நியூஜெர்சியில் முருகனுக்குப் புதிய ஆலயம்
அமெரிக்காவில் 69 ஆவது நாள் (19-6-2022)
(விட்டுப்போன கட்டுரைகள்)
சிங்கப்பூரிலிருந்து வாரந்தோறும் கம்பராமாயண வகுப்புகள் நடத்தும் திரு ஏ கே வரதராஜன் அவர்கள் தனது நூறாவது நிகழ்வின்போது (02-06-2022 வியாழன்), தான் பேசாமல் இருந்துவிட்டார். காரணம், அவரது மதிப்பிற்குரிய பேராசிரியர் சொ.சொ.மீ.சுந்தரம் அவர்கள் பேச முன்வந்ததே. “கம்பராமாயணத்தில் எனக்குப் பிடித்த தம்பி” என்ற தலைப்பில் அவர் பேசியது யாரைப் பற்றித் தெரியுமா?
பேராசிரியர் சொ.சொ.மீ.சுந்தரம் அவர்கள் மதுரை சௌராஷ்டிரக் கல்லூரியில் வணிகவியல் பேராசிரியராக 41 ஆண்டுகள் பணியாற்றியவர். காரைக்குடி கம்பன் கழக அறிஞர்கள் ஊக்குவிப்பால் தமிழ் பயின்று சொற்பொழிவாற்றலும் கவிதை யாற்றலும் கைவரப்பெற்றவர். 1981இல் நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டில் 408 கவிஞர்கள் கலந்துகொண்ட “பொற்கிழிக் கவிதை போட்டி”யில் முதல் பரிசு பெற்றவர். (பொற்கிழியில் இருந்தது எத்தனை பொன் என்று அவர் கூறவில்லை!)
பேராசிரியர் தன் சொற்பொழிவின்போது ‘இராவணன்’ என்றால் ‘அதிகம் அழுபவன்’ என்று ஒரு பொருள் உண்டு என்றார்.
அதேபோல்,”வென்று இவண் வருவன் என்று உரைக்கிலேன் விதி// நின்றது, பிடர் பிடித்து உந்த நின்றது” என்று தன் செஞ்சோற்றுக் கடன் கழிக்கப் போர்முனைக்குச் செல்லும் கும்பகர்ணனையும் அவர் உருக்கமாகப் படம்பிடித்துக் காட்டினார்.
அத்துடன், திரு ஏகே வரதராஜன் அவர்களை விரைவில் கும்பகர்ணனைப் பற்றி ஒரு நூல் எழுதுமாறும் கட்டளையிட்டார். அதற்குத் தலைப்பையும் அவரே தந்தார்: "ஆசை அண்ணன், அன்புத் தம்பி" என்று. (விபீஷணனுக்கு அவன் ஆசை அண்ணன்; இராவணனுக்கு அவன் அன்புத் தம்பி).
இலந்தையாரின் அறிமுகவுரை |
அன்றைய கூட்டத்தின் முடிவில் பேராசிரியரும் திரு
ஏகேவி அவர்களும் நியூஜெர்சி வரப்போவதாகச் சொன்னார்கள். பிரின்ஸ்டன் நகரில்
புதிதாகத் தொடங்கவுள்ள தெண்டாயுதபாணி திருக்கோயிலில் "தமிழ் கடவுள் முருகன்" என்ற தலைப்பில் பேசவிருப்பதாகவும்
தெரிவித்தார்கள். அவர்களை நேரில் சந்திப்பதற்காக ஆவலோடு காத்திருந்தேன்.
இலந்தை இராமசாமி, சொ.சொ.மீ.சுந்தரம், நான் |
அந்தக் குறை தங்களால் தீரவேண்டும் என்று, சைவத்திற்கும் தமிழுக்கும் தொண்டுசெய்யவே தோன்றிய குலமாகக் கருதப்படும் நகரத்தார் குலத்து இளைஞர்களும் பெரியவர்களும் அவர்கள் வீட்டுப் பெண்டிரும் பிரின்ஸ்டன் நகரில் ஓர் இடம் வாங்கி ஆலயம் அமைப்பதற்கான பணியில் இறங்கினார்கள். இடையில் கொரோனா பேரிடர் குறுக்கிட்டதால் பல தடைகள் எழுந்தன. என்றாலும் ஆலயத்தை எப்படியும் ஒரு நல்ல நாளில் தொடங்கிவிடுவதென்று இறைவன் கொடுத்த ஆணையால் 2019 பிப்ரவரி 11 ஆம் நாள் அதே நகரில் ஒரு வாடகைக் கட்டிடத்தில் தெண்டாயுதபாணியை எழுந்தருள வைத்தார்கள். (3490, US Highway 1 North, Suite 16, Princeton, NJ-08540 ) அந்த இடத்தில்தான் அதே தமிழ்க்கடவுளின் சந்நிதி முன்புதான் பேராசிரியரின் சொற்பொழிவு நடைபெற்றது. இரண்டுமணி நேரம் அற்புதமான தமிழருவி பொழிந்தது என்றால் மிகையாகாது.
சொ.சொ.மீ.சுந்தரம் ஐயா இயற்றிய பிள்ளைத்தமிழ் |
முருகன் எப்படித் தமிழ்க் கடவுள் ஆவான் என்பதற்கு ஐந்து காரணங்களை விளக்கினார்
அவர்.
நகைச்சுவையும்
அனுபவச்சுவையும் மதுரைக்காரர்களுக்கே உரிய நையாண்டியும் அவர் பேச்சில் தெறித்து
விழுந்தன.
ஏகேவி அவர்களும் நானும் துணைவியருடன் |
பெருமை மிக்க பேராசிரியரைத் தகுதியுள்ள ஒருவர் அல்லவா அறிமுகப்படுத்தவேண்டும்! அதிர்ஷ்டவசமாகக் கிடைத்தார் பழம்பெரும் மரபுக் கவிஞரும் எழுத்தாளருமான இலந்தை இராமசாமி அவர்கள்! முகநூலில் நன்கு அறிமுகமானவர். ‘சந்தவசந்தம்’ என்ற கூகுள் குழுவில் ஆளுமை செலுத்துபவர். எடிசனில் தன் மகன் வீட்டுக்கு வந்தவரை இறைவன் மடக்கிப்போட்டுவிட்டான் போலும். மனிதர் வெளுத்துவாங்கிவிட்டார். அவர் கைவசம் எப்போதும் ஒரு விநாயகர் பாடல் உண்டு. ‘யானை’ ‘யானை’ என்று இருபது முப்பது தடவை முடியும் சொற்றொடர்களால் பின்னப்பட்டது. எப்படிப்பட்ட அவையையும் கட்டிப்போட வல்லது. இங்கும் கட்டிப்போட்டது.
இலந்தை இராமசாமி அவர்களுடன் நான் |
ப்ரின்ஸ்டனில் தன்னை யார்
கண்டுபிடிக்கப்போகிறார்கள் என்ற அறியாமையில் இருந்த தில்லை கங்காநகர் கவிஞரை, அவருடைய இலச்சினையான வெண்தாடி எனக்கு காட்டிக்கொடுத்துவிட்டது! தான் எழுதிய ‘அறியவேண்டிய ஆன்மிகக்கதைகள்’ என்ற நூலை எனக்குக் கொடுத்தார். என்னிடம் கைவசம்
இருந்தது ‘அனிதா-யமுனா-மஞ்சரி’ என்ற நாவல்தான். கொடுத்தேன்.
திருமதி தென்றல் அவர்களுடன் |
அமெரிக்காவில் வாழும் நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்த பலரும் குடும்பத்துடன் வந்திருந்து பங்கேற்றது மட்டுமன்றி, வீட்டிலிருந்தே ஆளுக்கொரு பலகாரம் தயாரித்துவந்து, அனைவருக்கும் விருந்தாகப் பரிமாறினர். பத்துப் பன்னிரண்டு வகைப் பண்டங்கள். நமக்கோ ஒரே ஒரு வயிறு! விருந்தோம்பல் அன்றோ அந்தச் சமூகத்தின் இன்னொரு பண்பட்ட இலக்கணம்!
‘ஸ்ரீ தெண்டாயுதபாணி டெம்பிள் சொசைட்டி’ என்ற பதிவுபெற்ற நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் இருப்பவர்களைக் கீழே காணலாம். (sttsnj.org)
ஓர் இனிய செய்தி என்னவென்றால் இன்னும் நான்கைந்து
மாதங்களில் தமிழ்முருகன் தனக்குச் சொந்தமான குடிலில் அமர்ந்துவிடுவானாம்! கட்டிட
வேலைகள் மும்முரமாக நடக்கிறதாம். நிதி
மிகுந்தவர் பொற்குவை தாரீர்! முடியாதவர்கள் மாதம் 25 டாலர்
வீதம் சந்தா போலத்
தொடர்ந்து வழங்க
உறுதியளிக்கலாம் என்று குழுவினர் தெரிவித்தனர். அப்படி 120 பேர் சேர்ந்தாலே மாதச் செலவான 3000 டாலரைத் திரட்டி விடலாம் என்று கருகிறார்கள். நம்
சிறிய மனது எப்போதும் சிறியதாகத்தானே சிந்திக்கும்! ஏனென்றால் சிறுதுளி பெருவெள்ளம் அன்றோ! எல்லாம் வல்ல முருகன்
நினைத்தால் இதைப்போலப்
பலமடங்கு யாரோ ஒரு
வள்ளல் தந்துவிட மாட்டாரா!
அதற்கும் அவன்
அருளையே வேண்டுவோம்.
இரண்டு மாதங்களாக ஆலயங்களுக்குச் சென்றுவர முடியாத நேர நெருக்கடியில் என் மக்கள் இருந்ததால், பிரின்ஸ்டன் திருமுருகன் தெண்டாயுதபாணி ஆலயத்திற்குச் சென்றுவர முடிந்ததைப் பெரும் பேறாகவே கருதுகிறேன்.
இதற்குக் காரணமாயிருந்த திரு ஏகேவி அவர்களுக்கு
எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
சிங்கப்பூரில் டெப்போ சாலையில் அமைந்திருக்கும் அருள்மிகு ருத்திரகாளியம்மன் பெயரால் பிள்ளைத்தமிழ் பாடியிருக்கிறார் பேராசிரியரும் பொற்கிழிக்கவிஞருமான சொ.சொ.மீ.சுந்தரம் அவர்கள். வழுவழுப்பான தாளில் காலிக்கோ பைண்டிங்கில் அழகான 16 தேவியரின் வண்ணப்படங்களோடு மிகுந்த பொருட்செலவில் வெளியிடப்பட்ட இந்த நூலில் இலக்கண ஒழுங்கோ இலக்கியச் சுவையோ குறையாமல் இயற்றப்பட்ட 100 பாடல்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஓர் அற்புதமான உலகுக்கே நம்மை அழைத்துச் செல்பவை!
உதாரணத்துக்கு ஒரு பாடல்:
மாயையாம் மணல்கொண்டு வையமாம் சிறுவீட்டை
வடித்தவள் நீயல்லவோ
மானிடப் பிறவியில் மனக்குரங்காடவே
வைத்தவள் நீயல்லவோ
தாயாக வந்தருளிச் சிவனுக்கும் ஒரு வடிவம்
தந்தவள் நீயல்லவோ
தமிழுக் கிரங்கியே கடவூரில் அன்றுவரும்
சந்திரன் நீயல்லவோ
காயான என் மனம் கல்லாகி நிற்குதே
கனிவிக்க வேண்டுமம்மா!
கால்பிடித்தேன் அன்று பால்கொடுத் தாண்டவள்
கருணையோ டிங்கு வாராய்
சேயாகி வந்தவன் மழலைமொழி கேட்கிறோம்
செங்கீரை ஆடியருளே!
சிங்கப்பூர் வாழவரு மங்கை ருத் திரகாளி
செங்கீரை ஆடியருளே! (12)
- இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.
நல்ல பதிவு. நகரத்தாரின் சைவ சமயப் பற்று, திருப்பணிகள் அவர்தம் பெருமையைச் சொல்லவல்லவை.
பதிலளிநீக்குஅழைப்பிதழின் பொற்கிளி... நிஜமாகவே பொன் கிளியைத் தந்தார்களா என நினைக்கவைக்கிறது
ஓம் முருகா. முருகனுக்கு அரோகரா.!
பதிலளிநீக்குபேராசிரியர் சொ.சொ.மீ.சுந்தரம் அவர்களின் " சித்தி தரும் சித்தர்கள் " என்ற நிகழ்ச்சியை மக்கள் TV யில் வாரம்தோறும் சனிக்கிழமை அன்று காலை மற்றும் ஞாயிற்றுக்கிழமை அன்று காலை தோறும் தவறாமல் கேட்பேன்.மெய்சிலிர்க்க வைக்கும்.
பதிலளிநீக்குஆம், நானும் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன்.
நீக்குஅருமையான கட்டுரை!🙏
பதிலளிநீக்குதிரு. இலந்தை இராமசாமி Chennai Telephones ல் Engineering Supervisor ஆக பணிபுரிந்த போது எனக்கு தெரியும். அவருக்கு என்னை தெரிந்து இருக்காது. காலப் போக்கில் மறந்து போயிருப்பார்.
பதிலளிநீக்கு"உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்" என்று இதைத்தான் வள்ளுவர் சொல்கிறாரோ?
நீக்குஎனக்கு அமெரிக்காவில் கலிபோர்னியா கான்கார்ட் முருகனுக்குப் பாடல் எழுதும் வாய்ப்புக் கொடுத்த வடிவேலனை வணங்கி மீண்டும் அமெரிக்காவில் இன்னுமோர் முருகன் கோயிலுக்குப் (நியூ ஜெர்சி, பிரின்ஸ்டன்) பாட்டெழுதத் தொடங்கியிருக்கிறேன் விபரங்கள் சேகரித்துக் கொண்டிருக்கிறேன். விரைவில் எமது தளத்தில் தண்டாயுதபாணி அருளால் அப்பாடல் வெளியாகும்.
பதிலளிநீக்குஇலந்தை ஐயாவின் சந்தவசந்தக் கவியரங்கங்களில் பங்குகொண்டு நீண்ட நாள்களாகிவிட்டது எப்படியும் அடுத்த கவியரங்கத்தில் பங்குகொள்ளவேண்டும்.
பல அருந்தகவல்கள், ஏதோ எனக்கு மிகவும் நெருக்கமான தகவல்கள் போல இருக்கிறது இக்கட்டுரை. நன்றி!
மிக்க நன்றி இளம் கவிஞரே! தமிழ் நம்மையெல்லாம் ஒன்றிணைக்கிறது. தமிழ் கடவுள் முருகனுக்கு உங்களாலும் ஓர் தனிச்சிறப்பான பாடல்திரட்டு வெளியாகட்டும் என்று வாழ்த்துகிறேன்.
நீக்குநன்றி!
நீக்குசொ சொ மீ அவர்களின் பேச்சை 80 களில் மதுரையில் கேட்டிருக்கிறேன். என் அப்பா தமிழ் எழுத்தாளர் சங்க செயலாளராகவோ, பொருளாளராகவோ இருந்தார் அப்போது. குழுவில் அன்பு வேதாச்சலம், மா வரதராஜன் போன்றோர் இருந்தார்கள்.
பதிலளிநீக்குமுத்தமிழ் அறிஞர்கள் மூவரை சந்தித்த தாங்கள் பாக்கியம் பெற்றவர்.
பதிலளிநீக்குநாளைய பதிவு: டீ பாபுவைப் பற்றியதாக இருக்கலாம் என்று சொன்னீர்களே?
பதிலளிநீக்குஎன்ன ஆச்சு ?
நிகழ்வு அருமை ஐயா...
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்குநிகழ்வும் அருமை. பல அறிவார்ந்தவர்களைப் பற்றி உங்களின் மூலம் அறியவும் முடிகிறது.
பதிலளிநீக்குபழைய பதிவுகளை நிதானமாக வாசிக்கிறேன் சார்.
கீதா
தமிழ் நம்மை ஒன்றினைக்கிறது. தமிழ் கடவுள் முருகன் கருணயே கருணை. நீங்கள் வடித்த கட்டுரை, படைத்த பதிவு சிறப்பாக இருக்கிறது. பல மேன்மக்களை சந்தித்தது மட்டுமல்ல, அந்த நிகழ்வுகளை வார்த்தையில் வடித்து எங்களுக்கு விருந்து கொடுத்தமைக்கு பல கோடி நன்றி.
பதிலளிநீக்குபெரும்பாலும் நகரத்தார் செய்யும் தொண்டுக்கு தம்பட்டமிருக்காது . அவர்கள் பெருமை சொல்லி மாளாது.
பதிலளிநீக்குஅருமையான விரிவுரை. நன்றாக நடந்தேறிய ஒரு நிகழ்வினை மிக நன்றாக விளக்கி உள்ளீர்கள். தமிழ் நயம் உள்ள உங்களை போன்ற ஒருவரால் மட்டுமே இது சாத்தியம். கம்ப ராமாயண பாடல்களும் , பிள்ளைத்தமிழ் பாடலும் நல்ல bonus. வாழ்க நின் பணி.
பதிலளிநீக்குமிக்க நன்றி ஐயா!
நீக்கு