திங்கள், ஜூன் 27, 2022

ஹனுமாரை வணங்கும் கன்னியர் இருவர்-1

ஹனுமாரை வணங்கும் கன்னியர் இருவர் - 1

(நான்கு தூண்கள் நகரம்- 12 )

அமெரிக்காவில் 72 ஆவது நாள் (22-6-2022)



ஐதராபாத்தில் நான் இருந்த மூன்று வருடங்களில் வாரம் ஒரு முறையாவது நான் தவறாமல் சென்ற இடம் பிர்லா மந்திர்.


ரிசர்வ் வங்கியின் நேர் எதிரே சாலையைக் கடந்தால் வளைந்து நெளிந்து செல்லும் ஒரு சந்தின் வழியாக ஒரு குன்று இருக்கும் இடத்தை அடையலாம். அந்தக் குன்றின் மேல்தான் பிர்லா நிறுவனத்தினரால் கட்டப்பட்ட பாலாஜி வெங்கடேஸ்வரா ஆலயம் உள்ளது. மற்ற கோயில்களை எல்லாம் பிள்ளையார் கோயில், முருகன் கோயில், சிவன் கோயில் என்று சொல்லும்போது இந்தக் கோவில் மட்டும் கட்டிக்கொடுத்த பிர்லாவின் நினைவாக பிர்லா மந்திர் என்று வழங்கப்படுகிறது.


பளிங்குக் கற்களாலான ஆலயம். தரையில் இருந்து மலை வரை படிக்கற்களும் பளிங்குக் கற்களே. மலை உச்சியில் உள்ள மண்டபத்தில் திருப்பதியில் போலவே ஆஜானுபாகுவாகக் கரிய நிறத்தில் கண்மூடி நிற்கிறார் வெங்கடாஜலபதி.


இங்கு நாம் கொண்டு போகும் தேங்காய் பழங்களைப் பெற்றுக் கொண்டு அர்ச்சனை செய்வது கிடையாது. அவர்களே தங்கள் செலவில் அதைச் செய்கிறார்கள். பக்தர்களுக்குத் துளசியும் தேங்காய் விள்ளலும் பிரசாதமாகத்  தருகிறார்கள்.


மலை அடிவாரத்தில் ஒரு பழைய அனுமார் கோவில் இருக்கிறது. நிற்க வைத்த கருங்கல்லில் செதுக்கப்பட்ட அனுமான் உருவத்தின் மீது காவியும் சந்தனமும் குங்குமமும் பூசப்பட்டிருக்க, அருகில் ஊதுபத்தி எரிந்து கொண்டிருக்கும். தேங்காய் கொண்டு போயிருந்தால் நாம் இங்கு தான் உடைக்க வேண்டும்.


பக்தர்களின் கூட்டத்தை இவர்கள் அழகாக ஒழுங்குபடுத்தி நிற்க வைத்து அனுப்பும் பாணி போற்றத்தக்கது. 


பாலாஜி தரிசனம் முடிந்த பிறகு கோயிலைச் சுற்றி மலை மீது இருக்கும் அழகான பளிங்குத் தளத்தில் நேரம் போவதே தெரியாமல் நிற்கலாம். வேனில் காலத்திலும் தென்றல் வீசும். காரணம் எதிரே அமைந்திருக்கும் உசைனி சாகர் என்னும்  பிரம்மாண்டமான ஏரி.


நான் ஹைதராபாத்தில் இருந்த காலத்தில் அந்த ஏரி மிகவும் அமைதியாக இருக்கும். பின்னாளில் சந்திரபாபு நாயுடு அவர்கள் முதல்வரானபோது, 'நெக்லஸ் ரோடு' என்ற பெயரில் ஏரியும் அதன் சுற்றுப்புறங்களும் மிக அருமையாக அலங்கரிக்கப்பட்டுவிட்டன. அத்துடன் என்.டி.ராமராவ் முதல்வராக இருந்த பொழுது ஏரியில் நிறுவப்பட்டு அதற்குள்ளேயே தவறி விழுந்துவிட்ட புத்தர் சிலையும், மீட்டெடுக்கப்பட்டு மறுபடி நிறுவப்பட்டு நீண்ட நெடிய உருவமாக மலையில் இருந்து பார்க்கும் போது எழில்காட்சியை வழங்குகிறது.



அப்போதெல்லாம் மாலை ஆறு மணி போல நான் கோட்டியில் இருந்து கிளம்பி, அபீட்ஸ் வழியாக (சுமார் நாலரை கிலோ மீட்டர்) நடந்து சென்று மலையேறி பிர்லா மந்திரைத் தரிசிப்பது வழக்கம். கோவில் மூடும் வரை இருந்துவிட்டுக் கீழிறங்கி வருவேன். நெடுஞ்சாலையில் இருந்து கோவிலின் அடிவாரம் வரை உள்ள பாதை சிறியதாகவும் ஒழுங்கற்றும் இருந்ததுதான் ஒரே குறை. அந்தப் பாதையிலும் நிறைய ஆக்கிரமிப்பு குடிசைகள் இருந்ததாக ஞாபகம். ஆனால் கோவிலின் சுத்தமான  சூழ்நிலையும், ஏரிக் காற்றும், தென்றல் காற்றும், வானில் தெரியும் நட்சத்திரங்களும் அந்தச் சில மணி நேரங்களாவது நம்மை இயற்கையோடு இயைந்த வாழ்வுக்குக் கொண்டு செல்வதை நான் அணு அணுவாக ரசிப்பது வழக்கம்.


அங்கிருந்த 'காமத்' ஓட்டலில் இரவு உணவைச் சாப்பிட்ட பிறகு மீண்டும் அதே நாலரை கிலோ மீட்டர் நடக்க ஆரம்பிப்பேன். எந்தக் கட்டாயமும் இல்லாத இயற்கையான நடை. உணவும் செரிக்கும், அறையில் வந்து படுத்தால் அடுத்த நொடியே உறக்கமும் வந்துவிடும்.


அந்த அனுமான் கோவிலுக்கு அருகிலோ அல்லது எதிர்ப்புறத்திலோ தியானம் செய்வதற்கு ஒரு தனியறை இருந்ததாக ஞாபகம். நம்மூரில் பெண்கள் கந்த சஷ்டி கவசம், திருப்புகழ், விஷ்ணு சஹஸ்ரநாமம் போன்றவற்றைக்  கூட்டாக இசைப்பது போல், ஹைதராபாதில் அனுமார் முன்பு "ஹனுமான் சாலிசா" என்ற நாலடிப் பாடலைக் குழுவாகப் பாடுவார்கள். வட இந்தியாவில் இது இன்னும் பிரபலம். 


'முரடன் முத்து' என்ற படத்தில் அனுமார் பக்தனாக சிவாஜி கணேசன் வருவார். திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்று சபதம் செய்வார். அவரை மடக்கிப் போட தேவிகா படாத பாடு படுவார். கடைசியில் தேவிகா ஜெயிப்பார். தன் பக்தனை இவ்வளவு மோசமாகக் கை விட்டதற்காக அனுமார் மீது  சிவாஜி ரசிகனான எனக்கு ஏற்பட்ட கோபம் மறைவதற்குப் பல நாட்கள் ஆயிற்று. 


ஆனால் பிர்லா மந்திரில் இருந்த அனுமார் மீது எனக்குக் கோபம் வரவில்லை. காரணம் அங்கு பாடப்பட்ட ஹனுமான் சாலிசாவின்  இனிமைதான். பதினைந்து இருபது நிமிடங்கள் அங்கேயே நின்று அந்த பாடலைக் கேட்டு ரசித்த பிறகுதான் மலை ஏறுவேன்.


வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் ஹனுமான் சாலிசா பாடும் குழுவில் நிறையப் பெண்கள் கலந்து கொள்வார்கள். திருமணமாகாத பெண்கள் அந்தக் கோரிக்கையை முன்வைத்துப் பாடுவது வழக்கம். என்னதான் குழுப்பாடலாக இருந்தாலும், அந்தக் கலந்திசையையும் மீறி ஒரு சில பெண்களின் குரல்கள் தெளிவாகவும் வித்தியாசமான கவர்ச்சி உடையதாகவும் இருப்பது உண்டல்லவா? அப்படிப்பட்ட குரலுக்கு சொந்தக்காரி தான் அந்தப் பெண்.


அவள் யார் என்று எனக்குத் தெரியாது. பள்ளி மாணவியாக இருக்கலாம். அதிக உயரமில்லை. இயற்கையான பொலிவோடு சராசரிக் குடும்பப் பெண்ணாக இருந்தாள். சாலிசாவின் வரிகளை அவள் உயிர்த் துடிப்போடு உச்சரித்தாள். எந்த வியாழக்கிழமை  போனாலும் அந்தப் பெண் தவறாமல்  பாடிக் கொண்டிருப்பதைக் கண்டேன். அவ்வளவுதான் அதற்கு மேல் சொல்ல எதுவுமில்லை. 


ஆனால் அவளுடைய இந்தி உச்சரிப்பு மிகத் துல்லியமாக இருந்ததால் அநேகமாகத் தமிழ் பேசும் பெண்ணாக இருக்கலாமோ என்ற ஐயம் எழுந்தது. பின்னாளில் நான் டில்லியில் பணியாற்றியபோது இந்தி பேசும் நண்பர்களும் இதை உறுதி செய்தார்கள். அதாவது 'ஹிந்தி'-யர்களை விடத் தென் இந்தியர்கள் - அதிலும் தமிழர்கள் - பேசும் ஹிந்திதான் மிகத் தெளிவாகவும் இலக்கண சுத்தமாகவும் இருக்கும் என்றார்கள். வைஜயந்திமாலா வையும், ஹேமமாலினியையும், வாணி ஜெயராமையும் உதாரணம் காட்டினார்கள்.


இருபது வருடம் கழித்து அதே ஹனுமார் சன்னதியில் அவளையும் அவளுடைய இன்னொரு தோழியையும்  சந்திப்பேன் என்றோ உங்களுக்குச் சொல்வதற்கு அவர்களிடம் ஒரு கதை இருக்கும் என்றோ அப்போது எனக்குத் தெரியாது. (தொடரும்)




   -இராய செல்லப்பா நியூஜெர்சி யில் இருந்து 

14 கருத்துகள்:

  1. கோவில் குறித்த தகவல்கள் நன்று. சொல்லும் போதே அங்கே சென்று பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது. கடைசி பாரா - செம! காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. கோவில் பற்றிய அனுபவ வர்ணனைகள் அருமை. சொல்ல அங்கேயும் ஒரு கதை இருக்கிறதா... காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. ஹைதராபாத் அனுபவங்கள் சுவையாகச் செல்கின்றன . கதைக்குள் பெண்கள் வந்து விட்டாலே கலகலப்புதானே . அதுவும் உண்மை அனுபவம் என்னும்போது உற்சாகம் கூடுகிறது .

    சாண்டில்யன் போல் தொடரின் முடிவில் ஒரு ஆர்வக் கொக்கி போட்டு நிறுத்தி அடுத்த நாளுக்கு ஆவலுடன் காத்திருக்க வைக்கிறீர்கள் .
    ———நாகேந்திர பாரதி

    பதிலளிநீக்கு
  4. மறுபடியும் உங்கள் வாழ்க்கையில் ஒரு பெண்ணா ?

    மிகவும் விறுவிறுப்பு.. ..

    பதிலளிநீக்கு
  5. ஹனுமான் கோயிலில் மீண்டும் அதுவும் 20 வருடம் கழித்து!! ஆச்சரியம். அதுவும் ஒரு கதையுடன்..

    ஹனுமான் சாலிஸா ரொம்பப் பிடிக்கும். தினமும் கேட்பதுண்டு.

    தமிழர்கள் ஹிந்தியைக் கற்றுக் கொண்டு பேசுவதால் அப்படி இருக்கலாம். வட இந்தியர்களுக்குத் தாய்மொழி. சைனாக்காரர்கள் ஜப்பான்காரர்கள் தமிழைக்கற்று இலக்கண சுத்தமாகப் பேசுவதைப் போன்று என்று சொல்லலாமோ?

    கீதா

    பதிலளிநீக்கு
  6. பிர்லா மந்திருக்கு 1984ல் சென்றிருக்கிறேன். உங்கள் விவரிப்பும், நடையும் சுகம்!

    பதிலளிநீக்கு
  7. ஹூசைன் சாகர், நெக்லேஸ் ரோடு(மிக அழகிய இடம்) ஹனுமான் கோவில் என்னால் மறக்க முடியாதது. மூன்று மாத பயிற்சிக்காக அங்கு இருந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தப் புகைப்படங்களை உங்கள் முகநூலில் வெளியிடலாமே!

      நீக்கு
  8. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  9. உங்கள் வரிகளில் பிர்லா மந்திர் மிகவும் அழகாக இருக்கிறது. நேரில் பார்க்கவேண்டுமென்ற ஆவல் எழுகிறது.

    பதிலளிநீக்கு
  10. அருமையாக காட்சிப் படுத்துகிறீர்கள்..

    பதிலளிநீக்கு