சனி, ஏப்ரல் 06, 2013

மீண்டும் மனுஷ்யபுத்திரன்

மனுஷ்யபுத்திரனின் ‘பசித்த பொழுது’ கவிதைத் தொகுப்பை சில நாள் முன்பு அறிமுகம் செய்திருந்தேன். அப்போது நூலில் பாதிவரை தான் படித்திருந்தேன். முழுதும் முடிக்கும் வரை பொறுக்கமுடியாதபடி ஒரு அவஸ்தை. இவ்வளவு நல்ல கவிதைகளை உடனடியாக எல்லோருக்கும் சொல்லிவிடவேண்டும் என்கிற உந்துதல். ஆகவே அவருடைய தற்கொலை பற்றிய கவிதையை அறிமுகப்படுத்தி ஒரு கட்டுரை வெளியிட்டேன்.
இப்போது நூலை முழுமையாக ஒருதரம் படித்துவிட்டேன். (இரண்டு, மூன்று தரம் படித்தாக வேண்டும் என்று வற்புறுத்தும் விதிவிலக்கான சில சூட்சுமக் கவிதைகள் தவிர). இரண்டாம் பாதியில் நாம் பார்க்கும் கவிஞன் முதல் பாதியில் பார்த்த கவிஞனை விட பல்வேறு உணர்ச்சி வேதனைகளால் தனிமையில் அவதிப்படுகிறவனாக இருப்பதால், அந்த மனுஷ்யபுத்திரனையும் அறிமுகப்படுத்த வேண்டியவனாகிறேன்.

ஏற்கெனவே சொன்னது போல, நான் எழுதுவது விமர்சனக் கட்டுரை யல்ல, நூல் அறிமுகம் மட்டுமே. 431 பக்கங்களும் 235 கவிதைகளும் கொண்ட ஒரு நூலின் சிறப்பான அம்சங்களைக் குறிப்பாகச் சொல்வதென்றாலும் நீளமான கட்டுரையாகிவிடும் அபாயம் ஏற்படுகிறது. எனவே எழுதி எழுதி எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைத்த பிறகு இக் கட்டுரையை வெளியிடுகிறேன்.பொதுவாகவே கவிஞர்களுக்கு ‘தன்னையே கிள்ளிக்கொண்டு அழும்’ பழக்கம் உண்டு. (பார்க்க: ‘கவிராஜன் கதை’ முன்னுரையில் வைரமுத்து). அதிலும் புதுக்கவிதை எழுதுபவர்கள் இந்த நோயால் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் என்பது நாம் அறிந்ததே. எழுதுபவர்கள் பெரும்பாலும் ஆண்களாகவே இருந்ததால், கை கூடாமல் போன காதலும், புறக்கணித்துப் போன காதலியின் வஞ்சனையும், அதனால் செயலற்று நிற்கும் போது உலகத்தார்முன் தாழ்ந்து நிற்கும் கையறு நிலையும், எதிர்காலம் பற்றிய நம்பிக்கையின்மையும் இவர்களின் கவிதைகளில் பாடுபொருள்களாயின. வயது வந்த குழந்தைகளின் பெற்றோர்களாகிவிட்ட கவிஞர்கள், காதலை ஒதுக்கிவைத்துவிட்டு, வானம், நிலா, மேகம், பால்வீதி என்று தப்பித்துப் போனார்கள். வசதியான பதவிகளிலிருந்து ஓய்வுபெற்றவர்களோ, அரசின் தயவு இனிமேல் தேவையில்லையென்ற நிலை ஏற்பட்டவுடன், அல்லது அரசிடமிருந்து எதிர்பார்த்த விருதுகள் இனிவரப்போவதில்லை என்று தெரிந்தவுடன், அரசியலில் நிலவும் ஊழல்களைப் பாட ஆரம்பித்தார்கள். எல்லா வகையிலும் ஊடகங்களிலிருந்தும் வாசகர்களிடமிருந்தும் தனிமைப்படுத்தப்பட்டுவிட்ட சில கவிஞர்களோ வேறு வழியின்றி ஈழத்தைக் கையிலெடுத்துக்கொண்டார்கள். மிகச்சிலர், தமிழ் வாழ்க என்பது போன்ற தலைப்புகளிலும் ஈடுபடுவதுண்டு.

இப்படிப்பட்ட பின்னணியில், 431 பக்கங்களில் ஒரு கவிஞர் என்ன மாதிரியான உட்பொருள்களைக் கையாளப்போகிறார் என்பது சுவையான கேள்வி. அதற்கு எளிதில் பதில் கண்டுபிடித்துவிடாதபடி கவிதைகளைப் பிரித்தும் தொகுத்தும் அளித்திருப்பதில், மனுஷ்யபுத்திரன் என்ற பதிப்பாளரின் சாமர்த்தியமும் தெரிகிறது..

சில குறிப்பிடத்தக்க கவிதைகளை எடுத்துக்காட்டுவதோடு என் பணியை முடித்துக்கொள்ளவேண்டும் என்று கருதுகிறேன். இல்லாவிடில் வாசகனின் சுய உணர்வுச் சுதந்திரத்தை என்வழிக்குக் கொண்டுவர முயற்சிப்பதாகக் குற்றச்சாட்டு எழும் அல்லவா?   
*****
இந்த முழு நிலவு நாளில்
யாராவது என்னை நேசியுங்கள்
என்னை மட்டும் நேசிப்பதாக
பொய் சொல்லுங்கள்.    
   (‘இவ்வளவுக்கும் காரணம்’ ப.385)
****

எனக்குப் பயன்படுத்த
ஏராளமாகக் கிடைக்கின்றன
பழைய பொருள்கள்

இவ்வளவு பழையது
குவிந்து கிடக்கும் இந்த பூமியில்
எப்போதும் புத்தம் புதியதாக இருக்கிறது
ஒருபோதும் பழசாகாத பழைய துயரமொன்று

அது தான் நாம் தொடுகிற
புதியது எதையும்
அவ்வளவு சீக்கிரம் பழசாக்கிக் கொண்டிருக்கிறது
   (பழையதைப் பயன்படுத்துபவர்கள் – ப.359)
****

நாளைக்குத் தான்
முழு நிலவு
நாள்

இன்றிலிருந்தே
நடக்கத் தொடங்கினால்
எப்படியும்
போய்விடலாம் தானே
சொல்.
  (இன்றிலிருந்தே –ப.305)
****

எவ்வளவு பழகிய வீட்டிலும்
ஏதோ ஒரு அறை
நம்மை பயப்பட வைக்கிறது
  (ஏதோ ஒரு அறை – ப.181)
****

பார்க்கிற எதையும்
குறித்து வைத்துக் கொள்ளாமல்
சும்மா பார்க்கவே முடியாதா
உனக்கு
   (பார்வையின் தூரம் – ப.175)
****

தந்துவிட்டுப் போகத்தானே
வந்தேன்
பறித்துக்கொள்ளும்
உன் பதற்றத்தில்
எதைத் தர வந்தேன்
என்பதே நினைவுக்கு வரவில்லை
  (உருமாற்றம் – ப. 327)
****

ஒரே ஒரு முறை தான்
உன்னிடமிருந்து அதைக் கேட்டேன்

எத்தனையாவது முறையாக
அதை நினைக்கிறேன்
என்பது மட்டும்
எனக்குத் தெரியவே இல்லை
  (எண்கள் – ப.131)
****

அவள் சொன்னதன் அவசரமா
நான் கேட்டுக்கொண்டதன் அவசரமா
நான் அவளது பெயரை
சரியாகக் கேட்டுக்கொள்ளவில்லை.....

ஆனால்
ஒருவரது பெயரை
மறுபடி சரியாக கேட்டுக்கொள்ளும்
சந்தர்ப்பத்தை வாழ்க்கை
எப்போதும் தந்துவிடுவதில்லை

அவள் அந்த விசாலமான லிஃப்டின் வழியாக
புன்னகையுடன் இறங்கிச் சென்றுவிட்டாள்
   (பாதிப் பெயர் – ப.375)
****

இந்த மழைக்காலத்தில்
நாம் இருவருமே
நின்றுகொண்டிருப்பது
ஒரே மரத்தடியில்.......

