வியாழன், ஜூன் 02, 2022

வெள்ளிக்கிழமை மிளகாய் பஜ்ஜி

 வெள்ளிக்கிழமை மிளகாய் பஜ்\ஜி

(நான்கு தூண்கள் நகரம்-1) 

(அமெரிக்காவில் 51 ஆவது நாள்)


(நான்கு தூண்கள் நகரம்)

1978  ஆம் வருடம் ஜனவரி 24 ஆம் தேதி கார்ப்பொரேஷன் பேங்க் என்னும் தனியார் வங்கியில் அதிகாரியாகப்  பணியில் சேர்ந்தேன். ஹைதராபாத் நகரில். சுல்தான் பஜார் பகுதியில்  அமைந்திருந்த படீ சவ்டி (Badi Chowdi) என்ற   கிளையில் தான் எனது வங்கி வாழ்க்கை ஆரம்பமானது. மூன்றாண்டுகள் அங்கு  பணிபுரிந்தேன்.


படம் - நன்றி: இணையம் 


சிறுவயதிலேயே எனக்கு தெலுங்கு மொழியை எழுதப் படிக்கத் தெரிந்திருந்த காரணத்தால் ஹைதராபாத்தில் மொழிப பிரச்சினை வராது என்று எண்ணியிருந்தேன். ஆனால், அந்த நகரம், நைஜாம் என்னும் முஸ்லீம் மன்னரின் ஆட்சியில் நீண்டகாலம் கிடந்ததால், அவருடைய மொழியான உருதுவில் பேசுவதையே ஹைதராபாத் மக்கள் -குறிப்பாக வணிகர்கள்-  கௌரவமாகக் கருதினார்கள் எனபது அங்கு சென்றபிறகுதான் தெரிந்தது. நாம் சரளமான தெலுங்கில் பேசினாலும் அவர்கள் உருதுவில் அல்லது உருது மாதிரியான இந்தியில் தான் பதிலளிப்பார்கள். ஆங்கிலம் தெரிந்தவர்கள் கூட, தமிழர்கள் என்றால் இந்தி தெரியாதவர்கள் என்று ஏளனம் செய்வதற்காகவே இந்தியில் மட்டுமே பேசுவார்கள்.  


பள்ளிப்பருவத்தில் இந்தி படித்திருந்தேன் என்றாலும் பேசும் பயிற்சி இல்லாததால் அவர்கள் பேசும் இந்தியைப் புரிந்துகொள்ள முடிந்தாலும் உடனடியாக இந்தியில் பதிலளிக்க முடியவில்லை. என்றாலும் சில மாதங்களில் அதுவும் கைவந்துவிட்டது.


தமிழர்களைத் தவிர மற்ற மொழிக்காரர்களுக்கு இந்தப் பிரச்சினை இருக்கவில்லை. என்னோடு வங்கியில் தெலுங்கர்களைத் தவிர கன்னடர்கள், மலையாளிகள், ஒரியாக்காரர்கள், மராட்டியர்கள், வங்காளிகள் ஆகிய பல்வேறு மொழிக்காரர்கள் உடன்பணியாளர்களாக இருந்தார்கள். எல்லாருமே பள்ளியில் இந்தி படித்தவர்கள். இந்தியில் சரளமாக உரையாடவும் தெரிந்தவர்கள். நாம் தான் திராவிட மாடல் ஆயிற்றே! திருதிருவென்று முழிக்கவேண்டி இருந்தது. 


இருங்கள் மிளகாய் பஜ்ஜிக்கு வருவோம்.


எங்கள் வாங்கி இருந்த இடத்தின் கீழ் ஒரு ஹனுமான் ஆலயம் இருந்தது. அந்தப் பகுதியில் மிகவும் புகழ்பெற்ற ஆலயம்.  ‘தம்மாத்தூண்டு’ இடத்தில்  அமைந்திருந்தாலும் வியாழக்கிழமைகளிலும்  விடுமுறைநாட்களிலும் நல்ல கூட்டம் வரும்.


கூட்டத்திற்கு இன்னொரு காரணமாகச்  சொல்லப்பட்டது, ஆலயத்தின் அருகே இருந்த மிளகாய் பஜ்ஜி வண்டிதான். 


