வெள்ளி, மே 10, 2013

மாலன் எழுதிய 55 சிறுகதைகள் -‍ ‍
ஓர் அறிமுகம்

 

இருநூறு ரூபாய்க்குச் சிறுகதைப் புத்தகம் வெளியிடுகிற ஆசிரியர் என்றால் உலகம் அறிந்தவராகத் தானே இருக்கவேண்டும்! அவருக்கு அறிமுகம் எதற்கு என்ற கேள்வி எழலாம். என்ன செய்வது, என்னைப் போன்ற பிறவிகளும் இருக்கத்தானே செய்கிறார்கள், புத்தகம் வாங்கி ஓராண்டு ஆகியும் படிக்க எடுக்காமல் இருக்கும்  அதி‍சுறுசுறுப்பானவர்கள் (அல்லது சோம்பேறிகள் ?)- அவர்களுக்கு அறிமுகம் வேண்டியது தானே!

தமிழ்ச் சிறுகதை உலகின் மிகச் சிறந்த படைப்பாளிகளில் ஒருவரான தி. ஜானகிராமன், மாலனின் 'வித்வான்' என்ற கதையைப் படித்துவிட்டு, "சிறுகதையின் அடிவானத்தை எவ்வளவு தொலைவிற்கு ஒரு தேர்ந்த கலைஞன் தள்ள முடியும்" என்று வியந்திருக்கிறார். பிரபஞ்சனோ, ஒரு படி மேலே போய், "எழுத்துக்கு ஒரு விளைவு உண்டு; அது சக்தி பொருந்திய பட்ச‌த்தில், இந்தக் கதைகள், தமிழ் இலக்கிய உலகில் சாஸ்வதம் பெறும்" என்று நம்பிக்கை கொள்கிறார்.
இப்படி ஜாம்பவான்கள் இருவர் 'பில்டப்' கொடுக்கும்போது அந்த நூல் சாதரணமான ஒன்றாகவோ, எளிதில் புறக்கணிக்கத்தக்க ஒன்றாகவோ இருக்க முடியாதல்லவா? அதனால் தான் இந்த அறிமுகம்.

(மால‌ன் சிறுக‌தைக‌ள்: முத‌ல் ப‌திப்பு அக்டோப‌ர் 2011, க‌விதா ப‌ப்ளிகேஷ‌ன், ப‌க்க‌ம் 416, விலை ரூ.200)

தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை உடையவர். தமிழகத்தின் முன்னணி ஏடுகளான 'குமுதம்', 'தினமணி', 'குங்குமம்' ஆகிய மூன்றிலும் ஆசிரியராகப் பணியாற்றியவர்.'இந்தியா டுடே' தமிழில் தனது பதிப்பைக் கொண்டுவர விரும்பியபோது அதன் முதல் ஆசிரியராக இருந்து, வடிவமைத்து வெற்றிகரமாக உலவவிட்ட படைப்புச் சிற்பியானவர். 'சாவி' யிடம் பயின்று, பல 'திசைக'ளிலும் சென்று வந்தவர். 'சன் டிவி' யின் புதிய செய்திப் பிரிவான 'சன் நியூஸ்' இவர் பெற்ற பிள்ளை தான். இப்போது 'புதிய தலைமுறையை' உருவாக்கி விட்டிருக்கிறார்.

சி.சு. செல்லப்பாவின் 'எழுத்து' மூலம் தனது இலக்கியப் பிரவேசத்தைத் துவக்கியவர். ஆக, பழைய தலைமுறையின் 'மணிக்கொடி' யிலிருந்து, 'புதிய தலைமுறை' வரை சுடர்விட்டுக் கொண்டிருக்கும் எழுத்தாளர் இவர் என்பதால் கொஞ்சம் கவனத்துடன் இவரைப் படிக்க வேண்டியது அவசியமே.

மொத்தம் 55 கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. எல்லாமே பல்வேறு இதழ்களில் ஏற்கெனவே வெளிவந்தவை. இன்றைக்கு சுமார் 50 வயது உடையவர்கள் இவற்றில் ஒன்றையாவது படிக்காமல் இருந்திருக்க நியாயமில்லை. எனவே ஒரு சில கதைகளை மட்டுமே இங்கு அறிமுகப்படுத்தப் போகிறேன்.
(1) புதுமைப்பித்தனின் எக்ஸ்ரே

'கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்' என்று புதுமைப்பித்தன் எழுதிய கதையைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. மாலனோ, கடவுளுக்குப் பதிலாகப் புதுமைப்பித்தனைப் பிடித்துக் கொண்டு வருகிறார். கந்தசாமிப் பிள்ளைக்குப் பதில் தானே வருகிறார். கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் சந்தித்த அதே 'பிராட்வேயும் எஸ்பிளனேடும் கூடுகிற' சந்தியில் தான் இவர்கள் இருவரும் சந்திக்கிறார்கள். புதுமைப்பித்தனின் முதல் வாக்கியமே, "மெட்றாஸ் ரொம்பத்தான் மாறிப் போச்சு!" என்பது தான்.

