(புதுடில்லிப் புராணம்-3)
அமெரிக்காவில் 66 ஆவது நாள் (16-6-2022)
புதுடில்லி வந்த முதல் சில வாரங்களில் இலட்சுமிபாய் நகரில் நான் தங்கியிருந்தேன். என் மனைவியின் அத்தை மீனாட்சி வைத்தியநாதன் வீட்டருகில் இருந்த DTEA பள்ளியில் பணியாற்றிக் கொண்டிருந்தார். வைத்தியநாதன் வேளாண் அமைச்சகத்தில் அதிகாரியாக இருந்தார்.
சப்தார்ஜங்க் சமாதிப் பூங்கா |
நான் சென்னையிலிருந்து டில்லி புறப்பட்டபோது என்னிடமிருந்த லாம்பி ஸ்கூட்டரை அதே இரயிலில் வைத்துக் கொண்டு சென்றதால், முதல் நாளில் இருந்தே அலுவலகத்திற்கு ஸ்கூட்டரில் தான் கிளம்பினேன். இலட்சுமிபாய் நகரில் இருந்து வெளியில் வந்தவுடன் ஐஎன்ஏ மார்க்கெட், அடுத்து சப்தர்ஜங் ஏர்போர்ட், சப்தர்ஜங் சமாதி, இன்னும் என்னென்னவோ வரும். பாராளுமன்ற கட்டிடத்தை தாண்டிக்கொண்டு மந்திர்மார்க் வழியாக ஆரிய சமாஜ் ரோடை அடைவேன். அங்கு ஆட்டோமொபைல் களுக்கான உதிரி பாகங்கள் விற்கும் பெரிய மார்க்கெட்டில் ஒரு கட்டிடத்தின் முதல் இரண்டு தளங்களில் எங்கள் வங்கி இருந்தது.
காலையில் போகும்போது சப்தர்ஜங் ஏர்போர்ட் அருகே வண்டியை நிறுத்தி அங்கு சில சிறு ஹெலிகாப்டர்கள் நின்று கொண்டிருப்பதையும் பறப்பதில் பார்ப்பேன். என் மனதிற்குள் ஒரு சோகம் எழும். பாரதப் பிரதமர் இந்திரா காந்தியின் இளைய மகனும், அரசியலில் தலைமைப் பதவியை அடைந்து விட மிக இளம் வயதிலேயே துடித்தவருமான சஞ்சய் காந்தி, 1980 ஜூன் 23 அன்று ஒரு ஹெலிகாப்டர் விபத்தில் அங்குதான் மரணம் அடைந்திருந்தார். அது ரஷ்யர்களின் சதி என்றும் இல்லாவிடில் தரையில் விழுந்த விமானம் வெடித்துச் சிதறாமல் இருந்தது எப்படி என்றும் சுப்பிரமணியன் சுவாமி கேட்டதாக நினைவு. விபத்து நடந்த இடத்தில் வெகுநேரம் இந்திராகாந்தி இரகசியமாக வந்து எதையோ தேடிக் கொண்டிருந்தார் என்றும் செய்திகள் உலாவின. சஞ்சய் மட்டும் இறந்திருக்கா விட்டால் இந்திய அரசியலில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கும் என்பது மட்டும் உறுதி.
ஆனால் அந்த விமான நிலையத்தின் உள்ளே நுழைவதற்கு அனுமதி இல்லை. விவிஐபிக்கள் மட்டுமே அங்கு செல்ல முடியும். ஆனால் ஜனவரி மாதத்தில் சங்கராந்தி எனப்படும் பொங்கல் நாளின்போது பட்டம் விடும் திருவிழா அங்கு நடைபெறும், அப்போது எல்லோரும் உள்ளே வரலாம் என்றார்கள். எனவே காத்திருந்தேன்.
நேரு குடும்பம்-படம்-நன்றி -இணையம் |
அங்கிருந்து கொஞ்சம் தொலைவில் இருந்தது சப்தர்ஜங் என்பவரின் சமாதி. டில்லி முழுவதுமே இத்தகைய சமாதிகள் தான் அதிகம். மங்கல நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போதும் இந்த சமாதிகளைப் பார்க்காமல் செல்ல வழியில்லை என்பது வருந்தத்தக்கதே. சப்தர்ஜங் சமாதி முக்கிய சாலையிலிருந்ததாலும், லோதி கார்டன் என்ற அழகிய பூங்காவுக்கு அருகில் இருந்ததாலும், காதலர்கள் சந்திக்கும் இடமாக அந்த சமாதி இருந்தது. ஆனால் உள்ளே நுழைவதற்கு ஐந்து ரூபாயோ என்னவோ கட்டணம் கொடுக்க வேண்டும். அத்துடன் ஒரு பத்து ரூபாய்க்கு மாங்காய் சுண்டலோ பொரியோ வேறு என்னவோ வாங்கிக் கொண்டால் நிச்சயமாக ஒரு மணி நேரம் அந்த இடத்தில் அமைதியைத் துய்க்கலாம்.
பட்டம் விடும் திருவிழாவின்போது ஏர்போர்ட் செல்ல என் அத்தை வீட்டில் அனுமதி தரவில்லை. நம் வீட்டு மொட்டை மாடியில் இருந்து பார்த்தாலே நன்றாகத் தெரியும் என்றார்கள். உண்மைதான். லட்சுமி பாய் நகரிலிருந்து கல்லெறிந்தால் சப்தார்ஜங்கில் கிளம்பும் ஹெலிகாப்டர் மீது எளிதாகப் போய்விழும். எனவே உயரத்தில் பறக்கும் பட்டங்களை மொட்டை மாடியில் இருந்தே பார்த்து ரசித்தேன். என்னைவிட வயதானவர்களும் வயது ஆகாதவர்களும் பல்வேறு வடிவத்திலிருந்த, பல்வேறு வர்ணங்களில் அமைந்த, பல்வேறு நீளமான வால்களைக் கொண்ட பட்டங்களைப் பறக்க விட்டுக் குதூகலித்துக் கொண்டிருந்தார்கள். இளம் வயதில் நாங்கள் இராணிப்பேட்டையில் பாலாற்றங்கரையில் யாருடைய தொந்தரவும் இன்றிப் பட்டம் விட்டுக் கொண்டிருப்போம். அந்த நினைவுகள் வந்து போயின.
அன்று விடுமுறை தினம் என்பதால் மாலையில் காலார நடந்து போனேன். சப்தார்ஜங் சமாதி இருந்த பூங்காவிற்குச் சென்றேன்.
நுழைவுக் கட்டணம் செலுத்திவிட்டு, கொறிப்பதற்கு ஏதோ வாங்கிக்கொண்டேன். எதிர்பார்த்தபடியே கூட்டம் இருந்தது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சார்ந்தவர்களும் தங்கள் மொழிகளில் பேசிக்கொண்டு அந்த இடமே ஒரு மினி பாரதவிலாஸ் ஆக இருந்தது.
மரங்களையும் மலர்களையும் படிப்பதைவிட மனிதர்களைப் படிப்பதுதான் எனக்கு விருப்பம் என்று சொன்னேன் அல்லவா? அதற்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது.
வெளிநாட்டுப் பயணிகள் ஐந்தாறு பேர் ஒரு கூட்டமாகச் சென்று ஒவ்வொரு இடத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு ஒரு பெண் வழிகாட்டியாக இருந்து அவர்களுடைய மொழியில் பேசிக் கொண்டிருந்தாள். கவிஞர் அங்கிருந்தால் 'பேசுவது கிளியா' என்று கேட்டிருப்பார். அவ்வளவு இனிய குரல் அந்தப் பெண்ணுக்கு. சற்று அருகில் போய் மேலும் விவரம் சேகரிக்க எண்ணினேன்.
அவர்கள் பேச்சில் அடிக்கடி 'மஸ்க்வா, மஸ்க்வா' என்று கேட்டதை வைத்து அவர்கள் ரஷ்யர்கள் என்று முடிவு செய்தேன். ரஷ்ய மொழியில் மஸ்க்வா என்றால் மாஸ்கோவைக் குறிக்கும். ஆனால் இந்தப் பெண்ணோ இந்தியப் பெண் தான். அதிலும் தென்னிந்திய பெண் போலவே தெரிந்தாள். நெற்றியில் சாந்துப் பொட்டும் தலையில் ஒற்றை ரோஜாவும் வைத்திருந்தாள். அவள் முகத்தை அருகில் இருந்து பார்ப்பவர்களுக்கு அந்த இரண்டு ரோஜாக்களில் எது சிறந்தது என்று சந்தேகம் வருவது உறுதி.
வயது ஆரம்ப இருபதுகளில் தான் இருக்கும். பூங்கொடி போன்ற உடல். பேண்ட் அணிந்து மேலே பூப்போட்ட முழுக்கைச் சட்டை அதன்மீது குளிர்காக்கும் ஜாக்கெட். காலில் உலலன் சாக்ஸ். ஒரு கையில் அழகுப்பை இருந்த ஞாபகம். அதிக ஒப்பனை இல்லாமல் அழகாக இருந்தாள். என்ன மொழிக்காரியாக இருப்பாள்? தமிழா, தெலுங்கா, கன்னடமா, மலையாளமா?
ஆறு மணி ஆகிவிட்டதால் அனைவரும் வெளியேறிக் கொண்டிருந்தார்கள். அதுதான் சமாதிக்கதவுகள் மூடும்நேரம்.
அவளுடைய விவரிப்புகள் ரஷ்யக் குழுவினருக்குத் திருப்தி அளித்திருக்க வேண்டும். கணிசமாக டிப்ஸ் கொடுத்து விட்டு விடை பெற்றார்கள். அப்போது அவள் சிந்திய புன்னகை இருக்கிறதே, அதற்கு முன் நான் எங்கும் பார்த்ததில்லை. 'பை பை மோனிகா' என்று அவர்கள் அவளுடைய பெயரை உச்சரித்த போது எனக்கு ஏன் பொறாமையாக இருக்க வேண்டும் என்று தெரியவில்லை.
சுய வண்டிகளில் வந்தவர்கள் கிளம்பினார்கள். சிலர் அருகில் இருந்த பஸ் நிலையத்திற்குச் சென்றார்கள். ஒரு சிலர் ஐஎன்ஏ மார்க்கெட்டை நோக்கி நடந்தார்கள். அவர்களில் நானும் ஒருவன்.
ஆனால் என்ன ஆச்சரியம்! மோனிகாவும் என் பின்னால் வந்து கொண்டிருந்தாள்!
குளிர் மிகுந்த ஜனவரி மாதம் என்பதால் ஆறு மணிக்கே இருள் படர்ந்து விட்டிருந்தது. நடந்து கொண்டே இருந்த மோனிகா திடீரென்று 'ஐயோ' என்றாள். அட நம்மூர்ப் பெண்ணா என்று மகிழ்வுடன் திரும்பி 'வாட்?' என்றேன்.
'ஓ நீங்கள் தமிழரா?' என்று அவளும் சற்று மகிழ்வுடனே கேட்டாள். இருட்டில் வாழைப்பழத்தோல் மீது கால் வழுக்கி விழ இருந்தாளாம்.
நான் தமிழன் என்று எவ்வாறு கண்டுபிடித்தாள்?
'தமிழில் கேள்வி கேட்டால் ஆங்கிலத்தில் பதில் சொல்பவர்கள் தமிழர்கள் மட்டும் தானே!' என்று சிரித்தாள் அவள்.
"மோனிகா நீங்கள் எந்த ஊர்?" என்றேன்.
"மோனிகாவுக்கு எந்த ஊரோ தெரியாது, ஆனால் நான் மதுரைக்காரி" என்றாள் அவள்.
புதிரை விடுவிக்க முடியாமல் நான் தவிப்பதைக் கண்டு கர்ச்சீப்பால் தன் சிரிப்பை அழுத்திக் கொண்டாள் அவள்.
"ஓ எழுத்தாளர்களைப் போல் உங்களுக்கும் புனைபெயர் உண்டா" என்றேன்.
"பின்னே! 'சூடிக்கொடுத்த சுடர்க்கொடி' என்ற நீளமான பெயரை ரஷ்யர்கள் எப்படி உச்சரிக்க முடியும்?"
நல்ல குறும்புக்காரி! 'ஆண்டாள்' என்ற தன் பெயரை எப்படிச் சொல்கிறாள்!
"நல்லது ஆண்டாள், என் அத்தை வீடு இங்குதான். நீங்கள் எங்கு வசிக்கிறீர்கள்?"
"வசிப்பதா?" மீண்டும் சிரித்தாள். "உழைக்கும் மகளிர் விடுதி என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? எய்ம்ஸ் அருகில் உள்ளது. அங்குதான் தங்கியிருக்கிறேன்."
சில சமயம் சின்னச்சின்ன விஷயங்களில் எல்லாம் மனது நிறைந்துவிடும். காரணமே இருக்காது. இதுவும் அதுபோன்ற ஒரு தருணம்.
"பத்து நிமிடம் ஆகுமா இங்கிருந்து நடந்து போக?" என்றேன்.
"நீங்களே சோதித்துப் பார்த்து விடலாமே! இல்லையென்றால் இத்தனூண்டு தூரத்திற்காக நான் பஸ்சுக்கு வெயிட் பண்ணவேண்டும்" என்றாள் ஆண்டாள் என்ற மோனிகா.
