(புதுடில்லிப் புராணம்-2)
அமெரிக்காவில் 65 ஆவது நாள் (15-6-2022)
இஸ்திரி போடுவதற்கு அப்போது எவ்வளவு கொடுத்தேன் என்று நினைவில்லை. (டயரி சென்னையில் இருக்கிறது). ஆனால் டில்லியில் புழங்கியதை விட நிச்சயமாகக் குறைந்த கட்டணமே. அப்போது அந்தப் பகுதியில் இஸ்திரிக்குத் துணி கொடுக்கும் நபர்கள் எங்களை விட்டால் வேறு யாருமில்லை எனபதால் ராக்கிக்கு அதிக வருமானம் சாத்தியப்படவில்லை. எனவே எங்கள் குடியிருப்பில் இரண்டு வீடுகளில் வீட்டுவேலை செய்து சிறிது பணம் சம்பாதித்தாள்.
'ஜெய்ப்பூர் கால்' என்னும் செயற்கைக் கால் |
ஒரு வாரம் கழித்து அங்கேயே ஒரு சிறிய தேநீர்க் கடையும் தொடங்கினாள். என்றாலும் அங்கு வந்து தேநீர் அருந்துபவர்கள் குறைவே. பிற்பாடு எஸ்டிடி பூத் வந்தவுடன் வியாபாரம் பெருகியது. இரவு பத்து மணிக்குமேல் பாதிக் கட்டணம் என்று சாம் பிட்ரோடா அறிவித்ததால் கூட்டம் நிரம்பி வழிந்தது. நெடுஞ்சாலையில் போவோர் வருவோர் கூட, ராம்பிரஸ்தாவில் வண்டியை நிறுத்த இடம் இருந்ததால் விரும்பி வந்து போன் செய்தார்கள். அதனால் இரவில் தேநீர் வருமானம் கணிசமாகக் கிடைத்தது. கூடவே பிஸ்கட், ரஸ்க், சிப்ஸ் போன்ற விற்பனையும் ஏற்பட்டது.
ராக்கி இரவும் பகலும் விழித்திருந்து சம்பாதிப்பதை குடிப்பழக்கமுள்ள ஜெய்சிங் உடனுக்குடன் காலி செய்து கொண்டிருந்தான். சுற்றிலும் கட்டுமானப் பணிகள் நடந்துகொண்டிருந்தன. அருகில் கௌசாம்பி என்ற மிகப்பெரிய பலமாடிக் குடியிருப்பின் கட்டமைப்பு டில்லி- ஹரியானா- உத்தரபிரதேச மாநிலத்து இளைஞர்களுக்குத் தொடர்ந்து வேலை கிடைக்க வழிசெய்தது. ஒரு சில நாட்கள் ஜெய்சிங் அந்த வேலைக்குப் போவான். ஆனால் மேஸ்திரியோடு தகராறு செய்துவிட்டு அடுத்த நாளே நின்றுவிடுவான். அதனால் வேலை செய்த சம்பளமும் கிடைக்காது. மதன்மோகன் அவனுக்கு அடிக்கடி புத்திசொல்வார். ஆனால் வேதாளம் அடிக்கடி முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டுதான் இருந்தது.
ராக்கி இருந்த கட்டிடம் ஐந்து மாடிகளைக் கொண்டதாக எழும்பிக்கொண்டிருந்தது. அதே கட்டுமானக்கார் இன்னும் சில கட்டிடங்களையும் கட்டிக்கொண்டிருந்தார். ஆகவே ஆணும் பெண்ணுமாக ஏராளமான சித்தாள்கள் ராக்கியோடு இரவில் தங்குவது வாடிக்கையாக இருந்தது. பெரும்பாலும் கணவன்-மனைவியராகவே இருந்தாலும், சில தனிப் பெண்டிரும் இருந்தார்கள். இது ஜெய்சிங்கின் அடிப்படை உணர்வுகளைத் தூண்டுவதாக அமைந்தது. அதில் அவ்வப்பொழுது அவனுக்கு வெற்றியும் கிடைத்து வந்ததை ராக்கி, பாவம், அறியமாட்டாள்.
அவனது மன்மத லீலைகளால் தூண்டப்பட்ட ஒரு சித்தாள், தன் கணவன் இல்லாத பொழுதில் இவனுக்கு உடன்பட்டதை எப்படியோ மோப்பம் பிடித்துவிட்ட கணவன், ராக்கியிடம் நீதி கேட்டான். ராக்கி நம்ப மறுத்தாள். ‘கையும் களவுமாகப் பிடித்து வா, நம்புகிறேன்’ என்றாள். ஆனால் உள்மனதில் அவளுக்கு ஒரு சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது.
காசியாபாத்தில் இன்னொரு கட்டிடத்தில் இவளுடைய தங்கையும் அவள் கணவனும் சித்தாளாக வேலை செய்துகொண்டிருந்தார்கள். அந்த வேலை முடியும் தருவாயில் அதே மேஸ்திரி இங்கும் தொடர்பில் இருந்ததால் இருவருக்கும் ராக்கியின் கட்டிடத்திலேயே மேலும் மூன்று மாதங்களுக்கு வேலை உத்தரவாதமாயிற்று. தனக்கு வேலை இல்லாதபோது தங்கையின் கைக்குழந்தையை எடுத்துக் கொஞ்சிக்கொண்டிருப்பாள் ராக்கி. வறண்ட பாலையாக இருந்த அவள் வாழ்க்கையில் அக்குழந்தை தென்றலை வீசியது. முதலாளியிடம் சொல்லித் தங்கைக்கும் ஒரு தங்குமிடத்தை
ஏற்படுத்திக்கொடுத்தாள்.
டில்லியில் அபூர்வமாகவே மழை பெய்யும். வெயிற்காலம் முடிந்து குளிர்காலம் வரப்போவதற்குக் கட்டியம் கூறும் ஆகஸ்ட் மாதத்தில்தான் பெய்யும். அப்படி ஒரு மழைநாளின்போதுதான் ராக்கியின் வாழ்வில் ஒரு திருப்பம் ஏற்பட்டது.
இரவு ஏழுமணி இருக்கும். ராக்கியிடம் குழந்தையைக் கொடுத்துவிட்டு கௌசாம்பியில் கட்டிட வேலைக்குச் சென்றிருந்த தங்கை இன்னும் திரும்பவில்லை. தங்கையின் கணவன் வேறொரு இடத்துக்குச் சென்றிருந்தான் அவனும் திரும்பவில்லை. மழை வலுத்துக்கொண்டே இருந்ததுடன் குழந்தையும் விடாமல் அழுதுகொண்டே இருந்தது. சைக்கிளில் போய் தங்கையைப் பார்த்துவரச் சொன்னாள் ராக்கி.
வெகுநேரமாகியும் கணவனும் திரும்பவில்லை. தங்கையும் அவள் கணவனும் காணோம். குழந்தை அழுதழுது ஓய்ந்துபோய் உறங்கிவிட்டது. ராக்கியும் தன்னை மறந்து தூங்கிப்போனாள்.
விடிய ஆரம்பித்தபோது விசுக்கென்று எழுந்தாள் ராக்கி. ஆனால் குழந்தையைக் காணோம்! நடுநடுங்கிவிட்டாள். சுற்றுமுற்றும் பார்த்தாள். ஜெய்சிங்கின் சைக்கிள் மழையில் சரிந்து தரையில் கிடந்தது. ‘அப்பாடா’ என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். நள்ளிரவு சமீபத்தில் தங்கை வந்ததும் குழந்தையை எடுத்துச் சென்றதும் அவளுக்குத் தெரியாது.
தங்கைக்கு விடப்பட்டிருந்த இடத்திற்குப் போனாள். அங்கே அவள் கண்ட காட்சி? இரண்டு மரவட்டைகள்போல் தங்கையும் ஜெய்சிங்கும் சுருண்டு ஒருவர்மேல் ஒருவர் சாய்ந்திருக்க, குழந்தை சுவற்றோரத்தில் தனியாக உறங்கிக்கொண்டிருந்தது.
ராக்கிக்கு பகீர் என்றது. படுபாவிகள், என்ன காரியம் செய்தார்கள்! அக்காள் கணவனோடு இவள் படுத்த செய்தி ஊருக்குத் தெரிந்தால் எவ்வளவு அவமானம்! தங்கையின் கணவன்தான் சும்மா இருப்பானா? கடப்பாரையை எடுத்துவந்து ஜெய்சிங்கை ஒரே அடியாகச் சாய்த்துவிட மாட்டானா?
ராக்கிக்கு உடம்பெல்லாம் வியர்த்தது. உள்ளிருந்து எழும் வெம்மை அவளின் ஒவ்வொரு அணுவையும் தழலாக எரித்தது. ஒரு முடிவுக்கு வந்தாள்.
***
‘சும்மா இருப்பதே சுகம்’ என்பதுபோல், தனியாக வசிப்பதிலும் ஒரு இன்பம் உண்டு. நினைத்தபோது நண்பர்கள் வீட்டில் தங்கிவிடலாம். யாருக்கும் பதில் சொல்லிக்கொண்டிருக்க வேண்டியதில்லை.
அப்படித்தான் ஒருமுறை நான்கைந்து நாட்கள் நான் டில்லியிலேயே தங்கிவிட்டேன். ஒருநாள் லட்சுமிபாய் நகரில் (அத்தை) மீனாட்சி டீச்சர் வீட்டில்; ஒருநாள் வெஸ்ட் படேல் நகரில் ருக்மானந்தன் வீட்டில்; ஒருநாள் கோவிந்தராஜன் வீட்டில்; ஒருநாள் ஷாஜகான் வீட்டில்; ஒருநாள் (ஆனந்தம்) கிருஷ்ணமூர்த்தி சார் வீட்டில்…..
நான் ராம்பிரஸ்தாவுக்குத் திரும்பிவந்தபிறகு, இரவு பத்து மணிக்கு எஸ்டிடி செய்வதற்காகப் போனபோது ராக்கி அழுதுகொண்டிருந்ததைக் கண்டேன். என்ன விஷயம் என்றேன். வார்த்தை வராமல் கண்ணீர்தான் பெருக்கெடுத்தது அவளுக்கு. எஸ்டிடி பூத் உரிமையாளர் விளக்கினார்:
ராக்கியின் கணவனை யாரோ வெட்டிவிட்டார்களாம்! அவனுடைய வலது பாதம் தனியாக வந்துவிட்டதாம்! அரசினர் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருக்கிறானாம்! இனிமேல் அவனால் நடக்கவே முடியாதாம்!
எப்படி இது நடந்திருக்கும் என்று எனக்குப் புரியவில்லை. ராம்பிரஸ்தாவில் ஜெய்சிங்கிற்கு எதிரிகள் என்று யாரும் இருந்ததாகப் பேசப்படவில்லை. அனைவரிடமும் பவ்யமாக நடப்பவன்தான் அவன்.
அன்று எஸ்டிடி பூத்தில் நான்தான் கடைசி வாடிக்கையாளன். நான் பேசி முடித்ததும் கடையைப் பூட்டிக்கொண்டு அவர் கிளம்பிவிட்டார். ராக்கி மட்டும் மெல்லிய குரலில் ‘சார்’ என்று என்னை நிறுத்தினாள்.
பதினொருமணி இரவு. வானில் மேகம் மூடியிருந்தது. சற்று தூரத்தில் இருந்த எங்கள் கட்டிடத்தின் வெளி விளக்குகள் தான் கொஞ்சம் வெளிச்சத்தைப் பாய்ச்சிக்கொண்டிருந்தன.
“நீங்கள் யாருக்கும் சொல்ல மாட்டீர்களே சார்?” என்று ஆரம்பித்தவள், நேரே விஷயத்திற்கு வந்தாள். கணவனை வெட்டியவள் அவளேதானாம்!
தன் கணவன் காமவெறி பிடித்து அலைவதாகவும், தன் தங்கையைக் கூட அவன் விட்டு வைக்கவில்லை என்றும், அவனை நல்வழிப்படுத்த எவ்வளவோ முயன்றும் முடியவில்லை என்றும் மூர்க்கத்தனமான கோபத்தில் அவனை அருகில் கிடந்த கசாப்புக்கடை கத்தியால் ஓங்கி அடித்ததில் அவனுடைய வலது பாதம் அறுபட்டு விழுந்ததாகவும், உடனே அரசாங்க ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றதில் உயிருக்கு ஆபத்தில்லை என்றும் விம்மலுக்கு இடையே சொன்னாள்.
நான் அதிர்ந்துபோய் நின்றேன். ஒருவேளை அவன் இறந்துபோயிருந்தால்?
அவள் மேலும் சொன்னாள்: "நான் தெரிந்து தான் செய்தேன் சார்! அவரால் இனிமேல் தப்பு செய்யமுடியாது. சம்பாதிக்கவும் முடியாது. பரவாயில்லை, அவரை வாழ்நாள் முடிய நான் காப்பாற்றுவேன். என் தங்கையை லக்னோவுக்கு அனுப்பிவிட்டேன். ஒரு ஃபாக்டரியில் அவளுக்கு வேலை கிடைத்துவிட்டது. இனிமேல் எனக்கு மனக்கவலை இல்லை. ஆனால், நீங்கள் எல்லாரும் சேர்ந்து பெரிய மனதுபண்ணி இவருக்கு 'ஜெய்ப்பூர் கால்' ஏற்பாடுபண்ணிக் கொடுத்தால் வாழ்நாள் முழுதும் உங்களுக்கு நன்றியோடு இருப்பேன்."
சில மாதங்களுக்குப் பிறகு லயன்ஸ் கிளப் ஒன்று தன் கள ஆய்வுக்காக ராம்பிரஸ்தாவுக்கு வந்தபோது ஜெய்சிங்கிற்கு செயற்கைக்கால் கிடைக்க வழி செய்தார்கள். அந்தக் காலோடு ஜெய்சிங் பெருமிதத்துடன் எழுந்து நின்றபோது, அவன் காலில் விழுந்து கும்பிட்டுக் கண்ணீர் விட்டாள் ராக்கி. பிறகு தன்னுடைய கருகுமணித் தாலியை எடுத்துக் கண்ணில் ஒற்றிக்கொண்டாள். அவளுடைய பிழைக்கு அதுதான் பிராயச்சித்தமோ?
-இராய செல்லப்பா நியூ ஜெர்சியில் இருந்து.
மிகவும் சுவையான கதையாக இருக்கிறது. பாவம் ராக்கி.
பதிலளிநீக்கு"இஸ்திரி போடுவதற்கு அப்போது எவ்வளவு கொடுத்தேன் என்று நினைவில்லை. (டயரி சென்னையில் இருக்கிறது). "//
பதிலளிநீக்குதினமும் டயரி எழுதும் பழக்கம் இருக்கிறதா ? வரவு செலவு எழுதுவீர்களா?
அப்படி என்றால் இந்த 72 வயதில் நீங்கள் எழுதிய டயரிகளை வைக்க ஒரு பீரோ போதாதே ??
பணியிலிருந்து ஓய்வு பெற்ற சில மாதங்களில் என்னுடைய முதல் வேலையே, பழைய டயரிகளைப் படித்து, அவற்றில் முக்கியமான பகுதிகளை வேறொரு நோட்டில் குறித்துக்கொண்டபின், அந்த டயரிகளைச் சுக்கு நூறாகக் கிழித்து, ஒரு பிளாஸ்டிக் கவரில் கட்டி, பழைய பேப்பர்கடையில் போட்டதுதான்! சுற்றுச் சூழலுக்கு நம்மால் தீங்கு வரக்கூடாது பாருங்கள்!
நீக்குநன்றாக செய்தீர்கள். சுற்று சூழல் பாதுகாப்பு மேல் தங்களுக்கு இருக்கும் அக்கறைக்கு மிகவும் நன்றி.
நீக்குராக்கியின் வாழ்வு வேதனையினை அளிக்கிறது
பதிலளிநீக்குஅவரவர் வாழ்க்கையில் இப்படி எத்தனையோ சுவைகள்..சோகங்கள்..வெளியே தெரியாமல் "masking"..ஆக Mask Corona வருவதற்கு முன்னமே வந்துடுத்து
பதிலளிநீக்குஅய்யோ பாவம்!
பதிலளிநீக்குஅருமையான பதிவு! இதைத்தான் கொலையும் செய்வாள் பத்தினி என்பது!
பதிலளிநீக்குராக்கிகள் பெருந்தன்மையானவர்கள்தான். ஜெய்சிங்குகள் திருந்துவதே இல்லை.
பதிலளிநீக்குநெகிழ்ச்சி...
பதிலளிநீக்குடைரக்டர் பாலசந்தர் படம் பார்தது போல் இருந்தது தங்கள் கதையைப் படித்தவுடன்.
பதிலளிநீக்கு// எஸ்டிடி பூத்தில் இரவு பத்து மணிக்குமேல் பாதிக் கட்டணம் // எனும் வரிகள் என்னை என் வசந்த நாள்களுக்கு அழைத்துச்சென்றுவிட்டது...
பதிலளிநீக்குராக்கி என்றவுடன் எனக்கு பிடித்த அழகான ஹிந்தி நடிகை ராக்கி குல்சார் ஞாபகம் வந்து விட்டது.
பதிலளிநீக்குஅவர் பாடலை கேட்போமா ?
https://youtu.be/v13cUeX6_co
https://youtu.be/v13cUeX6_co
பதிலளிநீக்குவித்தியாசமான பெண்தான் ராக்கி
பதிலளிநீக்குஅவளுடைய பிழைக்கு அதுதான் பிராயச்சித்தமோ? //
பதிலளிநீக்குஅவள் பிழை செய்தாளா?!!!!!!! பிராயச்சித்தமா? ஜெய்சிங்க் செய்த தவறுகளை விடவா?!!! அதை நியாயப்படுத்துவது போல் இருக்கிறதே. தவறு செய்வது இயல்பு. ஆனால் இப்படியான தவறுகள்??
அதன் பின்னும் அவள் தன் கணவனை ஏற்றுக் கொண்டு அவனுக்குச் செயற்கைக் கால் பொருத்தச் செய்து...டிப்பிக்கல் .இந்திய நாரீயின் பதி பக்தி. பெரிய மனது.
இந்தப் பெருந்தன்மைதான் பல ஆண்களையும் மீண்டும் தவறு செய்ய வைக்கிறது. ஜெய்சிங்க் குற்ற உணர்வில் அவளிடம் மன்னிப்புக் கேட்டு நல்லபடியாக இருந்திருப்பான் என்று நினைக்கிறேன்.
கீதா