திங்கள், ஜூன் 06, 2022

வக்கீல் மேனேஜரின் திடீர் அன்பு


வக்கீல் மேனேஜரின் திடீர் அன்பு

(நான்கு தூண்கள் நகரம் - 5)

அமெரிக்காவில் 55வது நாள் (05-6-2022)


நாங்கள் தங்கியிருந்த கட்டிடத்திற்குப் பெயர் இருந்ததா என்று தெரியவில்லை. மிகவும் பழைய கட்டிடம். உரிமையாளரான முதிய வக்கீல்  மூன்றாவது மாடியில் குடியிருந்தார். ஆனால் நான் அவரைப் பார்த்ததில்லை. அவரிடம் மேனேஜராக இருந்த ஒருவர்தான் வாடகை வசூல் உட்பட எல்லா விஷயங்களையும் கவனித்துக் கொண்டிருந்தார். அவர் பெயர் மறந்துவிட்டது. நாயுடு என்று வைத்துக்கொள்வோம்.


நடுத்தர உயரம். ஒல்லியாக இருப்பார். நிறம் கருப்பு. முகத்தில் இல்லாதது சிரிப்பு. கை வைத்த வெள்ளை பனியன் அணிந்து அதற்குமேல் வேட்டியை இறுக்கமாகக் கட்டி இருப்பார். விடுமுறை நாட்களில் தான் கீழே இறங்கி வருவார். ஒவ்வொரு அறையாகப் பார்த்துக் கொண்டே வருவார். எந்த அறையிலாவது  ஒரு நிமிடத்திற்கு மேல் அவர் செலவழித்தால் அடுத்த நாள் அந்த ரூம்வாசி தூக்கி எறியப்படுவார் என்பது விதி. ஆகவே நாயுடு வருகிறார் என்றால் அறைவாசிகள் மிகுந்த அச்சத்தோடுதான் நெளிவார்கள்.  


ஹைதராபாத் உயர்நீதி மன்றம் -படம்-நன்றி-இணையம்


பேச்சிலர்கள் தங்கும் இடம் என்பதால், ஆண் பெண் உறவு சம்பந்தப்பட்ட தவறுகள் நடந்துவிடாதபடி கண் கொத்திப் பாம்பாக கவனிப்பார் நாயுடு. எந்த அறையில் கால் வைத்தாலும் முதலில்  குப்பைக் கூடையில்தான் கவனம் செலுத்துவார். அவருக்கு வேண்டிய தகவல் அதில் கிடைத்துவிடும். யாரும் மழுப்ப முடியாது. நீண்ட கூந்தல் இழைகளோ,  உடைந்த வளையல்களோ, பெண்களின் உள்ளாடைகளோ எந்த அறையில் இருக்கும் என்ற தகவல் அவருக்கு எப்படிக் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால் உடனடி நடவடிக்கை நாயுடுவால் எடுக்கப்படுவது  நிச்சயம்.


கட்டிடத்தில் இருந்து இறங்கி வந்தால் சற்று தூரத்தில் ஒரு இஸ்திரி வண்டி இருக்கும். கணவன் மனைவி மாறி மாறி வேலை செய்து கொண்டு இருப்பார்கள். கணவனைவிட மனைவி பத்து வயது குறைந்தவள். எடையில் ஒன்றரை மடங்கு அதிகமானவள்.  சராசரிப்  பெண்களை விட அழகானவள். கணவன் இஸ்திரி போடப்போட, மனைவி அந்தத் துணிகளை ஒவ்வொரு அறையாகச் சென்று கொடுத்துவிட்டு பணம் வசூலித்து வருவாள். அவள்தான் நாயுடுவுக்கு இன்பார்மர் என்று அருகில் இருந்த சலூன்காரர் கூறுவதுண்டு. ஆனால் உண்மை என்னவென்றால் நாயுடுதான் எங்களிடம் அந்தப் பெண்ணிடம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்று அடிக்கடி கூறுவார். 


விடுமுறை நாளிலும் நாங்கள் மூவரும் வங்கிக்குச்  சென்று விடுவோம் என்பதால் இரவில் உறங்கும் நேரம் மட்டும்தான் அறையில் இருப்போம். ஆகவே நாங்கள் அவளைப்பற்றிக் கவலைப்படவில்லை.


என்றாலும் இரவு பத்து மணி போல நாயுடு ஒரு முறை மேலோட்டமாக எல்லா அறைகளையும் பார்வையிடுவார் என்று அவள் சொன்னாள். பதினோரு மணிக்கு ஈரானிய ஓட்டலில் இஞ்சி டீ அருந்துவாராம். இடைப்பட்ட நேரத்தில் அவர் என்ன செய்வார் என்று நான் கேட்கவில்லை.

