புதன், ஜூன் 29, 2022

ஹனுமாரை வணங்கும் கன்னியர் இருவர் - 3

ஹனுமாரை வணங்கும் கன்னியர் இருவர் - 3  

(நான்கு தூண்கள் நகரம்-14 )

அமெரிக்காவில் 74  ஆவது நாள் (24 -6-2022)






மறுநாள் காலை. கார் நளினியின் பயிற்சி மையத்தை அடைந்தது. நான்  இறங்குவதற்குள் ஓடோடி வந்த நளினி, “இறங்கவேண்டாம் சார்! நானும் வருகிறேன். இன்னோர் இடத்திற்குப் போகவேண்டும்” என்று முன்சீட்டில் அமர்ந்தாள். டிரைவரிடம் “ஸ்கந்தகிரி கோவிலுக்குப் போங்கள்” என்று இந்தியில் கூறினாள்.


நான் அதிர்ச்சியுடன், “என்ன இது, நகரின் ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலைக்குப் போகிறீர்கள்?  பத்து மணிக்குள் பயிற்சி நிலையத்திற்குத் திரும்ப முடியாதே” என்றேன்.   


அவள் சிரித்தாள். “நீங்கள் பேப்பர் பார்க்கவில்லையா? இன்று ஹைதராபாதில் விடுமுறை அறிவித்திருக்கிறார்கள்- முன்னாள் முதல்வர் மரணம் அடைந்துவிட்டதால்!”


இது நேற்றே  இவளுக்கு எப்படித் தெரியும்? அவளுடைய வகுப்புத்தோழி ஒருத்தி ஐஏஎஸ் அதிகாரியாம். இந்த நபர் நேற்று காலையே இறந்துவிட்டாராம்.  விடுமுறை அளிப்பதாக அரசாங்கம் அறிவித்தால்தான் இவருடைய இறப்பை அக்கூடும்பத்தினர் அறிவிப்பார்கள் என்றாளாம். “எப்படி என்னுடைய தீர்க்கதரிசனம்?” என்று குதூகலமாகக் கேட்டாள்.


“நீங்கள் வித்தியாசமான பெண்ணாக இருக்கிறீர்கள். இருபது வருடம் முன்பே …” என்று சொன்னப்போனவன் சட்டென்று நிறுத்தினேன்.


அவள் கண்கள் வியப்பினாலும் திகைப்பினாலும் விரிந்தன. “என்ன, இருபது வருடம் முன்பே என்னைத் தெரியுமா உங்களுக்கு?”    


“ஹனுமாரின் அருள் இருந்தால் ஏன் தெரியாது?” என்றேன் சிரித்துக்கொண்டே. பிறகு “பெரிதாக ஒன்றுமில்லை. பள்ளி மாணவியாக உங்களைப் போல் ஒருத்தியைப் பார்த்ததுண்டு ஹனுமார் கோவிலில். குரலை வைத்து அடையாளம் கண்டுபிடித்தேன். என் காதுக்குத்தான் நீங்கள் நன்றி சொல்லவேண்டும்.”


அவள் ஆர்வத்துடன் என் கைகளைப் பற்றிக் கொண்டாள். "உங்களை அன்று பிர்லா மந்திரில் பார்த்தபோதே என் மனதில் ஒன்று தோன்றியது. பிறகு சொல்கிறேன்" என்றாள். டிரைவர் முன்பு பேச விரும்பவில்லை போலும்.


ராகிகுட்டா ஸ்ரீ பிரசன்ன ஆஞ்சநேயர் ஆலயம், ஜயநகர் 9 வது பிளாக்  

ஸ்கந்தகிரி கோவில் இப்போது நன்றாக வளர்ச்சி அடைந்திருந்தது. காலை நேரத்திலேயே கிட்டத்தட்ட ஐம்பது பேர் கூடி இருந்தார்கள். வடமொழியும் திருப்புகழும் கலந்த அர்ச்சனை  காதுக்கும் மனதுக்கும் நிறைவை அளித்தது.


நளினியைப் பற்றிக் கொஞ்சம் சிந்தித்தேன். யார் இவள்? எதற்காக என்னிடம் பேச விரும்புகிறாள்? என்ன பேசப் போகிறாள்?


மலையிலிருந்து இறங்கினோம். அடுத்து எங்கே கூட்டிச் செல்கிறாள் என்று தெரியாத நிலையில் கார்  நிறுத்தத்தைப் பார்த்தேன். அங்கே கார் இல்லை!


"காரை அனுப்பி விட்டேன்" என்று சிரித்தாள் நளினி. "என் குழந்தையைப் பார்க்க வேண்டாம் என்கிறீர்களா?"


குழம்பினேன். என் குழப்பத்தைத் தீர்த்தவளாக,"என் சித்தி வீடு பக்கத்தில்தான் இருக்கிறது. பயிற்சிக்கு வரும்போதே என் அம்மாவும் குழந்தையும் என்னோடு வந்துவிட்டார்கள்" என்றாள் நளினி.


ஐந்தே நிமிடத்தில் அவள் சித்தி வீட்டை அடைந்தோம். நளினியைக் கண்டதும்  குழந்தை ஆசையாக ஓடிவந்து கட்டிக் கொண்டது. 


"வாங்க வாங்க" என்று வரவேற்றார் நளினியின் தாயார். "நீங்கள் வருவீர்கள் என்று நேற்று இரவுதான் சொன்னாள். ப்ரேக்பாஸ்ட் ரெடி.  பொங்கலும் கத்திரிக்காய் கொத்சும் கீரை வடையும். கை கழுவிக்கொண்டு வாருங்கள், சாப்பிடலாம்."


முன்கூட்டியே திட்டமிட்டுச் செய்திருக்கிறாள் நளினி. ஏதாவது சிக்கலில் என்னை மாட்டிவிடுவாளோ என்ற அச்சத்துடனேயே பொங்கலில் இருந்த இஞ்சியையும்  முந்திரியையும் கடித்தேன். முறுகலான கீரை வடை பொங்கலின் சுவையை மேலும் கூட்டியது.


"கொத்சு பிரமாதம் சித்தி" என்றாள் நளினி. "பொங்கலில் காரம் குறைவாக இருக்கிறதே,  குழந்தைக்காகக் குறைத்துப் போட்டாயா?"


ஆமென்று தலையசைத்த சித்தி,  "நான் மாடிக்குப் போய்,  குழந்தைக்கு சாதம் ஊட்டுகிறேன். நீங்கள் பேசிக்கொண்டிருங்கள்" என்று கிளம்பினாள்.


சாப்பிட்டு முடித்தபின் வரவேற்பறையில் அமர்ந்தோம். "நளினி, சஸ்பென்ஸ் மேல் சஸ்பென்ஸாக வைக்கிறீர்களே! என்னை எதற்காக அழைத்தீர்கள்?  தயவு செய்து சொல்லிவிடுங்கள்" என்றேன் திடமான குரலில்.


கலகலவென்று சிரித்தாள் நளினி. "பயப்படாதீர்கள். உங்களை ஒன்றும் செய்துவிட மாட்டேன். இப்போது மட்டுமல்ல, மூன்று மாதம் கழித்த பிறகும்!"


"அதென்ன மூன்று மாதம் கணக்கு?"


"சரி, விஷயத்துக்கு வருகிறேன். எனக்கு உங்களிடம் ஓர் ஆலோசனை வேண்டும். அதற்காகத்தான் அழைத்தேன்" என்று நளினி, ஒரு காகித உறையை என்முன் வைத்தாள். அது என்னுடைய வங்கியின் தலைமை அலுவலகத்தில் இருந்து அவளுக்கு எழுதப்பட்ட கடிதம்!


வியப்புடன் அவளைப் பார்த்தேன்.


"ஆமாம் சார்! உங்கள் வங்கியிலிருந்து எனக்கு ஒரு 'ஆஃபர்' வந்திருக்கிறது. மூன்று மாதம் டைம் கொடுத்திருக்கிறார்கள். அது விஷயமாகத்தான் பேச வேண்டும். வேறு யாரிடமாவது பேசினால் செய்தி உங்கள் ஹெச். ஆருக்குப் போய், அதனால் காரியம் கெட்டுவிடலாம் என்று பயமாக இருந்தது. உங்கள் ஜிஎம் தான் உங்களிடம் மட்டும் பேசச் சொன்னார்" என்று ஜி.எம். பெயரைச் சொன்னாள். 


வேறு வங்கிகளில் இருந்து உயர்பதவிகளுக்கு ஆள் எடுக்கும் வழக்கம் அரசுத்துறை வங்கிகளில் அப்போது இல்லை. எங்கள் வங்கி  வேகமாக வளர்ந்து கொண்டிருந்ததனால், டிரஷரி, இன்வெஸ்ட்மெண்ட், ஷேர் புரோக்கிங், கிரெடிட் கார்டு ஆகிய துறைகளுக்கு மட்டும் அத்துறைகளில் முதன்மை வகிக்கும் சில வெளிநாட்டு வங்கிகளில் இருந்து எக்ஸிக்யூட்டிவ் பதவிகளுக்கு ஆள் எடுக்கலாம் என்று அனுமதி கிடைத்திருந்தது.


நளினியின் வங்கிக்கும் எங்கள் வங்கிக்கும் பத்தாண்டுகளுக்கு மேல் நல்ல தொடர்பு இருந்தது. அந்த வங்கியில் இருக்கும் நம்பிக்கையூட்டும் இளம் அதிகாரிகள் பற்றிய தகவல்களை என்னுடைய ஜிஎம் சேகரித்து வைத்திருந்தார். அப்படித்தான் நளினிக்கு அந்த ஆஃபர் வந்திருக்க வேண்டும்.


உறையைப்  பிரிக்காமலேயே அவளை வாழ்த்தினேன். "ஆனால் சம்பளம் குறைந்து போகும்; நீங்கள் சென்னையை விட்டு பெங்களூருக்குப் போகவேண்டி யிருக்கும். மற்றபடி எங்கள் வங்கியில் சர்வீஸ் கண்டிஷன் மிகவும் திருப்தியாகவே இருக்கும். நீங்கள் எந்தப் பதவியில் சேர்ந்தாலும் நல்ல ஒத்துழைப்பு கிடைக்கும்" என்றேன் மகிழ்ச்சியுடன்.


கடிதத்தை அவளே பிரித்துக் காட்டினாள். ஜி.எம். - முக்கு அடுத்த நிலையில் வைஸ்-பிரசிடெண்ட் என்ற பதவி உருவாக்கப்பட்டு அவளுக்கு அளிக்கப்படுகிறது. புதிய துறைக்கு அவள் முழுப் பொறுப்பாளராக இருப்பாள். இப்போது போல் ஒரு லட்சம் கிரெடிட் கார்டு ஸ்டேட்மெண்ட்களைப் படித்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. அவளுக்குக் கீழ்  பொறுக்கி எடுக்கப்பட்ட பதினைந்து இளம் அதிகாரிகள் இருப்பார்கள். எல்லாம் சரியாக இயங்குமானால், பத்து வருடத்திற்கு உள்ளேயே அவள் இன்னொரு வங்கிக்கு சேர்மன் ஆகவும் கூடும்.


"உங்களைச் சென்னையிலேயே சந்திக்க விரும்பினேன் ஆனால் அதற்குள் நீங்கள் ஹைதராபாத் கிளம்பி விட்டீர்கள். நல்லவேளையாக நானும் இங்கு வரும்படி ஆனது" என்றாள் நளினி சற்று தயக்கமான குரலில். 


"எல்லாம் அனுமார் செயல்" என்று நான் சொன்னதும் சிரித்தாள். அவளுடைய தாயாரும் சேர்ந்து  கொண்டார். "சின்ன வயசிலிருந்தே அவளுக்கு ஹனுமான் சாலிசா மனப்பாடம்" என்றார்.


நளினி எழுந்து போய் ஒரு ஃபைலை எடுத்து வந்தாள். எங்கள் வங்கியில் சேரும் முன்பு என்னென்ன முக்கியத் தகவல்கள் அவளுக்குத் தெரியவேண்டும் என்று இருபது கேள்விகளை எழுதியிருந்தாள். ஒவ்வொன்றாக என்னோடு விவாதித்தாள். (அவை நுட்பமான கேள்விகள் என்பதால் இங்கு வெளியிடவில்லை என்று நினைக்கவேண்டாம். சுத்தமாக மறந்து போய்விட்டது!). 


அவள் தாயாரும் சில கேள்விகளைக் கேட்டார். இந்தக் கேள்வி-பதில் செஷன் இரண்டு மணி நேரம் நீடித்து, மறுசூடாக்கப்பட்ட கீரைவடை,  ப்ரூ காபியுடன் இனிதே முடிவடைந்தது. 


"நீங்கள் சொன்னது போல் உங்களை நான் சந்திக்க முடிந்தது   அனுமார் அருளால் தான். பொதுவாகவே வெளிநாட்டு வங்கியில் இருந்து அரசுத்துறை வங்கிக்கு மாறுவதை முட்டாள்தனமான முடிவு என்றுதான் எல்லோரும் கூறுவார்கள். ஆனால் எனக்குக்  காகிதங்களோடு போராடி அலுத்துவிட்டது. நான் வாழ விரும்புகிறேன். அதனால் தான் உங்கள் ஜிஎம் என்னை போனில் அழைத்தபோது ஒப்புக் கொண்டேன்,  ஆனால் மூன்று மாதம் டைம் கேட்டேன். உடனே முடிவெடுக்க முடியாதபடி குழப்பம் ஏற்பட்டது. என் கணவரோ 'உனக்கு என்ன விருப்பமோ அதைச் செய்' என்று சுதந்திரம் கொடுத்துவிட்டார். ஆனால் அனுபவம் உள்ள ஒருவரிடம் இருந்து சரியான அறிவுரையைக் கேட்க விரும்பினேன். நீங்கள் கிடைத்தீர்கள். ரொம்ப நன்றி" என்றாள் நளினி. 


"எனக்குச் சொல்ல வேண்டிய அறிவுரை ஏதாவது பாக்கி யிருக்கிறதா?" என்றாள்.


"இருக்கிறது. பெங்களூர் போனவுடன் ஜயநகர் 9 ஆவது பிளாக்கில் ராகிகுட்டா என்ற இடத்திற்குப் போங்கள்.  மலைமேல் அனுமார் உங்களுக்காகக் காத்துக் கொண்டிருப்பார்" என்றேன். எல்லாரும் சிரித்தார்கள். நளினி மட்டும் முகவரியை ஃபைலில் குறித்துக் கொண்டாள்.


நளினியின் தாயார் என்னைப் பார்த்துக் கைகூப்பினார். "இவ்வளவு நேரம் இவளுடைய எல்லாக் குழப்பங்களையும் பொறுமையாகத் தீர்த்து வைத்ததற்கு ரொம்ப நன்றி. ஆனால் ஒன்று, இவள் உங்கள் வங்கியில் சேரும்வரை இந்த விஷயம் இவளுடைய வங்கியில் இருக்கும் உங்கள் நண்பர்களுக்குத் தெரியவேண்டாம்" என்று வேண்டியவர், "உங்களைப் பார்க்கும் பொழுது அவளுடைய அப்பா ஞாபகம் தான் வருகிறது" என்று கண்களைத் துடைத்துக் கொண்டார்.


"ஆமாம் சார்! அதைத் தான் நானும் அப்போதே சொல்ல நினைத்தேன். என் அப்பாவுக்குக் கோபமே வராது, உங்களைப் போலவே!" தாயாரின் கண்களை லேசாகத் துடைத்தாள்  நளினி.  திடீர் மாரடைப்பால் தந்தை மறைந்து பத்து வருடம் ஆகிறதாம். 


அந்த நினைவில் சடாரென்று என் காலில் விழுந்தாள். "என்னை ஆசீர்வதியுங்கள் அப்பா!" என்றாள். அம்மா விழுந்ததைப் பார்த்து குழந்தையும் ஓடிவந்து என் காலைத் தொடுவது போல் பாவனை செய்தது. 'தீர்க்க சுமங்கலி பவ' என்றேன்.


குழந்தையைத் தூக்கியபடி நளினி சொன்னாள்: "அப்பாக்களை  தத்து எடுத்துக்கொள்ள சட்டத்தில் இடம் இருந்தால், என் முதல் சாய்ஸ் நீங்கள் தான்!"


நாணத்தால் தலை குனிந்தபடி, "வேறு யாரிடமும் இப்படி உளறி வைக்காதேடி முட்டாள்" என்று அவள் தலையில் லேசாகக் குட்டினார் தாயார்.


இனிமேலும் அங்கிருந்தால் ஆபத்து என்பதால் அவசரமாக வாசலை எட்டிப் பார்த்தேன். அப்போது ஓர் ஆட்டோ வந்து நின்றது.  இறங்கியவள்  சந்தோஷி!


" என்னடி சொல்லாமல் கொள்ளாமல் சித்தி வீட்டுக்கு வந்து விட்டாய்? சார் வேறு  வந்திருக்கிறாரே என்ன விஷயம்?" என்றாள் சந்தோஷி பரபரப்புடன்.


"யாரையோ தத்து எடுக்கிறார்களாம்" என்று நளினியைப் பார்த்துக் குறும்பாகச் சொல்லிக் கொண்டே ஆட்டோவில் ஏறினேன். 

   -இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து




 

17 கருத்துகள்:

  1. கிளுகிளுப்பாக படித்துக்கொண்டு இருந்தேன்...கடைசியில் தஙகளின் இந்த கீழே காணும் வரிகளைப் படித்தவுடன் கண்ணீர் வந்து விட்டது சார்...!

    தங்கள் எழுத்துக்கு என்ன ஒரு வலிமை!!

    "குழந்தையைத் தூக்கியபடி நளினி சொன்னாள்: "அப்பாக்களை தத்து எடுத்துக்கொள்ள சட்டத்தில் இடம் இருந்தால், என் முதல் சாய்ஸ் நீங்கள் தான்!" "

    பதிலளிநீக்கு
  2. என் கண்கள் குளமாகி விட்டன.  என்ன எதிர்பார்த்து என்ன ஒரு மாற்றம்?  !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நளினி சொன்ன இந்தக் கடைசி வாக்கியம் தான் இத்தனை ஆண்டுகளாக என் மனதில் கிடந்து உறுத்தியபடி 'என்னை எழுதமாட்டாயா' என்று உசுப்பிக் கொண்டே இருந்தது!

      நீக்கு
  3. மனதை நெகிழ்த்திய பதிவு.

    என் வீடு ராகிகுட்டா கோவிலுக்கு முன்பு இரண்டாவது தெருவில் (200 மீட்டருக்குள்) இருக்கிறது. படம் பார்த்ததும், நம் கோவில் இங்க எங்க என்று தோன்றியது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா! மிக்க மகிழ்ச்சி. நீங்களும் அனுமார் பக்தரோ?

      நீக்கு
    2. அது, அதுவாக அமைந்த (அதிலும் ஒரு வாரத்துக்குள், பணம் அனுப்பி நகராட்சி ஏலத்தில் வாங்கினது) இடம். நிச்சயம் அனுமாரின் கருணையினால் அமைந்த இடம்தான். அதை வாங்கித்தந்தது என் மாமனார். உடனே அங்கு வீட்டையும் கட்டிக்கொடுத்தார்.

      நீக்கு
  4. சார் எவ்வளவு அனுபவங்கள்! பல ஆச்சரியப்பட வைக்கின்றன.

    அப்பெண் உங்களை அப்பா என்று சொன்னது ஆச்சரியத்தோடு உங்கள் மீதான மதிப்பையும் சொல்கிற்து ஆனால் பாருங்கள் 20 வருட்ம் கழித்து அது எப்படி தொடர்புபடுத்தியிருக்கிறார் அதே ஆஞ்சு!!! (ஆஞ்சநேயரின் செல்லப் பெயர்) என் இஷ்ட தெய்வம்.

    ராகிகுட்டா அருகில்தான் 20 வருடங்களுக்கு முன் இருந்தோம் பிடிஎம் லே அவுட்டில். (பாருங்க இங்கயும் 20 வருடங்கள்!!) அப்போது தினமும் நானும் மகனும் சென்று வருவோம். அப்போது நாங்கள் சென்னையில் இருந்தாலும் லீவுக்கு இங்கு வந்து செல்வோம். அடுத்த மாதம் இங்கு செல்ல வேண்டும் என்று இன்று காலையில் சொல்லிக் கொண்டிருந்தால் நீங்களும் அதே கோயில் பற்றி சொல்லியிருக்கிறீர்கள். அழகான கோயில் அப்போது பார்த்த கோயில் இப்போது நிறைய மாற்றங்கள் வந்திருப்பது போல் இருக்கிறது. ஜெயநகர், பிடிஎம் லே அவுட் எல்லாமே மாறித்தான் போயிருக்கின்றன. ஆனால் படம் வித்தியாசமாக இருக்கிறதே

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படம், அந்தக் கோவில் இணையதளத்தில் இருப்பதுதான். இரண்டு படங்கள் நீளவாக்கில் இணைந்துள்ளதைக் கவனிக்கவும். நீங்கள் அங்கு போனால் ஆஞ்சநேயரிடம் எனக்காகவும் வேண்டிக்கொள்ளவும். அவர் தருவதை மறவாமல் எனக்கு அனுப்பிவைக்கவும்.

      நீக்கு
  5. "அப்பாக்களை தத்து எடுத்துக்கொள்ள சட்டத்தில் இடம் இருந்தால், என் முதல் சாய்ஸ் நீங்கள் தான்!"

    மனதை தொட்ட வரிகள்

    கீதா

    பதிலளிநீக்கு
  6. அப்பாக்களை மானசீகமாக தத்து எடுத்துக் கொள்ளலாம். சிறப்பான தமிழ் நடை.

    பதிலளிநீக்கு
  7. பதில்கள்
    1. எங்கேயோ நளினி ஃபாசிலின் ஸ்ரீவித்யாவை ஞாபஹப்படுத்திவிட்டாள்.

      நீக்கு
  8. உங்கள் எழுத்தில் ஹனுமானின் அனுக்கிரகம் தெரிகிறது...

    பதிலளிநீக்கு