புதன், ஜூன் 01, 2022

மறுவாசிப்பில் கண்ணதாசனின் ‘வனவாசம்’

 மறுவாசிப்பில் கண்ணதாசனின் ‘வனவாசம்’

(இன்று கிழமை செவ்வாய்-8)

அமெரிக்காவில் 50ஆவது நாள்

(மணித்திருநாடு)

தமிழ் இலக்கிய உலகில் தவிர்க்க முடியாத ஆளுமையான கண்ணதாசனின் ஆரம்ப கால அரசியல் வாழ்க்கையின் வரலாறுதான் “வனவாசம்.” 


என் கல்லூரிப் பருவத்தில்தான்  முதன்முதலாக வனவாசத்தைப் படித்தேன்.  கடந்த 40 ஆண்டுகளில் பல சென்னை புத்தகக் கண்காட்சிகளில் மீண்டும் மீண்டும் இந்தப் புத்தகத்தை வாங்கி இருக்கிறேன்.  மீண்டும் மீண்டும் படித்து இருக்கிறேன். (என்னிடமிருந்து யாராவது ‘சுட்டு’க்கொண்டு போய்விடுவார்கள்!) இப்போது நியூஜெர்சியில் கிடைத்த ஓய்வு நேரத்தில் மறுபடியும் படிக்க எடுத்திருக்கிறேன்.


“காந்தியடிகளின் சுயசரிதை படித்த பின்பு இதனை எழுதியதால் உண்மையை நிர்வாணமாகக் கூறுவதில் அதிக ஆசை எழுந்தது” என்ற முன்னுரையோடு இந்த நூல் ஆரம்பிக்கிறது. 


“நான் நிரந்தரமானவன் அழிவதில்லை - எந்த நிலையிலும்- எனக்கு மரணமில்லை”  என்று தன் கவிப்பெருமையை எழுதிய கண்ணதாசன், வாழத்தெரியாமல் வாழ்ந்துவிட்டதாகக் கழிவிரக்கம் கொண்டு வனவாசத்தில் இப்படி எழுதுகிறார்:


“ஒரு பெருமிதம் எனக்கு உண்டு என் தலைமுறையில் வாழும் எந்த மனிதனுக்கும் தலைவனுக்கும் கவிஞனுக்கும் இத்தகைய சுயசரிதம் அமையாது என்பதே   அது.  அப்படி ஒன்று அமைய வேண்டுமென்றால் யாரும் நீண்டகாலம் முட்டாளாக இருக்க வேண்டும்.  அது எல்லோருக்கும் கை வரக்கூடிய கலை அல்ல.”


சென்னை கடற்கரையில் அலைகளைப் பார்த்துக்கொண்டு சிந்தனையில் ஆழ்ந்த இளைஞன் கண்ணதாசனுக்கு இப்படித் தோன்றுகிறது:


“ஓர் அலை மூலம் மிகப் பெரிய நண்டு ஒன்று கரையில் வந்து விழுந்தது.  பயந்து அவன் எழுந்து நின்று விட்டான்.  நண்டு கரையிலேயே ஓடும் என்று எதிர்பார்த்தான்.  ஆனால் மீண்டும் கடலுக்குள்ளே ஓடிற்று.  கடல் அதை ஏற்றுக்கொண்டது.


அவனுக்கு நம்பிக்கை  தோன்றியது. சமுதாயம்,  நம்மை வெளியில்  தூக்கி எறிந்தாலும், நாம் மீண்டும் சமுதாயத்திற்குள்ளேயே ஓடித்தான் இடம் பிடிக்க வேண்டும்.  வெறுப்பினால் அல்ல  அலை நண்டை  வெளியே தள்ளியது. நண்டு சரியாக ஊன்றிக் கொள்ளாததாலே தான் வெளியில் வந்து விழுந்தது.  சமுதாயத்தில் ஒரு உயர்ந்த இடத்தில் காலூன்றி நின்று விடுவது என அவன் முடிவு கட்டிக் கொண்டான்.” 


இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்த வைரவரிகள் என்பேன். எப்படியென்றால், கண்ணதாசனைப் போலவே நானும் எதிர்காலம் பற்றிய கவலையில் மூழ்கியிருந்த காலம்  ஒன்று உண்டு. கல்லூரிப்படிப்பு எனக்குக்  கைகூடுமோ, கூடாதோ என்ற அவநம்பிக்கை நிலவிய நேரத்தில் இந்த வரிகள்தான் எனக்குக்  கலங்கரை விளக்கமாகத் தெரிந்தவை. பட்டப்  படிப்பு போதுமென்று சக நண்பர்கள் வேலைதேடிச் சென்றுவிட்ட நிலையில், நான் பட்ட மேற்படிப்பு படித்தே தீருவதென்று கடுமையான பொருளாதாரச் சூழலிலும் எதிர்நீச்சல் போட்டேன். வங்கியில் குமாஸ்தா வேலை கிடைத்தால் போதுமென்று ஆயிரம் பேர் காத்திருக்கையில், நான் ஆபீஸராகத் தான் சேருவேன் என்று சரியான வாய்ப்புக்காகப் பல மாதங்கள் காத்திருந்து வென்றேன்.  “உயர்ந்த இடத்தில் காலூன்றி நின்றுவிடுவது” என்பது ஒரு கவிஞனின் சாதாரண வார்த்தைகள் அல்ல. இலட்சக் கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு எம்பிஏ என்று பட்டம் தருகிறார்களே, அக்கல்வி நிலையங்கள் கற்றுத்தரும் தன்னம்பிக்கையின்  இலக்கு தான் இது!


