திங்கள், ஜூலை 01, 2013

அப்துல் ரகுமானின் “தேவ கானம்” – கவிதை நூல்


‘கவிக்கோ’ என்று அன்போடு அழைக்கப்படும் முன்னாள் ‘வானம்பாடி’க் கவிஞரான அப்துல் ரகுமானின் கவிதைப்படைப்பு, “தேவகானம்”. வழக்கமான அவரது புதுக்கவிதைப் பாணியிலிருந்து விலகி, முழுதும் மரபுக்கவிதையாலான 356 விருத்தங்கள் இடம் பெற்றுள்ள நூல்.

ரகுமான் இதுவரை காதலைப் பாடினார். கவலைகளைப் பாடினார். ‘ஆலாபனை’ செய்தார். அகாதெமி விருது பெற்றார். இப்போது கடவுளைப் பாட முனைந்து இந்த நூலைப் படைத்திருக்கிறார். இளமையில் காதலும் முதுமையில் ஆன்மிகமும் இயற்கையின் வரமல்லவா?
“இளமையில் சிவவாக்கியர் பாடல்களைப் படித்தபோது அவற்றில் ஏதோ ஓர் ஈர்ப்பு இருப்பதை உணர்ந்தேன். அந்த ஈர்ப்பு பாடல்களின் கருத்தில் மட்டுமல்ல, யாப்பிலும் இருந்தது” என்று குறிப்பிடுகிறார் கவிஞர். ஆரம்பப் பாடலைப் பாருங்கள்:

தூய தான சோதியே!
தொழுதுனை வணங்கினேன்
மாயப்பொய்மை நீக்கி என்னை
மெய்ம்மையில் செலுத்துவாய்
தீயதாம் இருளை நீக்கி
ஒளியிலே செலுத்துவாய்
மாயும் தன்மை நீக்கியே
அமர வாழ்வு நல்குவாய் (பக்கம் 7)
 
இதைப் படிக்கும்போதே புரிகிறதல்லவா, எங்கிருந்து இக்கருத்தை எடுத்தார் என்று? “அஸதோமா ஸத் கமய, தமஸோமா ஜ்யோதிர்கமய, ம்ருத்யோர்மா அம்ருதம் கமய” என்ற உபனிடதப் பாடலை அப்படியே தமிழ்ப்படுத்தியிருக்கிறார்!

“அஸதோமா ஸத் கமய” – “மாயப் பொய்மை நீக்கி என்னை மெய்ம்மையில் செலுத்துவாய்”.
“தமஸோமா ஜ்யோதிர்கமய” – “தீயதாம் இருளை நீக்கி ஒளியிலே செலுத்துவாய்”.
“ம்ருத்யோர்மா அம்ருதம் கமய” - “மாயும் தன்மை நீக்கியே அமர வாழ்வு நல்குவாய்”.

அரியும்நீ அரனும் நீ
ஆதிஅல் லாவும் நீ
சொரியும் வான் அருட்பெருஞ்
சோதிநீ கர்த்தன் நீ
பரியும் நற் பிதாவும் நீ
பகுத்தறிந்த ‘இல்லை’ நீ
விரியும் மார்க்கம் யாவும் நீ
வினா அனைத்தின் விடையும் நீ (பக்கம் 8)

என்ற பாடலைப் படிக்கும் போது இது ஓர் சர்வசமய சமரச நூல் மாதிரி இருக்கிறதே அன்று வியக்கிறோம்.

விழுந்த பூ, கனி இவை
மீண்டும் காம்பில் ஒட்டுமோ?
கழிந்துபோன காலம் மீண்டும்
காண வந்து சேருமோ?
ஒழிந்துபோன மனிதர் மீண்டும்
உயிர்பெற்றிங்கு வருவரோ?
அழுதுநீ புலம்பிடாமல்
அடுத்த வேலை பாரடா (பக்கம் 18)

சித்தர்கள் சொன்ன கருத்தல்லவா என்று மகிழ்கிறோம். இது நிச்சயம் இந்துசமய நூல் என்றே எண்ணத் தொடங்கிவிடுகிறோம்.

முன்னர் நூல்கள் ஆயிரம்
முயன்று கற்றும் பயனிலை
பின்னர் கோயில் ஆயிரம்
பூசை செய்தும் பயனிலை
தன்னையே வருத்திநான்
தவங்கள் செய்தும் பயனிலை
என்னை நான் இழந்தனன்
கிடைத்தனன் ஈசனே

என்பதைப் படித்தவுடன் நம் கருத்து இன்னும் திடமாகிறது.

அற்புதமான இன்னொரு பாடல்:

தேவைகள் இருப்பதால்
தேவை நாம்வ ணங்குவோம்
தேவைகள் இலையெனில்
தேவை நாடல் தேவையோ?
தேவைகள் எனக்குமுண்டு
தீர்த்திடாதே! பாக்கி வை
தேவை ஏதும் இல்லையேல்
தேவை யார்வ ணங்குவார்?

திரும்பவும் திருமூலரிலிருந்து பட்டினத்தார் வரை நமக்கு நினைவுக்கு வருகிறார்கள்.

முன்னிலைப் பகைவரோடு
மோதி என்ன கண்டனை
என்ன என்ன துன்பங்கள்
எத்தனை..காயங்கள்
உன்ப கைவன் நீயடா
உன்னுடன்போ ராடுநீ
உன்னைநீ செயித்திடின்
உலகமேஉன் கால்களில் (பக்கம் 48)

இந்துமதத்தின் ஆன்ம தத்துவத்தை இதைவிடச் சிறப்பாகச் சொல்லமுடியுமா?

மகாபாரத்தில் ஒரு காட்சி. “பாண்டவர்களைப் போரில் வெல்ல வேண்டுமென்றால் நீ கண்ணனிடம் போய் உதவி கேட்டாக வேண்டும்” என்று துரியோதனனிடம் சொல்கிறான், சகுனி. ஒப்புக்கொண்டு போகிறான் துரியோதனன். கண்ணன் உறங்கிக்கொண்டிருக்கிறான். எழட்டும் என்று அவன் கண்ணெதிரே தெரியும்படி அமர்கிறான். அதே சமயம் அர்ஜுனன் வருகிறான். கண்ணனின் கால்மாட்டில் அமர்கிறான்.

கண்ணன் எழுந்தவுடன் தன் முன் அமர்ந்திருக்கும் துரியோதனனைப் பார்த்து “வா துரியோதனா, என்ன விஷயம்?” என்று அன்பொழுகக் கேட்கிறான். அகிலத்தையே ஆட்டுவிக்கும் அவனுக்கா தெரியாது? “மகாபாரதப் போரில் உன் உதவி தேவை” என்கிறான் துரியோதனன். “அவ்வளவு தானே, உனக்கு நான் வேண்டுமா, என் படைகள் வேண்டுமா?” புன்சிரிப்புடன் கண்ணன் கேட்க, “படை தான் வேண்டும்” என்று கேட்டுப் பெறுகிறான், துரியோதனன்.

அவன் போன பிறகு அர்ஜுனன் சொல்கிறான்: “கண்ணா, எனக்கு நீ தான் வேண்டும். எத்தனை படைகள் இருந்தாலும் உன் அருளல்லவா மிகவும் உயர்வானது” என்கிறான். உலகத்தையே ஓட்டுவிக்கும் இறைவன், ஒரு பாண்டவனுக்காகத் தேரோட்டச் சம்மதிக்கிறான். வென்றது யார் என்று நமக்குத் தெரியுமே! இந்தத் தத்துவமல்லவா கவிஞரை இப்படி எழுத வைத்திருக்கிறது:

என்னிடத்தில் கேளென
இயம்பிடும் இறைவனே!
பொன்,இடம், பெண், ஆட்சி, ஆயுள்
புகழென இப்பூமியில்
மின்னிடத்தில் மாய்ந்திடும்
வெறும்பொருள் கேட்பனோ
உன்னிடத்தில் வள்ளலே!
உன்னையே நான் கேட்பனே! (பக்கம் 60)

இறைவன் இருக்கின்றான் என்பது இஸ்லாம் மத்தின் அடிப்படைக் கொள்கை. “அப்படியா, அவனை நேரில் காட்டு, பார்க்கலாம்” என்று கேலியாகக் கேட்கிறது, கவிஞர் பல்லாண்டுகளாக ஆதரித்துவரும் ஓர் அரசியல் கட்சி. அவர்களை எதிர்க்கமுடியுமா? நட்பின் பலனை இழக்கமுடியுமா? இதுகாறும் மனச்சாட்சி உறுத்திக்கொண்டே இருந்திருக்கிறது கவிஞரை. அது பாட்டில் வெளிப்படுகிறது இப்படி, கொஞ்சம் தயக்கத்தோடு தான்:

உறவினில் உயர்ந்தவன்
ஒளிந்திருக்கும் மாளிகை
திறவுகோலைத் தருகிறேன்
தேடிப்போகும் பக்தனே!
அறிவெனும் விளக்கொளிக்கு
ஆண்டவன் அகப்படான்
அறிவைநீ அணைத்திடின்
அவனைக் காணலாகுமே (பக்கம் 68)

மனிதநேயத்தைப் பாடும் ஒரு பாடல் இது.

