அமெரிக்காவில் 56,57,58 ஆவது நாள் (ஜூன் 06, 07,08, 2022)
நேற்றைய தொடர்ச்சி:
ஆனால் ஓர் இளம் டாக்டர், அரசு மருத்துவக் கல்லூரியில் சந்தேகத்துக்கிடமான முறையில் மரணம் அடைந்தபோது, முதிய வக்கீல் அந்த வழக்கில் ஆஜராகி, உண்மையை நிரூபித்து, இழப்பீடாகப் பெருந்தொகை ஒன்றை இளம் விதவைக்குப் பெற்றுத் தந்தார். கணவனை இழந்த அவ்விளம் பெண் யாரென்று தெரிந்தபோது அதிர்ச்சியடைந்தேன்.
“ வாங்க சார், இரண்டு பேரும் தாஜ்மஹாலில் சாப்பிட்டுவிட்டுப் போகலாமே!” என்றார் நாயுடு. தாஜ்மஹால் ஹோட்டலும் ஓர் உடுப்பி ஓட்டல் தான். கோட்டியில் ‘பேங்க் ஸ்ட்ரீட்’ என்னும் சாலையில் தரைத்தளத்தில் இருந்தது.
“இன்று சமையல்காரர் வரவில்லை. ஓட்டலில் தான் சாப்பிட வேண்டும். ஆனால் தனியாகப் போய்ச் சாப்பிடுவது பிடிக்கவில்லை. நல்ல வேளை நீங்கள் கிடைத்தீர்கள்” என்றார் நாயுடு. “இன்று என்னுடைய ட்ரீட் உங்களுக்கு!”
சனிக்கிழமை பகல் நேரத்தில் அளவு சாப்பாடும், இரவில் அளவிலாச் சாப்பாடும் என்று எனக்குப் பழக்கமாகி இருந்தது. ஆனால் நாயுடுவோ இருவருக்கும் அன்லிமிடெட் ஆர்டர் செய்துவிட்டார்.
படம்-நன்றி-இணையம் |
லிமிடெட் சாப்பாட்டுடன் ஒரு அல்வா ஒரு மைசூர்பாகு மற்றும் மீந்துபோன வெஜிடபிள் பிரியாணி, உலர்ந்து போன ஒரு ‘நான்’ மற்றும் நீர்த்துப்போன ஜவ்வரிசி பாயசம் இவற்றை சேர்த்தால் அதுதான் அன்லிமிடெட். லிமிடெட் அன்லிமிடெட் எதுவானாலும் வயிற்றுக்குள் போகும் சாதத்தின் அளவு அதேதான். கல்லா பெட்டிக்குள் போகும் தொகை மட்டும் அதிகம். ஆனால் தாஜ்மஹால் ஹோட்டலில் அன்லிமிட்டட் என்றால் கூட்டு, சாம்பார், வத்தக்குழம்பு, மோர்க் குழம்பு போன்ற திரவப் பொருட்கள் மிகவும் சுவையாக இருக்கும். அதனால் நாயுடுவுக்கு நன்றி சொன்னேன்.
தாஜ்மஹாலில் இருந்து எங்களுடைய அறையை ஐந்தே நிமிடத்தில் அடைந்து விடலாம். விட்டோம். என்னுடைய அறை நண்பர்கள் இருவரும் மாலை 7 மணிக்குத் தான் திரும்புவார்கள். எனவே சற்று உறங்கலாம் என்று எண்ணினேன். ஆனால் மாடிக்குப் போன நாயுடு டக்கென்று திரும்பி வந்துவிட்டார்.
“இன்றைய செய்தித்தாள் பார்த்தீர்களா?” என்றார் நாயுடு.
ஆம் பார்த்தேன். ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு இறந்து போன ஓர் இளம் டாக்டரின் படம் போட்டு அவர் மனைவி கொடுத்த அஞ்சலிச் செய்தி வெளியாகியிருந்தது. கட்டிலின் மீது இருந்த டெக்கன் ஹெரால்டு பேப்பரைக் காட்டினேன்.