நான்கு சக்கரங்கள்மீது பலகைவைத்த வண்டி. அதில் ஒரு கெரசின் அடுப்பில் அகலமான வாணலி. அருகில் ஒரு பெரிய கிண்ணத்தில் பிசைந்த கடலை மாவு.  இன்னொரு கிண்ணத்தில் கழுவித் துடைத்துவைத்த பச்சை மிளகாய்கள். எல்லாமே ஊசி மிளகாய்கள் என்பதைக் கவனிக்கவும். வண்டியின் அடியில் கெரசின் டப்பாக்கள் சிலவும், அவசரத்துக்காக இன்னொரு அடுப்பும் சில பாத்திரங்களும் இருக்கும். சற்றுத் தொலைவில் அண்டா ஒன்றில் கைகழுவத்  தண்ணீர் வைக்கப்பட்டிருக்கும். 


1978 ஆம் வருட டயரி இன்னும் என்னிடம் இருக்கிறது. (ஆனால் சென்னையில் இருப்பதால்) அப்போது மிளகாய் பஜ்ஜியின் விலை என்னவாக இருந்தது  என்பதை ஆதாரப்பூர்வமாக இங்கு வெளியிட இயலவில்லை என்பதை வருத்தத்துடன்  தெரிவித்துக்கொள்கிறேன். 


எங்கள் வங்கிக்கிளையில் மொத்தம்  இருந்ததே ஏழிலிருந்து ஒன்பது பேர்தான்.  அருகிலிருந்த கட்டிடத்தில் வசித்த வாடிக்கையாளர் ஒருவர் மாலை நேரங்களில் வந்து எங்களுடன் அரட்டை அடிப்பதுண்டு. மற்ற கிளைகளில் பணிபுரியும் நண்பர்களும் சில சமயம் வருவதுண்டு. எப்படிப் பார்த்தாலும் பன்னிரண்டு பேர் தேறாது. 


எதற்குச் சொல்கிறேன் என்றால் வெள்ளிக்கிழமைகளில் மாலை நேரத்தில் ஆளுக்கு இரண்டு என்ற கணக்கில் 24 மிளகாய் பஜ்ஜிகள் எங்கள் பியூன் வாங்கிவரும்  வழக்கம் எப்படி ஏற்பட்டது என்று உங்களுக்குத் தெரியவேண்டும் அல்லவா?  


வெள்ளிக்கிழமை மாலையில் வங்கியில் பூஜை நடக்கும். சாமி படங்களுக்குச் சூடம் காட்டி, பொரி-கடலை-வாழைப்பழம்-தேங்காய் -வெல்லம் முதலியன படையல் இடப்படும். உடைத்த தேங்காயைச் சிறுசிறு துண்டங்களாக்கி, பொரி-கடலை-வெல்லத்துடன் சேர்த்து, அனைவருக்கும் விநியோகிக்கப்படும். அத்துடன் ‘இருக்கட்டுமே’ என்று இந்த மிளகாய் பஜ்ஜிகளையும் சாப்பிடத்  தொடங்கினோம். நாளாவட்டத்தில் ஒவ்வொரு மாலையும் மிளகாய் பஜ்ஜி சாப்பிடும் தவிர்க்க முடியாத வழக்கத்திற்கு ஆளானோம் என்பதை நீங்களே புரிந்துகொண்டிருப்பீர்கள்.   


இந்த வெள்ளிக்கிழமை பூஜைக்கென்று நாங்களே ஆளுக்கு ஐந்துரூபாய் போட்டுக்கொள்வோம்,  எப்படியும் நாங்கள்தானே சாப்பிடப் போகிறோம் என்பதால். ஆனால் மிளகாய் பஜ்ஜிக்கு ? அது கொஞ்சம் விலை உயர்ந்த சங்கதி ஆயிற்றே! அதற்காக இப்படி ஒரு வழக்கம் உருவானது.


அதாவது, மாதத்தின் முதலாவது வெள்ளிக்கிழமை மேனேஜர் கணக்கில் 24 பஜ்ஜிகள் வாங்கப்படும். இரண்டாவது வெள்ளிக்கிழமை உதவி மேனேஜர் கணக்கில். இப்படியே, வருகை பதிவேட்டில் உள்ள வரிசைப்படி ஒவ்வொருவரும் ஒரு வெள்ளிக்கிழமைக்குப் பொறுப்பேற்கவேண்டும். 


