வெள்ளி, ஜூன் 03, 2022

ஜேஜே என்னும் புதிர் மனிதர்

ஜேஜே என்னும் புதிர் மனிதர்  

(நான்கு தூண்கள் நகரம்-2)

அமெரிக்காவில் 52 ஆவது நாள்


ஐதராபாத்தில் நான் பணியாற்றிக் கொண்டிருந்த பொழுது என்னுடைய வங்கிக் கிளைக்கு தினமும் ஒரு முறையாவது வருகை தருவார் 'ஜேஜே' என்ற  நண்பர். 


என்னை விடப் பெரியவர் என்று நினைக்கத் தோன்றியது.  கருத்த மெல்லிய சரீரம்.  அறிவாளிகளுக்கே உரிய  முன் தலை வழுக்கை அவருக்கு இருந்தது. ஆனால்  அவரை அறிவாளியாக யாரும் ஏற்றுக் கொண்டார்களா என்றால் இல்லை. குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் அவர் எங்கள் வங்கி ஊழியரோ, வாடிக்கையாளரோ அல்ல.  ஆனால் எங்கள் ஊழியர்கள் அனைவரைப் பற்றியும், அவர்கள் உள்ளூர்க்காரர்கள் என்றால் அவர்களுடைய உறவினர்களைப் பற்றியும் நன்கு தெரிந்து வைத்திருந்தார்.  பகல் உணவு நேரத்தில் சுதந்திரமாக வந்து அனைவரின் டிபன் பாக்ஸிலிருந்தும் தலா ஒரு ஸ்பூன் எடுத்துக் கொள்வார்.  மாலை நேரங்களில்  கையில் ஒரு பிஸ்கட் பொட்டலம் கொண்டு வருவார்.  அதை தேவலோகத்து அமுதம் மாதிரி பயபக்தியோடு ஒவ்வொருவருக்கும் கொடுப்பதைப்  பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும். ஆனால் யார் இவர் என்ற பிரமை சிறிது காலம் நீடித்தது.


மாத இறுதி நாளில் வங்கியில் சம்பளம் வழங்கப்படும் என்று அகில உலகுக்கே தெரியும். ஆனால் எங்கள் ஒவ்வொருவர்  சேவிங்ஸ் கணக்கிலும் கடன் போக மீதம் எவ்வளவு தொகை  வரவு வைக்கப் பட்டிருக்கும் என்று ஜேஜேவுக்கு எப்படித்  தெரியும் என்று எனக்கு சத்தியமாகத் தெரியாது.  


அன்று காலையிலிருந்தே அவருடைய நடமாட்டம் வங்கியில் பசையுள்ள இரண்டு குமாஸ்தாக்களைச் சுற்றியே இருக்கும். அவர்கள் நிலப்பிரபுக் குடும்பத்தவர்கள். பொழுதுபோக்குவதற்காக வங்கிப் பணியில் சேர்ந்திருக்கவேண்டும். மாதச் சம்பளத்தை இரண்டே நாட்களில் காலிசெய்துவிடுவார்கள். அப்படியும் கணக்கில் ஐயாயிரம் எப்பொழுதும் இருக்கும். அந்த இருவரில் ஒருவரிடமிருந்து ஒரு சம்பள நாளின் உணவு இடைவேளையில் ஜேஜே கைமாற்றாக  மூவாயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டார். 


ஜேஜேயிடமிருந்த நல்ல குணம், தனக்குக் கடன்கொடுத்தவரை  வானளாவப் புகழ்ந்து தள்ளுவார். வங்கியில் மட்டுமின்றி, வங்கி இருந்த வளாகத்தின் எல்லாக் கடைக்காரர்களுக்கும்  பறையடிக்காத குறையாக இத்தகவலைச் சொல்லிவைப்பார். கடன் கொடுத்த நண்பரோ புளகாங்கிதம் அடைந்து இரகசியமாக இன்னொரு மூவாயிரத்தை அவர் கேளாமலேயே கொடுத்து உதவுவார்.  ஜேஜே உபயத்தில் அன்று மாலை எங்கள் அனைவருக்கும் அருகில் இருந்த ‘கனரா டிபன் ரூம்’ இலிருந்து செட்தோசை வந்துசேரும்!


யாரிடமிருந்தும் இம்மாதிரி கைமாற்றுப் பெறும் சாமர்த்தியம்   ஜேஜேக்கு இருந்தது என்பதை அங்கீகரிக்கும் விதமாக எங்கள் மண்டல  அலுவலகத்தில் இருந்த சில பேர், ஜேஜேயிடமிருந்தே கைமாற்று பெற்றுக்கொண்டதாகவும் தெரிந்தது. மற்றப்படி ஜேஜே அதிகாரபூர்வமாக எந்தக் கடனையும் வங்கியில் கேட்டதில்லை.  அதனால் அவரை யாரும் தொந்தரவாகக்  கருதவில்லை. 


வாங்கிய கைமாற்றைத் திருப்பித்தரும்போதும் நாலு பேருக்குத் தெரியும்படிதான் செய்வார் ஜேஜே. இதில் அவரது பாணியே அலாதியானது. 


முன்னர் குறிப்பிட்ட நபரிடம் மூவாயிரம் பெற்றார் அல்லவா? அதற்கு அடுத்த நாளே அதில் ஆயிரத்தை எங்கள் வங்கியின் இன்னொரு கிளையில் பணியாற்றும் ஒரு பியூன் மூலம் இவருக்குத் திருப்பித் தந்துவிட்டார். இவருக்கு ஆச்சர்யம்! ஏனென்றால் அடுத்த மாதம் திருப்பித் தருவதாகத்தான் ஏற்பாடு. 


“மூவாயிரம் தேவையிருக்கும் என்று எண்ணினேன். ஆனால் அவ்வளவு செலவு ஆகவில்லை. அதனால் ஆயிரத்தைத் திருப்பிவிட்டேன். எப்பொழுதும் தேவையில்லாமல் கடன் வாங்கவே கூடாது என்பது என்னுடைய இலட்சியம்” என்று கூறினார் ஜேஜே. எங்கள் மதிப்பில் உயர்ந்தார்.


அடுத்த சில நாட்களில் இன்னும் ஓர் ஆயிரம் ரூபாயைத் திருப்பிக் கொடுத்துவிட்டார்.  இதனால் அவருடைய ‘கிரெடிட் ரேட்டிங்’ நண்பர்கள் மத்தியில் அதிகரித்தது. அடுத்த சம்பள நாளன்று ஜேஜே மீதமிருந்த ஆயிரத்தைக் கொடுக்கவந்தபோது, ‘இப்போது என்னய்யா அவசரம்?” என்று சொல்லியும் கடனைத் தீர்த்துவிட்டே போனார் ஜேஜே. இதனால் எங்கள் மதிப்பில் இன்னும் அதிக உயரத்துக்குப் போனார்.


இவ்வாறாக, ‘ஜேஜே’ என்று கடன் வாங்குவதும் திருப்பிக் கொடுப்பதுமாக இருந்தார் ஜேஜே. பல மாதங்கள் கழித்து அவரைப் பற்றி ஒரு தகவல் கிடைத்தது. அது என்னவென்றால், ஒவ்வொருமுறை வாங்கிய கடனைத் திருப்பித்தரும்போதும், அதைப் போல இரண்டு மடங்கு தொகையை எங்கள் இன்னொரு கிளையில் இருந்த யாரிடமாவது கடனாக வாங்கிவிடுவார் என்றும், அதில் பாதியை அடுத்த சில நாளில் திருப்பிக் கொடுப்பதும், மீதியில் பாதியை அடுத்த வாரத்தில் திருப்பிக் கொடுப்பதுமாக நடந்துகொள்வார் என்றும் தெரிந்தது. திடீரென்று ஒரு மாதம் முழுதும் அவரை வங்கியின் எந்தக் கிளையிலும் காண முடியாமல் போனபோதுதான் அவர் வாங்கியிருந்த மொத்தக் கடன் சில லட்சங்கள் போல இருக்கும் என்று கிசுகிசு எழுந்தது.  


எங்கள் கிளையில் பகிரங்கமாக வாங்கிய கைமாற்று போக, பலரிடமிருந்து இரகசியமாக 2000, 3000 என்று வாங்கியிருந்தார் ஜேஜே என்ற தகவலும் வெளியில் வந்தது. இவ்வளவு தொகையை என்ன செய்திருப்பார்  என்ற  ஆராய்ச்சி தொடங்கியது.  


அவருடைய வீடு மிகவும் எளிமையாக இருந்தது. வீட்டில் அவரும் மனைவியும்தான். அவரது மனையின் ஆரோக்கியம் சரியில்லை என்று பார்த்தாலே தெரிந்ததாம். ஜேஜே அப்போது வெளியில் போயிருந்தாராம். இரவு வரை இவர்கள் காத்திருந்துவிட்டுத் திரும்பினார்களாம். 


மறுநாள் வங்கிக்கு வந்த அதிர்ச்சித் தகவலின் பேரில் இரண்டு மூன்று ஊழியர்கள் ஜேஜே வீட்டுக்கு விரைந்தார்கள். திடீரென்று ஜேஜேவுக்கு நெஞ்சுவலி வந்துவிட்டதாம். மருத்துவமனையில் சேர்த்து இருக்கிறார்களாம்.  அவருடைய வீட்டிற்கு வந்த கூட்டத்தைப் பார்த்து தன் கணவர் மீது அன்பு கொண்டவர்கள் இவ்வளவு பேரா என்று அவருடைய மனைவி அசந்து போனாராம்.   அவ்வளவு பேரும் அவருக்கு கைமாற்றுக் கொடுத்தவர்கள் என்று பாவம், அவருக்குத் தெரியவில்லை!


பக்கத்து வீட்டுக்காரர் விஷயத்தைப் போட்டு உடைத்தார். ஜே ஜே வுக்கு வேலைவெட்டி  என்று எதுவும் கிடையாதாம்.  அவர் பார்த்ததெல்லாம் வெட்டிவேலை தானாம். ஒருமுறை குதிரைப்  பந்தயத்தில் அவருக்கு ஆயிரம் ரூபாய் போட்டதில் ஒரு லட்ச ரூபாய் கிடைத்ததாம்.  அன்று முதல் எல்லோரிடமும் கடன் வாங்கி குதிரைப்பந்தயம் ஆடுவதில் மும்முரமாகிவிட்டாராம். ஆனால் வாங்கிய கடனை எல்லாம் ஒழுங்காகத் திருப்பிக் கொடுத்து விடுவாராம்.  இதுவரை யாரும் வீடு தேடி வந்து கடனைத் திருப்பிக்  கேட்டதில்லையாம்.  


என்னிடம் அவர் கடன் வாங்கியது இல்லை,  நானும் அவரிடம் வாங்கியதில்லை.  என்றாலும் விஷயம் சுவாரசியமாக இருந்ததால் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்குச் சென்று பார்த்தேன்.  வார்டுக்கு வெளியே  அவருக்காக ஒரு பத்து பேர் காத்திருந்தார்கள். கடன் கொடுத்தவர்கள் என்று அவர்கள் முகத்திலிருந்த கவலையிலிருந்து புரிந்துகொண்டேன்.  


என்னைப் பார்த்தவுடன் படுக்கையிலிருந்து எழுந்திருக்க முயன்றார் ஜேஜே.   வேண்டாம் என்று தடுத்தேன்.  பேச முடியாத அளவுக்கு பலவீனமாக இருந்தார்.  நான் யாருடைய குணாதிசயத்தைப் பற்றியும் முன்முடிவு கொள்வதில்லை என்பதால்  ஜேஜே நல்லவரா கெட்டவரா என்று ‘நாயகன்’  பாணியில் ஆராயவில்லை.  உடல் நலத்தை மட்டும் விசாரித்து விட்டு எழுந்தேன். என் கையைப் பிடித்து அமர்த்தினார் ஜேஜே.


தன் தலையணையின் கீழிருந்து  ஒரு கனமான காகித உறையை என்னிடம் கொடுத்தார். அதற்குள் சிறுசிறு ‘மொய்’  கவர்களில் ரூபாய்கள் இருந்ததைக் கண்டேன். ஒவ்வொரு கவரின்மீதும்  பெயரும், தொகையும்  எழுதப்பட்டிருந்தன. பெரும்பாலும் எங்கள் வங்கி ஊழியர்கள்தான். “இதை அவர்களிடம் கொடுத்துவிடுங்கள்” என்றார். மனதுக்குள் கூட்டிப் பார்த்தேன். எப்படியும் எண்பதாயிரம் இருக்கும்!


“இத்துடன் இனிமேல் யாருக்கும் பாக்கி இல்லை” என்று வலிந்து புன்சிரித்தார் ஜேஜே. 


அதற்குள் மருத்துவமனையின் விசிட்டர் நேரம் வந்துவிட்டதால், வெளியில் காத்திருந்தவர்கள் திபுதிபுவென்று உள்ளே நுழைந்தனர். அவர்கள் அதனை பேருக்கும் என்னிடம் கவர்கள் இருந்தன!