“ஆம், இதைப் பற்றித் தான் உங்களிடம் பேசவேண்டும் என்று பல நாட்களாக நினைத்திருந்தேன். இன்று தான் நேரம் வாய்த்தது” என்று ஆரம்பித்தார் நாயுடு. அந்த இளம் விதவைப் பெண் வேறு யாருமில்லை, நமது முதிய வக்கீலின் பேத்தியாம்.
இரண்டு மணி நேரத்தில் அவர் சொல்லி முடித்த அந்த உண்மை நிகழ்ச்சி கற்பனையை விட மர்மம் நிறைந்ததாக இருந்தது. (கொஞ்சம் நீளமாக இருக்கும். இப்போது நேரமில்லை என்றால் பிறகு படியுங்கள்).
***
விசாகப்பட்டினத்தில் அருகில் ஒரு ஜமீன்தார் குடும்பத்தைச் சேர்ந்த இளம் டாக்டர் உள்ளூரில் எம்பிபிஎஸ் முடித்து விட்டு எம்எஸ் படிப்பிற்காக ஹைதராபாதில் ஒரு புகழ்பெற்ற பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். அவருடைய பெயர் இப்போது மறந்துவிட்டது. ‘டாக்டர் ராவ் ‘என்று வைத்துக் கொள்ளலாம்.
பொதுவாகவே ஆந்திரப் பெற்றோர்கள் தங்கள் ஆண் மக்களை டாக்டர் அல்லது என்ஜினியர் ஆக்குவது, திருமணத்தின் போது ஏராளமான வரதட்சணை வாங்குவதற்காகவே என்பது உலகறிந்த உண்மை. ஆனால் ராவ் தன் பெற்றோரிடம் உறுதியாகச் சொல்லி இருந்தார்: “நான் டாக்டராகி நிறைய சம்பாதிப்பேன் என்று எண்ணாதீர்கள். என்னுடைய நோக்கம் ஆராய்ச்சியில் ஈடுபட்டு ஏதாவது நோய்க்குப் புதிய மருந்து கண்டுபிடிப்பது தான். அதற்கு அதிக நாட்கள் ஆகலாம். அதுவரையில் வருமானம் சாத்தியமில்லை. இதற்கு ஒப்புக் கொண்டால் டாக்டருக்குப் படிக்கிறேன். இல்லை என்றால் இப்போதே விவசாயத்தில் இறங்கி விடுகிறேன்.”
வம்ச விளக்காக அவன் ஒரே பிள்ளை. நாலு தலைமுறைக்குத் தேவையான சொத்து இருந்தது. எனவே தாயார் அவனுடைய கனவுக்குப் பச்சைக்கொடி காட்டினார். எம்பிபிஎஸ் முடித்து எம்எஸ் படிக்க ஹைதராபாத் வந்தார் ராவ்.
சராசரியை விட அதிக உயரம். பளிச்சென்ற சிகப்பு நிறம். கண்களில் அறிவுக்களை. கற்பூர புத்தி. எனவே குறித்த காலத்தில் எம்எஸ் முடித்துவிட்டார் ராவ். அவருடைய அறிவுத்திறனைப் புரிந்துகொண்ட துணைவேந்தர், புதிதாகப் பல்கலைக்கழகத்திற்கு கிடைத்திருந்த ஒரு பிராஜக்டில் அவரை இழுத்துப்போட்டுக் கொண்டார். ராவுக்கும் மனதுக்குப் பிடித்தமான தலைப்பு அது.
“வளரும் நாடுகளில் அறுவை சிகிச்சைக்கு ஆகும் செலவைக் கணிசமாக குறைக்க வழி கண்டுபிடித்தல்” என்னும் தலைப்பு அது.
ராவ், நல்ல படிப்பாளி என்றாலும் புத்தகப்புழு அல்ல. மாலை நேரங்களில் தவறாமல் விளையாடுவார். ஆங்கில இலக்கியக் கூட்டங்களிலும் கலந்து கொள்வார். அப்படி ஏற்பட்ட நண்பி தான் கிருஷ்ணவேணி. அதாவது நம்முடைய வக்கீலின் மகள் வயிற்றுப பேத்தி. நட்பு காதலாகி, காதல் திருமணத்தில் முடிந்தது. ஜாதி பேதம் இருந்தபோதிலும் இரண்டு குடும்பங்களும் ஜமீன்தார் குடும்பங்கள் என்பதால் அனைவரும் ஏற்றுக்கொண்ட திருமணமே அது.
