திங்கள், டிசம்பர் 16, 2013

“என் கணவர் பெரிய இலக்கியவாதி. அவரைப்பற்றி நான் எழுதக்கூடாதா?” (‘அபுசி-தொபசி’- 15)

(“அபுசி-தொபசி” என்ற இப்பகுதி வாரம் ஒருமுறை மட்டும் ஒவ்வொரு திங்கட்கிழமையும் இந்திய நேரம் காலை ஆறுமணிக்கு மேல் ஏழரை மணிக்குள்ளாகவோ அல்லது அதற்கும் முன்பாகவோ வெளியாகும்.)

அரசியல் 
கடைசியில் குரங்கு கையில் கொடுத்த பூமாலையாகிவிடுமோ, அரவிந்த கேஜ்ரிவாலிடம் கொடுத்த வெற்றி?
 
பா.ஜ.க. ஆட்சியமைக்க மறுத்துவிட்ட நிலையில், அடுத்த பெரிய கட்சியான ஆம் ஆத்மி கட்சியை கவர்னர் அழைக்கிறார்.  ஆனால் கேஜ்ரிவால் முதலில் மறுத்துவிட்டார். காங்கிரசோ, எப்பாடுபட்டாவது பா.ஜ.க. ஆட்சிக்கு வருவதைத் தடுத்து நிறுத்தியாகவேண்டும் என்ற ஒரே நோக்கோடு, தாங்கள் கேஜ்ரிவாலுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தரத் தயார் என்று அறிவித்துள்ளது. கெஞ்சினால் மிஞ்சுவது அரசியல்வாதிகளின் பண்பு. அதை இவ்வளவு விரைவில் கேஜ்ரிவால் கற்றுக்கொண்டிருப்பது ஆச்சரியமே! முதலில் தான் ஆட்சி அமைக்கப்போவதில்லை என்றார். இப்போதோ, ஒரு பெரிய பட்டியலைக் கொடுத்து, இதையெல்லாம் நிறைவேற்றினால் தான் உங்கள் ஆதரவை ஏற்றுக்கொண்டு ஆட்சி அமைப்பேன் என்று அடம் பிடிக்கிறார்.
 
அந்தப் பதினெட்டு நிபந்தனைகளையும் நிறைவேற்ற இன்னும் நூறு வருடங்களாவது பிடிக்கும் என்பது சுதந்திர இந்தியாவின்  கடந்த அறுபத்தாறு வருட சாதனைகளைக் கூர்ந்து கவனித்தால் புரியும்.  பாவம் காங்கிரஸ்! ஆம் ஆத்மி கட்சியின் வாசலில் நின்றுகொண்டு குழம்புகிறது- நாம் ஆதரவு கொடுக்க வந்தோமா, இல்லை கேட்க வந்தோமா என்று! டெக்கன் கிரானிக்கிள் (15-12-1013) பெங்களூர் பதிப்பில் வந்த கருத்துப்படம்.
 
புத்தகம்
வங்கி அதிகாரிகளில் சிறந்த எழுத்தாளர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களில் திரு சேது மாதவனும் ஒருவர். ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூரில் அவர் டிஜிஎம் ஆக இருந்தபோது (நான் பணியாற்றிக்கொண்டிருந்த) கார்ப்பொரேஷன் வங்கிக்கு ஜிஎம் ஆக டெபுடேஷனில் வந்தார். மூன்றாண்டுகள் இருந்தார் என்று நினைக்கிறேன். மலையாள இலக்கிய உலகில் இவரை ‘சேது’ என்கிற பிரபல நாவலாசிரியராக அறிவர். ‘அடையாளங்கள்’ என்ற மலையாள நாவலுக்காக 2007  இல் சாகித்ய அகாடெமி பரிசுபெற்றவர்.

