சந்துகளில் சாயக்குழல்! சாலைகளில் ஊரடங்கு!
(நான்கு தூண்கள் நகரம்-10)
அமெரிக்காவில் 62 ஆவது நாள் (12-6-2022)
ஹைதராபாத் நகரை 'சந்துகளின் நகரம்' என்று கூறலாம். திரும்பிய இடமெல்லாம் ஒரு சந்து இருக்கும். அது எங்கு போய் முடியும் என்று தெரியாது. ஒரு சந்தில் நுழைந்தால் மேலும் மூன்று சந்துகளிலாவது புகுந்துதான் வெளிவரவேண்டியிருக்கும். ஒளி மங்கிய இரவுகளில் ஆபத்தானவை இச்சந்துகள்.
பள்ளிக்குச் செல்லாமல் தெருக்களில் திரியும் சிறுவர்களை ஹைதராபாதில் எப்போதும் பார்க்கலாம். ஹோலி மற்றும் விநாயகர் சதுர்த்தி தினங்களில் அவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். சந்துகளில் புகுந்துகொண்டு சற்றும் எதிர்பாராத நேரத்தில் சாயக்குழல் கொண்டு நம்மீது வண்ணம் பாய்ச்சுவார்கள் இச்சிறுவர்கள்.
ஹோலி தினம் இங்கு விடுமுறை என்பதாலும், வெளியில்போனால் சாயம் தெளிப்பார்கள் என்பதாலும் அறைவாசிகளான நாங்கள் அறைக்குள்ளேயே கிடப்போம். அப்படியும் இந்தச் சிறுவர்கள் விடமாட்டார்கள். ஒவ்வொரு அறையாகக் கதவைத் தட்டுவார்கள். திறக்கும்வரை விடமாட்டார்கள். "காசு கொடுக்கிறாயா, கலர் தெளிக்கட்டுமா?" என்று தெலுங்கிலும் உருதுவிலும் கத்துவார்கள்.
இவர்களுக்குப் பின்புலமாக ஒரு தள்ளுவண்டியில் பெரிய டிரம் நிறைய சாயக்கலவை தயாராக இருக்கும். அருகில் இரண்டு வாளிகளில் வெறும் தண்ணீரும் இருக்கும். தேவைக்கேற்ப சாயக் கலவையை உடனுக்குடன் அதிகரிக்கும் வழி இது. சில சமயம் ஒரு சந்துச் சிறுவர்கள் தங்களுடைய வண்டியிலிருந்து இன்னொரு தெருவுக்கு சாயநீர் நன்கொடை கொடுப்பதும் உண்டு.
நீண்ட நேரமாகக் கதவைத் தட்டுகிறார்களே என்று கதவைத் திறந்தேன். நான்கைந்து சிறுவர்கள். பணிவோடு "சார், பைசா இவ்வண்டி" என்று மரியாதையாகக் கேட்டார்கள்.
"எந்துக்கு இவ்வாலி?" என்று நான் கேட்டேன்.
"சார், இன்று ஹோலி சார்! சாயம் வாங்கவேண்டாமா சார்? நூறு ரூபாய் கொடுங்கள் சார்" என்றான் ஒருவன். அவனிடமிருந்த சாயக்குழலின் நீளத்தை வைத்து, அவன், அவர்களின் தலைவனாக இருக்கலாம் என்று எண்ணினேன்.
"அதெல்லாம் ஒன்றும் கொடுக்க முடியாது. சீக்கிரம் போய்விடுங்கள், இல்லை யென்றால் நாயுடுவை வரச் சொல்லுவேன்" என்று மிரட்டிப் பார்த்தேன்.
அவனா அசருகிறவன்! "நாயுடுகாரு கூட மாக்கு நூறு ரூபாய் இச்சாரு, சூடண்டி " என்று ஒரு நூறு ரூபாய்த்தாளை எடுத்துக் காட்டினான்.
இதற்குள் மேலும் நான்கு சிறுவர்கள் திரண்டுவிட்டனர். அவர்கள் போட்ட கூச்சலில் பக்கத்திலிருந்த அறைவாசிகளும் வெளியில் வந்துவிட்டனர். அவ்வளவுதான் சிறுவர்களுக்கு உற்சாகம் பிடிபடவில்லை. தங்கள் சாயக்குழல்களை அவர்கள்மேல் பீச்சியடித்தார்கள். என்ன தண்ணீரோ, என்ன சாயமோ, மேலே பட்டால் உடனே அரிக்க ஆரம்பிக்கும் என்று நண்பர்கள் கூறியிருந்தார்கள். ஆகவே உடனே தடாலென்று கதவைச் சாத்தித் தாளிட்டேன்.
அரைமணி நேரக் களேபரத்துக்குப் பிறகு எங்கள் அறைக் கதவு மீண்டும் தட்டப்பட்டது. நான் திறக்காமலேயே, "சூடு, பாபோய்! பதி ரூபாய் இஸ்தானு" என்றேன். "முடியாது, ஐம்பது ரூபாய் வேண்டும்" என்றான் தலைவன்.
அதற்குள் சிறுவர் கூட்டத்திற்குப் பொறுமை எல்லை மீறிவிட்டது. இந்த ஒரு கட்டிடத்திலேயே இவ்வளவு நேரம் செலவிட்டால் மற்ற வீடுகளுக்கு எப்போது செல்வது என்ற கவலையாகவும் இருக்கலாம். "கொடுப்பதை வாங்கிக்கொண்டு போய்விடலாம்" என்று ஒருவன் உருதுவில் இன்னொருவனிடம் கிசுகிசுத்தான்.
அது போதாதா எனக்கு! சட்டென்று கதவைத் திறந்தேன். பத்து ரூபாயை நீட்டினேன். பிடுங்கிக்கொண்டு ஓட்டமெடுத்தது கூட்டம். அப்பாடா என்று கதவைச் சாத்தினேன்.
நல்ல வேளை, என் சட்டை பேண்ட் தப்பியது. ஹோலியின் போது தெளிக்கப்படும் நீரின் சாயம், துணிகளில் இருந்து எளிதில் போகாது. தனி வீடாக இருந்தால் பல்முறை அழுத்தித் தோய்த்தால் போகுமோ என்னவோ, அறை வாழ்க்கையில் துணி துவைக்க வழி இல்லையே!
குளித்துவிட்டு காலை உணவுக்காக பாம்பே ஆனந்த பவனுக்குள் நுழைய முற்பட்டேன். அப்போது முதுகில் ஏதோ ஐஸ்கட்டியை வைத்தாற்போல் இருந்தது. திரும்பினால் அதே சிறுவர் கூட்டம்! என்மீது சாயம் பீய்ச்சி யிருந்தார்கள்! முதுகில் தெளித்தது, முகம் வரை தெறித்தது. என்னை ஓட்டலுக்குள் நுழையவிடாமல் சூழ்ந்துகொண்டார்கள். "நூறு ரூபாய் கேட்டோம், பத்து ரூபாய் தானே கொடுத்தீர்கள்? மீதியை இப்போது கொடுங்கள்" என்றார்கள் ஒரே குரலில்.
ஓட்டல் வாசலில் கூட்டம் சேர்ந்து நின்றதால், ஓட்டலுக்குள் யாரும் நுழையமுடியாமல் போனது. கல்லாப்பெட்டியில் இருந்த உரிமையாளர், "சின்னப் பசங்க சார்! வருசத்துக்கு ஒருநாள் தானே! கொடுத்துவிடுங்கள்" என்றார் கன்னடத்தில்.
வேறு வழியில்லை. சட்டையில் சாயம் வழிந்து முகத்திலும் ஊர்ந்துகொண்டிருந்தது எனக்கே அருவருப்பாக இருந்ததால் "அதெல்லாம் முடியாது. ஐம்பதுதான் கொடுப்பேன்" என்று அவரிடம் கொடுத்தேன். அவர் அந்தச் சிறுவர்களை சமாதானப்படுத்தி அனுப்பினார்.
பசி பக் பக்கென்றது. ஆனால் மீண்டும் குளிக்காமல் சாப்பிட மனம் இடம் தரவில்லை. எனவே அறைக்குத் திரும்பினேன். ஆனால் அடுத்த நிமிடமே கதவு தட்டப்பட்டது. என்னடா இழவு என்று திறந்தால், அங்கே இருந்தவர் ஒரு பெண்மணி!
முப்பது வயதிருக்கலாம். நன்கு குளித்து பூ முடித்து அலங்கரித்துக் கொண்டிருந்த கிராமத்துப் பெண்மணியாகத் தோன்றினாlள். புதுமுகம்.
என்ன விஷயம் என்று புருவங்களைச் சுருக்கினேன்.
"ஹோலி க்கு இனாம் கொடுங்கள்" என்று ஒருமாதிரி சிரித்தாள் அவள். வெளியே எட்டிப் பார்த்தேன். மற்ற அறைகள் எல்லாம் ஒன்று, மூடியிருந்தன, அல்லது பூட்டியிருந்தன. தெருவில் ஆரவாரம் அடங்கியிருந்தது. கூடியிருந்த சிறுவர் கூட்டம் கலைந்துபோய் மற்ற தெருக்களுக்கு நகர்ந்து விட்டிருந்தது.
ஒரு காலை வாசற்படிமீது வைத்துக்கொண்டு, கதவை மீண்டும் நான் சாத்திவிடாதபடி நின்றுகொண்டு இப்போது அவள் சிரித்தது வேறுமாதிரி இருந்தது.
(தொடரும்)
- இராய செல்லப்பா நியூ ஜெர்சியில் இருந்து..
எழுத்து ரசிக்கும்படி இருக்கிறது. மீதி 40ரூபாயை அந்தப் பெண்ணுக்குக் கொடுத்தீர்களோ? அந்தச் சமயத்தில் மதிய உணவின் விலை என்ன?
பதிலளிநீக்குஅளவு சாப்பாடு ஐந்து ரூபாய் என்று ஞாபகம்.
நீக்குஅப்போ... கிட்டத்தட்ட 2000 ரூபாய் டொனேஷன் இப்போ வாங்குவது போல... ரொம்ப அதிகம்தான்
நீக்குவிடாது ஹோலி...(!)
பதிலளிநீக்குஇப்போது அவள் சிரித்தது வேறுமாதிரி இருந்தது என்று எழுதி இருக்கிறீர்களே..?..அவள் வேற மாதிரி பெண்ணோ... ?நீங்கள் வேறு தனியாக இருக்கிறீர்களே .?
பதிலளிநீக்குமற்ற அறைகள் எல்லாம் ஒன்று, மூடியிருந்தன, அல்லது பூட்டி இருந்தன என்று சொல்லி இருக்கிறீர்கள். அடுத்த பதிவு வரும் வரை மனசு படக்..படக்...படக்..!
சிறுவர்களின் செயல் வெறுப்பைத் தரக்கூடியது.
பதிலளிநீக்குஅந்நாளிலேயே 100 மிகவும் அதிகம்தான்...!
பதிலளிநீக்குஹோலிச் சாயம் தெளித்துப் போச்சு டும் டும் டும்
பதிலளிநீக்குமுகமெல்லாம் வெளிறிப் போச்சு டும் டும் டும்