ஹைதராபாத்தில் ஒரு சீத்தாப்பழம்
(நான்கு தூண்கள் நகரம்-3)
அமெரிக்காவில் 53 ஆவது நாள்
ஹைதராபாத்தில் சென்று இறங்கியவுடன் என் மனைவியின் உறவினர் வீட்டில் சில நாள் தங்கியிருந்தேன். அவள் அப்போது கடலூரில் அரசுப்பணியில் இருந்ததால் நான் மட்டும்தான் ஹைதராபாதில் இருக்கவேண்டும் என்றும் முடிவானது. எனவே ஒரு பேச்சிலர் ரூம் இருந்தால் போதுமென்று தோன்றியது. ஒரே வாரத்தில் பிடித்துக் கொடுப்பதாக ஒரு ப்ரோக்கர் நூறு ரூபாய் அட்வான்ஸ் பெற்றுக்கொண்டார்.
அப்போதெல்லாம் ஹைதராபாதில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் பிரபலமாகவில்லை. தனி வீடுகளின் மாடி அறையில் அல்லது அவுட்-ஹவுசில் தான் பேச்சிலர் ரூம் கிடைக்கும். வங்கிக்கு அருகில் இருந்தால் நல்லது என்று ‘கோட்டி’ பகுதியிலேயே கவனம் செலுத்தினேன். ஐந்தாறு நாட்கள் ஆன போதிலும் சரியான ரூம் கிடைக்கவில்லை. அதற்குள் ஓர் ஆச்சரியமான விபரீதம் நிகழ்ந்தது.
அது ஒரு சனிக்கிழமை. அரை நாள்தான் வங்கி. மூன்று மணிக்குக் கதவைப் பூட்டிக்கொண்டு நான் கிளம்பிய போது என்னை விட சற்றே உயரமான, ஆனால் பருமனான, சிவப்பான ஒரு நண்பர் அவசரமாக என்னை நோக்கி ஓடிவந்தார்.
"சார், உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும். கதவைத் திறந்து மேலே போய்ப் பேசலாமா?" என்றார்.
முன்பின் தெரியாத ஒருவரோடு பேசுவதற்காகப் பூட்டிய வங்கியைத் திறப்பது சரியான காரியமாகத் தெரியாததால், “பரவாயில்லை, இங்கேயே பேசலாம். நீங்கள் யார்?” என்றேன்.
"என்னைப் பற்றி யாரும் உங்களிடம் கூறவில்லையா என் பெயர் ஜம்புநாதன். நான் ஹூப்ளி கிளைக்கு மாற்றல் கேட்டதால் தான் உங்களை இங்கே போட்டிருக்கிறார்கள்" என்றார் அவர். எனக்காகத் தியாகம் புரிந்த தோரணையில் அவர் பேசியதாகத் தோன்றியது.
ஆனால் மாற்றல் உத்தரவு கிடைப்பதற்கு ஒரு மாதம் முன்பே தன் திருமணத்தை முன்னிட்டு அவர் விடுமுறையில் இருந்ததால் அவர் கேட்டுக்கொண்டபடி 'இன் அப்சென்ஷியா' வாக அவர் ‘ரிலீவ்’ செய்யப்பட்டிருந்தாராம். எனக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக, என்னோடு பணியாற்றும் ஊழியர்களின் பெயர்களையெல்லாம் சொன்னார்.
"வாருங்கள், கோட்டி 'காமத்'தில் சாப்பிட்டபடியே பேசலாம்" என்று அவரை அழைத்துக் கொண்டு நடந்தேன். கோட்டி பஸ் நிலையத்தின் அருகில், ஒரு மாடியில் இருந்த ஹோட்டல் அது. ஐந்து நிமிடத்தில் அடைந்து விட்டோம்.
"நான் ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டு இருக்கிறேன். நீங்கள் தான் உதவி செய்ய வேண்டும். அதற்காகத்தான் அவசர அவசரமாக ஓடி வந்தேன்" என்றார் ஜம்புநாதன்.
இரண்டு சாப்பாடு ஆர்டர் செய்துவிட்டு அவரை உற்று நோக்கினேன்.
"நீங்கள் இந்த ஊருக்குப் புதிது அல்லவா, வீடு பார்த்து விட்டீர்களா?" என்றார் மிகுந்த ஆர்வத்தோடு.