உனைப்படைத்த ஈசனே
என்னையும்ப டைத்தனன்
இனப்பகைமை ஏனடா?
மதப்பகைமை ஏனடா?
மனப்பகைமை நீக்கிநாம்
வாழ்வில் ஒன்று சேர்ந்திடின்
வனப்புமிக்க சொர்க்கம் இந்த
மண்ணில் காணலாகுமே (பக்கம் 66)

எந்த ஆறு ஆயினும்
எவ்விடத்தில் ஓடினும்
அந்தமான கடலிலே
அனைத்தும் சென்று கலந்திடும்
எந்தத் தெய்வம் நோக்கியும்
யார்வணங்கிப் போற்றினும்
அந்தப் பூசை வணக்கம் யாவும்
உன்னை யே அடையுமே! (பக்கம் 95)

“பூச்சியத்துக்குள்ளே ஒரு ராச்சியத்தை ஆண்டுகொண்டு, புரியாமலே இருப்பான் ஒருவன்--அவனைப் புரிந்துகொண்டால் அவன் தான் இறைவன்” என்று மாபெரும் உபநிடத உண்மையை எளிய சொற்களில் எழுதிக்கொடுத்தார் கண்ணதாசன். அதே உண்மையை அப்துல் ரகுமான் கூறுகிறார் இப்படி:

ஒன்றுமற்றிருந்த ஒன்று
ஒன்றென உதித்ததும்
ஒன்றிலே கிளைத்தெழுந்து
உலகெலாம் மலர்ந்ததும்
ஒன்றலாமல் ஒன்றுமில்லை
ஒன்றும் ஒன்றும் ஒன்றென
ஒன்றிலே எலாஅம் ஒடுங்க
ஒன்றுமற்றுப் போனதே (பக்கம் 100)

நூல் முழுதும் இந்துசமயக் கருத்துக்களே விரவி இருந்தாலும், தான் கொண்ட மதமாகிய இஸ்லாத்தை உணர்த்தும் விதமாகப் பிற மதங்களைப் பழித்துக்காட்டும்படியான  சில பாடல்களையும் எழுத மறக்கவில்லை கவிஞர். அதன் கட்டாயம் வாசகனுக்குப் புரிகிறது. (எனவே அவன் கோபிக்கப்போவதில்லை.)

இறைவனும் மனிதனும் வேறல்லர் என்பது அத்வைதம். இதையே “மனிதன் என்பவன் தெய்வமாகலாம்” என்றார் கண்ணதாசன். இது இஸ்லாத்திற்கு முரணான கருத்தல்லவா? ஒரு பிடி பிடிக்கிறார் கவிஞர்:

இறைவனை மனிதனாக்கி
இழிவுசெய்கி றாய்; உயர்
இறைவ னாக மனிதனை
ஏற்றியே வணங்குவாய்
இறைவனை அறிந்திடாமல்
என்ன பக்தி உன் பக்தி
இறைவனோ மனிதனல்லன்
மனிதனல்லன் இறைவனே (பக்கம் 127)

அத்தோடு விட்டாரா? கொஞ்சம் வேகத்தோடு சாடுகிறார்:

இறைவனையோர் பொம்மையாக்கி
இட்டம் போல ஆடுவாய்
சிறுவனாநீ? இறைவனுக்குச்
சிறுமைகள் இ ழைக்கிறாய்
குறையிலாத இறைவனுக்குக்
குடும்பம் காமம் உள்ளதாய்க்
கறைக்கதைகள் கட்டிக்கூறி
கயமைகள் புரிகிறாய் (பக்கம் 128)

“மனிதா நீ ஒரு பாவி. ஏசுவைச் சரணடைந்து பாவமன்னிப்பு கேள். இல்லையேல் உன் பாவத்தின் சம்பளம் மரணமே” என்கிறது கிறித்துவ மதம். அதையும் விடுவாரா கவிஞர்? மனிதன் பாவியல்ல, புனிதன் என்கிறார்:

உனதுகையில் கருவி நான்
உன்பணிக்கே உள்ளவன்
மனது நினது பள்ளி, என்
வாழ்க்கை யாவும் தொழுகையே
மனிதன் என்ற பிறவிதான்
மகத்துவம் மகத்துவம்
புனிதம் யாவும் புனிதமே
புன்மை எதும் இல்லையே (பக்கம் 122)

எந்தப் பாவம் செய்யினும்
எளிதிலே நிவாரணம்
வந்துசேரும்; பயமிலை
மார்க்கம் உண்டு ..எம்மிடம்
இந்த வாறு கூறின் யார்
பாவம் செய்ய அஞ்சுவார்
வந்தனைசெய் பக்தருள்
வளர்கிறார்கள் பாவிகள் (பக்கம் 131)

 என்று திடமாக முழங்குகிறார். ஆனால் இதெல்லாம் வலிந்துகொண்ட கருத்தாகவே கொள்ளவேண்டும். ஏனெனில் அடுத்த சிலபக்கங்களில் மீண்டும் அருணகிரிநாதரும் பட்டினத்தாரும் வந்துவிடுகிறார்களே!

கழிவுநீர்கள் ஓடுகின்ற
காயமாக நாறுமோர்
இழிவுகொண்ட குழியிலே
எமைப்பிறக்க வைத்ததேன்? (பக்கம் 125)

என்கிறார். சற்று முன்பு தானே ‘மனிதப்பிறவி புனிதமானது-மகத்துவமானது’‘ என்றார்?

இருந்திருந்து இவர் ஏன் ஒரு பக்தி இலக்கியம் படைக்கவேண்டும் என்று நண்பர்களான நாத்திகர்கள் முகம் சுளித்துவிடக்கூடாதல்லவா? “அறிவெனும் விளக்கொளிக்கு ஆண்டவன் அகப்படான் “ என்று (பக்கம் 68) அவர்களின் பகுத்தறிவைக் குறை சொல்லியிருக்கிறாரே! அதனால் அவர்களைத் திருப்திப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. அதற்காக ஒரு பாடல்:

எதைத் தொடங்கும்போதும்நீ
ஏற்ற நாளைப் பார்க்கிறாய்
அதையெலாம்..பார்க்கும் உன்
அருமைநா டேன் வறுமையில்?
அதையெலாம்..பார்த்திடா உன்
அயலில் உள்ள நாடெலாம்
நிதமும் ஓங்கி வளர்வதேன்
நீ நினைத்துப் பாரடா! (பக்கம் 130)
 
இந்த நூலை மூன்று முறை படித்துவிட்டேன். அற்புதமான மரபுக்கவிதைகள் கொண்டது இந்நூல்.  பட்டினத்தாரும் திருமூலரும் அருணகிரினாதரும் மற்ற சித்தர்களும் பாடியவற்றுடன் தேவாரமும் திருவாசகமும் ஒன்றாகக் குழைத்தெடுத்தால் என்ன வருமோ அது தான் இந்த நூல். இப்படிப்பட்ட கலவையைக் கண்ணதாசனின் ‘அர்த்தமுள்ள இந்துமத’த்திற்குப் பிறகு தமிழுக்கு வழங்கியிருப்பவர் அப்துல் ரகுமான் ஒருவரே.

இது இஸ்லாத்துக்கு மட்டுமே சாதகமான நூலன்று என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு: மதம்சார்ந்த தீவிரவாதநாடாகக் கருதப்படும் ஆப்கனிஸ்தான் போன்ற நாடுகளில் தமது மதத்தோடு முரண்படுகிறவர்களை அழிப்பதன்மூலம் மரணமே வந்தாலும் அது வீர சொர்க்கத்திற்குக் கொண்டு சேர்க்கும் என்று போதிக்கப்படுவதைக் கவிஞர் கண்டிக்கிறார். சொர்க்கம் எங்கோ மேலே இருக்கிறது என்பதை அவர் ஏற்கவில்லை. எதற்காகப் போகவேண்டும் சொர்க்கம் என்கிறார்:

