வெள்ளி, ஜூலை 01, 2022

கைக்குழந்தையுடன் கதறிய கண்ணகி

கைக்குழந்தையுடன் கதறிய கண்ணகி 

(இப்படியும் மனிதர்கள்-1)

அமெரிக்காவில் 75 ஆவது நாள் (25-6-2022)


பொழுது விடிந்தவுடன்  முதல் அழைப்பு வக்கீலிடமிருந்து. “வணக்கம், அட்வொகேட்  முத்துராஜன் பேசறேன். இன்றைக்கு நம்ப கேஸ்  வருது, தெரியுமில்லையா?”

ஒருவேளை   ‘ராங்’ நம்பரோ என்று  நினைத்தேன். ஏனென்றால் ‘நம்ப கேஸ்’  என்று சொந்தம் கொண்டாடுகிறாரே!  நான் யார்மீதும்  கேஸ் கொடுக்கவில்லை,  என் மீதும் எந்த கேசும் இருப்பதாகத் தெரியவில்லை. 

“எனக்குத் தெரியாதே! நீங்கள் யார்?” என்றேன் சற்றே கவலையுடன்.

அவருக்கு அதிர்ச்சியாக இருந்திருக்கவேண்டும். “என்ன  சார்  இப்படிச் சொல்லிவிட்டீர்கள்? நான்தானே உங்கள் பேங்கிற்கு லீகல் அட்வைசர்?  இன்றைக்கா, நேற்றா, பதினைந்து வருஷமாக!” 

இருக்கலாம். நான் இந்தக்  கிளையில் மேலாளராகப் பதவியேற்று  ஐந்துநாள் தான் ஆகிறது. வங்கியின் பெரிய டெபாசிட்டர்களையும் பெரிய கடன்தாரர்களையும் முதலில்  சந்தித்துக் கொண்டிருக்கிறேன். “உங்களை சனிக்கிழமை சந்திக்கலாம் என்று இருந்தேன்.  சொல்லுங்கள் எந்த கேஸ்? எந்த கோர்ட்டில்?”

“அப்படியா, பழனியப்பன் இப்போது இல்லையா?” என்று வியப்போடு கேட்டார் முத்துராஜன்.

“பழனியப்பன் திண்டிவனம் கிளைக்கு மாற்றல் ஆகி விட்டார்.  ஒரு வாரம் முன்பே ரிலீவ்  ஆகிவிட்டாரே! நான் பம்பாயில் இருந்து மாற்றலாகி வந்திருக்கிறேன்…”  என்று விவரம் சொன்னேன்.

 “ரொம்ப நல்ல மனுஷன்!  சரி விஷயத்துக்கு வருவோம்; போன மாதம் பழனியப்பன் கூறியபடி  75 பேர் மீது கேஸ் போட்டிருந்தோம்.  எல்லாம் பத்தாயிரம் ரூபாய்க்கு கீழே கடன் வாங்கியவர்கள்.  ஒரே ஊர்க்காரர்கள்.   ஜட்ஜ் மாற்றல் ஆகிப் போகிறார். அவருக்கு டார்கெட் ரீச் ஆக வேண்டும் என்பதற்காக இந்த 75 கேசையும் இன்று ஒரே நாளில் ஹியரிங் போட்டிருக்கிறார்கள். இன்றே டிஸ்போஸ் செய்து விடுவார். வங்கியின் சார்பில் நீங்கள் பவர் ஆஃப் அட்டர்னி எடுத்துக் கொண்டு ஏழாவது கோட்டுக்குப்  பத்தேகால் மணிக்குள் வந்து விடுங்கள். நான் ரெடியா

இருப்பேன்" என்று முடித்தார் முத்துராஜன்.

காலை எட்டு மணிக்கே ஆரம்பமாகும் கிளை என்னுடையது. எட்டில் இருந்து ஒன்பது மணி வரை கூட்டம் பொங்கி வழியும். ஃபீஸ் கட்டுவதற்குப் பள்ளி மாணவர்கள் திரண்டு நிற்பார்கள். ஆகவே முக்கிய வாடிக்கையாளர்கள் நேரடியாக மேனேஜர் கேபினுக்குள் நுழைந்து விடுவார்கள். அவர்களின் உடனடித் தேவைகளை கவனிப்பது தான் முக்கியப் பணியாக இருக்கும்.