"வீடு வேண்டாம், ஒரு ரூம் இருந்தாலே போதும், ஆனால் இன்னும் கிடைக்கவில்லை. இன்றோ நாளையோ எப்படியாவது முடிவு செய்தாக வேண்டும். உறவினர் வீட்டில் தங்கி இருக்கிறேன். அவர் நாளை வெளியூர் போகிறார். அதற்குள் இன்று மாலை போய் என்னுடைய பெட்டி படுக்கையை எடுத்துக்கொண்டு வெளியேற வேண்டும். ஒரு புரோக்கரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தபோது தான் நீங்கள் வந்தீர்கள்" என்றேன் கவலையுடன்.
அப்போது அவர் முகத்தில் தோன்றிய மலர்ச்சியைப் பார்க்க வேண்டுமே!
"எந்த புரோக்கரும் வேண்டாம். கவலையை விடுங்கள். உங்களுக்காக ஒரு வீடு நான் ஏற்கனவே பார்த்து வைத்திருக்கிறேன். சாப்பிட்டு விட்டு நேராக உங்கள் உறவினர் வீட்டுக்குப் போய் சாமான்களை எடுத்துக்கொண்டு அந்த வீட்டில் வைத்து விடலாம்" என்று கம்பீரமாகக் கூறினார் ஜம்புநாதன்.
இரண்டு தட்டுகளில் சாப்பாடு வந்தது. பரிமாற வந்த சர்வர் ஜம்புநாதனைப் பார்த்து, "சென்னாகித்தீரா ஸ்வாமீ?" என்று கன்னடத்தில் கேட்டார். "நீங்கள் மாற்றலாகிப் போன பிறகு இன்னும் வங்கிக்கு நான் போகவில்லை."
இன்னொரு கிளையில் பணியாற்றும் நண்பர் ஒருவரும் சாப்பிட வந்திருந்தார். ஜம்புநாதனைப் பார்த்து கண்ணைச் சிமிட்டிக் கொண்டே, "புதுமாப்பிள்ளை, ஜாலி லைஃப்! சரிதானே?" என்றார்.
எனவே ஜம்புநாதன் இந்த வங்கிக் கிளையின் ஊழியர்தான் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டானது. ஆனால் அவர் பார்த்திருக்கும் வீட்டின் முழுத் தகவல் தெரியாமல் பெட்டி படுக்கையுடன் போய் நிற்க முடியுமா என்று மனதிற்குள் புதிய கவலை தோன்றியது.
ஆட்டோவில் ஏறிக்கொண்டு "ஈஸ்ட் மாரட்பள்ளி" என்றேன். உறவினர் வீடு. ஜம்புநாதன் உற்சாகமாக மேல் விவரங்களைக் கூறத் தொடங்கினார்.
மூன்று வருடமாக மாற்றல் கேட்டும் கிடைக்காத நிலையில், திடீரென்று திருமணம் திகைந்து விடவே, சரி ஹைதராபாதிலேயே இருந்து விடலாம் என்ற எண்ணத்தில் வீடு பார்த்து அட்வான்ஸ் கொடுத்து விட்டாராம். அப்போதுதான் அவருக்கு மாற்றல் உத்தரவு வந்ததாம்.
"அந்த வீட்டை நீங்கள் எடுத்துக் கொண்டால் உங்களுக்கும் நன்மை, எனக்கும் கொடுத்த அட்வான்ஸ் திரும்பக் கிடைக்கும்" என்று மகிழ்ச்சியோடு கூறினார் ஜம்புநாதன்.
புது மனைவியோடு குடியிருப்பதற்கு ஏற்ற வீடு என்றால் நல்ல வீடாகக் தான் இருக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. "வாடகை 400 ரூபாய், மூன்று மாத அட்வான்ஸ் கொடுத்து இருக்கிறேன்" என்றார்.
அந்த நாளில் அந்த வாடகை மிகவும் அதிகம் என்றாலும் உடனடியாக வீடு கிடைக்கிறது என்ற வசதியை முன்னிட்டு என் மனம் ஏற்றுக்கொண்டது. எந்த வீடானால் என்ன, நான்கு சுவர்கள் தானே இருக்கப் போகிறது!
பெட்டி படுக்கையோடு நானும் அவரும் ஆட்டோவிலிருந்து இறங்கியபோது அந்த வீட்டின் பிரம்மாண்டம் எனக்கு அதிர்ச்சி அளித்தது. "சீத்தாப்பல் மண்டி" என்ற பகுதி அது. நூறடி தொலைவில் ரயில்வே ஸ்டேஷனும், நிறையச் சிறுகடைகளும், தனிவீடுகளுமாகப் போக்குவரத்து நிறைந்த பகுதியாக இருந்தது.