இருவரும் நடந்தோம். அவள் பட்டப்படிப்பு முடித்து டைப் ரைட்டிங்க், சுருக்கெழுத்து முடித்து, பிஎஸ்ஆர்பி (BSRB), யூபிஎஸ்சி (UPSC) தேர்வுகள் எழுதியதில், யூபிஎஸ்சி அலுவலகத்திலேயே இளநிலை குமாஸ்தாவாகப் பணி கிடைத்து மேற்படி விடுதியில் ஓராண்டாகத் தங்கியிருக்கிறாள். ரஷ்ய மொழி படித்தால் வெளிநாட்டு எம்பசியில் மாற்றம் கிடைக்கும், வருமானமும் அதிகம் என்று ரஷ்ய மொழி படித்துக்கொண்டிருக்கிறாளாம். அதில் ஒரு பிராஜக்ட் வொர்க் தான் இது போல ரஷ்யப் பயணிகளுக்கு வழிகாட்டியாக வேலைசெய்வதும். இது போல இன்னொன்றும் செய்தபிறகு, பெர்ஃபார்மன்ஸ் ரீவ்யூ நடக்குமாம். சில எழுத்துத் தேர்வுகளும் உண்டாம். அதன் பிறகு டிப்ளமோ தருவார்களாம். உடனே வெளிவிவகார அமைச்சகத்திற்கு மாற்றல் கிடைத்துவிடுமாம்.
"சீக்கிரம் கிடைக்க வாழ்த்துக்கள்" என்றேன். பிறகு ஏன் சொன்னேன் என்று நினைத்துக்கொண்டேன். வெளிநாடு பறந்துவிட மாட்டாளா?
"மிக்க நன்றி" என்று தன் அழகுப்பையைச் சுழற்றிக்கொண்டே உள்ளே போக இருந்தவள், என்னைப் பார்த்து விஷமாகச் சிரித்துக்கொண்டே திரும்பினாள்.
"மேற்கொண்டு என்னிடம் ஏதோ கேட்கவேண்டும் என்று தோன்றுகிறதா?" என்றாள்.
"இல்லை. நீங்கள் யார் என்றும் எங்கு இருக்கிறீர்கள் என்றும் தான் தெரிந்துவிட்டதே!" என்றேன்.
"ஆனால் உங்களைப் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாதே! பெயரைக்கூடச் சொல்லவில்லையே நீங்கள்!"
சொன்னேன். முகவரி சொன்னேன். பணியிடம் சொன்னேன்.
அவள் மெதுவாக நெருங்கிவந்து "கடைசியாக ஒரு கேள்வி! கோபித்துக்கொள்ள மாட்டீர்களே?" என்றாள்.
இவளைப் போய் யாராவது கோபிக்கமுடியுமா? சொல்லுங்கள் என்று தலையாட்டினேன்.
மெல்லிய குரலில் கேட்டாள்: "சாருக்குத் திருமணம் ஆகிவிட்டதா?"
(தொடரும்)
-இராய செல்லப்பா நியூ ஜெர்சியில் இருந்து..
நானும் பாத்துண்டே(படிச்சிண்டே) இருக்கேன்..தெனமும்..மமோகினி..ராகினி..ஜெயலட்சுமி..இதென்ன..டீச்சர் பக்கத்துல இல்லியோ..
பதிலளிநீக்குகுடும்பத்தில் குழப்பத்தை உண்டு பண்ணி விடாதீர் நண்பரே!
நீக்கு😂😂😂
நீக்குஆஹா... பொழுது போக்கப் போன இடத்தில பூத்ததோ புதிய நட்பு? அருமை.
பதிலளிநீக்குவிஷமம் விஷமாகி விட்டதோ!! பத்து நிமிடப் பேசியேயே இவ்வளவு நெருங்கி விட்ட மோகினி அப்போது உங்கள் மனதை ஆண்டாள் போலும்!
பதிலளிநீக்குஆனாலும் "ஜொள்ளு" நல்லாத்தான் இருக்கு...! (வரிகளை சொன்னேன்...!)
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்குமிக்க நன்றி" என்று தன் அழகுப்பையைச் சுழற்றிக்கொண்டே உள்ளே போக இருந்தவள், என்னைப் பார்த்து விஷமாகச் சிரித்துக்கொண்டே திரும்பினாள்.//
பதிலளிநீக்குஉடல் முழுதும் மின்சாரம் பாய்ந்த மாதிரி இருந்திருக்குமே?
அப்புறமென்ன காதல் கனிந்ததா?
அவசரப்படாதீர்கள். ஒரு பெண் உங்களைப் பார்த்துச் சிரித்தாலே காதலாகி விடுமா? ஆனாலும் ஆகும்தான்...பொறுங்கள்.
நீக்கு