ராவின் ஆராய்ச்சி சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. கொடுக்கப்பட்ட மூன்று வருடங்களில் அவர் ஒரு குறிப்பிடத்தக்க முடிவை எட்டியிருந்தார். அவரது முடிவு மட்டும் செயலாக்கப் படுமானால், அறுவை சிகிச்சை கட்டணங்களில் 30 சதவீதத்தைக் குறைக்க முடியும். ஏழைகளுக்கு மட்டுமின்றி நடுத்தர வர்க்கத்திற்கும் அரசாங்கத்திற்கும் மிகப்பெரிய தொகை மிச்சப்படும்.
அப்படி என்ன கண்டுபிடித்துவிட்டார் ராவ்?
அன்றையக் காலகட்டத்தில், அறுவை சிகிச்சைக்கு உபயோகப்படுத்தப்பட்ட மருந்துகளைப் பொறுத்தவரை, அதிக விலை கொண்ட மருந்து மயக்க மருந்து ஆகும். அது பெரும்பாலும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதால் ஆண்டுதோறும் விலை அதிகரித்து கொண்டே போனது. இந்த மருந்துகளை டெண்டர் மூலம் அரசு வாங்கியதால் அரசின் மொத்த மருத்துவ பட்ஜெட்டில் மயக்க மருந்து ஒரு கணிசமான சதவிகிதமாக இருந்தது.
படம்-நன்றி-இணையம் |
எனவே மயக்க மருந்துக்கு ஆகும் செலவைக் குறைக்க முடியுமானால், ஆனால் அறுவை சிகிச்சைக்கான மொத்த செலவு தானாகவே குறைந்துவிடும் என்பது ராவின் தொடக்கநிலை கணிப்பு. இதற்கு இரண்டு வழிகள் இருந்தது.(1) விலை குறைவான மயக்க மருந்து வாங்குவது. ( ஆனால் இது சாத்தியமில்லை. ஏனென்றால் டாலர் மதிப்புக்கு ஏற்ப மருந்தின் விலையும் அதிகரித்துக்கொண்டே போனது). (2) அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் மயக்க மருந்தின் அளவை குறைப்பது. (இதைத்தான் ராம் தன்னுடைய முக்கிய ஆராய்ச்சியாக எடுத்துக்கொண்டார்).
பரீட்சார்த்தமாக ஏழெட்டு ஆஸ்பத்திரிகளில் தனித்தனியாக வெவ்வேறு டாக்டர்களைக் கொண்டு வெவ்வேறு விதமான அறுவை சிகிச்சைகளைச் செய்வித்து அதன்மூலம் தன்னுடைய முடிவை நிரூபித்துக் காட்டினார் டாக்டரும் ஆராய்ச்சியாளருமான ராவ்.
அதாவது, அரசாங்க ஆஸ்பத்திரிகளில், நூறு ரூபாய் மயக்க மருந்து போதும் என்ற நிலையில், தேவையில்லாமல் அதைப் போல் மூன்று மடங்கு மயக்க மருந்து செலவழிக்கப்பட்டு வந்திருக்கிறது!
இந்த ஆராய்ச்சி முடிவு ராவின் மேலதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்ட போது அவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். சில ஆழமான கேள்விகள் அவர்கள் முன்னால் எழும்பி நின்றன:
நூறு ரூபாய்க்கு பதில் 300 ரூபாய் அளவுக்கு மயக்கமருந்து செலவழித்ததற்குக் காரணம் அந்த டாக்டரின் கவனக் குறைவா அல்லது அதுதான் வழக்கமான நடைமுறையா?
இந்த அதிகப்படியான மயக்க மருந்து, நோயாளிகளுக்கு மரணத்தை உண்டாக்கியதா?
