வெள்ளி, ஜூன் 24, 2022

வாங்க, டில்லிக் குளிரில் டீ சாப்பிடலாம்!

வாங்க, டில்லிக் குளிரில் டீ சாப்பிடலாம்!

(புதுடில்லிப் புராணம்- 6 )

அமெரிக்காவில் 70 ஆவது நாள் (20-6-2022)


சுப்பையா சுப்பையா என்றொருவர் எங்கள் தெருவில் வசித்து வந்தார். ஊரில் இருந்த பிரிட்டிஷ் காலத்து தொழிற்சாலை தனது பணியாளர்களுக்காகப் புதிய நகரை உருவாக்கியபோது அங்கிருந்த பெரிய ஆலமரத்தை ஒன்றும் செய்யாமல் விட்டார்கள். அந்த மரத்தடியில்தான் சுப்பையா உட்கார்ந்திருப்பார். 


வயது நாற்பதுக்குமேல் இருக்கும் என்று தங்கவேல் சொன்னான். சக வகுப்பன். அவன் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். சினிமா நடிகைகளின் படத்தை தினத்தந்தியில் பார்த்தே வயதைத் துல்லியமாகச் சொல்லும் அவன் திறமையை ஆசிரியர் ஸ்வாமிதாஸ் வியப்பார். எதிர்காலத்தில் சினிமாக்காரர்கள் வீட்டில் தோட்டக்காரனாகும் யோகம் அவனுக்கு உண்டு என்றும் ஆரூடம் சொன்னார்.


வேலை வெட்டி இல்லாமல் சுற்றிக்கொண்டிருப்பவர் சுப்பையா  என்று கேள்வி. சைக்கிள் வண்டியில் நடமாடும் டீக்கடை ஆசாமி வரும்போது எப்படியாவது தாஜா செய்து டபுள் டீ வாங்கிக் குடித்துவிடுவார். பணம் கொடுத்தாரா என்று தங்கவேலுவுக்குத்தான் தெரியும்.  


காலை எட்டரைமணிக்கு நாங்கள் புத்தகப் பையுடன் செருப்பில்லாத கால்களுடன் பள்ளிக்கு  ஓட்டமும் நடையுமாகச் செல்வதை அலட்சியமாகப் பார்த்துச் சிரிப்பார் சுப்பையா.


“பி.ஏ., எம்.ஏ. படித்தவர்களுக்கே வேலை கிடைப்பதில்லை. நீங்களெல்லாம் மாங்கு மாங்கென்று ஓடுகிறீர்களே, உங்களுக்கு எதிர்காலத்தில் என்ன வேலை கிடைக்கும் தெரியுமா?” என்பார்.


நாங்கள் ஒருகணம் நின்று அவர் வாயையே பார்ப்போம்.


“நான் அடுத்த வருஷம் ஒரு டீக்கடை ஆரம்பிக்கப் போறேன். அதில் ஐந்து பேருக்குப் பயிற்சி அளிக்கப்போறேன்.   உங்களில் யாரெல்லாம் வர்றீங்க? அப்பா அம்மா கிட்ட கேளுங்க. இன்னும் ஒரு வாரத்துக்குள்ள சொல்லிடணும். இல்லேன்னா அப்புறம் இடம் காலி இருக்காது. டீ போடக்  கற்றுக்கொண்டால் வாழ்நாளில் உங்களுக்கு தோல்வியே கிடையாது” என்று கம்பீரமாகச் சிரிப்பார். 


அன்று முழுதும் பள்ளியில் இதே விவாதம்தான். டீக்கடைக்கு ஆளெடுக்கிறார் சுப்பையா என்று தலைமை ஆசிரியருக்குச் செய்தி போயிற்று. எங்களில் சிலபேருடைய பெற்றோர்களும் சுப்பையாவை வந்து பார்த்தார்கள்.


“படிக்கிற பிள்ளைகளைக் கெடுக்க வேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறாயா?” என்று ஆளாளுக்கு அடி கொடுக்காத குறைதான்.   


ஆனால் சுப்பையா அதற்கெல்லாம் அசரவில்லை. எங்களை அவர் தொடங்கப்போகும் டீக்கடையில் சேருமாறு அழைப்பு விடுத்துக்கொண்டே இருந்தார்.


எங்கள் சக வகுப்பாளிகள் யாரும் அவர் வலையில் சிக்காததுடன், நாங்கள் பள்ளியிறுதி முடித்து கல்லூரிக்குப் போகும் வரையில் அவருடைய டீக்கடை தொடங்கப்படவே இல்லை என்பதும் வரலாற்று உண்மையாகும்.

*** 

பாபுவுக்கும் அவனுடைய ஊரில் ஒரு சுப்பையா இருந்திருப்பார்போல. 


பாபுவின் தாய் சின்னாளப்பட்டியில் பிழைக்க வழியில்லாமல், இன்னும் சில பெண்களுடன் டில்லிக்கு ரயிலேறிவந்து கரோல்பாகிலும் மயூர் விகாரிலும் லஜ்பத்நகரிலும் வீட்டுவேலை செய்பவராகச் சில ஆண்டுகள் இருந்தார். ஒரு தேர்தல் சமயத்தில் உள்ளூர் காங்கிரஸ் எம்பி ஒருவர் இவளையும் இவளைப் போன்ற அனாதையான தமிழ்க் குடும்பங்களையும் இந்தர்புரி, திரிலோக்புரி மற்றும் சில ‘புரி’களில் திடீர்க் குடிசைகளை ஏற்படுத்தித் தங்கவைத்து, அவர்களுக்கு வாக்குச்சீட்டுகளுக்கும் வழிசெய்தார். தேர்தலில் அவர் சொல்லும் வேட்பாளருக்கு இவர்கள் வாக்களிக்கவேண்டும். செய்தார்கள்.


ஆனால் தேர்தலில் வென்றபிறகு அந்த வேட்பாளர் இவர்களைத் திரும்பிப் பார்க்க விரும்பாதத்துடன், போலீஸைக் கொண்டு குடிசைகளைப் பிரித்துப் போட்டு அவர்களைச்  சிதறிப்போகவும் காரணமானார். 


கரோல்பாகில் சாஸ்திரி பார்க் என்ற பூங்கா இருந்தது. நான் டில்லிக்கு வந்தபோது அது பூங்காத்தனத்தை முழுதும் இழந்து, ஓடாமல் நிற்கும் பழைய கார்கள், பைக்குகளின் புகலிடமாக மாறிவிட்டிருந்தது. நடுநடுவே இருந்த காலி இடங்களில் தார்பாலின் கூரையின் கீழ் இந்த அனாதைத் தமிழர்கள் பனி, வெயில், மழையென்று பாராமல், வீசி எறியப்பட்ட வெங்காயப் சிறகுகளைப்போல் சுருண்டும் உலர்ந்தும் சுருங்கியும் கிடந்தது கண்களில் இரத்தத்தை வரவழைப்பதாக இருந்தது. இவர்களில் பாபுவின் தாயும் ஒருவர். (தந்தை எப்பொழுதோ விட்டுப் பிரிந்துவிட்டாராம்). இந்த நிலையில்தான் தாய்க்கு உதவியாக டில்லிக்கு வந்தான் பாபு. எட்டாவது வரை படித்திருந்தான். ஏதோ ஒரு சுப்பையாவின்  கடையில்  டீ  போடவும் பாய்லரைக் கழுவவும் கற்றுக்கொண்டிருந்தது  டில்லியில் அவனுக்கு எங்கள் வங்கியில் டீ வழங்கும் வேலையைப் பெற்றுக்கொடுத்தது. அதாவது, காலையில் ஒருமுறையும் மாலையில் ஒருமுறையும் வங்கியில் நுழைய அனுமதி கொடுக்கப்பட்டது. டீ  மற்றும் பிஸ்கட் சப்ளை செய்யலாம். மற்ற நேரங்களில் எடுபிடி வேலையும் செய்யலாம். ஆனால் வங்கிக்கும் அவனுக்கும் அதிகாரப்பூர்வமாக சம்பந்தமில்லை என்பது தெளிவாக்கப்பட்டிருந்தது. 


எங்கள் வங்கியில் அப்போது சுமார் ஐம்பது பேர்களுக்கு மேல் பணியாற்றிக்கொண்டிருந்தார்கள். எனவே, வங்கியில் ஒரு கேண்டீன் ஏற்படுத்தவேண்டும் என்று ஊழியர் சங்கம் வற்புறுத்தியது. ஆனால் அதை முறைப்படி செய்வதென்றால்  பல்வேறு அனுமதிகளைப் பெறவேண்டும். சிலசமயம் அனுமதி கிடைக்காமலும் போகலாம்.  எனவே கள நிலவரத்தைப் பொறுத்து மண்டல மேலாளர்கள்  முடிவெடுப்பதே வழக்கம். தலைமை அலுவலகத்திற்கும் இது ஏற்புடையதாகவே இருந்தது. ஏனென்றால், ஏதேனும் தவறு நிகழுமானால், மண்டல அலுவலகத்தைப் பொறுப்பாக்கிவிட முடியுமல்லவா?