இவரை எனது வங்கியின் தலைமை அலுவலகத்தில், ஒரு குளிரூட்டப்பட்ட தனியறையில்  நான் சந்திக்கவிருந்த வாரத்தில் இவரது சிறுகதையொன்று மலையாள மனோரமாவில் வந்திருந்தது. மூங்கிலாலான ஏணிகளுக்கு ஐந்தாம்படிக்கும் ஏழாம்படிக்கும் இடையில் ஆறாவதுபடி எப்போதும் இருப்பதில்லை யல்லவா, அது பற்றிய புனைகதை அது. அப்போதுதான் நான் மலையாளம் கற்றுக்கொண்டிருந்தேன். எனவே எளிமையாக எழுதப்பட்டிருந்த இக்கதையைப் படிப்பது சிரமமாயிருக்கவில்லை. கதையைப் படித்துவிட்டு அவருடன் விவாதித்தேன். தன் எழுத்தைப் படித்து ஆர்வத்துடன் விவாதிக்கும் வாசகனை எந்த எழுத்தாளருக்குத்தான் பிடிக்காது? அடுத்துப் பலமுறை அவருடன் அலுவலக நிகழ்வுகள்பற்றிப் பேச வாய்ப்பிருந்தும் இலக்கியம் பற்றிப் பேசும் வாய்ப்பு அதிகம் கிட்டவில்லை. (பிறகு அவர் தன் பணிக்காலம் முடிந்து ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூருக்கே சென்றுவிட்டார்.)
 
‘இனிய உதயம்’ மாத நாவலில் மொழிபெயர்ப்பாக வந்த  சேதுவின் ‘கையெழுத்து’, ‘ஒற்றையடிப்பாதைகள்’  என்ற இரண்டு கதைகளை ஒரு புத்தகமாக வெளியிட்டுள்ளது நக்கீரன்.(2009இல்). அதை அண்மையில் மறுவாசிப்பு செய்தேன்.
 


 கையெழுத்து’ ஒரு தொழிற்சங்கத் தலைவரைப் பற்றிய கதை. கம்பெனியின் முதலாளியைவிட அதில் பணிபுரிந்து தொழிற்சங்கத்தலைவனாகிய கே.ஆர்.கே அதிக ஈடுபாட்டோடு உழைத்தவர். கம்பெனியும் தன் சக தொழிலாளர்களும் தவிர வேறு சிந்தனையே இல்லாதவர். ஒரு கட்டத்தில் கம்பெனியின் பொருளாதாரம் சோர்ந்துபோகிறது. இவர்களின் தயாரிப்புகளுக்கு வாடிக்கையாளர்கள் குறையத் தொடங்குகிறார்கள். எனவே முதலாளிகள் தொழிலைக் கொஞ்சகாலத்துக்கு மூடிவிடக்கூடும் என்ற அச்சம் கே.ஆர்.கே.விற்கு உண்டாகிறது.  அதைச் செயல்படுத்தும் விதமாக முதலாளிகளின் துணையுடன் (முன்பு கே.ஆர்.கே. தலைமையில் துவங்கப்பட்ட)   சங்கத்தைப் பிளக்க முற்படுகிறார்கள். வயதாகி, தலைமைப் பதவியில் இருந்து விலகி நிற்கும் அவருக்கு இது பெருத்த வேதனையைக் கொடுக்கிறது. தற்போதைய தன் தோழர் ஒருவருடன் மனம் திறந்து பேசுகிறார்.

“உனக்குத் தெரியுமா எனக்கு இது ஒரு தொழில் அல்ல. இவ்வளவு காலப் பொதுத் தொண்டுக்குப் பிறகும், நான் இப்போதும் ஒரு வாடகைக் கட்டிடத்தில்தான் இருக்கிறேன். பலரின் விஷயங்களும் அப்படி இல்லையே! பலருக்கும் பல லாபங்கள் இருக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக இடையில் அவ்வப்போது சர்வதேச மாநாடுகளில் பிரதிநிதியாகக் கலந்துகொள்வது...ஜெனிவாவிலோ, வியன்னாவிலோ, டோக்கியோவிலோ அது நடக்கலாம். அத்துடன் நீண்ட ஒரு கிழக்கு ஐரோப்பிய பயணம். பிள்ளைகளுக்கு வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் நுழைய வாய்ப்பு உண்டாக்குதல்...குறைந்த பட்சம் ஒரு ஐந்தெட்டு முறைகளாவது உலகத்தைச் சுற்றிப்பார்க்காத ஏதாவதொரு பெரிய தொழிலாளர்களின் தலைவரை உன்னால் சுட்டிக் காட்ட முடியுமா? இந்த விஷயத்தில் எல்லா கட்சிகளும் ஒரே மாதிரிதான்  இருக்கின்றன. நான் பார்த்த மிகப்பெரிய வெளியூர் நகரம் எது என்று உனக்குத் தெரியுமா?  கல்கத்தா. அதுகூட கட்சியின் மாநாட்டிற்காகப் போனபோது நான் பார்த்ததுதான். அங்கிருந்து நான் வாங்கிக் கொண்டு வந்த பொருட்கள் – இரண்டு கதர் குர்தாக்கள், ஒரு ஜோடி செருப்பு ...பிறகு..என் தாய்க்கு ஒரு கம்பளிப் போர்வை”.