இங்கிருந்து சொல்பவர்
யாரும் பார்த்ததில்லையே
அங்கு சென்று பார்த்தவர்
யாரும் வருவதில்லையே
இங்கிருக்கும் யாவுமே
அங்கிருக்கும் ஆகில், நாம்
இங்கிருக்கை விட்டுவிட்டு
அங்கு செல்ல வேண்டுமோ? (பக்கம் 135) 

அப்துல் ரகுமானின் தேவை மதம் அல்ல. தன் மதம் இஸ்லாம் என்றாலும் தமிழோடு கலந்துவிட்ட மதக்கருத்துக்களைத் தான் அவர் அதிகமாகப் பற்றி நிற்கிறார். அவரது தேடல் இறைவன் யார் என்பதே. அவனை இங்கே இந்த பூமியிலேயே அடைந்தாகவேண்டும் என்பதே. மரணம் அடைவதற்காக மனிதன் படைக்கப்படவில்லை என்கிறார். உண்மையில் இது அறுபதாண்டுகளுக்கு முன் அரவிந்தர் கூறிய கருத்து தான். அதை மீண்டும் எடுத்துரைக்கிறார் அப்துல் ரகுமான்.

வாழ்க்கை என்பதென்னவொ?
வலியும் துயரும் இறப்புமோ?
வாழ்க்கையின் இ லட்சியம்
மரணமோ? நியாயமா?
வாழ்க்கையின் இ லட்சியம்
மரணமாயின் வாழ்க்கை ஏன்?
வாழ்க்கையின் ரகசியம்
மகேசனே! உணர்த்துவாய் (பக்கம் 160)

உன்னைத்தேடி நானலைந்திங்(கு)
ஓய்ந்துபோய் இருந்தபின்
என்னைத்தேடி நீயலைந்த
இங்கிதம் அறிந்தனன்
மின்னைத்தேடி வானமெங்கும்
மேகமும் அலைவதோ?
தன்னைத் தேடி நானலைந்த
தன்மை என்ன தன்மையே! (பக்கம் 164)

விவேகானந்தரின் கருத்தைத் தம் கடைசிப்பாடலாக முடிக்கிறார், கவிஞர்.

அறிவதென்ப(து) இறைவனை
அறிவதாகும் அறிகுவாய்
அறிவுநூல் அனைத்தையும்
அறிந்தும்நீ இறைவனை
அறிந்திலாய் எனின், நீ ஓர்
அறிவிலாத மூடனே
அறிந்திடும் பொருள் அவன்,
அறிவதும் அவனடா! (பக்கம் 184)

வாழ்வில் பெறுவன எல்லாம் பெற்று நிம்மதியும் மனமுதிர்ச்சியும் பெற்ற கவிஞன், ஞானிக்குச் சமம் எனலாம். இத் ‘தேவகான’த்தைப் படித்து முடிக்கும்போது கவிஞர் அடைந்திருக்கும் சாந்திநிலையை நம்மால் உணரமுடிகிறது. தாகூரின் ‘கீதாஞ்சலி’க்குச் சற்றும் குறைவில்லாத கவிதைநூல் இது என்று உறுதியாகச் சொல்லமுடியும். உண்மையில், இசைவடிப்பிலும், கருத்தாழத்திலும், ரத்தினச்சுருக்கமான சொல்லாக்கத்திலும், ‘தேவகானம்’, கீதாஞ்சலியை எளிதாக வென்றுவிடுகிறது என்பேன். தமிழர் ஒவ்வொருவரும் தவறாமல் படிக்கவேண்டிய கவிதைநூல் இது.

 (c) Y . Chellappa 

3 கருத்துகள்:

 1. எத்தனை எத்தனை ஒப்பீடு ஐயா... ரசித்துப் படித்தேன்... நன்றிகள்... வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 2. விமர்சனத்தோடு கூடிய வாழ்த்துரை..


  தேவகானத்தை வாங்கிப் படிக்க வைக்கும்...

  நன்றி
  தமிழ் இயலன்

  பதிலளிநீக்கு
 3. கீதாஞ்சலி தமிழ் மொழிபெயர்ப்பு படித்துள்ளேன். உரிய ஒப்பீடுகள் செய்து தேவ கானத்தை நாங்கள் படிக்க ஆவலை உண்டாக்கிவிட்டீர்கள். வாய்ப்பு கிட்டும்போது தேவ கானத்தை அவசிய்ம் படிப்பேன். நன்றி. ஜம்புலிங்கம்.

  பதிலளிநீக்கு