பாபு இயற்கையிலேயே நல்ல பண்புடையவன். நேர்மையானவன். எல்லாருக்கும் இசைந்தவனாகப் பணி செய்தான். ஆகவே வங்கியின் மூன்று தளங்களில் அதிகம் பயன்படாமல் இருந்த ஒரு தளத்தின் மூலையில்  அங்கேயே தங்கி தேநீர் தயாரிக்கத்  தேவையான பொருட்களை வைத்துக்கொள்ள அதிகாரபூர்வமற்ற  அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் ஊழியர்களில் நொறுக்குத் தீனி மற்றும் சோடா,லஸ்ஸி போன்ற தேவைகளை உணரத் தொடங்கியதும் அவற்றையும்  அங்கேயே தயாரிக்க ஏற்பாடு செய்தான். இதனால் பாபுவிடம் செலவு போக மாதம்தோறும் சில ஆயிரங்கள் சேர ஆரம்பித்தன. எங்கள் எல்லோருக்கும் அதில் மிகுந்த ஆனந்தம் ஏற்பட்டது. அனாதையாக வந்த குடும்பம் இப்போது சக்தி நகரில் ஓரிடத்தில் வாடகைக்கு நல்ல குடிசை கிடைத்து வயிறார உண்ணமுடிந்தது. அவன் தாய்க்குப் பல வருடங்கள் கழித்து மகனின் உழைப்பால் நல்ல துணிமணிகள் கிடைத்தன. யார் கண்ணும் பட்டுவிடக் கூடாதே என்பதே என் கவலையாக இருந்தது.    


பனிக்காலம் தொடங்கினால் பாபுவுக்கு வேலை அதிகம் ஏற்பட்டுவிடும். தேநீர் கொதிக்க அதிக நேரம் வேண்டும். ஒரே நிமிடத்தில் ஆறிவிடும். இதற்கிடையில் ஆரிய ஸமாஜ் ரோடில் இருந்த இன்னும் இரண்டு மூன்று வங்கிக்கிளைகளிலும் பாபுவுக்கு தொடர்ந்து பிஸினஸ் கிடைத்தது. வருமானம் அதிகரித்தாலும் தனி ஒருவனாகச் சமாளிக்க முடியவில்லை. வேலைக்கு யாரை வைப்பது என்று தவித்தான். ஏனென்றால் வேலை கற்றுக்கொண்டு தனக்கே துரோகம் செய்துவிட்டு தொழிலைப் பிடிங்கிக்கொண்டுவிட்டால் என்ன செய்வதென்ற பயம் எழுந்தது. 


டில்லியில் பாபுவுக்கு வேலை கிடைத்து ‘ராஜா மாதிரி’ இருப்பதாக யாரோ தம்பட்டம் அடித்துவிட,  அதனால் ஊரிலிருந்து இரண்டு பேர் - ஒரு பெண்ணும் ஒரு ஆணும்- அவனை நம்பி சாஸ்திரி பார்க்கில் படுத்து நட்சத்திரங்களைப்  பார்க்கும் ஆசையில் முன்தகவல் இல்லாமல் வந்துவிட்டார்கள். ஆனால் பாபுவின் அதிரஷ்டமே அது. அவன்  அவர்களைக் கைவிடவில்லை. அவர்கள் பாபுவுக்கு ஒன்றுவிட்ட தம்பியும் தங்கையுமாம். மறு நாள்முதல் அந்தப் பெண் - பாமா- பாபுவுக்கு உதவியாக எங்கள் அலுவலகத்திற்கு வந்துவிட்டாள். அந்தப் பையன் -முத்து- மற்ற மூன்று வங்கிகளைக் கவனித்துக்கொள்ளுமாறு பாபு  அவனுக்குப் பயிற்சியளித்தான்.


இது இரண்டு வருடக் கதை!


முன்பெல்லாம் எங்கள் தலைமை அலுவலகத்தில் இருந்து எந்த அதிகாரி வந்தாலும் அவர்களிடம் தனக்கு சிபாரிசு செய்து ஒரு கடைநிலை ஊழியன் பணியாவது வாங்கிக்கொடுக்குமாறு தொந்தரவு செய்வான் பாபு. இப்போதோ, தேநீர் வேலையிலேயே தனக்கு அதைப் போல மூன்று மடங்கு வருமானம் கிடைப்பதாகவும்  அதனால் எக்காரணம் கொண்டும் வேறு வேலைக்குப் போகமாட்டேன் என்றும் கூறினான். இன்னும் சில வருடங்களில் கரோல்பாகில் ஒரு சௌத் இண்டியன் ரெஸ்டாரண்ட் தொடங்குவதே தன்னுடைய கனவு என்றும் கூறினான். 


எல்லோரும் அவனை வாழ்த்தினோம். நல்லவன், உழைப்பாளி, இந்தி படிக்காதே என்று அறிவுறுத்தும் மாநிலத்திலிருந்து வந்து, தானாகவே இந்தியும் கற்று, சுயதொழிலும் செய்து முன்னேறிக்கொண்டிருப்பவனை யார்தான் வாழ்த்தாமல் இருக்க முடியும்!


ஆனால் ஹோலிப் பண்டிகைக்குப் பிறகு வந்த ஒரு விடுமுறை நாளில் எங்கள் மண்டல மேலாளருக்கு ஒரு தகவல் வந்தது. உடனே அவர் தன்னுடைய டிரைவரிடம் காரைக் கொடுத்தனுப்பி, ‘பாபுவைப் பார்த்து வாருங்கள்’ என்றார். நாங்கள் இருவர் கிளம்பினோம், சக்தி நகருக்கு. 


சரியான முகவரி இருந்ததால், குடிசைப் பகுதியாக இருந்தபோதும்   இடத்தைக் கண்டுபிடித்துவிட்டோம். பாபுவின் தாய் அழுதுகொண்டிருந்தார். சுற்றிலும் தமிழறியாத கூட்டம். ஒன்றும் புரியவில்லை. எங்களைக் கண்டதும் குடிசையில் இருந்த பாமா தயக்கத்துடன் வெளியில் வந்தாள். 


“அவரை  யாரோ அடித்துவிட்டார்கள். ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறோம்” என்றாள், அவளும் தன்பாட்டுக்கு அழுதுகொண்டே. எப்போதும் ‘பாபு’ என்று பெயர் சொல்லி அழைப்பவள், இன்று ஏன் ‘அவர்’ என்கிறாள் என்று மனதில் சுருக்கென்றது எனக்கு. 


“எல்லாம் இவளால் வந்ததுதான். பாருங்க இவ கழுத்துல தாலி தொங்கறதை!” என்றார் பாபுவின் தாய்.        


அப்போதுதான் கவனித்தோம். பாமாவின் முகத்திலும் கழுத்திலும் மஞ்சள்கோலம் பளபளத்தது. காலில் மெட்டி ஏறியிருந்தது. அணிந்திருந்த புடவையும் புதியதாக இருந்தது. 


“இவளைத் தங்கை என்றுதானே அறிமுகப்படுத்தினான் பாபு?” என்று மெல்லக் கேட்டார் நண்பர். முதல்முறையாக பாபுவிடம் ஏதோ தவறு இருப்பதாக என் மனதில் ஒரு சந்தேகக்கீற்று தோன்றியது.      


(தொடரும்)

 • இராய செல்லப்பா நியூ ஜெர்சியில் இருந்து 

 
6 கருத்துகள்:

 1. டண்டடைங் ...  சந்தேகத்தின் முதல் வித்து!  பனிமலையின் மேல்நுனி!

  பதிலளிநீக்கு
 2. தங்கையை எப்படி தாராமாக்க முடியும்? ஏதோ உள்குத்து இருக்கும்.

  பதிலளிநீக்கு
 3. மாடர்ன் தியேட்டர்ஸ் சஸ்பென்ஸ்

  பதிலளிநீக்கு
 4. ஆலமரத்து சுப்பையாக்களின் சொல்லுக்கான கரணம் எளிதில் புரிந்துவிடுவதில்லை. அவர் எதற்காக அப்படிசொன்னாரென்று இங்கேயும் புரியவில்லை!

  பதிலளிநீக்கு