ஒரு வங்கியின் தலைமைப் பொறுப்பில் இருந்துகொண்டு தொழிற்சங்கவாதிகளை விமர்சிக்கும்படியான ஒரு எழுத்தை மேற்கொள்ளுவது அரிதான காரியம் அல்லவா? சேதுவுக்கு அது இயல்பாகவே கைவருகிறது.
 
‘ஒற்றையடிப்பாதைகள்’ என்பது சுமார் எண்பது பக்கமுள்ள கதை. வெகு நுட்பமான பாலியல் உணர்வுகளை நாசூக்காகக் கையாண்டிருக்கிறார் சேது. தி. ஜானகிராமன் தனது ‘அம்மா வந்தாள்’-இல் கையாண்டிருந்த எழுத்துத் தொழில்நுட்பத்தில் ஐம்பது சதம் இதில் தெரிகிறது. படித்துப் பார்க்கவேண்டிய கதை.

மொழிபெயர்ப்பாளர் சுரா நமது பாராட்டுக்குரியவர். (ஆனால் ஒரு பணிவான வேண்டுகோள்: அரசாங்கத் துறைகளில் புழங்கும் சில  சொற்றொடர்கள்  விளங்காதபோது அத்துறைகளில் பணிபுரிபவர்களிடம் சரியான அர்த்தத்தைக் கேட்டுத் தெரிந்துகொண்டு மொழிபெயர்ப்பது அவசியம்.)     

 நா.பார்த்தசாரதியின் 'பொன்விலங்கு'
இந்த வாரம் நான் மறுவாசிப்பு செய்த இன்னொரு காவியம், நா.பார்த்தசாரதியின் பொன்விலங்கு. ஒரு  காலத்தில் கல்கியில் தொடராக வந்தபோது கட்டம்கட்டி அருகில் ஒரு பொன்மொழியைப் போடுவார்களே, அதைத் தவறாமல் நோட்டுப்புத்தகத்தில் எழுதிவந்து (பள்ளியில்) அசெம்பிளியில் படிப்பதுண்டு. ஒவ்வொரு எழுத்தும் அட்சரலட்சம் பெரும் என்பார்களே அப்படிப்பட்ட எழுத்து.
 
அப்படியும் இப்படியுமா இரண்டு கோட்டை இழுத்து பொம்மை போடறவனுக்கு இவ்வளவு சம்பளமான்னு கேட்டாராம் பத்திரிக்கை முதலாளி. அதுதான் சமயமென்று பக்கத்திலிருந்து ஒருவன் ‘இத்தனை சம்பளம் போதாதுன்னு திமிர் பிடிச்ச ஆளாகவும் வேறு வந்து சேர்ந்திருக்கிறான்’ என்று சொன்னானாம். அதனால் கோபித்துக்கொண்டு வெளியேறிவிடுகிறான் ஓவியன்  குமரப்பன்.

“ஒரு தொழிலை நாம் செய்கிறபோது அந்தத் தொழிலைப் பற்றி முதலில் நமக்கு ஒரு சுயமரியாதை வேணும். இல்லாவிட்டால் அதை நாம் நாணயத்தோடு செய்யமுடியாது. அந்தச் சுயகௌரவத்தைகூடப் புரிந்து கொள்ளாத இடத்திலிருந்து குப்பை கொட்டுவதைவிட நடந்துகாட்டிவிடுவது மேல் என்று நடையைக் கட்டிவிட்டேன்...” என்கிறான் குமரப்பன்.

“நம்முடைய உணர்ச்சிகளின் நியாயத்தையும் மானத்தையும் புறக்கணித்துவிட்டு நம்மை அடக்கி ஓடுக்கி ஆளவிரும்புகிறவர்களுடைய உணர்ச்சிகளின் அநியாயத்துக்கும் அவமானத்துக்கும் பண்டமாகிறபோதெல்லாம் நாம் நிச்சயமாகத் தளைப்படுகிறோம் என்பதில் சந்தேகமே இல்லை. தளையிலிருந்து விடுபட்டு வந்துவிட்டதாகத்தான் உணர்கிறேன்...” என்று மேலும் விளக்குகிறான்.
 