எங்கே கடனைத் திருப்பாமல் ஆசாமி கப்பலேறி விடுவாரோ என்று அவநம்பிக்கையோடு வந்தவர்கள் கண்ணில் நீர் வழிய நின்றார்கள். இவரையா சந்தேகப்பட்டோம்! 


அனைவரும் வெளியில் வந்துகொண்டிருந்தபோது ஜேஜேயின் மனைவி அழும் சத்தம் கேட்கவே உள்ளே எட்டிப்பார்த்தேன்.         “உங்க புத்தி இப்படியா போகும்? குதிரைப்பந்தயம் வேண்டாம் வேண்டாம் என்று எத்தனை சொல்லியும் உங்கள் பேராசை அடங்கவில்லையே! இப்போது என்னிடம் இருந்த பத்து பவுன் சங்கிலியையும் எனக்குத் தெரியாமல் விற்றுவிட்டீர்களே, பணத்தை என்ன செய்தீர்கள்? எங்கே வைத்திருக்கிறீர்கள்?” என்று அவர் தலையணை பக்கம் சோதனை செய்துகொண்டிருந்தார். 


எவ்வளவு அற்புதமான மனிதர் ஜேஜே! கைமாற்று கொடுத்த  அனைவரிடமும் நல்ல பேர் எடுத்துவிட்டார். ஓரிடத்தில் வாங்கி, இன்னோரிடத்தில் கொடுத்து, யாருக்கும் சந்தேகமில்லாமல் குதிரைப் பந்தயம் ஆடும் கலையை மட்டும் அவர் யாருக்கும் கற்றுத்தரவில்லை என்பது மிகப் பெரிய ஆறுதல். நிகர நஷ்டம் மனைவிக்குத்தான்!


-இராய செல்லப்பா நியூ ஜெர்சியில் இருந்து.

 9 கருத்துகள்:

 1. "குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் அவர் எங்கள் வங்கி ஊழியரோ, வாடிக்கையாளரோ அல்ல"

  என்று சொல்லி இருக்கிறீர்களே. அப்படிப்பட்ட ஒரு நபரை வங்கியின் உள்ளே விடுவதும் அவருடன் எல்லோரும் நெருங்கி பழகுவதும் தவறு அல்லவா?

  பதிலளிநீக்கு
 2. சுவாரஸ்யமான நபர். பித்தலாட்டம், நான் அவனில்லை போல ஒரு நபர்.நமக்கு கஷ்டமோ நஷ்டமோ இல்லாதவரை ரசிக்கலாம்.

  பதிலளிநீக்கு
 3. பெயரில்லா த நபர் நான்தான் N Jayasankaran Chennai.

  பதிலளிநீக்கு
 4. நிகர நஷ்டம் மனைவிக்கு.... பல வீடுகளில் இப்படி இழந்த பொருட்கள் எத்தனை எத்தனை....... கேரக்டர் கதைகள் எழுதலாம்.....

  பதிலளிநீக்கு
 5. கு.மா.பா.திருநாவுக்கரசு3 ஜூன், 2022 அன்று 2:49 PM

  ஜேஜே போன்று கிளைக்கு ஓரிரு நபர்கள் பணியாளர்களுக்குப் பரிச்சயமானவராக இருப்பார்கள். பாவம்... உடல்நலம் குன்றியதும், மனைவியின் தங்க நகையை விற்றாவது வாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்த ஏற்பாடு செய்த நல்ல மனம் உடையவர், ஒரு சிலரே. குதிரைப் பந்தய மோகம் பலருடைய வாழ்வை சீரழித்திருக்கிறது. வங்கிச் பணத்தை கையாடல் செய்து பந்தயத்தில் விட்ட காசாளர்களும் உண்டு. பாண்டவர்களையே தலைகுனியவைத்த சூது மீது பாவம்... பணியற்ற ஜேஜே ஆசைவைத்ததே விதி.

  பதிலளிநீக்கு
 6. அவர் செய்யும் வேலைக்கு முடியே இருக்கக் கூடாதே...!

  என்னது, முன் தலை வழுக்கை இருந்தால் அறிவாளியா...? இது புதிதாக இருக்கே...! ஆமாம் எந்த புராணம்...?

  பதிலளிநீக்கு
 7. மனிதர்கள் பலவிதம். ஒவ்வொருவரும் ஒருவிதம்.

  கீதா

  பதிலளிநீக்கு