இரண்டு தெருக்களை அடைத்துக் கட்டிய புராதன காலத்து வீடாக அது விளங்கியது. வீட்டின் முன் பகுதி சீரமைக்கப்பட்டு அதில் உரிமையாளர் குடியிருந்தார். வீட்டின் பின்புறம்தான் ஜம்புநாதன் பார்த்த பகுதி. அடுத்த தெருவில் இருந்து தான் அதற்கு வாசல்.
நுழைந்தவுடன் மாட்டுத் தொழுவம் இருந்தது. அதற்கே உரிய இயற்கை மணமும் குணமும் காற்றில் நிறைந்திருந்தது. கவனமாகக் கால் பதித்துக் கொண்டு முன்னேறினால், மூன்றே அடி அகலம் உள்ள பாதை. இடதுகை மதில் சுவரை இடிக்கும், வலதுகை ஒரு கிணற்றின் சுற்றுச் சுவரை இடிக்கும். நூறு ஏக்கர் நிலத்திற்குத் தண்ணீர் பாய்ச்சுவதற்கென்று உரிமையாளரின் தாத்தா அந்த நாளில் கட்டிய பெரிய கிணறு.
"சீத்தாப்பல் மண்டியில் உள்ள 15 தெருக்களும் எங்கள் தாத்தாவிடம் இருந்து மற்றவர்கள் வாங்கியது தான்" என்று பெருமையோடு சொன்னார் அந்த வீட்டின் பெண்மணி.
அவர் அப்படிப் பேசிக்கொண்டிருந்தபோது, உள்ளிருந்து ஓர் அழகான இளம் பெண் வந்தாரா, அவர் இவருக்கு மகளா, அவர் அருகிலிருந்த கல்லூரியில் முதல் ஆண்டு படித்துக் கொண்டிருந்தாரா, இளஞ்சிவப்பு நிறத்தில் பூப்போட்ட நைலக்ஸ் சேலை அணிந்திருந்தாரா என்பதெல்லாம் ஞாபகத்தில் இல்லை.
"இந்தக் கிணறு எனக்கு பிடிக்கவே இல்லை. இடித்துவிட்டு மாடி வீடு கட்டலாம் என்றால் அப்பா ஒப்புக்கொள்ள மாட்டார்" என்று கிளி மொழி தெலுங்கு மொழியில் சொன்னது மட்டும் ஞாபகத்தில் இருக்கிறது.
"பசுமாட்டை இங்கு தான் கட்டுவோம். கொம்பு நீளம். ஆனால் முட்டாது. என்றாலும் கதவைத் திறக்கும்போது நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்" என்றாள் கிளிமொழி.
சுகாதாரமற்ற இடம் என்பதை என் மூக்கு முதலில் உணர்ந்து கொண்டது. அதை உடனடியாகப் புரிந்துகொண்ட ஜம்புநாதன் அவசரமாக, "ரொம்ப நல்ல விஷயம் என்னவென்றால், தினமும் காலையில் மகாலட்சுமி முகத்தில் விழிக்க முடியும் என்பதுதான்" என்று பசுமாட்டைக் காட்டினார். (கிளிமொழியின் பெயரும் மகாலட்சுமி என்று பிறகு தெரிந்தது).
உள்ளே நுழைந்தோம். ஒரு ஹால், காற்றோட்டமுள்ள படுக்கையறை, சிறிய சமையலறையும் குளியலறையும் என்று வீடு ஓரளவு சுத்தமாகவே இருந்தது. என்றாலும் விஜயநகர சாம்ராஜ்யக் காலத்துப் பழைய வீட்டிற்கு நானூறு ரூபாய் மிக அதிகம்தான்.
எனக்கு வேறு வழி இல்லை. எனவே அட்வான்ஸ் தொகையை ஜம்புநாதனுக்குக் கொடுத்துவிட்டு, அந்த வீட்டை எடுத்துக் கொண்டேன். பெட்டி படுக்கையை உள்ளே வைத்தேன். அவர்களே கொடுத்த சிறிய பூட்டின் உதவியால் கதவைப் பூட்டிக்கொண்டு வெளியே வந்து தேநீர் அருந்தினோம்.
சாலை முழுதும் பழ வண்டிகள். எல்லாமே சீதாப் பழங்கள்! அதனால்தான் அந்த இடத்திற்கு "சீத்தாப்பல்" மண்டி என்று பெயராம். பல் என்றால் இந்தியில் பழம். ஆனால் எந்த மொழியில் சாப்பிட்டாலும் சீத்தாப்பழம் இரண்டுக்கு மேல் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்று எச்சரித்துவிட்டு விடைபெற்றுக்கொண்டார் ஜம்புநாதன்.