எடுத்தால் முடிக்காமல் விட முடியாத நூல்களுள் ஒன்று, பொன்விலங்கு.

சினிமா & தொலைக்காட்சி
நான்கு வருடங்களுக்குப் பிறகு இந்த வாரம்தான்  மங்களூருக்குப் போகவேண்டிய தேவை ஏற்பட்டது. இந்த நாலு வருடங்களில் ஊர் நன்கு முன்னேறியிருந்தது – விலைவாசியில்! (ஆனால் கொட்டையுள்ள கருப்பு திராட்சை கிலோ முப்பதே ரூபாய்க்குக் கிடைத்தது.)

சனிக்கிழமை மாலையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை பகல் வரை  ஓட்டல் அறையில் தனியாக அமர்ந்து (படுத்துக்கொண்டு?) தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருக்க முடிந்தது. மலையாள ஒளிபரப்பான ‘கைரளி’ தொலைக்காட்சியில் ஓர் அழகிய முகம் தெரிந்தது. பத்மப்ரியா என்ற நடிகையின் பேட்டியாம். ‘பொக்கிஷம்’ என்ற தமிழ்ப் படத்தில்கூட  நடித்திருக்கிறாராம். தாய்மொழி மலையாளம். ஆனால் பிறந்தது பஞ்சாபில். அருமையான மலையாளத்தில் கிளிகொஞ்சும் வார்த்தைகள்.
 
நிறைய மலையாளப்படங்களில் நடித்திருந்தும் பத்மப்ரியாவுக்கு ஒரு பெரிய மனக்குறை இருக்கிறதாம். தன்னை ரொமான்ட்டிக் பாத்திரங்களில் நடிக்க வைப்பதில்லையாம். ரொமான்ட்டிக் படங்களில் நடிக்கக் கூப்பிடுவதில்லையாம். இப்படிப்பட்ட அழகான, அறிவுள்ள, இளமை ததும்பும் கதாநாயகியை இப்படிக் கொடுமைப்படுத்தாலாமா, மலையாள இயக்குனர்களே? 

 பாருங்கள், பத்மப்ரியாவின் சில முகபாவங்களை! சீக்கிரம் ஆவன செய்யுங்கள். (இல்லையேல் தமிழ்நாட்டில் ஆட்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதை மறக்கவேண்டாம்! இங்கு மலையாளப் பெண்குட்டிகளுக்கு ராஜபோகமான வரவேற்பு தரப்படுவதை யார் மறுக்க முடியும்?)
பத்திரிகை
மங்களூரில் இருந்தபோது மாறுதலுக்காக ஒரு கன்னட மாத இதழ் வாங்கினேன். 2013 டிசம்பர்  மாதத்திய ‘மயூரா’ என்ற இலக்கிய இதழ். தரத்தில் ‘கலைமகளு’க்கு ஒப்பிடலாம். 160 பக்கங்கள், விலை பன்னிரண்டே ரூபாய்!பிரபல மலையாள நாவலாசிரியரான வைக்கம் முகமது பஷீரின் வாழ்க்கை வரலாற்றை அவரது மனைவி ஒரு கதை மாதிரி எழுதியிருக்கிறார். பஷீருடைய ‘இவளே’ என்ற தலைப்பில், மலையாளத்தில். என்.எ.எம். இஸ்மாயில் என்பவரால் அந்நூலின் சில பகுதிகள் கன்னடத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, அதன் முதல் பகுதி இம்மாதம் வெளியாகியுள்ளது. ஜனரஞ்சகமான மொழிபெயர்ப்பு. கன்னடத்தில் படிக்கும்போதே சுவை நெஞ்சைத்தொட்டது. ஒரிஜினல் மலையாளத்தில் படித்தால் எப்படியிருக்குமோ? ('காலச்சுவடு'க்காரர்கள் தமிழில் கொண்டுவராமலா போவார்கள்?)  
பஷீரின் மனைவி எழுதுகிறார்: (கன்னடத்திலிருந்து தமிழ் மொழிபெயர்ப்பு என்னுடையது).
 
பெண்வாசனை என்றால் பஷீருக்கு மிகவும் பிடிக்கும். பெண்ணாகப் பிறந்த எல்லோர்மீதும்  அவர் அளவின்றிப் பிரியம்கொண்டிருந்தார். ஆனால் அதற்கு  வேறெந்த நோக்கமும்  இருக்கவில்லை. பெண்ணிடம்தான் நல்லகுணங்கள் அதிகம் உண்டு என்று அவர் ஏனோ கருதினார். ஒருதடவை நான் அவரிடம் சொன்னேன்: “நான் எதோ ஒன்று எழுதப்போகிறேன்”.
“என்னது? உனக்கு எழுத வருமா?”

அவர் அப்படிக் கேட்டதில் அர்த்தம் உண்டு. எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் எல்லாருக்குமே இலக்கியம் படைப்பது சாத்தியமாகிவிடுவதில்லை. இதுபற்றி அவரே பலமுறை கூறியிருக்கிறார்.
“என் கணவர் பெரிய இலக்கியவாதி. அவரைப்பற்றி நான் எழுதப்போகிறேன்.  ஏன், நான் எழுதக்கூடாதா?”
“இவளே” என்று சத்தமிட்டுச் சிரித்தபடி சொன்னார் பஷீர்: “நீ எழுதப்போவது இலக்கியமல்ல, அது ஒரு சுலைமானி! (‘சுலைமானி’ என்றால் பால் கலக்காத தேநீர்.) ஃபிளாஸ்க் நிறைய உன்னுடைய சுலைமானி இலக்கியத்தை நிரப்பிக்கொண்டுவந்து  தா! அவ்வப்பொழுது நான் குடித்து இளைப்பாறுகிறேன்”.
***
பஷீருடன் நாற்பது ஆண்டுகள் வாழ்ந்துவிட்டேன். இது சாதாரணமான வாழ்க்கையில்லை. மலையாளத்தின் மாபெரும் எழுத்தாளரின் வாழ்க்கைத்துணைவி நான் என்று உள்ளுக்குள் கர்வம்  கொண்டதும் உண்டு. ஆனால் இத்தகைய கர்வங்களுக்கு அவரது வாழ்க்கையில் வாய்ப்பே  இருக்கவில்லை. ‘நான், நம்மவர்கள்’ என்று அவர் ஒருபோதும் எண்ணியவரே அல்லர். புகழ்பெறவேண்டும் என்ற ஆசையில் அவர் எதுவும் செய்ததில்லை. யாரையும் அழைக்கவுமில்லை. ஆனால் அவர் செய்யும் எல்லாக் காரியங்களும் புகழ்பெறவே செய்தன. அவருடைய எழுத்துக்களை வாசித்த ஒவ்வொருவரும் அவ்வெழுத்தாளரைப் பேட்டி காணவேண்டுமென்று விரும்பினர். இவ்வாறு வாசகர்கள் கூட்டம் கூட்டமாகப் பேட்டி காணவருவது வேறெந்த எழுத்தாளருக்காவது நடந்திருக்கக்கூடுமா? வைலோலி கிராமத்தில் எப்பொழுது வேண்டுமானாலும் தங்கள் பிரியமான படைப்பாளியை வாசகர்கள் சந்திக்க முடிந்ததே! பஷீர் யாரையும் எப்போதும் காக்கவைத்தவர் இல்லை.
 
மங்குஸ்தான் மரநிழலில் அமர்ந்துகொண்டு தம்மைப் பார்க்கவந்து போவோரின் வயதையோ பின்னணியையோ கவனிக்காது  தன்பாட்டுக்குப் பேசிக்கொண்டிருப்பார் பஷீர். அவரோடு பேசிக் கொண்டிருந்தவற்றை யெல்லாம் தொகுத்திருந்தால் அதுவே ஒரு பெரிய புத்தகமாகியிருக்குமோ என்னவோ! அவர் என்னவெல்லாம் பேசிக்கொண்டிருப்பார் – கடவுள், மரம், மனிதர்கள், காதல், அரசியல், கலை, அறம், சின்னச்சின்ன ஆற்றாமைகள் என்றபடி உலகின் எல்லா விஷயங்களைப் பற்றியும் தன்னைச் சந்திக்க வந்தவர்களுடன்  பேசிக்கொண்டிருப்பார். அவர் அப்படி மங்குஸ்தான் மரத்தடியில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கையில்  அங்குதானே நடமாடிக்கொண்டிருப்பேன் நான்! அப்போதெல்லாம் என் மனதில் மூண்டெழுந்த கேள்வி ஒன்றே தான்: இவ்வுலகில்  இதற்கு முன் இப்படிப்பட்ட ஒருவர்  இருந்திருக்கக்கூடுமா? ஒரு மரத்தின் வேரில் அமர்ந்துகொண்டு, வந்தவர்களுக்கெல்லாம் ‘சுலைமானி’யை ஊற்றிக்கொடுத்தபடி, கதைகளை எழுதிக்கொண்டிருந்ததும், பல வருடங்களாக அதே மரத்தடியில் அமர்ந்து கதை சொல்லிக்கொண்டிருந்ததும் அந்த ஒருவரே! இடையிடையே என்னை அழைப்பார் “இவளே!’ என்று.
ஒரு பானை சோற்றுக்கு ஒருசோறு பதம். போதுமல்லவா?