ஒரே இடத்தில்
இருந்தும்
ஒருபோதும்
இருந்ததே இல்லை
உனது இடத்தில் நானோ
எனது இடத்தில் நீயோ
   (வேறு வேறு மழைக்காலங்கள் – ப. 417)
****

நேற்று வேறொரு கோயில்
இன்று வேறொரு தெய்வம்
நாளை வேறொரு நேர்த்திக்கடன்

அதே பிரார்த்தனை
அதே கண்ணீர்
அதே பிடிவாதம்
  (நிலை – ப.110)
****

ஒரு சிறிய தனிமை என்பது
ஒரு அமுதத்தைப் போல
நமது நாக்கில் படிகிறது

ஆனால் வெகு நீண்டகாலத்திற்கு
நமது உடல்களை
நஞ்சாக்கி விடுகிறது
   (ஒரு சிறிய தனிமை – ப.92)
****

எந்த பாதையில் நடந்தாலும்
திரும்பிச் செல்லும் வழியை
யோசித்துக்கொண்டே செல்பவன் நான்

ஒருமுறை கூட
அடைந்ததேயில்லை
தேடிப்போன எதையும்
   (எந்த பாதையில் நடந்தாலும் – ப.57)
****

கொஞ்ச காலமே
இளைஞர்களாக இருந்தோம்

பிறகு
நிறைய வருடங்களுக்கு
முதியவர்களாகவே இருக்கிறோம்

இது எப்படி என
புரியவே இல்லை
    (பருவம் – ப.31)
****

ஒரு விதத்தில்
எல்லா சிறந்த நாட்களையும்
ஒரு சிறிய துயரத்தோடு
முடித்துவைப்பது தான் நல்லது

இல்லாவிட்டால்
அந்த நாளைவிட்டு
நாம் எப்படி
இவ்வளவு தூரம் வந்திருப்போம்?
   (ஒரு நல்ல நாளில் – ப.301)
****

என் பழைய புகைப்படங்களில்
இருப்பவர்களில்
நிறையப் பேர்
எங்கிருக்கிறார்கள்
என்று தெரியவில்லை.......

நான் மட்டும்
ஏன் இவ்வளவு பிடிவாதமாக
இங்கேயே உட்கார்ந்திருக்கிறேன்
என்று தெரியவில்லை
  (புகைப்படங்களில் இருப்பவர்கள் – ப.421)
****

ஸ்டேஷனிலிருந்து
வீட்டிற்கு
நடக்கிற தூரமா
என்று கேட்டார்
வழி கேட்டவர்

நடக்கிற தூரம் தான்
என்றேன்

எவ்வளவு தூரம்
அவரால் நடக்க முடியும்
என்பதை கேட்க மறந்துவிட்டேன்
   (நடக்கிற தூரம் – ப.423)
****

சேனல் -4ல் ஈழப் போராளிகள் சித்திரவதைக்கு உள்ளாகி மடியும் காட்சிகளைப் பார்த்த உடனே பிறந்த கவிதை “சேனல் 4”. (ப.100–106). நீளமான கவிதை என்பதால் இங்கே முழுதும் தர முடியவில்லை. ஓங்கி நம் மண்டையில் ஓரடி விழுந்தாற்போல் உறைக்கும் சிறியதொரு பகுதி இதோ:

இந்தப் படம் நமது மொழியில் தான்
எடுக்கப்பட்டிருக்கிறது
ஆயினும்

நமக்கு அதைப் புரிந்துகொள்ள சப்-டைட்டில்
தேவையாக இருக்கிறது

குறைந்த பட்சம்
ஒரு பின்னணி இசையாவது தேவைப்படுகிறது.
****

அற்புதமான ஒரு கவிதை இதோ. நமது அச்சமே நமது எதிரிகளை உருவாக்கிவிடுகிறது. நம்மை விட எவ்வகையிலும் உயர்ந்திராதவர்களை நமது அச்சத்தினால் நம்மை விட உயர்ந்தவர்களாக ஆக்கிவிடுகிறோம் என்கிறார்.
 
எதைக் கண்டுதான்
நான் பயப்படவில்லை

எறும்புகளைக் கண்டு
அஞ்சினேன்

ஈக்களைக் கண்டு
அஞ்சினேன்

கொசுக்களைக் கண்டு
அஞ்சினேன்

விட்டில் பூச்சிகளுக்குக் கூட
நான் பயந்தேன்

பயப்பட
பயப்பட
அவை என்னைவிட
பெரிதாக வளர்ந்துகொண்டே இருந்தன

பிறகு நான்
என் நிழல்களைக் கண்டு
பயப்படத் தொடங்கினேன்

இப்படித்தான்
நான் என்னைவிடவும்
பெரிய நிழல்களை உருவாக்கினேன்
    (பெரிய நிழல்கள் உருவான விதம் – ப.413)
****

கவிஞன் மலரினும் மெல்லியவன் என்பதைக் காட்டும் ஒரு கவிதை:

என் சின்னஞ்சிறு மகளுக்கு
நான் எந்த நேரத்தில்
எப்படிக் கதவு தட்டினாலும் தெரியும்
அது நான் தான் என்று

நான் பிறருக்குத் தட்டும்
அதே கதவல்ல
அவளுக்குத் தட்டும் கதவு.
   (இன்னொரு கதவு – ப.373)

நூலின் தலைப்பு : ‘பசித்த பொழுது’ என்பதால் சாப்பாடு பற்றிய ஒரு சிறிய கவிதையைக் குறிப்பிட்டாக வேண்டும்:

நிறைய
சாப்பிடவேண்டும் போலிருக்கிறது

எவ்வளவு சாப்பிட்டும்
ஏராளமாக மிஞ்சியிருக்கிறது
இந்த உலகம்.
  (மிஞ்சும் உலகம் – ப.395).

சாப்பாட்டுக் கவிதையா இது?  சக மனிதனுக்கு நம்பிக்கையூட்டும் கவிதை வேறொன்று  இருக்க முடியுமா?
*****
நூலின் முன்னுரையில் கவிஞர் குறிப்பிடுகிறார் – ஒரே வருடத்தில் எழுதப்பட்ட 235 கவிதைகள் என்று. எழுதிய நாளும் நேரமும் கவிதைகளின் கீழேயே அறிவிக்கிறார். பெரும்பாலான கவிதைகள் பகல் நேரத்தில் எழுதப்பட்டது என்கிறார். கீழ்க்கண்ட கவிதையைப் படிக்கும்போது அவரின் அவசரம் புரிகிறமாதிரி இல்லை?

இந்தப் பனிக்காலத்தில்
என்னிலும் மூத்தவர்களின்
முகங்களை ஆவலுடன் உற்று நோக்குகிறேன்

எனக்கு
இன்னும் நிறைய நேரமிருக்கிறது
என்று

ஒரு குழந்தையைப் போல
நம்பிவிடுகிறேன்
  (முதியவர்களின் முகங்களில் – ப.389)
****

கடைசியாக ஒரு ஆழமான கவிதை:

மனிதர்களைத் தவிர்ப்பதற்கு
ஆயிரம் வசதிகள்
ஆயிரம் வழிமுறைகள் வந்துவிட்டன

ஒரு மனிதனை நெருங்குவதற்கு
என்னிடம் இப்போது
இந்தக் கவிதை மட்டுமே இருக்கிறது
    (ஒரு மனிதனை நெருங்குவதற்கு – ப.173)

உண்மை தான், மனுஷ்யபுத்திரன் அவர்களே! உங்களுக்கான விருதுகளை நிர்ணயிக்கப்போகும் மனிதர்களை நெருங்கப்போகும் கவிதை நூலும் இது தான். வாழ்த்துக்கள் !
****
© Y.Chellappa
Email: chellappay@yahoo.com
குறிப்பு: எனது இன்னொரு வலைப்பூவான இமயத்தலைவன் படித்தீர்களா?

2 கருத்துகள்:

 1. // என் சின்னஞ்சிறு மகளுக்கு
  நான் எந்த நேரத்தில்
  எப்படிக் கதவு தட்டினாலும் தெரியும்
  அது நான் தான் என்று

  நான் பிறருக்குத் தட்டும்
  அதே கதவல்ல
  அவளுக்குத் தட்டும் கதவு.//

  //எந்த பாதையில் நடந்தாலும்
  திரும்பிச் செல்லும் வழியை
  யோசித்துக்கொண்டே செல்பவன் நான்

  ஒருமுறை கூட
  அடைந்ததேயில்லை
  தேடிப்போன எதையும்//

  ரசித்தேன்.. அத்தனையும் ரசனையான வரிகள்தாம்! நல்ல எழுத்துக்களை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 2. எனது நோக்கம் ஒன்றே: யார் எழுதினாலும், அது ரசிக்கத் தக்கதாயிருந்தால் அதை நாலு பேருக்காவது எடுத்துச் சொல்லவேண்டும் என்பதே. ஏதாவதொரு மூலையில் தன்னை ரசிக்கிறவர்கள் இருக்கமாட்டார்களா என்று ஏங்குவது தானே எழுத்தாளனின் இதயம்! அந்த ஏக்கத்தை நல்ல ரசிகர்களிடம் கொண்டுபோவதே எனது கடமையாகக் கொண்டிருக்கிறேன். அப்படிக் கொண்டுபோகையில் எனது எழுத்தும் ரசிக்கப்படுவது நான் பெற்ற பேறு. நன்றிகள் உங்களுக்கு.

  பதிலளிநீக்கு