடம் தேநீரும் இருந்தது. ஆனால் நான் வெளியில் தேநீர் சாப்பிடுவதில்லை. குளிர் காலத்தில் தேநீர் தயாரிப்பதற்கு அதிக நேரம் காத்திருக்க வேண்டும். எங்கள் அலுவலகத்திலேயே சிறிய உணவுக்கூடம் (‘பேண்ட்ரி’) இருந்தது. அங்கு பாபு என்ற தமிழ்ப்பையன் அருமையாகத் தேநீர் போடுவான். அங்குதான் சாப்பிடுவேன்.
“பாபு, ஒரு ஸ்பெஷல் ஜிஞ்சர் டீ போடு” என்று சொல்லிக்கொண்டே என் டேபிளுக்கு வந்தேன். அடுத்த நிமிடமே இரண்டு கோப்பைகளில் தேநீர் வந்தது. இரண்டாவது யாருக்கு என்று அவனை ஏறிட்டேன்.
“உங்களைத் தேடிக்கொண்டு மதுரையில் இருந்து ஒரு பெரியவர் வந்திருக்கிறார். பாத்ரூம் போயிருக்கிறார். அவருக்கு” என்றான் பாபு. குறிப்பறிந்து காரியம் செய்வதில் பாபுவுக்கு இணை பாபுதான்.
பெரியவர் வந்தார். அண்மையில் அரசுப்பணியில் இருந்து ஒய்வு பெற்றிருக்க வேண்டும். தும்பைப்பூ மாதிரி வேட்டியும் சட்டையும், கண்ணாடி அணியாத முகமும், அதிகம் நரை விழாத கூந்தலுமாக ‘வணக்கம்’ என்று சொல்லிக்கொண்டே அமர்ந்தார் குமாரசாமி. டில்லிக் குளிருக்கு சூடான தேநீர் இதமாக இருந்திருக்கவேண்டும். ஒரே மூச்சில் அருந்தினார். “இன்னொரு டீ சொல்லட்டுமா? நாங்கள் சில சமயம் இரண்டு, மூன்று கூட அடுத்தடுத்துக் குடிப்போம்” என்றேன் எழுந்து நின்று வணக்கம் சொல்லியபடியே.
சிரித்துக்கொண்டே, “எல்லாம் வயசுக் கோளாறு தம்பி” என்றார் அவர்.
எனக்குத் திக்கென்றது. மதுரையில் இருந்து வந்திருக்கிறாரா? ஒருவேளை மோனிகா என்கிற ஆண்டாள் என்கிற கவிதாவுக்குச் சொந்தமோ?
ஆபீஸ் முடிந்து கிளார்க்குகள் எல்லாரும் சென்றுவிட்டார்கள். சீனியர் மேனேஜர்கள் ஓரிருவர்தான் இருந்தார்கள். என் தளத்தில் நான் ஒருவன்தான். ஆகவே அவர் சுதந்திரமாக உணர்ந்தாற் போலிருந்தது.
“நீங்கள் அனுப்பிய ஜாதகத்தை கவிதா எனக்கு அனுப்பியிருந்தாள். அவளுக்கு மனப்பூர்வமான சம்மதம் என்று கூறினாள். விஷயம் புரிந்தது. நல்ல ஜோசியரிடம் காட்டினேன். பத்தில் எட்டுப் பொருத்தம் இருக்கிறது, முடித்து விடுங்கள் என்றார். அதுதான் வந்தேன். மேற்கொண்டு பேசுவதற்கு உங்கள் பெற்றோர்களின் முகவரியும் போன் நம்பரும் வேண்டும்" என்றார் குமாரசாமி.
நான் புன்முறுவல் பூத்துக் கொண்டே, "என் பெற்றோர்களின் முகவரியும் போன் நம்பரும் உங்களுக்கு எதற்காக?" என்றேன்.
"என்ன தம்பி விளையாடுறீங்க? உங்க கல்யாணத்துக்கு உங்க பெற்றோர்களிடம்தானே பேசவேண்டும்?"
நான் கலகலவென்று சிரித்தேன். "அப்படியானால் என் மனைவியிடம் பேச மாட்டீர்களா?" என்று பர்ஸிலிருந்து அவளும் நானும் இருக்கும் புகைப்படத்தைக் காட்டினேன்.
குமாரசாமி அதிர்ந்து போனார். "உங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதா? பின்னே எப்படி கவிதா சம்மதம் சொன்னாள்?" டில்லிக் குளிரிலும் அவருக்கு வியர்த்தது. "ஒரு போன் செய்து கொள்ளட்டுமா?" என்றார்.
கவிதா லைனில் வந்தாள். தன்னிடம் சொல்லாமல் என்னை வந்து சந்தித்ததற்குத் தகப்பனாரைக் கண்டித்தாள். பிறகு என்னிடம் பேசினாள்.
"நீங்கள் எவ்வளவு மோசமானவர்! திருமணம் ஆனதை என்னிடம் மறைத்து விட்டீர்களே, நியாயமா?" என்று கத்தினாள்.
"மறைத்ததும் அல்லாமல் இன்னொரு முறை திருமணம் செய்து கொள்வதற்காக ஜாதகத்தை வேறு கொடுத்தீர்களே, என்ன நெஞ்சழுத்தம் உங்களுக்கு? இப்பொழுதே உங்கள்மீது போலீசில் புகார் செய்ய முடியும் என்னால்!”
“பாருங்கள் மோனிகா!..” என்று நான் ஆரம்பிப்பதற்குள் “யார் அந்த மோனிகா?” என்று போனைப் பிடுங்க வந்தார் குமாரசாமி.
“மோனிகாவும் அவள்தான்! ஆண்டாளும் அவள்தான்! கவிதாவும் அவள்தான்!” என்று இன்னும் பலமாகச் சிரித்தேன். அவருக்கு ஒன்றும் புரியவில்லை. பாபு இதுதான் வாய்ப்பு என்று இருவருக்கும் மீண்டும் ஜிஞ்சர் டீ கொண்டு வைத்தான்.
“ஆண்டாள் அவர்களே! அந்த ஆண்டாள் யாரைத் திருமணம் செய்துகொண்டாள்? ஏற்கெனவே பலமுறை திருமணம் ஆன கண்ணனைத்தானே?”
“கண்ணன் தெய்வப்பிறவி! நீங்கள் ஓர் அசிங்கமான மனிதப்பிறவி! மனைவி உயிரோடிருக்கும்போதே இன்னொரு கல்யாணம் கேட்கிறதா உங்களுக்கு? இப்போது நீங்கள் மட்டும் என் முன்னால் இருந்தால் அப்படியே கழுத்தை நெரித்திருப்பேன்!”
விவாதம் விபரீதமாகப் போவதைப் புரிந்துகொண்ட குமாரசாமி போனை வாங்கிக்கொண்டு “கவிதா, இனி நீ இவருடன் பேசவேண்டாம். டில்லி ஆசாமிகள் என்றாலே ஏமாற்றுக்காரர்கள் என்று சொல்வது வழக்கம். ஏதோ ஜாதகத்துடன் விஷயம் நின்றதே, கடவுள் புண்ணியம்! இனிமேல் இவருடன் எந்தப் பேச்சு வார்த்தையும் வேண்டாம்!” என்று போனை வைத்தார்.
ஒரு ஆழமான வெறுப்புப் பார்வையை என்மீது வீசினார். தேநீரைக் குடியுங்கள் என்று கை காட்டினேன். அதை வேகமாக எடுத்தவர், கைகழுவும் குழாயருகில் போய்க் கொட்டினார். “வணக்கம், நான் வருகிறேன்” என்று கிளம்பினார்.
“ஏன் வர வேண்டும்? போகிறேன். உங்களைச் சொல்லிக் குற்றமில்லை. என் பெண்ணைத்தான் சொல்லவேண்டும்” என்று பையைக் கையில் எடுத்துக்கொண்டார். நான் சிரித்தேன். “பாபு நீயும் கொஞ்சம் சிரியேன்” என்றேன். சிரித்தான்.
“என்ன கிண்டல் பண்ணுகிறீரா?” என்று வெகுண்டார் குமாரசாமி.
“விஷயத்துக்கு வரலாமா? நான் அனுப்பிய ஜாதகம் யாருடையது என்று பார்த்தீர்களா? ஜாதகம் இப்போது உங்களிடம் இருந்தால் காட்டுங்கள்” என்றேன்.
எடுத்தார். “ரங்கநாதன் குமாரன் மாதவன் சுப ஜனனம்” என்று இருந்தது.
“ஆமாம் நீங்கள் தானே மாதவன்?”
நான் சிரிக்கவில்லை. பாபுதான் பலமாகச் சிரித்தான். “மாதவன் சார் ….வங்கியில் ஆபீசர். இன்னும் கல்யாணம் ஆகவில்லை. இதே டில்லியில் பிறந்தது வளர்ந்தவர்..அடிக்கடி இவரைப் பார்க்க வருவார்” என்று ஒப்பித்தான்.
அப்பாடா, குமாரசாமியின் முகத்தில் ஏற்பட்ட நிம்மதியைப் பார்க்கவேண்டுமே! மகள் சொன்னதை நம்பி டில்லிக்குப் புறப்பட்டு வந்தவர், ஜாதகனின் பெயரைக்கூடச் சரியாகப் பார்க்காமல் இருந்தது எவ்வளவு பெரிய தவறு!
“மன்னிக்கவேண்டும் தம்பி! இது என்னுடைய பிழைதான். ஆனால் என் மகளுக்கும் மாதவனுக்கு ஜாதகப் பொருத்தம் சரியாக இருப்பதால், நாம் மேற்கொண்டு பேசலாமா? மாதவனின் பெற்றோர்களை நான் சந்திக்க ஏற்பாடு செய்வீர்களா? நான் பெண்ணைப் பெற்றவன். என்னுடைய கவலையை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என்று என் கைகளைப் பிடித்துக்கொண்டார்.
நான் நினைத்தது நடக்கப்போகிறது. மாதவனுக்கு ஒரு நல்ல பெண்ணைத் தேடித்தரும்படி அவனுடைய அம்மா பலமுறை என்னைக் கேட்டிருக்கிறார்.
“நல்லது சார், மாதவனின் பெற்றோர்களை நாம் சந்திக்கலாம்! கவிதா மாதிரி ஒரு அறிவுள்ள பெண் கிடைக்க மாதவன் நிச்சயம் புண்ணியம் செய்திருக்கவேண்டும்!” என்றேன் மகிழ்ச்சியுடன்.
“நில்லுங்கள், நில்லுங்கள்! கவிதாவா? ஜாதகம் பார்த்துக்கொண்டிருப்பது கவிதாவின் அக்கா பவித்ராவுக்கு என்று தெரியாதா உங்களுக்கு?” என்று அதிர்ச்சியோடு கேட்டார் குமாரசாமி.
இது என்னடா புதிய குண்டைத் தூக்கிப்போடுகிறாரே என்று அவரை ஆழமாக நோக்கினேன். கவிதாவும் ஒரு வார்த்தை கூட என்னிடம் கூறவில்லையே, தனக்கு ஒரு அக்கா இருப்பதாக, ஏன்?
ஏதோ ஒன்றால் உந்தப்பட்டவனைப்போல் என் பிரீஃப்கேசை எடுத்தேன். பரிமேலழகரைப் பிரித்தேன். கவிதா கொடுத்த கவருக்குள் இருந்து விழுந்தது ஒரு ஜாதகம்! பவித்ராவின் ஜாதகம்!
“ஆஹா, அழகான பெண்கள் அரை நிமிடத்தில் ஆண்களை முட்டாளாக்கி விடுவார்கள்” என்று ஷேக்ஸ்பியரோ, டால்ஸ்டாயோ, வேறு யாரோ சொல்லியிருக்கிறார்களே, எவ்வளவு சாத்தியமான வார்த்தை!
கவிதாவுக்கு போன் செய்தேன். “நானும் உங்கள் அப்பாவும் நேராக உங்களைப் பார்க்க வருகிறோம். என்னைக் கழுத்தை நெரிக்கப்போகிறீர்களா, அல்லது மாதவன் வீட்டுக்கு எங்களோடு வருகிறீர்களா திருமணம் பேச?” என்று அதிகாரத் தொனியில் கேட்டேன்.
“ஆமாம் அம்மா! நீங்கள் இரண்டு பேரும் ஜாதகம் யாருடையது என்று பார்க்காமலே பேசிக்கொண்டு இருந்திருக்கிறீர்கள். நானும் ஜாதகனின் பெயரைப் பார்க்காமலே கிளம்பி வந்துவிட்டேன். இப்போது எல்லாம் தெளிவாகிவிட்டது. ரொம்ப நன்றிடா கண்ணு ! அக்கா தான் தங்கைக்கு வரன் பார்ப்பாள். நீயோ உங்க அக்காவுக்கு வரன் பார்த்துக் கொடுத்துவிட்டாய்! நான் செய்த புண்ணியம்” என்று நாத் தழுதழுக்கப் பேசினார் குமாரசாமி.
கவிதா என்னிடம் பேசினாள். "சார், என்னை மன்னித்துவிடுங்கள். உங்களைப் பார்த்தவுடனே, என் அக்காவுக்கு நீங்கள் பொருத்தமாக இருப்பீர்கள் என்று தோன்றியது. ஆனால் நீங்கள் மணமானவர் என்பதை என்னிடம் கூறவில்லையே! நீங்கள் கொடுத்தது உங்கள் ஜாதகம்தான் என்று எண்ணியே அப்பாவுக்கு அனுப்பினேன். எல்லாம் என் முட்டாள்தனத்தால் ஏற்பட்ட பிழை. சரி, நான் தயாராக இருக்கிறேன். நீங்கள் இருவரும் வாருங்கள். ஐஎன்ஏ மார்க்கெட்டில் எல்லாப் பழங்களும் கிடைக்கும். மாதவன் வீட்டுக்குப் போகும்போது வாங்கிக்கொள்ளலாம். நீங்கள் வருவதற்குள் வெற்றிலை பாக்கு, பூ எல்லாம் நான் வாங்கி வைக்கிறேன்" என்றாள் கவிதா புதிய குதூகலத்துடன். அவளுக்கு இனி லைன் க்ளியர் ஆகிவிடுமல்லவா, அந்தக் குதூகலம்தான்!