இவ்வாறாக ஒரு சனிக்கிழமை இரவு அந்த வீட்டிற்கு நான் குடிவந்தேன். எப்படியும் ஒரு வாரத்திற்கு மேல் அங்கு நான் இருக்கப் போவதில்லை என்று முதலிலேயே முடிவு செய்துவிட்டேன். வங்கியிலிருந்து தூரம் என்பதுடன், நூறு ரூபாய் அட்வான்ஸ் பெற்றுக்கொண்ட ப்ரோக்கரின் திறமையில் எனக்கிருந்த நம்பிக்கையும் தான் காரணம்.
அந்த நம்பிக்கை பொய்க்கவில்லை என்பதை நாளை பார்க்கலாம்.
இராய செல்லப்பா, நியூ ஜெர்சியில் இருந்து
வேலைக்கு சேர்ந்த உடனே கிளி மொழி மகாலட்சுமியை சைட் அடிக்க ஆரம்பித்து விட்டீர்களா?
பதிலளிநீக்குபெயருக்கு ஏற்ப அவள் அழகிலும் மஹாலஷ்மி யா? உண்மையை சொல்லுங்கள் தமிழறிஞறே?
சுந்தர தெலுங்கில் மயங்கினீரா?
அழகாக பேசி மாட்டி விட்டாரோ...? அடுத்த பகுதியை நோக்கி ஆவலுடன்...
பதிலளிநீக்குநானும் அதே சீத்தாப்பல்மண்டியில்
பதிலளிநீக்குமயிலர்கட்டாவில் இருந்தேன்.
நீங்களும் கூட அந்த வீட்டுக்குவந்துள்ளீர்கள்
"கிடைத்து விட்டதா, இல்லையா?" என்றுகீழிருந்து கேட்ட தடிமனான குரல் யாருடையதாக இருக்கும் என்று நீங்களே அனுமானிக்கலாம். "
பதிலளிநீக்குஎன்று தாங்கள் " தொலைந்து போன மோதிரம் " என்ற பதிவில் தங்கள் மனைவியின் குரலை தடிமனான குரல் என்று சொல்லி இருந்தீர்கள்.
இன்று இந்த ஹைதராபாத் மஹாலஷ்மி குரல் மட்டும் "பேசுவது கிளியா..இல்லை பெண்ணரசி மொழியா?"
என்று இனிக்கிறதோ ?
உங்கள் Blog பதிவுகளை உங்கள் மனைவி படிப்பதில்லையா ?
இன்னிக்கு சாப்பாடு அம்பேல்...அவ்வளவு தான்....ஹா...ஹா...ஹா...!
இவ்வளவு தாற்காலிகத் தங்கலுக்கு அட்வான்ஸ் கொடுத்தால் திரும்ப வாங்க முடியுமா? அல்லது நீங்களும் வேறொரு ஆளை அழைத்துக் கொண்டு வரவேண்டி இருந்ததா?
பதிலளிநீக்குஅட்வான்ஸ் திரும்பக் கிடைத்துவிட்டது. ஆனால் இருந்த சில நாட்களுக்காக ஒரு மாத வாடகை கொடுக்கவேண்டி இருந்தது.
நீக்குதமிழறிஞர் அந்நியனாக நடிப்பதில் வல்லுநர் தான்!காட்சிகளைக் கண்டவன் அடியேன்.வாழ்க தமிழ்,வளர்க நகைச்சுவை!
பதிலளிநீக்குநண்பரே, தங்களை நான் சரியாக அடையாளம் காண முடியாமல் இருக்கிறேன். எனது மின்னஞ்சலுக்கு வர முடியுமா? chellappay@gmail.com
நீக்குஇளமை ஊஞ்சலாடும் (டிய) பதிவு!!!!
பதிலளிநீக்குகீதா
ஒரு வாரத்திற்காக அட்வான்ஸா? திரும்பக் கிடைத்ததா? ஒரு வாரத்திற்கு உள்ள பணத்தைக் கழித்துக் கொண்டு ஜம்பு கொடுத்தாரோ?
பதிலளிநீக்குகீதா
தான் கொடுத்த பணத்தைத்தான் என்னிடமிருந்து முழுமையாகப் பெற்றுவிட்டாரே ஜம்பு! நான்தான், இருந்த நாலு நாளைக்காக ஒரு மாத வாடகையைக் கொடுக்க வேண்டியிருந்தது! மகாலக்ஷ்மியின் அருள்!
நீக்குஅது சரி..... வேற வீடு பார்த்திருக்க வாய்ப்பில்லை என்று தோன்றுகிறது..... அடுத்த பகுதியில் தெரிந்து விடுமே..... :)
பதிலளிநீக்கு