(நான்கு தூண்கள் நகரம்-7)
அமெரிக்காவில் 59 ஆவது நாள் (09-6-2022)
ஹைதராபாத் செகந்திராபாத் என்ற இரட்டை நகரங்களில், அப்போது ரயில்வேத் தமிழர்கள் அதிகம் வாழ்ந்த இடம் செகந்திராபாத். ஆனால் ஹைதராபாதுக்குச் சென்னையில் இருந்து ஒரே ஒரு ரயில்தான் ஓடியது. (பிறகு சார்மினார் எக்ஸ்பிரஸ் வந்தது). மாலை நாலரை மணிக்குச் சென்னையை விட்டுக் கிளம்பும் ரயில் மறுநாள் காலை, பொழுது விடியும் நேரத்தில் செகந்தராபாத் வரும். வரும் என்பதை விட வந்து நின்று விடும் என்று சொல்லலாம். ஒரு மணி நேரம் போல நின்று விட்டு அதன் பிறகுதான் ஹைதராபாதை நோக்கிப் புறப்படும்.
மங்களூர்க்காரர்கள் காலை எழுந்தவுடன் ரவா உப்புமாவும் கேசரியும் சாப்பிடுவார்கள். இந்த இரட்டை நகரத்தவர்களோ காலை நேரத்தில் தேனீருடன் சுடச்சுட ஜாங்கிரி சாப்பிடுவார்கள். அதற்காகவே இரயிலில் இருந்து இறங்கி தேனீர்க் கடைகள் முன்பு திரண்டு நிற்பார்கள். பார்க்க ஆச்சரியமாக இருக்கும். (பல் தேய்க்காமல் சாப்பிடுவார்களா போன்ற அசட்டுக் கேள்விகள் வேண்டாம்).
அதே ரயிலில் தொடர்ந்து ஐதராபாத் போய் இறங்குவதை விட, செகந்திராபாதிலேயே இறங்கிவிட்டு, அருகில் இருக்கும் பஸ் ஸ்டாண்டில் ஏதாவது ஒரு பஸ்ஸைப் பிடித்தால் என் அறைக்கு விரைவாகச் செல்ல முடியும் என்று தெரிவதற்குச் சில மாதங்கள் ஆனது.
அப்படியும் அறைக்குப் போய்ச் சேருவதற்கு ஒரு மணி நேரம் ஆகிவிடும். விஷயம் என்னவென்றால், பஸ்சில் செல்லும் இடத்தின் பெயர் இருக்காது, ரூட் நம்பர் மட்டுமே இருக்கும். அதைப் பார்த்து ஏறி அமர வேண்டியதுதான். ரயிலில் வருபவர்களில் கிட்டத்தட்ட பாதிப்பேர் பஸ்ஸில் ஏறி விடுவார்கள். டிரைவர் ஜாங்கிரி சாப்பிட்டுவிட்டு வரும்போது கண்டக்டர் பாதி ஜாங்கிரி தான் சாப்பிட்டிருப்பார் அல்லது அதில் உள்ள வளையங்களை எண்ணிக் கொண்டிருப்பார். அவரை விட்டு விட்டே பஸ் கிளம்பும். ஆனால் அடுத்த திருப்பத்தில் எப்படியோ கண்டக்டர் பஸ்சிற்குள் இருப்பார். அங்கேயே பஸ் நிறுத்தப்பட்டு டிக்கெட் கொடுக்கப்படும். அப்போதுதான் ஒரு ஆச்சரியமான விபரீதம் நிகழும்.
ரூட் நம்பர் 51 என்று நீங்கள் ஏறி இருப்பீர்கள். அரை மணி கழித்து தான் டிரைவர் வண்டியை எடுப்பார். அதற்குள் செக்கிங் இன்ஸ்பெக்டர் அவசரமாக வந்து, இது ரூட் 51 அல்ல, ரூட் 73 என்று அந்த போர்டை பஸ்ஸின் நெற்றியில் ஒட்டுவார். உடனே அடித்துப் பிடித்துக் கொண்டு அனைவரும் கீழே இறங்குவார்கள். அதேசமயம் 73 ரூட்டில் போக வேண்டியவர்கள் இன்னொரு வண்டியிலிருந்து இறங்கி திபுதிபுவென்று உள்ளே நுழைய முயல்வார்கள். யுத்த களம் போலக் காட்சி தரும்.
ஹைதராபாதில் நான் பணியாற்றிய மூன்று வருடங்களில் பலமுறை இந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் கண்ணால் கண்டும், சிக்கி அனுபவித்தும் ரசித்திருக்கிறேன்.
செகந்திராபாத்தில் சரோஜினிதேவி ரோடில் கீதா அல்லது சங்கீதா என்ற சினிமா தியேட்டர் இருந்ததாக ஞாபகம். தியேட்டரைச் சுற்றி வணிக வளாகமும் கட்டப்பட்டுக் கொண்டிருந்தது. கட்டமைப்பு முழுமையாக எழும்பாத நிலையிலேயே எங்கள் வங்கி அங்கு இடம் பிடித்துக்கொண்டது. அத்துடன் வெறும் நான்கு சுவர்கள் மட்டுமே இருந்த இடம் ஒன்று வங்கி மேலாளருக்கான இருப்பிடமாகவும் கொடுக்கப்பட்டது. (கட்டி முடித்த பிறகு இடம் பிடித்தால் வாடகை ஒன்றரை மடங்கு ஆகிவிடும்).
ஒருமுறை செகந்திராபாத்தில் ரயில் நின்றபோது, வேகமாக இறங்கி, நடந்து சென்று, அந்த மேலாளரின் வீட்டில் காப்பி அருந்தி விட்டு, திரும்பவும் அதே ரயிலில் ஏறிக் கொண்டு ஹைதராபாதில் இறங்கியது நினைவிருக்கிறது.
ஞாயிற்றுக்கிழமை எனக்கு விடுமுறை. ஆனால் கீதா காம்ப்ளெக்ஸில் இருந்த வங்கிக்கு அன்று பணி நாள். அந்த மேலாளரும் தமிழர் என்பதால் என்னை அவ்வப்பொழுது உணவருந்த அழைப்பதுண்டு. அப்போது முக்கியமான ரயில்வே ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த சிலரை அங்கு சந்தித்தேன். எல்லோருமே தமிழர்கள்.
ரவீந்திர பாரதி அரங்கம் |
ரவீந்திர பாரதி அரங்கத்தில் மாதாமாதம் அடிக்கடி இசைக்கச்சேரி நடத்துவதாகவும், நவராத்திரி உற்சவம் விசேஷமாக நடைபெறும் என்றும், முக்கியப் பாடகி சேலம் ஜெயலட்சுமி என்றும் தெரிவித்தார்கள். தங்கள் நகருக்கு நான் வந்திருப்பதைப் பெருமையாகக் கருதுவதாகக்கூறி எனக்கு இலவசச் சீட்டுகள் இரண்டு கொடுத்தார்கள். மேலாளர் அந்தக் கிளையில் அவர்களுடன் இரண்டு வருடத்துக்கு மேல் பழகியவர் என்பதால் அவர்களுக்கும் சேர்த்து உணவு பரிமாறப்பட்டது. அவர்கள் கிளம்பும்போது அந்த இசை விழாவின் செயலாளராக இருந்தவர், 'உங்கள் வாடிக்கையாளர்கள் மூலம் 1,000 ரூபாய்க்கு டிக்கெட் விற்றுக் கொடுக்க முடியுமா' என்று மெல்லிய குரலில் கேட்டார். 'நான் ஊருக்குப் புதுசு' என்று தப்பித்துக் கொண்டேன்.
ரவீந்திர பாரதி அரங்கம் மிக அருமையான கலையுணர்வோடு கட்டப்பட்டிருந்த அரங்கமாகும். அதற்கு எதிரில் சாலையின் குறுக்காக நடந்தால் பிர்லா மந்திர் மலைக் கோயிலை அடையலாம். அரங்கத்திற்கு மிக அருகில் 'காமத்' ஹோட்டல் இருந்ததும் அரங்கத்திற்கு வாடிக்கையாளர்களை எளிதாகக் கொண்டு வந்தது.
அந்த அரங்கில் இரண்டு நவராத்திரி இசை விழாக்களில் நான் கலந்துகொண்டேன். இரண்டிலும் முக்கியப் பாடகி சேலம் ஜெயலஷ்மி தான். தலைமை தாங்கியது குறிப்பிட்ட அதே நீதிபதி தான். ஒருமுறை ஜெயலஷ்மி நன்றாகப் பாடினார். ஜலதோஷம் சொல்லிக்கொண்டா வரும்?
இந்த இசை விழாக்களை நமது மேலாளர் தவறவிடுவதில்லை. புதிய வாடிக்கையாளர்களை அங்கிருந்துதான் அவர் வேட்டையாடுவார். அதற்கான உத்திகளில் ஒன்று, பட்டுப்புடவை யோடு நகைகள் ஜொலிக்க உள்ளே நுழையும் தமிழ்ப் பெண்மணிகளை வாசலிலேயே மடக்குவார். "ஓ, காஞ்சிபுரத்தில் வாங்கினீர்களா? எப்படியும் 12க்கு குறையாது தானே?" என்பார். அந்தப் பெண்மணி மயங்கிப் போவார். நான்கு ஆயிரத்துக்கு வாங்கியதை 12,000 என்று மதிப்பிட்டால் பெருமிதம் ஏற்படாமல் என்ன செய்யும்? அவரைச் சுற்றியிருந்த பெண்மணிகள் குழுவில் அவருக்குப் புதிய மதிப்பு ஏற்பட்டுவிடும். இதற்குக் காரணமான மேலாளருக்கு நன்றி தெரிவிக்க வேண்டாமா? "சிண்டிகேட் வங்கியில் 'எஃப் டி' அடுத்த வாரம் மெச்சூர் ஆகிறது. உங்களுக்கு மாற்றித் தருகிறேன்" என்று மலர்ந்து சிரிப்பார். தன் தோழிகளிடமும் சிபாரிசு செய்வார்.
ஒருமுறை ஏதோ காரணத்தால் இசை நிகழ்ச்சி தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. வருடத்துக்கு மூன்று நிகழ்ச்சிக்கு பதில் ஒரே ஒரு நிகழ்ச்சியோடு நின்று விட்டிருந்தது. அதே பெண்மணியை இன்னொரு ஞாயிற்றுக்கிழமையில் அதே வங்கியில் நான் சந்திக்க நேர்ந்தது. மேலாளரிடம் புலம்பித் தீர்த்து விட்டார். "செக்ரட்டரியை மாற்ற வேண்டும்" என்றார்.
"எட்டு மாதம் ஆகிவிட்டது, ஒரே ஒரு கச்சேரி தான் நடந்திருக்கிறது. ஆறு மாதத்துக்கு ஒருமுறையாவது நடக்க வேண்டாமா?"என்று தன் வேதனையை வெளிப்படுத்தினார்.
'ஆறு மாதத்துக்கு ஒரு முறையாவது' என்ன கட்டாயம் என்று புரியவில்லை. கேட்டேன்.
என்னைப் புழு மாதிரி பார்த்துவிட்டு மேலாளரிடம் கூறினார்: "ஆறு மாதத்துக்கு ஒருமுறையாவது பீரோவிலிருந்து பட்டுப்புடவையை வெளியில் எடுக்க வேண்டாமா? பூச்சி அரித்து விடாதா?"