 

நாங்கள் அறைக்கு வருவதற்கு முன்னால்  ஒரு நாள் நாயுடு என்னுடைய வங்கிக்கு வந்திருந்தார். முதிய வக்கீலின் சில சேவிங்ஸ் கணக்குகள் எங்கள் கிளையில் இருந்தன. கையால் பாஸ் புத்தகம் எழுதப்பட்ட காலம் அது. ஒவ்வொரு கிளார்க்குக்கும் ஒவ்வொருவிதமான கையெழுத்து. 6 போட்டால் 8 மாதிரியும் அல்லது 0 மாதிரியம் இருப்பதுண்டு. வங்கி லெட்ஜரில் சரியாகவும், ஆனால் பாஸ்புக்கில் தவறாகவும் இருப்புத்தொகை குறிக்கப்பட்டு விடுவதுண்டு. நாயுடு கொண்டுவரும் பாஸ் புத்தகங்களில் இம்மாதிரி பிழைகள் அடிக்கடி வரும். அதற்குக் காரணம் தெரியாது. 


வங்கிக்கு அருகில் இருந்த 'மாடர்ன் டிபன் ரூம்' என்ற உணவகத்தில் இருந்து ஸ்பெஷல் காபி வரவழைத்துக் கொடுக்கும் வரையில் நாயுடு மேனேஜர் கேபினை விட்டு நகர மாட்டார். காபி அருந்திய பிறகு வாடிக்கையாளர் அரங்கில் கால் மேல் கால் போட்டுக்கொண்டு பத்து,  பதினைந்து நிமிடம் அமர்ந்து கொள்வார். பாஸ் புத்தகங்களை மீண்டும் ஒரு முறை அலசி ஆராய்ந்து தன்னைத் திருப்திப்படுத்திக் கொண்ட பிறகே கிளம்புவார்.


அனேகமாக அன்று மாலை என்னுடைய அறைக்கு வருவார். 'உங்கள் வங்கியின் சர்வீஸ் பற்றி வக்கீல் சாருக்கு மிகவும் திருப்தி'  என்பார். அப்படி அவர் ஆரம்பித்தால் மேற்கொண்டு அரை மணி நேரம் என்னோடு பேச விரும்புகிறார் என்று அர்த்தம். உடனே நான் பாம்பே ஆனந்த பவனில் இருந்து ஆளுக்கு ஒரு காபி ஆர்டர் செய்வேன். 


அப்படித்தான் அவர் தன்னுடைய பெங்களூர் முதல் கடலூர் வரையான ரயில் பயணத்தைப் பற்றி ஒருநாள்  கூறினார்.  


பெங்களூரிலிருந்து விருத்தாசலம் வழியாகச் சென்னை செல்லும் வண்டி அது. இவர்  பெங்களூர் டு கடலூர் டிக்கெட் எடுத்திருக்கிறார். இவர் போக வேண்டிய இடம் கடலூர் பஸ் ஸ்டாண்டுக்கு அருகில் இருந்த ஒரு முகவரிக்கு. அருகிலேயே ரயில்வே ஸ்டேஷன் இருந்தது. அதற்கு கடலூர் என் டி என்று பெயர். என்.டி. என்றால் நியூ டவுன். அதற்கு திருப்பாதிரிப்புலியூர் என்றும் பெயர் உண்டு. இதைத்தான் பொதுவாகக் கடலூர் என்று கூறுவார்கள். 


ஆனால் ரயில்வேயைப்  பொறுத்தவரை, கடலூர் என்றால் அது கடலூர் ஓ.டி. என்னும் ஓல்டு டவுன் தான். கடலூர் என்ற டிக்கெட் வாங்கியவர்கள் இங்குதான் இறங்க வேண்டும். இதைக் கடந்து போனால்தான் திருப்பாதிரிப்புலியூர் ஸ்டேஷன் வரும். 


எனவே நாயுடு அவர்கள் கடலூர் டிக்கெட் வாங்கிக்கொண்டு, ஓ.டி.யில் இறங்காமல் திருப்பாதிரிப்புலியூர் சென்று  இறங்கியிருக்கிறார். நூற்றுக்குத் தொண்ணூறு பேர் இப்படித்தான் செய்வார்கள். அது முழுக்க முழுக்க ரயில்வேயின் தவறு. ஆனால் பயணிகளுக்குத் தான் அபராதம் விதிக்கப்படும். டிக்கெட் இல்லாமல் கடலூர் டு திருப்பாதிரிப்புலியூர் பயணம் செய்ததற்காக 250 ரூபாய் நாயுடுவிடம் கறந்து விட்டார்கள்.


தன் வேட்டியைச் சற்று மேலே தூக்கி உள்ளிருந்த அரை நிஜாரில் கைவிட்டு சாயம் போன ஒரு ரயில்வே ரசீதை எனக்குக் காட்டினார் நாயுடு. 


"இதைக் கொடுங்கள், ரயில்வே மீது நஷ்ட ஈடு கேட்கலாம் என்று வக்கீல் சார் கூறினார்.  நான் வேண்டாம் என்று மறுத்து விட்டேன். என்றாலும் இந்த ரசீதைக் கிழித்துப் போட எனக்கு மனம் வரவில்லை" என்றார்.


பேச்சுவாக்கில் நானும் திருப்பாதிரிப்புலியூரில் இன்னொரு வங்கியில் பணியாற்றிவிட்டு இங்கு வந்திருக்கிறேன் என்பதை அவர் தெரிந்து கொண்டதும் என் மீது விசேஷம் நாட்டம் ஏற்பட்டுவிட்டது. 


அடுத்த சில நாட்களில் எங்கள் அறைக்கு மட்டும்,  உள்ளே சிறிய குளியலறையைக் கட்டிக் கொடுத்தார் நாயுடு. "இனிமேல் காமன் பாத்ரூமை யூஸ் பண்ணாதீர்கள். ஆனால் வேற்று மனிதர்கள் யாரும் வந்து குளிக்க அனுமதியில்லை” என்றார். 


ஆனால் கடைசி வரையில் அவர் திருப்பாதிரிப்புலியூருக்கு  ஏன் சென்றார் என்பதைக் கூறவில்லை. எது அவருடைய சொந்த ஊர், எப்படி ஹைதராபாத் நகருக்கு வந்தார் என்ற கேள்விகளுக்கும்  விடை இல்லை. முக்கியமாக அவருக்குத் திருமணம் ஆகிவிட்டதா இல்லையா என்றும் தெரியவில்லை. 


ஆனால் ஓர் இளம் டாக்டர்,  அரசு மருத்துவக் கல்லூரியில் சந்தேகத்துக்கிடமான முறையில் மரணம் அடைந்தபோது, முதிய வக்கீல் அந்த வழக்கில் ஆஜராகி, உண்மையை நிரூபித்து, இழப்பீடாகப் பெருந்தொகை ஒன்றை இளம் விதவைக்குப் பெற்றுத் தந்தது பற்றிய முழு விவரம் அவரிடம் இருந்தது. அதைத் தெரிந்து கொள்ள நான் ஆவலாக இருந்ததால் மற்றவற்றில் கவனம் செலுத்தவில்லை.

 

கணவனை இழந்த அவ்விளம் பெண் யாரென்று தெரிந்தபோது அதிர்ச்சியடைந்தேன்.

  • இராய செல்லப்பா நியூ ஜெர்சியில் இருந்து.


(தொடரும்)




9 கருத்துகள்:

  1. ஆ.... அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி... தொடர்ச்சிக்கு மேல் தொடர்ச்சி!

    பதிலளிநீக்கு
  2. சஸ்பென்ஸ் வைத்து முடித்து விட்டீர்களே..... நாளை வரை காத்திருக்க வேண்டும்..... Mmmm. என்ன நடந்திருக்கும்.....

    பதிலளிநீக்கு
  3. ஆஹா. சரியான இடத்தில் சஸ்பென்ஸ் "தொடரும்" நானும் கடலூர்காரன். ஆனால் வசிப்பது திருவனந்தபுரத்தில்.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடலூர்க்காரர்கள் எந்த ஊர் போனாலும் பிழைத்துக்கொள்வார்கள்!

      நீக்கு
  4. திருப்பாதிரிப்புலியூர் என்றதும் எனக்கு நினைவுக்கு வருவது அப்பர் சுவாமிகளும் " நற்றுணையாவது நமச்சிவாயமுமே " என்பது தான் .

    பதிலளிநீக்கு
  5. அது முழுக்க முழுக்க ரயில்வேயின் தவறு. ஆனால் பயணிகளுக்குத் தான் அபராதம் விதிக்கப்படும். டிக்கெட் இல்லாமல் கடலூர் டு திருப்பாதிரிப்புலியூர் பயணம் செய்ததற்காக Rs.250 fine என்பது இன்னமும் இருக்கிறதா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படித்தான் நினைக்கிறேன். கடலூருக்கு ரயில் பயனித்துப் பல வருடங்கள் ஆகிவிட்டன.

      நீக்கு