சிரிப்பு
‘பஜனைக்கு பக்தர்கள் முக்கியம். அதைவிட சுண்டல் முக்கியம்’ என்ற ஒரு கருத்து பரவலாக பழங்காலத்தில் இருந்து வந்தது. ஆனால், தற்சமயம் பெரிய பெரிய மண்டபங்களில், ஹால்களில், அரங்குகளில், பஜனை நடப்பதால் யாரும் சுண்டலுக்கு முக்கியத்துவம் தருவதில்லை..
 
நமது முன்னோர் பழக்கவழக்கம் என்னவென்றால் எந்த ஒரு பகவத் ஆராதனை என்றாலும் முடிவில் பிரசாதம் என்று சிறிதளவாவது வழங்கவேண்டும். தற்காலத்தில் அவரவர் வசதிக்கும் ருசிக்கும் தக்கபடி பஜனை அரங்கத்தில் இருக்கும் கேண்டீனில் புகுந்து புறப்பட்டுக்கொள்கிறார்கள்.

பஜனைப் பாடகர்கள் பக்தி சிரத்தையாகப் பாடினாலும், கேட்டு ரசிக்கும் பக்தர்களுக்கு அவர்களது பக்தியைக் குறைப்பது போல தொண்டையில் வெண்பொங்கல் நெய்ருசியும் ஓம்காரத்துக்குப் பதில் மிளகுக்காரமுமே சஞ்சரித்துக் கொண்டிருக்கும்....

“சீதாப்பாட்டி-அப்புசாமி புகழ் பாக்கியம் ராமசாமியின் சிரிப்பும் சிந்தனையும்” என்ற நூலிலிருந்து. (பக்கம் 22) வானதி பதிப்பகம் வெளியீடு. நவம்பர் 2012.    88 பக்கம் ஐம்பது ரூபாய்.

© Y.Chellappa
Email: chellappay@yahoo.com

குறிப்பு : இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், கீழுள்ள 'தமிழ்மணம்' பட்டையில் இடதுபுறமுள்ள 'மேல்நோக்கிய' கட்டைவிரல் அடையாளத்தின் மீது ஒரு கிளிக் செய்யுங்கள்.நன்றி.

27 கருத்துகள்:

 1. ஒவ்வொரு வாரமும் தங்களுடைய இலக்கியம் கட்டுரை,கதை போன்ற அருமையான பதிவை எதிர்பார்க்கும் எனக்கு திங்கட்கிழமை மட்டுமே பதிவிடும் உங்களை வன்மையாக (அன்பாக)கண்டிக்கிறேன்./// இப்படிப்பட்ட அழகான, அறிவுள்ள, இளமை ததும்பும் கதாநாயகியை இப்படிக் கொடுமைப்படுத்தாலாமா,//அப்பப்ப இதுபோன்ற தங்களின் அக்கறையான பதிவுகளும் அருமை.

  பதிலளிநீக்கு
 2. உங்களின் வாசிப்பு, சினிமா & தொலைக்காட்சி உட்பட அனைத்தும் பல அறியாத தகவல்களை அறிந்து கொள்ள முடிகிறது ஐயா... நன்றி... தொடர வாழ்த்துக்கள்...

  தங்களின் கருத்துரைக்காக : தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் சிறப்புக் கட்டுரைப் போட்டி...

  விளக்கம் :

  http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Pongal-Special-Article-Contest.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு நன்றி. கட்டுரைப் போட்டி பற்றிய விளக்கம் கண்டேன். நன்றி.

   நீக்கு
 3. நாம் ஆதரவு கொடுக்க வந்தோமா, இல்லை கேட்க வந்தோமா என்று! டெக்கன் கிரானிக்கிள் (15-12-1013) பெங்களூர் பதிப்பில் வந்த கருத்துப்படம் இவ்வார முத்தாய்ப்பான பதிவு.

  பதிலளிநீக்கு
 4. உங்கள் அபுசி தொபசி யில் இந்த வாரம் என்ன இருக்கும் என்று எதிர்பார்க்க வைக்கும் அளவு அருமையாக எழுதுகின்றீர்கள். எழுத்தாளர்கள் சேது மாதவன், நாபா. முகம்மது பஷீர்..அருமையான பதிவு. பஷீரின் மதிலுகள் அருமையான கதை படமாக வந்ததை நீங்கள் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அருமையான ஒரு படம். மம்மூட்டி வேறு. கேட்கணுமா!! நா.பா.வின் குறிஞ்சி மலர் கூட மிக அருமையான நெடுங்கதை.
  கெஜ்ரிவாலின் அரசியலும் நம்பகரமாக இல்லையே! மற்ற அரசியல்வாதிகளுக்கும் இவருக்கும் அத்தனை வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லையே! பார்ப்போம்!!
  பத்மப்ப்ரியா சில நல்ல தமிழ் படங்கள் தந்திருக்கிறார். மிருகம் என்ற தமிழ் படத்தில் அவரது நடிப்பு மிக அருமையாக இருக்கும். ஆனால் தமிழ் திரை உலகம் அவரைக் கண்டு கொள்ளவில்லையா இல்லை அவர் தமிழ் திரையுலகைக் கண்டுகொள்ளவில்லையா என்று தெரியவில்லை! தமிழ் திரை ஒரு நல்ல நடிகையை இழந்தது என்று சொல்லலாம்.
  ரசித்தோம் உங்கள் எழுத்துக்களை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம், பத்மப்ரியா ஒரு நல்ல நடிகை. அவரைத் தமிழ்த்திரை பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

   நீக்கு
 5. வாரம்தோறும் திங்களன்று தங்கள் வரவை(‘அபுசி-தொபசி’-) எதிர் நோக்கும் அன்பன் யானே!

  பதிலளிநீக்கு
 6. கேஜ்ரிவால் பற்றி பேஸ்புக்கில் நிறையவே எழுதிவருகிறேன்.
  சேதுமாதவன் இப்போது நேஷனல் புக் டிரஸ்ட் சேர்மேன். அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு உண்டு. அபார எளிமை.
  ஒருசோறு ருசித்தது பானையை எதிர்பார்க்க வைத்துவிட்டது. விரைவில் தமிழிலும் வரட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவரைச் சந்திக்கும்போது நான் எழுதியதைத் தெரிவியுங்கள். அவரது மின்னஞ்சல் கிடைத்தால் நல்லது. நன்றி!

   நீக்கு
 7. ஒவ்வொரு வாரப் பதிவுக்காகவாவது நீங்கள் ஒரு புத்தகமாவது வாசிக்க வேண்டும். ஒரே கல்லில் இரண்டு மாங்காய். வாசிப்புக்கு வாசிப்பு பதிவுக்குப் பதிவு.! பத்மப் பிரியாதமிழ் படங்களில் ( சேரனுடன்.?) நடித்திருக்கிறாரே, உங்களுக்கு எத்தனை மொழி தெரியும்.? வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என் அன்பிற்குரிய மூத்த நண்பரே, எனக்கு மிகச்சில மொழிகள் தாம் தெரியும்: தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம். இப்போது சீரியசாக மலையாளம் கற்றுவருகிறேன். அடுத்த மாதம் முதல் வங்காளி கற்றுத்தர எனது வீட்டருகே குடியிருக்கும் இன்னொரு மூத்த நண்பர் சம்மதித்திருக்கிறார். தகழியையும் தாகூரையும் அவர்களின் மொழியிலேயே படித்துவிடவேண்டும் என்பது எனது short term goal - அதாவது ஆறு மாதம் முதல் ஒரு வருடத்திற்குள். தங்கள் ஆசிகளைக் கோருகிறேன். நன்றி

   நீக்கு
 8. 'இனிய உதயம்' மாத இதழில் வெளிவந்த திரு. சேது அவர்களின் 'கையெழுத்து'ம் 'ஒற்றையடிபாதைகள்'ம் திரு. நா. பார்த்தசாரதி அவர்களின் 'பொன்விலங்கு'ம் நான் படிக்க ஆவல் கொள்கிறேன்.

  1. இனிய உதயம் இதழில் நான் எழுதியதைப் பற்றிய எனது பதிவைப் படிக்க வேண்டுகிறேன். http://www.nizampakkam.blogspot.com/2013/01/j4.html

  2. நா. பா. அவர்கள் 'மணிவண்ணன்' என்ற பெயரில் பதில்கள் எழுதியபோது நான் அவரிடம் (கேள்வி) கேட்டு வாங்கிய பதில்கள் பற்றிய எனது பதிவு படிக்க வேண்டுகிறேன். http://www.nizampakkam.blogspot.com/2013/01/j5.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படித்துவிட்டேன் நண்பரே! "குஷ்பு அட்ரஸ் அனுப்பாட்டியும் பரவாயில்லை.
   உங்க ஃபோட்டோவை தயவு செய்து அனுப்பிடாதீங்க" என்ற மாணவனின் வேண்டுகோளை நிறைவேற்றியிருப்பீர்கள் என்று நம்பலாமா?

   நீக்கு
  2. ஆஹா நான் கொடுத்திருந்த இணைப்புகளைப படித்தமைக்கு நன்றி ஐயா!
   ஹா...ஹா...ஹா... தாங்களும் அந்த குஷ்பு பதிவைப் படித்துவிட்டீர்களா?

   ஆமாம் ஆமாம் ... அந்தப் பையனின் வேண்டுகோளை நிறைவேறினேன் தான். கருத்துரைக்கு நன்றி ஐயா!

   நீக்கு
 9. அறியாதன மிக அறிந்தேன்
  பகிர்வுக்கும் தொடரவும்
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 10. பல புதிய தகவல்கள் கொண்ட அருமையான பதிவு. எத்தனை மொழிகளை சிரத்தையோடு கற்று இருக்கிறீர்கள் என்பதை நினைக்கவே ஆச்சரியமாக இருக்கிறது.

  பொன்விலங்கு நாவலின் பொன்மொழிகளை எழுதி வைத்திருக்கும் நோட்டுப் புத்தகம் இப்போதும் என்னிடம் உள்ளது. பழைய நினைவுகளையும் கிளறி விட்டீர்கள். குறிஞ்சி மலர் கல்கியில் வெளிவந்து பல காலத்துக்க்குப் பின்னர் புத்தகமாகப் படித்திருக்கிறேன். பொன்விலங்கும், குறிஞ்சி மலரும் கவர்ந்தது போல் பாண்டிமாதேவி, மணிபல்லவம் போன்ற நாவல்கள் கவரவில்லை.

  ஆனால் ஒன்று மதுரை குறித்தும், பாண்டியர்கள் குறித்தும் எழுதுவதற்கு நா.பா.வுக்குப் பின்னர் வேறு யாரும் இல்லை. :)))) சோழர்களின் வரலாற்றை ஆராய்ந்து வந்த நாவல்களைப் போலப் பாண்டியர்களின் அதுவும் பிற்காலப் பாண்டியர்களைக் குறித்து ஆய்வு செய்து நாவல்கள் வரவில்லை. அரு.ராமநாதனின் வீரபாண்டியன் மனைவியைத் தவிர என்று சொல்லலாமோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் சொல்வது உண்மையே. சோழர் காலத்தைப் பற்றிய நூல்களே மிகுதி. மதுரை குறித்து சு.வெங்கடேசன் எழுதிய 'காவல்கோட்டம்' நாவல் படிக்கலாம்.

   நீக்கு
 11. முதல்முறையாக உங்கள் தளத்துக்கு வந்தேன். என் பதிவில் உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்ததும். :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாகத்தான் வந்திருக்கிறீர்கள். நன்றி!

   நீக்கு
 12. ஒரு பானை சோற்றுக்கு ஒருசோறு பதம். போதுமல்லவா?///

  தொகுப்புகள் அனைத்தும் ரசிக்கவைத்தன..!பாராட்டுக்கள்..!

  பதிலளிநீக்கு
 13. //=“சீதாப்பாட்டி-அப்புசாமி புகழ் பாக்கியம் ராமசாமியின் சிரிப்பும் சிந்தனையும்” என்ற நூலிலிருந்து. (பக்கம் 22) வானதி பதிப்பகம் வெளியீடு. நவம்பர் 2012. 88 பக்கம் ஐம்பது ரூபாய்.=//

  ஞாயிறு இணைப்பு 'தினகரன் வசந்தம்' இதழில் வந்த கட்டுரைகளின் தொகுப்புதானே ஐயா இந்த நூல்?

  பதிலளிநீக்கு