திங்கள், ஜனவரி 05, 2015

பதிவு 2/2015 நூறு கவிஞர்கள் – ஆயிரம் ஹைக்கூக்கள்

பதிவு 2/2015

நூறு கவிஞர்கள் – ஆயிரம் ஹைக்கூக்கள்

நாரத்தங்காயை நறுக்கி உப்பிட்டு நிழலில் உலர்த்தி எடுத்துவைப்பார்கள். கன்னங்கரேலென்று ஆகிவிடும்.  இரண்டுவருடம் ஆனாலும் கெடாது. தயிர்ச்சோற்றுடன்  சாப்பிட்டால் விண்ணோர் அமுதமும் அதற்கு ஈடாகாது.

சாகித்ய அகாதெமிக்காக முனைவர் இரா.மோகன் தொகுத்தளித்த ‘தமிழ் ஹைக்கூ ஆயிரம்’ என்ற நூலைச் சென்ற வருடம் (2014) சென்னை புத்தகக் காண்காட்சியில் வாங்கினேன். இன்றுதான் படிக்க நேரம் கிடைத்தது. பழைய நாரத்தங்காய் ஊறுகாயை விடவும் சுவையான தொகுப்பு.

தமிழில் வெளியான  ஹைக்கூ கவிதை நூல்களில் நூறைத் தேர்ந்தெடுத்து, அவை ஒவ்வொன்றிலிருந்தும் பத்துக் கவிதைகளைப் பொறுக்கியெடுத்து ஆயிரம் ஹைக்கூ கொண்ட இந்நூலைத் தொகுத்திருக்கிறார், மோகன். (144 பக்கம்  விலை ரூ.90.)   வெளியீடு: சாகித்ய அகாதெமி. (சென்னை புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும்).

நூறு கவிஞர்களை நேருக்கு நேர் சந்திப்பதுபோன்ற அனுபவத்தைத் தருகிறது இந்நூல். ஆயிரம் கவிதைகளைத் தேர்ந்தெடுக்கும் (நன்றியில்லாத) திருப்பணியை விடவும், மோகன் வழங்கியிருக்கும் அற்புதமான முன்னுரை மதிப்பு மிக்கது. ஹைக்கூ வின் தமிழ்நாட்டு நுழைவின் சரித்திரத்தை அவர் இப்படித் தருகிறார்:   

“1916இல் ‘ஹொக்கு’ என்ற பெயரால் தமிழுக்கு முதன்முதலில் அறிமுகம் செய்தவர் கவியரசர் பாரதியார். 1968ஆம் ஆண்டில் ‘நடை’ முதல் இதழில் ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளை முதன்முதலில் மொழிபெயர்த்துத் தந்தவர் கவிஞர் சி.மணி. 1970ஆம் வாக்கில் தமிழ் மரபுப்படி இக்கவிதைக்கு ‘சிந்தர்’ எனப் பெயர் சூட்டி, தமிழில் சோதனை முயற்சியாகச் சில ஹைக்கூ கவிதைகளையும் முதன்முதலில் எழுதி வெளியிட்டவர் –‘வாமனக் கவிதைகள்’, ‘மின்மினிக் கவிதைகள்’ என்ற பெயர்களையும் சூட்டி மகிழ்ந்தவர் – கவிக்கோ அப்துல் ரகுமான்; ‘ஜப்பானிய ஹைக்கூ’ (1987), ‘இதுதான் ஹைக்கூ’ (1990) என்ற இரு நூல்களை வெளியிட்டு ஹைக்கூ கவிதையின் வளர்ச்சிக்கு அயராது பணியாற்றியவர் முனைவர் தி.லீலாவதி; 1984-ஆம் ஆண்டில் ‘புள்ளிப் பூக்கள்’ என்ற முதல் தமிழ் ஹைக்கூ கவிதைத் தொகுதியை வெளியிட்டவர் ஓவியக் கவிஞர் அமுதபாரதி; தொடர்ந்து 1985-ஆம் ஆண்டில்  ‘ஜப்பானிய ஹைய்கு வடிவக் கவிதைகள்’ என்ற அறிமுகக் குறிப்போடும், ‘வாசல் ஓர வாசகம்’ என்ற பதினான்கு பக்க ஆய்வு முன்னுரையோடும் ‘சூரியப் பிறைகள்’ என்னும் தொகுப்பினை வெளியிட்டவர் முன்னணிக் கவிஞர் தமிழன்பன்; 1988-ஆம் ஆண்டில் இலங்கையில் ‘கூடைக்குள் தேசம்’ என்ற தலைப்பில் முதன்முதலாகத் தமிழில் ஹைக்கூ வடிவக் கவிதைத் தொகுதியை வெளியிட்டவர் சு.முரளிதரன். இன்று தமிழில் இருநூற்றுக்கு மேற்பட்ட ஹைக்கூ கவிதைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன....”   

“ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளில் இயற்கையின் தரிசனமும், தத்துவப் பார்வையும், படிமப் பாங்கும் சிறப்பிடம் பெற்றுள்ள நிலையில், தமிழ் ஹைக்கூ கவிதைகளில் இன்றைய சமூக, பொருளாதார, அரசியல் நிகழ்வுகளும், அன்றாட நடைமுறை வாழ்க்கை அனுபவங்களும் முதலிடம் பெற்றுள்ளன...சுருங்கக் கூறின், அங்கதம், முரண், நகை ஆகிய மூன்று சுவைகளும் ஒன்று சேர்ந்த ‘திரிவேணி சங்கமம்’ ஆகத் தமிழ் ஹைக்கூ கவிதைகள் காட்சியளிக்கின்றன....”

தமிழ் தெரிந்த அனைவர் கையிலும் இருக்கவேண்டிய முக்கியமான நூல் இது. ஆசிரியர்களுக்கும் பேச்சாளர்களுக்கும் மேற்கோள் காட்டுவதற்கு இனிமையான ஹைகூக்கள் ஆயிரம் ஒரே இடத்தில் வேறெங்கே கிடைக்கும்? இந்த அருமையான தொகுப்பை நமக்கு வழங்கிய முனைவர் இரா மோகனுக்கு நமது வாழ்த்துக்கள்!

இனி, ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல், ஆயிரத்திலிருந்து சில ஹைகூக்கள் இதோ உங்கள் பார்வைக்கு:   


ஒரு கன்னத்தில் அறைந்தான்
மறு கன்னத்தைக் காட்டினேன்
அங்கும் அறைந்தான்.
-கழனியூரன் (‘நட்சத்திர விழிகள்’ – 1990)

படித்துப் படித்துப்
பட்டம் வாங்கினோம்
எரியாத ஈரவிறகு.
-துறவி (‘சிறகுகளின் சுவடுகள்’-1993)

கருத்த பெண்
புகுந்தகம் வந்தாள்...
கலர் டிவியோடு!
-மு.முருகேஷ் (‘விரல் நுனியில் வானம்’-1993)

தென்றல் வீசுகிறது
அனுபவிக்க இயலவில்லை
நாளை இண்டர்வியூ.
-ஆர்.வி.பதி (‘ஹைக்கூ கவிதைகள்’-1994)

கல்லாகவே இருந்துவிடுகிறேன்
மிதித்து விடாதே
சுற்றிலும் இந்திரன்கள்
-ராஜ முருகு பாண்டியன் (‘ஹைகூப் பறவைகள்’ – 1994)

திண்ணையிலிருந்து
நிலவை ரசிப்போம்
தொலைந்தது வீட்டுச் சாவி.
-ராஜ முருகு பாண்டியன் (‘ஹைகூப் பறவைகள்’ – 1994)

பெண் பிறக்கட்டும்
குடும்பத்தோடு பிரார்த்தனை-
பிரசவ வலியில் பசு!
-நவதிலக் (‘பூக்கள் பறிப்பதற்கில்லை’ – 1994)

கார்காலம் வந்தது
பனிக்காலம் வந்தது
நல்ல காலம்?
-மாடப்பள்ளி ஜெயசீலன் (‘சுண்டு விரல்’ – 1998)

எதிலும் சந்தேகம்
போலியோ சொட்டு மருந்து
போலியோ?
-மாடப்பள்ளி ஜெயசீலன் (‘சுண்டு விரல்’ – 1998)

இறுக்கிக் கட்டுங்கள்
இடுப்பு வேட்டியை
போகுமிடம் சட்டசபை!
-கவிமுகில் (‘சூரியத் துளிகள்’ -1998)

பெண்பார்க்கும் படலம்
வீடு கடத்தப்பட்டாள்
அழகான தங்கை!
-பாரதி மணியன் (‘ஹைக்கூ 50’ – 1999)

ஓய்வெடுத்தன
பறவைகள்
உழைப்பாளர் சிலைமேல்
-ந.முத்து (‘எடை குறைவாய்...’ -1999)

பஷீர் வீட்டு
முருங்கைக் கீரை...
மாரியாத்தா கூழுக்கு!
-கா.ந.கல்யாணசுந்தரம் (‘மனித நேயத் துளிகள்’ – 1999)

திதி செய்ய மனமில்லை
இன்னும் வாழ்கிறாள்
மனதில் அம்மா!
-பால பாரதி (‘இதயத்தில் இன்னும்’ -2000)


தொலைந்த மோதிரத்தை
தேடினாள் சகுந்தலை
அடகு வைக்க.
-வண்ணை சிவா (‘ஒற்றைக் கல் சிற்பம்’ -2002)

பெண் உரிமை பற்றி
முழக்கமிட்டாள்
கணவன் அனுமதியுடன்.
-சோலை இசைக்குயில் (‘சூரியனுக்கு வெட்கமில்லை’ -2002)

இரவெல்லாம் குளித்தும்
கறை போகவில்லை
குளத்தில் நிலா.
-இளந்தென்றல் (‘ஊசித்துளை வழியே ஓர் ஊர்வலம்’ – 2003)

நிறையப் பேச நினைத்து
அமைதியாய் விழுந்தேன்
விழி ஈர்ப்பு விசை.
-ஆலா (‘உயிர் வேலி’ – 2003)

நெடுநேரமாய்ப் பேசும் நண்பன்
போகையில் கேட்பானோ...
கடன்!
-இரா.அ.தென்றல் நிலவன் (‘முதல் ரோஜா’ – 2003)

இரவுப் பேருந்துப் பயணம்
தூங்கவேயில்லை
சில்லறை பாக்கி.
-சு. சேகர் (‘முள்ளின் முகவரி’ – 2003)

சக்கையாய்ப் பிழிகிறான்
சாறு விற்பவன்
பாவம், கரும்பு.
-சி.கே.சந்திர மோகன் (‘அல்வாத் துண்டுகளும் சில அணுகுண்டுகளும்’-2004)

கோயிலில்
பக்தர்கள் கூட்டம்
நெரிசலில் கோரிக்கைகள்.
-ராஜசேகர் (‘நதியில் சிறகுகள்’ – 2004)

வீடு நிறையப் பொருள்
பெட்டி நிறையப் பணம்
அயல்நாட்டில் கணவன்.
-மரியா தெரசா (‘துளிப்பா தோப்பு’ – 2004)

இறந்த அப்பா
இன்னும் வழிகாட்டுகிறார்
அலமாரியில் புத்தகங்கள்.
-கம்பம் மாயவன் (‘மின்மினியின் வெளிச்சத்தில்’ -2005)

மகனின் கடிதத்தில்
என்றென்றும் அன்புடன்
காப்பகத்தில் தாய்.
-கன்னிக்கோவில் இராஜா (‘தொப்புள் கொடி’ – 2005)

கோட்டு சூட்டுடன்
திருஷ்டிப் பொம்மை
கோவணத்தில் தொழிலாளி.
-வெ.கலிவரதன் (‘ஒத்திகை’ – 2006)

நாற்காலியைத்
தூக்கியெறிந்து சண்டை
நாற்காலிக்காக.
-சி.விநாயக மூர்த்தி (‘புன்னகை மின்னல்’ -2007)

பேராசிரியர் இரா மோகன், 1972இல் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி மாணவராக அடியெடுத்துவைத்து, படிப்படியாக முன்னேறி பேராசிரியர் ஆனார். ஆட்சிக் குழு உறுப்பினராகவும் ஆனார். அண்மையில் ஓய்வு பெற்றவர். இதுவரை 88 நூல்களை வெளியிட்டிருக்கிறார். சாகித்ய அகாதெமியின் பொதுக் குழு உறுப்பினராகவும் இருக்கிறார்.

(மேற்கோள் கவிதைகளை எழுதிய கவிஞர்களுக்குச் சிறப்பான வாழ்த்துக்கள்!)

-இராய செல்லப்பா, சென்னை.
(c)  Y Chellappa               
email: chellappay@yahoo.com

14 கருத்துகள்:

 1. அருமை ஐயா
  வாங்கிப் படிக்கின்றேன்
  நன்றி

  பதிலளிநீக்கு
 2. வணக்கம்
  ஐயா
  படிக்க படிக்க திகட்டாத தொகுப்பு தாங்கள் படித்ததை மற்றவர் பார்வைக்கு பதிவாக எழுதியமைக்குநனறிகள் பல
  த.ம3
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 3. தித்திக்கும் வரிகள்...

  அறிமுகத்திற்கு நன்றி ஐயா...

  பதிலளிநீக்கு
 4. நல்ல புத்தகம்! ஹை! என்று சொல்ல வைக்கும் அருமையான ஹைக்கூக்கள்!! சார்

  தகவல் தந்ததற்கு மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 5. அருமையான கவிதைகள்
  நிச்சயம் புத்தகத்தை வாங்கிப் படிக்கவேண்டும்
  ஒரு நல்ல கவிதை எழுதப் பயில்வதற்காகவேணும்..

  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுக்குச் சொல்லியா தர வேண்டும் ஹைக்கூ எழுத? விரலைத். தட்டினால் வந்து விழாதா?

   நீக்கு
 6. அனைத்தும் முத்துக்கள்! இனி நானும் எழுதிப் பார்க்க வேண்டும்! தங்கள் நடை அருமை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எழுதித் தள்ளுங்கள் புலவரே! படிக்கக் காத்துக் கொண்டிருக்கிறோம் !

   நீக்கு