இறந்துபோனவர்களின் மருத்துவ அறிக்கைகளை வைத்து ஆராய்ந்ததில் இரண்டாவது கேள்விக்கு உடனே பதில் கிடைத்துவிட்டது. அதாவது அதிகப்படியான மயக்க மருந்தால் மரணம் ஊக்குவிக்கபடவில்லை. இது அதிகாரிகளுக்கு ஓரளவு நிம்மதியை கொடுத்தது.
முதலாவது கேள்விக்கு நடத்தப்பட்ட ஆய்விலும் ஆச்சரியமான விவரங்கள் வெளிவரவில்லை. கடந்த மூன்று ஆண்டுகளில் எல்லா அறுவை சிகிச்சையிலும் இதேபோல் அதாவது மூன்று மடங்கு அளவிலான- மயக்க மருந்து தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதே நடைமுறை தான் இப்போதும் பின்பற்றப்படுகிறது. இது எல்லா டாக்டர்களுக்கும் நிம்மதியைக் கொடுத்தது.
அப்படியானால் ராவின் ஆய்வு பொய் சொல்கிறதா?
ஒரு நாள் மாலை ராவின் மனைவி கிருஷ்ணவேணி ஷாப்பிங் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது அவரது கார் மீது வேகமாக வந்த ஒரு மோட்டார் பைக் மோதியது. ஆனால் பைக் ஓட்டி வந்தவன் சுதாரித்துக்கொண்டு விரைந்து போய் மறைந்து விட்டான். கிருஷ்ணவேணிக்கு ஏற்பட்டது வெறும் சிராய்ப்பு தான் என்பதால் அந்த விஷயத்தை அவளோ ராவோ பெரிதுபடுத்தவில்லை.
சில நாள் கழித்து ராவுக்கு வந்த ஒரு மர்ம போன் கால் விஷயத்தின் தீவிரத்தை உறுதிப்படுத்தியது.
“மிஸ்டர் ராவ்! உங்கள் ஆராய்ச்சியின் முடிவுகளை நீங்கள் வெளியிட வேண்டாம். எடுத்துக் கொண்ட கொள்கை முடிவு (HYPOTHESIS) நிரூபிக்கப்படவில்லை என்பதாக உங்கள் ஆராய்ச்சியின் இறுதியில் கூற வேண்டும். அதற்கு ஏற்ப மாற்றி எழுதுங்கள். இல்லையேல் விளைவுகள் விபரீதமாக இருக்கும். உங்கள் மனைவியின் கார் மீது பைக் மோதியது நான்தான்!” என்று எச்சரித்துவிட்டு போனை வெட்டி விட்டார் அந்த மர்மநபர்.
அதிர்ச்சி அடைந்தார் ராவ். ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவோ தலைப்புகளில் ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன. ஆராய்ச்சியின் முடிவுகள் ஆராய்ச்சியாளரின் திறமையை எந்தவகையிலும் பாதிப்பதில்லை. எனவே முடிவை மாற்றி எழுத வேண்டி இருந்தாலும் ராவுக்கு அதனால் எந்த நஷ்டமும் இல்லை. ஆனால் இந்த மர்ம நபர் யார்? ஏன் மிரட்டுகிறார்?
பாவம் ராவுக்கு மருத்துவ ஆராய்ச்சி தெரிந்த அளவு வெளி உலகம் தெரியவில்லை. உடனே தன்னுடைய மேலதிகாரியிடம் சென்றார். தான் மிரட்டப்படுவதைத் தெரிவித்தார்.
அவர் ஒரு ஐஏஎஸ் அதிகாரி. மருத்துவர் அல்ல. ராவின் வெகுளித்தனத்தை அவர் அறிவார். ஆனால் அரசாங்க நடைமுறைகள், டெண்டர் நியதிகள், அமைச்சர்களின் செல்வாக்கு போன்ற பல விஷயங்கள் இந்த ஆராய்ச்சியால் பாதிக்கப்படக்கூடும் என்பது ராவுக்குத் தெரியாதே! ஆகவே, ராவை அழைத்துத் தனிமையில் பேசினார் அந்த அதிகாரி.