இராய செல்லப்பா நியூ ஜெர்சியில் இருந்து
இசைக் கச்சேரிக்கு வருவது பாட்டை ரசிக்கவா ? அல்லது பட்டுப்புடவை காண்பிக்கவா ?
பதிலளிநீக்குஓட்டு மொத்த மகளிர் சமுதாயத்தையே எதிர்க்கத் துணிந்து விட்டீர்களா நண்பரே?
நீக்குGOLCONDA FORT பற்றியும், பக்த ராமதாஸ் பற்றியும், சார்மினார் எதற்கு கட்டினார்கள் என்பது பற்றியும், அதனைச் சுற்றியுள்ள முத்து மாலை , முத்து நெக்லஸ் கடைகள் பற்றியும் கொஞ்சம் சொல்லுங்கள் சார் ப்ளீஸ்.
பதிலளிநீக்குஇந்தியா திரும்பிய பிறகு நாம் இருவரும் ஹைதராபாத் சென்றுவர விமான டிக்கட் புக் செய்துவிடுங்கள்....! விட்டுப்போன இடங்களைப் பார்த்துவரலாம்!
நீக்குஇந்ந இடங்களை எல்லாம் நான் ஏற்கனவே பார்த்து இருக்கிறேன் . தங்கள் அழகு நகைச்சுவை தமிழில் படிக்க ஆசை அதனால்தான் கோரிக்கை வைத்தேன். . சலார்ஜங் மியூசியம் பற்றியும் தங்கள் சுவைத்தமிழில் சொல்லுங்கள்.
நீக்குதியேட்டர் பெயர் சங்கீதா என ஞாபகம்!
பதிலளிநீக்குஆம், தியேட்டர் பெயர் "சங்கீதா" தான்! திருத்திவிட்டேன்!
நீக்குஎன் சகோதரி செகந்திராபாத்தில் அமீர்பேட் என்னும் இடத்தில் இருந்தார். நான் கடைசியாக அங்கு சென்றது 1992ல். இப்போது அந்த ட்வின் சிட்டி ரொம்ப மாறி விட்டதாம். சென்னை பேருந்துகளைப் போல அங்கும் பேருந்துகளின் தரத்தை உயர்த்தி விட்டார்களாம்.
பதிலளிநீக்குஆறு மாதத்திற்கு ஒரு முறையாவது கச்சேரி நடத்தப்பட வேண்டும் என்பதற்கு சொல்லப்பட்ட காரணத்தை பாடகர்கள் கேட்டால் மனது சங்கடப்பட்ட போகிறார்கள்.ஹாஹா!
பதிலளிநீக்குஅடித்துப்பிடித்து ரணகளமாய் பஸ் மாறும் அனுபவத்தை ரசித்தீர்களா?!!
பதிலளிநீக்குபட்டுப்புடவை கட்டி உலாவர இந்த ஒரு பொது நிகழ்ச்சிதானா அவர்களுக்கு?
பட்டுப்புடவையை பராமரிப்பது எப்படி...? என்று தாங்கள் முழுவதையும் அறிவீர்கள் போல...!
பதிலளிநீக்குஇரயில் பயணத்தில் ஒருமணி நேர இடைவெளியில் மேலாளர் வீட்டிற்குச்சென்று காப்பி அருந்திவிட்டு வந்து அதே இரயிலைப் பிடிப்பது சுவாரசியம்.
பதிலளிநீக்கு...மீ.மணிகண்டன்
ஒருமுறை செகந்திராபாத்தில் ரயில் நின்றபோது, வேகமாக இறங்கி, நடந்து சென்று, அந்த மேலாளரின் வீட்டில் காப்பி அருந்தி விட்டு, திரும்பவும் அதே ரயிலில் ஏறிக் கொண்டு ஹைதராபாதில் இறங்கியது நினைவிருக்கிறது.
பதிலளிநீக்குஆகா,