(இப்படியாகத் திடீர்த் திருப்பங்களுடன் கூடிய சப்தார்ஜங்க் மோகினி கதை நீங்கள் எதிர்பாராதபடி, ஆனால் சுபமான முடிவை எட்டிவிட்டது. திருப்தி தானே!)
(நாளைய பதிவு: டீ பாபுவைப் பற்றியதாக இருக்கலாம்.)
இராய செல்லப்பா நியூ ஜெர்சியில் இருந்து...
உண்மையாகவே இதனை எதிர்பார்க்கவில்லை. அது சரி..ஒன்றும் எழுதாமல் ஒருவரது ஜாதகத்தை மட்டும் இன்னொருவரிடம் பரிமாறிக்கொள்வார்களா? எழுத்தின் சுவைக்காக எழுதப்பட்டதா?
பதிலளிநீக்குஆணும் பெண்ணும் கலந்தால்தானே குழந்தை பிறக்கும்? உண்மையும் கற்பனையும் கலந்தால் தானே எழுத்தில் சுவை பிறக்கும்? வருடங்கள் ஓடிவிட்டதால் எது உண்மை எது கற்பனை என்று சரியாகச் சொல்லமுடியவில்லை!
நீக்குநீங்கள் கவரில் கொடுத்தது மாதவன் பற்றிய விவரங்கள் என்று எதிர்பார்த்தேன். கவிதா கொடுத்த கடிதத்தில் 'நான் காதலிக்க எல்லாம் இல்லை' என்பதுபோல எழுதி இருப்பார் என்று எதிர்பார்த்தேன்!
பதிலளிநீக்குஹைய்யா! எனக்கும் சஸ்பென்ஸ் எழுதவருகிறது பார்த்தீர்களா!
நீக்குஅடடே... அருமை...
பதிலளிநீக்குஆகா அருமை அருமை
பதிலளிநீக்குCovering Letter இல்லாமல் யாரவது மொட்டையாக ஜாதகத்தை மட்டும் கொடுப்பார்களா ?
பதிலளிநீக்குஅதுவும் இல்லாமல், அப்படியே கொடுத்தாலும்,நேரிலோ,போனிலோ,என்ன விவரம் என்று சொல்லாமல் கொடுப்பார்களா?
கதையை சுவாரசியமாக படித்த எல்லோருக்கும் பல்ப் கொடுத்து விட்டீர்களே?
இவ்வளவு திறமையுள்ள நீங்கள் ஏன் தமிழ் சினிமாவில் நுழையவில்லை ?
பதிலளிநீக்குஇன்னும் ஒரு பாலசந்தர் எங்களுக்கு கிடைத்தது இருப்பார் அல்லவா?
நாற்பது வருடம் முன்பு இதைச் சொல்லித் தொலைத்திருக்கக் கூடாதா!
நீக்குபஞ்சு அருணாசலம், கலைமணி போன்று ..... பாலசந்தர் கதைகளெல்லாம் கொஞ்சம் குனஷ்டை கதைகள்
நீக்குபழைய நினைவிலேயே மூழ்கிவிட்டீர்களா? இன்றைய பதிவு காணோமே
பதிலளிநீக்குநாற்பது வருடங்களுக்கு முன்பு சொல்லாவிட்டால் என்ன, இப்பொழுதும் அதற்கான நேரம்தான், எப்பொழுதும் அதற்கான நேரம்தான், வயது என்பது வெறும் எண். வாழ்க்கை என்பது ஆயிரமாயிரம் ஆண்டுகள் தாண்டியும் தொடர்வது என்பதற்கு சித்தர்கள் சான்று.
பதிலளிநீக்குநன்றி கவிஞரே! முயல்கிறேன்.
நீக்குகவரில் மாதவனைப் பற்றிய விவரங்களாக இருக்கும் என்பதை யூகிக்க முடிந்தது. ஆனால் கவிதா கொடுத்த கவரில் அது அவள் அக்காவின் ஜாதகம் என்பது மட்டும் யூகிக்கவில்லை. எனவே 50-50 !!!
பதிலளிநீக்குகீதா