“இப்படிப்பட்ட மர்ம போன்கால்கள் ஒவ்வொரு டெண்டர் சமயத்திலும் வரும். அதற்காக நாங்கள் அஞ்சமாட்டோம். சில சமயம் வளைந்துகொடுப்போம். முடியாதபோது, ஆமாம் போட்டுவிட்டு, எதிர்க்கட்சிக்காரர்களிடம் இரகசியமாகத் தெரிவித்துவிடுவோம். மற்றதை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்” என்று சிரித்தார். ராவுக்கு அதிர்ச்சியாயிருந்தது. சமுதாயத்திற்கு நன்மை செய்வதுதானே அரசின் நோக்கமாக இருக்கவேண்டும்! இங்கு நிலைமை வேறுவிதமாக இருக்கிறதே!
“நீங்கள் கவலைப்பட வேண்டாம். உங்கள் அறிக்கையை ஓரளவுக்கு மாற்றிவிட்டால் போதும். அந்தப் பொறுப்பை ஓர் ஆய்வுக்குழுவிற்கு நான் அளித்துவிடுகிறேன். அவர்கள் கொடுப்பதே இறுதி அறிக்கையாக இருக்கும். அதனால் நீங்கள் பயப்படாமல் இருங்கள்” என்றார் அதிகாரி.
ராவுக்கு சம்மதமில்லை. “சார், எனது ஆராய்ச்சி முடிவுகளை ஏற்றுக்கொண்டு இனிமேலாவது பின்பற்றினால் அரசாங்கத்துக்குப் பணம் மிச்சப்படுமல்லவா? வேண்டுமானால் பழைய கேஸ்களைக் கிளறாமல் விட்டுவிடலாமே” என்று கெஞ்சினார் ராவ். தான் பெறப்போகும் முதல் குழந்தையைக் கருக்கலைப்பு செய்யுமாறு கட்டாயப்படுத்தப்படும் இளம் தாயின் மனநிலையில் இருந்தார் அவர்.
அதிகாரியோ தன் முடிவில் தளர்வதாயில்லை. “உங்கள் உயிர் முக்கியம், ராவ்! இந்த மருத்துவ லாபியின் வலிமை உங்களுக்குத் தெரியாது. நான் அனுபவஸ்தன். சொல்கிறேன். என் வார்த்தைக்கு மதிப்புக்கு கொடுங்கள். இது போனால் இன்னொரு ஆராய்ச்சி வரும். உங்களுக்குத் புகழ் கிடைக்கும். நீங்கள் இளைஞர் தானே. வருந்தாதீர்கள்” என்று கிளம்பினார் அவர்.
கிருஷ்ணவேணியும் அவரும் விவாதித்தார்கள். வக்கீல் தாத்தாவிடம் போய் ஆலோசனை கேட்கலாம் என்று எல்லா விவரங்களுடனும் போனார்கள். அப்போது நாயுடுவும் இருந்தாராம்.
தாத்தாவுக்கு விஷயம் அத்துப்படியாயிற்று. மூன்று மடங்கு மயக்கமருந்து செலவானதாகக் கணக்கு காட்டப்பட்டு இருந்தாலும், உண்மையில் தேவையான குறைந்த அளவுதான் அறுவை சிகிச்சையின்போது செலவழிக்கப்பட்டிருக்கும் என்றும், இல்லையென்றால் பெரிய எண்ணிக்கையில் நோயாளிகள் மரணமடைந்திருக்கலாம் என்றும் தாத்தா கருதினார். பல வருடங்களாக இது நடைமுறையாக இருந்ததால் இது அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மென்ட் மற்றும் சப்ளை டிபார்ட்மெண்ட்கள் சேர்ந்து உயர்மட்ட அதிகாரிகளுடன் கலந்து செய்யப்பட்ட ஊழலாக இருக்கும் என்றும் கூறினார். தோராயமாகக் கணக்கிட்டதில் அரசுக்கு ஆண்டுதோறும் இப்படி ஏற்பட்ட நஷ்டம் 500 கோடியாவது இருக்கும் என்றார் தாத்தா.
எப்படிப்பட்ட ஊழலை இந்த ஆராய்ச்சி வெளிக்கொண்டு வந்திருக்கிறது என்று புரிந்துவிட்டது, ராவுக்கு.
