வெள்ளி, ஜூன் 24, 2022

பாமா திருமண இரகசியம் (தொடர்ச்சி)

 பாமா திருமண இரகசியம் (தொடர்ச்சி)

(புதுடில்லிப் புராணம்- 7 )

அமெரிக்காவில் 71 ஆவது நாள் (21-6-2022)


நேற்று நடந்தது:

“இவளைத் தங்கை என்றுதானே அறிமுகப்படுத்தினான் பாபு?” என்று மெல்லக் கேட்டார் நண்பர். முதல்முறையாக பாபுவிடம் ஏதோ தவறு இருப்பதாக என் மனதில் ஒரு சந்தேகக்கீற்று தோன்றியது.      





சரி, நமது சந்தேகங்களைப் பிறகு வைத்துக் கொள்ளலாம், பாபு எப்படியிருக்கிறான் என்று பார்ப்பதல்லவா முக்கியம் என்று மனதைத் திடப்படுத்திக்கொண்டேன்.


பாமாவைப் பார்த்து "எந்த ஆஸ்பத்திரியில் இருக்கிறார்?" என்றேன். சொன்னாள். அங்கு விரைந்தோம்.


டில்லியில் அரசாங்க ஆஸ்பத்திரிகள் எப்படியிருக்கும் என்று தெரியுமா? சென்னையில் சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரில் இருக்கும் ஜெனரல் ஆஸ்பத்திரி மாதிரிதான் இங்கும். மத்திய அரசோ, ஒன்றிய அரசோ, ஆஸ்பத்திரிகள் மட்டும் மாநில அரசு மாடல்தான்.


காதல் திருமணம்- மற்றபடி கதைக்கும் இவர்களுக்கும் சம்பந்தமில்லை!


எங்கள் வங்கியின் மண்டல மேலாளருக்கு அதிகாரபூர்வ டிரைவர் ஒருவர் இருந்தார். 'கிஷண்' என்று பெயர். 'கிஷன்' என்றும் எழுதலாம். ஒரு சுழியில் என்ன ஆகிவிடப்போகிறது! கிருஷ்ணன் என்பதன் இந்தி வடிவமே அது. ஆசாமி இளைஞர். ஆறடி உயரம். இராணுவ அதிகாரிக்குரிய நடையும் பாவனையும் இருக்கும்.  வெள்ளைவெளேர் என்றிருப்பார்.  அவருக்குத் தன்னைப் பற்றி உயர்ந்த அபிப்பிராயம் உண்டு. ஆகவே, மண்டல மேலாளர் சொல்வதைக் கேட்கமாட்டார். ஆனால், தலைமை அலுவலகத்திலிருந்து வருபவர்களுக்கு உழவாரப்பணி செய்யவும் தயங்கமாட்டார். நிதி அமைச்சகம், ரிசர்வ் பேங்க், பாராளுமன்றக் கட்டிடம், பிரதமர் அலுவலகம் என்ற உயர்மட்ட அலுவலகங்களுக்கு மட்டும் அவர் இல்லாமல் போகமுடியாது. இவரைப் பார்த்ததும் இவர்தான் வங்கியின் சேர்மன் போலும் என்றே நம்பிவிடுவார்கள். அந்த அளவுக்கு 'மேக்னட்டிக் பெர்சனாலிட்டி!' 


அன்று எங்களுடன் வந்தவர் கிஷன் தான். சிக்கலான நிலைமைகளில் விரைந்து செயல்படுவார். டோக்கன் கொடுக்கும் இடத்திற்குச் சென்று அங்கிருந்த பெருங்கூட்டத்தை 'ஹேய், சலோ சலோ' என்று சத்தமிட்டபடி தன் பெரிய கைகளால் கலைத்து எங்களை உள்ளே அழைத்துக்கொண்டு போனார். டோக்கனுக்கு ஐந்துரூபாய் இல்லாமல்  யாரையும் உள்ளே விடும் சரித்திரமே இல்லாத ஆஸ்பத்திரியாம் அது. 


15 ஆம் நம்பர் படுக்கை என்றார்கள். போனோம். அப்போது டாக்டர் உள்ளே இருந்ததால் வெளியில் நின்றோம். காப்பி, டீ எடுத்துக்கொண்டு கேனுடன் வந்த ஒருவனை கிஷன் இடைமறித்து ஐந்து டீ ஆர்டர் செய்தார். நாங்கள் மூன்றுபேர், பாபு ஒன்று ஆக நான்குபேர்தான். ஆனால் ஐந்து டீ ? கிஷனுக்கு எல்லாம் இரண்டு வேண்டுமாம். (மனைவியுமா என்பீர்கள். ஆஸ்பத்திரியில் பேசுகிற விஷயமா அது!)