இந்த “வெள்ளிக்கிழமை+ மிளகாய் பஜ்ஜி” நடைமுறை அமலுக்கு வந்தது உலகம் முழுதும் சீக்கிரமே விளம்பரமாகிவிட்டதால், வெள்ளிக்கிழமைகளில் எதிர்பாராத விருந்தினர்கள் வர ஆரம்பித்துவிட்டனர். பெரும்பாலும் மற்ற கிளைகளில் பணியாற்றும் சக ஊழியர்கள்தான். அதனால் 24 என்ற எண்ணிக்கையை மீறவேண்டியதாகிவிட்டது. இந்த அதிகப்படியான பஜ்ஜிகளுக்கு யார் பணம் கொடுப்பது? சராசரியாக ஐந்து பேராவது ஏதேனும் சாக்கிட்டுக்கொண்டு வந்துவிடுவதைக் கண்டுபிடித்துவிட்டோம். 


விருந்தினர்கள் தேவர்களுக்குச் சமம் என்பது பழமொழி. ஆனால் இந்த தேவர்களோ சாப்பிட மட்டுமே வந்தார்களே அன்றி, ஒருநாளும் தங்கள் கையிலிருந்து எங்களுக்கு பஜ்ஜி வாங்கி கொடுக்க முன்வரவில்லை. இதனால் எங்கள் பொருளாதாரம் பாதிக்கப்பட்டதால் வேறு வழியின்றி, அந்த வழக்கமான விருந்தினர்களும் இனிமேல் ஏதேனும் ஒரு வெள்ளிக்கிழமையை ஸ்பான்சர் செய்யவேண்டும் என்று விதிசெய்தோம். 


சக ஊழியர்கள் எல்லாரும்  நம்மைப் போல் தானே இருப்பார்கள்! உடனே ஒப்புக்கொண்டார்கள். காலண்டரைப் பார்த்து ஆளுக்கொரு வெள்ளிக்கிழமையை ரவுண்டு செய்து தங்கள் பேரை எழுதிவிட்டார்கள். அப்பாடா ஒரு பிரச்சினை  தீர்ந்தது என்றிருந்தோம்.


கேவி என்று ஒரு நண்பர். இதே கிளையில் முன்பொருதரம் மேனேஜராக இருந்தவர். அடுத்து வந்த வெள்ளிக்கிழமை பஜ்ஜிக்கு அவர்தான் ஸ்பான்சரர். அந்த மாதம் மூன்று வெள்ளிக்கிழமைகளில் தவறாமல் வந்த விருந்தினர் அவர்.


வெள்ளிக்கிழமை பூஜை ஆரம்பிக்கும் வேளையில் பஜ்ஜி வண்டிக்காரர்  வருவார். எவ்வளவு பஜ்ஜி வேண்டுமென்று தெரிந்துகொள்வார். பூஜை முடிவதற்கும் சூடான பஜ்ஜி வருவதற்கும் சரியாக இருக்கும். அவரே அன்பு மிகுதியால் அனைவருக்கும் டீயும் வாங்கிவருவார். அதற்கும்  சேர்த்து பணத்தைப் பெற்றுக்கொண்டு கடலை-பொரியிலும் தன்  பங்கைப் பெற்றுக்கொண்டு செல்வார்.


கேவி- யின் வெள்ளிக்கிழமை என்று 38 பஜ்ஜிகள் வாங்கப்பட்டன. ஆனால் கேவி மட்டும் வருவதாகக் காணோம். அப்போது மொபைல் போன் கிடையாதே!  எப்படியெப்படியோ அவரைத் தொடர்பு கொள்ள முயன்றோம்.  ஆள் கிடைக்கவில்லை.


சரியென்று எங்களில் ஒருவர் அதை கேவி-க்கு கடன் கொடுத்ததாக எழுதிக்கொண்டு தன்  கை காசைக்  கொடுத்து கணக்குத் தீர்த்தார். மறுநாள் க்ளியரிங் ஹௌசுக்குப்  போகும்போது அவரை எப்படியாவது கண்டுபிடித்துப் பணத்தை வசூலித்துக்கொண்டு வரவேண்டும் என்ற பொறுப்பு எம். பிரபு என்ற  குமாஸ்தாவுக்கு  வழங்கப்பட்டது. 


ஆனால் அடுத்த வெள்ளிக்கிழமை வரை கேவி  கிடைக்கவேயில்லை. ஆனால் பூஜை நேரத்தில் மட்டும் சரியாக வந்து மிளகாய் பஜ்ஜியைச் சுவைக்க ஆரம்பித்தார். 


அன்று எம். பிரபு விடுமுறையில் இருந்தார். ‘நேற்று பிரபு வந்து நான் தரவேண்டிய பாக்கியை வசூலித்துவிட்டார்!” என்று சிரித்தார் கேவி. ‘பாக்கியைக் கொடுத்த நேர்மைக்காக எனக்கு போனஸாக ஒரு பஜ்ஜி!’ என்று கூடுதலாக ஒரு பஜ்ஜியை  எடுத்துக்கொண்டு கிளம்பினார். 


பிறகுதான் தெரிந்தது, பிரபு,  கேவி-யைச் சந்திக்கவே இல்லை என்பது! எல்லோருக்கும் அதிர்ச்சி. அப்போதுதான் வங்கியில் சேர்ந்திருந்த எனக்கு அதிகப்படியான அதிர்ச்சி. இந்த வங்கியில் மேனேஜர்கள் இப்படித்தான் மிளகாய் பஜ்ஜிக்குக் கூட பொய் சொல்வார்களா? (என்னுடைய மேனேஜர் வேறு என்னிடம் கொஞ்சம் கைமாற்று வாங்கியிருந்தார்).


அதற்குள் இன்னொரு வெள்ளிக்கிழமை வந்துவிட்டது. அதிர்ஷ்டவசமாக அந்த வாரம் கேவி வந்திருந்தார். ராஜ கம்பீரமாக பஜ்ஜியைத் தின்ன ஆரம்பித்தார். குறிப்பிட்ட குமாஸ்தா கொஞ்சம்  தைரியத்தை வரவழைத்துக்கொண்டு பாக்கியைக் கொடுங்கள் என்று கேட்டார். ‘என்னது? பாக்கியா?  பிரபுவிடம்  கொடுத்துவிட்டேன்! அவர் உங்களிடம் தரவில்லையா?” என்றார். 


‘நான் தானே பிரபு! உங்களை சந்திக்கவே முடியவில்லையே’ என்றார்  எம்.பிரபு. அவர் விசுக்கென்று எழுந்தார். ‘நான் உங்களைச்  சொல்லவில்லை. ஆர்.கே. பிரபுவைச் சொன்னேன்’ என்றார். 


ஆர்.கே.பிரபு என்ற குமாஸ்தா இதே கிளையில் முன்பு பணியாற்றியவர். இப்போது மாற்றலாகி அருகில் ஏதோ ஒரு கிளையில்  இருப்பதாகத் தெரிந்தது. “அவர் இங்குதான் வேலை செய்கிறார் என்றல்லவா அவரிடம் பணம்  கொடுத்தேன்!” என்று விளக்கினார் கேவி. “எப்படியும் க்ளியரிங்  ஹவுஸுக்கு வருவார் அல்லவா, கேட்டு வாங்கி விடுங்கள்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார் கேவி. மேனேஜராயிற்றே, நாங்கள் என்ன செய்ய முடியும்? தொகையும் பெரிய தொகை அல்லவே!


மறுநாள் அலசி ஆராய்ந்து பார்த்ததில் அந்த ஆர்.கே.பிரபு ஆறு மாதத்திற்கு முன்பு ராஜினாமா செய்துவிட்டு ஆந்திரா பேங்கில் சேர்ந்து இப்போது கர்னூலில் பணியாற்றுவது தெரிந்தது!


அடப்பாவி! ‘பிசாத்து’ தொகைக்காகவா இப்படியொரு பொய் சொல்வது! 


அதன் பிறகு வந்ததுதான் ஆன்டி-க்ளைமேக்ஸ்! அந்த கேவி-யும்  மாற்றலாகி வேறு மாநிலத்துக்குச் சென்றுவிட்டார்! நானும் மாற்றலாகிவிட்டேன். 


வங்கியில் அனைவரும் கூடி நிலைமையை ஆராய்ந்தார்களாம். இனி வெள்ளிக்கிழமைகளில் மிளகாய் பஜ்ஜியை வங்கிக்குள் வாங்கிவருவதில்லை என்றும், அனைவரும் வண்டிக்கே சென்று தனித்தனியாகக்  காசுகொடுத்து வாங்கிக்கொள்வது என்றும் முடிவுசெய்யப்பட்டதாம்!  கேவி கொடுக்காமல் ஏமாற்றிய காசை அனைவரும் பங்கிட்டு ஈடுசெய்தர்களாம். 


இந்தப் புதிய ஏற்பட்டால் பலன் பெற்றவர் பஜ்ஜி வண்டிக்காரர்தானாம். முன்பு ஆளுக்கு இரண்டு பஜ்ஜிகள் விற்றது மாறி, இப்போது சிலர் மூன்று நான்கு என்றும் வாங்க ஆரம்பித்துவிட்டார்களாம். ‘எல்லாம் ஹநுமான்ஜியின் கருணை’ என்றாராம் அவர்!


இப்போதும் என்னால் மிளகாய் பஜ்ஜியை விட முடிவதில்லை. ஆனால் ஹைதராபாத் ஊசிமிளகாயில் செய்த பஜ்ஜி இங்கு  (சென்னையில்) கிடைப்பதில்லை. மாடு மாதிரி பெருத்த, காரமில்லாத மிளகாயில்தான் பஜ்ஜி கிடைக்கிறது!  காலம் கெட்டுவிட்டது சார்!


 • இராய செல்லப்பா, நியூ ஜெர்சியில் இருந்து.  13 கருத்துகள்:

 1. தீவுத் திடலில் நடக்கும் பொங்கல் கண்காட்சியில் முதன் முறையாக மிளகாய் பஜ்ஜியும் டெல்லி அப்பளம் மற்றும் சோளா பூரியும் சென்னாவும் சாப்பிட்டேன் பள்ளிப் பருவத்தில் .

  பதிலளிநீக்கு
 2. மிளகாய் பஜ்ஜியும் மிச்ச ரூபாயும் என்று தலைப்பு வைத்திருக்கலாம்!

  பதிலளிநீக்கு
 3. ஆஹா !!, படிக்கும் போதே , நாக்கில் , கண்ணில் எல்லாம் நீர் வருகிறது . இப்படி ஊசி மிளகாய் பஜ்ஜி வேறு எங்கும் கிடைக்காதா ?

  பதிலளிநீக்கு
 4. கு.மா.பா.திருநாவுக்கரசு2 ஜூன், 2022 அன்று PM 6:16

  மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
  நோக்கக் குழையும் விருந்து. (திருக்குறள்)
  தோழர் கே.வி. இந்தக் குறளுக்கு சற்றும் பொருந்தாத நபர். இப்படியும் சிலர் பண்பாட்டை மறந்து தன் பாட்டுக்கு சுவைத்து சுயநலமிகளாக இருக்க‌வே செய்கின்றனர். ப‌ஜ்ஜி போச்சே!

  பதிலளிநீக்கு
 5. ஆந்திராவின் மிளகாய் பஜ்ஜி - ஆஹா..... விஜயவாடா வருடா வருடம் செல்வோம் - சிறுவர்களாக இருந்தபோது..... அப்போது இப்படி மிளகாய் பஜ்ஜி தினம் தினம் சுவைத்தது உண்டு. அதன் காரம் தூக்கலாக இருந்தாலும் அப்போது பிடித்தது. இப்போது காரம் அவ்வளவாக சாப்பிடுவது இல்லை.

  பதிலளிநீக்கு
 6. சாதாரண மிளகாய் பஜ்ஜிக்கு ராஜ மரியாதை எப்படி கிடைத்தது? அதை சுவைபட விவரித்ததால்.மென்மையாக நகைச்சுவை இழையோடிய வர்ணனை . பாராட்டுக்கள்

  பதிலளிநீக்கு
 7. மிளகாய் பஜ்ஜி இங்கு நாம் சாதாரணமாகப் பயன்படுத்தும் காரமான மிளகாயில் செய்கிறார்கள். வீட்டிலும் செய்ததுண்டு. ஆனால் இப்போதெல்லாம் காரம் ஏற்பதில்லையே...

  மிளகாய் பஜ்ஜியின் கதை சுவாரசியமான சுவை!

  கீதா

  பதிலளிநீக்கு
 8. மிளகாய் பஜ்ஜியை வைத்துக் கதையே எழுதலாம் போன்று காரமில்லாத நகைச்சுவை இழையோடான பதிவினை ரசித்தேன்.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 9. காசுகொடுக்காமல் மிளகாய் பஜ்ஜி சாப்பிட என்னவெல்லாம் கதை கட்டியிருக்கின்றார் ஒரு மேலாளர்..., கதை பஜ்ஜியைவிட சுவாரஸ்யமாக இருக்கின்றது.
  ...மீ.மணிகண்டன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி நண்பரே! ஆனால் அந்த பஜ்ஜி உண்மையிலேயே சுவையாகத்தான் இருந்தது-அப்போது! இப்போதெல்லாம் எண்ணெயின் தன்மை மாறிவிட்டதால் பஜ்ஜிகளின் சுவையும் குறைந்துவிட்டதாகவே தோன்றுகிறது!

   நீக்கு