பேத்தியின் கணவனை இனிமேலும் இந்த நிறுவனத்தில் வேலை பார்க்கச் சொல்வது ஆபத்து என்று புரிந்தது வக்கீலுக்கு. ஆகவே அவர் சொன்னார்: “உன்னுடைய ஆராய்ச்சியின் முடிவு இன்னும் சற்று தீவிரமான ஆய்வுக்கு உட்படுத்தப்படவேண்டும் என்றும், இதை வேறொரு பல்கலைக் கழகத்துடன் சேர்ந்து செய்தால் பயனுடையதாக இருக்கும் என்றும் திருத்தி எழுதிவிட்டு, உன்னுடைய ராஜினாமாவை சமர்ப்பித்துவிடு. இந்த ஊழல் பிசாசுகளிடமிருந்து வேறு வகையில் நீ தப்பிக்க முடியாது” என்று நயமாகக் கூறினார். கிருஷ்ணவேணியும், “தாத்தா சொல்வதைக் கேளுங்கள்” என்று அறிவுரை சொன்னாள்.
மறுநாள் தன் ஆய்வகத்திற்குச் சென்ற ராவ் அதிர்ச்சியடைந்தார். அவரது கேபின் இன்னொருவருக்கு வழங்கப்பட்டிருந்தது. அவரை இன்னொரு கட்டிடத்தில் சென்று இயங்குமாறு ஒரு கடிதம் தரப்பட்டது. அது இன்னும் முழுமையாகக் கட்டியிராத தளம். மின்சாரம் இன்னும் கொடுக்கப்படவில்லை.
தன்னை அறியாமல் ஒரு பீதி அவரை ஆட்கொண்டிருக்கவேண்டும். அப்படியே மயங்கி விழுந்தார் ராவ்.
அதன் பிறகு நடந்ததைச் சுருக்கமாகச் சொன்னார் நாயுடு: அதே மருத்துவமனையில் அவர் அகநோயாளியாக அனுமதிக்கப்பட்டு, சுமார் ஒரு மாதகாலத்திற்குப் பிறகு மரணமடைந்துவிட்டாராம். பாவம், வக்கீல் தாத்தாவின் பேத்தி மிகவும் இளம் வயதில் விதவையானார். வக்கீல் தாத்தா விடவில்லை. தன் ஐம்பது வருட கிரிமினல் வழக்கறிஞர் அனுபவத்தை வைத்து, விடாமல் போராடி, ராவின் மரணம் இயற்கை மரணம் அல்ல என்று நிரூபித்தாராம். அதற்காக ஐந்து கோடி ரூபாய் இழப்பீடு பெற்றுப் பேத்திக்கு கொடுத்தாராம்!
கணவனை இழந்தாலும் அவன் நினைவாகவே அந்தப்பெண் இன்னும் மறுமணம் செய்யாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறாளாம்!
***
என் அறை நண்பர்கள் இருவரும் வந்துவிட்டனர். நாயுடு அவர்களுக்கும் வணக்கம் சொல்லிவிட்டு, “ரொம்ப நன்றி சார்! அதிக நேரம் எடுத்துக்கொண்டு விட்டேனா?” என்றபடியே கிளம்பினார்.
அதிக நேரம் தான், ஆனால் முக்கிய விஷயங்களைச் சுருக்கியா சொல்ல முடியும்?
-இராய செல்லப்பா நியூ ஜெர்சியில் இருந்து.
தாஜ்மஹால் ஹோட்டலும் ஓர் உடுப்பி ஓட்டல் தான் என்று குறிப்பிட்டு இருக்கிறீர்கள். இதுபோன்ற பெயரை Vegetarian Hotel க்கு வைக்க மாட்டார்களே....?அதுவும் உடுப்பி ஓட்டலுக்கு..??
பதிலளிநீக்குதாங்கள் பெங்களூர்-மங்களூர் -ஹைதராபாத் அதிகம் போனதில்லை போலும். தாஜ்மகால் என்பது சுத்தமான சைவ ஓட்டல். ஒருமுறை அனுபவித்துப் பாருங்கள். மனைவியும் கூட இருந்தால் இன்னும் சுகம்.