ஒரு நதி மாதிரி போக்குவரத்து நகர்ந்து கொண்டிருந்தது. நகரை நகர்த்திப் போகும் நதி. எளிதில் கடந்து விட முடியாத நதி.
நதியின் வேகம் தணிந்த ஒரு வினாடிப் பிளவில் எதிர்கரை நோக்கி நடக்கத் தலைப்பட்டோம். ஏறத்தாழ நடுச்சாலைக்கு வந்த போது, பாம்பை மிதித்தது போல புதுமைப்பித்தன் எகிறித் துள்ளினார். துள்ளிப் பின்வாங்கினார். அவரை உரசினாற்போல் ஒரு ஆட்டோ நெளிந்து விரைந்தது. "ரொம்பத்தான் மாறிப் போச்சு!" என்றார் மறுபடியும்.
கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் காப்பி அருந்திய அதே ஓட்டலில் இவர்களும் காப்பி அருந்துகிறார்கள். வெளியில் வரும்போது கல்லூரி வாசலில் உருட்டுக் கட்டைகளுடன் ஒரு முரட்டுப் படை, புதிய தலைமுறை இளைஞர்களை துவைத்துக் கொண்டிருக்கிறது. எல்லாரும் வேடிக்கை பார்க்கிறார்கள். 'ஏன் இப்படி' என்று மாலனுக்குப் புரியவில்லை. அதனால் புதுமைப்பித்தனுக்குப் புரியவைக்கவும் முடியவில்லை. "இப்போதெல்லாம் இப்படித்தான் திடீர் திடீர் என்று ஏதாவது நடந்து விடுகிறது" என்று குற்ற உணர்ச்சியுடன் கூறுகிறார்.   

லிஃப்ட் இல்லாததால் மூன்று மாடியும் மூச்சு வாங்கியபடி ஏறி, மாலனின் வீட்டை அடைகிறார்கள். எல்லாத் தமிழ் எழுத்தாளர்களுக்கும் உள்ள நப்பாசை, புதுமைப்பித்தனையும் கேட்கவைக்கிறது: "உம் மனைவி என்னைப் படித்திருக்கிறாளா?" என்கிறார். இவருக்குத் தெரியவில்லை. (மனைவிக்குத் தெரிந்த வற்றையெல்லாம் தெரிந்து வைத்திருக்கும் கணவனை எங்காவது பார்த்ததுண்டா?)

தமிழின் பாரம்பரிய ஆடையான‌ 'நைட்டி'யிலிருந்து தன்னை மாற்றிக்கொண்டு காப்பியுடன் வருகிறார் மனைவி. சர்க்கரை போடலாமா என்கிறார். "சர்க்கரை போட்டால் தான் காப்பி. இல்லையென்றால் அதற்குப் பெயர் கஷாயம்" என்று ஜோக்கடிகிறார் பித்தன். (சர்க்கரை போட்ட பின்னும் கஷாயமாயிருக்கும் காப்பி தான் பொதுவாக விருந்தினர்களுக்குத் தரப்படும் என்பது பித்தனுக்குத் தெரியாது போலும்). மனைவியோ, "இந்த வயதிலேயே இவர் சர்க்கரை போட்டுக் கொள்வதில்லை. சுகர்" என்று தேவையில்லாமல் நெகட்டிவ் பாயிண்ட்டை எடுத்து விடுகிறார். (மனைவிகளின் சுதந்திரம்!)

இப்படிப் போகிறது கதை. கால வித்தியாசம் வாழ்க்கை முறைகளில் எவ்வளவு முரண்பாடுகளைக் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது என்பதை மேற்கொண்டு பல நிகழ்ச்சிகளின் மூலம் நமக்கும் பித்தனுக்கும் காட்டுகிறார் ஆசிரியர். கடைசியில் பித்தன் திரும்பிச் செல்லும் நாள் வருகிறது. ஒரு 'பன்ச்லைன்' வேண்டுமல்லவா? "நாம் மாறியிருக்கிறோம், ஆனால் வளர்ந்திருக்கிறோமா?" என்ற  சிந்தனைக்குரிய கேள்வியோடு மறைகிறார். (அவரது எக்ஸ்ரே இன்னமும் மாலனிடம் தான் இருக்கிறது).
 (இந்தக் கேள்விக்கு உங்க‌ளிடம் விடை இருந்தால் உடனே எழுதுங்கள்).

(3) நடுவர்கள் 
அமெரிக்காவுக்குப் படிக்கப் போய் அங்கேயே வேலையும் கிடைத்து, ஒரு இந்தியப் பெண்ணையே மணந்துகொண்டு குழந்தை பெற்று....பின் அமெரிக்கப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த நிலையில் வேலை போய், கையிருப்பும் கரைந்து, தாய்நாட்டிற்குத் திரும்பிவரவும் சுயம் இடம் கொடுக்காமல் மனைவி குழந்தைகளைச் சுட்டுத் தள்ளுகிற இளைஞன் பற்றிய கதை. நடுத்தர வர்க்கம். சுஜாதாவின்  பார்வையிலிருந்து   கொஞ்சம் வித்தியாசமானது.
"மிடில் கிளாசை செலுத்தும் சக்தி சுயந‌லம் தான். தன்னைப் பாதிக்காத எந்த விஷயத்தைக் குறித்தும் அபிப்பிராயங்களைக் கூட அவர்கள் உருவாக்கிக் கொள்ள மாட்டார்கள். செல்ஃப் சென்டிரிக் பீபுள்" என்ற விமர்சனம் ஒருவேளை நம்மை (உங்களை)ப் பற்றியது தானோ?

(4) தப்புக் கணக்கு
இந்தத் தொகுப்பின் 'மாஸ்டர்பீஸ்' இது தான். நமது கல்வி முறையின் அடிப்படைக் கோளாறு எங்கிருந்து தொடங்குகிறது என்று ஆறரை பக்கச் சிறுகதையின் மூலம் அழகாகக் காட்டுகிறார் மாலன். எல் கே ஜி, யு கே ஜி குழந்தைகள் உங்க‌ள் வீட்டில் இருந்தால் நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய கதை. பள்ளி ஆசிரியர்கள், குறிப்பாக சி.பி.எஸ்.சி. பள்ளிகளின் தலைமை ஆசிரியைகள் கட்டாயம் படிக்கவேண்டும். (இன்னும் திருமணம் செய்யாமல் மென்பொருளில் உழன்றுகொண்டிருக்கும் புதிய தலைமுறையும் படிக்கலாம்).

(6) இதெல்லாம் யாருடைய தப்பு?
தமிழாசிரியரின் மகள். பி.எஸ்.சி.க்கு விண்ணப்பிக்கிறாள். பி.ஏ.(தமிழ்) தரட்டுமா என்கிறார்கள்.'பளிச்சென்று மூஞ்சியில் அறைந்த மாதிரி முகம் கூம்புகிறது' இவளுக்கு.  தமிழ் படிக்கிறாயா என்ற அப்பாவிடம் 'அந்தத் தப்பை நான் பண்ண மாட்டேன்' என்கிறாள்.

"தமிழ் படிக்கிறதுல என்னம்மா தப்பு?"
"அப்பா, கனவை வேடிக்கை பார்க்கலாம். ஆனா அதிலேயே வாழ்க்கை நடத்த முடியுமா?"

முடியாது என்பது புரியும் போது கையில் எம்.ஏ., எம்.ஃபில் சர்ட்டிபிகேட்டுகள் சேர்ந்து விடுகின்றன. தமிழை விரும்பிப் படித்து ஆறு வருடமாக வேலை கிடைக்காமல்....அமைச்சரைப் போய்ப் பார்த்தால் 'நீ தமிழ் படித்தது எங்க தப்பா' என்கிறார். தமிழால் உருவான அரசாங்க‌த்தைச் சேர்ந்த அமைச்சர்.
இன்னமும் நம்மவர்களில் பலர் இதே  தப்பைச் செய்து கொண்டு தானே இருக்கிறோம்!

(10) மா
ஒரு சின்ன மேற்கோள் போதும் இந்தக் கதையின் வல்லமையைக் காட்ட:

"பொம்மனாட்டிக் குழந்தைன்னா பூவுக்கு ஆசைப்படலாமா. பூவுக்கு ஆசைப்பட்டா முள்ளுக்குப் பயப்படலாமோ? தோட்டம்னா, முள்ளுந்தான், பூவுந்தான். கறையானும் புத்துவைக்கும். அணிப்பிள்ளையும் ரகளை பண்ணும். மாமிசத்தைக் காக்கா கொண்டுவந்து போட்டுப் போகும். தேனி தேனைக் கொண்டுவந்து வைக்கும்...போ, ஆயின்ட்மெண்ட் இருந்தா எடுத்துண்டு வா.."
(12) முக‌ங்க‌ள்
 
க‌ணையாழியில் வ‌ந்த‌ க‌தை. க‌தையில் ஒரு க‌விதை வ‌ருகிற‌து:

உன‌க்கோ முக‌ங்க‌ள் ப‌ல‌ நூறு.
என‌க்கும் தான்.

என்னுடைய‌ ஏதோ ஒரு முக‌த்தை
உன்னுடைய‌
ஏதோ ஒரு முக‌ம் பார்க்க‌
வீழ்ந்தாய்;
ம‌ய‌ங்கி அத‌னில்.

ராஜி
எழுந்திரு.
இதோ பார், என் விஸ்வ‌ரூப‌ம்.
 
உனக்கு ஞானக் கண்ணிருந்தால்,
பலநூறு
முகங்களுடன் கூடிய என்னைப் பார்,
இதோ.

சற்றே நீண்ட கதை. ஆழமான கருத்துள்ளது.
(14) கதவைத் திறக்கும் வெளிச்சம்

"தனிச்சுப் போயிடறதுக்காக காவியைக் கட்டிண்டு கிளம்பக் கூடாது. இந்தத் தேசத்திலே காவியைக் கட்டிண்டவா எல்லாம், எல்லாத்தையும் உதறிட்டுக் கிளம்பினவா இல்லை. எல்லாத்தையும் இழுத்து அணைச்சிக்கிரதுக்குக் கிளம்பினவாதான். நமக்குக் குடும்பத்தோடு மட்டும் இல்லை, அதற்கு மேலும் இத்தனை சம்பந்தம் உண்டு, உறவு உண்டுன்னு புரிஞ்சுண்டு இருக்கிறவாதான். நீங்க இங்கிலீஷ்லே சொல்றேளே, யூனிவர்சல் லவ், அதோட‌ நிறந்தான் காவி. நீங்க கேள்விப்பட்டிருக்கேளோ என்னவோ, எங்களுடைய ஆதிகுரு  எட்டு வயசிலே சன்னியாசம் வாங்கிண்டவர். அவர் கிளம்பறச்சே முதலை மாதிரி அவா அம்மா பிடிச்சிண்டா. அப்போ அவர் என்ன சொன்னார் தெரியுமா? 'நான் இனிமே ஒரு அகத்துக் குழந்தை இல்லை. எல்லா அகத்துக்கும் குழந்தை. எல்லா அகமும் நமக்குச் சொந்தம்..' எல்லா வீடும் நம்மோடதாயிடுத்துன்னா, நாம எதிலேயிருந்து அன்னியமாறது, எப்படி அநாதையாவோம், ம் ? சொல்லுங்கோ..."
 
பேசிக்கொண்டே குழந்தைகளுக்குக் கொடுப்பது மாதிரி கல்கண்டு எடுத்துக் கொடுத்தார் சுவாமிகள்.
(சாவியில் வந்த கதையாம்).
****
 
இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். எல்லாக் கதைகளிலும் உள்ளர்த்தம் இருக்கிறது. உணர்ச்சி யிருக்கிறது. நேர்மறையான நோக்கம் இருக்கிறது. நம்மைவிட இளையவர்கள் முன்னேற வேண்டுமே என்ற ஆதங்கம் இருக்கிறது. இதுவரை படிக்காதவர்கள் உடனே படிக்கலாம்.

கடந்த தலைமுறையின் அனுபவங்களை  55 சிறந்த கதைகளின் வடிவில் புதிய தலைமுறைக்குத்  தந்திருக்கும் மாலனை  'ஓம், நமோ நாராயணாய' என்று வாழ்த்துகிறேன்.

(c) Y.Chellappa
email: chellappay@yahoo.com
குறிப்பு: எனது இன்னொரு வலைப்பூவான இமயத்தலைவன் படித்தீர்களா?

2 கருத்துகள்: