(நான்கு தூண்கள் நகரம்-8)
அமெரிக்காவில் 60 ஆவது நாள் (10-6-2022)
சமோசா என்ற உணவுப் பொருளை முதன்முதலில் நான் சுவை பார்த்தது ஐதராபாத் நகரில்தான். அது போன்ற சுவை சென்னையில் கிடைப்பதில்லை. அதிலும் ஹைதராபாதில் முக்கிய இடங்களில் அமைந்திருந்த இரானி ஹோட்டல்களில் கிடைக்கும் ‘டைமண்ட் சமோசா’ புகழ் பெற்றது.
படம்- நன்றி - இணையம் |
பொதுவாக சமோசா என்றால் கோதுமை மெத்தைக்குள் உருளைக்கிழங்குப் பெண்ணைத் திணித்து, பிரிசம் வடிவில் சுருட்டி மடித்து, அவளைச் சூடான எண்ணெயில் குளிப்பாட்டினால் கிடைப்பதாகும். உருளைக்கிழங்குடன் நுணுக்கிய பச்சைமிளகாய், மீச்சிறு தேங்காய்ச் செதுக்கல்கள், கேரட் மற்றும் பீட்ரூட் துண்டுகள், மற்றும் கீரை ஆகியவையும் சேர்த்து வெஜிடபிள் சமோசா என்ற பெயரில் விற்பனையாவதுண்டு. ஆனால் டைமண்ட் சமோசா என்பது, பெரும்பாலும் வெங்காயத்தை முக்கியமாகவும், மிகச் சிறிதளவு உருளைக்கிழங்கு கொண்டதாகவும் இருக்கும். பெரிய சமோசாவின் விலையில் மூன்று டைமண்ட் சமோசா கிடைக்கும். வெங்காயம் எண்ணெயில் நன்கு பொரிவதால், இந்தக் குட்டி சமோசா, வறுவல் போன்றே மொறுமொறுவென்று இருக்கும்.
காலை ஆறு மணிக்குள் எழுந்து காப்பி குடிக்கும் வழக்கமுடைய சராசரித் தமிழன் நான். குடும்பத்தை விட்டு வெளியூர்களில் பணிசெய்தபோதெல்லாம், ஐந்து மணிக்கே எழுந்து உடனடிக் காப்பியைத் தயாரித்துக் குடித்துவிட்டு செய்தித்தாளோ புத்தகமோ படிக்க அமர்ந்துவிடுவேன். கூடவே வறுத்த வேர்க்கடலை இருந்துவிட்டால் அந்தக் கூட்டணியின் வலிமையே தனிதான். எனக்கும் மகாத்மா காந்திக்கும் இருந்த சில ஒற்றுமைகளில் இதுவும் ஒன்று. ஆனால் ஹைதராபாத்தில் இருந்தபோது, காப்பியுடன் டைமண்ட் சமோசா கூட்டணியே பெரிதும் கைகொடுத்தது.
இரானி ஓட்டல்களில் ஒரு பழக்கம் இருந்தது. எந்த சமோசா ஆரடர் செய்தாலும் ஒரு பெரிய அலுமினியக் கிண்ணம் அல்லது தட்டில் பதினைந்து இருபது சமோசாக்களைக் கொண்டுவந்து வைப்பார்கள். வாடிக்கையாளர் தானே தன் கையினால் தனக்கு வேண்டியதை எடுத்துக்கொள்ள வேண்டும். தட்டில் மீதமிருப்பதுடன் உள்ளிருந்து இன்னும் சிலதைக் கொண்டுவந்து பழையபடி தட்டில் பதினைந்து இருபது இருக்குமாறு பார்த்துக்கொள்வார்கள்.
பல எச்சில் கைகளால் தொடப்பட்டதால்தானோ இரானி ஓட்டல் சமோசாவுக்கு சிறப்பான சுவை வருகிறது? தெரியவில்லை..இவ்வாறு காலையில் சமோசாவும் மாலையில் மிளகாய் பஜ்ஜியுமாக நாட்கள் கழிந்தன.
ஹைதராபாத்திலிருந்தபோது காலை ஐந்தரை மணிக்கே 'கோட்டி காமத்'திற்கு நேர் எதிரில் தரை தளத்தில் இருந்த இரானி ஓட்டலுக்கு செல்வேன். அவ்வளவு சீக்கிரம் செல்வதால் டைமண்ட் சமோசா சுடச்சுட கிடைக்கும் என்று எதிர்பார்ப்பேன். அதுதான் இல்லை. ஒரு பெரிய அண்டாவில் நூற்றுக்கணக்கில் சமோசாக்கள் தயாராக வைக்கப்பட்டிருக்கும். நகரத்தில் உள்ள எல்லா இரானி ஓட்டல்களுக்கும் சேர்த்து சமோசா ஒரே இடத்தில் தயாரிக்கப்பட்டு அனுப்பப்படுகிறதாம். ஆகவே சூடான சமோசா கிடைக்க வழி இல்லை. நான் அந்த அண்டாவில் இருந்தே உடையாத சமோசாக்களைப் பொறுக்கி எடுத்துக்கொள்வேன். இரானி ஓட்டலில் காப்பி கிடைக்காது என்பதால் ஸ்பெஷல் சாய் அருந்துவேன்.
என்னுடன் இருந்த அறை நண்பர் கிருஷ்ணகிரிக்காரருக்கோ வாரத்தில் சில நாளாவது அசைவம் இல்லாமல் முடியாது. பாவம், அவர் இருந்த வங்கிக்கிளையில் எப்போதும் வேலை அதிகம் இருக்கும். (அப்போது கணினிகள் இல்லை; கைவேலை தான் எல்லாம்). இருபத்தைந்து வருடம் பழைய கிளை அது.
என் கிளையில் வேலை முடிந்து கதவைப் பூட்டிக்கொண்டு சித்தியம்பர் பஜாரில் (அப்சல்கஞ்ச்) இருந்த அவருடைய கிளைக்கு நான் போவது வழக்கம். ‘டேபுக்’ எனப்படும் அன்றாடக் கணக்கில் ஏதோ ஓரிடத்தில் பதினேழு பைசாவோ அல்லது 45 பைசாவோ ‘டேலி’ ஆகாமல் இருக்கும். ஒரே ஆள் எத்தனை முறை பார்த்தாலும் அந்த வித்தியாசம் தென்படாது. நான் போய் கைவைத்தவுடன் அது கிடைத்துவிடும். நாளடைவில் நானே வந்து ‘டேலி’ செய்யட்டும் என்று ‘டேபுக்’கை அப்படியே வைத்துவிட்டு தேநீர் அருந்துதல், வெளியூர் நண்பர்களுக்கு எஸ்டிடி யில் போன் செய்தல், அரட்டை அடித்தல் போன்ற முக்கியச் செயல்களில் அந்த நண்பர்கள் ஈடுபடுவது என் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. ஆனால் என்னைப் போல் மனைவி, குழந்தையை வெளியூரில் விட்டுவிட்டு அறை வாழ்க்கை நடத்துபவனுக்கு இந்தச் சவால்கள்தானே சிறிதாவது மகிழ்ச்சி தருபவை! எனவே ‘டேலி’ செய்வதற்குக் கிடைக்கும் எந்த வாய்ப்பையும் நான் விட்டுக்கொடுத்ததே இல்லை.
இப்படி ‘டேலி’ செய்யவேண்டிய கணக்குப் புத்தகமும் அன்றைய நாளின் ‘செலான்’களும் ‘வவுச்சர்’களும் ‘சேஃப் ரூம்’ என்று அழைக்கப்படும் அறையில் இருந்த பெரிய டேபிள்மீது வைக்கப்பட்டிருக்கும். பிறர் குறுக்கீடு இன்றி அவைகளை புரட்டிப் பார்த்து ‘டேலி’ செய்ய வசதியாக இருக்கும். அப்படி ஒரு நாள் மாலை நான் அந்த ரூமுக்குள் நுழையப்போகும்போது, அதற்குள் ஏற்கெனவே அமர்ந்து ஆடிட் செய்துகொண்டிருந்த இன்ஸ்பெக்ஷன் டிபார்ட்மென்ட் நண்பர்- ருக்மாநந்தன் என்று நினைக்கிறேன்- ‘வணக்கம்’ என்று சொல்லிக்கொண்டே எழுந்து வெளியில் வந்தார். அவர் வருவதற்கும், டேபிளுக்கு மேலிருந்த புராதனமானதும், மிகப் பெரியதுமான மின்விசிறி கூரையிலிருந்து விடுபட்டு ‘டம்’ என்ற பயங்கர ஓசையோடு டேபிள்மீது விழுவதற்கும் சரியாக இருந்தது. ஒரு நிமிடம் அவர் வராமல் தாமதித்து இருந்தாலோ, அல்லது, நான் ஒரு நிமிடம் முன்னால் அறைக்குள் நுழைந்திருந்தாலோ எவ்வளவு விபரீதம் ஏற்பட்டிருக்கும்!
கீழே விழுந்த வேகத்தில் மின்விசிறியின் நான்கு இறக்கைகளும் இரண்டாய் மூன்றாய்ப் பிளந்து சிதறின. விழுந்த பிறகும் சிறிதுநேரம் சுழன்றுகொண்டிருந்த அதன் மோட்டார்ப் பகுதியின் சூட்டில் வவுச்சர் பண்டல்களின் மேலிருந்த ரப்பர் பேண்டுகள் உருகிப்போயின. அறையைச் சுத்தப்படுத்துவதற்கே ஒருமணிநேரம் ஆயிற்று. நன்றாக இருட்டிவிட்டது. அனைவருக்கும் பசி மயக்கம். எனவே பூட்டிக்கொண்டு கிளம்பினோம்.
நமது கிருஷ்ணகிரி நண்பர் (அவர் பெயர் ‘அன்பு’ என்று பொருள்படும்) இதுதான் சாக்கு என்று ‘பத்தர்கட்டி’ போகலாம் என்றார். பத்தர் (G)கட்டி என்பது சார்மினாரின் அருகிலுள்ள கடைத்தெருப்பகுதி. அங்கு வரிசையாக முத்துக்கள் விற்கும் கடைகள் இருக்கும். புதியவர்கள் ஹைதராபாத் வந்தால் இங்கு வராமல் போகமுடியாது. அப்படிக் கவர்ந்து இழுக்கும் விளம்பரங்கள் நகரெங்கும் நிறைந்திருக்கும். ஆனால் அன்பு அங்கு போகவிரும்பியது முத்துக்கள் வாங்க அல்ல, எதிர் வரிசையில் முதல் மாடியில் அமைந்திருந்த ‘மதினா’ என்ற அசைவ ஓட்டலுக்குச் செல்வதற்குத்தான்.
நான் மாலை ஆறு மணிக்கு ஒரு மைசூர் மசாலா சாப்பிட்ட பிறகே அன்புவின் அலுவலகத்திற்குப் போனதால், அவர் அளவுக்கு எனக்குப் பசி இல்லை. எனவே அவர் விரும்பியதைச் சாப்பிடட்டும் என்றுதான் மதினாவுக்கு அவருடன் கூடவே போனேன். அன்று அவர் ஆர்டர் செய்த அசைவத்தின் பெயர் தெரியவில்லை. நான் அவருக்கு எதிர்த் திசையில் அந்த உணவின் வாசமோ வடிவமோ தெளிவாகத் தெரிந்துகொள்ள முடியாத இருட்டில் அமர்ந்து, தண்ணீர் உள்பட எதையும் அருந்தாமல், அவருக்கு ‘கம்பெனி’ கொடுத்தேன். பாதி சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது என்ன நினைத்துக்கொண்டாரோ, அன்பு, “இங்க பாரய்யா”’ என்றார். குழம்புத் திரவத்தில் குளித்தபடி இருந்த உருண்டையான ஒன்றைக் காட்டி, “இதுதான் ஆட்டு மூளை” என்று சிரித்தார்.
மூன்றறிவோ நாலறிவோ உள்ள ஆட்டின் மூளையை, ஆறறிவு கொண்ட மனிதன் உண்னுவது அவசியமா போன்ற தத்துவார்த்தமான கேள்விகளுக்கு அது நேரமில்லை. “ஆஹா, அருமையாக இருக்கிறதே! அதனால்தான் பக்ரீத் சமயத்தில் மேல்விஷாரத்தில் அவ்வளவு ஆடுகளைக் கொல்கிறார்களோ?” என்று கேட்டேன். அவருக்கு மேல்விஷாரத்தைப் பற்றிக் கொஞ்சம் தெரியும். நான் பட்டப் படிப்பு படித்த ஊர்.
அவ்வளவுதான், அந்த மூளையின் ஒவ்வொரு பகுதியாக ஆராய்ந்து விவரித்தபடியே சுவைத்தார் அன்பு. பிறகு கொஞ்சம் பிரியாணியும் சாப்பிட்டார். ஒருவேளை பிரியாணிக்கு நடுவே அந்த மூளையை மறைத்துவைத்துப் பரிமாறினார்களோ என்று கூடத் தோன்றுகிறது. “அந்த மின்விசிறி யார்மீதும் விழாமல் போனதைக் கொண்டாடுவதற்குத்தான் இன்று ஆட்டுமூளை சாப்பிட்டேன்” என்று சிரித்தார் அன்பு. ஆனால் அதன் பிறகு பல சனி ஞாயிறுகளில் என்னை சாட்சி வைத்துக்கொண்டு அதே ஓட்டலில் அவர் ஆட்டுமூளை சாப்பிட்டதுண்டு. அப்போதெல்லாம் மின்விசிறியோ வேறெதுவோ விழுந்ததா என்று தெரியவில்லை.
சாப்பிட்டு முடித்தபோது இரவு மணி ஒன்பது. “சாப்பிட்ட உடன் அறைக்குப் போய் தூங்கினால் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல. அதனால் என்ன செய்யலாம்?” என்று கேட்டார். “நடந்தே அறைக்குப் போகலாமே” என்றேன். நடந்தோம்.
அப்போதுதான் வைஜயந்திமாலா அங்கு வந்தார். இல்லையில்லை, நாங்கள் அவரை நெருங்கினோம். எங்களை விட சுமார் ஐந்து வயதுதான் அதிகம் இருக்கலாம். என்ன இளமை, என்ன அழகு, என்ன நளினம், என்ன கவர்ச்சி, என்ன துடிதுடிப்பு! சொல்லிக்கொண்டே போகலாம். (இன்று இது போதும். நாளை பார்க்கலாம்).
(தொடரும்)
-இராய செல்லப்பா நியூ ஜெர்சியில் இருந்து
பதிவே நீரில் நனைந்திருப்பதுபோல் தோன்றுகிறதே.. வைஜயந்திமாலா எஃபெக்டா?
பதிலளிநீக்குஎதற்கும் ஒருமுறை உங்கள் மொபைலை நன்றாகத் துடைத்து விட்டு பாருங்களேன்!
நீக்குஆஹா!நல்ல தொடக்கம்.
பதிலளிநீக்குமோகினி கதை தொடருமா...?
பதிலளிநீக்குமோகினிப் பேய் பிடித்தால் இரண்டில் ஒன்று ஆகும்வரை விடாது என்கிறார்களே!
நீக்குஇந்த குறிப்பு டைமண்ட் சமோசாவைப் போல் சுவையாக இருந்தது. காலேஜ் நாட்களில் சென்னை மவுண்ட் ரோட் புஹாரி / இரானி ஹோட்டல்களில் முக்கோண வெஜ் சமோசா சாப்பிட்டதுண்டு.
பதிலளிநீக்குஆஹா எனக்கொரு சமோசா நண்பர் கிடைத்துவிட்டார்! நன்றி ஐயா!
நீக்குசமோசா வர்ணனை அருமை
பதிலளிநீக்குநன்றி நண்பரே!
நீக்குசமோசாவுக்குள் ஆட்டு மூளை வைத்து விட்டார்களோ என்று பார்த்தேன்! கணக்கு டேலி செய்து கொடுப்பது சுவாரஸ்யமான பொழுதுபோக்கு. திரு ருக் தப்பித்தது பெருமாள் செயல்.
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஉங்கள் எழுத்திலேயே சமோசா இத்தனை சுவைக்கின்றதே நிஜத்தில் எத்தனை சுவைக்கும்? ம்ம்... பிரமாதம். அதுசரி மொத்தமாகக் கொண்டுவந்து வைத்துவிடுவார்கள், வாடிக்கையாளர் தங்களுக்கு வேண்டியதை எடுத்துக்கொள்ளவேண்டுமென்றால், பின்னர் என்ன கணக்கில் உணவகத்தார் பில் போடுவார்கள்? வாடிக்கையாளர் சொல்வதுதான் கணக்கா? அப்படியானால் எத்தனை நேர்மையான வாடிக்கையாளர்கள்... எத்தனை நம்பிக்கையான உணவகத்தார்... இன்றைய நீதி தர்மங்களை எண்ணுகையில் அன்றைய நாள்கள் மிக மிகப் பசுமையான நாள்கள்.
பதிலளிநீக்கு...மீ.மணிகண்டன்
ஆம், நாம் சொல்வதுதான் கணக்கு! முதலாளிக்கு ஒன்றுமே தெரியாது. சர்வர்கள்தான் பணத்தை வாங்கி பாக்கெட்டில் போட்டுக் கொள்வார்கள். கூட்டம் இல்லாத நேரத்தில் கல்லாவுக்குப் போய் கணக்கை ஒப்படைப்பார்கள். ஆனால் சர்வர்களுக்கு நல்ல டிப்ஸ் கொடுக்கவேண்டும். இல்லையென்றால் அடுத்த முறை ஊசிப்போனதாகக் கொண்டுவந்து வைப்பார்கள்!
நீக்குபெரிய சமோசாவை விட டைமண்ட் சமோசா Crispy ஆக இருக்கும் என்பது சரியே. டீ க்கு ஏற்ற ஜோடியும் அதுவே.
பதிலளிநீக்குஒரு உயிர் ( ருக்மாங்கதன்) பிழைத்ததைக் கொண்டாட இன்னொரு உயிரை திண்பதா ?
பதிலளிநீக்குஆட்டு மூளை சாப்பிட்டா வைஜயந்தி மாலா வருவாங்களா?எனக்கு அவரை மிகவும் பிடிக்கும் ஆனால் ஆட்டு மூளை பிடிக்காதே
பதிலளிநீக்கு