*** 

“அப்போது அவனுக்கு ஓர் உண்மை புலனாயிற்று.  வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பதற்குத்  திறமை இருந்தால் மட்டும் போதாது.  சந்தர்ப்பம் அமைவது மிகவும் முக்கியம்….. சந்தர்ப்பம் என்றால் என்ன அது தானாக வருவதா, மனிதன் உண்டாக்கிக் கொள்வதா? … சில நேரங்களில் மனிதர்கள் தாமே உண்டாக்கி கொள்கின்ற சந்தர்ப்பங்களைப் பற்றி அவன் எண்ணிப் பார்த்தான். அந்த சந்தர்ப்பங்களை உண்டாக்குவதற்கு அவர்களுக்குத் துணிவு மட்டும்தான்  தேவையாக இருந்திருக்கிறது..


“இந்த உலகம் அத்தகையது. பயமும் பணிவும்  இங்கே பலனளிப்பதில்லை.  அன்பும் அறமும் இங்கே வாழ்வளிப்பதில்லை. பகட்டும்  படாடோபமும் தேவைப்படுகிறது.  தெரியாததை எல்லாம் தெரிந்தமாதிரி காட்டிக் கொள்பவனுக்கு மிகுந்த வரவேற்பு கிடைக்கிறது. அய்யோ அவனா அசகாயசூரன் ஆயிற்றே என்று பத்து பேரை பேச வைக்கிறது.  சிலர் அவனை மதிக்கத் தலைப்படுகிறார்கள்.  ஏதாவது ஓரிடம் அவனை இழுத்துப் போட்டுக் கொள்கிறது.” 


இதில் இரண்டு வழிமுறைகளைக் கண்ணதாசன் குறிப்பிடுகிறார்: (1)  சில சந்தர்ப்பங்கள் தாமாகவே நம்மைத் தேடிவரும்.  அப்போது நண்டு மாதிரி அவற்றைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும். (2)  சில சந்தர்ப்பங்களை  நாமே உண்டாக்கிக் கொள்ளவேண்டும்.  அதற்குத் துணிவு முக்கியம். என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை முக்கியம் .


நான் வங்கிப் பணியில் சேர்ந்த பிறகு இந்த இரண்டு வழிமுறைகளையும்  வேதமாகக் கருதிப் பின்பற்றினேன். ஊர் மாற்றங்களை ஆர்வத்தோடு ஏற்றுக்கொண்டேன். ஒரு பணிப்பிரிவில் இருந்து புதிய பணிப்பிரிவிற்கு மிகுந்த ஆர்வத்துடன்  மாறிக்கொண்டேன். புதிய அறிவுக்கூறுகளை இடைவிடாமல் கற்றுவந்தேன். அதனால் என் தொழிலில் எனக்கென ஓர் ஆளுமையை ஏற்படுத்திக்கொள்ள முடிந்தது. நன்றி, கவிஞரே நன்றி!


** 

“வளர வேண்டும் உயர வேண்டும் என்ற ஆசைகள்…. அவனது நெஞ்சில் மேலோங்கி நின்றன.  பயங்கரமான உலகத்தில்  பருந்துகளுக்கும் வல்லூறுகளுக்கும் நடுவே  இந்தக்  கிளி எப்படிப்  பறக்கப்  போகிறது என்ற அச்சமும் அவனுக்கு இருந்தது. தன்னம்பிக்கை, துணிச்சல், திடமான உள்ளம் இவற்றை வழங்கும்படி இறைவனை வேண்டினான்…” 


தன்னையே ‘அவன்’ என்று படர்க்கையில் எழுதுவது இந்நூலுக்கு தனிப்பட்ட சிறப்பைச் சேர்க்கிறது. ஒரு கவிஞனின் தேதியிடப்படாத வரலாறாக இருந்தபோதும், இது ஒரு வாழ்வியல் பாடநூலே ஆகும். புத்தகம் முழுவதும், தான் புரிந்த அல்லது பங்குகொண்ட தவறுகளை சற்றும் மிகையோ குறைவோ இல்லாமல் கண்ணதாசன் தெரிவிப்பதன் மூலம் வாசகனைத் தன்னோடு இணைத்துக்கொண்டு விடுகிறார். மனிதனுக்குத் தன்னம்பிக்கை வேண்டும் என்பதைப் பல இடங்களில் வலியுறுத்துகிறார். திடமான  உள்ளம் இருந்தாலே போதும், துணிச்சல் வந்துவிடும் என்று பல இடங்களில் எடுத்துக்காட்டுகிறார். 