நீக்குமருந்து மாஃபியா என்று சொல்லலாமா? அது இன்னமும் நிறைய இருப்பது கண்கூடு.
பதிலளிநீக்குஅதே, அதே! சில சமயம் சரியான சொல் கிடைப்பதில்லை. நீங்கள் இளைஞர், ஜமாய்க்கிறீர்கள்!
நீக்குஉங்கள் எழுத்து அருமை. நிறைய அனுபவத்திலிருந்து எழுதுவதால் ரசனையாகவும் இருக்கிறது. இப்போல்லாம் தாமதமாக வெளியாகிறது. ஓரிரு நாட்கள் விட்டுப்போனது போலும் தோன்றுகிறது
பதிலளிநீக்குபயணத்தில் இருந்ததால் ஒருநாள் விட்டுப் போயிற்று. ஒரே நாளில் இரண்டு ஜூம் மீட்டிங்குகள் வேறு. அதனால் ஒருநாள் தாமதம். இனி அப்படி நேராது. சரியா?
நீக்குதிரைப்படம் எடுக்கலாம் போல...! ஆனால் வேறு மாதிரி படங்களும் உள்ளன...
பதிலளிநீக்குமருத்துவரை கொன்று விட்டு கொள்ளை தொடர்கிறது அப்படித்தானே?
பதிலளிநீக்குசுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஊழல் இது, அப்படியானால் ஐம்பது ஆண்டுகளில் எவ்வளவு வளர்ந்திருக்கும்... யூகிக்க முடியவில்லை... இதே ஐம்பது ஆண்டுகளுக்குமுன் நீதியும் இருந்திருக்கும் ஆனால் இந்த ஐம்பது ஆண்டுகளில் நீதி வளரவில்லையா? அல்லது மாறாகத் தேய்ந்துபோனதா? என்பதையும் யூகிக்க முடியவில்லை...
பதிலளிநீக்குஊட்டச்சத்து வழங்கப்படும் குழந்தை தெம்பாக வளரும், ஊட்டச்சத்து மறுக்கப்பட்ட குழந்தை நோஞ்சானாக மாறும். உலகில், ஊழலுக்கு ஊட்டச்சத்து வழங்கப்பட்டதும், நீதிக்கு ஊட்டச்சத்து மறுக்கப்பட்டதும் ஏனோ?
...மீ.மணிகண்டன்
அரசுத்துறையில் ஊழல் நடப்பது உலகளாவிய வழக்கம்தானே! இன்றும் பல துறைகளில் அப்படி நடப்பதாகவே ஊடகங்களில் வருகிறது.
நீக்குதனியார் மருத்துவமனைகளில் நடப்பது நிறைய. அதிலும் மருத்துவர்களுக்கு ஊக்க போனஸ், வெளிநாடு சுற்றுலா என்றெல்லாம் நிறைய ஆசைகாட்டி, அறநெறியிலிருந்து பிறழ்ந்துதான் மருத்துவம் செய்கிறார்கள். சில சதவிகித நல்ல மருத்துவர்கள் இருக்கிறார்கள். ப்ரைவேட் ப்ராக்டிஸ் செய்யும் அவர்களிடம் சென்றால் நாம் தப்பிக்கலாம்.
நீக்குஅரும ஸார்!
பதிலளிநீக்குபடி த் தவுடன் நெஞ்சம் பதைக்கிறது . ராவ் உயிர் தப்பி வேறு எங்காவது போய் தன் ஆராய்ச்சியை தொடர்ந்திருக்கக் கூடாதா என
பதிலளிநீக்குமனம் ஏங்குகிறது . நினைப்பதெல்லாம் நடக்கிறதா என்ன?
பதிலளிநீக்குமனித உயிரை வைத்து எப்படியெல்லாம் விளையாடுகிறார்கள்
பதிலளிநீக்குஅதிக நேரம் எடுத்துக்கொண்டு விட்டேனா?” என்றபடியே கிளம்பினார்.
பதிலளிநீக்குஅதிக நேரம் தான், ஆனால் முக்கிய விஷயங்களைச் சுருக்கியா சொல்ல முடியும்?
ஆகா . . மாபியா சரியான சொல்
அருமை மனது வலிக்கிறது.