மெட்ராஸ் ஹைகோர்ட் 

பத்தே கால் மணிக்குள் கோர்ட்டுக்குப் போவது முடியாத காரியம் என்று தோன்றியது. அசிஸ்டண்ட் மேனேஜர் ராகவனை அனுப்பலாம் என்று அழைத்தேன். சிரித்தார் ராகவன்.

"இதெல்லாம் அரசியல்வாதிகள்  சொன்னதால் கொடுக்கப்பட்ட  கடன்கள். ஒன்றுகூடத்  திரும்பி வராது.  கடன்காரர்கள்  யாரும் கொடுத்த முகவரியில் இல்லை.    மூன்று வருஷம் ஆனதால் டாக்குமெண்டை ரெனிவல் செய்யமுடியாமல் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி, வேறுவழியின்றி சூட் பைல் செய்திருக்கிறோம். ரீஜனல் ஆபீஸ் எவ்வளவு எழுதியும் ஹெட் ஆபீஸில் ஒப்புக்கொள்ளவில்லை" என்று சொல்லிவிட்டு ஸேஃப் ரூமுக்குள் போனார்.

ராகவன் எப்பொழுதுமே விலாவாரியாகத்தான் பேசுவார். நம்பிக்கையானவர். அவ்வப்பொழுது ஸ்போர்ட்ஸ் விஷயங்கள் பற்றி முகநூலில் ஆங்கிலத்தில் சிறந்த நடையில் எழுதுவார். பேசாமல் ‘ஹிந்து’வில் சேர்ந்துவிடு என்றால் கேட்கமாட்டார்.

“பதினொரு மணிக்கு கோர்ட்டில் இருந்தால் போதும் சார்! முத்துராஜன் வரமாட்டார். அவருடைய ஜூனியர் லதா ரமணி தான் வருவார். அவரிடம் நான் சொல்லிவிடுகிறேன். நீங்கள் சும்மா போய் நின்றுவிட்டு வந்தால் போதும்” என்று எனது பவர் ஆஃப் அட்டர்னி ஆவணத்தைக் கொண்டுவந்து கொடுத்தார் ராகவன்.

 ****   

சட்டம் என்பது இருட்டறையில் கறுப்பு பூனையைத் தேடுவது போன்றது என்பார்கள். முதலில் ஏழாவது கோர்ட் எங்கிருக்கிறது என்பதைத் தேடுவதே பெரிய வேலையாக இருந்தது. ஆயிரக்கணக்கான மக்கள், அதில் கருப்பு கோட் போட்டவர்களே ஐநூறு பேர் இருப்பார்கள். யாரிடம் கேட்டாலும் ‘அந்தப் பக்கம் போங்கள்’ என்று கைகாட்டினார்களே தவிர, அவர்கள் காட்டிய திசையில் கோர்ட் நம்பர் ஏழு காணப்படவில்லை. கடைசியில், பெரிய எவர்சில்வர் டிரம்மில் காபி கொண்டுபோன ஒரு சைக்கிள் வாலிபன் நான் கேட்காமலே ஒரு காகிதக் கோப்பையில் காபியைக் கொடுத்துவிட்டு, “ஐந்து ரூபாய்” என்று சொன்னதுடன், சரியான வழியையும் காட்டினான்.  

அப்போது மணி பத்தரை. இன்னும் நீதிபதி வரவில்லை. கிளார்க்குகள் அன்றைக்கான கேஸ் கட்டுகளை ஊதி ஊதி அவருடைய மேஜை மீது  வைத்தார்கள். தூசி!

அன்று லிஸ்ட் ஆன கேஸ் நம்பர்கள் அடங்கிய தாளை ஒருவர் சுவரில் ஓட்டினார். கண்ணுக்குத் தெரியாத சிறிய எழுத்துக்கள். ஒரே இடத்தில் தினமும் அப்படி ஓட்டுவார்கள்போல. மெத்தை போட்டதுபோல் காகித அடுக்கு.

லதாரமணி என்பவள் யார்? என்னை அவளுக்கும் அவளை எனக்கும் தெரியாது. கோர்ட் அறையில் சுமாரான முகத்துடன் இருந்த சில பெண் வழக்கறிஞர்களை உற்றுப் பார்த்தேன். ஒருத்தி வேகமாக வந்து, “வணக்கம் சார்! டைவர்ஸா” என்றாள். “இல்லை, எனக்கு இன்னும் மணமாகவில்லை” என்றேன். சும்மா ஒரு இதுக்காகத்தான்! லதாரமணி யாரென்று கண்டுபிடிக்க வேண்டாமா?

விஷயத்தைக்  கேட்டுக்கொண்டபின்  “சாரி சார்! எனக்கு டைவர்ஸ் லாயர்கள்தான் தெரியும். இதெல்லாம் சில்லறை விஷயம். பேங்க் கேசில் பைசா தேராது! “ என்று நகர்ந்துவிட்டாள்.

ஒருவழியாக நீதிபதி வந்து இருக்கையில் அமர்ந்தார்.  ‘சைலன்ஸ்’ என்று கிளார்க்  சத்தம் போட்டார். உடனே வெளியில் இருந்து கூட்டமாக ஆரவாரத்துடன் கருப்பு கோட்டுகள் உள்ளே நுழைந்து நடுவிலிருந்த மேஜையைச் சூழ்ந்துகொண்டன.

ஒரு கிளார்க் நீதிபதியின் முன்னால் நின்றுகொண்டு கேஸ் நம்பர்களை வாசித்தார். வக்கீல்களுக்கு மட்டுமே புரிந்தது. ஒரு பெரிய கேஸ் கட்டை அவர் எடுத்து பேங்க்கின் பெயரைச் சொல்லி  ‘75 கேஸ்’ என்றதும்  ஒரு பெண் வக்கீல் “ஆஜர்” என்று மெதுவாகக் கூறினார். 75 என்ற வார்த்தையால் தூண்டப்பட்டு, “லதா ரமணியா?” என்றேன்.

“ஆமாம் சார்! உங்களை எங்கெல்லாம் தேடுவது?” என்று என்மீது குறைசொன்னவள், நீதிபதியைப் பார்த்து, “மைலார்ட்! பேங்க் சார்பாக மேனேஜர் வந்திருக்கிறார்” என்றாள். கேஸ்கட்டு அவருக்கு வலதுபக்கம் வைக்கப்பட்டது.

“சாரி சார்! ஸ்கூட்டர் ரிப்பேர் ஆகிவிட்டது. அதனால் தான் லேட்” என்றாள். “பிறகு ஏன் என்னைக் குறை சொன்னீர்கள்?’ என்றேன் கோபத்துடன். 

“சாரி சார்! இந்தத் தொழிலுக்கு வந்தபின் இப்படியாகிவிட்டது. சிலசமயம் நாங்கள் உண்மை பேசுவதும் உண்டு” என்று சிரித்தவள், “எப்படியும் மத்தியானம்தான் நம்ப கேஸ் வரும். உங்களால் இருக்க முடியுமானால் சரி. இல்லையென்றால் நான் வாய்தா வாங்கிவிடுகிறேன். அல்லது எக்ஸ்-பார்ட்டி டிக்ரி வாங்கிடலாம். கடன்காரர்கள் யாரும் நிச்சயம் வரமாட்டார்கள். நீங்கள் போகலாம்” என்றாள். 

“இல்லை, நான் இதுவரை கோர்ட்டுக்கே வந்ததில்லை. ப்ரொசீடிங்ஸ் எப்படி இருக்கும் என்று பார்த்துவிட்டே போகிறேன்” என்றேன். இருவரும் பரஸ்பர அறிமுகம் செய்துகொண்டோம். 

அப்போதுதான் கைக்குழந்தையுடன் ஓர் இளம்பெண் வேகமாக என்னை நோக்கி வந்தாள். ஒரு பர்லாங்க் தூரத்தில் இருந்த பஸ் நிலையத்திலிருந்து பிசியான சாலையைக் கடந்து வேர்க்க விறுவிறுக்க வந்திருக்கிறாள். மிகவும் ஏழை என்பது பார்த்த நொடியே தெரிந்தது. கையில் சம்மன் இருந்தது. காட்டினாள்.

அந்த 75 கடன் தாரர்களில் இவளும் ஒருத்தி. பெயர் கண்ணகி. 5000 ரூபாய் கடன் வாங்கி, அதில் இருநூறு மட்டுமே செலுத்தி, பின் அப்படியே விட்டுவிட்டாள். வட்டியைத் தள்ளுபடி செய்த வங்கி, அசல் 4800 ரூபாய்க்காக கேஸ் பதிந்திருந்தது.

லதா ரமணியிடம் அவள் கெஞ்சினாள். “வக்கீலம்மா, என்னை ஜெயில்ல போட்டுடாதீங்கம்மா! இந்தக் கைக்கொழந்தைய வச்சுக்கிட்டு நான் என்னம்மா செய்வேன்! என்னக் காப்பாத்துங்கம்மா” என்று கண்ணீர் விட்டு அழுதாள்.

“இன்னிக்கு இருநூறு  ரூபா கட்டிடறேன். இனிமே வாராவாரம் நூறு ரூபா கட்டறேன். தவற மாட்டேம்மா! இவங்கப்பன் குடிச்சிட்டு ஒரு தொழிலும் செய்யாம தண்டமா கெடக்கறாம்மா! நான் கல்லு ஒடச்சி தான் ஒருவேளை சாப்பிடறேம்மா”  என்று என் காலிலும் லதாரமணியின் காலிலும் விழப்போனாள் கண்ணகி. பிறகு திடீரென்று எழுந்து நீதிபதியின் அருகில்போய் “என்னை ஜெயில்ல போடாதீங்கய்யா” என்று ஓவென்று அழுதாள். கோர்ட் அமைதியானது. 

நீதிபதிக்கு என்னே செய்வதென்று புரியவில்லை. கிளார்க்கிடம் ஏதோ கூறினார். அவளை ஒரு நாற்காலியில் உட்காரவைத்தார்கள். குழந்தை வீறிட்டு அழுதது.

நீதிபதி இறங்கிவந்தார். குழந்தைக்கு பால் வாங்கித்தரும்படி சொன்னார். கண்ணகிக்கு ஒரு காபியும்.

வக்கீல் லதாரமணியை அழைத்து விவரம் கேட்டார். அவருக்கு ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்தது. “எப்படிப்பட்ட முட்டாள் நீங்களெல்லாம்” என்று ஆங்கிலத்தில் கூறினார். “4800 ரூபாய்க்கு ஒரு கேசா! கோடிக்கணக்கில் வாங்கியவர்களை விட்டுவிடுகிறீர்கள்!” என்று கத்தினார்.

“இந்தக் கேசைத் தள்ளுபடி செய்தால் என்ன செய்ய முடியும் உங்கள் பேங்கினால்?” என்று என்னிடம் கேட்டார். நான் அமைதியாக இருந்தேன்.

பிறகு கேஸ் கட்டை அவிழ்த்து கண்ணகியின் பேப்பர்களைப் பார்வையிட்டார். ஆவணங்கள் சரியாக இருந்தன. வழக்கைத் தள்ளுபடி செய்ய சட்டப்படி இடமில்லை என்பதைக் கண்டார்.

பிறகு கண்ணகியைப் பார்த்து, “உன் உடையையும் தோற்றத்தையும் பார்க்கும்போது நீ மிகவும் ஏழ்மையில் இருக்கிறாய் என்று நினைக்கிறேன். உண்மையா?” என்றார்.

“ஆமாங்க” என்று எழுந்து நின்றாள் கண்ணகி. பால் குடித்த குழந்தையும் இப்போது அமைதியாக இருந்தது.

“உன்னுடைய கடனைத் தள்ளுபடி செய்துவிடலாமா?” அவளை உற்றுப் பார்த்தார் நீதிபதி.

“அய்யய்யோ வேண்டாங்க அய்யா! கை நீட்டி வாங்கின பணம்யா அது! பெத்தவங்க கடனைத் திருப்பிக் கொடுக்கலேன்னா அது  கொழைந்த குட்டிங்கள பாதிக்கும்னு எங்கம்மா சொல்லுவாங்கய்யா! அதுனால வாரா வாரம் நூறு ரூபான்னு கட்டுறதுக்கு உத்தரவு போடுங்கய்யா! ஒரு வாரம் தப்பினாலும் அடுத்த வாரம் குடுத்துடுவேன்! இது சத்தியமுங்க!” என்று கைகூப்பினாள் கண்ணகி.

மொத்த கோர்ட்டும் நீதிபதியின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தது. அவர் அவசரமாகத் தன் தீர்ப்பை எழுதினார்.

“கடன் வாங்கியதற்கான ஆவணங்கள் சரியாக இருப்பதாலும், கடன்காரர் கடன் வாங்கியதை மறுக்காததாலும், ஏழ்மையைக் காரணம் காட்டி அசலைத் தள்ளுபடி செய்வதற்குச் சட்டத்தில் இடம் இல்லை என்பதாலும், இவர் தன்னுடைய பாக்கித் தொகையான 4800 ஐ செலுத்தியாகவேண்டும். ஆனால் கடன் தாரரின் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அவரே முன்வந்து சொன்னபடி  வாரம் 100 ரூபாய் வீதம் வட்டியில்லாமல் செலுத்தவேண்டுமென்று உத்தரவிடுகிறேன்...”

கண்ணகி எழுந்தாள்: “இது போதுங்க ஐயா! சொன்ன மாதிரி நான் கட்டிடுவேன். ஐயா பேருக்கு தப்பு வராதுங்க” என்று கண்களைத்  துடைத்துக்கொண்டாள். ‘நாம்ப ஜெயிலுக்குப் போகவேண்டாம்டா கண்ணு!” என்று தன் குழந்தையை முத்தமிட்டாள். 

லதாரமணியைப் பக்கத்தில் வரும்படி அழைத்தார் நீதிபதி. தன் சட்டைப்பையிலிருந்து பர்சை எடுத்தார். என்னையும் அருகில் வரச் சொன்னார். “இதோ 4800 ரூபாய்! அந்தப் பெண்ணிடம் செலானில் கையெழுத்து வாங்கி இதை அவள் கணக்கில் வரவு வைத்துவிட்டு, கடன் தீர்ந்துவிட்டதற்கு ரசீது அனுப்பிவிடுங்கள்” என்று கூறிவிட்டு பதிலுக்குக் காத்திராமல் தன் சேம்பருக்குள் சென்று விட்டார். நான் திகைத்துப்போய் நின்றேன்.

இதை ஆங்கிலத்தில் அவர் கூறியதால் கண்ணகிக்கு ஒன்றும் புரியவில்லை. அவள் கொண்டுவந்திருந்த 200 ரூபாயை நான் வாங்க மறுத்தது ஏன் என்றும் அவளுக்குப் புரியவில்லை. 

“உன் கடன் தள்ளுபடியாகிவிட்டது” என்று லதாரமணி கூறியதும்  அவளுக்குப் புரிந்துவிட்டது.

“அது தப்புங்க வக்கீலம்மா! ஜட்ஜ் அய்யவோட அட்ரஸ் குடுங்க. வாராவாரம் அங்க போய்க் குடுத்துடறேன். இன்னொருத்தார் பணம் எனக்கு வேண்டாமுங்க” என்று குரல் தழுதழுக்கக் கூறினாள் கண்ணகி.  கண்களைத் துடைத்துக்கொண்டேன்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு நடந்த எங்கள் அதிகாரிகள் மாநாட்டில் இதை நான் வங்கியின் தலைவரிடம் எடுத்துக் கூறினேன். ஏழ்மையை கோர்ட்டுக்கு கொண்டுவந்தால் வங்கியின் பெயர் பாழாகும் என்று தெரிவித்தேன். அவர்களுக்குத் தெரியாததா இது? அடுத்த சில மாதங்களில்  ‘ஐயாயிரம் வரை வாங்கிய கடன்களுக்கு கோர்ட் நடவடிக்கை எடுக்க வேண்டாம்’ என்று மண்டல மேலாளர்களுக்கு அதிகாரபூர்வமான அறிவுரை  வழங்கப்பட்டது.    

கண்ணகி என்றால் நீதி கிடைக்காமல் போய்விடுமா?
-    இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து     

16 கருத்துகள்:

 1. மிக அருமையான ... உங்களுக்கே உரிய அற்புத நடையில் ஜமாத்திருக்கிறீர்கள்

  பதிலளிநீக்கு
 2. கற்றது கையளவு.... கல்லாதது உலகளவு என்பது இதுதானோ... அருமையான நடை.

  பதிலளிநீக்கு
 3. எந்த அளவு கற்பனையோ...  ஆனால் கண்கலங்க வைத்து விட்டாள் கண்ணகி.

  பதிலளிநீக்கு
 4. ஏழைகளிடமும் ஏதிலிகளிடமும் மனசாட்சியும் நேர்மையும் இருக்கிறது. நீதிபதியின் செயலில் நெகிழ்ந்தேன்.

  வறுமையில் செம்மை என்பது இதுதானோ? இதில் கற்பனை எவ்வளவு சதம்?

  பதிலளிநீக்கு
 5. இந்த நேர்மை பலரிடமும் உள்ளதை, சிறு வயதிலேயே நேரில் கண்டு உள்ளேன்... படித்ததில் கிடைக்காத பாடங்கள்...

  பதிலளிநீக்கு
 6. தாத்தாவும் சும்மா சொல்லவில்லை :-

  இன்மை இடும்பை இரந்துதீர் வாம்என்னும்
  வன்மையின் வன்பாட்டது இல்

  பதிலளிநீக்கு
 7. ஏழ்மையில் நேர்மை

  பதிலளிநீக்கு
 8. நல்ல மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களை போற்றுவோம்.... நிகழ்வினை சிறப்பாக எழுதிய உங்களுக்கும் பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 9. இந்த மனிதாபிமான மிக்க நீதிபதிகள் போல இருப்பதால்தான் இன்னும் மழை பெய்கிறது . வாழ்வின் மேல் நம்பிக்கை வருகிறது . இது போல நிகழ்வுகளை ப் பதிவு செய்து நீங்கள் உங்கள் பங்கிற்கு நம்பிக்கை அளிக்கிரீர்கள்.

  பதிலளிநீக்கு
 10. சார் நானும் கண்களைத் துடைத்துக் கொண்டேன். நிஜமாகவே அழுகை வந்துவிட்டது. ஏழ்மையிலும் எப்படியான நல்ல மனம். அந்த நீதி(நீதிபதி)க்குத் தலைவணங்குவோம். ஆனால் கடைசியில் அந்த நீதிபதி கண்டிப்பாக இந்தத் தொகையை வழங்கி அப்பெண்ணிற்கு உதவுவார் என்று மனதில் தோன்றியது அவர் உங்களிடம் கேட்ட கேள்வி யை வாசித்த போதே தோன்றிவிட்டது அவர் உதவுவார் என்று,

  கீதா

  பதிலளிநீக்கு
 11. அழகாக எழுதியும் இருக்கீங்க சார் உங்கள் எழுத்தைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமோ!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 12. What a touching story.Should I admire the judge or the honest poor lady or the erudite writer? I enjoy your blogs very much.I never thought banking career had so many dimensions and interesting incidents to share.

  பதிலளிநீக்கு
 13. "அடுத்த சில மாதங்களில் ‘ஐயாயிரம் வரை வாங்கிய கடன்களுக்கு கோர்ட் நடவடிக்கை எடுக்க வேண்டாம்’ என்று மண்டல மேலாளர்களுக்கு அதிகாரபூர்வமான அறிவுரை வழங்கப்பட்டது. "

  உங்களின் முயற்சியால் பல கண்ணகிகளுக்கு நீதி கிடைத்தது. உங்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 14. நெகிழ்ச்சி! நீதிபதியே சொன்னது போல கோடிக்கணக்கில் கடன் வாங்கியவர்களை விட்டு விட்டு ஏழைகள் மீது சட்டப்படி நடவடிக்கை! தவறு எங்கே? கண்ணகி கண் கலங்க வைத்து விட்டார்.

  பதிலளிநீக்கு
 15. 75 பேர் மீதான கேஸை 75ம் நாள் எழுதக் காத்திருந்திருக்கிறீர்கள்.

  கண்ணகி, நீதிபதிகளால் மானுடம் வாழ்க!

  பதிலளிநீக்கு