*** 

சுவாரஸ்யமான ஒரு நாவலைப் போல் எழுதப்பட்ட ‘வனவாசம்’ ஒவ்வொரு தமிழனின் கையிலும் இருக்கவேண்டியது. ‘தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்’ என்ற வாசகத்தை இதை முதன்முதலாகப் படிப்பவர்கள் உடனே உணர்ந்துகொள்வர். நமது இளைஞர்களுக்குப் பரிந்துரைக்கவேண்டிய நூல் இது.


**** 

நமக்கு இதுவரை தெரியாத பல சமூக வழக்கங்களைப் பற்றி - உதாரணமாக,  நகரத்தார் சமூகத்தில் ‘சுவீகாரம்’ -அதாவது தத்தெடுப்பது- பற்றிய நடைமுறையை விவரமாக எழுதுகிறார் கண்ணதாசன். அதேபோல் சுவாரஸ்யமான அனுபவங்கள் நூல் முழுதும் அள்ளித் தெளிக்கப்பட்டிருக்கின்றன. 


தானும் கருணாநிதியும் தங்கியிருந்த அறையில்,  சாப்பிடும் தட்டருகே பாம்பு சுருண்டு படுத்திருந்ததை  இரவில் கண்டு அலறி நடுங்கியதையும், விறகுக் கட்டையால் அதை அடித்துக்  கொன்றுவிட்டு, இரவு  முழுதும் அதே அறையில் ஒரே கட்டிலில் இருவரும் படுத்துக்கொண்டதையும் கண்ணதாசன் வர்ணிப்பது திகிலின் உச்சம் எனலாம்.


தமிழக அரசியலின் கிட்டத்தட்ட முப்பதாண்டு வரலாறுதான் இந்த நூல். கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்டது. நூறு சுயமுன்னேற்ற நூல்களை வாங்குவதை விட, இந்த ஒரு நூல் வாங்கிப் படிக்கப்பட்டால், சொல்லாற்றலும் சிந்தனையும் வளர்வதோடு, துணிந்து முன்னேறும் பேரார்வமும் இளைஞர்களிடையே பொங்கிப் பெருகும் என்பது உறுதி.


  • இராய செல்லப்பா நியூ ஜெர்சியில் இருந்து.

7 கருத்துகள்:

  1. கல்லூரி நாட்களில் வன வாசம் புத்தகத்தை வாங்கி ஒரே மூச்சில் படித்து முடித்தேன் நான் .

    பதிலளிநீக்கு
  2. திருக்குறளை (சிலருக்கு) எளிதாக புரிந்து கொள்ளவும் கவிஞரின் வரிகள் மிகவும் உதவி புரிந்தது...

    பதிலளிநீக்கு
  3. அருமையான நூல். வாசிக்க வேண்டும் என்று தூண்டும் வரிகள். வைரவரிகளை வாசித்ததும் அவை நிஜமாகவே வைரவரிகள் கூடவே இரு வழி முறைகள் அவர் சொல்லியிருப்பது மிகவும் யதார்த்தமான வரிகள்.

    ஆனால் கூடவே சூழலும், அதிர்ஷ்டமும் தேவையோ என்றும் தோன்றுகிறது சார். குறிப்பாக என்னைப் போன்ற பெண்களுக்கு

    //மனிதனுக்குத் தன்னம்பிக்கை வேண்டும் என்பதைப் பல இடங்களில் வலியுறுத்துகிறார். திடமான உள்ளம் இருந்தாலே போதும், துணிச்சல் வந்துவிடும் என்று பல இடங்களில் எடுத்துக்காட்டுகிறார். //

    அருமை.

    கவிஞர் கவிஞர்தான்! அவர் புகழ் இன்றும் நிலைத்திருப்பதற்கான காரணம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  4. சிறப்பான நூல். ஒரு முறை படித்திருக்கிறேன். உங்கள் பதிவு மீண்டும் நூலை வாசிக்கத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது.

    பதிலளிநீக்கு
  5. இதன் தொடர்ச்சியாக மனவாசம் என்றும் எழுதினார். என் அக்காவிற்கு இந்த நூல்களை பரிசளித்தேன். "நீ எனக்கு அளித்த பரிசுகளிலேயே மிகவும் சிறப்பானது இதுதான்" என்றார் என் சகோதரி.

    பதிலளிநீக்கு
  6. மனவாசமும் படித்திருக்கிறேன்.  நீண்ட நாட்கள் ஆச்சு!

    பதிலளிநீக்கு
  7. எனக்கும் பிடித்த புத்தகம்..பாஸாயத்து முந்திரியை அள்ளிக் கொடுத்தமைக்கு வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு