ஹனுமாரை வணங்கும் கன்னியர் இருவர் - 2
(நான்கு தூண்கள் நகரம்-13)
அமெரிக்காவில் 73 ஆவது நாள் (23-6-2022)
தொண்ணூறுகளில் வங்கிகள் கணினிமயம் ஆக்கப்பட்டபோது எல்லா அதிகாரிகளுக்கும் அவர்கள் தேவைக்கேற்ப கணினித்துறையில் அவசரமாக அறிவு புகட்டுவதற்காக இந்திய ரிசர்வ் பேங்க், ஹைதராபாத்தில் ஒரு தொழில்நுட்ப மையத்தை நிறுவியது.
முதல் கட்டமாக அரசுத்துறை வங்கிகளில் இருந்து அதிகாரிகளை அங்குப் பயிற்சிக்கு அனுப்புமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதன்படி நானும் சென்றிருந்தேன். கிட்டத்தட்ட 19 வருடங்களுக்குப் பிறகு ஹைதராபாதில் ஒருவாரம் தங்கும் வாய்ப்பு அதனால் கிட்டியது.
சந்திரபாபு நாயுடு ஆந்திர முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு ஹைதராபாத் நகரை உலக நகரங்களில் ஒன்றாக ஆக்குவதற்கு மும்முரமாக உழைத்தார் என்று கேள்விப்பட்டது உண்மையே என்பதை நேரில் கண்டேன்.
அபீட்ஸ் முதல் நாம்பள்ளி ரயில் நிலையம் வரை, பப்ளிக் கார்டன் முதல் ஹுசேன் சாகர் வரை, அங்கிருந்து செகந்திராபாத் வரை- என்று ஹைதராபாத் நகரம் அற்புதமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஏரியைச் சுற்றி வண்ண விளக்குகளும், வகை வகையான உணவுக் கடைகளும், ஒழுங்குபடுத்தப்பட்ட கார் நிறுத்தங்களும், அழுக்கில்லாத சாலைகளும் உலக அளவில் கணினித்துறையில் அந்நகரம் பெற்றிருந்த பெயருக்கு மெருகூட்டுவதாக இருந்தன. நெக்லஸ் ரோடு உண்மையிலேயே வைர நெக்லஸ் போல் மின்னியது.
பொதுவாகவே அரசுத்துறை நிறுவனங்களில் ஊழியர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்குச் செலவு செய்யத் தயங்க மாட்டார்கள். குறிப்பாக வங்கிகளில் எந்த ஒரு ஊழியரும் கிளார்க், ஆபீசர் எந்தப் பதவியில் இருந்தாலும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏதேனும் ஒரு பயிற்சிக் கல்லூரியில் அவர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும். இதை ரிசர்வ் வங்கி மிகுந்த கவனத்தோடு கண்காணிக்கும். எனவே பயிற்சிக்கான துணைப் பொருட்களும், பயிற்சி பெறுவோர் தங்குவதற்கான இடவசதியும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்படும்.
அந்தந்தப் பயிற்சி நிலையத்தின் பெயர் பொன்னெழுத்துக்களால் பொறித்த தோல் பை ஒன்றும், பயிற்சி நிலையம் மற்றும் பயிற்சிப் பாடங்கள் பற்றிய குறிப்புகள் அடங்கிய ஃபோல்டர் ஒன்றும் ஒவ்வொருவருக்கும் தவறாமல் வழங்கப்படும். பயிற்சி இறுதிநாளில் விருந்தும், குழு புகைப்படமும், ஔவையாருக்கு நெல்லிக்கனி மாதிரி சிறிய அளவிலான பரிசுப் பொருள் ஒன்றும் கட்டாயம் உண்டு.
முதல்முறையாக இந்தப் பயிற்சிக்கு வருபவர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட தோல்பையைப் பெருத்த வெகுமதியாகக் கருதி, தாங்கள் கொண்டு செல்லும் இடமெல்லாம் ஐடி கார்டுபோல் விடாமல் கொண்டு செல்வது வழக்கம்.
என்னுடன் சுமார் 20 பேர் வெவ்வேறு வங்கிகளில் இருந்து அங்கு பயிற்சி பெற வந்திருந்தார்கள். ஒரு நாள் மாலை பயிற்சி முடிந்தவுடன் ஹாஸ்டலுக்குச் செல்லாமல் ஓர் ஆட்டோ பிடித்து பிர்லா மந்திருக்குச் சென்றேன். எனவே பயிற்சியில் வழங்கப்பட்ட தோல்பை என் கையோடு ஊசலாடிக் கொண்டிருந்தது.
20 ஆண்டுகள் ஆனாலும் பிர்லா மந்திர் இன்னும் புதிய கோயில் போலவே மெருகோடு காட்சி அளித்தது. அணுகுப் பாதையும் ஓரளவு செப்பனிடப்பட்டு இருந்தது. கார்களுக்கு என்று போடப்பட்டிருந்த வேறொரு நல்ல பாதை சற்றுத் தொலைவில் வந்து முடிந்தது.
ஜனத்தொகை பெருக்கத்திற்கு ஏற்ப மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கையும் அதிகமாகவே இருந்தது. என்றாலும் தரிசனத்திற்குச் செல்லும் கூட்டம் எப்போதும் போல ஒழுங்குமுறைக்கு உட்பட்டதாகவே இருந்தது.
மலையடிவாரத்தில் இருந்த அனுமார் கோயிலைப் பார்த்தேன். புதுப்பொலிவோடு காட்சியளித்தது. இப்பொழுதெல்லாம் பெண்கள் தினந்தோறுமே குழுவாக அனுமான் சாலிசா பாடுவதாக அறிந்தேன். அன்றும் பாட ஆரம்பித்திருந்தார்கள். தொடர்ந்து பாடிப் பயிற்சி பெற்றவர்கள் குழுவில் அதிகம் இருந்திருக்க வேண்டும். சேர்ந்திசையின் லயம் பரவசமூட்டுவதாக இருந்தது.
மந்திரின் உச்சியில் ஒளிர்ந்து கொண்டிருந்த விளக்குகளையும், படிகளில் சாரிசாரியாக மேலேறிக் கொண்டிருந்த மக்கள் கூட்டத்தையும் பார்த்தபடியே அந்த இசையில் மெய்மறந்து நின்று விட்டேன். அப்போதுதான், அன்றொருநாள் அதே அனுமார் கோயிலில் நான் கேட்ட இனிய குரலை மீண்டும் கேட்டேன்.
திடுக்கிட்டு, குழுவில் இருந்த பெண்களை மேலோட்டமாகப் பார்த்தேன். தன்னை மறந்து பாடிக் கொண்டிருந்தாள் அந்தப் பெண். அதே பெண்!
இறைவன் படைப்பில் மனிதனின் மூளையும் மனமும் அற்புதமானவை. சில எண்ணங்களை, சில குரல்களை, சில காட்சிகளை, சில உணர்ச்சிகளை எத்தனை வருடங்கள் ஆனாலும் அவை தம்மிடமிருந்து அழிப்பதில்லை. நேற்றைய நினைவுகள் இன்று அழிந்துவிடுகின்றன. ஆனால் இருபது வருடத்துக்கு முந்தைய நினைவுகள் அழியாமல் இருப்பது எப்படி?
பாடல் முடிந்து அந்தப் பெண் எழுந்து நின்றாள். அவள் வயதையொத்த இன்னொரு பெண்ணும் எழுந்தாள். இருவர் கையிலும் என்னிடம் இருந்தது போலவே பயிற்சியின் பெயர் பொறித்த தோல்பை இருந்தது. அப்படியானால்?
அந்த இருவரும் நிச்சயம் ஏதோ ஒரு வங்கியில் பணிபுரிபவர்கள் தான். என்னைப் போலவே பயிற்சிக்கு வந்திருக்கிறார்கள். ஆனால் என்னுடைய பயிற்சி நிலையத்தில் அல்ல. அவர்களின் தோல் பையை உற்றுப் பார்த்தேன். மாஸாப் டேங்க் என்ற இடத்தில் வேறொரு வங்கி நடத்தும் பயிற்சி மையம் அது.
அனுமாருக்குக் காணிக்கையாகச் சில காசுகளை தட்டில் வைத்துவிட்டு, மோதிர விரலால் தட்டில் இருந்த காவியைத் தொட்டு நெற்றியில் பொட்டு வைத்துக் கொண்டு அந்தப் பெண்கள் மலை ஏறுவதற்கான படிகளை நோக்கி நடந்தார்கள். அப்போதுதான் தங்கள் கையில் இருப்பது போன்ற அதே தோல் பை என் கையிலும் இருப்பதை அவர்கள் பார்த்திருக்க வேண்டும்.
வரிசையைத் தவறவிடாமல் நடந்து கொண்டே என்னைப் பார்த்து புன்னகைத்தனர் இருவரும். என் வங்கியின் பெயரைச் சொன்னேன். அவர்கள் தங்கள் வங்கியின் பெயரைச் சொன்னார்கள். சென்னையில் உள்ள வெளிநாட்டு வங்கி. இருவரும் ஒரே கிளையில் வேலை செய்பவர்கள். இருபது வருடங்களாக என் காதில் ரீங்காரமிடும் குரலுக்குச் சொந்தக்காரியின் பெயர் நளினி. தன்னுடன் இருந்தவளை, "இவள் சந்தோஷி! ஹனுமான் சாலிசாவை அற்புதமாகத் தப்புத்தப்பாகப் பாடுவாள்" என்று சிரித்துக் கொண்டே அறிமுகப்படுத்தினாள் நளினி. சந்தோஷி சிரித்தாள்.
நளினிக்குத் திருமணமாகி இரண்டு வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. வீடு அலுவலகம் இரண்டும் சென்னையில். தாயாரும் கூட இருக்கிறார். பன்னாட்டு நிறுவனத்தில் உயர்பதவியில் இருக்கும் கணவர், அடிக்கடி தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குப் பயணம் செய்யக் கூடியவர்.
சந்தோஷிக்கு இன்னும் திருமணமாகவில்லை. முப்பதைத் தாண்டி இருக்கலாம். நல்ல கணவனைக் கண்டுபிடிப்பதற்கான அறிவியல் பூர்வமான வழியைத் தேடிக் கொண்டிருக்கிறாளாம்.
லேசான மழைத் தூறல் விழ ஆரம்பித்த உடன் வரிசை வேகமாக நகர்ந்தது. எல்லாம் சில நிமிடம்தான். மீண்டும் நட்சத்திரங்கள் தெரியத் தொடங்கின. திருவேங்கடவனை மனதார வணங்கிவிட்டு மூவரும் மேல்தளத்தில் காலார நடந்தோம்.
அவர்களுக்கு என்னைவிடப் பலமடங்கு சம்பளம். ஐஐஎம் படித்தவர்களாயிற்றே! என்னுடைய அரசுத்துறையில் சம்பளம் குறைவு, ஆனால் பதவிப்பெயரும் பொறுப்புகளும் அதிகம்.
“உண்மைதான், சம்பளம் அதிகம், ஆனால் வேலைப் பளு மிக மிக அதிகம். அதிலும் நான் கிரெடிட் கார்டில் இருக்கிறேன். மாதந்தோறும் அந்த மாதத்திற்கான ஸ்டேட்மெண்ட்டை அச்சடித்து உறையில் போட்டு கூரியரிடம் ஒப்படைப்பதற்குள் உடம்பே நொறுங்கிவிடும்” என்றாள் நளினி. ஆறுவகை கிரெடிட் கார்டுகள். மொத்தம் ஒரு லட்சம் ஸ்டேட்மெண்ட்கள்!
“உதவியாளர்கள் நிறைய பேர் இருப்பார்களே!”
“அதுதான் இல்லை. நானும் எனது வைஸ் ப்ரெசிடெண்ட்டும்தான்! கூரியர் பையன்களை வைத்துக்கொண்டுதான் தொழிலே நடக்கிறது! அதிக பட்சம் இன்னும் இரண்டு வருஷம்தான் இருப்பேன். ஒரே மாதிரி வேலை, நாளுக்கு நாள் அதிகரிக்கும் வேலைச் சுமை. ஆரோக்கியமே போய்விடும்” என்றாள் நளினி.
அதை ஆமோதிப்பதுபோல் தலையாட்டிய சந்தோஷி, “என் கசின் ஸ்டேட்பேங்கில் இருக்கிறான். எவ்வளவு ஜாலியான லைஃப் தெரியுமா? பொறாமையாக இருக்கிறது” என்றாள்.
வங்கிப் பணியாளர்கள் என்றாலே இதுதான் சங்கடம். பேசுபொருள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். வேலைப்பளு, எட்ட முடியாத இலக்குகள், போதிய ஊழியர்கள் இல்லாமை, இருப்பவர்களும் கீழ்ப்படியாமை, இணக்கமற்ற மேலதிகாரிகள், தகுதியற்றவர்களுக்கு ப்ரோமோஷன், திடீர் இடமாற்றம்….
ஓரளவுக்கு இதையெல்லாம் மலைமேலேயே பேசிமுடித்துவிட்டோம். மலையிலிருந்து இறங்கும்போது மனப்பாரமும் இறங்கியிருந்தது. மூவருக்கும்தான்!
நளினிக்காக அவளுடைய அலுவலகத்திலிருந்து வாகனம் வந்திருந்தது. வேண்டாம் என்று சொல்லியும் என்னை அதில் ஏறவைத்தார்கள் இருவரும். எனது ஹாஸ்டல் பக்கத்திலேயே இருந்தது. அவர்களுடையது சற்று தூரம். ஆகவே என்னை இறக்கிவிட்டு அவர்கள் போனார்கள்.
மணி பத்தரை இருக்கும். பொதுவாகவே நான் பதினொன்றரைக்கு முன் உறங்குவதில்லை. பயிற்சி நிலையத்தின் நோட்ஸ்களைப் புரட்டிக்கொண்டிருந்தேன். அப்போது அறையிலிருந்த போன் மணி அடித்தது. நளினி!
“சார், உங்களிடம் ஒன்று பேசலாமா?”
சொல்லுங்கள் என்றேன். சொன்னாள்.
“ஒன்றும் கஷ்டமில்லை. நான் காலை ஆறு மணிக்கே ரெடியாக இருப்பேன். சரியா?” என்றேன்.
“ரொம்ப நன்றி. ஐந்தே முக்காலுக்கே எங்கள் கார் அங்குவந்து காத்திருக்கும்” என்றாள் நளினி மகிழ்ச்சியுடன். (தொடரும்)
-இராய செல்லப்பா நியூ ஜெர்சியில் இருந்து
தொடரை எப்படி எழுதுவது என்பது நன்கு உங்களுக்குக் கைவந்திருக்கிறது
பதிலளிநீக்குஅடுத்த சம்பவத்தை அறிய ஆவல்...!
பதிலளிநீக்கு"சில எண்ணங்களை, சில குரல்களை, சில காட்சிகளை, சில உணர்ச்சிகளை எத்தனை வருடங்கள் ஆனாலும் அவை தம்மிடமிருந்து அழிப்பதில்லை. நேற்றைய நினைவுகள் இன்று அழிந்துவிடுகின்றன. ஆனால் இருபது வருடத்துக்கு முந்தைய நினைவுகள் அழியாமல் இருப்பது எப்படி?"
பதிலளிநீக்குஎப்படி என்று தாங்கள் தான் சொல்ல வேண்டும். ஏதோ பஜனையை கேட்டோமா,போனோமா என்று இல்லாமல் உங்கள் ஆழ்மனத்தில் நளினியை நிலை நிறுத்தியது யார் செயல்...?
நளினி ஒரு ஆச்சர்யக்குறி!
பதிலளிநீக்குஎந்த நளினியை இவர் சொல்றார்?
நீக்குஅண்ணே, இவள் நல்ல நளினி அண்ணே!
நீக்குஉஷ்! நம் எல்லோருடைய வாழ்விலும் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்கள் வந்து போவதுண்டு தானே! நீங்கள் சொல்ல மறுக்கிறீர்கள். நான் மறக்க மறுக்கிறேன்! நன்றி!
பதிலளிநீக்குஆஹா! விக்ரம் படத்தில் கூட இப்படியான சஸ்பென்ஸ் இல்லை. எதற்காக அழைத்தாள்?!
பதிலளிநீக்குகீதா
உங்கள் மனதில் சலன அலைகள் அடித்துக்கொண்டே இருக்கின்றன. அவை உங்கள் எழுத்துக்கு எதையாவது எடுத்துக் கொடுத்துக்கொண்டே இருக்கின்றன.
பதிலளிநீக்குதொடரட்டும் உங்கள் கற்பனை!
சலனம் இல்லாவிடில் பாசி பிடித்துவிடுமே நண்பரே! தங்கள் வாழத்துக்கு நன்றி!
நீக்குபலவாண்டுகள் சென்றபின்னும் பழைய நினைவுகள் சில பசுமையாகவே இருப்பதொன்றுதான் ஆனந்த வாழ்க்கைக்கு காரணம் என்று அனுபவபூர்வமாக நம்புகின்றேன்!
பதிலளிநீக்கு