டாக்டர் வெளியேறியதும் நாங்கள் உள்ளே போனோம். ஒரே அதிர்ச்சி. அங்கே காயங்களுடன் படுத்திருந்தது பாபு அல்ல, அவன் ஒன்றுவிட்ட தம்பியான முத்து! பட்டுச் சட்டையும் பட்டு வேட்டியுமாக இருந்தான். அப்படியானால் பாமாவுக்கும் முத்துவுக்கும்தான் கல்யாணம் ஆனதா!  இவனைத்தான் ‘அவர்’ என்றாளா பாமா! அப்படியானால் பாபுவிடம் எந்தத் தவறும் இல்லை. மனதில் நிம்மதி ஏற்பட்டது. ஆனாலும் வேறு கேள்விகள் இருந்தன. 


முத்துவின் கால்களில் கட்டுப் போடப்பட்டிருந்தது. கைகளில் சிராய்ப்புகளுக்கு ஏதோ கிரீம் தடவியிருந்தார்கள். நெற்றியில் காயம் இருந்தது. எங்களைப் பார்த்ததும் லேசாகப் புன்னகைக்க முயன்றான். பக்கத்திலிருந்த மலையாள நர்ஸ் 'அவரால் பேச முடியாது. தொந்தரவு செய்யாதீர்கள்' என்றாள். பேசாவிட்டால் பாபு எங்கிருக்கிறான் என்பதை எப்படி அறிவது?


டில்லி ஆஸ்பத்திரிகளில் அப்போதெல்லாம் மலையாள நர்ஸ்கள் அதிகம் இருப்பார்கள். அவர்களிடம் ஓர் ஒற்றுமை இருந்தது. எல்லோருமே பள்ளியில்  இந்தி படித்தவர்கள். அதனால் இந்தி பேசுபவர்களிடம் தன்மையாகப் பேசுவார்கள். தமிழர்கள் என்றால் இளக்காரமாக நடத்துவார்கள். நமக்குத்தான் இந்தி தெரியாதே! வேண்டுமென்றே நம்மிடம்  இந்தியில்தான் பேசுவார்கள். தமிழை அவர்களால் பேசமுடியும், புரிந்துகொள்ளவும்  முடியும். ஆனால் மாட்டார்கள். புரியாததுபோல் நடிப்பார்கள். சரியான நேரத்துக்கு மருந்து தரமாட்டார்கள். டாக்டர் வந்தால், நோயாளி ஒத்துழைக்க மறுப்பதாகக் குற்றம் சாட்டுவார்கள். இவர்களுக்கு கிஷன் தான் சரி. 


ஒரே அதட்டலில்  அவளிடமிருந்து விஷயத்தைக் கறந்துவிட்டார் கிஷன். பாபு என்பவர்தான் முத்துவை இங்கு கொண்டுவந்து அட்மிட் செய்தாராம். அவருடன் இன்னும் இரண்டு ஆண்களும்  காயங்களுடன் வேறொரு தளத்தில் அட்மிட் ஆகியிருக்கிறார்களாம். பாபு ஒருவேளை அவர்களுடன் இருக்கலாமாம். 


அது இரண்டாவது தளம். சற்றே மோசமான சூழலில் இருந்த ஒரு மூலையில் ஜன்னலருகே ஒரு கட்டிலின் முன்பு  பாபு நின்றுகொண்டிருந்தான். அந்தக் கட்டிலில் ஒரு பெரியவர் படுத்திருந்தார். அவரைப் பார்த்தால் அடிதடியில் இறங்குபவராகத் தெரியவில்லை. அதற்குப் பக்கத்துக் கட்டிலில் சுமார் முப்பது வயதுள்ள  ஓர் இளைஞன் தலையில் சிறிய பிளாஸ்திரியுடன் தெரிந்தான்.  பாபு இருவரிடமும் பேசிக்கொண்டிருந்தான்.


“இங்க பாருங்க அய்யா, நடந்தது நடந்து போச்சு. முத்துவும் பாமாவும் திடீர்னு டில்லிக்கு வந்து நின்னப்ப எனக்குக் கையும் ஓடலை. காலும் ஓடலை. கடவுள் புண்ணியத்துல எனக்கு பாங்க்குல நல்ல ஆதரவு கெடைச்சு இப்போ டில்லியில கால் ஊனிட்டேன். மாசம் எப்படியும் செலவுபோக இருவதாயிரம் எனக்கு வருது. ரெண்டே வருஷத்துல இந்தர்புரில வீடுவாங்கிடுவேன். பேங்க்குல லோன் குடுக்கறேன்னு சொல்லிட்டாங்க. முத்துவும் பாமாவும் எங்க வீட்டுலயே இருக்கட்டும். அவங்களுக்கும் கடவுள் நல்ல வழி காட்டாமப் போகமாட்டான். அதனால நீங்க அவங்கள மன்னிச்சி வாழ்த்தணும். அவங்க எதிர்காலத்துக்கு நான் கேரண்ட்டி!...” என்று பாபு சொல்லிக்கொண்டிருந்தான். 


நான் சற்றே பின்வாங்கி நின்றேன். 

மலை மந்திர் முருகன் கோயில்-புதுடில்லி

அடுத்த கட்டிலில் இருந்தவன் எழுந்துகொள்ளாமல், அதே சமயம் கோபத்துடன் கத்தினான். “இங்க பாரு பாபு! உனக்கும் இவர்களுக்கும் என்னடா சம்பந்தம்? எதுக்கு நீ அவங்களுக்கு வக்காலத்து வாங்கறே?” என்றவன், பெரியவரைப் பார்த்து, “நைனா! இவன் நல்லவன்தான். தங்கமானவன். சந்தேகமில்லே. இவன் மட்டும் நம்ப பாமாவைத் திருட்டுத்தாலி கட்டியிருந்தாலும் நான் ஏத்துக்கிட்டிருப்பேன். ஆனா அந்த ஒண்ணுமில்லாத பய, முத்துவயில்ல அவ இழுத்துக்கிட்டு ஓடிவந்திருக்கா? நம்ம சாதிசனம் காறித் துப்பமாட்டாங்க? ரெண்டுல ஒண்ணு பாத்துட்டுதான் மறுவேலை!” என்றான்.


இப்போது எனக்கும் என்னுடன் வந்த தமிழ் நண்பருக்கும் விஷயம் விளங்கிவிட்டது. இது பாரதிராஜாவின் வழிகாட்டலில் நடந்த சினிமாப்பாணியிலான பள்ளிக்கூடக் காதல். முத்துவும் பாமாவும் வெவ்வேறு சாதி. அதில் முத்து கொஞ்சம் தாழ்ந்த சாதி. முத்துவின் பெற்றோர் தினக்கூலி ஊழியர்கள். பாமா வீடு வசதியான வீடு. தாயில்லை. தந்தையும் மணமாகாத அண்ணன் முருகேசனும் தான். முத்துவும் பாமாவும் ஒரே பள்ளியில் ஒன்பதாவது படித்தபோது ஏற்பட்ட காதல். வீட்டில் அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கும் செய்தி கேட்டு அண்ணன் முருகேசன் ஊரில் இல்லாத சமயத்தில் சென்னை வந்து பெரியம்மா வீட்டில் தங்கி, அங்கிருந்து சொல்லாமல் கொள்ளாமல் டில்லிக்கு வந்துவிட்டனர் இருவரும்.


பெரியவர் சற்றே  நிமிர்ந்து உட்கார்ந்தார். “பாபு! பாமா செய்த காரியம் தப்புதான். ஆனா நாங்க ஒன் பேங்க்குல வந்து லீவு நாளில ஒன்னைப் பத்தி விசாரிக்கறோம்னு தெரிஞ்சதுமே நீ அவசர அவசரமா மலை மந்திர் முருகன் கோவில்ல ஒரு நல்ல டைம் பாத்து இவங்களுக்குத்  தாலிகட்ட வெச்சே பாரு, அப்பவே நீ பாமாவுக்கு நிஜமான அண்ணனாயிட்டே!  எங்க சாதி சனம் எப்படியோ ஒழியட்டும். சோத்துக்கில்லேன்னா அவனுகளா வந்து போடுவாங்க?“ என்றார். பாபுவைத் தன் கைகளால் அள்ளி  அணைத்துக்கொண்டார்.


அண்ணன்காரன் பொருமினான். “நைனா, நமக்கு எவ்ளோ அவமானத்தை உண்டுபண்ணிட்டா இந்தப் பொண்ணு, அவள நீ மன்னிச்சாலும் நான் மன்னிக்கமாட்டேன்” என்று கத்தினான். 


“என்னடா பண்ணுவே? இது டில்லி, தெரிஞ்சிக்கோ! நம்ம ஊர் இல்ல. பொம்பளைகிட்ட தகராறு பண்ணினா, அவ ஒன் தங்கையாவே இருந்தாலும் உள்ள தள்ளிடுவாங்க! மரியாதையா நாளைக்கு ஊருக்கு கிளம்பணும். பாபு, எங்களுக்கு டிக்கட் வாங்கிடு. நான் பணம் தர்றேன்” என்று பெரியவர் அவனை அடக்கினார்.


“எம்பி கோட்டால டிக்கட் நான் வாங்கித் தர்றேன்” என்று முன்வந்தார் கிஷன். 


அப்போது பாபு செய்ததுதான் எல்லோரையும் நெகிழ வைத்தது. பாமாவின் அண்ணனிடம் நெருங்கி அவன் கைகளைப்  பிடித்துக்கொண்டான். “சாமி முன்னிலைல ஒங்க தங்கையும் முத்துவும் கணவன் மனைவி ஆயிட்டாங்க. அதைப் பிரிக்கப்போறீங்களா? வேண்டாங்க. அவங்க இங்கயே இருந்து முன்னேறி நல்லா வந்தப்பறம் ஊருக்கு வரட்டும். பெரிய மனசு பண்ணுங்க. நீங்க என் அண்ணன் மாதிரி!” என்றான்.  “வேணும்னா ஒங்க காலையும் பிடிக்கத் தயார்” என்று கண்களில் நீர்துளிக்க நின்றான். 


முருகேசன் சட்டென்று எழுந்துகொண்டான். அவனுக்கு உண்மையில் பெரிய காயம் ஒன்றுமில்லை. “இன்னைக்கு பொண்ணுங்கறதால எங்க நைனா அவ செஞ்சத சரின்னுட்டார். அதையே நான் செஞ்சிருந்தா ஒத்துக்கிடுவாரா?” என்றான். “அவங்க ஏழைங்க, நாம நாலு ஏக்கர் நெலம் வெச்சிருக்கோம்னு சொன்னீங்களா இல்லையா?”


பாபு ஒன்றும் புரியாமல் நின்றான். பெரியவரும் தம்மை ஒருவழியாக நிலைப்படுத்திக்கொண்டு எழுந்து நின்றார். “முருகேசா! வயசுக்கு வந்த பொண்ண வீட்டில வச்சுக்கிட்டு புள்ளைக்கு மொதல்ல கல்யாணம் பண்ணுவாங்களாடா? அதனால தான் அப்படிச் சொன்னேன்.”


“அப்படீன்னா பாபுவோட அக்காவை நான் பண்ணிக்கிறதுக்கு சம்மதம்னு சொல்றீங்களா” என்று வெளிப்படையாகவே கேட்டான் முருகேசன்.


ஆச்சரியத்தில் பாபுவின் விழிகள் உயர்ந்தன. அவனுடைய அக்காவைத்தான்  முருகேசன் விரும்புகிறானா? முப்பது வயதை நெருங்கிக்கொண்டிருந்த சரோஜாவுக்கு மாப்பிள்ளை அமையவில்லை. எல்லாம் வைட்டமின் ‘ப’ இல்லாததுதான் காரணம். இப்போது கடவுள் அருளால் காரியம் கூடி வருகிறதா?


“முருகேசா! நீ உண்மையைத்தான் பேசுகிறாயா? அம்மாவிடம் ஒரு வார்த்தை கேட்டுவிடுகிறேன்” என்றான் பாபு நம்பமுடியாமல். 


அதற்குள் ஒரு டாக்டர் உள்ளே நுழைந்தார். “இந்த ரெண்டுபேரையும் டிஸ்சார்ஜ் செய்துவிடுங்கள். பெரிய கேஸ்களுக்கு பெட் கிடைக்காமல் தவிக்கிறார்கள்” என்று அங்கிருந்த மருத்துவ அட்டையில் ஏதோ எழுதிவிட்டுப் போனார். 


கிஷனுக்கு மொழி புரியாவிட்டாலும் கதை புரிந்துவிட்டது. “பாபு தோஸ்த்! தும் லக்கி லடுகா ஹோ” என்று  கை கொடுத்தார். பிறகு சொன்னார்: “இவர்களை டிஸ்சார்ஜ் செய்து நம்ம பேங்க்கு பக்கத்துல இருக்கும் ‘சதரன்’ ஹோட்டலுக்கு போவோம். அங்க ரெண்டுநாள் தங்கட்டும். நான் அட்டென்டன்சுல கையெழுத்து போட்டுவிட்டு  இவங்களுக்கு டில்லியைச் சுத்திக் காட்டறேன். அப்படியே எம்பி கோட்டால டிக்கட்டுக்கும் ஏற்பாடு பண்றேன். மத்த காரியங்களை நீ பாத்துக்க.” 


இப்படியாகத்தானே பாபுவின் கதையின் முதல் பாகம் முடிந்தது. இரண்டாம் பாகத்தை நான் நேரில் பார்க்கவில்லை. என்றாலும், கேள்விப்பட்டவரையில் சுருக்கமாக இப்படிச் சொல்லலாம்: 


சில மாதங்களில் பாபுவுடைய அக்காவுக்கும் முருகேசனுக்கும் அதே டில்லி மலைமந்திரில் திருமணம் நடைபெற்றது. முருகேசனின் தந்தை தன்னுடைய நிலத்தை விற்றுவிட்டு டில்லிக்கே வந்துவிட்டார். காரணம், முருகேசனுக்கு டில்லியில் நிரந்தரமான வேலை கிடைத்துவிட்டது! 


கிஷனுடைய உறவினன் ஒருவன் சிண்டிகேட் வங்கி மண்டல மேலாளருக்கு டிரைவராக இருந்தவன், திடீரென்று பம்பாய்க்குப் போய்விடவே, முருகேசனை அவருக்குத் தற்காலிக டிரைவராக வேலைக்கு அமர்த்திவிட்டார் கிஷன்.  தன்  தொழில் திறமையாலும் பழகும் தன்மையாலும், விரைவிலேயே இந்தி பேசக் கற்றுக்கொண்டு விட்டதாலும் நிரந்தர டிரைவராக ஆக்கப்பட்டான் முருகேசன்!     -சுபம்-


  • இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து 






12 கருத்துகள்:

  1. பதிவின் நிகழ்வின் ஊடே இந்தியின் அவசியத்தையும், இந்தி தெரியாத தமிழர்களுக்கு மலையாளிகளால் ஏற்படும் இடையூறை அழகாக சொன்னீர்கள்.

    அரசியல்வாதிகளால்தானே இந்த அவலநிலை இனியெனும் தமிழர்கள் உணரட்டும்.

    தமிழ் வாழ்க!
    இந்தியும் வாழட்டுமே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரசியல்வாதிகள் அப்படித்தான் இருப்பார்கள். புத்தியுள்ள பிள்ளை பிழைக்கும் என்று நாம்தான் வழிகட்டவேண்டும்.

      நீக்கு
  2. அதென்ன...   நர்ஸ் என்றாலே மலையாளம்தானா?  நான் என் ஆஸ்பத்திரி அனுபவங்களில் ஒரு மலையாள நர்ஸ் கூட பார்த்ததில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் ஏக்கம் விரைவில் தணியவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

      நீக்கு
  3. மிக நன்றாக எழுதியருக்கீங்க. தமிழ்படம் போல சட் சட் என உண்மையிலேயே நடந்திருக்கிறதே

    பதிலளிநீக்கு
  4. எத்தனை திருப்பங்கள்? Truth is stranger than fiction என்பது உண்மையே.

    பதிலளிநீக்கு
  5. சுபம் என்று போட்டு விட்டீர்களே அதற்குள். பாபுவுக்கு கல்யாணம் எப்போது ?

    பதிலளிநீக்கு
  6. சரியான பேர்வழி நீங்கள்! சுபம் போட்டால் இடத்தை காலி செய்ய வேண்டும் என்று தெரியாதா! பாபுவுக்கு திருமணம் ஆகாமலா இருக்கும்! எனக்குத் தெரிவிக்கவில்லை, அவ்வளவே!

    பதிலளிநீக்கு
  7. பாபும, முத்து வாழ்க்கையில் முடிச்சுகள் பரவாயில்லை ஆண்கள்....ஆனால் எப்படியோ பாமாவின் வாழ்க்கையில் முடிச்சுகள் மூன்று முடிச்சுகளில் முடிந்ததே!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  8. பாபுவின் கதை இரண்டாம் பாகத்தில் பாபு மிஸ்ஸிங்... முருகேசன் மேரியிங்...! ;)

    பதிலளிநீக்கு